ஆன்மீகத்தின் அடுத்த கட்டம் நோக்கி....
11. கிரெளஞ்சப் பட்சி
அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது.
'படபட'வென்ற சப்தத்துடன் அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த அந்த மண்டபத்தினுள் இணையாக நுழைந்த இரு கிரெளஞ்சப் பறவைகள், நீண்டு விரிந்த தங்கள் சிறகுகளை மடக்கி மண்டபத்தின் நடுமத்தியில் அமர்ந்தன. அமர்ந்ததும் அந்த இரண்டு பறவைகளும் தங்கள் அலகை நீட்டி, கருமணிகளென டாலடித்த தங்கள் கருவிழிகளை இப்படியும் அப்படியும் அலையவிட்டு அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேரையும் அளவெடுப்பது போல் பார்த்தன.
கிருஷ்ணமூர்த்திக்கு இருப்பு கொள்ளவில்லை. இராமயண காவியத்தை ஆரம்பித்து வைத்தது கிரெளஞ்ச பட்சியன்றோ என்று அவர் நினைவுகள் தாம் படித்துக் களித்த இதிகாச நினைவுகளில் அழுந்தின. 'ஆத்மாவின் தேடல் நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில், இந்த ஜோடிப்பறவைகள் ஆசி கூறி ஆரம்பித்து வைக்கின்றனவோ? என்னே இறைவனின் கருணை!' என்று அவருக்கு நெற்றி வியர்த்தது.
அவருக்கு என்ன தோன்றியதோ என்னவோ, அந்த பட்சிகளைப் பார்த்து மனோகர்ஜி நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்தார்.
அந்த இணையில் ஆண் கிரெளஞ்சம் தனது நீண்ட அலகில் எதையோ கொத்திக்கொண்டிருந்ததை முதலில் பார்த்துச் சொன்னவர், தனஞ்செயன் தான். விஞ்ஞானி தனஞ்செயன் அணுக்களின் ஆற்றல் பற்றியும், அவற்றின் சேர்க்கை--செயல்பாடுகள் பற்றியும் தனது ஆய்வு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்திருந்தவர்.
"ஆமாம்..ஆமாம்" என்று கிட்டத்தட்ட எல்லோரும் ஏகோபித்து, அந்த ஆண் கிரெளஞ்சப் பறவை எதையோ தன் அலகில் அடக்கி வைத்திருப்பதைப் பார்த்து முணுமுணுத்தனர். சடாரென்று மண்டப முகப்பு நோக்கிப் பறந்து, உடனே அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேரையும் ஒரு சுற்று சுற்றி வந்து, தன் இணை தொடர அந்த அரங்கை விட்டுவெளியே வந்த அந்த கிரெளஞ்சங்கள், எல்லோரும் அவற்றை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அந்த இடம் விட்டு வெளிப்போந்து, புல் தரையில் இதுவரை பத்திரமாய் அலகில் கொத்தி வைத்திருந்ததை நழுவ விட்டுப் போயிற்று.
அது துப்பியது என்னவாயிருக்கும் என்று பார்க்கின்ற ஆவலில் எல்லோரும் எழுந்து புல்வெளி நோக்கிப் பாய்ந்தனர். போய்ப்பார்த்தால், இரண்டு ஆலம் விதைகள். நல்ல கொழுகொழுப்புத் திண்மையுடன் விதைகள் புல்தரையில் கிடந்தன.
அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அந்தப் பறவைகள் தியான மண்டபம் தாண்டி, சிவசக்தி கோயில் மண்டப ஸ்தூபியில் வினாடி நேரம் அமர்ந்து, பறக்கத்துவங்கும் விமானம் மாதிரி நேர்கோட்டில் சென்று, 'ஜிவ்'வென்று பிரபஞ்ச வெட்டவெளி நோக்கிப் பாய்ந்தது.
ஒருவனுக்கு ஒருத்தியென வாழும் கிரெளஞ்சப் பறவையின் அந்த இணை சென்ற திசைநோக்கி மனோகர்ஜி கைகூப்பி, 'சிவ..சிவா'என்று உதடுகள் ஜபிக்கக் கும்பிட்டார். பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிச் சொல்லாமல் சொல்லிச் சென்ற கிரெளஞ்சச்செய்தி அவருக்குப் புரிந்து போயிற்று . அதை மற்றவர்களுடன் அவர் பரிமாறிக் கொள்கையில் மிகவும் நெக்குருகித் தளர்ந்தார்.
'எதுவும்-- எதற்காகவோ தான் நடக்கிறது. சில வெளிப்படையாக; சில சூட்சுமமாக. அப்படி சூட்சுமமாக நடக்கும் சிலவற்றைப் புரிந்து கொள்ளும் சக்தியும் சிலருக்குத்தான் வரப்பிரசாதமாகக் கிடைத்திருக்கிறது' என்று நினைத்துக் கொண்டார், ஆந்திராவிலிருந்து வந்திருந்த தத்துவப் பேராசிரியர் சிவசைலம்.
அந்த பிர்மாண்ட 'மகாதேவ நிவாஸை'ப் பராமரிக்கும் பணியாளர்களை கூப்பிட்டனுப்பினார் மனோகர்ஜி. அவர்கள் வந்து பள்ளம் தோண்டி, அந்த இரு ஆலவிதைகளையும் நிலத்தில் போதிய இடைவெளி விட்டு அருகருகே விதைத்தனர். பயபக்தியுடன் நீர் பாய்ச்சினர்.
என்றோ, எப்பொழுதோ, கல்ப கோடி ஆண்டுகள் முன்பு பிரபஞ்சம் உருப்பெற்றதின் நினைவாக, கிரெளஞ்சப்பட்சிகள் அன்புடன் அளித்த அந்த ஆலவிதைகள் விதைக்கப்பட்டதாக எல்லோரும் நினைத்துக்கொண்டனர். நேராக மண்டபம் சென்று இறைவன் அருளுக்கு நன்றி சொல்லி அவன் ஆசி பெற்ற மகிழ்ச்சியில், அரங்கு திரும்பினர்.
அந்த மகிழ்ச்சி இத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்கும் மனோகர்ஜியின் முகத்தில் பரவசமாகப் பளீரிட்டது.
(தேடல் தொடரும்)
16 comments:
மிக சுவாரசியமாக தொடர் சென்று கொண்டிருக்கிறது. ஆல மரத்தின் விழுதைப்போலவே ஆன்மாவையும் கூறலாம் என்று அந்த பறவைகள் கூறுகின்றனவோ? அடுத்த பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்.
//'எதுவும்-- எதற்காகவோ தான் நடக்கிறது. சில வெளிப்படையாக; சில சூட்சுமமாக. அப்படி சூட்சுமமாக நடக்கும் சிலவற்றைப் புரிந்து கொள்ளும் சக்தியும் சிலருக்குத்தான் வரப்பிரசாதமாகக் கிடைத்திருக்கிறது'//
மிகவும் உண்மையான வார்த்தைகள். கிரௌஞ்சப் பட்சிகளின் வரவு மகிழ்ச்சியைத் தருகிறது. அவை வந்து கட்டியம் கூறிய நிகழ்வுகளைக் காணும் ஆவலுடன்...
// அப்படி சூட்சுமமாக நடக்கும் சிலவற்றைப் புரிந்து கொள்ளும் சக்தியும் சிலருக்குத்தான் வரப்பிரசாதமாகக் கிடைத்திருக்கிறது //
பல விஷயங்களை மிக சூட்சுமமாக சொல்லி வருகிறீர்கள் என்பது புரிகிறது. முழு உட்கருத்தை சரியாகப் புரிந்து கொண்டுவிட்டேனா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.
பலமுறை படிக்க வேண்டும்.
நல்ல படைப்புகளின் சிறப்பே அது தானே. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதுப் புது கருத்துகள் கிடைக்கும்.
ஆழமான நதி அமைதியாக போவது போல அமைதியான எழுத்து நடை; நன்றாக இருக்கிறது.
மேலும் படிக்கக் காத்திருக்கிறேன்
"என்றோ, எப்பொழுதோ, கல்ப கோடி ஆண்டுகள் முன்பு பிரபஞ்சம் உருப்பெற்றதின் நினைவாக, கிரெளஞ்சப்பட்சிகள் அன்புடன் அளித்த அந்த ஆலவிதைகள் விதைக்கப்பட்டதாக எல்லோரும் நினைத்துக்கொண்டனர்."
முன் கேட்டறியாத புதிய செய்தியாய் இருக்கிறது. மேலும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...
Expatguru said...
//மிக சுவாரசியமாக தொடர் சென்று கொண்டிருக்கிறது. ஆல மரத்தின் விழுதைப்போலவே ஆன்மாவையும் கூறலாம் என்று அந்த பறவைகள் கூறுகின்றனவோ? அடுத்த பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்.//
வாருங்கள், குரு!
கிரெளஞ்ச பட்சிகளின் வரவும், அவை ஆலவிதைகளை கொணர்ந்து நிலத்தில் போடுதலை ஆலவிருஷம் உருவாவதின் ஆரம்ப செயலாகக் கொண்டு, பிரபஞ்சத்தின் தோற்றத்தோடு தொடர்பு படுத்தி எல்லோரும் மகிழ்கின்றனர்.
இது இப்போதைக்கு.
மற்றவை தொடரும் தொடரில்.
சரியா?.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, குரு!
கவிநயா said...
//'எதுவும்-- எதற்காகவோ தான் நடக்கிறது. சில வெளிப்படையாக; சில சூட்சுமமாக. அப்படி சூட்சுமமாக நடக்கும் சிலவற்றைப் புரிந்து கொள்ளும் சக்தியும் சிலருக்குத்தான் வரப்பிரசாதமாகக் கிடைத்திருக்கிறது'//
மிகவும் உண்மையான வார்த்தைகள். கிரௌஞ்சப் பட்சிகளின் வரவு மகிழ்ச்சியைத் தருகிறது. அவை வந்து கட்டியம் கூறிய நிகழ்வுகளைக் காணும் ஆவலுடன்...
அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது என்று எழுதிவிட்டேனே தவிர, நீங்கள் அது பற்றி கேட்ட பொழுதுகூட, என்ன அதிசயம் என்று தெரியாதிருந்தது.
கிரெளஞ்சப் பட்சிகளின் வரவு திடீர் வரவு. பட்சிகள் கண்ணில் பட்டு, சிந்தையில் காட்சிகளாக உருவானது அவன் அருளால்.
அதே அருளில் மற்றவையும் தொடரட்டும்.
கபீரன்பன் said...
//ஆழமான நதி அமைதியாக போவது போல அமைதியான எழுத்து நடை; நன்றாக இருக்கிறது.
மேலும் படிக்கக் காத்திருக்கிறேன்//
கபீரன்ப!
தங்கள் எழுத்துக்களை படிக்கும் பொழுது, நான் என்ன நினைத்துக் கொள்வேனோ, அதையே எழுதியிருக்கிறீர்கள்.. 'டான் நதி அமைதியாக ஓடுகிறது' என்பார்களே, அதைப்போல!
உண்மை.. வெறும் புகழ்ச்சி இல்லை.
தாங்கள் தொடர்ந்து படித்து வருவது குறித்து மிகவும் மகிழ்ச்சி..
வருகைக்கு நன்றி.
ஆகா, பட்சிகள், ஆல விதைகள்! - சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டிருக்கிறது!
கிருத்திகா said...
"என்றோ, எப்பொழுதோ, கல்ப கோடி ஆண்டுகள் முன்பு பிரபஞ்சம் உருப்பெற்றதின் நினைவாக, கிரெளஞ்சப்பட்சிகள் அன்புடன் அளித்த அந்த ஆலவிதைகள் விதைக்கப்பட்டதாக எல்லோரும் நினைத்துக்கொண்டனர்."
//முன் கேட்டறியாத புதிய செய்தியாய் இருக்கிறது. மேலும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...//
ஆலம் விதைகள்- விருஷம், பிரபஞ்சத்திற்கு உருவகம்.
எல்லா உருவங்களிலும் இறைவனைக் காணலாம், இல்லையா?.. கிரெளஞ்பட்சிகளிடமும் அவனைக் காணலாம். சொல்லப் போனால், விதை-விருஷம் இரண்டிலும் இருப்பதும் அவனே தான். எல்லாமே அவனிடமிருந்துப் பிரிந்தவை.சதஸ் என்கிற ஒரு நல்ல விஷயத்தைத் தொடங்குகையில், இந்த நிகழ்ச்சியை
இறைவனிடமிருந்து வெளிப்பட்ட பிரபஞ்சத் தோற்றத்தோடு பொருத்திப் பார்த்து மகிழ்ந்தனர்.
சரியா?..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, கிருத்திகா!
ஜீவா (Jeeva Venkataraman) said...
//ஆகா, பட்சிகள், ஆல விதைகள்! - சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டிருக்கிறது!//
அப்படியா?..
ரொம்ப சந்தோஷம்.
ஆன்ம விசாரணை, சதஸ்ஸின் முன்னோட்டம், கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் புராணக் கதைகள் கேட்டல்,
இசை நிகழ்ச்சிகளில் இறைவனின் அன்பில் தோய்தல், நடுநடுவே கதையின் திருப்பங்கள் என்று சுவாரஸ்யங்களுக்கு இனி குறைச்சலில்லை.. எல்லாவற்றையும் சொல்ல இறைவன் அருள் வாய்க்க வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
வித்தியாசமான பெயர் கொண்ட பட்சி..இந்தப் பகுதி மட்டும் இப்போது படித்தேன்..அடுத்த பதிவுக்கு முன் அனைத்தையும் அவசியம் படிக்க வேண்டும் ..படிப்பேன்..
பாச மலர் said...
//வித்தியாசமான பெயர் கொண்ட பட்சி..இந்தப் பகுதி மட்டும் இப்போது படித்தேன்..அடுத்த பதிவுக்கு முன் அனைத்தையும் அவசியம் படிக்க வேண்டும் ..படிப்பேன்..//
வாருங்கள், பாசமலர்!
கிரெளஞ்சப் பட்சிகளைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் குறிப்புகள் உண்டு. அவ்வளவு பழைமையான பறவைகள். வெகுவாக வடமாநிலங்களில்,
குறிப்பாக உத்திரப்பிரதேசம், தில்லி, ஹரியானா பகுதிகளில் இந்த இனப் பறவைகள் காணக் கிடைப்பதாக அறிகிறேன்.
தங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.
தொடர்ந்து படித்து கருத்துக்களை சொல்லுங்கள்..
க்ரௌஞ்ச பக்ஷி பற்றி இங்கே http://groups.google.com/group/illam/browse_thread/thread/818f56664167d14d?hl=en#
திவா said...
//க்ரௌஞ்ச பக்ஷி பற்றி இங்கே//
வாருங்கள், திவா!
பாசமலர் அவர்கள் வித்தியாசமான பறவை என்று க்ரெளஞ்ச பக்ஷி பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்த
பக்ஷியின் படத்தைப் பார்க்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியமைக்கு நன்றி.
திவா அவர்களுக்கு, க்ரௌஞ்சப் பறவையின் சுட்டிக்கு (உபநிஷத்தின் சுட்டிக்கும்) மிக்க நன்றி. இதுவரை நான் இப்பறவையைப் பற்றி கேள்விப்பட்டதில்லை.
நன்றி சக்தி பிரபா. வேறோர் இடத்தில் (இல்லம்) ஒருவர் பரவைகளை பற்றி தொடராக மடல் இட்டதால் தெரிந்தது. முன்னர் பெயரை கேள்விப்பட்டு இருந்தேன். இன்னும் இதன் authenticity பற்றி கொஞ்சம் உறுதியாக தெரியவில்லைதான்.
Post a Comment