மின் நூல்

Thursday, July 18, 2019

அழகிய தமிழ் மொழி இது!...


                                                      பகுதி:  27

நெல்லைத்தமிழன்  கேட்டுக் கொள்ள தொடர் தொடர்கிறது....

இதற்கு முன் பகுதி:   https://jeeveesblog.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D..


னகனும், விஜயனும் இமயச் சாரலில் கோலோச்சிய மன்னர்கள்.  சேரன் செங்குட்டுவனின் தந்தையார் *இமயவரம்பன்  நெடுஞ்சேரலாதன்.  கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதிப் பகுதி.  இமயம் வரை படையெடுத்துச்  சென்று  வெற்றி வாகை சூடியதால் இவன் இமயவரம்பன் என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறான்.   இவன் தம்பி @பல்யானை செல்கெழு குட்டுவன் என்று அழைக்கப்பட்டவன்.  தன் தமையனார் நெடுஞ்சேரலாதனுக்குப் பின் ப.செ.குட்டுவன்  பட்டம் சூட்டிக் கொண்டவன்.   தன் சிறிய தமையனாருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவன் சேரன் செங்குட்டுவனின் தமையன் #களக்காய்
கண்ணி நார்முடிச் சேரன்..   சித்தப்பாவும் தமையனும் ஏறத் தாழ ஐம்பது ஆண்டுகள் ஆண்ட பின்பு சிலப்பதிகாரச் செங்குட்டுவன் ஆட்சிக்கு வருகிறான்.  & இவன் ஆட்சிகாலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகக் கொள்ளலாம்.

இமயவரம்பன்  நெடுஞ்சேரலாதன் வடபுலத்திற்குப் படையெடுத்து வந்த பொழுது எம்மைப் போன்ற அரசர் இங்கு இல்லையாதலால் அவன் இப்பகுதியை வெற்றி கொள்ள நேர்ந்தது என்ற இறுமாப்புடன் வடபுலத்துக்
குறுநில மன்னர்  கனக விசயர் சொன்ன வார்த்தைகள்  செங்குட்டுவனுக்கு ஆத்தரமூட்டி,  கனக விஜயரை வெற்றி  கொள்ளவும்  கண்ணகிக்கு சிலை எடுக்க கல் கொண்டு வரவும் செங்குட்டுவன் இமயமலை நோக்கி படையெடுத்துச் செல்கிறான்.

உத்தரன், விசித்திரன்,  உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிவேதன் என்ற மன்னர்களும் கனக விஜயர் பக்கம் சேர்ந்து கொண்டு பெரும் படையைக் களத்தில் இறக்கினர்.  யானைக் கூட்டத்தைக் கண்டு உவகை அடைந்த சிங்கம் போல் செங்குட்டுவன் எதிர்த்து வரும் படைப்பலத்தின்  மீது மேவினான்.

தேர்ப்படை வடவர்களின் ஆற்றல்   மிகுந்த சொத்து.  செங்குட்டுவன் அதைச்  சின்னாப்  பின்னமாக்கினான்.    வாய் கிழிய பேசிய   கனக--விஜயரோடு சேர்ந்து போரிட்ட ஐம்பத்திருவரும் ஒட்டு மொத்தமாக சிறைப்பிடிக்கப்பட்டனர்.  சாம்பல் பூசிய சைவத் துறவியர் போலவும்,  மயில் பீலி கையில் கொண்ட சமணத் துறவியர் போலவும், பண்ணிசைக்கும் பாணர் கூட்டம் போலவும் இசைக் கருவிகளை  தோளில் சுமந்த கூத்தர் போலவும் பகைவர்கள் பல்வேறு வேடம் பூண்டவராய் தப்பி ஓடினர்.

'வடதிசை இமயமலைச் சாரலில் வேதங்களை உயிர்மூச்சென ஓதும் அந்தணரின் ஓம குண்டத்து முத்தீ அணையாது பேணும் அருள் செயலை புரிவீர்களாக!' என்று செங்குட்டுவன் தன் படை வீரர்களுக்கு  அறிவுறுத்தினான்.  பொன் நிறமாக மின்னும் உச்சியுடைய இமயமலைச் சாரலில் ஒப்பற்ற பத்தினித் தெய்வம் கண்ணகியின் சிலை உரு அமைக்க  தகுந்த பெரும் பாறை தேடி படை வீரகள் புடை சூழ அமைச்சன் வில்லவன் கோதையுடன் புறப்பட்டான்.

தேடிப் போன மூலிகை கைவசமான  மாதிரி  குறைபாடுகள் இல்லாத ஒப்பற்ற சிறப்புகள் பொருந்திய பெருங்கல்லொன்று குட்டுவனின் நினைப்பிற்கு ஏற்றவாறு கிடைத்தது.   செங்குட்டுவனும் சிறைப்பட்ட கனக-விஜயர் முடித்தலையில் அக்கல்லை சுமக்கச் செய்தான்.  பெரும் படையுடன் கங்கைப்  பேராற்றின் நெடிய கரையடைந்து  பத்தினிக் கடவுளின் சிலை வடிப்பதற்காக  தெரிவு செய்த கல்லை நீர்ப்படை வல்லுனர்களின் அறிவுரைப்படி  கங்கையின் புனித நீரில் நீராட்டினான்.  நூற்றுவர் கன்னர் கங்கைப் பேராற்றின் தென் கரையிலே  மன்னன் தங்குவதற்காக மிக அழகான பாடி வீடு அமைத்திருந்தனர்.   அந்தப் பாடிவீட்டில்  தங்கி  பதினெட்டே நாழிகையில்  பகைவரைத் துறத்தியடித்து வெற்றிக்கனி பறிக்க விழுப்புண் ஏந்திய வீரப் பெருந்தகைகளுக்கு பரிசில்கள் வழங்கினான்.

அந்த சமயத்தில் $ மாடலன் அங்கு வந்தான்.  "மன்னர் பெருமானே, வாழ்க, வாழ்க!  மாதவி மடந்தை பாடிய   கானல்வரி பாடல், கனக விஜயர் தம் முடித்தலை நெரித்தது!   கடல் சூழ் உலகை ஆட்சி புரியும் பேறு பெற்றவனே, நீ  வாழ்க!" என்று வாழ்த்துகிறான்.

"நான்மறையாள!  நீ சொன்னதற்கு யாது பொருள்?" என்று கேட்கிறான்.  செங்குட்டுவனுக்கு  கோவலன் அநியாயமாகக் கொலையுண்டதும், தெய்வமாய் கண்ணகி மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கியதும் தான் தெரிந்த செய்திகள்.   அவர்களின் முன் கதையை அறியான். அதனால் புகார் நகரச் செய்திகளில் தொடங்கி  மாதவி பாடிய கானல்வரி பாட்டின் தொடர்நிகழ்வாய் கோவலன் தன் காதல் மனையாள் கண்ணகியின் அருகாமை பெற்றது, இருவரும் கவுந்தி அடிகள் துணையுடன் மதுரை வந்தது,  பின் கோவலன் கொலைப்பட்டது வரையான நிகழ்வுகளைச் சொல்கிறான். 

"மாமுனி    அகத்தியன் வதியூம் பொதிகை மலை வலம் வந்து  தெங்குமரித் துறையில் நீராடி என் ஊழ்வினையின் பயன் போலும், மதுரை மாநகர் அடைந்தேன்.   'கோவலன் தீதிலன்;  பாதுகாப்புக்காக என்னை அண்டி வந்த
கோவலன் இப்படி கொலைக்களப் பட்டானே!  அவனை நான் பாதுக்காக்கத் தவறினேனே' என்று கதறி அழுத மாதரி  இருள் மண்டிய நள்ளிரவில் எரிமூட்டி அதில் மாண்டு போனதாகக் கேள்விப்பட்ட செய்தியைச் சொன்னான்.   'இவர்கள் தீவினை என்னுடன் இவர்களைப் பிணைத்ததோ என்று மருகி கவுந்தி அடிகள் உண்ணா நோன்பு  மேற்கொண்டு அவர் உயிர் பிரிந்த சேதியையும் மாடலன் செங்குட்டுவனுக்கு செப்பினான்.   வழியில் தான் புகார் நகரத்திற்குச் சென்றதையும் அங்கு கோவலன் தந்தை மாசாத்துவானைச் சந்தித்தித்தையும்   மதுரைச் செய்திகள் கேள்விப்பட்டு அவர் பெருந்துயர் அடைந்து துடித்ததையும் சொன்னான்.

'தனது மகனுக்கு ஏற்பட்ட தீங்கு அவரை மிகவும் வாட்டியது.   தன் செல்வம் அனைத்தையும் வாரி வாரி தானமாக வழங்கினார்.   இந்திரனால் உருவாக்கப்பட்ட ஏழு அரங்குகள் கொண்ட இந்திர விகாரம் என்னும் தவப்பள்ளி சென்றார்.   இந்தப் பிறப்பே இறுதிப் பிறப்பாக இருக்க வேண்டி துறவு பூண ஆயத்தமானார்.   அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர்  (6 x 50)  முந்நூற்றுவர் முன்னிலையில் மாசாத்துவான் தீட்சை ஏற்று துறவு பூண்டார்.  இது செய்தி கேள்விப்பட்டு கோவலனின் தாயாரும் பெரும் துயர் வாட்டியெடுத்து இறப்பை எய்தினார்' என்று மாடலன்  செங்குட்டுவனுக்குச் சொல்லி மேலும் தொடர்ந்தான்.

"கண்ணகியின் தந்தைக்கும் இதே நிலை தான்.   ஆசிவகர் முன் புண்ணியத்திற்குரிய  தானங்கள் செய்து துறவறம் பூண்டார் அவர்.  கண்ணகியின் தாயோ துயரச் செய்திகள் கேள்வியுற்று அப்போதே தன்  உயிர் பிரிந்தாள்.    கோவலன்--கண்ணகி நிலை கேட்டு மாதவி மடந்தை  மனம்
மருகிப் போயிற்று.   'நான் இனி நன்னெறியான துறவறம் செல்லத் துணிந்தேன்.  மணிமேகலையை வான்  துயர் உறுக்கும் கணிகையர் கோலம் பூணாது செய்க' என்று தன் தாய்  சித்ராபதியிடம் உறுதிபடச் சொல்லி தான் அணிந்திருந்த தலைமாலையை கூந்தலுடன் ஒருசேரக் களைந்து துறவறம் பூண்டாள்.   நான் சொன்ன செய்தி கேட்டோரில் தங்களை மாய்த்துக் கொண்டவர்களும் உண்டென்பதினால்,    புனித கங்கையில் நீராட வந்தேன்.    மன்னர் கோவே!  நின் கொற்றம் சிறக்க!    வாழிய  நீவிர்!" என்று செங்குட்டுவனை  மாடலன் வாழ்த்தினான்.

"வளம் பொருந்திய தென்னவன் நாடு,   பாண்டிய மன்னவன் இறந்து  பட்டதும்   யாது ஆயிற்று?  அதைச் சொல்வாயாக!" என்று செங்குட்டுவன் மாடலனிடம்  கேட்டான்.

(வளரும்)


======================================================================

 * சங்க இலக்கியம் பதிற்றுப் பத்தில்   இமயவரம்பன் குறித்து புலவர் குமட்டூர் கண்ணனார் பாடிய பாடல்கள் இரண்டாம் பத்தில் காணக்கிடைக்கின்றன.

@  பதிற்றுப் பத்தில் மூன்றாம் பத்தாக இவன் பெருமை  சொல்லும் பாடல்கள் காணப்படுகின்றன.

#  பதிற்றுப் பத்தின் நான்காம் பத்தாக இவன் சிறப்பு குறித்து காப்பியாற்று காப்பியனார் என்ற புலவர் பாடியுள்ளார்.  அகநானூற்றிலும் புலவர் கல்லாடனார் பதிந்துள்ள இவன் பற்றிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது.

$  சிலப்பதிகாரத்தில் பல இடங்களில்   உலா வரும் அந்தணன் மாடலன்.   ஒரு வகையில் மாடலனை வைத்தே   காப்பியத்தை இளங்கோ அடிகளார்  நகர்த்திக் காட்டியிருக்கிறார் என்று சொல்லலாம்.

&  செங்குட்டுவன் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்று வரலாற்று
அறிஞர்  மு. இராகவையங்கார்  கூறுவார்..

18 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

மிக அற்புதமான கதை முந்தைய கதைகளை நிச்சயம் படிக்கிறேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

பதிவின் வரிகளிலிருந்து இரண்டு பாடல்கள் - திரைப்பாடல்கள் - எனக்கு கிடைத்தன. "கனக விசயனின் முடித்தலை வைத்து கள்ளினைச் சுமந்தான் சேரன் மகன்" பாடல் ஒன்று. "கானல்வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே சொல்ல வா" பாடலொன்று. செங்குட்டுவன் இமயம் சென்ற நேரம் இங்கு எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது போல...

நெல்லைத்தமிழன் said...

மிக்க நன்றி எழுத ஆரம்பித்ததற்கு.

இடுகை படிக்க ஆரம்பித்த உடன், 'அச்சம் என்பது மடைமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா' பாடல் நினைவுக்கு வந்தது.

கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே

கோமதி அரசு said...

மாடலன் வாயிலாக மன்னன் மட்டும் அல்ல, நானும் படத்தில் படித்தவைகளை மீண்டும் நினைவு படுத்திக் கொண்டேன்.
மிக அழகாய் சொல்லி வருகிறீர்கள்.
ஸ்ரீராம், நெல்லைத்தமிழன் நினைத்த பாடல்களை நானும் நினைத்தேன்.

படங்கள் எல்லாம் பொருத்தமாய் அழகாய் இருக்கிறது.

கோமதி அரசு said...

"வளம் பொருந்திய தென்னவன் நாடு, பாண்டிய மன்னவன் இறந்து பட்டதும் யாது ஆயிற்று? அதைச் சொல்வாயாக!" என்று செங்குட்டுவன் மாடலனிடம் கேட்டான்.//

செங்குட்டுவன் போல் கேட்க நானும் ஆவலாக இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மிக அருமையான வரலாற்றுத் தொடர்.
கண்ணகிக்குப் பிறகு நடந்தவைகளை மாடலன்
சொல்ல நானும் அறிந்தேன்.

மணிமேகலை பற்றிப் பள்ளியில் படித்ததுதான். அதிகம் தெரியாது.
அச்சம் என்பது மடமையடா. பாடல் மிகவும் இனிமை.

அரிய செய்திகள் பல அறியக் கொடுக்கிறீர்கள். மிக நன்றி
ஜீவி சார்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பதிவு.

முந்தைய பதிவுகளையும் படிக்க வேண்டும்.

ஜீவி said...

@ கவிஞர் ரூபன்

முடிந்தால் படித்து விடுங்கள். நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//கனகவிசயர் முடித்தலை வைத்து...//

நெல்லையும் இந்த திரைப்பாடலைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் இருவர் பகிர்ந்தலிலும் வார்த்தைகளில் வித்தியாசம் உண்டு.

//செங்குட்டுவன் இமயம் சென்ற நேரம் இங்கு எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது போல...//

இல்லை. செங்குட்டுவனுக்கு முன் கதை தெரியாது. அதைத் தான் மாடலன் சொல்கிறான்.


ஜீவி said...

@ நெல்லைத்தமிழன்.

இரண்டுமே ஓசை நயம் நிரம்பிய பாடல்கள்.

கண்ணதாசன் வனவாசம் இருந்த காலத்தது.

ஜீவி said...

@ கோமதி அரசு

பாடத்தில் படித்தவைகளையா நினைவு கூர்கிறீர்கள்? அல்லது படத்தில் பார்த்தவையையா?

தொடர்ந்து விட்டு விடாமல் வாசித்து வருவதற்கு நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு (2)

அடுத்த அத்தியாயத்தில் சொல்ல வேண்டும்.

அதற்குள் வேறொரு பொறுப்பு வந்திருக்கிறது!..

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

மணிமேகலை பற்றி விவரமாக அறிய சீத்தலை சாத்தனாரிடம் கேட்க வேண்டும்.
கதைச்செறிவை விட பெளத்த தத்துவங்களின் சாரம் அந்தக் காப்பியம்.

அச்சம் என்பது மடமையடா.. கண்ணதாசனின் மாஸ்டர் பீஸ்கள்.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

நேரமிருப்பின் படித்து விடுங்கள், வெங்கட்.

Bhanumathy Venkateswaran said...

பழைய இடுகைகளையும் படித்து விட வேண்டும்.

ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்

தங்களுக்குப் பிடிக்கும். வாசித்து விடுங்கள்.

வே.நடனசபாபதி said...

‘அழகிய தமிழ்மொழி இது!’ தொடரை தொடரக் கேட்டுக்கொண்ட திரு நெல்லைத்தமிழன் அவர்களுக்கு நன்றி! மாடலன் செங்குட்டுவனுக்கு கோவலன் கண்ணகியின் முன் கதையையும், மதுரை நிகழ்வுக்குப் பின் நடந்தவைகள் பற்றியும் சொன்னதை சுருக்கமாக சொல்லி அவன் மேலும் என்ன சொல்ல இருக்கிறான் என்பதை அறியும் ஆவலைத் தூண்டியுள்ளீர்கள்.

தொடர்கிறேன் மாடலன் மேலும் சொன்னதை அறிய,


ஜீவி said...

@ நடன சபாபதி

வஞ்சிக்காண்டம் வரை வந்திருந்த தொடரை ஏதோ சில காரணங்களால் தொடர முடியாமல் நிறுத்தியிருந்ததை நெல்லைத்தமிழன் 'தொடருங்களேன்' என்று சொன்னதும் ஆர்வத்துடன் தொடர்ந்து விட்டேன்.

இளங்கோ அடிகளாரின் கதை சொல்லும் நேர்த்தி இப்பொழுதும் ஆச்சரியப்பட வைக்கிறது.
'அதற்கப்புறம் நடந்ததென்ன?' என்ற நிகழ்வின் கோர்வையை செங்குட்டுவனுக்கு மாடலன்
சொல்வது போல அமைத்திருக்கும் நேர்த்தி -- எவ்வளவு காலத்திற்கு முன்னால்!-- நமக்கும் ஒரு ஆச்சரியமாய் அமைந்திருக்கிறது.

தொடர்ந்து வாருங்கள், ஐயா.

Related Posts with Thumbnails