மின் நூல்

Saturday, September 21, 2019

மனம் உயிர் உடல்

9.   அறிவின்  சவாரி


னம் விருப்பப்பட்டவைகளையெல்லாம் நிறைவேற்ற முடிவதில்லை; அதனால் நிறைவேற்ற முடிந்தவற்றை   மட்டும் மனம் விருப்பப்படுகிற மாதிரி  வைத்துக் கொள்ளலாமா  என்று வல்லிம்மாவின்  யோசனை போகிறது. 

இந்த யோசனை என்பது தான் அறிவின் அறிவுறுத்தல்.   'ரெண்டு பேரும்  எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிப் போங்கப்பா;  அப்பத் தான் முரண்டலில்லாமல் காரியங்கள் நடக்கும்' என்று மனத்திற்கும்  நமக்கும் சமாதானம் பண்ணி வைக்க முயற்சிக்கிறது அறிவு.

மனம், அறிவு, நாம் எல்லாம் வெவ்வேறா என்றால் உடற்கூறின் ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதற்கான வசதியான  ஏற்பாடு இது என்று சொல்லலாம்.

என்னதான் அறிவு மனத்தின்  புரிதலுக்காக முயற்சித்தாலும்  பல நேரங்களில் இந்த மனத்தின் வீம்பு மட்டும்  குறைந்த பாடில்லை.   'உன்னால் முடியும், தம்பி' என்று அது நம்மை ஊக்குவிக்க தன்னால் ஆனதைச் செய்து,  தான்  நினைப்பதை சாதித்துக் கொள்ள விரும்புகிறது.

அதாவது மனிதனின் மொத்த நிலையை பிரதிநிதித்துவப்  படுத்த மனம் முயல்கிறது.   நானே எல்லாம்.. எல்லாவற்றையும் தீர்மானிப்பது நானே என்ற நிலை இது.

சில நேரங்களில்  மனதின்  இந்த ஊக்குவிப்பு உந்தப்படும் நம் செயல்பாட்டிற்கு உதவி வெற்றிக்கனி பறித்தால் நம்மை ஊக்குவித்த நம் மனத்திற்கு மனத்திற்குள்ளேயே பாராட்டு, நன்றி..  எல்லாம் சொல்லிக் கொள்வோம்.   அடுத்த இன்னொரு சமயம் இதே மாதிரி மனசின் இன்னொரு ஊக்குவிப்பு  தோல்வி அடைந்தால் 'சே!' என்று சலித்துக் கொள்வோம்.

எல்லா நேரங்களிலும் மனசில் ஆலோசனை நமக்கு சாதகமாகவே நடந்து விடுவதில்லை.  இதற்கு என்ன செய்வது?

மலைப்பாதையில்  நடுவில்  ஆடு தாண்டுகிற மாதிரி ஒரு சின்ன இடைவெளி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.   வேகமாக நடந்து வரும் பொழுது அந்த இடைவெளி பள்ளத்தைப்  பார்த்து பயந்து  போகிறோம்.  தாண்டிப் போகலாமா, வேண்டாமா என்று ஒரு 'திடுக்'.   பள்ளம் கீழே அதல பாதாளமாக இருக்கிறது.  கரணம் தப்பினால் மரணம் தான்.                     

'இதுக்குப் போய் பயப்படலாமா?' என்கிறது மனம்.  'துணிந்து தாண்டு;  ஆறிலும் சாவு; நூறிலும் சாவு'  என்று  எப்பவோ படித்த ஒரு சினிமாக்  கவிதையை சட்டென்று உதவிக்கு எடுத்துக் கொடுக்கிறது மனம். 

அதல பாதாள பள்ளத்தைப் பார்த்து திடுக்கிட்டதும் மனம் தான்;  துணிந்து தாண்டு என்று உற்சாகப்படுத்தியதும் மனம் தான்.   பல நேரங்களில் இப்படி  எதிரும் புதிருமாக வாதாடுகிற பழக்கம் இந்த மனதோடையே கூடப் பிறந்த ஒன்று!..

'தாண்டலாமா, வேண்டாமா' என்ற குழப்பத்தின் நடுவில்,  'வேண்டாம்' என்று தீர்க்கமாக, தீர்மானமாக ஒரு குரல் நம்மில் எழுகிறது.  'பக்கத்தில் சிவப்புக் கலர் பெயிண்ட் அடித்து ஒரு போர்டு இருப்பதைப் பார்த்தாயா?.. அதில் என்ன எழுதியிருக்கிறது, படித்தாயா?.. தாண்டி கால் பதிக்கும் எதிர்ப்புறம் புதைகிற மாதிரி சேறாக இருக்கிறதாம்..  அதனால் எதிர்ப்பக்கம் யாரும் போவதைத் தவிர்க்கவும்'  என்று அந்த போர்டு சேதி சொல்கிறது..

'நல்லவேளை..  இப்போது தான் போர்டு  கண்ணில்  பட்டது.  தாண்டாமல் தப்பித்தோம்' என்று தாண்டச் சொன்ன மனசை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம்.

'இப்படியா, அப்படியா' என்று எதைச் செய்வது என்று அல்லாடும் சமயங்களில்   சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்து அலசி நம்மில் ஒரு முடிவை தீர்க்கமாக பதிக்கும்  வேலையைச் செய்வது தான் நம் அறிவு.   அந்த அறிவு எங்கோ எதையோ வாசித்த அல்லது தெரிய  வந்த அறிவாக இல்லாமல் நாமே அனுபவப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் அறிவாக இருந்தால் வாசித்து, தெரியவந்த-- அறிவை விட உறுதியாக இருக்கும்.    'ஞாபகமிருக்கா?..   நாலு வருஷத்துக்கு முந்தி இதே மாதிரி  நீயே ஒன்றைச் செய்து மாட்டிக் கொண்ட நினைவு இருக்கா?..  அதையே இப்பவும் திருப்பிச் செய்து திரும்பவும் மாட்டிக் கொள்ளப் போகிறாயா?'  என்று பழசைப் புரட்டிப் பார்த்து காரண காரியத்தோடு தீர்க்கமாக உபதேசம் பண்ணும் ஆற்றல் பெற்றது  அனுபவப்பட்ட தெளிந்த அறிவு.

அது  என்ன தெளிந்த அறிவு?..  அறிவார்ந்த செயல்களை மரியாதையுடன் உள்ளார்ந்து மதிக்கத் தெரிந்தால்,  அதையே பாடமாகக் கொள்ளும் தெளிவு நம்மிடம் பிறக்கும் பொழுது  அதுவே தெளிந்த அறிவாக நம்மில் தீர்க்கமாகப் பதிகிறது.   ஏனோ தானோவென்று எல்லாவற்றையும் மேலோட்டமாக
பார்க்கும் பழக்கமுள்ளவர்களின் அறிவு இப்படியான தெளிவு பெறாமல் ஊசலாட்டமாகவே இருக்கும்.  இதில் அனுபவப்படும் அறிவுக்கு  மட்டும் தீர்மானமாக தீர்க்கமாக எல்லோர் மனசிலும் பதியும் ஆற்றல் உண்டு.

இப்பொழுது ஆரம்ப கேள்விக்கு  வருவோம்:

அறிவு மனத்தை கன்வின்ஸ் பண்ணுகிற  சக்தி கிடைக்கும் பொழுது   மனம்  தன்னால் நினைப்பதையெல்லாம் நிறைவேற்ற முடியவில்லை என்ற ஆதங்கம்   எழுவதற்கே வாய்ப்பில்லாமல் போகும்.  அப்படி கன்வின்ஸ் பண்ணுகிற அளவுக்கு  அறிவு செறிவு பெற்றிருக்க வேண்டும் என்பதே தேவையாகிப் போகிறது.

மனம்:  டூ வீலர் காலமெல்லாம் மலையேறிப் போயாச்சு.  கார் ஒண்ணு வாங்கிட்டோம்ன்னா நிம்மதியா இருக்கும்.


அறிவு: மாதம் முபபதாயிரம் சம்பாத்தியத்தில்  கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாயே,  இது சாத்தியப்படுமா?

மனம்:  ஏன் சாத்தியப்படாது?..  அத்தனை  வங்கிகளும் 'இந்தா லோன்; இந்தா லோன்'னு எவனாவது மாட்டமாட்டானான்னு அலையறாங்களே!  நாலு  சக்கர வாகனம் வாங்க லோன் வாங்கவா முடியாது?..

அறிவு:  முடியும்.  லோன் வாங்கறதா பெரிசு?..  மாசாமாசம் தவணை கட்ட முடியுமா?..   பேர் தான் முப்பதாயிரம் சம்பளம்.  பிடித்தமெல்லாம் போக வீட்டுக்கு  எடுத்துப் போவது  இருபதாயிரம் தானே?..  எத்தனை  செலவு இருக்கு?..  இப்பவே இருபது தேதியாச்சுனா,  சம்பளம் வாங்க இன்னும் பத்து நாள் இருக்கேன்னு பிரமிப்பா இருக்கு..  கார் வாங்கிட்டேனா, பாங்குக்கு தவணைப் பணம் கட்ட வேண்டாமா?..

மனம்:  இப்படியெல்லாம் நூத்து நூத்து யோசிச்சா, எந்தக் காரியமும் நடக்காது.. முதல்லே துணியணும்.  துணிஞ்சிட்டா நடக்கறதெல்லாம் பழக்கமாகிடும்.   அப்படித் துணியறவன்  தான்  வாழ்க்கைலே ஜெயிக்கறான்.

அறிவு:  நினைக்கிற காரியத்தை நடத்திக் காட்டுவதே அதாவது,    கார்  வாங்கறதே ஜெயிக்கறது  ஆகாது.  ஒழுங்கா தவணைப் பணத்தைக் கட்டிக் கடன்லேந்து மீளணும்..  அதான் உண்மையான  ஜெயிப்பு.  தெரிஞ்சிக்கோ.

மனம்:  அதெல்லாம் சராசரி ஆட்கள் நினைப்பு.   பெரிய மனுஷங்கள்லாம்  எதைப் பத்தியும் யோசிக்காம லோன் வாங்கித்தான் இவ்வளவு தூரம் வாழ்க்கைலே உசந்திருக்காங்க..  அவங்க கோடிலே வாங்கினா, நாம லட்சத்திலே வாங்கக் கூடாதா, என்ன?

அறிவு:  சரி. நீ லோன் வாங்கிக் கார் வாங்கறதுன்னு தீர்மானிச்சிட்டே. உன் வழிக்கே இப்ப வர்றேன்..  ஏன் கார் வாங்கணும்ன்னு இப்படி ஒரு அவசர முடிவு?

மனம்:  அவரசம்லாம் இல்லே.  ரொம்ப நாளா ஊறப்போட்டிருந்த ஆசை இப்போ வெளிப்பட்டிருக்கு.  அவ்வளவு  தான்.  அதுக்கும் காரணம் உண்டு.

அறிவு:  அப்படி என்ன பெரிய காரணம்?

மனம்:  கார் விலையெல்லாம் இப்போ சல்லிசா ஆயிடுத்து.  த்ரோ எவே ப்ரைஸ்ன்னு சொல்லுவாங்களே,  அந்த  நிலமை.

அறிவு:  ஏன் அந்த நிலமை?..

மனம்:  அதுக்கு பல காரணங்கள்.  உற்பத்தி பின் வாங்கியிருக்கு.  எலெக்ட்ரிக்  கார் தான்  இனிமேன்னு சொல்றாங்க.. அதனால, டீசல்-- பெட்ரோல் கார்லாம் வித்து காசாக்கி எலெக்ட்ரிக் காருக்குப் போகலாமேன்னு  பல பேர் நினைக்கிறாங்க   என்கிறது ஒரு காரணம்.

அறிவு:  அப்போ நீயும் எலெக்ட்ரிக்கு போகலாமில்லையா?..  சீப்பாவும் சமாளிக்கற மாதிரியும் இருக்கும்.

மனம்:  அப்படியா சொல்றே?                                                       

அறிவு:  அப்படியே தான்.  இப்போத்தான்  எலெக்ட்ரிக் காரை சார்ஜ் பண்ணறதுக்கே மெட்ராஸ்லே ஏழோ எட்டோ எடத்திலே  தான் வசதி இருக்காம்.   அந்த  அரைகுறை வளர்ச்சிலாம் மாறட்டும்.  கொஞ்ச நாள் கழிச்சு வாங்கலாம்.

மனம்: நீ  சொல்றதும் சரி தான்.

அறிவு:  சரி.  கார் வாங்கறது இருக்கட்டும்.   காரை நிறுத்தறத்துக்கு உன்னோட அப்பார்ட்மெண்ட்லே இருக்கற இடம் போதுமா?...

மனம்: அதுவும் கொஞ்சம் சங்கடம் தான்..  பொதுவான  கார் பார்க்கிங்..  நாலு பேர் நிறுத்தலாம்.  அஞ்சு பேர் இப்பவே கார் வைச்சிருக்காங்க.. தினமும் பொழுது விடிஞ்சா அவங்களுக்குள்ளே இதுவும் ஒரு அக்கப்போர் தான்.

அறிவு:  பாத்தியா?.. இதெல்லாம் யோசிச்சையா?..    கொஞ்ச நாள் போகட்டும்.   பாட்டரி காரே வாங்கிக்கோ..  அப்படி வாங்கறச்சே,  கவர்டு கார் பார்க்கிங் இருக்கற அப்பார்ட்மெண்டுக்கு மாறிக்கலாம்.  சரியா?..

மனம்:  சரி.. அப்படியே செஞ்சுடலாம்.

ஆக கார் வாங்கங்கற துடிப்பு   இப்போதைக்கு மனசிலேந்து  கழண்டாச்சு.

இதான் அறிவு மனசை அப்பப்போ கன்வின்ஸ் பண்ற திறமை பெற்றிருக்கறதுக்கு  உதாரணம்.

அதாவது நம்மால் முடிந்தவைக்கு மட்டும் மனசை ஈடுபடுத்தற ஆற்றலை அறிவு பெற்றிருப்பது..  சொல்லறபடிச் சொன்னா மனசும் ஏத்துக்கும்.  அப்படி சொல்றதுக்கு  அறிவை பல விஷயங்களைத் தெரிந்து  வைத்திருக்கிற ஆற்றலுக்கு மேம்படுத்துவதும் முக்கியமாகிப் போகிறது.


(வளரும்)

18 comments:

G.M Balasubramaniam said...

பார்க்கப்போனால் அறிவுமனமும் ரீசனிங்கின் இரு வேறுபக்கஙள்தானே

கோமதி அரசு said...

சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே நீ தெளிவாய் //
என்ற மகரிஷி பாடல் நினைவுக்கு வருது.
சில நேரங்களில் மனது சரியாக சொல்லும், சில நேரங்களில் மனம் எடுக்கும் முடிவு தவறாக மாறும். வேறு ஒருவரிடம் ஆலோசனை கேட்க தோன்றும், அவர் சொன்னாலும்
நம் அறிவு என்ன சொல்கிறதோ அதை கேட்டு நடப்பதே நல்லது.
நம்மில் இருந்து வழி நடத்தி செல்பவன் அவன் (இறைவன்) அல்லவா?

ஸ்ரீராம். said...

கார் வாங்க முடியாது என்று தீர்மானிக்கும் அதே மனம் சமயங்களில் அதை வாங்கும் அளவு வருமானத்தை அதிகப்படுத்திக்கொள்ள  ஊக்கப்படுத்தவும் செய்யும்.  ஆசைப்படுவதும் மனம்தான்.   பதில் சொல்லி ஆற்றுப்படுத்துவதும் மனம்தான். உத்வேகத்தை மனதில் தூண்டுவதும் அதே மனம்தான்.

நெல்லைத்தமிழன் said...

//அறிவு மனத்தை கன்வின்ஸ் பண்ணுகிற சக்தி கிடைக்கும் பொழுது// எனக்கு இந்த இடுகை கன்ஃப்யூசிங் ஆக இருக்கு.

மனம் என்பதை நாம் 'மனசாட்சி' என்று சொல்லமுடியுமா? அறிவு என்பது நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்று சொல்லலாம். இவனை ஏமாற்று, உனக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும் என்று சொல்வது எது? அப்படிச் செய்யாதே, அது பாவம் என்று சொல்வது எது?

நெல்லைத்தமிழன் said...

//மனம் விருப்பப்பட்டவைகளையெல்லாம் நிறைவேற்ற முடிவதில்லை;// - இதுக்கு என்ன அர்த்தம்? 'ஆசை' வேறு, செயல்படுத்துவது வேறல்லவா. மனத்தை விட்டால், அது பிரதம மந்திரியாகணும், கிரிக்கெட் கேப்டன் ஆகணும் என்றெல்லாம் நினைக்கும். அதெல்லாம் நிறைவேறக்கூடியதா? (நான் சொல்வது, வாழ்க்கையில் குறிக்கோள் என்று மனத்தில் நாம் நினைத்துக்கொள்வது பற்றியல்ல)

நெல்லைத்தமிழன் said...

//கார் வாங்க முடியாது என்று தீர்மானிக்கும் அதே மனம் சமயங்களில் அதை வாங்கும் அளவு வருமானத்தை அதிகப்படுத்திக்கொள்ள ஊக்கப்படுத்தவும் செய்யும். ஆசைப்படுவதும் மனம்தான்// - புத்தி மனசு இரண்டும் வேறு வேறு என்றல்லவா நான் படித்திருக்கிறேன். 'காதலியை இப்போவே அவங்க தெருவுக்குப் போய், அங்கேயிருந்து வீட்டைப் பார்த்தால் தெரியறாளா என்று பார்க்கணும்' என்று நினைப்பது மனசு. 'வேண்டாத வேலை. ஒருவேளை அவ அப்பா வாசல்ல நின்னுக்கிட்டு நம்மைப் பார்த்துட்டா? இப்போ போகாதே..கொஞ்சம் இருட்டினப்பறம் போ' என்று சொல்வது புத்தி இல்லையா?

ஜீவி said...

@ GMB

உங்கள் கேள்வி அறிவும் மனமும் ரீஸனிங்கின் இரு வேறு பக்கங்கள் தானே என்று இருந்திருக்க வேண்டுமோ?

அப்படியெனில் இல்லை என்பதே பதில். இதற்கு அடுத்தது அது என்கிற மாதிரி எழுத முயற்சித்து வருகிறேன். ஒரே தாண்டலாக பின்வரும் பகுதிகளுக்குத் தாண்டிப் போனால் தொடர்பு விட்டுப் போய் விடும். மூளையின் செயல்பாடுகளுக்கு வரும் பொழுது ரீஸ்னிங் பற்றிக் குறிப்பிடுகிறேன். நன்றி, ஐயா.

ஜீவி said...

@ கோமதி அரசு

//சுயமாய்ச் சிந்தித்தே நீ தெளிவாய் //

-- மகரிஷி

ஒரு விஷயத்தைப் பற்றிய அறிதல் எனபது அந்த விஷயத்தில் நீங்கள் கொண்டிருக்கிற ஞானத்தைப் பொறுத்தமட்டில் தான் இருக்கும். அந்த ஞானத்தில் சம்பந்தப்பட்ட விஷயத்தை அலசி ஆராய்வது தான் சுயமாய் சிந்தித்தல் என்று அர்த்தம். இல்லையா?

இந்தி மொழிக் கல்வியில் காங்கிரஸூம், பிஜேபியும் என்பது ஆராய வேண்டிய தலைப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தி மொழி பரப்பல் விஷயத்தில் காங்கிரஸ் என்ன செய்தது, அதே விஷயத்தில் பிஜேபியின் நிலைப்பாடு என்ன என்ற இரண்டு விஷயங்களையும் தெள்ளத் தெளிவாக நீங்கள் அறிந்திருந்தால் தான் கிடைக்கிற தரவுகளை வைத்துக் கொண்டு அந்த தலைப்பில் ஆராய முடியும். இல்லையா?..

இதே மாதிரி தான் எல்லாம். சுயமாக சிந்தித்தல் என்பது ஒரு விஷயத்தைப் பற்றி நாம் அறிந்திருக்கும் தகவல்களிலேயே வட்டமடிக்கும். அதைத் தாண்டிப் போக முடியாது.
சிந்தித்தல் பற்றி அறிவியல் ரீதியான விளக்கம் இது தான். அந்த குறிப்பிட்ட விஷயம் பற்றி மேலதிகத் தகவல்களை நாம் தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ள அது பற்றிய நம் சிந்திப்பு விரிவுபடும்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//ஆசைப்படுவதும் மனம்தான். பதில் சொல்லி ஆற்றுப்படுத்துவதும் மனம்தான். உத்வேகத்தை மனதில் தூண்டுவதும் அதே மனம்தான்.//

ஒரே போடாக போட்டு விட்டீர்களே!

'எங்கே அந்த இறைவன்?' என்று பகுத்தறிவாளர்கள் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டவர்கள் கேட்டது போல, 'எங்கே அந்த மனம்?' என்று யாராவது கேட்டால்
என்ன சொல்வது ஸ்ரீராம்?.. இந்தக் கட்டுரைத் தொடரின் அடிநாதமே அந்த மனதை கண்டறியும் வேலை தானே?,,

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்


//மனம் என்பதை நாம் 'மனசாட்சி' என்று சொல்லமுடியுமா?//

மனசாட்சி, மனக்கோணல், மனப்போக்கு, மனவிரிசல், மனவெளிச்சம்

--- இப்படி நம் இஷ்டத்திற்கு வார்த்தைக் கோர்வைகளை உருவாக்கி விட்டு அதற்கெல்லாம் அறிவியலில் நேரிடையான அர்த்தம் சொல்ல முடியுமா, நெல்லை?

Thenammai Lakshmanan said...

சரியான தர்க்கம். வெளிநாட்டில் வாழும் இன்றைய இளையர்களின் மனதில் இதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதைப் படம் பிடித்தால் போல் இருக்கிறது உங்கள் ரீசனிங் :)

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்


// அறிவு என்பது நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்று சொல்லலாம். இவனை ஏமாற்று, உனக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும் என்று சொல்வது எது? அப்படிச் செய்யாதே, அது பாவம் என்று சொல்வது எது?.. //

இதெற்கெல்லாம் அறிவியலில் பதில் கிடையாது. அவுட் ஆஃப் சிலபஸ்லே வேணும்னா பதில் சொல்லலாம்.

அவனவன் கற்கும் வாழ்க்கைப் பாடம் தான் இதெல்லாம்.

1. இவனை ஏமாற்று. உனக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும்

2. அப்படிச் செய்யாதே அது பாவம்

-- இந்த இரண்டு வித்தியாச நடவடக்கைகளில் கிடைக்கும் பலன் தான் சம்பந்தப்பட்டவர்களை உருவாக்குகிறது. அந்த உருவாக்கலில் தான் நன்மையும், தீமையும் அவரவர்க்கு வாய்க்கிறதே தவிர குறிப்பிட்ட அந்த செயல்பாடுகளின் உடனடி விளைவுகளாக இல்லை. அதனால் தான் ஏமாற்றுகிறவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்களாகவும், பாவ-புண்ணியங்களுக்குப் பயந்தவர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும் காட்சியளிக்கிறார்கள்.
இழிந்த செயல்கள் பாவம் பயப்பதாகவும், உயர்ந்த செயல்கள் புண்ணியம் அளிப்பதாகவும்
ஒரு நல்ல சமுதாயம் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பாவ-புண்ணியங்கள் உபதேசங்களாக, கதைகளாக உலவி வருகின்றன. ஏமாற்றுபவர்கள் இன்றில்லாவிட்டாலும் என்றாவது தண்டனையிலிருந்து தப்ப மாட்டார்கள் என்பது உலகம் உருப்படுவதற்கான உபதேசம். அவ்வளவு தான்.

அவர்கள் வாழ்க்கை காலத்தில் தண்டனை பெறாவிட்டாலும் அடுத்த பிறவியிலாவது தண்டிக்கப்படுவார்கள் என்று ஜன்ம தொடர்ச்சிக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். நல்லனவைகள் சிறக்கவும், அல்லாதவைகள் அழியவும் வாழ்க்கை நல்லபடி கடைத்தேற எப்படி எப்படியெல்லாமோ நம் முன்னோர்கள் பாடுபட்டிருக்கிறார்கள். அதற்கான உபதேசங்களை நம்பிக்கையளிக்கும் கதைகளாக உருவாக்கியிருக்கிறார்கள்.

வே.நடனசபாபதி said...

அறிவு என்பது ‘நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை’(Justified true belief) என்கிறார் பிளேட்டோ (Plato) என்று எனது முந்தைய பின்னூட்டத்தில் கூறியதை தங்களின் இந்த பதிவு உறுதி செய்கிறது.

எனவே மனசை ஈடுபடுத்தும் ஆற்றலை அறிவு பெறுவதற்கு அது தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது சரிதான். ஆனால் சிலசமயம் அறிவு தடுத்தாலும் மனசு கேட்கமாட்டேன் என்கிறதே. அதற்கு காரணம் என்ன ?


நெல்லைத்தமிழன் said...

ஜீவி சார்.... தியானம் சொல்லித்தரவங்க, மனசு புத்தி இரண்டும் வெவ்வேறுன்னு சொல்றாங்க. புத்தி ஒரு காரியம் செய்யணும்னு நினைக்கும், ஆனா மனசு அலைபாயும். இரண்டையும் ஒரு புள்ளியில் சந்திக்கவைத்து நிறுத்த முடிந்தால், தியானத்தில் நாம் முழுமையாகிட்டோம்னு அர்த்தம். இதைப்பற்றி யோசியுங்களேன்

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

தியானம் பற்றி எனக்குத் தெரிந்ததை அடுத்த பகுதியில் எழுதுகிறேன். மேட்டர் கொடுத்ததற்கு நன்றி, நெல்லை...

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//மனத்தை விட்டால், அது பிரதம மந்திரியாகணும், கிரிக்கெட் கேப்டன் ஆகணும் என்றெல்லாம் நினைக்கும். //

மனம் மிக உயரிய ஒரு ஏற்பாடு. அடிப்படை தகுதி இல்லாத கனவுகளுக்கு மனக்கோட்டை கட்டுவதாகவும் நம் வழக்கில் சொல்வதுண்டு. அடிப்படைத் தகுதி இருந்து மனம் அப்படி நினைத்தால் அது வரவேற்க வேண்டிய முன்னேற்றத்திற்கான ஒரு தூண்டுகோல் தானே நெல்லை?..

ஜீவி said...

@ Thenammai Lashmanan

என்ன இரண்டே வரிகளில் பின்னூட்டை முடித்துக் கொண்டீர்கள்?.. அவ்வளவு தானா?

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

//ஆனால் சிலசமயம் அறிவு தடுத்தாலும் மனசு கேட்கமாட்டேன் என்கிறதே. அதற்கு காரணம் என்ன ?//

அதற்கு மனசின் மேலான அறிவின் வீச்சின் சக்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

அல்லது அறிவு எதையும் பரிசோதித்துப் பார்க்க விரும்பவில்லை என்று அர்த்தம்.

ஒரு நிகழ்வின் செயல்பாட்டுக்கு வாய்ப்புகள், காலம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாம் புறக்காரணிகளாக இருக்கின்றன.

இதையெல்லாம் ஆய்ந்து அறிவும் மனமும் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்தால் நல்லது.
அந்த மாதிரியான பழக்கத்திற்கு ஆட்பட சம்பந்தப்பட்டவர்கள் முயல வேண்டும்.

அறிவும் மனமும் எதிர் எதிரானவை அல்ல. வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை மாடுகள்.

Related Posts with Thumbnails