அத்தியாயம்--1
மாடிக்கு வந்து ரொம்ப நேரமாச்சு. அந்தி சாயறத்துக்குத்தான் காத்திருக்கற மாதிரி இந்த முன்னிரவு நேரத்லே சாப்பிட்டானதும் மொட்டை மாடிக்கு வந்து காத்தாட உட்காந்துக்கறது இப்பல்லாம் ஒரு பழக்கமாவே ஆகிப் போச்சு.
மாடிக்கு வந்து ரொம்ப நேரமாச்சு. அந்தி சாயறத்துக்குத்தான் காத்திருக்கற மாதிரி இந்த முன்னிரவு நேரத்லே சாப்பிட்டானதும் மொட்டை மாடிக்கு வந்து காத்தாட உட்காந்துக்கறது இப்பல்லாம் ஒரு பழக்கமாவே ஆகிப் போச்சு.
சுசிலா தான் கைப்பிடிச்சு படியேத்தி விட்டுட்டுப் போனா. சாஞ்சு படுக்க ஈஸிச்சேர் செளகரியமா இருந்தாலும், வண்டாக் கொடைஞ்சு மூளையக் கசக்கின சிந்தனைப்பாரம் முழுசும் நெஞ்சில ஏறி அமர்ந்த மாதிரி கனத்தது. சில்லுன்னு சிலுசிலுப்புக் காத்து தேகத்திலே பட்டதும் தான் தெரிஞ்சது. இத்தன நேரம் முகம் பூரா வேத்துப் போயிடுத்து போல; மேல்த்துண்டால துடைச்சிண்ட போது, மனசில ஆற்றாமையின் கைப்பு கூடி அமிழ்ந்து கனத்தது.
பெண்ணுக்குத் துணை ஆண்னு ஊர் கூடித் திருமணம் செஞ்சு வைச்ச கத மாறிப் போய், நன்னா ராஜாவாட்டம் இருந்தவன் பார்வை பறிபோய் இப்போ புருஷனுக்கு துணை மனைவியாப் போன அவலத்தை எண்ணி நெட்டுயிருப்பு தான் மிஞ்சிப் போனது.
கீழ் ஹாலுக்குப் பக்கத்லே தான் பூஜை ரூம். ஒலிக்கு கால் கை இல்லேனாலும் ரெக்கை உண்டு போலருக்கு. கீழே சுசீலா பாடறது காற்றலைகள்லே தவழ்ந்து தவழ்ந்து இங்கேத் தெளிவா கேக்கறது. அவளுக்குத் தான் என்ன திவ்யமான குரல் வளம்?.. பிசிறில்லாத என்ன அழகு?.. குழைவு?..
மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல என்னையே மறந்து ஈஸிச்சேரோட இரு கைப்பிடிலேயும் காலை நீட்டிப் போட்டுண்டு சாயறேன். இமைகள் ரெண்டையும் லேசா மூடிக்கறேன். இதென்ன அசட்டுத்தனம்?.. இமைகள மூடினாலும், மூடாட்டாலும் ரெண்டும் ஒண்ணு தானேன்னு சமயத்திலே தெரியறதில்லே..
அந்த பைரவியும் தோடியும் குழைஞ்ச அழகு தான் என்ன?.. 'ஜானகி ரமண.. மாமவ பட்டாபி ராமா'வில் ஆரம்பிச்சு 'யாரோ இவர் யாரோ'ன்னு அருணாசல கவிராயரின் கேள்விக் கணைகளில் நிதானமா சஞ்சரிஞ்சு, தீஷிதரரோட 'ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே'லே லயிச்சதும், கோபால கிருஷ்ண பாரதியின் 'சபாபதிக்கு வேறு தெய்வம்' சரியான காலப்பிரமாணத்தில பொருத்தமான சங்கதிகளோட அற்புதமா சுசீலாவின் குரல்ல குழைஞ்சு வந்தது. அது என்ன மாயமோ தெரியலே. திருஞான சம்பந்தரின் திருவெண்காட்டுப் பதிகம் 'கண் காட்டும் நுதலானும்' கரகரப்பிரியாலே கர்ணாமிர்தமாய்ப் பொழிஞ்ச போது மனசு இலேசாகி ஆகாசத்லே மெதந்தது.
அந்த நாலு பேர் சொன்னதெல்லாம் 'பொய் பொய்'ன்னு உள்ளம் சப்திக்கிறது. இவளை மனைவியாய் அடைய நான் எவ்வளவு பாக்கியசாலின்னு மனசு குதியாட்டம் போட்றது. அப்படியே கீழே போய் அவளை அணைச்சிண்டு, அவளோட அழகான கைகளுக்குள்ளே என்னோட கையைக் கோர்த்திண்டு, விரல் வருடி, ஆசை தீர அவள் முகத்தை விழுங்குவது போல் பார்த்து--- பார்ப்பதா?.. அது எப்படி என்னால் சாத்தியமாகும்? அது எப்படி என்னால் இயலும்?ங்கற திகைப்பு ஆளையே விழுங்கற மாதிரி மிரட்டியது.
பார்த்தவன் தான். இப்போ பார்க்க முடியாதே? 'இப்படியா பத்திரகாளி மாதிரி இட்டுக்கறது'ன்னு பொய்க் கோபத்தோட கடிஞ்சிண்டு, அவ நெத்திக் குங்குமத்தை அளவா சரி செஞ்சவன் தான். இப்போ முடியாதே?.. 'ஒண்ணு, ரெண்டு, மூணூ'ன்னு 'அடேடே முப்பத்திரண்டு இருக்கே'ன்னு அண்டப்புளுகு ஆகாசப் புளுகுடன் அவள் பற்களை எண்ணினன் தான். இப்போ அப்படி என்னாலே விளையாட முடியாதே!
விளையாடறத்துக்கும் இப்போ மனசு ஒத்துக்கலே. இதுக்கெல்லாம் காரணம், 'அந்த நாலு பேர்' சபைலே பேசின அந்த நாலு வார்த்தைகளோட தீச்சுடல் தான். சுசீலாவுக்கு இது தெரியவந்தா தாங்குவாளான்னு பயமா இருக்கு.. என்ன காரணம் கொண்டும் இது அவளோட காதுக்கு வரக்கூடாதெங்கற உறுதி நெஞ்சில் கூடித்து. கேட்டதெல்லாம் என்னோடையே போகட்டுங்கறங்கற உள்விழுங்கல் மனசிலே படர்ந்த உறுதியாச்சு.. இந்த உறுதி வந்ததும் தான் அதைக் கேட்ட பின்னாடியும் என்னாலே செளஜன்யமாய் உக்காந்து முழுக் கச்சேரியும் ரசிச்சு அனுபவிக்க முடிஞ்சதுன்னு இப்போத் தோண்றது.
உடம்பு உறுப்பின் ஒண்ணோட செயல்பாடு இல்லாம போனாலே இன்னொண்னுக்கு கூடுதல் சக்தி கிடைக்கும் போல. குருட்டு விழிகள் சாஸ்வதமாப் போன அந்தகாரத்தில் அமிழ்ந்த போது செவிப் புலன்கள் கூர்மையடைஞ்சது நன்னாத் தெரியறது. 'சிலுங் சிலுங்'ன்னு படியேறி வந்த கொலுசு சத்தம் பக்கத்திலே வந்ததும் நின்னு போய், 'பால் இந்தாங்கோ.." ங்கற குரல் கேட்டது--- சுசீலா தான்.
அந்தக் குரலில் இருந்த குழைவு மனசுக்கு இதமா இருந்தது. தேவிக்குப் பிரசாதம் பண்ணின பால். சுசீலா என் கைப்பற்றிக் கொடுத்ததை வாங்கிக் குடிச்சேன்..
அம்மனுக்கு வழிபட்டப் பாலை விரல்களில் ஒத்தியெடுத்து மூளியான என் கண் இமைகளின் மேலே சுசீலா வைச்சிருக்கணும். 'ஜில்'ன்னு இருந்தது. உடல் சிலிர்த்தது. ஜில்லிட்டது அவள் விரலா, இல்லை, பாலா?---
"இதென்ன பச்சைக் குழந்தையாட்டம் அடம்?.. எவ்வளவு நேரம் இங்கேயே ஒக்காந்திருக்கறதா உத்தேசம்?.. பனி கொட்ட ஆரம்பிச்சாச்சு. கீழே போலாம், வாங்கோ.."
"----------------------"
"என்ன, போலாமா?"
நான் பதிலே பேசலே. பேசினால் தப்பித் தவறி ஏதாவது சொல்ல நேர்ந்திடுமோங் கற பயம் மனசை வாட்டித்து. இதுவரை சுசீலா என்னிடமோ இல்லை சுசீலாவிடம் நானோ எதையும் மறைச்சுப் பழக்க்கப்படாத குணம் ஆளை அசக்கிப் பாத்தது. அந்த அசக்கலின் அழுத்தத்தில் தனிமைலே இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இந்த மொட்டை மாடியிலேயே உட்கார்ந்திருக்கணும் போலத் தோணித்து.
கொஞ்ச நேரம் கழிச்சு, "என்ன, போலாமா?"ன்னு கேட்டதையே மறுபடியும் சுசீலா கேட்டது உரைத்தது. அவளுக்கும் என்ன பேசறதுன்னு தெரிலே போலிருக்கு. அல்லது என்னை மாதிரியே பேசறத்துக்கும் ஒண்ணுமில்லாம இருக்கலாம். இல்லே, ஆற்றாமையின் பாஷையே மெளனம் தானோ?.. இப்படி பேசாம இருக்கறது தான் மனசுக்கு பிடிச்சும் இருக்கு. மாத்தி மாத்தி ஒருத்தருக்கொருத்தர் பேசறதை விட இந்த மாதிரி இருந்துட்டுப் போறது எவ்வளவோ தேவலாம்.
"என்ன, நா மனுஷியாத் தெரியலையா? காதுலே விழலே?"-- உரிமை குழைஞ்சது.
பிடிக்காததைச் செய்யற ஒரு வீம்புத்தனத்தோட உள்ளேந்து எழுந்த ஒரு குரல் பிடிக்கு அடங்காம ஓலமிட்டது.
"வாயிலே என்ன கொழுக்கட்டையா? பேசினா முத்தா உதிர்ந்திடும்?"
"ஆமாம், முத்துதான் உதிர்ந்திடும்"ன்னு அடித்தொண்டையில் கொஞ்சம் அதிர்ந்து வெளிப்பட்ட வார்த்தைகள் என்னோடது மாதிரியே தெரியலே "மனுஷனைக் கொஞ்சம் நிம்மதியா விடமாட்டே?"ன்னு சீறின சீறலில் அவளை மனம் நோகடிக்கக் கூடாதுங்கற பரிதாபமே முழுசா என்னை வியாபிச்சிருந்தது..
இது நாள் வரை நா இப்படிக் கத்திப் பேசினது கிடையாது. அதனால் எல்லாம் உள்ளுக்கு ஒட்டாத வெளிக்குத்தான்னு எனக்கு நன்னா தெரிஞ்சது. ஆனா சுசீலா பயந்து போயிட்டாள்ங்கறதை என்னாலே யூகிக்க முடிஞ்சது. ஒரே நிமிஷத்லே பயம் விசும்பலா மாறி, அடுத்த நிமிஷம் 'ஓ'ங்கற குமுறலோட அவளோட பூ முகம் என் மடிலே புதைக்கப்படும்னு நா எதிர்ப்பார்க்கவே இல்லை.
பூப்பந்தைக் கட்டிண்ட மாதிரி இடுப்புப் பிரதேசத்தில் மெத்துன்னு தோணி அடுத்த வினாடியே இலேசாகிப் போனது. நாங்கள் சாரையும் சர்ப்பமும் போலக் கொஞ்சிக் குலவின நாட்கள்லேலாம்-- ஒருவித மனசுக்குப் புடிச்ச வெதுவெதுப்பு தான் உடம்பைக் கதகதக்க வைக்கும். அந்த வெப்பம் இப்போ இல்லே; படபடப்பிலே தான் உடம்பு என்ன செய்றதுன்னு தெரியாமல் திகைச்சது...
'நீங்க--நீங்களே-- இப்படி என் மேலே எரிஞ்சு விழுந்தா நா என்ன செய்வேன்?.. நா என்ன தப்பு செஞ்சேன்?"ன்னு குழந்தை மாதிரி சுசீலா கேவறா.
எனக்கு என்ன பேசறதுனே தெரியலே; நானும் அவளுமேன்னு பழக்கப்பட்டுட்ட பந்தத்தில அரக்கன் மாதிரி இப்படி நடந்து கொள்ளலாமான்னு என் மனசே என்னை இடிச்சுக் காட்டினது. எங்க ரெண்டுபேருக்குமே சொந்தமான உலகத்தில வெளிமனுஷாளின் பேச்சும் நடவடிக்கைகளும் புகுந்து கொள்ள எப்படி நா அனுமதிச்சேங்கற திகைப்பு என்னைச் சுட்டது. யாரோ எதுவோ சொன்னது பாதிக்கற அளவுக்கு அவ்வளவு பலஹீனமானதா எங்கள் உள்ளப் பிணைப்புன்னு உள்ளம் சமயம் பார்த்து இடிச்சுக் காட்டினது. 'வாரி அணைச்சுக் கொள்ற தருணம் இது'ன்னு உணர்வில்ஜோதி பத்திண்டதும் அவளைத் தூக்கி ஆசுவாசப்படுத்த கை நிமிர்ந்த பொழுது, மடியில சுமந்திண்டிருந்த கனம் குறைஞ்சது. தலையை நிமித்தி மடிலேந்து தூக்கிண்டுட்டாங்கறதை உணர்ந்தேன். பொட்டுன்னு கையிலே ஒரு துளி சூடான ஜலம் விழுந்த உணர்ச்சி. கண்ணீரோ?..
அந்தக் காலத்தில்-- அந்தக் காலத்தில் என்ன அந்தக் காலத்தில்-- ஒரு மாசத்துக்கு முன்னாடி கூட அவள் ஆனந்தக் கண்ணீர் விடறதை மனசாலே பாத்து நெகிழ்ந்திருக்கேன். பச்சை மரத்திலே ஆணியாலே கோடிழுத்த மாதிரி
இன்னும் பசுமையா அது நெனைவிலே நிக்கறது.
"சுசீ!.. இன்னும் டிரஸ் முடிஞ்சபாடில்லையா? கச்சேரிக்கு நேரமாகலே.. ஹாரன் சப்தம் கேட்டதே.. வாசல்லே கார் கூட வந்தாச்சு போலிருக்கு.."ன்னு சொல்லிண்டே நாற்காலிலேந்து தட்டுத் தடுமாறி எழுந்திருந்தேன்.
அடுத்த நிமிஷம் நெருப்பை மிதிச்ச மாதிரி 'வீல்'னு வீரிட்ட சுசீலாவோடக் குரலைத் தான் கேட்டேன். "என்ன சுசீ என்ன?"ன்னு தடுமாறியவனை, "நல்லவேளை"ன்னு ஆசுவாசப்படுத்திண்ட அவள் குரலில் அமைதி தெரிந்தது.
"என்ன-- என்ன, சுசீலா?"
"ஒண்ணுமில்லே.. நீங்க எழுந்திருந்தப்போ, ஒங்க ஒடம்பு கொஞ்சம் ஆட்டம் கண்டுட்டது. எங்கே விழுந்திடுவேளோன்னு பயந்து போய் கத்திட்டேன். மன்னிச்சிக்கோங்கோ..."
"சுசீலா.."ன்னு வாத்சல்யத்தோடக் கூப்பிட்டேன், அடித்தொண்டை தடுமாற.
"உம்?.. என்ன?.."
"இங்கே வாயேன்."
"உம்.. என்ன விஷயம்?" அவள் நெருக்கத்தோட அருகாமையை நா உணர்லே. அவள் அழகின் ஒவ்வொரு அணுவையும் அணுஅணுவா ரசிச்சிட்டு இப்போ அவளைக் கடைக்கண்ணாலே கூட பாக்க சக்தியில்லாத நான் எத்தகைய பெரும்பாவின்னு நெனைச்சிண்டேன்.
"இங்கே பக்கத்திலே வாயேன்.. சொல்றேன்."
சுசீலா வந்தா. கையைத்தூக்கி வெத்து வெளியைத் துழாவினவன், அவளோட தாமரை முகம் கையிலே தட்டுப்பட்டதும் ஆதரவோடத் தாங்கிண்டேன்.
சலவைக்கல்லைத் தடவின மாதிரியான வழுவழுப்பை உணர்ந்த ஸ்பரிசம் தொட்ட விரல்கள்ல பரவி என் தேகத்துக்கும் தாவித்து.
"சுசீ..."
"க்குங்."
"சுசீ! உண்மையிலேயே நான் ரொம்பக் கொடுமைக்காரன். மகாபாவி. உன்னை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தறேன்?.. காலைலே படுக்கைலேந்து எழுந்திருக்கறதிலேந்து, ராத்திரி படுக்கையை உதறிப் போடறது வரைக்கும்..."
"உஷ்!"ன்னு அவளோட சீறலைத் தொடர்ந்து என் வாய் அவள் அழகுக் கையாலேயே பொத்தப்பட்டது.
"அப்படியெல்லாம் இனிமே பேசாதீங்கோ.."
"பேசினா?"
"பேசினாவா-- பேசினாவா?.. அப்புறம்"னு குரல் தழுதழுக்க தடுமாறிய அவள் கன்னத்தைத் தொட்டவுடன் சடாரென்று பின் வாங்கினேன்.
"என்ன சுசீலா, அழறியா என்ன?"
"இல்லையே..." அவள் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டியிருப்பாள் போலும். காது ஜிமிக்கிகள் சலசலத்தன.
"இல்லே.. பொய் சொல்றே.. கன்னத்திலே ஜலம்."
"இல்லே.. இது ஆனந்தக் கண்ணீர்! ஒவ்வொரு கச்சேரிக்குப் புறப்படறத்தேயும் என்னைக் கட்டுப்படுத்திக்க முடியலே.. உங்க பரிவையும் பாசத்தையும் நெனைச்சு.."
"நான் சொல்ல வேண்டியதை நீ சொல்றையா?"
இப்படிப்பட்ட நினைப்புகளெல்லாம் அந்தந்த சமயம், அதுக்கப்புறம்ன்னு நெனைச்சு நெனைச்சு சந்தோஷப்படடது. ஆனால், இப்பவோ....
"என்ன, ஒரேயடியா தியானத்லே ஆழ்ந்துட்டேள்?.. பனி கொட்டறதுன்னு கிடந்து அடிச்சிக்கறேனே, காதிலே விழலே?"
எண்ணச் சுழலிலிருந்து விடுபட்டவன், "என்ன சொல்றே?"ங்கறேன்.
"கீழே வாங்கோ.."
"இல்லே. நான் வரலே."
"ஏன்?"
"எனக்கு இதான் பிடிச்சிருக்கு."
"எது?"
"இங்கே-- இப்படியே உக்காந்துக்கத்தான்.."
"ஏன் இன்னிக்கு இப்படித் திடீர்னு மாறிப் போயிட்டேள்?"
சுசீலா இப்படி வெளிப்பட கேட்கற அளவுக்கு என்னை மீறி அவங்க சொன்னது என்னை பாதிச்சிட்ட்டதோன்னு நடுங்கித் துடிச்சுப் போயிட்டேன். பாவம் இவள். இவள் மட்டுமல்ல, பெண்களே பாவம் தான். இன்னொருவரைச் சார்ந்திருக்கிற சார்புப் பாவம். அயோக்கியனோ, அப்பாவியோ, முடவனோ, குருடனோ இன்னொருவரைச் சார்ந்திருக்கிற தலைவிதி.
"வர்றேளா?.. கீழே போலாம். வழக்கமா விமரிசனம் பண்ணி துளைச்செடுத்துடுவேளே?.. இன்னிக்குக் கச்சேரி எப்படி இருந்தது? அதுபத்தி சொல்லவே இல்லையே?" ன்னு ஆதுரத்துடன் என் கை பற்றினாள்.
மாட்டிக் கொள்ள தூண்டில் நெருங்கி விட்டதே போன்று மனசு படபடத்தது. அந்த படபடப்பைப் புறந்தள்ளி, "அந்த தாயே யசோதவில் நீ பண்ணின நிரவல் பிரமாதம்போ.." என்று சொல்லி அவள் பற்றின கையை குழந்தை போல் நழுவ விடப் பயந்து இறுகப் பற்றினேன்.
"முன்பனி கொட்டறது.. உங்களுக்கு ஆகாது.. கீழே போய் பேசலாம்.." என்று சுசீலா எழுந்திருந்த போது கொலுசு சிணுங்கியது.
அவள் கைபற்றி மாடிப்படிகளில் மெதுவே இறங்கினேன்.
(இன்னும் வரும்)
10 comments:
அருமையான ஆரம்பம்.இதைப் படிக்கும்போது எனக்கு என் சித்தப்பாவின் நினைவு வந்தது.அவர் சொன்ன ஒரு வக்கியம் மறக்க முடியாதது. “என் கண் பார்வை போன பிறகுதான் லட்சுமி கடாட்சம் கிடைத்தது “ என்பார் மேலும் அவராகவே எல்லாப் பணிகளயும் செய்யும் தேர்ச்சி பெற்றிருந்தாலும்,உணவு மட்டும் சாப்பிடுவது மனைவி பேரில் இருக்கும் நம்பிக்கையால்தான் என்பார்.கண்பார்வை இல்லாவிட்டால் எல்லா ஓரியெண்டேஷனும் போய்விடும். தொடர்கிறேன்.
அன்னியோன்ய தம்பதியரின் அன்பு வாழ்க்கையில் நடக்கும் ஒரு மௌனப் போராட்டத்தின் தொடக்கம் போலும். வர்ணனைகளைப் பார்க்கும் போது நடுத்தர வயதாயகத் தோன்றுகிறது. கண் போன காரணம், சந்தோஷத்தைக் கெடுக்கும் சந்தேகக் கோடு ஏன் என்பதை அறிய அடுத்த பாகத்துக்குக் காத்திருக்கிறேன்!
பார்வை என்ற தலைப்புக்கும் காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வெறும் கண்பார்வை என்பதற்காக வைக்கப் பட்ட தலைப்பாகத் தெரியவில்லை! என் கெஸ் இது!
திருஞான சம்பந்தரின் திருவெண்காட்டுப் பதிகம் 'கண் காட்டும் நுதலானும்' கரகரப்பிரியாலே கர்ணாமிர்தமாய்ப் பொழிஞ்ச போது மனசு இலேசாகி ஆகாசத்லே மெதந்தது.//
திருவெண்காட்டுப் பதிகம் ‘கண்காட்டும் நுதலானும் நான் அடிக்கடி பாடுவது.
7வருடங்கள் அங்கு இருந்ததால் அந்த இறைவன் பாட்டை மறக்க முடியாது.
குழந்தைவரம் வேண்டுபவர்களுக்கு நான் எழுதிக் கொடுக்கும் பாட்டு.
கதை அருமை .
//இமைகள் ரெண்டையும் லேசா மூடிக்கறேன். இதென்ன அசட்டுத்தனம்?.. இமைகள மூடினாலும், மூடாட்டாலும் ரெண்டும் ஒண்ணு தானேன்னு //
//அம்மனுக்கு வழிபட்டப் பாலை விரல்களில் ஒத்தியெடுத்து மூளியான என் கண் இமைகளின் மேலே சுசீலா வைச்சிருக்கணும். '
ஜில்'ன்னு இருந்தது. உடல் சிலிர்த்தது. ஜில்லிட்டது அவள் விரலா, இல்லை, பாலா?---//
//அவள் அழகின் ஒவ்வொரு அணுவையும் அணுஅணுவா ரசிச்சிட்டு இப்போ அவளைக் கடைக்கண்ணாலே கூட பாக்க சக்தியில்லாத நான் எத்தகைய பெரும்பாவின்னு நெனைச்சிண்டேன்.//
very very touching story.
Please continue. vgk
@ G.M.B.
வார்த்தைகளைப் பற்றிய நீங்கள் எழுதிய கட்டுரை ஒன்று தான் இப்போது என் நினைவுக்கு வந்தது.
அருமையான ஆரம்பம் என்று பின்னூட்டத்தை ஆரம்பித்து வைத்தமைக்கு மிக்க நன்றி, ஜி.எம்.பி. சார்!
@ ஸ்ரீராம்
இப்படியும் அப்படியுமான நினைப்புகள் தாம் மெளனப்போராட்டத்தின் ராஜாக்கள் போலிருக்கு. காத்திருப்பதற்கு நன்றி.
யூ ஆர் கரெக்ட்!
@ கோமதி அரசு
ஆதி சிதம்பரமே அந்த ஊர் தான் இல்லையா?
அருள்மிகு பிரமவித்யாநாயகி உடனுறை ஸ்வேதாரண்யேஸ்வரர் அருள் மழையில் நனைய கொடுத்துத் தான் வைத்திருக்க வேண்டும்!
தாங்கள் கொடுத்துள்ள செய்திகளுக்கு மிக்க நன்றி.
@ வை.கோ.
எடுத்துக்காட்டுகளை எடுத்துக் காட்டி ரசித்தமைக்கு மிக்க நன்றி, கோபு சார்!
இக்கதையை இப்ப்போதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன். பார்வை போவது என்பது எவ்வளவு பயங்கரமான விஷயம். அதையே முதல் அத்தியாயத்தில் மேலே படிக்க மனம் கோழைத்தனமாக மறுக்க, அப்போது படிக்கவில்லை. எல்லாமே கதைதானே என்று நினைக்கும் பக்குவம் வேண்டும் போலிருக்கிறது.
ஓக்கெ ஒவ்வொரு அத்தியாயமாக இப்போது வருகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment