மின் நூல்

Tuesday, September 3, 2024

இது ஒரு தொடர்கதை -- 17

(கதையின் முன்பகுதிகளையைப் படிக்காதவர்களுக்காக முன் கதைச் சுருக்கம் என்ற பெயரில் கதையின் போக்கைத் தெரிந்து கொள்ள இது ஒரு குறிப்பு தானே தவிர ரசனையான வாசிப்புக்கு   முன் பகுதிகள் முழுதையும் வாசித்து விட வேண்டுகிறேன் அது உங்களுக்கோர் புது அனுபவமாக இருக்கும்..)

முன் கதைச் சுருக்கம்

மோகன் கட்டிளம் காளை,  கல்யாணம் ஆகாதவன்,  இளம் எழுத்தாளன், மனவாசம் என்னும் பத்திரிகையில் சமீபத்தில் தான் பணியில் சேர்ந்திருக்கிறான்.  அவன் எழுதிக்கொண்டிருக்கும் சமூகத்தொடர் தொடர்பாக பலரை சந்தித்து நிஜத்தின் சாயலை எழுத்தில் கொண்டு வர அனுபவம் பெற வேண்டியிருக்கிறது.  அந்த நோக்கத்தில் புரொபசர் புரந்தர தாசரை சந்திக்கிறான்.  புரந்திரதாசரின் அருமைப் புதல்வி வித்யா.

பாண்டியனும் மங்கையும் இளந்தம்பதிகள்.  மோகனின் தொடர்கதை கதாபாத்திரங்க்கள்.  உள்ளூர் ஆடலரசர் கோயில் பிராகாரத்தில் வரிசையாக வீற்றிருக்கும் அறுபத்து மூவர் சிலைகளின் மீது சமீபகாலமாக மோகனுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது.  அதுவும் நின்ற சீர் நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசி நாயனார், குலச்சிறை நாயனார் ஆகிய மூன்று நாயன்மார்களிடம் தனித்தன்மையான பாசம் அவனுக்கு ஏற்படுகிறது.  கோயில் பண்டாரம், பாண்டியனுக்கு நாயன்மார்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களைச் சொல்ல பெருந்துணையாய் இருக்கிறார்.

(இனி தொடரலாம்..)


'சட்'டென்று தலை திருப்பிப் பார்த்தான் மோகன்.                    

'அம்மா வந்தாச்சு போலிருக்கு அப்பா..' என்று வித்யா சொன்னது அவனை உசுப்பி விட்ட சடுதியில்.   காரை விட்டு இறங்கிய அந்தப் பெண்ணின் பின்புறம் தான் அவன் பார்வையில் தட்டுப்ப்ட்டது. 

 'அப்புறம் என்ன நடந்தது, நீ சொல்லுப்பா' என்று புரந்தரதாசரின் கேள்வி அவனை அவர் பக்கம் திருப்பியது.

எங்கு விட்டோம் என்ற மோகனின் நினைவை மீட்டெடுக்கிற மாதிரி "கும்பேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்தாலும் மனமில்லாமல் அந்தப் பெரியவருடன்  வெளியே வந்ததாகச் சொன்னே..அதுக்கு மேலே என்ன நடந்தது?" என்று கேட்டார் புரந்தரதாசர்.


"அதுக்கு மேலே.." என்று முணுமுணுத்தபடியே லேசான யோசனையில் ஆழ்ந்த மோகன், "பாதிப் பிராகாரம் வரை என்னுடன் வந்த அந்தப் பெரியவர், 'சரிப்பா;.. நான் இங்கே தான் இருப்பேன்..  நீ எப்போ வந்தாலும் என்னை இங்கேப் பார்க்கலாம்..' ன்னு சொல்லி எனக்கு விடை கொடுத்த நினைவு.. " என்று அரை குறை  ஞாபகத்தில் சொல்கிற        மாதிரி சொன்னான்.                                                                                                                                              

 "அப்போ நாம கும்பேஸ்வரர் கோயிலுக்குப் போனால் அந்தப் பெரியவரைப் பார்க்கலாம்'ன்னு சொல்லு.." என்று புரந்தரதாசர் உடனே கேட்டது மோகனுக்கு எதிர்பாராதக் கேள்வியாக இருந்தது.

"ம்.. பார்க்கலாம்ன்னு தான் நினைக்கிறேன்.." என்று இழுத்தபடியே சொன்னான் அவன்.

"நீ கடைசியா எப்போ அவரைப் பாத்தே?" என்ற புரந்தரதாசரின் கேள்விக்கு "அதான் ஆறேழு மாசத்திற்கு முன்னாடி கும்பகோணம் போனேன்னு மோகன் சொன்னாரேப்பா" என்றாள்.வித்யா.

"தேங்க்ஸ்.." என்று குரலெழும்பாமல் மனசுக்குள் சொல்லிக் கொண்டான் மோகன்.  சொல்லப்ப்போனால் தான் எப்போ குடந்தை போனோம் என்பதே  புரந்தரதாசர் கேட்ட பொழுது சட்டென்று அவன் நினைவுக்கு வராமல் இருந்தது.  அவன் மனம் ஏனோ வித்யாவின் அம்மாவைச் சுற்றி அலைபாய்வதை அவனே உணர்ந்தான்.  ஏனென்று தான் தெரியவில்லை.

னிக்கிழமை மதியம்.

"மங்கை! மாலை  கோயிலுக்குப் போகலாமா?" என்று கேட்டான் பாண்டியன்.

"வெளிலே போனீங்க. சீக்கிரம் வந்திட்டீங்களேன்னு பார்த்தேன்.. கோயில் நினைப்பாகவே இருக்கோ?" என்றாள்.

"எப்படிக் கண்டுபிடிச்சே?"

"பாம்பின் கால் பாம்பறியும்.."

"பாம்பின கால் பாம்பறியும் என்று தானே சொல்வார்கள்?  அது என்ன பாம்பின் கால்?.."

"என்னவோ கம்ப ராமாயணத்திலே அப்படித்தான் கம்பர் சொல்லியிருக்கார்".

"ஹி..ஹி.. கம்ப ராமாயணத்திலா?  கம்பர் தப்பு பண்ண மாட்டாரே!"

தமிழ் பி.லிட்..ன்னா சும்மாவா?. "நேத்து கிளாஸ்லே இதான் பாடம் நடத்தினேன். அதுக்குள்ளே மறந்து போயிடுமா?"  மங்கைக்கு ஆத்திரமா வந்தது.

"பாம்புக்குக் கால் உண்டா, என்ன?"                            

"கால் இருக்கோ, இல்லியோ? பாட்டு இதான்.  இன்னும் மறக்கலே.. சொல்லட்டுமா?"

"ம்.. சொல்லு. "

"காம்பு அறியும் தோளாளை கைவிடீர் எனினும்--ன்னு அந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.. சீதா பிராட்டியாரை நீங்கள் கைவிட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.. இருந்தாலும்'ன்னு சூர்ப்பனகை சொல்கிற மாதிரி அந்தப் பாட்டுஆரம்பிக்கும்....  'பாம்பு அறியும் பாம்பின் கால்' என மொழியும் பழமொழியும் பார்க்கிறீரோ' என்று முடியும்'.  

" அதான் கைவிடமாட்டார்ன்னு தெரியுதுலே.. பின்னே ஏன் இவ இடைலே நுழையறா?" என்ற பாண்டியன், " மங்கை! இது ஏதோ இடைக்கால செருகல் மாதிரி இல்லே?  கம்பர் இப்படீலாம்.. நான் என்ன சொல்ல வர்றேன்னா,  இப்போ நாமலெல்லாம் பேசிக்கற மாதிரி  சகஜமா,  நம்ம காலத்துச் சொல்லெல்லாம் கவிதைலே வர்ற மாதிரி.. ஆங்! பழமொழி நானூறிலே இதே மாதிரி ஒரு பாட்டு, மங்கை!  இதைத்தான் குறிப்பிட்டு, பழமொழியும் பார்க்கிறீரோ'ன்னு கமபர் சொல்லியிருப்பாரோ?"...

"ச்சீ.. விளையாடாதே! பழமொழி நானூரெல்லாம் பாத்துத்தான் கம்பர்  எழுதணுமாக்கும்?.."

"அதில் என்ன தப்பு?  கம்பரோட வாசிப்பு அனுபவம் அந்தளவுக்கு பரந்து பட்டதுன்னு நெனைக்க வேண்டியது தானே!..  கம்பரே இன்னொருத்தர் சொன்னதை எடுத்தாளரார்ன்னா அந்த அவர் பெரிய பாண்டித்தியம் பெற்றவராய்த் தான் இருக்கணும், இல்லையா?.. யார் அவர்? உனக்கு அவர் பற்றி ஏதாவது தெரியுமா?"

"அது தெரியாமலா பி.லிட்., சர்ட்டிபிகேட் வாங்க முடியும்ன்னு நீ நெனைக்கறே?" என்று அவனைக் வம்புக்கு இழுக்கற மாதிரி கண் சிமிட்டியபடி கேட்டாள் மங்கை.

"சும்மா டபாய்க்காதே.. யார் அவர்ன்னு தெரிலேன்னா தெரிலேன்னு சொல்லணும்" என்று கைதட்டிச் சிரித்தான் பாண்டியன்.

"சொல்லிட்டேன்னா என்ன, தருவே?"

"அழுத்தமா ஒரு 'இச்..' சரியா?"

"'இச்'செல்லாம் சலிச்சுப் போச்சுப்பா.." என்று சும்மாகாச்சும் பொய்க்கோபம் காட்டினாள், மங்கை. "வேறே ஏதாச்சும் புதுசா.." என்று .. அவன் பக்கத்தில் இன்னும் நெருக்கமாக கிறக்கப் பார்வையில் நெருங்கி இழைந்தாள்.

"ஏய்..  நீ இப்படீலாம் செஞ்சா.. பழமொழியாவது கிழமொழியாவது?"என்று கூச்சத்துடன்  பாண்டியன் நெளிந்தான்.

அவன் கூச்சம் அவளுக்கு மேலும் கிறக்கத்தை ஏற்படுத்தியது. அவள் நெருக்கத்தை இன்னும் இறுக்கமாக்கினாள். "என்னைச் சொல்லிட்டு  இப்போ  நீ.." அவள் குரல் நெகிழ்ந்தது. "இப்போ நீ டபாய்க்கப் பாக்கிறியா?"

"டபாய்க்கறதா? எதுக்கு? " என்று லேசா திகைத்தவன்,புரிந்த தோரணையில் "ஓ..அதுக்கா?..  கரும்பு திங்கக் கூலியான்னேன்.. ஆங்! மத்தியான  நேரமாச்சேன்னு பாக்கறேன்.." என்று சிரித்த பொழுது புதுக்களை ஒன்று வந்து அவன் முகத்தில் வந்து அமர்ந்தது.

'ஐயே.. ஆசையைப் பாரு.. நான் எதுக்கோ சொன்னா நீ இதுக்குத் தாவுறியே..' என்று மங்கை கொஞ்சம் விலகி உட்கார்ந்தாள்..  சரிந்திருந்த சேலைத் தலைப்பைச் சரி செய்து கொண்டாள்., "தெரிஞ்ச்சிருந்தா நீ தான் அந்தப் பாட்டைச் சொல்லேன்."

"இந்தப் பாண்டிய ராஜாவை என்னென்னு நெனைச்சே" என்று ராஜ கம்பீரத்துடன் ஹால் சோபாவில் அட்டகாசமாக உட்கார்ந்து ஆள்சுட்டி விரல் உயர்த்தி, "இப்ப சொல்றேன்கேட்டுக்கோ" என்று அந்தப் பழமொழி நானூறு பாடலை சொல்ல ஆரம்பித்தான்:.  

"புலமிக்கவரை புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம் -- நலமிக்க பூம்புலனூர் பொதுமக்கட்காகாதே பாம்பறியும் பாம்பின கால்.." என்று அவன் முடித்த பொழுது கைவலிக்க கைதட்டினாள் மங்கை.. மனனம் செய்த மாதிரி அவன் கடகடவென்று அந்தப் பாடலைச் சொல்வான் என்று சற்றூம் எதிர்பார்க்கவில்லை அவள்.        

"பாம்பின காலோ, இல்லை பாம்பின் காலோ -- எப்படி இந்த ரெண்டு பாடலும் ஒத்துப் போச்சு?.." என்று பாண்டியன் வியந்தான்.

"சாரே.. பாம்புக்குக் காலே கிடையாது.. அறியுமோ?"என்று உதடுகள் குவித்தாள் மங்கை.  செக்கச்செவேலென்று ரத்தச் சிவப்பாய் இருந்த அவை யாருக்குமே கிறக்க மூட்டும் தான்..

"அறியும்..  பாம்புகள் தாம் ஊர்ந்த தடத்தை நன்றாக அறியும் என்பதற்காக 'பாம்பறியும் பாம்பின கால்'ன்னு அப்படிச் சொல்றது வழக்கம் என்பதனையும் யாம் அறிவோம்" என்றான் பாண்டியன்..  

"ஓ..  நாளை கவியரங்கம் உள்ளது என்பதனையும் பாண்டிய ராஜா அறிவீர் தானே?" என்றாள் மங்கை முகத்தில் குறும்பு கொப்பளிக்க.

அப்பொழுது தான் ஏதோ நினைவுக்கு வந்த மாதிரி  சடக்கென்று சோபாவிலிருந்து எழுந்தான் பாண்டியன்.

"என்ன மகாராஜா! அரியணையிலிருந்து எழுந்து விட்டீரே!" என்று சிரிக்காமல் அவள் சொன்ன பொழுது பாண்டியனுக்குத் தான் சிரிப்பு கொப்பளித்துக் கொண்டு வந்தது..

சட்டென்று மங்கையின் கைகளைப் பற்றிக் கொண்டவன், "மங்கை! மாலை கோயிலுக்குப் போகலாமா?" என்று எதையோ எதிர்பார்க்கிற தோரணையில் கேட்டான்.

"ஓ.. எஸ்.." என்றாள் மங்கை.  அவன் எது கேட்டாலும் தட்டாமல் உடனே தந்து விடுகிற உணர்விற்கு அவள் உடல் - மனம் இரண்டும் ஒருசேர அவனிடம் ஆட்பட்டிருந்தது.

முன்பு பகாசுர பாம்புகள் நெளியும் பரமபத விளையாட்டு, இப்போ பாம்பின் கால் பற்றிய பழங்கவிதைகள் ஆராய்ச்சி. அடுத்து பாம்பு பற்றிய எதுவோ என்று அறியாத இள வயசு காதலராய் அவர்கள் அப்போதைக்கு இருந்தார்கள்.


(இன்னும் வரும்)

 

 

12 comments:

ஸ்ரீராம். said...

பாம்பறியும் பாம்பின கால் விவாதம், விளக்கம் தொடரும் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீராம். said...

மோகனுக்கு புரந்தரதாஸர் மனைவிமேல் கவனம் செல்வதேன்?  யாரை நினைவுறுத்துகிறாராம் அவர்?

கோமதி அரசு said...

//அவன் மனம் ஏனோ வித்யாவின் அம்மாவைச் சுற்றி அலைபாய்வதை அவனே உணர்ந்தான். ஏனென்று தான் தெரியவில்லை.//

என்ன காரணமாக இருக்கும் ?

கோமதி அரசு said...

பாம்பின் கால் பற்றிய பழங்கவிதைகள் ஆராய்ச்சி, விவாதம் கலந்துரையாடல் எல்லாம் எதற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்பது கோவில் சென்றால் விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

Jayakumar Chandrasekaran said...

இதுவரையிலும் இத்தொடரைத் தொடர்ச்சியாக வாசித்ததில்லை. தேடி படிக்கவும் பொறுமை இல்லை. ஆனாலும் இடையில் இன்று வாசித்ததில் எனக்குத் தோன்றியதை கூறுகிறேன்.

அவ்வப்போது திடீரென்று தோன்றும் சில சீரிய எண்ணங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த ஒரு வடிகாலாக இத்தொடரை எழுதுகிறீர்கள் என்று நம்புகிறேன்.

இன்று தோன்றிய முக்கிய ஐயம் + வினா தான் "பாம்பறியும் பாம்பின கால்." அதுதான் இன்றைய விவாதப்பொருள்.

ரசிகமணி கம்பராமாயணத்தை ஆராய்ந்து எது கம்பரின் ஒரிஜினல், எது இடைச் செருகல் என்று முன்பே கூறிவிட்டார்.
//கம்பரோட வாசிப்பு அனுபவம் அந்தளவுக்கு பரந்து பட்டதுன்னு நெனைக்க வேண்டியது தானே!.. கம்பரே இன்னொருத்தர் சொன்னதை எடுத்தாளரார்ன்னா அந்த அவர் பெரிய பாண்டித்தியம் பெற்றவராய்த் தான் இருக்கணும், இல்லையா?.//

மாறுபடுகிறேன். யார் சொன்னது என்பதையும் தெரிவித்து இது போன்ற எடுத்துக்காட்டல்கள் இருப்பது தவறில்லை.

திறமை எங்கிருந்தாலும் பெரியோர் பாராட்டுவர். ஆனால் அந்த திறமை பாராட்டுபவரின் திறமைக்கு மேம்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆசிரியர் மாணவனைப் பாராட்டுவது போல்.
.
Jayakumar

ஜீவி said...

கரெக்ட். ஆரஞ்சு பழத்தின் தோலை உரிப்பது என்பது பழத்தை சாப்பிடுவதற்காகவே.

ஜீவி said...

இன்னும் முகத்தைக் கூட பார்க்கவில்லையே!

ஜீவி said...

அடுத்த பகுதியை வாசிக்க ஆர்வமூட்டும் தொடர்கதைகளின் டெக்னிக் என்று நீங்கள் நினைக்காமல் இருப்பதற்கு நன்றி, சகோ.

ஜீவி said...

ஆமாம். நம் எல்லா மனக்குறளி
எண்ணங்களுக்கும் நல்லபடியான விடை காணத்தான் கோயிலுக்குச் செல்கிறோம். அதற்கு மாற்றுக் கருத்தே இல்லை.


ஜீவி said...

ஆமாம் ஜெஸி ஸார். நீங்கக் சொவதும் சரி தான். தொடர்கதைகளில் நடுவில் ஒரு அத்தியாயத்தை வாசித்தால்
தலையும் புரியாது காலும் புரியாது என்ற நிலை தான் ஏற்படும்.
சிறுகதை வாசிப்பு என்பது ஆபிஸ் போகும் அவசரத்தில் அள்ளிக் கொட்டிக் கொண்டு ஓடுகிற மாதிரி. ரிடையர்டு ஆனவர்கள் நின்று நிதானித்து மென்று சாப்பிடுவது போல தொடர்கதைகள்.
அவை பல அத்தியாயங்கள் நீண்டு இருப்பதால் சிறுகதைகளைப் போல அல்லாமல் சமூகம் சார்ந்த பல விஷயங்களை கிடைத்த இண்டு இடுக்குகளில் பேச வாய்ப்பு
கிடைக்கிறது. அதனால் நாவலாசிரியர்கள் அவற்றை கிடைத்த வாய்ப்புகளாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இதெல்லாம் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள கிடைத்த ஊறுகாய் போலத்தான். இவையே சாப்பாடு அல்ல.

பாண்டியனும் மங்கையும் இளந்தம்பதிகள். மங்கை புலவர் படிப்பு படித்த தமிழ் ஆசிரியை. பாண்டியனும் கவியரங்குகளுக்கெல்லாம் போய் ரசிக்கக் கூடிய தமிழ் ஆர்வலன். அதனால் இந்த இளம் தம்பதிகளின் காதல் வாழ்க்கை இன்னும் இறுக்கம் பெற தமிழிலக்கியங்கள், அவற்றைப் பற்றியெல்லாம் உரையாடி சந்தோஷப்படுவது என்பது இருவரும் மகிழ்ச்சியளிக்கிற விஷயம் ஆகிறது. இளங்காதலர்கள் மத்தியில் ஊடல் கூடல் எல்லாம் இருக்கும் தான். இரண்டு பேர்கள் உரையாடல் நீள தாழ்த்தியும் ஏற்றியும் எழுதுவது கதாசிரியரின் உத்தி. இதில் வாசிப்பவர் முரண்படுவதற்கு இடமே இல்லை. கதையின் போக்கின் படி எந்த நேரத்தில் எது
வெளிப்பட வேண்டுமோ அது அந்த நேரத்து வெளிப்படலுக்காக
காத்திருருக்கும். அவ்வளவு தான். இது வரை வாசித்தது அடுத்த அத்தியாயம் எப்படிப் போகிறது என்று வாசிக்கட் தூண்டும் தான். அந்த தூண்டலுக்காகத் தான் தொடரும் போட்டு நீட்டி முழ்க்கி எழுதுவதெல்லாம்.

தங்கள் வருகைக்கும் ஆக்கபூர்வமான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி. தொடர்ந்து வாசித்து மனத்தில் தோன்றும் கருத்துகளை இது போல மறைக்காது பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி, ஸார்.

Anonymous said...

ஜீ வி அண்ணா இக்கதை முன்பு வாசித்த நினைவு கொஞ்சம் வருகிறது. என்றாலும் மீண்டும் ஒரு முறை முதல் பகுதியிலிருந்து வாசித்தால் இப்போதையதுடன் தொடர்புப்படுத்தி புரிந்து கொள்ள முடியும் . முந்தைய பகுதிகளின் சுட்டி அல்லது தொடக்கத்தின் சுட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும். நான் தேடிப் பார்த்தேன் பகுதி 1 கிடைக்கவில்லை.

முந்தைய வருடங்களின் மாதங்களின் பதிவுகளுக்குச் சென்று பார்க்கிறேன்.
எல்லாம் வாசித்துவிட்டு இப்பகுதிக்கு வருகிறேன்.

கீதா

ஜீவி said...

மிக்க நன்றி சகோதரி.

எல்லாம் வாசித்து விட்டு வருகிறேன் என்று நீங்கள் சொன்னதில் எனக்கு மிகவும் சந்தோஷம். ஏனென்றால் ஒரு கதையை எழுதுவதற்கான உத்திகளை நீங்கள் இந்தத் தொடரில் மிகவும் ரசிப்பீர்கள் என்பதால்.

தொடரில் எடுத்துக் கொண்ட பொருளுக்கான விவாதத்தில் உங்களுக்கு ஈடுபாடு பிறப்பது திண்ணம். தன்னாலே வாசிப்பு மேன்மை சிறக்கும்.
நாம் நிறைய பேசலாம்.
வாருங்கள்.

Related Posts with Thumbnails