மின் நூல்

Wednesday, April 22, 2009

ஆத்மாவைத் தேடி....41

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

41. மனம் என்பது மாயையா?

மனவியல் அறிஞர் மேகநாதன் மேடையேறும் போது படு உற்சாகத்தோடு காணப்பட்டார். 'உலகம் பிறந்தது எனக்காக' என்று உரத்த குரலில் முழக்கமிடுவது போலிருந்தது அவரது ஒவ்வொரு அசைவும். மைக்கைச் சரிபடுத்திக்கொண்டு அவர் பேச ஆரம்பிக்கையில் எல்லோரிடமும் அவரது உற்சாக்ம் தொற்றிக்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். லேசாகத் தொண்டையைச் செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார் அவர்.

" 'இரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம் கேட்கின்றேன்..' என்பார் கவியரசர் கண்ணதாசன். இரண்டு மட்டுமல்லை; ஒவ்வொருவருக்கும் மேலும் கூடுதலாக ஒரு மனமும் சேர்த்து மூன்று மனமே இருகின்றன என்பது அதிசயமான ஓர் உண்மை.



மனம் என்பது உடலின் ஓர் உறுப்பு அல்ல. பரிசோதனைகளிலோ அல்லது பார்வையிலோ தட்டுபடும் ஒரு உறுப்பாய் இருப்பின் உயிரியல் அறிஞர்
உலகநாதன் அவர்கள் அந்த மனத்தைப் பற்றிய நிறைய தகவல்களையும் அதன் அமைப்பு பற்றிய விவரங்களையும் சொல்லியிருப்பார்.


"மனம் என்பது உருவமில்லாத அருவமா அதாவது கண்ணுக்குப் புலப்படாமலிருக்கும் உருவமற்ற ஒரு வஸ்துவா என்றால் இதில் எதுவுமில்லை.


"கண் என்கிற உறுப்பு இருப்பதினால் பார்ப்பது என்கிற செயலும், காது என்கிற உறுப்பினால் கேட்பதான ஒரு காரியமும், மூக்கு இருப்பதினால் நுகர்வது என்கிற செயலும் செயலாற்ற முடிவதாகச் சொல்கிறோம். இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் காரியார்த்தமாக ஒரு விளக்கம் கொடுக்கலாம்.


"பொதுவாக்ச் சொல்கிற வழக்கின்படி நினைத்தல், சிந்தித்தல் போன்ற செயல்களை மனத்தின் செயல்பாடுகளாகச் சொல்கிறோம். உயிரியல் சாத்திரப்படி மனம் என்கிற ஒரு உறுப்பு உடலின் உள்ளேயோ அல்லது வெளியேயோ இல்லாவிடினும், 'நினைத்தல்' 'சிந்தித்தல்' போன்றவற்றை மனத்தின் வேலையாகச் சொல்கிறோம்.


"தமிழில் 'மனம்' என்றும், ஆங்கிலத்தில் 'MIND' என்றும் புறப்பார்வைக்குத் தட்டுப்படாத ஒரு உறுப்பிற்குப் பெயரும் கொடுத்திருக்கிறோம்! 'MIND' என்று தனிப்பெயர் கொடுத்து அழைத்தாலும், 'MIND'ன் செயல்களான 'சிந்தித்தல்' 'நினைத்தல்' போனற காரியங்களை ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடாக உயிரியல் விஞ்ஞானத்தில் கொண்டுள்ளோம்.



இந்த இடத்தில், "நான் சொல்வது சரிதானே?" என்று நிச்சயித்துக் கொள்ளும் நோக்கில் உளவியல் பேராசிரியர் உலகநாதனை நோக்கி, மனவியல் அறிஞர் மேகநாதன் கேட்க, "மிகவும் சரியே" என்றார் உலகநாதன்.


"மிக்க நன்றி---" என்று அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார் மேகநாதன்.


"மூளையின் மூன்று பகுதிகளைப் பற்றி உலகநாதன் அவர்கள் குறிப்புகள் கொடுக்கும் பொழுது மிக உன்னிப்பாக உங்களைப் போலவே நானும் கவனித்துக் கொண்டிருந்தேன். மூளையைக் குறிப்பிடும் வார்த்தையான 'CEREBELLUM' என்கிற சொல் இலத்தின் மொழிச் சொல். 'CEREBELLUM' என்று அழைக்கப்படுகின்ற சிறுமூளை குறித்தும், 'MEDULLA OBLONGATA' என்கிற முகுளத்தைப் பற்றியும் உயிரியல் அறிஞர் உலகநாதன் அவர்கள் நிறையவே குறிப்பிட்டார்கள்.


"தறியில் நெயத மாதிரி பூரா உடம்பிலும் நரம்புக்கற்றைகள் வேண்டுகிற இடங்களில் விதம்விதமாக நீண்டும், கிளைப்பரப்பியும், முடிச்சிட்டும் விரவிக்கிடக்கின்றன. இந்த நரம்புப் போக்குகளின் ஒருபுற முனை உடல் உறுப்புகளைச் சுற்றி பிணைக்கப்பட்டிருக்கின்றன என்றால் அவற்றின் மறுமுனை மூளையோடு தொடர்பாய் இருக்கிறது. இது மனமும் உடலும் 'தேமே'னென்று இருக்கும் நிலை.

"ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்று நினைத்துப் பாருங்கள். நாம் பயணிக்க வேண்டிய பேருந்து வந்ததும் பாய்ந்து செல்வது செயல்படும் நிலை. சும்மா இருந்தவனை செயல்பட வைத்த சக்தி எது?..

"தேவையான பேருந்தின் இலக்கத்தைப் பார்த்தது கண்கள். பார்த்ததைப் படித்து மூளைக்குத் தெரிவித்ததை கூட விட்டுவிடுங்கள், இதுதான் பயணிக்க வேண்டிய பேருந்து என்று 'நினைவில்' உறைக்க வைத்த இந்த 'நினைவை' மனம் என்று சொல்லலாமா?..

"போட்டியில் வென்று பெற்ற பரிசுக் கோப்பையை பெருமையுடன் காட்டிய மகனைத் தடவிக்கொடுத்து மகிழ்ந்தது, 'மனத்தின் மகிழ்வு' என்று கொள்ளலாமா?..


"துன்பத்தில் துவண்டு போன அவலத்தை, அந்த அவஸ்த்தையை மனத்தின் பரிதவிப்பு என்று புரிந்து கொள்ளலாமா?...

"உயிரியலாளர்கள் எவ்வளவோ சொல்லலாம்.. தண்டுவட, கபால நரம்புகளில் உணர்வு இழைகள், தண்டுவட--தலாமஸ் வழிப்போக்கு, பசிகுலஸ் கிரசிலிஸ் மற்றும் பசிகுலஸ க்யூனியேடஸ் அங்கிருக்கும் நூக்ளியஸ்கள் என்று உடம்புக்குள்ளே ஏகப்பட்ட சமாசாரங்கள் இருக்கின்றன.

"ஆயிரம் இருந்தும், உடம்புக்குள் தட்டுப்படும் இவற்றையெல்லாம் இயக்குவது 'மனம்' என்னும் மாயசக்தியா?.. இல்லை, அப்படி ஒன்று இருப்பதாக 'நினைத்து'க்கொள்வதே மாயையா?..

"இந்த அடிப்படை கேள்விகள்தாம் மனவியலைப் படித்துக் கற்க வேண்டும் என்னும் அடங்கா ஆவலை என்னுள் ஏற்படுத்தியது. அந்த ஆவலின் தூண்டுதலின் பிரம்பிப்பில் நான் பரவசப்பட்டதையெல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன்" என்று அவையை ஒருமுறை சுற்றிப்பார்த்து மேலும் தொடர யத்தனித்தார் மனவியல் அறிஞர் மேகநாதன்.

(தேடல் தொடரும்)


10 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

தமிழில் 'மனம்' என்றும், ஆங்கிலத்தில் 'MIND' என்றும் புறப்பார்வைக்குத் தட்டுப்படாத ஒரு உறுப்பிற்குப் பெயரும் கொடுத்திருக்கிறோம்! 'MIND' என்று தனிப்பெயர் கொடுத்து அழைத்தாலும், 'MIND'ன் செயல்களான 'சிந்தித்தல்' 'நினைத்தல்' போனற காரியங்களை ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடாக உயிரியல் விஞ்ஞானத்தில் கொண்டுள்ளோம்.
====
இதுவரைக்கும் மைண்ட் அப்படீங்கற வார்த்தைக்கு புத்தி அப்படின்னூதான் விளக்கம் புரிஞ்சுண்டிருக்கேன்... இப்போ மனம்னு ஒரு விளக்கம் வருது... போகப்போக புரியுமோ...

ஜீவி said...

வாருங்கள், கிருத்திகா!

'MIND' என்கிற ஆங்கில வார்த்தைக்கு
பல அர்த்தங்கள் உண்டு. Ajective
ஆகவும் சில இடங்களில் உபயோகப்
படுத்தப்படுகிறது. மனவியல் அறிஞர்
மேகநாதன் எந்த அர்த்தத்தில் இந்த'MIND'யை 'மனம்' என்று குறிப்பிடுகிறார் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிற மாதிரி போகப்போகப்
பார்க்கலாம்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

கபீரன்பன் said...

///"மனம் என்பது உருவமில்லாத அருவமா அதாவது கண்ணுக்குப் புலப்படாமலிருக்கும் உருவமற்ற ஒரு வஸ்துவா என்றால் இதில் எதுவுமில்லை///

கண்ணுக்கு புலப்படாமல் இருக்கும் உருவமற்ற வஸ்து இல்லை என்றால்... வேறென்ன ?

அதாவது, ”அதன் செயலாற்றலை காணமுடிகிறது ஆனால் எங்கிருந்து செயல்படுகிறது என்பது தெரியாது “ என்று பொருள் கொள்ளலாமோ :)

///இதுவரைக்கும் மைண்ட் அப்படீங்கற வார்த்தைக்கு புத்தி அப்படின்னூதான் விளக்கம் புரிஞ்சுண்டிருக்கேன்... இப்போ மனம்னு ஒரு விளக்கம் வருது ///

ஆங்கிலத்தில் மனம் என்பதற்கு சரியான வார்த்தை இல்லை என்றே கருதுகிறேன்.

ஜீவி said...

கபீரன்பன் said...
///"மனம் என்பது உருவமில்லாத அருவமா அதாவது கண்ணுக்குப் புலப்படாமலிருக்கும் உருவமற்ற ஒரு வஸ்துவா என்றால் இதில் எதுவுமில்லை///

//கண்ணுக்கு புலப்படாமல் இருக்கும் உருவமற்ற வஸ்து இல்லை என்றால்... வேறென்ன ?

அதாவது, ”அதன் செயலாற்றலை காணமுடிகிறது ஆனால் எங்கிருந்து செயல்படுகிறது என்பது தெரியாது “ என்று பொருள் கொள்ளலாமோ :) //

'அதன் செயலாற்றலைக் காணமுடிகிறது; ஆனால் எங்கிருந்து
செயல்படுகிறது என்பது தெரியாது' என்று பொருள் கொள்ளலாமோ என்று நீங்கள் கேட்டிருப்பது தான் சரி.
உருவம் தெரியாததால் தான் உயிரியல்
சாத்திரம் திகைக்கிறது. ஆனால் முந்தைய அத்தியாயங்களில் சொன்ன மாதிரி மூளையிலிருக்கும் நியூரோன்களின் வேலை இது என்பது
உயிரியல் விஞ்ஞானத்தின் இப்போதைய முடிவு. இதன் தொடர்ச்சியான வரும் அத்தியாயத்தில் இது பற்றிய தொடர்ச்சியான விளக்கங்கள் வருகிறது.

மனம் என்பது மட்டும் கண்ணுக்குத் தெரிகிற ஓர் உறுப்பாய் உடலுள் இருந்திருப்பின், அதுபற்றிய கோளாறுகளுக்கு ஆப்ரேஷன் அது இது என்று தூள் கிளப்பியிருப்பார்கள்!

விஞ்ஞானத்தில் ஏற்ப்பட்டிருக்கும் இந்தப் பள்ளத்தை சமனப்படுத்துவதற்குத் தான், 'மனவியல் கலை'யையும் விஞ்ஞானமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய
பக்குவமும் சமரசமும் ஓரளவு இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஜீவி said...

///இதுவரைக்கும் மைண்ட் அப்படீங்கற வார்த்தைக்கு புத்தி அப்படின்னூதான் விளக்கம் புரிஞ்சுண்டிருக்கேன்... இப்போ மனம்னு ஒரு விளக்கம் வருது ///

//ஆங்கிலத்தில் மனம் என்பதற்கு சரியான வார்த்தை இல்லை என்றே கருதுகிறேன்.//

மனம் என்னும் சொல்லுக்கு நேரடியாக அர்த்தம் கொடுக்கிற சரியான வார்த்தை ஆங்கிலத்தில் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அந்த சொல்லின் விளைவுகளான, செயல்பாடுகளான
சிந்தித்தல், நினைத்தல், கோபித்தல், புரிந்து கொள்ளல், கற்பனையில் ஆழ்தல், கனவு காணல்
போன்ற செயல்களைக் குறிக்கின்ற வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்கின்றனவே.. அவற்றை வைத்து
அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்!

மனத்தின் மூன்று செயல்பாட்டுப் பிரிவுகளைப் பற்றி ஆங்கிலத்தில் வார்த்தை உள்ளதால்,
மனத்தையும் 'மைண்ட்' என்றே கொண்டேன்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, கபீரன்ப!

Shakthiprabha (Prabha Sridhar) said...

மனத்தை அடக்கியவனே இறையின் அருகில் செல்கிறான். அலைபாயும் வஸ்து மனம்.

மனம் = mind
புத்தி = intellect

எனக்குத் தெரிந்தவரை.

மனம் கண்டபடி எதைவேண்டுமானலும் நினைக்கும். அதை புத்தியைக் கொண்டு கடிவாளமிடவேண்டும் என்று படித்த நினைவு.

மேலும் படிக்க காத்திருக்கிறேன்.

அன்புடன்,
ஷக்தி

ஜீவி said...

Shakthiprabha said...

//மனத்தை அடக்கியவனே இறையின் அருகில் செல்கிறான். அலைபாயும் வஸ்து மனம்.

மனம் = mind
புத்தி = intellect

எனக்குத் தெரிந்தவரை.//

இறைவனின் அற்புத சிருஷ்டி மனம்.
நல்ல மனம் அனிச்சம் பூப்போன்றது.
மோப்ப, முகம் திரிந்து நோக்கக் குழையும். ஒலிபோல் உருவமற்றது;
ஓராயிரம் அற்புதங்களைக் கொண்டது.

மனம்-புத்தி இரண்டும் ஒன்றிற்கொன்று முரண்டு பிடிக்காமல், இரண்டிற்குமான வித்தியாசமும் வேறுபாடும் இழந்து, இரட்டை மாடுகள் எனப்பூட்டிச் சவாரி செய்யும் பக்குவம் கிடைப்பது பாக்கியம்.

இந்தத் தொடரின் அடிநாதமானச் செய்தியே அதுதானோ என்று கூட எனக்குப் படுகிறது.

வருகைக்கு நன்றி, சக்திபிரபா!

ஜீவி said...

//மனம் கண்டபடி எதைவேண்டுமானலும் நினைக்கும். அதை புத்தியைக் கொண்டு கடிவாளமிடவேண்டும் என்று படித்த நினைவு.

மேலும் படிக்க காத்திருக்கிறேன்.//

முந்தைய அத்தியாயங்களில் உபநிஷத
கருத்துக்களின் அடிப்படையில் மனம்-புத்தி இரண்டு பற்றியும் ஓரளவு காணக்கிடைக்கிறது. விஸ்தாரமாக இரண்டு பற்றியும் விவரமாக நிறைய எழுத வேண்டும். செய்யலாம்.

தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

Kavinaya said...

//மனம் = mind
புத்தி = intellect

எனக்குத் தெரிந்தவரை.//

இதே புரிதல்தான் எனக்கும். "மனதை அடக்க நினைத்தால் திமிறும், அறிய நினைத்தால் அடங்கும்" என்று படித்தது நினைவு வருகிறது.

ஜீவி said...

கவிநயா said...

//மனம் = mind
புத்தி = intellect

எனக்குத் தெரிந்தவரை.//

//இதே புரிதல்தான் எனக்கும். "மனதை அடக்க நினைத்தால் திமிறும், அறிய நினைத்தால் அடங்கும்" என்று படித்தது நினைவு வருகிறது.//

'மனம்' தொடர்ந்து விளக்க முயற்சிக்கிறேன். அதுவே அது பற்றி அறிதலாகும். பிறகு உங்கள் கருத்தைச் சொல்ல விழைகிறேன்.

கருத்தைப் பதிந்தமைக்கு மிக்க நன்றி.

Related Posts with Thumbnails