மின் நூல்

Sunday, September 14, 2008

ஆத்மாவைத் தேடி....4

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....

4. நான் நானான கதை
ரயிலுக்கு இன்னும் நேரம் நிறைய இருந்தது.
இங்கிருந்து தான் புறப்படுகிறது என்பதால், எந்த பிளாட்பாரத்திலிருந்து கிளம்பும் எனபதுகூட இன்னும் நிச்சயமில்லாமலிருந்தது. கிருஷணமூர்த்திக்கு கூட இருந்தவரின் பேச்சுத்துணை, தனிமையில் உட்கார்ந்திருக்கும் சலிப்பை அறவே போக்கியிருந்தது.
அதனால் உற்சாகமானவர், தான் பிறந்த தஞ்சைத்தரணியின் பழக்கமாய் எவர்சில்வர் வெற்றிலைப் பெட்டியை, பக்கத்தில் அணைப்பிலிருந்த பையின் ஜிப்பைத் திறந்து எடுத்து மடியில் வாகாக வைத்துக் கொண்டார். "வெத்தலை போடறீங்களா?" .....
பக்கத்திலிருந்தவர், "பழக்கமில்லை--" என்று பளீரெனச் சொன்னது கேட்டது.
"இது கூட இப்போ வெத்தலை போடு-ன்னு சொன்னது கூட உங்க மனசு தானா?"-- அந்த அரைகுறை இருட்டில் அவர் உருவம் தெளிவாகத் தெரியா விட்டாலும் அவர் சொன்னது ஸ்பஷ்டமாகக் கேட்டது.
"அடடே! கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே?"
"இப்போ ரொம்பவும் தான் மனசு சொல்றதை அடிபணிந்து கேக்கிறீங்க போலிருக்கு."
"அதுவும் சரிதான். எது இருந்தாலும் இல்லேனாலும் எனக்கு இந்த வெத்தலை வேணும். வெத்தலை,சீவல்,சுண்ணாம்பு--இந்த மூணும் அளவா இணைஞ்சு ஜீரா போல தொண்டைக்குழிலே எறங்கறச்சே...அடடா!"
"அனுபவிச்சு சொல்றீங்களே!"
"பின்னே? பரமசுகம்னா பரமசுகம்தான்!.." என்ற கிருஷ்ணமூர்த்தி, மறந்த எதுவோ நினைவுக்கு வந்தமாதிரி, "அதுசரி, உங்கபேர் என்னன்னு இதுவரை சொல்லவேயில்லையே" என்றார்.
லேசான முன்பனி பெய்யத் தொடங்கியிருந்தது. பக்கத்தில் அமர்ந்திருப்பவர் கூட சரிவரத் தெரியாமல் இருட்டு தார்போல பூசியிருந்தது.
"என் பேரா? பரமசிவம்" என்று பக்கத்திலிருந்து குரல் மட்டும் கிருஷ்ணமூர்த்திக்குத் தெளிவாகக் கேட்டது. தான் 'பரமசுகம்' என்று சொன்னதன் எதிரொலிதான் 'பரமசிவம்' என்று காதுக்குக் கேட்டதோ என்று கிருஷ்ணமூர்த்தி ஒரு நிமிடம் திடுக்கிட்டார். இருந்தாலும், அடுத்த வெற்றிலையை எடுத்துத் துடைத்தபடியே, எதுவோ நினைவுக்கு வந்தவர் போல்,"தென்னாடுடைய சிவனே, போற்றி!" என்றார். ஒருவினாடி கழித்து, "எந்நாட்டவருக்கும் உரிய இறைவா, போற்றி!" என்று அவரே சொன்னார்.
அந்த இருட்டில் பக்கத்திலிருந்து ஏதோ அசைகிற உணர்வு மட்டும் கிருஷ்ணமூர்த்தியின் புத்தியில் பட்டது.
''ஒருநாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும்; ஜென்மம் கடைத்தேற---ஒருநாள்...." என்று ராகமெடுத்து சுவாரஸ்யத்துடன் பாட ஆரம்பித்து விட்டார். சுருதி பேதமற்ற சாரீரத்தின் லயிப்புடனான மயக்கம் லேசாக அவரை ஆட்கொண்டு மெய்மறக்கச் செய்தது.
"கிருஷ்ணமூர்த்தி......" என்று வாத்சல்யத்துடன் யாரோ அவர் காதுக்கருகில் வந்து அழைக்கிற தொனியாய் நினைவோடை தப்பி கனவில் கேட்பது மாதிரி கேட்டது.
கிருஷ்ணமூர்த்தி பலவந்தமாக நினைவைத் திரட்டி ஒருமுகப்படுத்தப் பார்த்தார்; முடியவில்லை. அதிகபட்சமாக 'உம்'மென்று ஒரு முனகலே அவரிடமிருந்து வெளிப்பட்டது.
"கிருஷ்ணமூர்த்தி! பெண்டாட்டி-பிள்ளை-பெண்னு மத்தவங்க சுகத்துக்காக வாழ்ந்தேனீங்களே?.. உங்களுக்கு அதிலே சுகமே இல்லையா?.. பங்கே இல்லையா?பிள்ளைவரம் வேண்டிப் பிதற்றித் திரிந்தபோது பித்தனே அருள் பாலித்ததை அறியீரோ?.. உங்க பிள்ளையும் பெண்ணும் மழலையாய் தவழும் போது நெஞ்சணைத்து கண்களில் நீர்தளும்ப பரவசப்பட்டிருப்பீர்களே?..அந்த சுகம், உங்க சுகம் இல்லையா? அது ஆத்மாவும் ஆத்மாவும் கலந்து உறவாடிய கேளிக்கை இல்லையா?"-- கேள்விகள் மட்டும் 'கணீர்-கணீர்' என்று அலறுகிற மாதிரி காதுகளில் மோதி சதிரிட்டது. லேசான குறட்டை சப்ததிற்கு இணையாகக் கேட்ட ஒலிபோலவும் இருந்தது.

"முன்னை தவப்பயனாய்
என்னில் ஒரு துளி
நானாய் நானாய்த் தொடர்வதை
அற்புதம் என்பதோ? அதனால்,
ஆனந்தம் கொள்வதோ?"

--- என்று யாரோ ஈனஸ்வரத்தில் முனகுவது போலக் கிருஷ்ணமூர்த்திக்குக் கேட்டது. "வந்த வேலை முடியவில்லை, கிருஷ்ணமூர்த்தி! இன்னும் நிறைய இருக்கிறது!" என்று நினைவூட்டுகிற மாதிரி, நெற்றியில் வைரமாக ஜொலிக்கும் இன்னொரு கண்ணுடன் உறுத்துப்பார்த்து யாரோ தன்னிடம் சொல்வது போலிருந்தது, கிருஷ்ண மூர்த்திக்கு.
"ஈஸ்வரா---" என்று வாய் கோணலாகக் கேவியபடி அவர் உட்கார்ந்திருந்த இரும்புச்சேரில் புரண்டு நிமிர்ந்த பொழுது உடல் தெப்பமாக நனைந்திருந்தது.
மசமசவென்றிருந்த இருட்டில் மலங்க மலங்க விழித்தவருக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் தெரியவில்லை. தூரத்தில் பொட்டுபொட்டாய் பச்சையும் சிவப்புமாய் மினுமினுக்கும் ரயில்வே லைன் சிக்னல் லைட்டுகளை வெறித்துப் பார்த்தார். வானத்துக்கும், பூமிக்கும் இரும்புச்சட்டங்களால் கோடு போட்டு இணைத்த மாதிரி இங்கேயும் அங்கேயும் சிதறி இருட்டில் பளபளக்கும் இருப்புப் பாதைகள் அவர் நினைவில் நிழலாகப் படிந்தன.
பிர்மாண்ட ராஷசனாய் 'புஸ்புஸ்' என்று மூச்சு விட்டபடி பக்கத்து லைனில் இன்ஜின் ஒன்று நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டபொழுது தான், கிருஷ்ணமூர்த்திக்கு தில்லி ரயில் நிலையத்து பிளாட்பாரமொன்றில் தான் அமர்ந்திருப்பது முழுசாய்ப் புரிந்தது.
மடியில் வைத்திருந்த வெற்றிலைப் பெட்டி இரும்புச் சேரில் நழுவியிருந்தது. பக்கத்தில் 'ஜிப்' வைத்த பெரிய பை அண்டை கொடுத்த தலையணை மாதிரி பத்திரமாக இருந்தது.
நெற்றிப் பொட்டு 'கிண்கிண்'ணென்று வலித்தது.
கைதிருப்பிக் கடியாரம் பார்த்தார். ரேடியம் பூசிய டயல் மணி மூன்று என டாலடித்தது. அப்போ, ஜம்மு-தாவி எக்ஸ்பிரஸ்?...போயே போச்! இமயமலை யாத்திரை?.. 'அரியலூருக்குப் போகலாம்; கிளம்பு' என்று மனசு சேதி சொல்லியது...மனசு பொய் சொல்லுமா?... யாருக்கு என்னவோ ஏதோ என்று நினைவு பரபரத்தது.. 'ஊருக்குத் திரும்புவதெப்படி' என்று ரயில் நிலைய அதிகாரியை விசாரிக்கலாம் என்று கிருஷ்ணமூர்த்தி எழுந்திருந்த பொழுது---

சற்று தூரத்தில் பிளாட்பார சரளைக்கற்களைத் தாண்டி இங்கேயும் அங்கேயும் இரண்டு பக்கமும் பார்த்தபடி யாரோ தன்னை நோக்கி வருவது தெரிந்தது.

(தேடல் தொடரும்)

4 comments:

jeevagv said...

அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என அறியும் ஆவலைத் தூண்டுகிறது! - இதுவரை நடந்ததெல்லாம் போதாதா என்கிற வினா எழும்பினாலும்!

Kavinaya said...

//?..அந்த சுகம், உங்க சுகம் இல்லையா? அது ஆத்மாவும் ஆத்மாவும் கலந்து உறவாடிய கேளிக்கை இல்லையா?"//

அருமையான கேள்விகள். மனசு மாறிக் கொண்டேயிருக்கிறது. அதன் விருப்பங்களும் புரிதல்களும் ஒரு நாள் இருந்தாற் போல அடுத்த நாள் இருப்பதில்லை. உண்மையான சுகத்தைத் தேடித் தேடித்தான் இந்த அலைச்சல் போலும்.

தேடலை நீங்கள் தரும் விதம் அற்புதம். மிக்க நன்றி ஐயா.

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என அறியும் ஆவலைத் தூண்டுகிறது! - இதுவரை நடந்ததெல்லாம் போதாதா என்கிற வினா எழும்பினாலும்!//


அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
தொடர்ந்து தேடுதல் தொடர்கையில் நிறைய கேள்விகள் பிறக்கும்; நல்ல பதில்களும் கிடைக்கும்.
மிக்க நன்றி.

ஜீவி said...

கவிநயா said...
//?..அந்த சுகம், உங்க சுகம் இல்லையா? அது ஆத்மாவும் ஆத்மாவும் கலந்து உறவாடிய கேளிக்கை இல்லையா?"//

//அருமையான கேள்விகள். மனசு மாறிக் கொண்டேயிருக்கிறது. அதன் விருப்பங்களும் புரிதல்களும் ஒரு நாள் இருந்தாற் போல அடுத்த நாள் இருப்பதில்லை. உண்மையான சுகத்தைத் தேடித் தேடித்தான் இந்த அலைச்சல் போலும்.

தேடலை நீங்கள் தரும் விதம் அற்புதம். மிக்க நன்றி ஐயா.//

'தேடலி'ல் தொடர்ந்து வருவதற்கு மிக்க நன்றி.
விருப்பங்களும், புரிதல்களும் ஆளுக்கு ஆள் மாறுபட்டு இருப்பது வேறு ஒரு புதிர். இதில் நீங்கள் சொல்கிற மாதிரி ஒருவருக்குள்ளேயே நேற்றுப் பிடித்தது அல்லது ஒன்றைப் புரிந்து கொண்டது இன்றில்லை என்கிற மாதிரி அதிவேக
மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
அதனால் தான் எது ஒன்றையும், இது உண்மையான சுகம் இல்லை போலும் என்று மனம் நினைக்கிறது. இருந்திருந்தால், நிலையான ஒரு சுகத்தையே பற்றிக் கொண்டிருக்கும், இல்லையா?..

போராடிக் கிடைத்தால் தான் சுகம் இருக்கும்; அதற்காகத்தான் இந்தப் போராட்டம் போலும்!

கருத்துக்களுக்கு மிக்க நன்றி, கவிநயா!

Related Posts with Thumbnails