Wednesday, June 19, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                        35


கோவை ஆர்.எஸ்.புரத்தில்  100 அடி சாலை  என்பது நீண்ட சாலை.  அந்த சாலையில்  குறுக்கே வெட்டிச் செல்லும்  அருணாசலம் பிள்ளைத் தெருவில் 70-ம் இலக்க வீட்டில் என் தமையனார் வசித்து வந்தார்.    வீட்டில் தங்கி சாப்பிட்டு தொலைபேசி  ஆப்ரேட்டர்  (Telephone  Operator)  பயிற்சி வகுப்புகளுக்குப் போவது சிரமமில்லாத மிகவும் இனிமையான காலமாக இருந்தது.

பயிற்சி வகுப்பில் ஆசிரியராக இருந்த  ஞானப்பிரகாசம் சார் மறக்க முடியாதவர்.  அவர் திருச்சிக்காரர்.  அதனால்  திருச்சி தெருக்களை உதாரணமாகக் கொண்டு பாடங்களை நடத்துவார்.   அந்நாளைய தொலைபேசி இணைப்பகங்களின்  (Telephone  Exchange)  செயல்பாடுகளை இப்பொழுது நினைத்தாலும்  பிரமிப்பாக இருக்கிறது.  இன்றைய   வளர்ச்சி  அசுர வளர்ச்சி.    நின்று நிதானித்துச் செய்ய எதுவுமில்லை.  ஆனால் அன்றைய நிலை அடக்கமான தீர்மானமான செயல்பாடுகள்.    ஒரு டிரங்க் கால் என்று எடுத்துக் கொண்டால் அதில் தான் எத்தனை வகைகள்?..  Ordinary call,  Urgent call, Lightening call,  Fixed call, Subscription fixed call,  International call  என்று ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லப் போனால் நிறைய சொல்லலாம்.   ஒரு டிரங்க் காலுக்கு இணைப்பு கொடுத்து  Caller, Called Person  இரண்டு பேரும் பேசி முடித்து டிரங்க் கால் பூர்த்தியாவது என்பது அழகான பின்னல்  வேலை.

அதே மாதிரி உள்ளூர் தொலைபேசி இணைப்பகம் என்பது இன்னொரு அழகான ஏற்பாடு.  ஒவ்வொரு வீட்டுத்  தொலைபேசியும்  தொலைபேசி இணைப்பகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.   தொலைபேசியில் யாருடனாவது பேச வேண்டும் என்றால் தொலைபேசியை கையில் எடுத்து காதில் வைத்துக் கொண்டால், 'நம்பர் ப்ளீஸ்' என்று  ஆப்ரேட்டரின் குரல் கேட்கும்.  நாம் பேச வேண்டிய தொலைபேசி எண்ணை அவரிடம் சொன்னால் அடுத்த வினாடி  'டிரிங், டிரிங்' என்று ரிங் சவுண்டு நமக்குக் கேட்டு எதிர் முனையில் தொலைபேசி எடுக்கப்பட்டதும் ரிங் ஒலி நின்று நாம் பேச விருப்பப்பட்டவர் எதிர்முனையில் நம்மோடு பேசுவார்.  இருவருக்குமான இந்த இணைப்பைப் பூர்த்தி  செய்யும் மாய   வித்தையைச் செய்வது தான்  உள்ளூர் தொலைபேசி இணைப்பகத்தில்   பணியாற்றும் ஆப்ரேட்டர் வேலை.    இந்த மாதிரி 'நம்பர் ப்ளீஸ்'  இணைப்பகத்திற்கு    Manual Exchanges என்று பெயர்.   நாமே தொலைபேசியில்  இருக்கும் டயலில் பேச வேண்டிய எண்ணைச் சுழற்றி  ஆபரேட்டர் தயவில்லாமல்  பேசி முடிக்கும்  Auto Exchanges  அடுத்த கட்ட வளர்ச்சி.  இப்பொழுதோ   உள்ளங்கை அளவு  மொபைல் போன் வந்து  அத்தனை செயல்பாடுகளையும்   அழித்து எழுதி விட்டது.

தொலைபேசி உரையாடலில் ஆரம்ப வார்த்தையே 'ஹலோ..' தான்.  அந்த அளவுக்கு தொலைபேசிக்கும், ஹலோவுக்கும்    ஜென்மத் தொடர்பு உண்டு.  இதில் ஒரு  விவகாரமும் உண்டு.  தொலைபேசியில்  பேசும் பொழுது ஹலோவை கொஞ்சம் அழுத்தி உச்சரித்தாலே, 'ஹெல் யூ' என்று சாப வார்த்தையாய் ஒலிக்கப்படும் என்ற அச்சத்தினால் அந்த ஹலோவை கூடிய மட்டும் தவிர்க்க வேண்டும் என்று பயிற்சி  காலங்களில் உபதேசம் உண்டு.    யார் எது சொல்லட்டுமே,  தொலைபேசியும்   ஹலோவும்  பின்னிப் பிணைந்திருப்பதற்கு வரம் பெற்று  வந்திருப்பது சர்வ தேச அளவிலும் பிரிக்க முடியாத  பந்தம் தான்.

இரண்டு மாத பயிற்சி காலம் முடியும் தருவாயில் எனது இளமைப் பருவ ஆருயிர் நண்பன் ரகுராமனிடமிருந்து  ஒரு கடிதம் வந்தது.  ரகுராமன் அப்பொழுது பாண்டிச்சேரி  ஜிப்மர் மருத்துவமனையில் பணியில் இருந்தான்.   அவனுக்கு நான் கோவையில் தொலைபேசி  இயக்குனருக்கான பயிற்சி காலத்தில்  இருப்பது  தெரியும்.  அவனது  கடிதமும் அதைக் குறித்துத் தான் இருந்தது.    பாண்டிச்சேரி  தொலைபேசி இணைப்பகத்தில் விசாரித்ததாகவும்  புதுவை தொ.இணைபகத்தில் தொலைபேசி இயக்குனருக்கான  காலிப் பணியிடம் இருப்பதாகவும் அதனால் விருப்ப வேண்டுகோள் விடுத்தால் புதுவை தொ. இணைப்பகத்திலேயே எனக்கு போஸ்டிங் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அந்தக் கடிதச் சேதி சொன்னது.

நான் அதன்படியே செய்தேன்.  புதுவைக்கு   போஸ்டிங் ஆர்டர் கிடைத்தது.  கோவையிலிருந்து புதுவைக்கு  ரயில் பயணம்.  புதுவை ரயில் நிலையத்தில் என்னை வரவேற்க ரகுராமன் தயாராகக் காத்திருந்தான்.  முதல் தடவையாக பாரதியார் வாழ்ந்த மண்ணுக்கு வருகிறேன்   என்ற பரவசம் ஒரு பக்கம்.   அந்நாட்களில் புதுவையில்  சைக்கிள் ரிக்ஷாதான்.  இருவரும் சைக்கிள் ரிக்ஷா ஒன்றைப் பிடித்து ஏறி அமர்ந்தோம்.   எங்களுக்கிடையே நெடுநாள் இடைவெளி.  எங்கு ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒருத்தரை ஒருத்தர் நேரில் பார்த்ததே போதுமானது என்ற நிலை.  நேர் நேராக அமைந்திருந்த புதுவைத் தெருக்களின்  அழகைப் பார்த்து  வியந்து கொண்டிருந்தேன்.

ரகுராமன் அப்பொழுது புதுவை  பெரிய பிராமணர் தெரு (Big Brahmins' Street)   என்று அழைக்கப்பட்ட தெருவில்  பெரிய பெரிய திண்ணைகள் கொண்ட ஒரு வீட்டின் முன் போர்ஷனில் குடியிருந்தான்.   நானும் அந்த வீட்டில் வசிக்க இன்னொருவனாகச் சேர்ந்து கொண்டேன்.  அந்த நாட்களில் எனக்கு சமைக்கத் தெரியாது.   ரகுராமன் ஒரு ஸ்டெளவ் வைத்துக் கொண்டு  தினமும் காலை சமையலை முடித்து சாப்பிட்டு   கிளம்பி விடுவான்.   பருப்பு நிறைய போட்டு அவன் வைக்கும் உருளைக் கிழங்கு  சாம்பார் இன்றும் நினைவிலிருக்கிறது.  இரவுக்கு எங்கையாவது வெளியே  சாப்பிட்டுக் கொள்வோம்.  ரகுவிற்கு காலை 10 மணியிலிருந்து  மாலை 5 மணி வரை அலுவலக நேரம்.  அதனால் அவன் பாடு ரெகுலராக இருக்கும்.  என் விஷயம் தான்  எப்பொழுது  வீட்டில் இருப்பேன்  எப்பொழுது அலுவலகத்தில் இருப்பேன்  என்ற சொல்ல முடியாத Round the clock   பணி  நேரங்கள்.   காலை   0610-  1330,  0800-1520,  0900-1620,  1000-1720,    1330-2050,  1520-2340,  1640-0000,  0000-0720 என்று வித்தியாசமான பணி நேரங்கள்.  அதற்கேற்பவான சாப்பாட்டு நேரங்கள்.

நான் பணியில் சேர்ந்த இரண்டாவது நாள் அவரைச் சந்தித்தேன்.  புதுவை தொலைபேசி நிலையத்தில் சீனியர் மெக்கானிக் அவர்.   சிரில் என்ற பெயர் கொண்டவர்.   வேட்டி, ஜிப்பாவில்  எளிய மக்களின் பிரதிநிதி   போன்ற  தோற்றம்.   தொலைபேசி இணைப்பகத்தில்  எம்.டி.எஃப். (Main Distribution Frame)  அறை என்று ஒன்று உண்டு.   அந்த  இடம் அவர் பொறுப்பில் இருந்தது.

ஆனந்த விகடனில் நிறைய உருவகக்கதைகளை எழுதிய வேந்தன்  என்பவர் இவர் தான் என்று பின்னால் தான் எனக்குத்  தெரிய வந்தது.  கல்கி,  விகடன், தினமணிக் கதிர்,  சரஸ்வதி, கலைக்கோயில்,  பராசக்தி என்று நிறைய 
பத்திரிகைகள் இவரது  சிறுகதைகளைப்  பிரசுரித்திருக்கின்றன.  துலாக்கோல் என்ற பெயரில் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  மகிழ்சியான தருணங்களில் சுண்டுமுத்துக் கவிராயர் என்ற பெயரில் கவிதைகளும் இவரிடம் பிறந்திருக்கின்றன.

எனக்கும் அவருக்குமான ஓய்வு நேரங்களில் நாங்கள் நிறைய பேசினோம்.   AITEEU (All India Telegraph Engineering  Employees Union)  என்று தொலைபேசி  இலாகாவில் எங்களுக்கான தொழிற்சங்கம் இருந்தது.  தேசிய அளவில் தபால், தந்தி, ஆர்.எம்.எஸ். போன்ற 9 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய  NFPTE  (National Federation of P & T Employees) என்ற அகில இந்திய அமைப்பு இருந்தது.  தோழர் சிரிலுடனான
பழக்கம் அந்நாளைய  தொழிற்சங்கங்கள் பற்றிய அறிவை வளர்த்தது.  வாடியாவும், சக்கரை செட்டியாரும் திருவிகவும்  சிங்கார வேலரும்  வளர்த்த  தமிழக தொழிற்சங்க வரலாற்றின் நீண்ட நெடிய பாதை புதுக்கதையாய் மனத்தில் பதிந்தது. பொதுவுடமை சித்தாந்தத்தின் பால பாடங்கள் அறிமுகம் ஆயின.                                                   

'பாரத பூமி பழம் பெரும் பூமி;  நீரதன் புதல்வர்   இந்நினைவு அகற்றாதீர்' என்ற பாரதியின் வாக்கு  நெஞ்சில் பதிந்தது.   NCBH (New Century Book House)  புத்தக வாசிப்பு உலகளாவிய பார்வைக்கு பழக்கப்படுத்தியது.

இந்த சமயத்தில் தான்   "நாளை கடற்கரையில்  ஜெயகாந்தன்  கூட்டம் இருக்கிறது;  போவோமா?" என்று சிரில் என்னிடம் கேட்டார்.

(வளரும்)


11 comments:

வல்லிசிம்ஹன் said...

சேலம், குமாரபாளையம்,கோவை
இப்போது புதுச்சேரி வந்தாகிவிட்டது.
புதுகைக்கு ரயில் நிலையம் உண்டா.
இது எனக்குப் புதிய செய்தி.

அங்கும் நல்ல நண்பர் கிடைத்தது அதிர்ஷ்டமே.
உங்கள் தமிழ் ஆர்வத்தை வளர்க்க
//எழுத்தாளர் ஒருவரும் கிடைத்தாரே.//
வேந்தன் அவர்களின் பெயர் பழக்கப் பட்ட பெயராகத்
தெரிகிறது.
தொலைபேசி இலாக்காவின் பல்வேறு முகங்கள்
மிகுந்த ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
எத்தனை அழகாகச் செயல் பட்டிருக்கிறது இந்தத் துறை.
மிக மிக நன்றி ஜீவி சார்.

கோமதி அரசு said...

கோவை காந்திபுரத்தில் நாங்கள் இருந்தோம் 100 அடி ரோடு தாண்டினால் இருக்கும்.
புதுச்சேரி அடுத்து நல்ல ஊர்.
தொலைபேசியின் அந்தக் கால வேலைமுறைகள் கேட்க நன்றாக இருக்கிறது.
இப்போது நீங்கள் சொல்வது போல் பல மாறுதல் ஏற்பட்டு விட்டது.

கோமதி அரசு said...

//நாளை கடற்கரையில் ஜெயகாந்தன் கூட்டம் இருக்கிறது; போவோமா?" என்று சிரில் என்னிடம் கேட்டார்.//

ஜெயகாந்தன் கூட்டம் போனீர்களா? என்ன பேசினார் அவர் அதை பற்றி நீங்கள் சொல்லபோவதை கேட்க ஆவல்.

‘தளிர்’ சுரேஷ் said...

புதுச்சேரியிலும் ஒரு புது இலக்கிய நண்பரை தேடிப்பிடித்துவிட்டீர்கள்! அடுத்தபகுதியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்! நன்றி!

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

புதுவை (புதுச்சேரி), புதுமை (புதுக்கோட்டை) இரண்டு ஊர்களிலும் ரயில் நிலையங்கள் உண்டு. புதுவை என்று தட்டச்சு செய்யும் போது அது புதுகையாகி விட்டது என்று நினைக்கிறேன்.

இன்றைய புதுவை ரயில் நிலையம், மும்பை, புதுடெல்லி, ஹவ்ரா, புவனேஸ்வர், மங்களூர், யஷ்வாந்த்பூர், கன்னியாகுமரி, திருப்பதி, சென்னை-- என்று எல்லா நகரங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது.

அன்றைய ஆனந்த விகடன் வாசகர்களுக்கு வேந்தன் பழக்கப்பட்ட பெயர் தான். பெரும்பாலும் ஓவியர் சாரதி இவரது கதைகளுக்கு சித்திரங்கள் வரைவார்.

தமிழ் ஆர்வத்தைத் தாண்டி என் அரசியல் ஆர்வத்தை நெறிப்படுத்திய ஆசான் அவர்.
அரசியல் கட்சிகளை முன்னிறுத்தாமல் எனக்கு அ, ஆவன்னா தெரியாமல் இருந்த தொழிற்சங்க ஆர்வத்தை என்னில் விதைத்து எந்த பக்கம் நகர வேண்டும் என்பதற்கு பாதை போட்டுத் தந்தவர். என் காலத்து நிலைகளுக்கு முற்றிலும் எதிர் திசையில் இன்றைய அரசியல் சூழல்கள் இருப்பதைப் பார்த்து வேதனைப்படுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. மொத்தத்தில் பழம் பெருமைகள் மண்ணோடு மண்ணாக புதையுண்டு போய் விட்டது மட்டும் மனத்திற்கு புரிகிறது.

வரும் அத்தியாயங்களில் அந்த பழம் பெருமைகளை வரிசையிட்டுச் சொல்கிறேன். அப்பொழுது தான் இந்திய அரசியலின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றமாவது கிடைக்கும்.

'பழையன கழிந்து புதியன புகுதல்' காலவோட்டத்தின் இயல்பே என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம். ஆனால் அந்த பழையதின் பெருமை மட்டும் அதோடு பழகியவர்களுக்கு வடுவாக மனத்தில் பதிந்து விடுகிறது. பொதுவாக எல்ளோருக்கும் தெரிந்த சில சம்பவங்களை வைத்துச் சொல்லும் பொழுது அவை இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

தவிர்க்க முடியாத சில தாமதங்கள் பதிவிடுவதில் ஏற்பட்டாலும் தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன். வாசித்து வருவதற்கு நன்றி, வல்லிம்மா.

ஜீவி said...

* புதுகை (புதுக்கோட்டை)

எனது தட்டச்சிலும் தவறு ஏற்பட்டிருக்கிறது.

ஜீவி said...

@ கோமதி அரசு

காந்திபுரம், காந்தி பார்க்கையும் மறக்க முடியாது, காந்தி பார்க் to காந்தி பார்க் பஸ்களையும் மறக்க முடியாது, கோமதிம்மா.

தெலுங்கு பிராமணத் தெரு என்று ஒரு தெரு காந்தி பார்க் பக்கத்தில் உண்டே, அந்தத் தெரு இப்பொழுது தெலுங்கு தெரு என்று அழைக்கப்படுகிறதா, என்ன?..

புதுவையின் சிறப்பு அதன் பிரஞ்சு சார்ந்த நாகரிகம். அந்த நாகரிகம் அழிந்து படாது என்றே அன்றைய பிரதமர் நேரு அடிக்கோடிட்டு ஒரு உறுதி மொழி கொடுத்திருக்கிறார்.

பேருக்குத் தான் புதுவை தனி மானிலம்; தமிழக கட்சி அரசியலோடு கலந்து விட்ட ஒரு ஊர் அது என்று, என்று ஆகி விட்டதோ அன்றே புதுவை கலாச்சாரம் காலாவதியாகி விட்டது.

தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ கோமதி அரசு

//ஜெயகாந்தன் கூட்டம் போனீர்களா? என்ன பேசினார் அவர் அதை பற்றி நீங்கள் சொல்லபோவதை கேட்க ஆவல்.//

பேசினாரா?.. அடலேறுவின் கர்ஜனை அது. ஜே.கே.யை நான் முதன் முதலாக சந்திந்ததே அப்பொழுது தான். அவரின் 'உன்னைப் போல் ஒருவன்' குறுநாவல் ஆனந்த விகடனில் பிரசுரமாகியிருந்த தருணமும் அது தான். ஏற்கனவே அவர் படைப்புகளைப் படித்து விட்டு பண்பட்டிருந்த மன நிலத்தில் அவர் பேச்சால் நல்ல சிந்தனைகளை விதைத்தார். மேடைப் பேச்சில் ஜெயகாந்தன், பாரதியும் ஜீவாவும் ஒன்று சேர்ந்த கலவை.

தொடர்ந்து ஜெயகாந்தனின் பல கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றேன்.. என் வாழ்க்கையில் இன்று வரை சிந்தனைத் தொடர்பில் இருக்கும் மானுடர் அவர். அவரின் பாதிப்பும் என்னில் நிறைய உண்டு.

எல்லாவற்றையும் அவ்வவ்போது சொல்கிறேன். தொடர்ந்து வாசித்து வாருங்கள்..

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

புதுவையில் எனக்குக் கிடைத்த ஞானாசிரியர் அவர். தொடர்ந்து வாருங்கள், சுரேஷ்..

Thulasidharan V Thillaiakathu said...

புதுச்சேரிக்குள் வந்தாயிற்று இல்லையா இனி அங்குள்ள அனுபவங்கள் என்ன என்று அறிய ஆவல்.

துளசிதரன்

//இந்த சமயத்தில் தான் "நாளை கடற்கரையில் ஜெயகாந்தன் கூட்டம் இருக்கிறது; போவோமா?" என்று சிரில் என்னிடம் கேட்டார்.//

அட நிச்சயமாகப் போயிருப்பீர்கள். என்ன பேசினார் என்று அறிய ஆவலுடன் அடுத்தப் பகுதிக்குச் செல்கிறேன்

நான் கோவையிலும் இருந்திருக்கிறேன். பீளமேட்டில்.

அப்புறம் பாண்டிச்சேரியிலும். நல்ல ஊர்கள் இரண்டுமே. பாண்டிச்சேரி ஊர் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்தது.

கீதா

ஜீவி said...

@ துளசிதரன்

@ கீதா

இருவரும் தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி. அந்நாளைய பாண்டி அற்புதமான ஊர் தான். ஞாயிற்றுக் கிழமை மாலை கடற்கரை உலா ரம்யமானது.

இருவரும் தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

Related Posts with Thumbnails