மின் நூல்

Wednesday, May 21, 2008

சந்திப்போம்; பிரிவோம்; மீண்டும் சந்திப்போம்!----2

(ச.பி.மீ.ச. 1-ம் பகுதியின் தொடர்ச்சி)


நாங்கள் இருந்தது, திருநின்றவூர். இங்கிருந்து காஞ்சீபுரம் பொல்லாத தூரமில்லை; ஆனால் ஏனோ இதுவரை வரவாய்க்கவில்லை.

வரவேண்டும்,வரவேண்டும் என்று நெடுநாள் காத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டேன். அந்த இடத்து மண்ணை மிதித்ததுமே, உடலெங்கும் 'ஜிவ்'வென்று மின்சாரம் ஓடிவிட்டுப் போனது போன்ற உணர்வு. "கைலாசநாதா..வரம் அருளி காப்பாத்துப்பா.." என்று நிமிர்ந்து கோபுர தரிசனம் செய்தேன்.கோயில் இருந்த இடம் நகர்புறச் சந்தடியிலிருந்து விலகி ஒரு கிராமம் மாதிரி இருந்தது.

கோயிலுக்குள் நுழைவதற்கு முன்னாலேயே திறந்தவெளியில் மிகப்பெரிய நந்தி இருந்தது. 'கல்லில் செதுக்கப்பட்டது அல்ல; பிண்டி மணல் என்ற ஒருவகையான பாறை மண்ணால் ஆன நந்தி; கோயில் முழுக்கவே பிண்டி மணலால் உருவானதுதான்' என்று சொன்னார்கள்.

பிரகாரம் தாண்டி கோயிலின் உள்ளே நுழைகையில், எந்தப் பக்கம் சந்நிதி என்று ஒரு நிமிடம் யோசித்துத் தயங்குகையில்,"சந்நிதிக்குத் தானே? இந்தப் பக்கம் வாருங்கள்__" என்று குரல் கேட்டுத் திகைத்துத் திரும்பினேன். தூய வெள்ளை வெளேர் கதரில் வேட்டி, கைவைத்த பனியனோடு, நெற்றி பூரா பட்டை பட்டையாய் திருநீறு துலங்க ஒரு பெரியவர். வயது எழுபதுக்கு மேல் நிச்சயம் இருக்கும்.

அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.

"கோயிலில் மனிதர்களைத் தொழலாகாது," என்று என் சைகையைத் திருத்தியவாறே, "என்ன? இப்படி வாருங்கள்" என்று இடப்பக்கமாக அழைத்துச் சென்றார். அங்கே சில படிகள் ஏறியதும், தரையோடு தரையாக ஒரு சதுர திட்டிவாசல். தரையில் தவழ்ந்த வாக்கிலேயே தவழ்ந்து, ஒரு மனிதர் நுழைகிற அளவுக்கு அந்தத் திறப்பு இருந்தது.

"உள்ளே போங்கள்," என்று பெரியவர் சொன்னபடிச் செய்தேன். உள்ளே நுழைந்து சென்றால், சந்நிதியைச் சுற்றி ஓர் ஆள் வலம் வரும் அளவுக்கு ஒரு சின்ன பிரகாரம். பிரகாரத்தைச் சுற்றி வந்து லிங்க வடிவில் இருந்த கைலாசநாதரை மனம் குளிர வழிபட்டேன்.. உடல் நெகிழ்வேற்படுத்துகிற மாதிரியான தரிசனம்.

தரிசனம் முடிந்துத் திரும்பிப் பார்த்தால், பெரியவரைக் காணோம். அப்பொழுதுதான் திட்டிவாசல் வழியே தவழ்ந்து உள்ளே அவர் வரவில்லை என்கிற நினைவு வந்தது. 'வெளியே இருப்பார்' என்று எண்ணிக் கொண்டே வெளிவருவதற்கு இன்னொரு பக்கம் இருந்த அந்த சின்ன திறப்பு வழியே தவழ்ந்து வெளிவந்தேன். வெளிவந்ததும், 'பெரியவர் இருக்கிறாரா?' என்று தான் என் கண்கள் தேடின.

சற்று தூரத்தில் பெரியவர் எனக்காகக் காத்திருக்கிற மாதிரி நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், "திருப்தியாகத் தரிசனம் ஆயிற்றா?" என்று என் கண்களையே உற்று நோக்கிக் கேட்டார். அவர் கேட்டது, 'நான் என்ன பதில் சொல்லப்போகிறேன்' என்று எதிர்பார்த்து ஆவலுடன் கேட்ட மாதிரி இருந்தது.

"ஆயிற்று, ஐயா..கண்குளிர கைலாசநாதர் தரிசனம் கிடைக்கும் பேறு பெற்றேன், ஐயா!" என்றேன். தொடர்ந்து, "நீங்கள் தரிசனத்திற்கு உள்ளே வரவில்லையா?" என்றேன்.

"உள்ளே இருந்தேனே?..நீங்கள் பார்க்கவில்லை?" என்று என்னயே கேட்டார்.

"இல்லையே?" என்று திகைத்தேன். 'உள்ளே என்னுடன் வந்தவரைப் பார்க்காமல் தான் வந்து விட்டோமோ' என்று ஐயம் இருந்தது.

"உள்ளே உங்களை நான் பார்த்தேனே?" என்றார் பெரியவர்.

"அப்படியா?" என்று மீண்டும் திகைத்தேன். "உள்ளே தரிசனம் செய்யும் பொழுது என்னை மறந்தேன், ஐயா! எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்தது. இப்பொழுது அவன் குழந்தையான எனக்கு ஒரு குழந்தையைக் கொடுக்க அருள் புரிந்திருக்கிறான், ஐயா! அவன் தந்த அந்த ஆனந்தத்திலும், அருளிலும் என்னை மறந்து அவன் கருணையில் லயித்துவிட்டேன்" என்றேன்.

பெரியவர் புன்னகையுடன் மெய்சிலிர்த்த உணர்வுடன் பேசும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். மெல்லச் சிரித்து விட்டுச் சொன்னார். "அப்படியா?..குழந்தை பாக்கியம் கொடுத்திருக்கிறாரா?..அவர் அருளுகென்ன குறைச்சல்?" என்றவர், "உங்களுக்கு எந்த ஊர்?" என்று கேட்டார்.

"திருநின்றவூர் ஐயா...சென்னைக்கு அருகில் இருக்கிறது."

"அடேடே! பூசலார் ஊராச்சே?" என்றார்.

எனக்குப் புரியவில்லை. "எந்தப் பூசலார்? உங்களுக்கு நண்பரா?"

"அதற்கும் மேலே! உயிருக்கு உயிரானவன். ஒருதடவை அவன் அழைத்து உங்கள் ஊருக்கு வந்ச்திருக்கிறேன்..அது நடந்து பல வருஷங்கள் ஆயிற்று. இருந்தும் நன்கு நினைவிலிருக்கிறது."

"அப்படியா, ஐயா! ஒருகால், அந்தப் பெரியவரை என் அம்மாவுக்குத் தெரிந்திருக்கலாம்.. என் தாயார் பிறந்தது, என் தந்தையை மணந்தது எல்லாம் அந்த ஊரில் தான்..அதனால், அம்மாவுக்குத் தெரிந்திருக்கலாம்."

"நிச்சயம் தெரிந்திருக்கும். ஊருக்குப் போனதும் அவரிடம் கேட்டுப் பாருங்கள்" என்றார்.

"கண்டிப்பாக ஐயா. நின்று கொண்டு பேசுகிறீர்களே? இங்கு தாங்கள் உட்காரலாமா?"

"செய்யலாமே?" என்ற பெரியவர், என் கைப்பற்றி, தோள் பிடித்து ஒரு தூணின் கீழ் அமர்ந்தார். அவர் ஸ்பரிசம் பட்டதும் உடலே சிலிர்க்கிற மாதிரியான உணர்வேற்பட்டது எனக்கு.

பெரியவரே தொடர்ந்தார். "அவன் என்ன செஞ்சான், தெரியுமா?..திருநின்றவூருக்கு வா,வா என்று நச்சரித்து என்னை பலதடவை கூப்பிட்டுக்கொண்டே இருந்தான். அவன் அழைப்பை தட்டமுடியாத அளவுக்கு எனக்கும் அவன் மேல் பிரியம். ஒருநாள் அவனுக்காக திருநின்றவூருக்குக் கிளம்பி விட்டேன். என்னைக் கண்டதும் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை, அவனுக்கு."

ஒருநாள் அவனுடன் இருந்து விட்டு வரலாம் என்றால் 'இங்கேயே தங்கிவிடு; போகாதே' என்றான். நீங்களே சொல்லுங்கள்..எவ்வளவு வேலை எனக்கிருக்கிறது?
அவனோடேயே, திருநின்றவூரிலேயே இருக்க வேண்டுமானால, எப்படி?.."

அந்த இரண்டு பெரியவர்களிடமும் நிலவும் நட்பின் ஆழத்தை நினைத்து நெஞ்சுக்குள் வியந்தபடி,"பிறகு என்ன செய்தீர்கள்?"என்று கதை கேட்கும் ஆவலில் கேட்டேன்.

"என்ன செஞ்சேனாவது? தீர்மானமாக அவன் கிட்டே சொல்லிவிட்டேன். இதோ பார்.. எனக்கு ஏகப்பட்ட ஜோலி. உன்னோடேயே இருக்க முடியுமா?" என்று அவனிடம் கேட்டேன்.

கோயிலில் அதிக கூட்டமில்லை; நாலைந்து வெளிநாட்டு டூரிஸ்ட்கள் காமராவும் கையுமாக வெளிப்புறமும் உள்ளேயும் அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள். நாங்களும் எழுந்து விட்டோம்.

பெரியவரே தொடர்ந்தார்: "அவனுக்கு மிகுந்த ஏக்கமாகப் போய்விட்டது..என்னைப் பிரியவே அவனுக்கு மனமில்லை. பரிதாபமாக என்னையே பார்த்தான். கடைசியில் அவனைத் தேற்றும்படி ஆகிவிட்டது. உன் நினைப்பில், நெஞ்சில் தான் நான் எப்பொழுதும் இருக்கிறேனே?..அப்படி இருக்கும் பொழுது நமக்குள் பிரிவேது?..'பிரிவு' என்று நீ நினைப்பதெல்லாம் பொய்யானது...நானும் நீயும் ஒன்றுதானேப்பா" என்று அவனைத் தேற்றினேன்.

"கடைசியில் சமாதானம் ஆனவன் மாதிரி, 'ஆமாம்..என் நெஞ்சில் உன்னுடைய நினைவுகளே குடிகொண்டிருக்கும் பொழுது நமக்குள் பிரிவேது?' என்று பிரியா விடை கொடுத்தான்.

பேசிக்கொண்டே கோயிலின் உண்டியல் பக்கம் வந்து விட்டோம். உண்டியலைப் பார்த்ததும் தான், 'காசை அதில் போட்டுடு' என்று அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. பெரியவரிடம் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்ததில் எல்லாவற்றையும் மறந்திருக்கிறேன்!..

உண்டியலுக்கு பக்கத்தில் வந்ததும், "ஒரு நிமிஷம்--" என்று சொல்லிவிட்டு, சட்டைப்பையில் கைவிட்டேன்.

பகீரென்றது.

(வளரும்)

9 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரொம்ப நெகிழ்வாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கு.. அடுத்த பகுதிக்காக ஆவலாய் காத்திருக்கிறோம்...

ஜீவி said...

கிருத்திகா said...
//ரொம்ப நெகிழ்வாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கு.. அடுத்த பகுதிக்காக ஆவலாய் காத்திருக்கிறோம்...//

வாருங்கள், கிருத்திகா,

உடனடியான படிப்பிற்கும், ரசனைக்கும் மிக்க நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

2 பகுதியும் படித்தேன்..நல்ல நடையில் விறுவிருப்பாக இருக்கிறது..அடுத்த பகுதிக்கான எதிர்பார்ப்புடன்..

ஜீவி said...

பாச மலர் said...
//2 பகுதியும் படித்தேன்..நல்ல நடையில் விறுவிருப்பாக இருக்கிறது..அடுத்த பகுதிக்கான எதிர்பார்ப்புடன்..//

வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி, பாசமலர்! அடுத்த பகுதியில் நிறைவு பெறும். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்...

jeevagv said...

ஆகா, கைலாசநாதர் கோயிலுக்கு கதைக்களன் நகர்ந்திருக்கு!
எப்போதோ சின்ன வயதில் பார்த்த ஞாபகம் தோராயமாக இருக்கு. கோவிலின் படத்தை போட்டிருக்கிலாமே!

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//ஆகா, கைலாசநாதர் கோயிலுக்கு கதைக்களன் நகர்ந்திருக்கு!
எப்போதோ சின்ன வயதில் பார்த்த ஞாபகம் தோராயமாக இருக்கு. கோவிலின் படத்தை போட்டிருக்கிலாமே!//

ஆமாம், கோயிலுக்கு வந்தாச்சு;
சின்ன வயதில் பார்த்த ஞாபகமா?
நல்லது..நகரேஷூ காஞ்சியில், இராஜசிம்மன் என்னும் பல்லவ மன்னன் எழுப்பிய கோயில்..
கதையின் போக்கை ஓரளவுக்கு சுட்டிக் காட்டியிருக்கிறேன்..மற்றவை உங்கள் யூகத்திற்கு..

வருகைக்கும் நினைவு பகிர்தலுக்கும் மிக்க நன்றி, ஜீவா!

குமரன் (Kumaran) said...

பூசலாரின் தோழன் இங்கே வந்திருக்கிறானா? பரவாயில்லையே.

குமரன் (Kumaran) said...

பூசலாரின் தோழன் இங்கே வந்திருக்கிறானா? பரவாயில்லையே.

ஜீவி said...

குமரன் (Kumaran) said...
//பூசலாரின் தோழன் இங்கே வந்திருக்கிறானா? பரவாயில்லையே//

இங்கே கதையாகக் கிடைத்த கரு தான், உள்ளுக்குள்ளேயே இருந்து உழன்று, அங்கே 'ஆத்மாவைத் தேடி'
சுயதேடலாக விரிந்திருக்கிறது, குமரன்!

பூசலாரின் தோழமை கிடைக்க பாக்கியம் செய்திருக்க வேண்டுமல்லவா?.. பெறற்கரிய பேரு பெற்றான், அந்தத் தோழன்!

வருகைக்கு நன்றி, குமரன்! மூன்றாவது பகுதியையும் படித்து விட்டுச் சொல்லுங்கள்..

Related Posts with Thumbnails