மின் நூல்

Tuesday, April 16, 2019

வசந்த கால நினைவலைகள்

                                                                              12
                                                                           

திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய கையோடு திருநெல்வேலி வந்து விட்டேன்.  திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில்  பாரதியார் வாசித்த மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி சார்ந்த உயர்நிலைப்  பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிப்பு  துவங்கியது.

அந்நாட்களில் தாமிரபரணி ஆற்றில் என் உயரத்திற்கு முட்டி அளவே தண்ணீர் போகும்.  குளிப்பதற்கு வேறு சில ஆழமான இடங்கள் உண்டு.   வண்ணாரப் பேட்டைப் பகுதியில்  இருக்கும் தாமிரபரணி ஆற்றுப் படித்துறையிலிருந்து  தண்ணீரில் நடந்தே எதிர் கரைக்குப் போய் விடலாம்.  எதிர்ப்பக்க மணல் வெளியைக் கடந்து ஒரு  மேட்டுப் பகுதியில் ஏறினால்... ஓ.. மாமரங்கள் நிரம்பிய சோலை ஒன்று உண்டு..  மா பழுக்கும் பருவ காலங்களில் சோலையில்  சருகுகளுக்கிடையே தரையில்  விழுந்து  நிறைய மாம்பழங்கள் சிதறிக் கிடக்கும்.  அந்த இடமே வனாந்திரப் பகுதி மாதிரி
ஹோவென்றிருக்கும்.  கேள்வி கேட்பார் இல்லாத  சுதந்திரம்.  காலையில்  ஒன்றும் மாலையில்  ஒன்றுமாக அந்தப்  பகுதியைக் கடக்கும் பொழுது எடுத்துச் சாப்பிடுவது   எங்கள் வழக்கம்.  எங்கள் கோட்டா அவ்வளவே.  அந்தக் கட்டுப்பாடும் அந்த வயதில் பயின்ற ஒரு பாடம் என்றே சொல்ல வேண்டும்.    ஆற்றைக் கடந்து போக முடியாத சூழ்நிலைகளில்  அந்நாட்களில் வண்ணாரப் பேட்டை பிரதான சாலைக்குப் போய் சுலோச்சனா முதலியார் பாலத்தைக் கடந்து ஜங்ஷன் பகுதிக்குப் போக வேண்டும்.

ம.தி.தா. இந்துக் கல்லூரிப் பள்ளியில் மிகப்பெரிய  நூல் நிலையம் உண்டு.  புதுமைப் பித்தன்  அந்த வயதிலேயே அறிமுகம்.   தண்டி தண்டியான புத்தகங்களை வீட்டு  வாசிப்புக்காக எடுத்து வரும் பழக்கத்தை அப்பொழுதே ஏற்படுத்திக்  கொண்டு  விட்டேன்.   பள்ளி நூலகத்திலிருந்து ஒரு தடவை பரிமேலழகர் உரையுடன் கூடிய திருக்குறளை  எடுத்து வந்து அது நழுவி  ஆற்றுத் தண்ணீரில் விழுந்து பதறி எடுத்து வீட்டுக்கு வந்ததும் தொடர்ந்து இரண்டு நாட்கள் வெயிலில்
வைத்து நிவாரணம் கண்டது இன்னும் நினைவில் நிழலாடுகிறது.  மணியம் ஓவியத்துடன் கல்கியில் தொடராக வந்த பொன்னியின்  செல்வனை வாராவாரம் ஆவலுடன் படித்ததும் நெல்லை வண்ணாரப்பேட்டை வீட்டில் தான்.   தனியார் நூலகம் ஒன்றிலிருந்து  இரண்டு நாட்களுக்கு  ஒரு தடவை என்ற கணக்கில் வார, மாத பத்திரிகைகளை வீட்டிற்கே வந்து வழங்குவார்கள்.   தமிழ்வாணனின் கல்கண்டு பத்திரிகையில் அந்தாட்களில் தொடராக  வெளிவந்த கதைகள் மனசைக் கவர்ந்தன.  இரகசியம் என்ற தமிழ்வாணனின் துப்பறியும் கதை இன்றும் நினைவில் இருக்கிறது என்றால் 'பயங்கர நகரம்' என்ற அவரது இன்னொரு தொடர் என்னை அந்த சிறுவயதில் வேறொரு உலகத்திற்கே அழைத்துச் சென்றது.   வாழ்க்கை மிகவும் பூடகமானது.  அடுத்து  வந்த சில ஆண்டுகளில் ஆசிரியர் தமிழ்வாணனின் தேர்வில் எனது முதல் சிறுகதைப் படைப்பு   கல்கண்டு பத்திரிகையிலேயே பிரசுரம் ஆகும் என்பது அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

நெல்லை   வண்ணாரப் பேட்டையில்  நாங்கள் குடியிருந்தது ஸ்டோர் வீடுகள் என்று அந்நாட்களில்  அழைக்கப்பட்ட வரிசை வீடுகள்.  வரிசையாக பதினைந்து தனித்தனி குடித்தன வீடுகள்.  மேடு தூக்கிய தனித்தனி  வீட்டு வாசல்கள்.  கம்பி போட்டு மூடின திண்ணை, சின்ன  இடைக்கழி, ஹால், ஹாலின் இருப்பக்கமும் அறைகள், பின்பக்கத்தில்  கிணறு, அடி பைப், கழிப்பறை, சின்ன தோட்டம் என்று அட்டகாசமான கட்டுமானம்.

காலை  எழுந்தவுடன்  படிப்பு என்பது ஆன்றோர் வாக்கு.  ஆனால் நெல்லையில் இருந்தவரை காலை எழுந்ததும் என் வயதொத்த சிறுவர் பட்டாளத்திற்கு ஆற்றுக் குளியல் தான்.    வண்ணாரப்பேட்டை எங்கள் பகுதியிலிருந்து கிளையாகப் பிரிந்து செல்லும் நீண்ட தெரு வழியே நடந்தால், ஐந்து நிமிட நடை தூரத்தில் படித்துறை வந்து விடும். படித்துறையில் பிள்ளையார். காலையில் ஆற்றுக்கு வந்துக் குளித்துவிட்டுச் சென்றிருக்கும் பெண்கள் கூட்டம் வழிபட்டிருக்கும் சங்குப்பூக்கள் திருமேனியில் செருகப்பட்டிருக்கும் பிள்ளையாரை உற்றுப்பார்த்தால் சிரித்துக் கொண்டிருப்பது போலத் தோற்றமளிப்பார். நாங்களும் பிள்ளையாரை ஒரு சுற்று சுற்றித் தோப்புக்கரணம் போட்டுவிட்டு படித்துறைப் படிகளில் இறங்கி தாயின் மடி நோக்கி ஓடும் குழந்தைகள் போல, மணல்வெளி தாண்டி ஆறு
நோக்கி ஓடுவோம்.

அந்த ஏழுமணிக் காலையில் கணுக்கால் நீரில் படும் பொழுதே உற்சாகம் உள்ளத்தில் கொப்பளிக்கும்.   நதியின் உள்பகுதிக்குப் போய்  இடுப்பும், மார்புப்பகுதியும் நீரில் அழுந்தி, இருகைகளையும் நீட்டி நீரைத் துளாவுகையில் பரம சுகமாக இருக்கும். ஜிலுஜிலுப்பு என்பது அறவே இல்லாமல், அந்த வெதுவெதுப்பு எப்படித்தான் தாமிரபரணிக்கு வந்தது என்பது அந்த வயதில் எங்களுக்குப் புரியாத அதிசயம்.

ஆற்றின் வடகிழக்குப் பக்கம் இக்கரையிலிருந்து முக்கால்வாசி தூரத்தில் ஒரு பெரிய யானையே நீரில் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிற மாதிரி, யானைப்பாறை என்று அழைக்கப் படும் மிகப்பெரிய பாறை ஒன்று உண்டு. யானையின் முதுகு மட்டுமே வெளித் தெரிகிற மாதிரி முண்டும் முடிச்சுமாக நீரில் அமிழ்ந்திருக்கும் அந்த பெரிய பாறையின் மேல் பகுதி மட்டும் கண்ணுக்குத் தெரியும்.

பாறையைச் சுற்றி சுழல் போல் ஆற்றுநீர் சுழித்துக் கொண்டோடும். மின்சாரம் தேக்கிய நீரல்லவா?..கேட்கவே வேண்டாம். அந்தச் சுழலின் போக்குக்கு எதிராக நீந்தி யார் முதலில் யானைப் பாறையின் முகட்டுக்கு ஏறுகிறார்கள் என்பது தினம் தினம் எங்களுக்குள் போட்டி.

எந்த முயற்சியும் வேண்டாம். அந்தச்சுழல் பக்கம் லேசாக உடலைக் கொடுத்தாலே போதும். பாறையைச் சுற்றி அது இழுத்துக் கொண்டு போகும் வேகத்தில், நீரில் அழுந்திய பாறையின் துருத்திக் கொண்டிருக்கும் ஏதாவது முனை பற்றி, பாறையின் பக்கவாட்டு பள்ளத்தில் கால் புதைத்து எழும்பி பாறை பற்றி ஏறி விடலாம். சில நேரங்களில் பாறையின் முதுகு கையில் படாமல் வழுக்குவதும் உண்டு. அந்த நேரங்களிலெல்லாம், ஆற்றின் சுழலின் போக்குக்குப் போய், இன்னொரு சுற்று சுற்றி வேறு பகுதியில் ஏற வேண்டும். சில நேரங்களில் பச்சை நிறம் படிந்த நீரின் அடி ஆழத்திற்குப் போய் விடுவதுண்டு. ஆழத்திற்குப் போனால் மறக்காமல் ஆற்றின் அடி ஆழ மணலை உள்ளங்கையில் வாரி எடுத்து வெளியே வருவோம். நீரின் மேற்பரப்புக்கு வந்து மணலை வீசி வெற்றி வீரரகள் போல விளையாடுவதுண்டு.

ஒருதடவை இப்படித்தான் யானைப் பாறையின் பிடி கைக்கு சிக்காமல் வழுக்கி ஆற்றின் அடி ஆழத்திற்குப் போனவன், சுழலின் போக்குக்கே இழுத்துக்கொண்டு போய், தட்டுத்தடுமாறி எப்படியோ இன்னொரு பக்கம் பாறை பிடித்து மேலேறி விட்டேன். கால் வெடவெடவென்று நடுங்குகிறது. இப்படிப்பட்ட அனுபவம், இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. மறுபடியும் நீரில் குதித்துத்தான் கரைக்கு மீளவேண்டும். என்னைத் திடப்படுத்திக்கொண்டு தைரியத்துடன் நீரில் குதித்து சுழல் தாண்டி மீண்டேன்.

எனது வலது கை ஆயுள் ரேகையில் வெட்டிச்செல்லும் தீவுக்குறி ஒன்றுண்டு. பின்னாளில் என் கைபார்த்த ரேகை ஜோதிடர் ஒருவர், 'உங்களுக்கு பதிமூன்று-பதினாங்கு வயதில் கண்டம் ஒன்று வந்திருக்குமே' என்றார். நானும் இதுதான் அந்த கண்டம் போலும் என்று நினைத்துக் கொள்வதுண்டு.

இப்படிப்பட்ட இளமை நினைவுகளையொத்த இன்னொன்றைப் படிக்கும் பொழுதோ, கேட்கும் பொழுதோ, அந்த செய்தி தரும் இன்ப அனுபவத்தில் நம்து முழு மனசும் ஒன்றித்திளைத்து வார்த்தைகளில் வடிக்க இயலா மகிழ்ச்சியளிக்கிறது.

மாறிச் செல்லும் கால வேகத்தில் கூட இளமைக்கால சில விளையாட்டுகள் எக்காலத்தும் மாறுதலற்ற நிலையானவை போலும்! இளையோர் ஆற்றில் குளிக்கையில், ஆற்றின் அடிச்சென்று கைநிறைய மணல் அள்ளி, தான் ஆற்றின் அடிஆழம் வரைச் சென்றதற்கு சான்று போல அந்த மணலை மற்றையோருக்குக் காட்டி மகிழ்வது சங்ககாலத்தில் கூட இருந்த ஒரு விளையாட்டு தான் என்று 'தொடித்தலை விழுத்தண்டினாரி'ன் புறப்பாடலின் மூலம் நமக்குத் தெரிய வந்து வியப்பு மேலிடுகிறது...

தொடரும் இருமலுக்கிடையே, தமது இளமை நினைவுகளை எவ்வளவு அழகாக அந்த புலவர் பெருந்தகை நினைவு கூர்ந்திருக்கிறார் பாருங்கள்:


இனி நினைந்து இரக்கம் ஆகின்று; திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ,
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
மறை எனல் அறியா மாயம் இல் ஆய்மொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர்மிக,
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ--
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இரும் இடை மிடைந்த சில் சொற்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?


(புறநானூறு--243)

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வருத்தம் மேலிடுகிறது
மணல் பிடித்துச் செய்த உருவிற்கு
கொய்த பூவைச் சூட்டியும்
பொய்கையில் இளம் பெண்களின் கைகோர்த்துக் களித்ததுவும்
அவர் தழுவும் பொழுது தழுவியும்
அசைந்தாடுகையில் அசைந்தாடியும்
ஒளிவு மறைவற்ற வஞ்சனையறியா
நண்பர் குழாமொடு விளையாடி மகிழ்ந்ததுவும்
மருத மரத்தின் உயர்ந்த கிளைகள் உயரம் தாழ்ந்து
நீரோடு படிந்தவிடத்து அக்கிளை பற்றி ஏறி
உச்சிக் கிளை அடைந்து
கீழே நிற்போர் வியக்க, அவர் மீது நீர் திவலை விழ
'தொடும்' என நீரில் குதித்து, மூழ்கி
ஆழ் அடிச் சென்று அடிமணல் அள்ளிக் காட்டியும்
---இப்படியான கள்ளமிலா
இளமைக்காலம் கழிந்து சென்றதுவே!
ஊன்று கோலை ஊன்றி, நடுக்கத்துடன்
இருமலுக்கிடையே சில சொற்கள் மொழியும்
முதியவனான எமக்கே
இனி எப்போது கழிந்த அக்காலம் வாய்க்கும்?...



இளமை வாழ்க்கையை நினைவு கொள்ளும் அற்புதமான இப்பாடலை இயற்றியவரின் பெயர் தெரியவில்லை.. ஆனால் அவர் தன்னைத் தானே வர்ணித்த கோலேந்திய அவரின் தோற்றம், இலக்கிய ஏடுகளில் அழியாது அவரை நினைவு படுத்தும் சொல்லாக---'தொடித்தலை விழுத்தண்டினார்' என்று---அவரின் பெயராகவே ஆகிவிட்டது!

'சென்ற காலம் மீளாது இனி' என்பது சித்தர்களின் வாக்கு.  ஆனால் சென்ற காலம் நெஞ்சில் பதித்த தடங்களின் வடுக்கள் நிலையாக நினைவில் பதிந்தவை; குறைந்த பட்சம் எப்பொழுதாவது அமைதி வேண்டிடும் போதோ, அல்லது அமைதியாக இருக்கும் பொழுதோ அவற்றை நினைவுச் சுருள்களில் ஓட்டிப் பார்த்து மகிழும் பொழுது அடையும் இன்பமே அலாதி தான்!

அப்படி அடிக்கடி மகிழ்ச்சியில் ஆழ்வது இந்தக்காலத்துக்கே வாய்த்த 'டென்ஷனை'க் குறைக்கும் அருமருந்து என்பது மட்டும் நிச்சயம்.

(வளரும்)


10 comments:

ஸ்ரீராம். said...

இனிமையான நினைவுகள். நீச்சல் அனுபவங்கள் திகிலூட்டுகின்றன.

தொ வி தண்டினார் பாடலுக்கு ஏற்பவே உங்கள் நினைவுகளும் அமைந்திருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள். நீச்சல் அனுபவங்கள் திகில். என் பெரியப்பா ஒரு முறை சுழலில் மாட்டிக் கொண்ட அனுபவத்தினை சுவைபடக் கூறுவார்...

நெய்வேலியில் இருந்த வரை வீட்டுக்கு வார இதழ்கள் வரும் - அப்பா அலுவலகத்தில் இருந்த ஒரு Magazine Club-லிருந்து. மாதத்திற்கு இருபது ரூபாயோ என்னமோ கொடுத்ததாக நினைவு. நிறைய புத்தகங்கள் இப்படித்தான் படித்தோம். வாங்கியது இல்லை.

நினைவலைகள் தொடரட்டும்.

G.M Balasubramaniam said...

எனக்கு எங்கள் கிராமத்தில் நன் பத்து வயது சுமாரில் இருந்த நினைவு வருகிறது எங்கள் கிராமத்தை ஒட்டி ஓடும் பாரதப் புழா நதியும் நீங்கள் விவரிக்கும் தாமைர பரணி போல் தான் நீர் குறைவாக ஓடும்போது மண்லை மாந்தி ஆழம் செய்து அங்கு குளிப்போம் நீர் வரத்து குறைவாய் இருக்கும்போது ஆற்றைநடந்து தாண்டினால் ஒலவக்கோடு ரயில் நிலையம் வரும் ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் போயிருந்தபோது எனக்குள் ஒரு ஏக்கம் வந்தது

ஜீவி said...

@ ஸ்ரீராம்

வயது ஆக ஆகத்தான் இந்த பயம் எனப்தே நம்மில் படிகிறது போலும். இளங்கன்று பயமறியாது என்று சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்.

தொ.வி.தண்டினாரின் பாடல் சங்க காலத்து சிறுவர்--சிறுமியரின் பழகுமுறைகளைத் தொட்டுச் சென்றிருப்பதைக் கவனித்தீர்களா, ஸ்ரீராம். கள்ளங்கபடமற்ற அந்த பழகு முறை இந்தக் காலத்தில் நேர் எதிராக மாறிப்போயிருக்கிறது

கலைஞர் சொல்லுவாரே, சுற்றி எரியும் தீப்பந்தங்களுக்கிடையே கொளுத்தப் படாத கற்பூரம் என்று. அந்த மாதிரி ஆண்-பெண் உறவே அதற்காகத் தான் என்று போதிக்கும் திரைப்படங்கள், கேளிக்கை வாழ்க்கை முறை, 'என்னதான் நடக்கும், நடக்கட்டுமே' என்ற மனப்பாங்கு, பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமை போன்ற சுற்றி எரியும் தீப்பந்தக்களுக்கிடையே கள்ளம் கபடமற்ற வாழ்க்கை முறையை எப்படி கனவு காண முடியும், சொல்லுங்கள்.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

பல ஆண்டுகளுக்கு முன் குமுதத்தில் 'தீப்பிடித்த கப்பலில், அம்மணியும் நானும்' என்று நடந்த நிகழ்வு ஒன்றை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து ஹேமா ஆனந்த தீர்த்தன் எழுதியிருந்தார். உங்கள் பெரியப்பா சுழலில் என்றால், இதில் நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல். அதான் நீங்கள் சொன்னதை வாசித்ததும் நினைவுக்கு வந்தது.

எல்லோருக்கும் விதவிதமான அனுபவங்கள் வாய்க்கத் தான் செய்கிறது. அருமை நண்பர் நடன சபாபதி அவர்கள் சொல்லியிருப்பது போல சுவைபட'நேரேஷன்'என்பது ஒரு கலை.
தீ.க.அ.நானும் வாசித்த பொழுது அதைத் தான் நானும் உணர்ந்தேன்.

புத்தகம் படிக்கும் மற்றும் லலித கலைகள் வாசம் கொண்ட குடும்பத்தில் பிறப்பது ஒரு வரம். வாழையடி வாழையாக அந்தப் பழக்கம் வளரும். நடுவில் அந்தப் பழக்கத்தை யாராவது அறுத்தாலும் அவர் விட்டுத் தொடரும். என் வாழ்க்கையில் கண்டது இது.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, வெங்கட்.




ஜீவி said...

@ ஜிஎம்பி

அன்பர் நடன சபாபதி அவர்கள் சொன்னது சரி தான். நீங்களும் இதே மாதிரியான பழைய நினவுகளின் பிடீயில் சிக்கிக் கொண்டமை குறித்து மகிழ்ச்சி. பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் உங்களுக்கும் விருப்பம் அதிகம் என்பதும் தெரியும்.

பாரதப் புழா என்ற அந்த ஒரே ஒரு வார்த்தையில் மயங்கிப் போனேன். கேரளம் ஒரு சர்வ கலாசாலை. 'பாரதம்' என்ற ஒரே வார்த்தைக்கு நதி மூலம் ரிஷி மூலம் காண்பார்கள் இங்கு.

உங்கள் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நீங்கள் அனுபவித்த அந்த ஏக்கமும் எனக்குப் புரிந்தது.

தங்கள் தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி, ஐயா.

வே.நடனசபாபதி said...

ஆறு உள்ள சிற்றூரில் வசித்தவர்கள் / வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் எல்லோரும் இளம் வயதில் ஆற்றில் கும்மாளம் போடாமால் இருந்திருக்கமாட்டார்கள். நானும் உங்களைப்போல் ஆற்றில் விளையாடி மகிழ்ந்தவன் தான். தங்களின் பதிவு என்னையும் எங்கள் ஊரில் ஓடும் வெள்ளாற்றிற்கு இழுத்து செல்கிறது.

இறுதியில் ‘தொடித்தலை விழுத்தண்டினார்’ இயற்றிய இளமைக்காலத்தை மீட்டெடுக்கும் அந்த அருமையான புறநானூற்றுப் பாடலை தந்திருப்பது மிக அருமை.

தாங்கள் அசை போடும் நினைவுகளை படிக்கக் காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

'ஆறு உள்ள சிற்றூரில் வசித்தவர்கள்/வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்' என்ற அந்த ஒரே வரியில் அத்தனை பெருமைகளையும் சொல்லி விட்டீர்கள், ஐயா.

தொடித்தலை விழுத்தண்டினாரின் இளைமைக்கால மீட்டெடுப்பு மறக்கவே மறக்காது மனத்தில் பதிந்து விட்டது. தன் அனுபவத்தை எவ்வளவு அழகாக தன் வார்த்தைகளில் வடித்தெடுக்கிறார் என்பது நினைத்து நினைத்து மகிழத்தக்கது. திரிபுகளற்ற உண்மையான சங்ககால வாழ்க்கைக்கு மீள மாட்டோமா என்று ஆற்றாமையாக இருக்கிறது.

தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி, ஐயா.

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் ஆற்றங்கரைக் குளியல் எனக்கு என் சிறு வயதை நினைவூட்டிவிட்டது. நீரின் அடியில் சென்று மண்ணெடுத்து...அப்புறம் எதையாவது போட்டுவிட்டு நட்புகளில் அதை யார் தேடி எடுக்கிறார்கள் என்று போட்டு...இப்படிச் சுழலில் மாட்டியது, ஆனால் நீச்சல் நன்றாகவே தெரியும் (அப்போது!!!) என்பதால் தைரியமாக நீந்திக் கரை ஏறியது. என்று பல நினைவுகள்.

குளத்திலும் நீச்சல் போட்டி, பாவாடையை பபிள்/மிதவை போன்று சுருட்டி மிதந்தது எல்லாமே பசுமையாய் நினைவில்...இப்போது அந்த கீதாவா இது என்று என்னையே நான் கேள்வி கேட்டுக் கொள்கிறேன். பேசாமல் அப்படியே அங்கேயே இருந்திருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு...பல சமயங்களில்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அழகாகக் கண் முன் கொண்டு வருகிறீர்கள் காட்சிகளாய் விரிகிறது. உங்கள் அனுபவங்கள். தொடர்கிறோம். (உங்கள் பழைய பதிவுகளையும் வாசித்துவிட்டேன் சார் - துளசிதரன்)

துளசிதரன், கீதா

Related Posts with Thumbnails