மின் நூல்

Monday, September 9, 2024

இது ஒரு தொடர்கதை -- 18

டையில் காளியண்ணன் இல்லை.     இது யாரோ புது ஆள்.

காளியண்ணனுக்குத் தெரிந்தவர் தான் என்று காட்டிக்கொள்கிற மாதிரி, "காளி இல்லை?" என்று ஒரு கேள்வியைக் கடையில் இருந்த ஆளிடம் கேட்டு விட்டு, பதிலை எதிர்பார்க்காத தோரணையில் செருப்பை மட்டும் தட்டி தடுப்பைத் தாண்டி அதற்குரிய இடத்தில் கழட்டி விட்ட பிறகு இருவரும் கோயிலை நோக்கி நடந்தனர்.     

கூட்டம் அவ்வளவாக இல்லை.  சுவாமி சன்னதியில் இவர்களைப் பார்த்ததும் ஏற்கனவே தெரிந்திருக்கும் அறிகுறியில் லேசான சிரிப்புடன்  கற்பூர தட்டுடன் படியேறி உள்ளே செனற குருக்கள், சுவாமிக்கு தீபாராதனை காட்டி வெளியே வந்து இவர்கள் பக்கம் வந்ததும் பாண்டியன் கற்பூர ஜ்வாலை மேற்பக்கம் கை நீட்டி கண்களில் ஒற்றிக்கொண்டு சில்லறையைத் தட்டில் இட்டான்.. மங்கையும் ஒற்றிக் கொண்டாள்.   குருக்கள் இவனுக்கு வீபூதி பிரசாதமும் மங்கைக்கு குங்குமமும் சுவாமி பாதப்பக்கமிருந்து தான் எடுத்து வந்திருந்த மலர் சரடும் கொடுத்தார்.  மங்கை குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டு பாண்டியன் பக்கம் லேசாகத் திரும்பி தலையில் சூட்டிக் கொண்டாள். அதற்குள் இன்னொரு ஆள் வந்து விட தீபாராதனைத் தட்டை அவரிடம் எடுத்துச் சென்றார்.

சுவாமி தரிசனத்தை முடித்துப் பிராகாரம் பக்கம் வந்ததும் "ராஜாவைப் பார்த்துட்டுப் போகலாம், மங்கை" என்று நாயன்மார்கள் வரிசை பக்கம் சென்றான் பாண்டியன்.  சொல்லப்போனால் விறுவிறுவென்று அவன் நடந்த வேகம்,  நின்ற சீர் நெடுமாற நாயனாரைத் தான் பார்க்க ஆவலோடு வந்திருக்கிறான் என்று தெரியப்படுத்துவது போல இருந்தது.   

"நீங்க ராஜான்னா நான் ராணியைப் பார்க்கப் போகட்டுமா?" என்றாள் மங்கை.

"தனித்தனியாப் பார்ப்பானேன்?  நாம ரெண்டு பேரும் அவங்க ரெண்டு பேரையும்ன்னு சேர்ந்து பார்த்துட்டாப் போச்சு.."

"அப்படியே குலச்சிறையாரையும்..." என்றவளை ஆழ்ந்து பார்த்தான் பாண்டியன்.

"என்ன அப்படிப் பார்க்கிறீங்க? குலச்சிறையார் இல்லேனா இவங்களை இப்படி இந்த வரிசைலே சேர்த்து வைச்சு நாம பாக்கப் போறதில்லை. தெரியுமோ?" என்று தலைசாய்த்துக் கேட்டாள் மங்கை.

"எனக்கெங்கே அதெல்லாம் தெரியுது?.. உன்னைப் போல பி.லிட்., படிச்சிருக்கேனா என்ன?" என்றான் பாண்டியன்.

அவன் குரலில் ஒரு சோகம் இழையோடியதைக் கவனித்து விட்டாள் மங்கை. அவளுக்கும் வருத்தமாக இருந்தது.  அதை துடைத்தெறிய "நான் பி.லிட்.,ன்னா நீங்க எம்.ஏ. இல்லையா?  என்னை விட படிப்பு ஜாஸ்தி" என்றாள்.

"இல்லை, மங்கை.. தமிழ் இலக்கியம் தெரிஞ்சிருக்கிறது, ஒரு தனித்தகுதி இல்லையா?"

மங்கை பதிலே பேசவில்லை.     

நாயன்மார்களில் முதல் சிலையாக அதிபக்தர் இருந்தார்.  அவரை அடுத்து ஒவ்வொரு  நாயன்மார் சிலையைப் பார்ப்பதும் பின்சுவரில் அவரின் பெயரைப் பார்ப்பதுமாக இருவரும் ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக் கொண்டே வந்தனர்.

24-வது சிலையாக குலச்சிறையார் இருந்தார்.  மந்திரி பெருமானைப் பார்த்த சந்தோஷத்தில் பாண்டியன் புன்முறுவலுடன் மங்கையைப் பார்த்தான்,  இருவரும் குலச்சிறை நாயன்மாரை இருகரம் கூப்பி வணங்கினர்.  இருவர் மனமும் என்னவோ குலச்சிறையார் திருவுருவ தரிசனத்தில் மெய்மறந்து குவிந்தது.

புரந்தரதாசரைப் பார்த்தால் ஆழ்ந்த யோசனையில் இருப்பவர் போலத் தோன்றியது. அவராக யோசனை கலைந்து என்ன சொல்லகிறாரோ அதைக் கேட்டுக் கொள்வோம் என்ற முடிவில் இருந்த மோகனின் கவனம் வித்யாவின் மேல் படிந்தது.  

'பார்த்தவர் எவரையும் மறுபடியும் பார்க்கத் தூண்டும் அழகு,  காலேஜ் மாதிரி மேல் படிப்பு படிக்கிறாளா அல்லது ஏதானும் வேலைக்குப் போகும் பெண்ணா எனறு தெரியவில்லை.  தன் எழுத்துக்களை  ஆர்வத்துடன் பத்திரிகைகளில் படிப்பவள் என்று இப்போதைக்குக் தெரிகிறது. அலைபாயும் விழிகள்.  சூடிகையாகத் தெரிகிறாள். இவள் துணை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் மனம் எண்ணியது. 

'வித்யா இப்படி.  அவள் அம்மா எப்படியோ' என்று அவன் மனசின் இன்னொரு பக்கத்தில் சந்தேகப்பூ பூத்தது.  'கணவனையும் பெண்ணையும் வீட்டில் காணவில்லை, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி வெளியே சென்றிருந்து இப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்த ஒரு பெண் இந்தப் பக்கம் வந்து கூடப் பார்க்க மாட்டாளோ' என்று அவன் மனதில் ஒரு எண்ணம் தலைகாட்டியும் போயிற்று. 'அல்லது இந்த வீட்டில் இப்படித் தான் தனித்தனி யூனிட்டுகளாய் ஒவ்வொருவரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்களோ என்னவோ!  வித்யாவை பார்த்தால் அப்படித் தெரியவில்லை.  பார்க்கலாம்'. என்று நினைத்துக் கொண்டான்.  

'வித்யா போன்ற பெண் தனக்கு துணையாக கிடைத்தால் எதுவாயினும் சமாளித்து விடலாம் என்று மனசில் நம்பிக்கை பிறந்த நிமிடமே, வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வுகளுக்காக இயல்பாகவே பாதைப்போடுகிற மாதிரி அடுத்த அடுத்த நிகழ்வுகள் எப்படியெல்லாம் நிகழ்கின்றன என்பதை நினைக்கவே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த வாழ்க்கை போலவே இயல்பாக தான் எழுதும் கதைகளும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

"மோகன்! தெய்வ தரிசனம்ன்னா என்ன? தெய்வத்தின் அருகாமையை நாம் மனசார உணர்வது.இல்லையா?" என்றார் புரந்தர தாசர்.   "இந்த 'நாம்'-- அதாவது உன்னைப் பொறுத்த மட்டில் 'நான்'ங்கற 'indiduval' -லை மனம், உடல்ன்னு ரெண்டாப் பிரிக்கறே நீ! இல்லையா?...  இது நீ எழுதற கதைக்காகன்னு நீ சொன்னாலும் நெஜமாலுமே இதான் உண்மை, மோகன்!.. நாம  ஒவ்வொருத்தரும் வெளிப்பார்வைக்கு தெரியற மாதிரி ஒவ்வொரு திரேகத்தைக் கொண்டிருந்தாலும் இந்த திரேகம் அதாவது வெளிப்பார்வைக்குத் தெரியற இந்த உடல் நாமல்ல. யோசிச்சுப் பார்த்தா,  இந்த உடம்புக்குள் உள்ளடங்கியிருக்கற மனம் தான் வெளியுலகத்திற்கு நம்மை வெளிப்படுத்தற பிரதிநிதின்னு தெரியும். கையைக் குவித்து சாமியைக் கும்பிடறோம், சரி.. நமஸ்காரம் பண்ணறோம், சரி.. இதெல்லாம், இந்த நடவடிக்கையெல்லாம் அப்பப்போ மனம் சொல்லி உடல் உறுப்புகள் இயங்கற நடவடிக்கைகள்.. பாரதியார் சொன்னார் இல்லையா, 'மனம் வெளுக்க மார்க்கம் காணீர்'ன்னு.  அந்த உண்மை இது தான்.." என்று சொன்னார் புரந்தரதாசர்.  அவர் விவரித்த விதம் பள்ளிக்கூடத்தில் வகுப்பெடுக்கிற மாதிரி இருந்தது மோகனுக்கு. 

தன் தந்தை சொன்னதை உன்னிப்பாகக் கவனித்து வந்த வித்யா,"புரியறது, அப்பா! இருந்தாலும் எனக்கு ஒரு டவுட்" என்றாள்.

"சொல்லு, பையா,,"

"மனம் தான் வெளியுலகத்திற்கு நம்மை வெளிப்படுத்தற பிரதிநிதின்னு சொன்னே தானே?  பிரதிநிதின்னா ஒருத்தருக்காக செயல்படற இன்னொருத்தர்ன்னு தானே நாம சொல்வோம்?  அப்படிப் பாத்தா மனம்ங்கறது எதுக்காக செயல்படற Representative அப்பா?" என்று அவள் கேட்டது ஸ்பஷ்டமாக அந்த அறையில் ஒலித்தது. 

" நான் சொல்றேன்.." என்ற குரல் கேட்டு சட்டென்று பின்பக்கம் திரும்பிப் பார்த்தான் மோகன்.  வாளிப்பான திரேகம் தூக்கலாகத் தெரிய கதவு பக்கம் அழகான பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள்.  இவங்க தான் வித்யாவின் அம்மாவா என்று திகைப்பு கூடிற்று அவனுக்கு. 

 

(தொடரும்..)  


 

                                 

11 comments:

Jayakumar Chandrasekaran said...

இன்றைய செய்தி: குலச்சிறையார் என்றொரு நாயனார். மனமே நம்மை அறிமுகப்படுத்தும், மனம் வெளுக்க மார்க்கம் கணீர் என்றார் பாரதி.

கடைசியில் ஒரு கொக்கி. மனம் ஒரு பிரதிநிதி தான். ஒரு வக்கீல் தான். அது யாருக்காக செயல்படுகிறது? பதில் என்பதே சங்கிலித் தொடரின் இணைப்பு.

ஜீவி said...

அபுரி.

Jayakumar Chandrasekaran said...

பதிவு சுருக்கம்.

Jayakumar Chandrasekaran said...

கணீர் என்பதை காணீர் என்று மாற்றிக்கொள்ளவும்.
பதிவின் சுருக்கம்

Anonymous said...

நீங்கள் தொடங்கிய அகுதியில் ஜோசியம் ஒன்று வருமோ? கிளி ஜோசியம் போன்ற ஒன்று.

பழைய பகுதிகளும் கிடைத்துவிட்டன. வாசித்து வருகிறேன் ஜீ வி அண்ணா

கீதா

ஸ்ரீராம். said...

சொல்ல வரும் செய்தியை புரிந்து கொள்ள கொஞ்சம் மெனக்கெடவேண்டும் போலிருக்கிறது.  சுற்றி வளைத்து வருவதால் இப்படியா, தெரியவில்லை.  மனம் வேறு, நாம் வேறா என்று நான் கேட்டிருந்த கேள்வியும் நினைவுக்கு வருகிறது.

ஜீவி said...

தொடர் ஆரம்ப அத்தியாயத்திலிருந்து வாசிக்கக் கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி. நீங்களும் பின்னூட்டங்கள் சென்ற பகுதிகளுக்குப் போட்டிருப்பதால் எளிதில் கதையின் போக்கு புரிந்து விடும் சகோ.

மிஞ்சி மிஞ்சிப் போனால் அரை மணி நேரம் ஒதுக்கினால் பழைய பகுதிகளை வாசித்து விடலாம். ஆனால் எழுத்தார்வம் கொண்ட உங்களால் அப்படி அவ்வளவு எளிதாகக் கடந்து வந்து விட முடியாது என்று நினைக்கிறேன். இப்பொழுது வாசிக்கிற உணர்வில் பழைய பகுதிகளுக்கும் பின்னூட்டமிட மனம் வேண்டும். அப்படி இட்டாலும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. நிதானமாக வரும் பகுதிகளைத் தொடர்கிறேன். எல்லோரும் வரும் பகுதிகளில் ஒன்றாகச் சேர்ந்து பயணிக்கலாம்.

இன்னொன்று. நண்பர் துளசிதரன் பார்வைக்கும் இந்தத் தொடரை எடுத்துச் செல்லுங்கள். ஸ்ரீராமும் பழைய பகுதிகளை அதற்குள் பார்த்து விட்டு வந்து விடுவார். அதனால் ஒட்டுமொத்த புரிதலோடு இந்தப் பகுதியைத் தொடர்வோம்.
சரியா?

நன்றி சகோதரி.

ஜீவி said...

சகோதரி தி.கீதா ஆரம்பத்திலிருந்து இந்தத் தொடரை வாசித்து விட்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு நான் போட்டிருக்கும் பின்னூட்ட பதிலைப் பார்க்க வேண்டுகிறேன்.

இந்தத் தொடரில் ஆழமாக நாம் நிறைய பேச வேண்டியிருக்கி றது. அதனால் ஒரு அரைமணி நேரத்தை நல்லதொரு வாசிப்பு அனுபவத்திற்காக ஒதுக்கி நீங்களும் ஆரம்ப அத்தியாயத்திலிருந்து ஒரு பார்வை பார்த்து விடுங்கள். நீங்களும் ஏற்கனவே இந்தத் தொடரின் பழைய பகுதிகளை வாசித்திருப்பதால் பழைய பகுதிகளை மீண்டும் ஒரு வாசிப்புக்கு உட்படுத்துவது மிகச் சுலபமாக இருக்கும்.
இந்தத் தொடரை சரியான புரிதலுடன் நாம் எல்லோரும் தொடர்வதற்காகத் தான் இதைச் சொல்கிறேன்.
சைடு பாரில் 'இது ஒரு தொடர்கதை'யை
க்ளுக்கி வாசிப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும்.

வாருங்கள், சேர்ந்து பயணிக்கலாம்.


ஜீவி said...

View web version - க்ளுக்கி
சைடு பாரில் தலைப்புகள் பகுதிக்குக் கீழே 'இது ஒரு தொடர்கதை' -- க்ளுக்கிப் பாருங்கள்.

க்ளுக்குவதிலேயே நீங்கள் இதுவரை அறிந்திராத ஒரு சந்தோஷம் கிடைக்கும்.

வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா? யோசிக்கக் கூட நேரமில்லை, ஜி!
செயல்படுங்கள்!..

கோமதி அரசு said...

மோகன்! தெய்வ தரிசனம்ன்னா என்ன? தெய்வத்தின் அருகாமையை நாம் மனசார உணர்வது.இல்லையா?" என்றார் புரந்தர தாசர். //

ஆமாம், உணர்தல் தான்.
புரந்ததாசர் வகுப்பு எடுப்பதாய் மோகன் நினைத்தாலும் அவர் சொல்வது எல்லாம் அருமை.

ஜீவி said...

ஆரம்பத்திலிருந்தே இந்தத் தொடரின் சென்ற பகுதிகள் வெளிவந்த பொழுது வாசித்து பின்னூட்டமிட்டதால் நினைவிருக்கும் எனினும் ஏதாவது சந்தேக வந்தால் பின் பகுதிகளைப் பார்க்க வேண்டுகிறேன். பாதியில் இந்தத் தொடர்கதை நின்று போயிருந்தது மனசுக்கு ஒரு மாதிரி இருந்ததால் தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும் என்ற urge இயல்பாகவே ஏற்பட்டது. வழக்கமான சமூக + வரலாற்று + மன நலம் சார்ந்த தொடர் என்றாலும் நாயன்மார்களைத் தொட்டு எழுதுவதால் சைவ சித்தாந்தக் கருத்துகளும் கலந்து வருவதால் ஏதாவது தவறுகள் என் எழுத்தில் காணப்படின் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன், சகோ. அது அப்படியான தவறுகளைத் திருத்திக் கொள்வதில் பேருதவியாக இருக்கும். தொடர்ந்து வாசித்து தங்கள் மனசில் தோன்றுவதைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி.

Related Posts with Thumbnails