மின் நூல்

Saturday, April 13, 2019

வசந்த கால நினைவலைகள்

                                       11


ரு சித்ரா பெளர்ணமி அன்று அழகர் கோயில் செல்வதாக ஏற்பாடு.  பக்கத்து  வீட்டு அம்மா தன் தம்பியுடன்  கூட வந்ததாக நினைவு.  பஸ்ஸில் தான் சென்றோம்.

சித்ரா அன்னம்  என்று சொல்வார்களே, அந்த மாதிரியான ஏற்பாடுகளுடன்  தான் சென்றிருந்தோம்.  காலையில் கிளம்பி மாலையில் மதுரை திரும்பி  விடுவதாக திட்டம்.  மலை  அடிவாரத்திலியே கோயில் இருந்தது.  சித்ரா பெளர்ணமி தினம் ஆதலால் கோயிலில் நல்ல கூட்டம்.  டூரிஸ்ட் பஸ்களில்  நிறைய வெளியூர்க்காரர்கள் வந்திருப்பது தெரிந்தது.

 கோட்டை மாதிரியான அமைப்பில் உள்பக்கம் சென்ற நினைவு இருக்கிறது.   உள்ளே போய் கள்ளழகரைத் தரிசித்து விட்டு  வாகனங்கள் இருந்த இடத்தில் சற்று சிரமப்பரிகாரமாக எல்லோரும் உட்கார்ந்திருந்தோம்.  சிறிது நேரத்தில் எங்கள் பக்கத்து வீட்டு அம்மாவின் தம்பி வெளிக்குழாயில்  தண்ணீர் பிடித்து வருவதாகச் சொல்லிக் கிளம்பினார்.  நானும் அவருடன் போய்விட்டு வருகிறேன் என்று என் அம்மாவிடம் சொல்லி விட்டு அவருடன் சென்றேன்.

கொஞ்ச தூரம் போனவுடன் 'நீ இங்கேயே நிழலில் உட்கார்ந்திரு.  அந்த சரிவில் இறங்கி நான் தண்ணீர் பிடித்து வருகிறேன்" என்று என்னை அங்கேயே விட்டு விட்டு அவர் மட்டும்  சென்றார்.   கொஞ்ச நேரம் ஆயிற்று.  சென்றவர் வரவில்லை.   நான் சுற்றும்முற்றும் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.   அந்த சமயத்தில் பக்கத்தில் மேடை மாதிரி இருந்த இடத்தில் நாலைந்து பேர் அமர்ந்திருந்தனர்.   அவர்கள் பேசிக் கொண்டிருந்தது நான் இருந்த இடத்தில் கேட்கிற மாதிரி உரக்கப்  பேசிக் கொண்டிருந்தனர்.  அழகர் கோயில் பற்றி புராண விஷயங்களை கதை மாதிரி ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். நானும் கதை கேட்கிற ஆவலில் அவர்கள் இருந்த பக்கத்துச் சென்று கேட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்.   கண்கள் மட்டும் பக்கத்து  வீட்டு அங்கிள் வருகிறாரா என்ற கவனத்தில் இருந்தன.

கதை கேட்கும்  சுவாரஸ்யத்தில் தவற விட்டேனோ தெரியவில்லை, அந்த அங்கிள் வரவேயில்லை.  லேசான பதட்டம் என்னைத்  தொற்றிக் கொண்டது. அந்த  அங்கிள் போனப் பக்கம் போய் அவரைத் தேடலாமா இல்லை என் அம்மா இருந்த இடத்திற்கு திரும்பி விடலாமா என்ற தடுமாற்றம். சரி, திரும்பி விடலாம் என்ற முடிவுக்கு வந்து  திரும்பிப் போனால் அவர்களை விட்டு விட்டு வந்த இடம் வரவேயில்லை.  ஐந்தே நிமிட நடை தூரத்தில் இருந்ததைக் கண்டு பிடிக்க முடியவில்லையே என்று அந்த வயதிற்குரிய பதட்டம்.  திருவிழா கூட்டம் வேறு கொஞ்சம் கொஞ்சமாக சேர ஆரம்பிக்க 'ஏண்டா  இப்படி மாட்டிக் கொண்டோம்' என்று வியர்த்து விட்டது.  ஒருக்கால் எல்ளோரும் என்னைத் தேடிக் கொண்டு திரிகிறார்களோ என்ற குழப்பம் வேறு சேர்ந்து கொள்ள நான் இப்படி தெரியாத்தனமாய் வந்திருக்கக் கூடாது என்று  என்னை நானே நொந்து கொண்டேன்.

அந்த நேரத்தில், "அதோ, அங்கே இருக்கான், பாருங்க.." என்று அந்த அங்கிளின் குரல்.. என் குடும்பமே இன்னொரு பக்கத்திலிருந்து பதறி அடித்துக் கொண்டு வந்ததைப் பார்த்ததும், நிம்மதி வந்தது.  பிரிந்த தாயைக் கண்ட சந்தோஷத்தில் திக்கு  முக்காடிப் போனேன்.  என் தாயும் எதுவும் பேசாமல் என்னை அணைத்துக் கொண்டார்கள்.  "ஏண்டா, இந்தப் பக்கம் வந்தே?" என்று அந்த பக்கத்து வீட்டு அம்மாள் கேட்டதும் பதில் சொல்லத் தெரியாது விழித்தேன்.

அழகர் கோயில் இரண்டு கோட்டைகளால் சூழப்பட்டுள்ளாதாம்.  உட்பக்கமிருந்த கோட்டை இரண்யங்கோட்டை எனவும், வெளிப்பக்க கோட்டை அழகாபுரி கோட்டை எனவும் என்னவெல்லாமோ பேசிக் கொண்டார்கள்..  எனக்கோ அந்த வயதில் ஒன்றும் புரியவில்லை.  தெய்வாதீனமாய் சொந்தங்களோடு சேர்ந்தது மட்டுமே போதுமானதாக இருந்தது.

கொண்டு போயிருந்த கலவை சாதங்களை செளகரியமான இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு வேறு எங்கேயும் போகாமல் ஊருக்குத் திரும்பி விட்டோம் என்றே நினைவு.

னது ஏழாம், எட்டாம் வகுப்பு வாசிப்புகள் திண்டுக்கல்லில் நிகழ்ந்தது.

திண்டுக்கல் செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளி விரிந்து பரந்த விசாலமான நிலப்பரப்பில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்.  பள்ளியின் நட்ட நடுப்பகுதியில் பெரியதொரு மணிக் கூண்டு இருக்கும்.  இரண்டு பக்க வாசல் திறப்புகள்.  சாலையிலிருந்து உள்ளடங்கி வெளிச்சத்தமெல்லாம் அடங்கி பெயருக்காக கட்டப்பட்ட ஒரு பள்ளி அல்லாது  ஒரு பள்ளிக்கூடம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் கட்டப்பட்ட  பள்ளி.   சகல விளையாட்டுகளும் விளையாடுகிற மதிரியான பெரிய நிலப்பரப்பு.  நல்லதொரு நூல் நிலையம்.   பள்ளிக்கு  நேர் எதிரே வெளியூர் மாணவர்கள் தங்கிப் படிக்க ஹாஸ்டல்.

ஏழாவது வகுப்பாசிரியர் பெயர் லாசர்.  ஒழுக்கத்தையும் ஆங்கிலத்தையும் ஒருசேரக் கற்றுக் கொடுத்த ஆசான்.  தமிழாசிரியர் பெயர் பூவராகன்.  இளம் வயக்தில் என் மனத்தில் தமிழின் ஓசை நயத்தை பதித்தப் பெருந்தகை...  தமிழ்ச் செய்யுளை எப்படி எதுகை வழி அழுத்தம் கொடுத்து வாசித்து மகிழ வேண்டும் என்ற கல்வியைக் கற்றுக் கொடுத்தவர்.  அவ்வாறே இன்று வரை தமிழ்ச் செய்யுளை வாசிக்கும் பழக்கம் என் மனத்தில் படிந்திருக்கிறது.

இதோ கம்பனின் கைவண்ணம்:   நீயும் இராமபிரான் அருளை நாடி அவர் பக்கம் வந்து  விடு என்று அழைக்கும் விபீஷணனுக்கு கும்பகர்ணன் நிறைய காரணங்களை அடுக்கி என்னால் அப்படிச் செய்ய முடியாது என்று மறுக்கிறான்.  அப்படி கும்பகர்ணன்  விபீஷணனுக்குச் சொல்வதாய் ஒரு  பாடல்:

செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி
வம்பிட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி
அம்பிட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடைய!
கும்பிட்டு வாழ்கிலேன் யான்;  கூற்றையும் ஆடல் கொண்டேன்!

இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியிலும்  இரண்டாம் எழுத்தாகிய 'ம்' எதுகைக்கு அழுத்தம் கொடுத்து வாசித்து பாருங்கள்.  பிரமாதமான ஓசை நயத்துடன் வெகு இயல்பாக மனத்தில் பதியும்.  என் ஞாபகத்திலிருந்து தான் மேற்கண்ட கம்ப ராமாயனச் செய்யுளை எழுதியிருக்கிறேன். இத்தனை வருடங்கள் ஆகியும் நெஞ்சில் பதிந்தது பதிந்தது தான்.  மறக்கவில்லை.  எல்லாம் பூவராகன் ஐயாவின் கருணை!

சாலையில் நடக்கும்  போதே  நிமிர்ந்து எதிரே பார்த்தால் உயரத்தில் மலைக்கோட்டை!  சோழப் பேரரசர்கள் காலத்திலிருந்து பிரிட்டிஷார் காலம் வரை தொடர்ந்து போரையும் படையெடுப்பு களையும் சந்தித்த பிரதேசம் இது.  ஆர்வம் கொண்டோர் திண்டுக்கல்லின் வரலாற்றை கூகுள் தேடலில் வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

நாங்கள் திண்டுக்கல்லில் மேட்டு  ராஜப் பட்டி என்ற இடத்தில் குடியிருந்தோம்..   சின்ன கிராமம் போன்ற பகுதியாய் அப்போது இருந்தது.  அங்கிருந்த ஆழக் கிணறு ஒன்று மனத்தில்  சித்திரமாய் பதிந்திருக்கிறது. பாறைகளைப் பிளந்த  மிகப்  பெரிய கிணறு.  நாலு பக்கமும் பக்கத்திற்கு பத்து பேர் நின்று தோண்டியை கயிற்றில்  கட்டி நீர் இறைப்பார்கள்.  அந்தப் பகுதி மக்கள் குடிநீருக்கு இந்தக் கிணற்று நீரைத் தான்  நம்பி இருந்திருக்கிறார்கள்.

சில நேரங்களில் பெண்கள் அந்தக் கிணற்றின் கைப்பிடிச் சுவர் மேல் ஏறி நின்று கயிற்றில் கட்டி கீழே விடும் குடம் எந்தப் பாறையிலும் மோதி விடாமல் லாவகமாக விட்டு குடம் நிரம்பியதும் மேலே தூக்குவதும் பார்க்க பயமாக இருக்கும்.  இந்த பயம் பிற்காலத்தில் இதைப்  பற்றி நினைக்கும் பொழுது பரிதாபமாக மாறியது.  சக  எளிய  மனிதர்களை நேசிப்பதும் அவர்களின் துயரங்களில் பங்கு கொள்ளத் துடிப்பதும் பிற்காலத்தில் நான் பங்கு கொண்ட அரசியல் இயக்கங்கள் கற்றுக் கொடுத்த  பாடமாயிற்று. மனிதர்கள் பிச்சைக் காரர்கள் அல்ல.  அவர்கள் உழைத்து முன்னேற வாய்ப்புகள் ஏற்படுத்துவதும் அதனாலான பலன்களை அவர்கள் துய்ப்பதற்கு திட்டங்கள் தீட்டுவதும் தான் ஒரு அரசின் வேலையாக இருக்க வேண்டுமேயன்றி  காகித  நோட்டுக் கரன்ஸிகளை நீட்டி பேரம் பேசுவதல்ல; அப்படியான  பேரங்கள் அவர்களை மேலும் இழிவுபடுத்துவையே'  என்றெல்லாம் சிந்தனை ஓடுகிறது..  இதெல்லாம் பற்றி  பின்னால் நிறையப் பேசலாம்.

 பிறகு நாகல்நகர் பகுதியில் இரயில் நிலையத்திற்கு நேர் எதிரே இருந்த வரிசை வீடொன்றில் (நான்கு வீடுகள் வரிசையாக; அதைச் சுற்றி சுற்றுச் சுவர்)  வசித்து வந்தோம்.  நாங்கள் இருந்த இடம் பள்ளமாகவும், மேடேறினால் இரயில் நிலையத்திற்கு  சொந்தமான இடமாகவும்  இருக்கும்.   இரயில் நிலையத்திற்கு சொந்தமான அந்தப் பகுதி  shunting yard- ஆக பயன்பாட்டில்  இருந்தது.   இரயில் என்ஜின்கள்  வட்ட வடிவமான அந்த இடத்தில் திருப்பப்படும் காட்சி  அந்நாட்களில் கண்கொள்ளாக் காட்சி!  கீழே கான்கிரீட் பள்ளமாகவும்  மேலே  ஒரு இன்ஜின் நிற்கும் அளவுக்கு தண்டவாளம் பொருத்தியும் இருக்கும்.  வட்ட வடிவமாக இன்ஜினைச் சுற்றித் திருப்பி  பின்-முன்னாக இன்ஜினின் முகப்பகுதியை மாற்றி  அமைப்பார்கள்.

நிறுத்தப்படிருக்கும் இன்ஜினில் திடீரென்று பிஸ்டனைத் திறந்து விடும் பொழுது பூந்துளிகளாக  வெந்நீர் பீச்சியடிக்கப்படும்.  நீர் மேலே படும் இடத்தில் நின்று ஓடி விளையாடுவோம்.   அந்தப் பகுதி பூராவும் கரித்தூள் மலைபோலக் காட்சியளிக்கும்.  அந்த இடத்தில் மறைந்திருப்பவரை கண்டுபிடிக்கும் விளையாட்டில் நேரம் போவதேத்  தெரியாது!

அந்தப் பகுதியில் இருந்த பிள்ளையார் கோயிலை மறக்கவே முடியாது.  எங்கள் வீட்டு முன் பகுதியில் செம்பருத்தி செடி வளர்த்து  வந்தோம்.  தினமும் வாசல் கேட்டின் மேல் ஏறி ஒரு குடலில் செம்பருத்தி மலர் பறித்து  காலையில் பிள்ளையார் கோயிலில்  கொண்டு  போய் கொடுப்பது வாடிக்கை.

கமலக் கண்ணன் என் வகுப்புத் தோழன்.  மேலே அஸ்பெஸ்டாஸ் பலகையும், மரச் சட்டங்கள் பொருத்தியுமான குடிசையுமில்லாத, வீடுமில்லாத ஒரு தடுப்புப் பிரதேசத்தை வீடாகக் கொண்டு வாழ்ந்து  வந்தார்கள் தாயும், மகனும்.  நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு  பின்பக்கம் ஒரு சரிவில் இறங்கினால் கமலக் கண்ணனின் 'அந்த' வீடு   வந்து விடும்.

காலையில் எட்டரை மணியளவில் டிபன் பாக்ஸூடன் ஸ்கூலுக்குக் கிளம்புவேன்.  நேரே கமலக் கண்ணன் வீடு  தான்.  அந்த சிறிய குடியிருப்பின் வெளிப்பகுதியில் தகரத்தை வைத்துத் தடுத்த விறகடுப்பில் கமலக்கண்ணனின் தாயார் வடை சுட்டுக் கொண்டிருப்பார்கள்.  என்னைப் பார்த்ததும் ஒரு காகிதத்தில் மசால்  வடை ஒன்றைச் சுற்றி "ராஜா! சாப்பிடு.." என்று மிகவும்  அன்பாக என்னிடம் தருவார்கள்.  வடை சுடச்சுட தேவாமிர்தமாக இருக்கும்.  அந்த மாதிரி சுவையுடனான மசால் வடையை என் வாழ்நாட்களில் அதற்குப்  பிறகு சாப்பிட்டதே இல்லை.  அந்த அன்னையை நினைத்தால் மனம்  இப்பொழுது கூட நெகிழ்ந்து போகிறது.    இந்த  மாதிரியான நிகழ்வுகள் தாம் அந்த வயசிலேயே  பிற்கால  வாழ்க்கைப் பயணத்திற்கான  சரியான  பாதையைப் போட்டுத் தந்திருக்கின்றன.

அதெல்லாம் பற்றி வரும்  பகுதியில் சொல்கிறேன்.


(வளரும்)


நண்பர்கள்  அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்..

14 comments:

வெங்கட் நாகராஜ் said...

தமிழ்ப் புத்தானு வாழ்த்துகள் ஐயா...

தண்ணீர் கஷ்டம் மனதை ஏதோ செய்தது. நெய்வேலி நகரில் 24 மணி நேரமும் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும் என்பதால் தண்ணீர் கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தேன்.....

வடை தந்த அம்மாவின் பாசம்....

கோமதி அரசு said...

சித்திரா பெளர்ணமிக்கு மதுரை வந்து விடுவாரே அழகர்.
அங்கு போனீர்களே கூட்டம் இருந்ததா?

கோமதி அரசு said...

எப்படியோ உங்களை அலையவிடாமல் கண்டு பிடித்து விட்டார் மாமா.
இப்போது கங்கை நீர் கிடைக்கிறதே அழகர் கோவில் உள்ளயே.
மினரல் வாட்டர் போல் சுவைசுவையோ சுவை எல்லோரும் கேனில் பிடித்து செல்வார்கள்.
பழமுதிர் சோலையில் மேலே ராக்காயி அம்மன் இருக்கும் இடத்தில் உள்ள நூபுர கங்கை நீர் தான் இங்கும் கிடைக்கிறது.

திண்டுக்கல்லில் தண்ணிர் கஷ்டம் கேள்வி பட்டு இருக்கிறேன்.
நண்பனின் அம்மா அன்பாய் கொடுத்த வடை அதில் அதிகம் ருசி இருக்கும் தான்.
மலரும் நினைவுகள் அருமை.
தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இளமைக்காலத்தில் நாம் கற்பது பின்னர் பாடங்களாக நமக்கு அமைந்துவிடுகின்றன. இதனை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

Bhanumathy Venkateswaran said...

காட்சிகளை கண்முன்னே கொண்டு நிறுத்துகிறது உங்கள் வர்ணிப்பு.
சிறு வயதில் மாமாங்கத்திற்கு கும்பகோணம் சென்றிருந்த பொழுது விளையாட்டு மும்முரத்தில் குடும்பத்தினரை பிரிந்து பின் கண்ட அனுபவம் நினைவிற்கு வந்தது.


ரயில் என்ஜினிலிருந்து கொட்டும் வென்னீரை சில பிரயாணிகள் ஃப்ளாஸ்கில் பிடித்து செல்வதை பார்த்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் மார்க், ரிசல்ட் என்று மேனேஜ்மெண்ட் ஆசிரியர்களின் மென்னியை முறிக்காததால் கற்பிக்கும் சந்தோஷத்திற்காகவே கற்பித்த தமிழாசிரியர்கள் இருந்தார்கள்.

வே.நடனசபாபதி said...

தங்களின் ‘வசந்தகால நினைவுகள் ‘ஒவ்வொருவரும் தாங்கள் பள்ளியில் படித்த காலத்தை நினைத்துப்பார்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. அழகர் கோயிலில் தாங்கள் ‘தொலைந்து’ திரும்பிய கதை போல் பலருக்கு நடந்ததிருக்கவாய்ப்புண்டு. ஆனால் ஒரு சிலரே தங்களைப்போல் சுவாரஸ்யமாக அதை வெளிக்கொணரமுடியும்.

நாம் பள்ளியில் படித்த தமிழ் பாடல்களை இன்றும் நினைவில் வைத்திருப்பதன் காரணம் நமக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் தான் என்பதை தங்களின் ஞாபகத்திலிருந்து தந்துள்ள கம்ப ராமாயணச் செய்யுளே எடுத்துக்காட்டு. இப்போதெல்லாம் அப்படிபட்ட ஆசிரியர்கள் இல்லை என்பது இக்கால மாணவர்களின் துரதிர்ஷ்டம் என்று தான் சொல்லவேண்டும்.

நான் கூட பள்ளியில் படித்தபோது படித்து மறக்காத கம்பராமாயணப் பாடல் பற்றி கம்பசித்திரம் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன்.

தொடர்கிறேன்.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் மூளப்போகிறது என்றெல்லாம் மிகைப்படுத்திச் சொல்லும் அளவுக்கு தண்ணீர் இன்றைய--நாளாய அத்தியாவசிய தேவையாகிப் போகியிருக்கிறது.

இந்தத் தொடரை எழுத நினைத்த பொழுது இவ்வளவு விஷயங்கள் தொடர்ச்சியாக எழுதக் கிடைக்கும் என்ற எண்ணமே எனக்கில்லை. எழுத ஆரம்பித்த பிறகு தான் 'என்னை எழுது; என்னை எழுது' என்று ஒவ்வொரு விஷயமாக நினைவுக்கு வந்து வரிசை கட்டுகின்றன.

இத்தனைக்கும் நடுவே மதுரை நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட மஹாத்மாவை தரிசித்ததை மறந்தே போய் விட்டேன். இந்தத் தொடர் புத்தகமாக ஆக்கம் கொள்ளும் பொழுது தவறாமல் சேர்த்து விட வேண்டும் என்பதைக் குறித்து வைத்துள்ளேன்.

தங்களது தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

இருந்தது, கோமதிம்மா. ஓரத்தில் ஒதுங்கி நிற்கும் அளவுக்கு கோவிலுக்கு வருகிறவர்கள், தரிசனம் முடித்துப் போகிறவர்கள் இருந்தார்கள் என்பது நினைவிலிருக்கிறது.

ஜீவி said...

@ கோமதி அரசு (2)

நூபுர கங்கை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, நேரில் பார்த்ததில்லை. அந்த சுவையோ சுவை நீரை கபளீக்ரம் பண்ணாமல் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களா, என்ன? ஆச்சரியம் தான்.
வடையில் அன்பு ருசி தான் அதிகம். தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.






ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்

கும்பகோணாம் மாமாங்கம் என்றால கேட்கவே வேண்டாம். திருவிழாக் கூட்டங்களில்
ஜனநெரிசலில் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடித்துக் கொண்டு நம்மூர்களில் நடக்கவே முடியாது. அதான் சிக்கல்.
பிளாஸ்க்கா?.. அண்டா குண்டாக்களில் பிடித்துச் செல்வதை திண்டுக்கல்லிலேயே பார்த்திருக்கிறேன்.
அந்தக் காலங்களிலும் அவை இருந்திருக்கின்றன. இருந்தாலும் பாடம் நடத்துவதில்
சில ஆசிரியர்களுக்கு சொந்த திருப்தி முக்கியமாக இருந்திருக்கிறது. அப்படியான ஆசிரியர்கள் நமக்குக் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் போலிருக்கு.
எப்படியாவது ஒவ்வொரு பகுதியையும் தவறாது வாசித்து விடுங்கள். வரும் அத்தியாயங்களில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நன்றி.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

நீங்கள் சொல்கிற மாதிரி சிலர் இது மாதிரி தாங்கள் உணர்ந்ததை நினைத்துப் பார்க்கிறார்கள் என்பது வரும் பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது.
அன்று படித்தவை இன்றும் நினைவிலிருப்பதற்கு முக்கிய காரணம் அந்நாளைய ஆசிரியர்களுக்கு தங்கள் ரசனையை மாணவர்களிடமும் பகிர வேண்டும் என்ற தாகம் இருந்தது. தேர்வுக்கான வாசிப்பு கொண்ட இக்காலத்தில் மாணவர்களுக்கே இதிலெல்லாம் இஷ்டமில்லை என்பது வெளிப்படை.
இக்கால மாணவரகள் டெக்ஸ்ட் புக்குகளையே வாங்கிப் படிப்பதில்லை என்று நினைக்கிறேன். பெற்றோராயும், ஆசிரியர்களாகவும் இருப்பவர் தான் சொல்ல வேண்டும்.
தங்கள் கம்பச் சித்திரதை வாசித்துப் பார்க்கும் ஆவலில் உள்ளேன். வாசித்து விட்டு தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
தொடர்ந்து வாசித்து தங்களின் எண்ணங்களை விரிவாகப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, ஐயா.

ஜீவி said...

@ Dr. Jambulingam. Tamizh University

தாங்கள் சொல்வது சரியே. தங்கள் அனுபவங்களும் அப்படியாக இருப்பதில் மகிழ்ச்சி, ஐயா.
தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

வாவ்! அழகான வர்ணனை! அண்ணா முதலில் உங்களின் நினைவுத் திறனுக்கு ஒரு சல்யூட்!

கோயில் கூட்டத்தில் தொலைந்து ஹையோ...அது ஒரு பதற்றமான சூழலாச்சே! எப்படியோ மீண்டும் குடும்பத்தோடு சேர்ந்தது மகிழ்வான விஷயம். அது ஒரு காலம் நமக்குப் பிரியப்பட்டது ஏதேனும் கண்ணில் பட்டால் அங்கு நின்றுவிடுவது....என்று.

தமிழ்! ஆஹா எனக்குப் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியைகள் நினைவுக்கு வந்தனர். எங்களை வகுப்பில் வாசிக்கச் சொல்லுவார்கள். எங்கு எப்படி உச்சரிக்க வேண்டும் என்று செய்யுள் வாசிக்கும் போது சொல்லித் தருவார்கள். வகுப்பிலேயே நம் கற்பனைத் திறனை ஓட்டி கட்டுரை, கதைகள் எழுத வைப்பார்கள். அந்தத் தமிழ் எங்கு போய்விட்டது என்று தேட வைக்கிறது.

வடையில் அன்பு நிறைந்திருந்ததால் இப்போதும் நினைவு வைத்துச் சொல்லும் அளவிற்குச் சுவை.

கள்ளழகர் கோயில் மலையில் நூபுர கங்கை என்று வற்றாத சுனை உண்டு அதன் நீரை ஒரு கட்டிடம் போலக் கட்டி அதற்குள் பைப் வைத்து விட்டிருப்பார்கள். நாங்கள் சென்றிருந்த போது அதையும் தாண்டி காட்டிற்குள் நடந்து சென்றோம். ரொம்ப தூடம் நடந்ததும் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்க அங்கு மரத்தின் வேர் வழியாக தண்ணீர் பாய்ந்து சுனையாய் தேங்கி அப்புறம் மலையில் ஓடையாய் ஓடியது. அங்கு தண்ணீர் அத்தனை சுவையாய் இருந்தது. அதன் பின் நடந்திருந்தால் இன்னும் அது உருவாகும் இடத்தைப் பார்த்திருக்கலாமோ என்னவோ...

கீதா

Related Posts with Thumbnails