9
வக்கீல் புதுத்தெருவின் நடுவில் வெட்டிச்செல்லும் தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு. தெருவிற்கான பெயர்க் காரணம், தெருவின் முக்கில் ( இது மதுரை பாஷை; முனையில் என்று அர்த்தம்) செல்லத்தம்மன் என்னும் அம்மன் கோயில் ஒன்று இருக்கும். தானப்ப முதலித் தெருவிலிருந்து வீடு மாற்றி இந்தத் தெருவிற்கு வந்து விட்டோம்.
மீனாட்சி அம்மன் கோயிலின் வடக்கு கோபுரம் மொட்டைக் கோபுரம் என்று அழைக்கப்பட்டது. இந்த கோபுர வாசலில் நுழைந்து இடப்புறம் சென்றால் உலகப் பிரசித்தி பெற்ற இசைத் தூண்களைப் பார்க்கலாம். வடக்குக் கோபுர வாசலுக்கு அருகாமையிலிருந்த அன்னக்குழி மண்டபம் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்து விட்டேன். அன்னக்குழி மண்டபம் பள்ளியில் நுழைந்தவுடனேயே பெரிய அளவிலான சதுரப் பரப்பில் ஆற்று மணல் கொட்டப்பட்டிருக்கும்.
அந்த மணலில் நாங்கள் விளையாடிய 'சடுகுடு' விளையாட்டுகள், மறக்கமுடியாதவை. "நான் தான் உன் அப்பன்.. நல்லமுத்து பேரன்.. வெள்ளிப்பிரம்பெடுத்து விளையாட வாரேன்.. வாரேன்.." என்று 'வாரேன்..வாரேன்' னை இழுத்துப் பாடியபடி, மூச்சு விட்டு விடாமல் நடுக்கோடு தாண்டி. எதிரணி எல்லைக்குள் அட்டகாசமாய் நுழைந்து, அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, சில சமயங்களில் காலை மேல் நோக்கி வீசிக்காட்டி அவர்களை கால் பற்ற டெம்ட் பண்ணியும், முன்னோக்கி அவர்கள் ஓடி வருகையில், அவர்களிடம் பிடிபட்டும், வாரேன்..வாரேன்..னை விட்டுவிடாமல், மூச்சுப் பிடித்து, மீண்டு, எட்டி கைநீட்டி நடுகோட்டைத் தொடுவது சாகசம் தான்!.. ஸ்கூல் விட்டும், சில நாட்களில் ப்யூன் வந்து கதவைச் சாத்த வேண்டும் என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளும் வரை, விளையாடிக் கொண்டிருப்போம். புத்தகப் பையெல்லாம் மணல்... உடலெல்லாம் மணல் என்று அத்தனையும் தட்டி, சேர்ந்து வீடு போகும் வரை என்னென்னவோ அவரவர் பிரதாபங்கள் தான்...!
மணல் பரப்பைத் தாண்டிய உள் அறைகளில் வகுப்புகள் நடந்தன. ஒரு காலத்தில் ஹோமங்கள் நடந்த பெரிய மண்டபமாய் இந்த இடம் இருந்திருக்கும் என்று இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்..
என் வகுப்பாசிரியரின் முகம் இன்னும் என் நினைவில் பதிந்திருக்கிறது. ராஜாராம் என்ற அவர் பெயர் கூட மறக்கவில்லை. பஞ்சகச்சம், மேலே ஜிப்பா, டர்பன் சகிதமாக சாந்தம் குடியேறிய முகம். மூச்சுப் பயிற்சியுடன் ஒன்றிய சமஸ்கிருத மந்திரங்களை உச்சாடனம் செய்து செய்து அந்த சாந்தக்களை முகத்தில் படிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாள் மதியம் தாண்டிய வேளையில் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மணல் பரப்பில் மாணவர்கள் அனைவரையும் அமர வைத்திருந்தனர். கருங்கல் பாவிய கொஞ்சம் மேடிட்ட தரையில் ஒரு மேஜையும் நாற்காலியும் போடப்பட்டு மேஜையின் மேல் மைக் வைக்கப்பட்டிருந்தது. சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவர் வந்து பேசப் போவதாக ஆசிரியர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.
சிறுது நேரத்திற்கெல்லாம் கதராடை தரித்து நடுத்தர வயது கொண்ட ஒருவர் வந்தார். தலைமையாசிரியர் அவர் பெயர் சங்கு சுப்பிரமணியன் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். பாரதியார் பற்றி வீராவேசமாக அவர் முழங்கிய சில வரிகள் இன்னும் நினைவில் இருக்கின்றன. சங்கு சுப்பிரமணியன் சுதந்திர சங்கு என்ற பத்திரிகையை நடத்தியவர். பாரதியாரையும், வ.வே.சு. அய்யரையும் தமது குருவாகக் கொண்டவர்.. வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராகவும், சுதந்திர வேள்விக்கு தன்னை ஆஹிருதியாகவும் ஆக்கிக் கொண்ட பத்திரிகை சுதந்திர சங்கு. அந்தக் காலத்தில் இந்தப் பத்திரிகையின் விலை காலணா தான். அமோகமாக விற்பனையாயிற்றாம். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறைகளுக்கிடையேயும் அந்த அளவுக்கு மக்கள் இந்த இதழை நேசித்திருக்கின்றனர். இந்தத் தகவல்கள் எல்லாம் பத்திரிகை உலகப் பழக்கத்தில் பின்னால் எனக்குத் தெரிய வந்த செய்திகள்.
செல்லத்தம்மன் கோயில் தெரு வீட்டின் மாடிப் போர்ஷனை எங்களுக்குக் குடக்கூலிக்கு விட்டிருந்தார்கள். வீட்டிற்கு சொந்தக்கார அம்மாவும், அவர் மகனும் கீழ்ப்பகுதியில் வசிந்து வந்தனர். வீட்டு சொந்தக்காரப் பையன் என்னைவிட ஐந்து வயது மூத்தவராக இருக்கலாம்; சேதுபதி ஹைஸ்கூலில் படித்து வந்தார். இவர் என் பாடப் புத்தகங்களுக்கு பழுப்பு நிறக் கெட்டிக் காகிதத்தில் அருமையாக, அதுவரையில் எனக்குத் தெரிந்திராத ஒரு புது முறையில் அட்டை போட்டுத் தருவார். அந்த முறை எனக்கு மிகவும் பிடித்துப்போய், என் பையன், பெண்ணுக்கு இதே முறையில், பிற்காலத்தில் நிறைய புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தந்து இருக்கிறேன். இப்படி அட்டை போடும் நேரங்களிலெல்லாம், ராஜாமணி என்னும் அவர் என் நினைவுக்கு வருவார். கூடவே,கோபால கிருஷ்ண கோன் பாடப்புத்தக விற்பனையாளர்களும், புதுமண்டபப் பழைய புத்தகக்கடைகளும் நினைவுக்கு வருகின்றன. புத்தகம்.. புத்தகம்... புத்தகம்... பாடப்புத்தகங்கள் கதைப் புத்தகங்களாக மாறி, வரலாறு, தத்துவம், மொழி ஆராய்ச்சி, ஞானத்தேடல் என்று எதுவும் விலக்கில்லாமல் அச்சடித்த எதையும் வாசித்து விடுகிற ஆர்வத்தை மனசில் படிய வைத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
செல்லத்தம்மன் கோயிலுக்கு எதிரே பெரிய எண்ணைய் கடை ஒன்று உண்டு. கடைக்குப் பின்பகுதியில் எள் ஆட்டும் செக்கும் உண்டு. எங்கள் வீட்டுத் தேவைகளுக்கு இங்கு தான் எண்ணைய் வாங்குவோம். அந்தக்கடைக்காரர், சிறுவர்களைப் பார்த்தால் அப்பொழுதுதான் எள் ஆட்டிய புதுப் புண்ணாக்கும், வெல்லமும் தருவார். சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். நானும் அவர் கொடுத்துச் சாப்பிட்டிருக்கிறேன். சுவையாக இருக்கும்.
டவுன் ஹால் ரோடின் நடுமத்தியில் தெப்பக்குளத்திற்கு எதிரே ரோடுப் பகுதியை ஒட்டியவாறு அந்தக்காலத்தில் சின்னத் தெரு ஒன்று உண்டு. அந்தத் தெருவின் முதலில் இருந்த மாடி வீட்டுக்கு குடித்தனம் மாறி விட்டோம். டவுன் ஹால் ரோடை நினைத்தாலே அந்தத் தெப்பக்குளமும், ரோடோரத்து கடைப் பரப்பல்களும், காலேஜ் ஹவுஸும் நினைவுக்கு வருகின்றன..
டவுன் ஹால் ரோடு வீட்டு வாசலில் பெட்டிக்கடை மாதிரி ஒரு கடையை பாலகிருஷணன் என்னும் கேரளத்தவர் வைத்திருந்தார். அவரது கடை அந்தக் காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த குறுக்கெழுத்துப் போட்டிகளுக்கான பதிவு - விற்பனை கடையாக இருந்தது. குறுக்கெழுத்துப் போட்டிகளில் R.M.D.C. என்னும் நிறுவனத்தின் போட்டி மிகப்பிரலமானது. போட்டிக்கான இலவச பாரங்களை வாங்கி, பூர்த்தி செய்து, ஒரு பதிவுக்கு இவ்வளவு என்று பணத்தைக் கட்டி, ரசீது வாங்கிக்கொண்டால், அடுத்த நாள், முதல் நாள் போட்டியின் ரிஸல்ட் வந்து விடும். எல்லாம் சரி, ஒரு தவறு, இரண்டு தவறு என்று முறையே பத்தாயிரம், ஐயாயிரம், ஆயிரம் என்று பரிசுகள் அறிவிக்கப்படும். பலர் சரியான விடையை எழுதும் பட்சத்தில் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும். நூறு ரூபாய்க்கு குறைவாக பரிசுத் தொகை இருந்தால், அந்தக் கடையிலேயே ரசீதைக் காட்டி பரிசு பெற்றுக்கொள்ளலாம். பாலகிருஷ்ணன் கடை மாதிரி நகரில் பல கடைகள்!
குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகளுக்கான ஒரு மாதிரி:1. பெண்களுக்கு இந்த மலரைக் கண்டாலே கொள்ளை ஆசை: (ரோஜா/மல்லிகை)2. சோற்றில் பிசைந்து கொண்டு சாப்பிடுவது: (ரசம்/குழம்பு)3. இந்த உறவென்றால் தனி மதிப்பு தான்: (தம்பி/தங்கை)இப்படி போட்டிக்கேள்விகள் எளிதாக இருக்கும். மூளைக்கு அதிக வேலை இருக்காது. இரண்டு ஆப்ஷன்களும் கிட்டத்தட்ட சரியாக இருக்கும். அவர்கள் வைத்திருக்கும் சரியான விடைக்குப் பொருந்தியிருந்தால் பரிசு, அவ்வளவு தான்! மாலை 7 மணி ஆகிவிட்டால் போதும். கடை ட்யூப் லைட்டெல்லாம் போட்டு, 'ஜே,ஜே' என்று ஆகிவிடும். சில போட்டிகள் அன்று மாலை முடிந்து அன்று இரவு பத்து மணிவாக்கில் ரிசல்ட் வந்துவிடும். ரிசல்ட் வரும் நேரம் கூட்டம் கொஞ்சம் பெருத்துவிடும். பெரியவர்கள், சின்னவர்களென்று வித்தியாசமில்லாமல் கூச்சலும், கும்மாளமுமாக இருக்கும். இந்த சப்தம் கேடடு, ஒரு சின்னத்தூக்கத்தை கத்திரித்துக்கொண்டு வெளியே வந்து ரிசலட்டை சரிபார்த்ததும் உண்டு.
இந்த டவுன்ஹால் ரோடு வீட்டில் இருக்கும் பொழுது தான் 'தங்கம்' தியேட்டர் திறக்கப்பட்டது. முழுத் தியேட்டருக்குமான கட்டுமானப்பணிகள் முடிந்து விட்டாலும் சில சில்லரை வேலைகள் பாக்கியிருந்தன. அதற்குள் முதல் படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள். அங்கங்கு கொட்டியிருக்கும் மணல் குவியல்கள், தொங்கும் வாளிக்கட்டிய கயிறுகள், போட்டது போட்டமேனிக்கு இருக்கும் சில கட்டிடவேலைப் பொருள்கள் என்று இவற்றிக்கு ஊடே நுழைந்தும், தாண்டியும் சுடச்சுட ரிலீஸாகியிருந்த "பராசக்தி" படத்தை இரண்டாம் நாள் பார்த்த நினைவு மறக்கினும், கலைஞரின் வசனத்தை வாழ்நாள் பூராவும் மறக்கமுடியாது. இப்பொழுது கேட்டால் கூட சொல்கிற அளவுக்கு மனப்பாடம்.
மாப்பிள்ளை விநாயகர் சோடா என்று கோலிசோடா ஒன்று விற்பனையாகும். ரப்பர் வளையம் பற்றியிருக்கும் கோலிக்குண்டை, மரஅழுத்தி கொண்டு தட்டி, உள்நிரம்பியிருக்கும் சோடாவையோ, ஜிஞ்சரையோ குடிக்க வேண்டும்.ஜின்ஞர் நீர் நிறைந்த சோடாவிற்கு ஜின்ஞர் பீர் என்று பெயர். டவுன்ஹால் ரோடில் இருந்த 'காலேஜ் ஹவுஸ்' ஹோட்டலின், பாக்கெட்டில் அடைத்த வறுத்த முந்திரிப் பருப்புகளும்,காப்பியும் பிரசித்திபெற்றவை.
ஊர் முழுக்க டிவிஎஸ் கம்பெனியாரின் டவுன்பஸ் தான். எல்லாம் வெள்ளை நிறத்தில், பஸ்ஸின் வெளி நடுப்பகுதியில் TVS எழுத்து வெளிர்பச்சையில் ஒரு வட்டத்திற்குள் வருகிற மாதிரி எழுதியிருப்பார்கள். அப்பொழுது 20 எண்வரை பஸ்ரூட் இருந்தது. எண் ஒன்று - சொக்கிகுளம், மற்றும் எண் இருபது - திருநகர் செல்லும் பஸ்கள் என்று நினைவு. சில வெளியூர் பஸ்களில்,பின்பக்கம் வீட்டில் காப்பிக்கொட்டை அரைக்கும் மிஷின் மாதிரியான தோற்றத்தில், ஒரு மிஷின் உண்டு. வண்டியின் நடத்துனர் அந்த மிஷினின் பிடிபற்றிச்சுற்றி, பின்பக்க பாய்லரில் கொட்டியிருக்கும் கரி எரித்து வண்டியைக் கிளப்ப வழி பண்ணுவதும் உண்டு!
இப்படிப்பட்ட பசுமையாக மனதில் தூங்கும் நினைவுகளை எழுதிக்கொண்டே போகலாம். எழுத எழுத எழுதாமல் விட்டு ஏதோ பாக்கியிருக்கிற மாதிரிதான் தோன்றுகிறது. இவையெல்லாம் நடந்து கிட்டத்தட்ட அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், எழுதுகையில் காலக்கணக்கு தவறுகளினால், முன்பின்னாக சில நினைவுகள் மாறிப் போன மாதிரியும் தெரிகின்றன. எது எப்படியாயினும் கடந்து போன வாழ்க்கை அனுபவங்களின் நிழலாக மனத்தில் படிந்திருக்கும் நல்ல நினைவுகளை நினைத்துப் பார்ப்பது உற்சாகமே அளிக்கும் ஒன்றாகத் தெரிகிறது.
(வளரும்)

12 comments:
எங்களை அந்த காலத்திற்கே அழைத்து சென்றுவிட்டீர்கள். சங்கு சுப்பிரமணியன் அவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீன். அவர் பேச்சை கேட்ட நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.
தாங்கள் விளையாடிய ‘சடுகுடு’ பற்றி படித்ததும் எனக்கும் சடுகுடு ஆடியபோது பாடிய ‘யானை மேலே ஏறுவேன். வீரமணி கட்டுவேன், என்ற பாடல் மனதில் ஓடியது.
நீங்கள் குறிப்பிட்ட குறுக்கெழுத்து போட்டி போல ‘ராணிமுத்து’ இதழு போட்டி நடத்தியது கொடுத்திருக்கும் விடைகள் இரண்டும் சரியாக இருக்கும்.
தங்களின் ‘வசந்தகால நினைவுகள்’ வாசகர்கள் அனைவரையும் தங்களின் வசந்தகாலம் பற்றி நினைக்கத் தூண்டும். தொடர்கிறேன் இன்னும் பல சுவையான அனுபவங்கள்/நிகழ்வுகள் பற்றி அறிய.
படித்து வரும்போது கால நிகழ்வுகள் பற்றிய சந்தேகம்வந்தது இருந்தால் என்ன வசந்தகால நினைவலைகள்தானே நானும் எனிளைய கால நினைவுகளை எழுதி இருக்கிறேன் எனாறுவயது பிராயத்தில் இருந்து பத்து வயது வரைக்குமான நினைவுகளை அனுபவம் அரக்கொணம் நாட்கள் என்று எழுதினேன் சுயசரிதை எழுதத் துவங்கீருந்த நேரம் அதில் இருந்த சிலபகுதிகளே அரlக்கோணம்நட்கள் சுட்டி இதோ படித்துப்பாருக்களேன் /https://gmbat1649.blogspot.com/2011/05/blog-post_11.html /
அழகான நினைவலைகள். இந்தக் குறுக்கெழுத்துப் போட்டி இப்போது கூட சில இதழ்கள், செய்தித்தாள்களில் வருகிறது என்று நினைக்கிறேன்.
கோலி சோடா அதை தட்டித் திறந்து குடிப்பதும் ஒரு கலை. அப்போது கடைக்காரரே அதைக் கையால் தட்டித் திறந்து கொடுப்பார்.
கீதா
@ G.M.B
முதலில் ஜிஎம்பீ ஐயாவிற்கு விளக்கி விடுகிறேன். அதுவே இந்தத் தொடரை வாசிக்கும் மற்றவர்களுக்கான புரிதலாகவும் இருக்கும்.
கால நிகழ்வுகள் பற்றி எந்தக் குழப்பமும் இல்லாமல் ஆண்டுக் கணக்குகளை மனசுக்குள்ளேயே போட்டு இதற்கு அடுத்தது அது என்கிற மாதிரி தொடர்ச்சியாக எழுதி வருகிறேன். இதெல்லாம் எழுதுகிறவன் சபை அடக்கத்திற்காக சொல்வது. வாசிக்கும் வாசகர்களுக்கான மரியதை இது.
இரண்டாவது இந்தத் தொடர் அச்சு அசலாக என் சுயசரிதை இல்லை. இதை சுயதரிசனம் என்று சொல்லலாம்.
சுயசரிதை வேறு; சுய தரிசனம் வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
என் வாழ்க்கையில் குறுக்கிட்ட சில விஷயங்களை நான் பார்த்த பார்வை. அதனால் இந்தத் தொடரை எனது சுய தரிசனம் என்றே கொள்ள வேண்டுகிறேன்.
நான் என் வாழ்க்கையில் நிகழந்த எல்லா விஷயங்களையும் இந்தத் தொடரில் வெளிப்பட சொல்லப் போவதில்லை. எதைத் தெரியப்படுத்தலாம் என்று நான் நினைக்கிறேனோ அவற்றையையே, அவற்றின் மீதான என் கருத்தை மட்டுமே தெரியப்படுத்துகிறேன்.
சில சமூக நிகழ்வுகளையும் நான் அவற்றை பார்த்து அந்த வயசில் என்ன உணர்ந்தேனோ அதைச் சொல்வது. குறிப்பிட்ட சில விஷயங்களில் இளம் வயதில் உணர்ந்ததற்கு மாறுப்பட்டு பிற்கால உணர்வு இருந்ததென்றால் அதை அந்தந்த இடத்திலேயே தெரியப்படுத்தி விடுவேன். இதுவும் முற்றான முடிவல்ல. சிந்தனை மாற்றங்கள் வாழ்க்கை பூராவும் இருந்து கொண்டே இருப்பதால் எந்தக் கருத்தும் திருத்தி எழுதப் படுவதே.
நான் முக்கியமாக நினைக்கக் கூடிய சில நிகழ்வுகளை வாசிப்பவருக்கு வாசித்த மாத்திரத்திலேயே புரிகிற மாதிரி எழுத முயற்சிக்கிறேன். குறிப்பிட்ட சில விஷயங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு படித்தவுடனேயே மிகச் சுலபமாகப் புரிந்து விடும். அப்படி ஒரு கருத்து பதிவர் கீதா அவர்கள் வாசித்தவுடனேயே புரிந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்க்கை என்பது பொழுது போக்கல்ல. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்த அனுபவத்தின் வேதனை தெரியக் கூடிய ஒன்று.
அப்படி வாசிப்பவருக்கு சில விஷயங்கள் புரியவில்லை என்றால் நீங்கள் அந்த விஷயத்தில் பாதிக்கப்படவில்லை என்பதினால் புரியவில்லை என்று நினைத்து கடந்து விடுங்கள்.
இந்தக் கடந்து விடல் பொதுவான விஷயங்களுக்கு இல்லை. அவற்றைப் பற்றி பின்னூட்டங்களில் நாம் நிறையவே பேசலாம்.
தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கு நன்றி.
மதுரை நினைவுகள் படிக்க மிகவும் நன்றாக இருக்கிறது.
மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் இருந்தது, இப்போது இல்லை என்று சொல்வார்கள்.
அன்னகுழி பள்ளியை பார்க்க ஆசை.
இசைதூண் இருக்கும் பக்கமே போகாமல் அப்படியே அம்மன், சுவாமியை டிக்கடி வாங்கி தரிசனம் செய்து விட்டு வந்து விடுகிறோம்.
மீண்டும் இசை தூணை பார்க்க ஆசை வந்து இருக்கிறது உங்கள் பதிவை படித்தவுடன்.
எனக்கு அப்பாவுடன் ஊர் ஊராக போய் படித்தது அந்த ஊர் நினைவுகள் மனகண்ணில் வந்து போகிறது.
சடுகுடு பாடல்கள் சினிமாக்களில் கேட்டது.
குறுக்கெழுத்து போட்டிகள் விஷயம் சுவாரசியம்.
@ வே. நடன சபாபதி
சங்கு சுப்பிரமணியன் அவர்கள் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டவர்.
அதற்காக சிறைவாசம் அனுபவித்தவர். 'சுதந்திர சங்கு' பத்திரிகைக்கு அந்நாளைய அடக்கு முறையையும் மீறி மக்களின் பலத்த ஆதரவு இருந்தது யோசிக்க வேண்டிய விஷயம்.
சுதந்திர சங்குக்குப் பின்னால் தான் மணிக்கொடி பத்திரிகை மக்களுக்கு அறிமுகமாகிறது.
நேரடி ஏகாதிபத்திய எதிர்ப்பை எதிர்கொண்ட சுந்திர சங்கு பத்திரிகையின் உள்ளடக்கத்திற்கு மாற்றாக சிறுகதை, நாடகம், தொட்டுக் கொள்ள அரசியல் என்று மாற்றம் கொண்ட மணிக்கொடி பத்திரிகையின் உள்ளடக்க மாற்றம் பற்றி யாரும் ஆய்வு நடத்தியதாகத் தெரியவில்லை.
சிறுகதை, நாவல் என்றெல்லாம் தமிழ் பத்திரிகை வாசிப்பு உலகம் பெருமை கொண்டிருந்த கால கட்டம் போய் இன்று சினிமாவும், அரசியலும் பத்திரிகைகளின் இதயத் துடிப்பாய் இருக்கிற அவலத்தைக் கூட யாரும் யோசிக்கப் போவதில்லை. நம் தாய் மொழியின் வளர்ச்சி நோக்கிய பாதை மூடப்பட்டும், முடக்கப்பட்டும் இருப்பது பற்றி யாருக்கும் கவலையுமில்லை.
திரு. சங்கு சுப்பிரமணியன் பற்றி இன்னும் சொல்ல வேண்டுமானால், சுதந்திர சங்கு பத்திரிகையில் எழுத வைத்து எழுத்து உலகுக்கு சி.சு.செல்லப்பா அவர்களை அறிமுகப்படுத்தியவர் சங்கு சுப்பிரமணியன் அவர்களே. இன்றைக்கு ஜல்லிக்கட்டு பற்றி தமிழர்களின் வீர விளையாட்டு என்று பெருமைபட பேசும் எவரும் சி.சு. செல்லப்பா அவர் காலத்திலேயே எழுதிய வாடிவாசல் என்ற நாவலை அறிய மாட்டார்கள். வாடிவாசல் நாவலை வாசிக்கையில் சீறிப்பாயும் காளைகளையும் அவற்றை அடக்கத் துடிக்கும் காளையர்களையும் கற்பனையிலேயே தரிசிக்கலாம். தங்களின் தமையனாருக்கு அறிமுகமான, தமிழில் சாதனை படைத்த பல தமிழ் எழுத்தாளர்களை இன்றைய தலைமுறை அறியாமல் இருப்பதும், தமிழ் மொழிக்கான பல விழாக்களில் கூட இவர்களைப் பற்றியெல்லாம் நினைவு கூறாது தவிர்ப்பதும் திட்டமிட்ட இருட்டடிப்பு தான்.
மக்களின் ரசனைகள் திட்டமிட்டு அந்த மக்களே அறியாதவாறு மாற்றம் கொள்ள வைப்பது சிலரின் தேவைகளுக்காகவே அன்றி ஒரு மொழீயின் பன்முகப்பட்ட வளர்ச்சிக்காக அல்ல.
'காலங்கள் மாறும்' என்பது சயின்ஸ் விதி. அந்த விஞ்ஞான விதியின் மேல் நம்பிக்கை
கொள்வோம். வேறென்ன வழி? தெரியவில்லை.
மதுரை நினைவுகள் படித்து ரசித்தேன். உங்கள் அனுபவங்களை மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
@ கீதா
பத்திரிகை குறுக்கெழுத்துப் போட்டிகளோடு RMDC போட்டிகளை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது.
இது வேறே மாதிரி. போட்டிக்கான கேள்விகளோடு ஒரு ஃபாரம் கொடுப்பார்கள். அதை பூர்த்தி செய்து நம் முகவரி எழுதி முகவரிடம் காசு கட்டினால் ரசீது கொடுப்பார்கள். அவ்வளவு தான். அன்று இரவோ அடுத்த நாள் காலையோடு ரிசல்ட். உடனே பணம். அவ்வளவு தான். பெரும்பாலும் டிஸ்ப்யூட் இல்லாமல் இருந்தது ஆச்சரியம் தான்.
@ கோமதி அரசு
அட! மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் இருந்ததா? இது எனக்குப் புதுச்செய்தி. பிற்காலத்தில் இருந்திருக்கலாம்.
வின்செண்ட் என்றும் ஒரு சோடா கம்பெனி இருந்தது.
பத்து வருடங்களுக்கு முன்னால் மதுரை போயிருந்த பொழுதே அ.கு. மண்டபம் பள்ளியைத் தேடினேன். அந்த இடத்தில் இல்லை. குத்து மதிப்பாக அந்த இடத்தில் லாரி புக்கிங் அலுவலகம் இருந்தது
தொடர்ந்து வாசித்து வாருங்கள்.
@ வெங்கட் நாகராஜ்
தொடர்ந்து வாசித்து கருத்திடுவதற்கு நன்றி, சார்.
நினைவுகள் ஸ்வாரஸ்யமாக இருக்கின்றன. ஆனால் புகைப்படங்கள் வண்ணத்தில் இருப்பது நினைவுகளின் காலத்தோடு ஒட்டாத மாதிரி எங்கு தோன்றுகிறது.
@ Bhanumathy. V.
நீங்கள் சொல்வது சரிதான். குறித்துக் கொண்டேன். கறுப்பு வெள்ளை படங்கள் கிடைத்தால் உபயோகித்துக் கொள்கிறேன். நன்றி.
Post a Comment