மின் நூல்

Sunday, September 7, 2008

ஆத்மாவைத் தேடி....2

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி


2. மனசின் குரல் கேட்குதா?

சாதாரணமாய்த் தெரியும் சில கேள்விகள் கூட, அசாதாரணமாய்த் தோன்றி சில சமயங்களில் பதிலளிக்கத் தயக்கத்தை ஏற்படுத்தும்.

அப்படிப்பட்ட கேள்விகளில் ஒன்று, "நீங்க யார்?" என்பது.

ஆன்மீகச் சொற்பொழிவாளரும், புராண உபன்யாசகருமான ஒரு பெரியவருக்கு இப்படிப்பட்ட தயக்கம் தான் அன்று அந்தக் கேள்வியை எதிர்கொண்ட பொழுது ஏற்பட்டது.


தில்லி ரயில் நிலைய பிளாட்பாரத்தில், ஜம்மு-தாவி எக்ஸ்பிரஸ்க்காக பெரியவர் காத்திருந்தார். அவர் அமர்ந்திருந்த இடம் பிளாட்பாரத்தின் ஓர் ஒதுக்குப்புறமான இடமாக இருந்தது. லேசாக இருட்டு கவியத் தொடங்கிய நேரம் அது.

அப்பொழுது அவர் பக்கத்தில் வந்தமர்ந்த ஆஜானுபாகுவான ஆசாமி, பெரியவரைப் பார்த்துக் கேட்டார். "மன்னிக்கணும். உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. சட்டுனு ஞாபகத்துக்கு வர்ற மாட்டேங்கறது. நீங்க யார்னு தெரிஞ்சிக்கலாமா?"

"நானா?.. நான்----" என்றிழுத்த பெரியவர் ஒரு வினாடி தயங்கினார்."எனக்கும் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாது. உண்மைலே சொல்லணும்னா, அதைத் தெரிஞ்சிக்கறத்துக்காகத்தான் தேசாந்திரமாய் இப்படிக் கிளம்பி வந்திட்டேன்."

கேள்வி கேட்டவர் லேசாகச் சிரித்தார். இவர் சொன்னது அவருக்குப் புரிந்திருக்கும் போல.

"அப்படியா? நல்லது... இப்படிக் கிளம்பி வந்திட்டா நீங்க யாருன்னு தெரிஞ்சிடுமா?"

"அப்படித்தான் நினைக்கிறேன்."

"அப்படி யாராவது சொன்னாங்களா?"

"யாரும் இல்லை; என் மனசு சொல்லித்து. கிளம்பிட்டேன்."

"நீங்க சொல்றதைக் கேட்டா சந்தோஷமா இருக்கு."

"எதுக்கு?"

"மனசு சொல்றதைக் கேட்கற உங்களைப் பாக்கறத்துக்கும், நீங்க சொல்றதைக் கேக்கறத்துக்கும் சந்தோஷமா இருக்கு."

"இப்படி மனசு சொல்றதைக் கேக்கறது கூடக் கொஞ்ச காலமாத்தான் முடியறது" என்ற பெரியவர், நீண்ட பெருமூச்செறிந்தார். "அப்பா-அம்மா-கூடப்பிறந்தவங்க-பெண்டாட்டி-பிள்ளை-பெண்னு இத்தனை வருஷமா எல்லாரையும் முகஞ்சுளிக்காம வைக்கறத்துக்கும், அவங்களைத் திருப்திபடுத்தறத்துக்குமே நேரம் சரியா இருந்தது. இப்போத்தான் எனக்குன்னு வாழணும்னு தோணித்து. அது தோணின உடனே மனசு என்ன சொல்றதுன்னு கேக்கத்தொடங்கியாச்சு."

"சபாஷ்.." என்று அந்த இடமே அதிரச் சிரித்தார் பெரியவர் கூட இருந்தவர். "இத்தனை காலம் எல்லார் சொல்றத்துக்கும் செவிசாய்ச்சிட்டீங்க.. இப்போ உங்க மனசு சொல்றத்துக்கு-- உங்க பேர் என்ன?"

"கிருஷ்ணமூர்த்தி."

"எஸ்...இப்போத்தான் கிருஷ்ணமூர்த்தியோட மனசு சொல்றத்துக்கு கிருஷ்ணமூர்த்தி செவிசாய்க்கத் தொடங்கியிருக்கார்.. ஆம் ஐ கரெக்ட்?"

"கரெக்ட்" என்று பெரியவரும் அவர் சொன்னதைப் பலமாக ஆமோதித்து கரகோஷித்தார்.

(தேடல் தொடரும்)

6 comments:

Kavinaya said...

ஹ்ம்.. அப்படியா? எனக்கெல்லாம் என் மனசு சொல்றதை எப்பவும் கேட்க முடியாது. நான் போக நினைக்கிற திசைக்கு எதிர்த் திசையிலையே போகணும்னு அடம் பண்ணும் என் மனசு. ஒரு வேளை நீங்க சொல்றது பக்குவப்பட்ட மனசா இருக்கும்னு நினைக்கிறேன்... :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

"இப்படி மனசு சொல்றதைக் கேக்கறது கூடக் கொஞ்ச காலமாத்தான் முடியறது" என்ற பெரியவர், நீண்ட பெருமூச்செறிந்தார். "அப்பா-அம்மா-கூடப்பிறந்தவங்க-பெண்டாட்டி-பிள்ளை-பெண்னு இத்தனை வருஷமா எல்லாரையும் முகஞ்சுளிக்காம வைக்கறத்துக்கும், அவங்களைத் திருப்திபடுத்தறத்துக்குமே நேரம் சரியா இருந்தது. இப்போத்தான் எனக்குன்னு வாழணும்னு தோணித்து. அது தோணின உடனே மனசு என்ன சொல்றதுன்னு கேக்கத்தொடங்கியாச்சு."

--- இப்படி மத்தவங்களுக்காக அவங்க சொல் கேக்கறதும் கூட நம் மனம் விளையாடும் விளையாட்டு தானே.. அதை திருப்திபடுத்தத்தானே நாம் பிறர் சொல்வதை கேட்கிறோம். அதனால ஆத்ம தேடலுக்கு முதல் படி மனசு சொல்றதை வெறுமே வேடிக்கை பார்த்து அதற்குப்பின் இருக்கும் விளையாட்டை உணர்ந்து அதை சரிசெய்து நடப்பது. கிருஷ்ணமூர்த்தியும் இதை உணர்ந்து தான் தன் மனம் அதிகம் ஆடாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையை தேடி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய ஒரு நிலைக்கு ஆசைப்பட்டு தனித்து இயங்க/வாழ தேசந்தரியா கிளம்பியிருப்பார்.. என்ன ஜீவி என் எண்ணம் ஓட்டம் சரியா

ஜீவி said...

கவிநயா said...
//ஹ்ம்.. அப்படியா? எனக்கெல்லாம் என் மனசு சொல்றதை எப்பவும் கேட்க முடியாது. நான் போக நினைக்கிற திசைக்கு எதிர்த் திசையிலையே போகணும்னு அடம் பண்ணும் என் மனசு. ஒரு வேளை நீங்க சொல்றது பக்குவப்பட்ட மனசா இருக்கும்னு நினைக்கிறேன்... :)//

"நான் போக நினைக்கிறது' என்று நீங்க நினைக்கிறது உங்க மனசு சொல்றதில்லையா?.. மனசின் நினைப்பை அமுல் படுத்துவதே நம் நடவடிக்கை இல்லையா?
சில நிர்பந்தங்களின் அடிப்படையில் விருப்பு-வெறுப்பற்ற நிலையில் இயந்திரம் மாதிரி நாம் சில செயல்களைச் செய்யலாம்.
அவற்றிற்குத் தான் மனசின் அனுமதி தேவையில்லை. 'மனம் ஒன்றி இதைச் செய்யவில்லை'; 'நானா நெனைச்சு இதைச் செய்யவில்லை'
போன்ற வார்த்தை பிரயோகங்கள் இந்த அடிப்படையில் ஏற்பட்டவை தாம்.
எவ்வளவு பக்குவப்பட்ட மனசுடன் எவ்வளவு அழகா கவிதைகள் எழுதறீங்க? 'எனக்கு எதுவும் வேண்டாம்' என்று சொன்ன சமீபத்திய கவிதை ஒன்று போதுமே!

ஜீவி said...

கிருத்திகா said...
//--- இப்படி மத்தவங்களுக்காக அவங்க சொல் கேக்கறதும் கூட நம் மனம் விளையாடும் விளையாட்டு தானே.. அதை திருப்திபடுத்தத்தானே நாம் பிறர் சொல்வதை கேட்கிறோம். அதனால ஆத்ம தேடலுக்கு முதல் படி மனசு சொல்றதை வெறுமே வேடிக்கை பார்த்து அதற்குப்பின் இருக்கும் விளையாட்டை உணர்ந்து அதை சரிசெய்து நடப்பது. கிருஷ்ணமூர்த்தியும் இதை உணர்ந்து தான் தன் மனம் அதிகம் ஆடாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையை தேடி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய ஒரு நிலைக்கு ஆசைப்பட்டு தனித்து இயங்க/வாழ தேசந்தரியா கிளம்பியிருப்பார்.. என்ன ஜீவி என் எண்ணம் ஓட்டம் சரியா//

1. மனசு சொல்றதை வேடிக்கைப் பார்த்தல்.
2. உண்மையை உணர்தல்.
3. உணர்ந்ததின் அடிப்படையில், சரிசெய்து செயலாற்றல்.

--இப்படித் தானே மூன்று நிலைகளாகப் மனசு நினைப்பதிலிருந்து, செயலாற்றுவது வரை மூன்று நிலைகளாகப் பிரித்திருக்கிறீர்கள்?.. ஓ.கே.

இப்பொழுது கிருஷ்ணமூர்த்திக்கு வருவோம்:

1. மனம் பிறர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய், ஆசாபாசாங்களுக்கு அடிபணிந்து
ஆடாமல் இருக்க
2. சுற்றத்திடமிருந்து அந்நியப்பட்டு
தனித்து, தன் மனம் தனக்கே சொல்வதைக் கேட்டு நடக்க ஆசைப்பட்டு சுற்றத்தை விட்டுக் கிளம்பி விட்டார்..

--என்று தானே உங்கள் மனம் உங்களுக்குச் சொல்கிறது?..

இப்போதைக்குப் பெரியவர் கிருஷ்ண மூர்த்தியை தில்லி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இன்னொருவருடன் விட்டிருக்கிறேன்.
அவர்கள் சம்பாஷணை எப்படிப் போகும் என்று தீர்மானிக்காத நிலை..
பார்ப்போம். அதுவரை நீங்களும் யோசித்து வையுங்கள்..ஓ.கே?..
மீண்டும் சந்திப்போம்.
ஈடுபாட்டுடன் கூடிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி, கிருத்திகா!

Shakthiprabha (Prabha Sridhar) said...

பல நேரங்களில் பலர், வாழ்க்கையின் மிகப் பெரிய இலக்கை, மிகப் பெரிய தேடலை, மறந்தே வாழ்ந்து முடிந்தும் விடுகின்றனர்.

ஜீவி said...

Shakthiprabha said...
//பல நேரங்களில் பலர், வாழ்க்கையின் மிகப் பெரிய இலக்கை, மிகப் பெரிய தேடலை, மறந்தே வாழ்ந்து முடிந்தும் விடுகின்றனர்.//

எல்லாம் அவன் செயல்.. எந்த நேரத்து எது வேண்டுமோ அதை அளிப்பவனும் அவனே..

"தாயென சாலப்பரிந்து...

Related Posts with Thumbnails