Sunday, September 14, 2008

ஆத்மாவைத் தேடி....5


ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....5. ஒன்றே இரண்டானால் இரண்டும் ஒன்றுதான்.ந்தவர் ரயில்வே நிலைய உதவி அதிகாரி என்று கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நிலைய அதிகாரி அவரை அழைத்து வரச்சொன்னதாக இந்தியில் சொன்னார்.
"அப்படியா? ரொம்ப சந்தோஷம்!" என்று கைகூப்பினார் கிருஷ்ணமூர்த்தி. "நானே ஸ்டேஷன் மாஸ்டரைத் தேடிவருவதாக இருந்தேன். கொஞ்சம் இருங்கள். சற்றுமுன்வரைஎன்னுடன் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். இங்குதான் இருப்பார். அவரிடமும் சொல்லிக்கொண்டு வருகிறேன்" என்று வெற்றிலைப் பெட்டியை எடுத்தபடி செருப்பை மாட்டிக்கொண்டு எழுவதற்குத் தயாரானார், கிருஷ்ணமூர்த்தி.
"உங்களுடன் பேசிக்கொண்டிருந்தவரா?..அவர் அப்போவே கிளம்பி விட்டார். அவர் சொல்லித்தான் நீங்கள் இங்கு இருப்பது தெரியும்."
"அப்படியா!" என்று கிருஷ்ணமூர்த்தி திகைத்தார். "அவரை உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியாது. யாரோ ரயில் பயணி போலிருக்கிறது. வாட்டசாட்டமாக இருந்தார். புலித்தோலைப் போர்த்திக்கொண்ட மாதிரி அங்கவஸ்திரத்தை மார்பில் சுற்றிகொண்டிருந்தார். நெற்றியை மறைத்து முண்டாசு வேறு கட்டிக் கொண்டிருந்தார்."
அவர் சொல்வதைக் கேட்டு கிருஷ்ணமூர்த்தியின் புருவங்கள் முடிச்சுப் போட்டுக்கொண்டன. சொன்ன அடையாளங்கள் திகைப்பேற்படுத்தியது. அதைக் கட்டுபடுத்திக்கொண்டு, "அவர் தன் பெயரை பரமசிவம் என்று சொன்னாரா" என்று ஆவலுடன் கேட்டார்.

"நீலகண்டன் என்று சொன்னதாக நினைவு."

கிருஷ்ணமூர்த்தி வானம் பார்த்துக் கைகூப்பினார். "இரண்டும் ஒன்று தானே சுவாமி!" என்றார் அந்த அதிகாரியைப் பார்த்து. ஒருநிமிடம் தாமதித்து " ஒன்றே இரண்டானாலும், பலவானாலும், எல்லாம் ஒன்று தானே!" என்றார்.

"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை.." என்றார் அந்த அதிகாரி.

"ஆமாம்.. நீங்கள் சொல்வது உண்மைதான்.. பலருக்குப் பல விஷயங்கள் புரிவதில்லை!" என்று ஒரு வேதாந்தியைப் போல நெட்டுயிர்த்தார் கிருஷண மூர்த்தி.

அந்த அதிகாரிக்கு கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறார் என்று சுத்தமாகப்புரியவில்லை.. இவரை முதலில் நிலைய அதிகாரியிடம் கொண்டு போய் விட்டு விட்டால் நம் வேலை முடிந்தது என்று நினைப்பே மேலோங்கிஇருந்தது.. ஆகையால், தனது உணர்வுகளைச் சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு, "ரொம்ப நேரமாக நாங்கள் உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். மன்னியுங்கள். நீங்கள் இந்த இருட்டில் தனியே இங்கிருக்கிறீர்கள் என்றுத் தெரியவில்லை. நிலைய அதிகாரியிடம் அவர்--அந்த நீலகண்டன் -- வந்து சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். அவரும் போய் அரைமணி நேரத்திற்கு மேலாகிறது."

"ஓ.." என்று உதட்டைக்குவித்தார் கிருஷ்ணமூர்த்தி.

"வாருங்கள்...நான் கூட்டிப் போகிறேன்.. இந்தப் பையை நான் எடுத்துக் கொள்ளட்டுமா?" என்று கிருஷ்ணமூர்த்தியிடம் அனுமதி கேட்டு, அவர் பதில் சொல்வதற்குள்ளாகவே பையை எடுத்துக்கொண்டார் அந்த அதிகாரி.
"என்னைத் தேடுகிறீர்களா? எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா?" என்று பவ்யமாகக் கேட்டார் கிருஷ்ணமூர்த்தி.

"வாருங்கள்... ஸ்டேஷன்மாஸ்டர் விவரமாகச் சொல்லுவார்"
'எதற்காக இருக்கும்?.. ஊரிலிருந்து ஏதாவது செய்தியோ?' என்று யோசித்தபடி அவரைத் தொடர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.

அவர் வருகைக்காக அறை வாசலிலேயே நின்று கொண்டு காத்திருந்தார் ஸ்டேஷன் மாஸ்டர்.
பக்கத்தில் கிருஷ்ணமூர்த்தி வந்ததும், "நமஸ்காரம். தங்களை சிரமப்படுத்தி விட்டேன். நானே வந்திருக்க வேண்டும். சூழ்நிலை இந்த இடத்தை விட்டு என்னை நகரவிடவில்லை" என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
கிருஷ்ணமூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை.. அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தார்.

"காப்பி சாப்பிடுகிறீர்களா?" என்று உபசரித்தார் அதிகாரி.

"இல்லை.. கொஞ்சநேரம் ஆகட்டும்.. இப்போதைக்கு இது போதும்," என்று வெற்றிலைப் பெட்டியைத் திறந்தார் கிருஷ்ணமூர்த்தி.
"ஜம்மு-தாவியில் ரிசர்வ் பண்ணியிருந்தீர்களோ? வயர்லெஸ்ஸில் தொடர்பு கொண்டோம். நீங்கள் இல்லை, சீட் காலியாக இருப்பதாகச் சொன்னார்கள். எங்களுக்குக் கவலையாகப் போய்விட்டது"-- அவர் சொல்வதை கிருஷ்ண மூர்த்தி பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தார்.

"ராம்மனோகர்ஜி என்னிடம் பேசினார். ஜம்மு-தாவியில் நீங்கள் பயணப்படுவதாகவும், உங்களுக்கு அவசரத்தகவல் தெரிவிக்க விருப்ப படுவதாகவும் சொன்னார்.."

"ராம்மனோகர்ஜி?.. தொழிலதிபர் ராம்மனோகர்ஜியா?"

"ஆமாம்.. இண்டஸ்ரியலிஸ்ட் ராம்மனோகர்ஜியே தான். மிகப் பிர்மாண்டமான சதஸ் ஏற்பாடு செய்திருக்கிறார், இல்லையா?.. தில்லி பூரா சதஸ்ஸைக் காணக்காத்திருக்கு. சதஸ் நிகழ்ச்சிகளில் உங்கள் பெயரையும் பார்த்தேனே?"
"சதஸ்ஸா?.. தில்லியிலா?..எப்போ?" என்றார் கிருஷ்ணமூர்த்தி.
"உங்களுக்குத் தெரியாது?.. ஓ, காட்! உலகம் பூராவிருந்தும் டெலிகேட்ஸ் கலந்துக்கப் போறாங்களே?"

"என்ன சதஸ்னு தெரியாது; சொன்னால் புண்ணியமாகப் போகும்" என்றார் கிருஷ்ணமூர்த்தி.

நிலைய அதிகாரி அவரை விநோதமாகப் பார்த்தார். இவர் தான் கிருஷ்ண மூர்த்தியாங்கற சந்தேகம் அவருக்கு. "'ஆத்மா'ங்கறது நடக்கப்போற சதஸ் பேர். அதுமட்டும் எனக்குத் தெரியும்.. அடுத்த மாதம் முதல் வாரத்லே........"
"ஓ..."
"முதல்லே நீங்க கிடைச்சிட்ட நல்ல சேதியை நான் ராம்மனோகர்ஜிக்குத் தெரியப்படுத்தணும்.. அவர் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டு உங்களைப் பற்றி விசாத்தார். ராத்திரி எந்நேரமானாலும் சொல்லச் சொல்லியிருக்கார். உங்களை அவரிடம்கூட்டிச் செல்ல வாசல்லேயே கார் காத்திண்டிருக்கு." என்றார் ரயில்வே நிலைய அதிகாரி.

"முன்னே பின்னே நான் ராம்மனோகர்ஜியைப் பார்த்ததில்லை.. பத்திரிகைகளில் அவர் புகைப்படம் பார்த்திருக்கிறேன்.. அவருடன் தொடர்பு கொடுங்கள்.. நானே அவரிடம் பேசுகிறேனே!" என்றார் கிருஷ்ணமூர்த்தி.

"சரி..." என்று தொலைபேசியை எடுத்து, தொலைபேசி எண்ணைச் சுழற்றியவர், யாருடனோ பேசிவிட்டு போனை வைத்தார். "'ஜி' உங்களுக்காகத் தான் காத்திருக்கிறாராம்.. காரில் உங்களை கெளரவமாக அனுப்பி வைக்கச் சொன்னார்" என்றார்.

"நான் அவருடன் பேசுகிறேன் என்று சொன்னேனே?" என்று ஏமாற்றத்துடன் புருவத்தை உயர்த்தினார் கிருஷ்ணமூர்த்தி.

"எஸ்.. 'ஜி' மிகவும் நாகரிகமான நடவடிக்கைகளைக் கொண்டவர்... உங்களிடம் தொலைபேசியில் பேசி தில்லியில் வரவேற்பது மரியாதையாக இருக்காது என்று சொன்னார். உங்களை நேரில் கண்டு தன் அன்பான சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள அவர் உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறார்."

கிருஷ்ணமூத்திக்கு மிகவும் நெகிழ்ச்சியாகப் போய்விட்டது. தான் மிகவும் அவசரப்பட்டாலும், எல்லோரும் தன்னிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வதாகப் பட்டது. ஒரு நிமிடம் தான் அந்த 'தான்' மாயை! அடுத்த நிமிடமே, 'எல்லாம் அவன் கருணையல்லவோ' என்கிற நினைப்பு வந்தவராய், "தங்கள் அன்புக்கு மிக்க வந்தனம்.. பல வேலைகளுக்கிடையே எனக்கும் நேரம் ஒதுக்கி..." என்று கிருஷ்ணமூர்த்தி சொல்ல வந்ததை முடிப்பதற்குள், "தாங்கள் பண்டிதர்! பெரிய பெரிய வார்த்தைகளைக் கொண்டு என்னைப் புகழலாமா?" என நாணப்பட்டவராய் புன்னகைத்தார். கிருஷ்ணமூர்த்தியை வெளியே காத்திருக்கும் 'ஜி'யின் காரில் அனுப்பி வைக்க ஒரு நபரையும் கூட அனுப்பி வைத்தார்.

(தேடல் தொடரும்)
11 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது!

//என்று ஒரு வேதாந்தியைப் போல நெட்டுயிர்த்தார் கிருஷண மூர்த்தி.//
நெட்டுயிர்த்தார் - அப்படீன்னா என்னங்க?

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது!

//என்று ஒரு வேதாந்தியைப் போல நெட்டுயிர்த்தார் கிருஷண மூர்த்தி.//
நெட்டுயிர்த்தார் - அப்படீன்னா என்னங்க?

அப்படியா?.. அதுதான் வேண்டும்.
முடிந்தவரை எளிமையாகவும், சுவையாகவும் புரிந்து கொண்டு எழுத முயற்சிக்கிறேன். உங்களது பின்னூட்டம் இதற்கு நிச்சயம் உதவும்.
இந்த இடத்தில் 'பெருமூச்செறிந்தார்'-என்கிற அர்த்தத்தில் அந்த வார்த்தையை உபயோகித்திருக்கிறேன்.
வருகைக்கும், உணர்ந்ததை எழுதியமைக்கும் நன்றி, ஜீவா!

கவிநயா said...

சதஸ்னா என்னன்னு தெரியல எனக்கு. மற்றபடி ஜீவாவை வழிமொழியறேன் :)

ஜீவி said...

கவிநயா said...
//சதஸ்னா என்னன்னு தெரியல எனக்கு. மற்றபடி ஜீவாவை வழிமொழியறேன் :)//

பல்வேறு துறைகளில் தேர்ந்து கற்ற அறிஞர்கள் ஒன்று கூடி, பலதலைப்புகளில் தாம் கற்றவற்றை விவாதிக்கும் நிகழ்ச்சி என்று சொல்லலாம்;
சுருக்கமாக 'விவாத-கருத்தரங்கு' என்று கொள்ளலாம்.
தொடர்ந்து தொடர்ந்து வருவதற்கும்.
கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிக்க நன்றி.

கவிநயா said...

விளக்கத்துக்கு நன்றி ஐயா :)

ஜீவி said...

//கவிநயா said...
விளக்கத்துக்கு நன்றி ஐயா :)//

இனி இப்படிப்பட்டப் பதங்களுக்கு அங்கங்கே நட்சத்திரக் குறியிட்டு எனக்குத் தெரிந்தவரை அல்லது தெரிந்தவர்களைக் கேட்டு விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறேன்.
தங்களுக்கும் மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

ஓ. ஒரு பெரிய தொடர்கதையாக அல்லவா செல்கிறது.

ஆசார்ய ஸ்வாமிகள் நிறைய சதஸ் நடத்துவார் என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆண்டவன் ஆஸ்ரமத்தில் நடக்கும் சதஸ் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்குத் தான் சதஸைப் பற்றிய அறிவு.

ஜீவி said...

குமரன் (Kumaran) said...
//ஓ. ஒரு பெரிய தொடர்கதையாக அல்லவா செல்கிறது.

ஆசார்ய ஸ்வாமிகள் நிறைய சதஸ் நடத்துவார் என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆண்டவன் ஆஸ்ரமத்தில் நடக்கும் சதஸ் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்குத் தான் சதஸைப் பற்றிய அறிவு.//

ஆமாம், குமரன்!
நான் காஞ்சீபுரத்தில் வசித்த பொழுது
மகா பெரியவர் நடத்திய சதஸ் ஒன்று நடந்து, தூரத்தில் நின்று பார்த்திருக்கிறேன்.. உண்மையிலேயே அந்த நினைவு தான் சதஸ் என்று எழுதும் பொழுது வந்தது. நான் நினைத்ததையே நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.. தங்களுக்கு நல்ல நினைவாற்றல்.

தொடர்கதையோ?.. இல்லை என்றும் சொல்வதற்கில்லை.. தொடர்ந்து படித்து நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

Shakthiprabha said...

நன்றாக இருக்கிறது உங்கள் தொடர்.

எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது உங்கள் இடுகையை படித்துக்கொண்டிருக்கையில் என்று சொன்னால் அது மிகையல்ல.

நன்றி. :bow:

ஜீவி said...

Shakthiprabha said...
//நன்றாக இருக்கிறது உங்கள் தொடர்.//


'எழுதுகோல் தெய்வம்; அந்த எழுத்தும் தெய்வம்' என்பதினால்,
பாராட்டுகள் எல்லாம் அவனுக்கே போய்ச் சேர வேண்டும். அவனைப் பாராட்ட நமக்கு என்ன அருகதை என்று நினைக்கும் அடக்க உணர்வால், கண்ணுக்குத் தெரியும் காரணமான மனிதரைப் பாராட்டுகிறோம் என்று தான் நினைக்கிறேன்.

தொடர்ந்த உணர்வு பூர்வமான பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
மிக்க நன்றி, சக்திப்பிரபா!

அப்பாதுரை said...

இப்போதான் தொடரைப் படிக்க ஆரம்பித்தேன். இதுவரை பிரமாதம். இந்தக் குறிப்பிட்ட பதிவில் சிலிர்ப்பு.

Related Posts with Thumbnails