பகுதி-- 15
கோவலனுக்கு மாதவி எழுதியிருந்த மடல்
ரொம்பவும் குடும்பப் பாங்காக இருந்தது.
“தங்கள் அடிகள் முன்னர் யான் அடி
வீழ்ந்தேன். நான் சொல்ல வருவதை தாங்கள் தங்கள் மனத்தில் இருத்திக் கொள்ள
வேண்டுகிறேன். தங்களின் பெற்றோர்களுக்கு--
அந்த முதுபெரும் குரவர்களுக்கு-- அவர்களின் முதுமைக் காலத்தில் செய்ய வேண்டிய
பணிகளை செய்யாது விட்டீர்கள். அன்றியும் உயர்குல மாது கண்ணகியுடன் நள்ளிரவில்
புகார் நகரிலிருந்து கிளம்பி விட்டீர்கள். இவற்றிற்கெல்லாம் யான் செய்த குற்றம்
என்னவென்று அறியாத மயக்கம் என்னை வருத்துகிறது.
இந்த வருத்தத்தை தாங்கள் ஒருவரால் தான் போக்க முடியும். குற்றம் நீங்கிய
மேலான மனத்தை உடையவரே! உம் புகழுக்கு குறையேதும் நேராமல் காப்பீராக!” என்ற
வேண்டுகோளோடு மாதவியின் மடல் முடிந்திருந்தது.
மடலை வாசித்து முடித்ததும், கோவலனின் முகம் பளிச்சிட்டது. வானத்தில்
மேகமூட்டம் நீங்கியதே போன்ற ஒரு நிலை. நடந்தவற்றை மனசில் அலசிப் பார்த்தத்
தீர்மானத்தில், “ இது வரை நடந்தவற்றில் அவள் குற்றம் ஏதுமில்லை!”
என்று கோவலன் உணர்ந்து
சொன்னான். “எல்லாம் என் குற்றமே! என் தீவினை குற்றம்..” என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன.
‘அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்’ என்ற முடங்கலின் முதல் வரியைப் மறுபடியும் படித்த கோவலன், ‘மாதவியின் இந்த முடங்கல் என் பெற்றோர்களுக்கு எழுதப்படுவதான
மடல் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறதே’
என்று எண்ணியவனாய், ‘மாதவியின்
நல்ல உள்ளம் பற்றி தன் தாய் தந்தையர் அறிதல் வேண்டும்’
என்று தொடர்ச்சியாகத் தோன்றிய நினைப்பில்,
ஒரு தெளிவடைந்த நிலையில் கோசிகனை நிமிர்ந்து பார்த்தான்.
“கோசிகனே! குற்றமற்ற என் பெற்றோர் மலரடி
தொழுதேன்..” என்று
சொன்ன பொழுது அவன் குரல்
தழுதழுத்திருந்தது..
“என் பெற்றோரிடம் மாதவியின்
இந்த கனிவான மடலைச் சேர்ப்பீராக.. அவர்கள் துயரம் களைவதற்கு இந்த மடல் துணை செய்யும்.. அதனால் விரைவாகச் சென்று அவரிடம் இதைச் சேர்க்க வேண்டுகிறேன்.””
என்று சொல்லி கோசிகனிடம் அந்த மடலைத் தந்தான். ஒரு முடிவை எடுத்த மாதிரி அவன் அப்படிச் சொன்னது புகாருக்கு திரும்பும் மனநிலையில் அவன் இல்லை என்பதனைக் கோசிகனுக்குப் புலப்படுத்தியது.
மாதவியின் திருப்பப்பட்ட மடலை வாங்கிக் கொண்டு கோவலனின் உத்தரவுப் படியே அதை அவன் பெற்றோரிடம் சேர்ப்பிக்கும் நோக்கத்துடன் கோசிகன்
அவ்விடம் அகன்றான்.
கோசிகன் செல்லும் வரைப்
பார்த்திருந்து, பின் கண்ணகியை விட்டு விட்டு வந்த இடம் நோக்கி கோவலன் நகர்ந்தான். அவன் அங்கு சென்ற நேரத்தில் பாணர்கள் சிலர் கூடி துர்க்கையின் போர்க்கோலத்தை
இசைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து கோவலனின் முகம் மலர்ந்தது.
கோவலனும்
ஆகச் சிறந்த இசைப் புலமை கொண்டவன் ஆதலால் அவனால் தன் மன உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவிலை. அவனும் இசைக் குழுவினருடன் ஒன்றிக் கலந்தவனாய் செங்கோட்டு யாழை எடுத்தான். தந்திரி கரமும் திலவும் உறுதியாகக் கட்டப்பட்டிருந்த அந்த யாழினைத் தூக்கி நிறுத்தி அதன் உறுப்புகளாகிய ஒற்றினை எடுத்து பற்றுடன் சேர்த்தான். உழை குரலாகவும், கைக்கிளை தாரமாகவும் யாழின் நரம்புகளை கோவலன் நிறுத்தினான்.. கொற்றவையைப் போற்றித் துதிக்கும் பாடலை ஆசான் என்னும் பண் இயலின் நால்வகைப் பிரிவுகளும் ஒன்றரக் கலக்கும் வித்ததில் யாழில் இசை கூட்டி பாணர்களுடன் பாணனாகச் சேர்ந்து கோவலனும் அவர்கள் குழுவில் இவனும் ஒருவனே போலப் பாடினான். கோவலனின் இசைப் புலமை வெளிப்பட்ட நேர்த்தியில் தொழிற் கலைஞர்களாகிய் அந்தப் பாணர்களே வெகுவாக வியந்து போயினர்.
ஆகச் சிறந்த இசைப் புலமை கொண்டவன் ஆதலால் அவனால் தன் மன உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவிலை. அவனும் இசைக் குழுவினருடன் ஒன்றிக் கலந்தவனாய் செங்கோட்டு யாழை எடுத்தான். தந்திரி கரமும் திலவும் உறுதியாகக் கட்டப்பட்டிருந்த அந்த யாழினைத் தூக்கி நிறுத்தி அதன் உறுப்புகளாகிய ஒற்றினை எடுத்து பற்றுடன் சேர்த்தான். உழை குரலாகவும், கைக்கிளை தாரமாகவும் யாழின் நரம்புகளை கோவலன் நிறுத்தினான்.. கொற்றவையைப் போற்றித் துதிக்கும் பாடலை ஆசான் என்னும் பண் இயலின் நால்வகைப் பிரிவுகளும் ஒன்றரக் கலக்கும் வித்ததில் யாழில் இசை கூட்டி பாணர்களுடன் பாணனாகச் சேர்ந்து கோவலனும் அவர்கள் குழுவில் இவனும் ஒருவனே போலப் பாடினான். கோவலனின் இசைப் புலமை வெளிப்பட்ட நேர்த்தியில் தொழிற் கலைஞர்களாகிய் அந்தப் பாணர்களே வெகுவாக வியந்து போயினர்.
குடிப்பிறப்பால் வணிக குலத்திலே
தோன்றிய கோவலன் லலித கலைகளின் ஞானம் பெற்று வித்தியாசமானவனாய்த் திகழ்ந்தான். நாட்டியம், இசை என்று பன்முகப்பட்டத் திறமை
கொண்டிருந்த மாதவியே தன் மனதைப் பறி கொடுக்கும் அளவுக்கு கோவலனின் அசாத்திய திறமை
அமைந்திருந்தது. அவ்விருவரின் கலை ஞானம், ஆண்-பெண்ணுக்கான உடல் கவர்ச்சியைத்
தாண்டிய ஒன்று. வெகு அரிதான
இருவருக்கிடையேயான இந்த இணைப்பே அறுக்க முடியாத பிணைப்பாய் கோவலனுக்கும் மாதவிக்கும்
ஆயிற்று. அதனால் தான் வாழ்க்கைப் போக்கில் வாராது வந்த மாமணி போலத் தன் கைவசப்பட்ட
அந்தக் கலைஞனை இழக்க முடியாமல் தவித்தாள் மாதவி.
காதல் மனைவி இருக்க, தன் செல்வ
மிதப்பில் ஆயிரம் பொற் கழஞ்சு கொடுத்து போகம் துய்க்க கணிகை மகள் ஒருத்தியை
கடைவீதியில் விலைக்கு வாங்கினான்.— அவளோடு கூடியிருந்த சுகம் திகட்ட, அவளைக் கைவிட்டு தாலிகட்டிய துணையாளுடன்
சேர்ந்துக் களிக்க திரும்பி வந்தான் என்று வெகு சாதாரண போக்குள்ள ஆடவனாய் தன்
நாவலின் நாயகனைச் சித்தரிக்கவில்லை இளங்கோ அடிகள்.
நாயகன் மட்டுமில்லை, அந்த நாயகனுடன்
சேர்ந்த காதல் கிழத்தி மாதவியையும் அசாதாரணமான பெண்ணாய் வார்த்தெடுதிருக்கிறார்
நாவலாசிரியர். அவன் வணிக குலத்தில் பிறந்த
வித்தியாசமானவன் என்றால் இவளோ கணிகையர் குலத்தில் உதித்த வித்தியாசமானவள்.. இந்த இரு
வகைத்தான வித்தியாசமானவர்களை ஒன்று சேர்க்க இசையும், யாழும், ஆடலும், பாடலும் துணையாய்
இருந்து தூபம் போட்டன... காதல் வயப்பட்ட இந்த இரு இளசுகளுக்கு இடையேயான பெளதீக உறவு
அறுந்து பட்ட போதிலும், இவர்கள் உறவின் மேலான நிலைகளுக்குச் சுவை கூட்டிய லலித கலைகள்
அவர்களின் உள்ளப் பிணைப்பு அறுந்து படாமல் கட்டிக் காப்பதற்கு காரணமாக
அமைந்தன. நிரந்தர பிரிவுக்கு
வழிவகுக்காமல் பார்த்துக் கொண்டன. இவர்கள் இருவருக்கிடையான விலகல் ஊழ்வினை
வசத்தால் என்றால் இவர்கள் இருவருக்கிடையே யான கலைஞான ஈடுபாடுகளின் பின்னல்களுக்கும்
பிணைதல்களுக்கும் அதே ஊழ்வினை தான் காரணமாகிப் போகிறது.
இந்த சிலப்பதிகார காப்பியத்தில்
நாவலாசிரியரின் படைப்புத் திறமை கொடிக்கட்டிப் பறக்கும் இடங்கள் ஏராளம். லெளகீக
ஏற்பாடுகளுடன் இருவருக்கிடையேயான ஒரு திருமண பந்தத்தில் ஆரம்பித்த கதையை அவர்கள்
வாழ்க்கைப் போக்கில் குறுக்கும் நெடுக்கும் குறுக்கிடும் பல்வேறு பாத்திரப் படைப்புகளோடு,
நெருங்கலும் விலகலுமாக அதனால் நெருக்கடிகளுக்கு
உள்ளாகும் பல்வேறு ஆசாபாசங்களுடன் நெருக்கமாக காப்பியத்தை நெய்திருக்கிறார்
படைப்பிலக்கியத்தில் கைதேர்ந்தவரான இளங்கோ அடிகள்.. இந்த மாதிரியான ரசவாத வித்தைகளை கதாசிரியர்
கைக்கொள்ளவில்லை என்றால் வாசிப்பவருக்கு அந்த மூவரின் மாமதுரை நோக்கிய பயணமே
வெறுத்துப் போயிருக்கும். நாவலின் போக்கில் இடையிடும் எல்லா அம்சங்களையும் மிகக்
கவனமாகத் தேர்ந்தெடுத்து இந்தக் காப்பியத்தின் மூலமாகத் தான் நிலைநிறுத்த நினைக்கும் குறிக்கோள்களுக்கு எந்த நிலையிலும் விலகல் ஏற்படாமல் பார்த்துக் கொண்டது
காப்பிய ஆசிரியரின் இன்னொரு சாமர்த்தியம்.
எந்தவிதத்தில் திருப்பிப் திருப்பிப்
பார்த்தாலும் படித்தாலும் சிலப்பதிகாரம் ஒரு பொழுது போக்குப் படைப்பிலக்கியம் அல்ல
என்பது புரியும். வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை எதனாலோ நடந்தது என்று
பார்க்காமல் அந்த நிகழ்வுகள் நிகழ்வதற்கான காரணங்களை அர்த்தபூர்வமான நோக்குடன்
அலசுவது. அத்தனை அலசல்களும் தமிழர்களுக்கான பண்பாட்டுத் தளத்திலேயே எந்தவித
விலகலும் இல்லாமல் நடைபெறுவது தான் இந்தக்
காப்பியத்தின் இன்னொரு விசேஷமாக பரவலாகக் காணக்கிடைக்கிறது.
கோயிலின் முன் உற்சாகத்தோடு பாணர்கள்
கொற்றவையைப் பாடிப் பரவிக் களிக்கிறார்கள். என்றுமில்லாத திருநாளாய் அவர்களின்
இசைத் திறமைகளுக்கு அழகு கூட்டும் அற்புத நாயகனாய் கோவலன் கிடைத்தது அவர்களிடையே விவரிக்க
இயலாத மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. வழிப்பயணத்தில் கிடைத்த இசைப்புலமை மிக்க
வாலிபனைப் பிரிய முடியாமல் அந்தப் பாணர் குழுவே அன்புப் பிணைப்பில்
தத்தளிக்கிறது.
காப்பியத்தைத் தொடர்ந்து வாசிக்கும்
நமக்குத் தான் கோவலனும் இந்த பாணர்
குழுவுடன் ஒன்றரக் கலந்து விட்டால் அவனது
இசைப்புலமைக்கு ஒரு வடிகால் கிடைக்குமே
என்று தோன்றுகிறது. சிலம்பை விற்று வணிகத்தில் என்ன சாதித்து விடப்போகிறான்,?..
அதற்கு ஆன்ம சுகம் கொடுக்கும் இந்த பாணர்களுடனான தொடர்பும் அதன் தொடர்ச்சியாய் அமைந்தாலும்
அமையப்போகும் வாழ்க்கைப் போக்கும்
மேலாயிற்றே என்ற எண்ணம் மேலிடுகிறது. திசை
தெரியாது திகைக்கும் கோவலனுக்கும் திண்ணமாகக் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு
கிடைத்திருக்கிறதோ என்று நாம் காப்பியப் போக்கில் கவனத்தைச் செலுத்தினால் நம்
ஆதங்கம் எல்லாம் சுக்கு நூறாய்த் தூளாகின்றன.
நம் எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாய்
கோவலனும் தன் மதுரை நோக்கிய நெடிய பயணத்திலேயே குறியாய் இருப்பது போல காப்பியத்தை
வடித்த இளங்கோ அடிகளாரும் அல்லது அந்தப்
பாழாய்ப் போன ஊழ்வினையின்
ஆட்டபாட்டங்களுமே தொடர் வாசிப்பாய் ஆகிப்போகிறது. என்ன காரணங்களுக்காக கோவலனுக்கும், கோவலைனைத்
தொட்டு அவன் அருகாமை கிடைத்த அத்தனை பேருக்கும் இப்படியாக நேருகிறது என்று விண்டு
உரைக்கிற காரணங்கள் தெரியாமலேயே மேற்கொண்டு
வாசித்துப் போகிறோம்.
.
“நண்பர்களே! நாம் விடைபெறும் நேரம்
வந்து விட்டது.. மதுரை இன்னும் எத்தனை காதம் தொலைவில் உள்ளது?” என்று பாணர்களைக்
கேட்கிறான் கோவலன்.
‘வானம் தொட்டு விடும் தூரம் தான்’ என்று சொல்வது போல அவர்களில் ஒருவன்
சொல்கிறான்: “மதுரைத் தென்றல் இதோ நம்மைத்
தாலாட்டத் துவங்கிவிட்டது, பாருங்கள்!! பாண்டியனின் செலவ வளமிக்க மாமதுரை வெகு
தொலைவில் உள்ள ஊர் அல்ல; தனியாக நீங்கள்
சென்றாலும் உங்களைத் தடுப்பார் யாருமில்லை..” என்கிறான்.
நமக்கோ ‘பக்’கென்றிருக்கிறது. ‘எங்கே
போனாலும் தப்ப முடியாது; நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்கள் பாதங்களைப் பற்றி
உங்களோடையே நடைபோடும் வல்லமை மிக்கது, ஊழ்வினை’ என்று அடிகளார் அழுத்தம்
திருத்தமாகச் சொல்கிறாரே என்று வேறு கவலையாக இருக்கிறது.
இன்னும் எவ்வலவு காத தூரம் அந்த மெல்லிய பாதம் கொண்ட
மேனியாளோடு, வயது மூத்த சமண அடிகளாருடன் கோவலன் நடக்கப் போகிறானோ என்றிருக்கிறது.
(தொடரும்)
படங்களை உதவியோருக்கு நன்றி.
21 comments:
கவனமாய் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் ஆன பதிவு. சிலப்பதிகார படைப்பாசிரியர் கோவலன், மாதவி படைப்பை வித்தியாசமாகப் படைக்க மெனக்கெட்டதை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
எங்கள் வீட்டில் ஒரு வயதான மாது. அவர் எம் ஜி ஆர் படங்கள் பார்ப்பதில் ப்ரியம் உள்ளவர். பெரும்பாலான படங்கள் அவர் ஏற்கெனவே பார்த்ததாகத்தான் இருக்கும். அந்தத் திரைப்படத்தில் வரும் அடுத்தடுத்த காட்சிகளும் அத்துபடியாகத்தான் இருக்கும். ஆனாலும் எம் ஜி ஆருக்கு ஒரு ஆபத்து என்னும் காட்சி வரும்போது ரொம்ப உணர்ச்சி வசப்படுவார். "அய்யய்யோ... பின்னால ஆளு வர்றானே... அடிச்சுடப் போறான்.." என்பார். அதற்குள் எம் ஜி ஆர் திரும்பி அவனை உதைத்து விடுவார் என்பதும் அவருக்குத் தெரியும்.
அதுபோல ஏற்கெனவே அறிந்த கதையாய் இருந்தாலும் ஒரு ஈடுபாடு கோவலன் பாணர்களோடேயே சென்று விடக் கூடாதா... மதுரை போகக் கூடாதே என்று ஏங்க வைக்கிறது!
:)))
பொறுப்புள்ள மாதவியின் மடல் அருமை.
//நாயகன் மட்டுமில்லை, அந்த நாயகனுடன் சேர்ந்த காதல் கிழத்தி மாதவியையும் அசாதாரணமான பெண்ணாய் வார்த்தெடுதிருக்கிறார் நாவலாசிரியர். அவன் வணிக குலத்தில் பிறந்த வித்தியாசமானவன் என்றால் இவளோ கணிகையர் குலத்தில் உதித்த வித்தியாசமானவள்.. //
அற்புதமான கதாபாத்திரங்கள்.
//பாண்டியனின் செலவ வளமிக்க மாமதுரை வெகு தொலைவில் உள்ள ஊர் அல்ல; தனியாக நீங்கள் சென்றாலும் உங்களைத் தடுப்பார் யாருமில்லை..” என்கிறான்.
நமக்கோ ‘பக்’கென்றிருக்கிறது. ‘எங்கே போனாலும் தப்ப முடியாது; நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்கள் பாதங்களைப் பற்றி உங்களோடையே நடைபோடும் வல்லமை மிக்கது, ஊழ்வினை’ என்று அடிகளார் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாரே என்று வேறு கவலையாக இருக்கிறது.//
ஆஹா ..... ஆமாம். படிக்கும்போதே ’பக்’ எனக் கவலையாகத்தான் உள்ளது. தொடரட்டும்.
பகிர்வுக்கு நன்றிகள்.
மிகுந்த ஈடுபாட்டுடன் சுவைத்ததை அற்புதமாக பகிர்ந்துள்ளீர்கள். அற்புதமான வாசிப்பு.
மாருதியின் அழகிய வண்ணச் சித்திரமும் கிடைத்துள்ளதே !
“மதுரைத் தென்றல் இதோ நம்மைத் தாலாட்டத் துவங்கிவிட்டது, பாருங்கள்!! பாண்டியனின் செலவ வளமிக்க மாமதுரை வெகு தொலைவில் உள்ள ஊர் அல்ல; தனியாக நீங்கள் சென்றாலும் உங்களைத் தடுப்பார் யாருமில்லை..” என்கிறான்.//
மதுரைத் தென்றல் இப்போது தாலாட்டுகிறது. சாரல் காற்றாய் இருக்கிறது. இப்போதே இப்படி என்றால் அந்த காலம் எப்படி இருந்து இருக்கும்?
பாணர் குழுவே அன்புப் பிணைப்பில் தத்தளிக்கிறது.//
நீங்கள் சொல்வது போல் சிலம்பை விற்று தொழில் செய்யாமல் பாணர்களுடன் பாடிக் கொண்டு இருந்து இருக்கலாம். கோவலன் உயிருடன் இருந்து இருப்பார் என்று தோன்றுகிறது.
//‘எங்கே போனாலும் தப்ப முடியாது; நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்கள் பாதங்களைப் பற்றி உங்களோடையே நடைபோடும் வல்லமை மிக்கது, ஊழ்வினை’ என்று அடிகளார் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாரே என்று வேறு கவலையாக இருக்கிறது.//
முடிவு தெரிந்தாலும் , நீங்கள் சொல்லி செல்லும் முறையில் கோவலின் நிலையறிந்து கவலை அளிக்கிறது.
நன்றாக இருக்கிறது படிக்க.
// சிலப்பதிகார காப்பியத்தில் நாவலாசிரியரின் படைப்புத் திறமை கொடிக்கட்டிப் பறக்கும் இடங்கள் ஏராளம். //
அதனால் தான் அது இன்றும் திரும்பத் திரும்ப வாசிக்கப்படுகிறது என எண்ணுகிறேன்.
//திசை தெரியாது திகைக்கும் கோவலனுக்கும் திண்ணமாகக் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதோ என்று நாம் காப்பியப் போக்கில் கவனத்தைச் செலுத்தினால் நம் ஆதங்கம் எல்லாம் சுக்கு நூறாய்த் தூளாகின்றன.//
கோவலன் ஊழ்வினை பயனால் உயிர் துறக்க இருக்கிறான் என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும், கோவலன் பாணர் குழுவுடன் ஒன்றரக் கலந்து விட்டால் அவனது இசைப்புலமைக்கு ஒரு வடிகால் கிடைக்கும். அதோடு அவனும் உயிர் பிழைப்பானே என்ற எண்ணம் வாசகர்களுக்கு வரக் காரணம் இளங்கோ அடிகள் கோவலன் பற்றி நம் மனதில் உண்டாக்கியிருக்கும் ஒரு நல்ல அபிப்பிராயத்தால் தானே?
காப்பியத்தைத் தொடர்ந்து வாசிக்கும் நமக்குத் தான் கோவலனும் இந்த பாணர் குழுவுடன் ஒன்றரக் கலந்து விட்டால் அவனது இசைப்புலமைக்கு ஒரு வடிகால் கிடைக்குமே என்று தோன்றுகிறது. //எப்படி எல்லாம் எத்திசை எல்லாம்
உங்கள் கற்பனை !
இது போன்ற இசைக்குழு ஒன்று வழியில் தென்பட்டால்,
நானாக இருந்தால், கண்டிப்பாக மதுரை சென்று இருக்க மாட்டேன்.
சிலப்பதிகாரத்தின் ஒவ்வொரு வரியிலும் ஊழின் வலிதனை எடுத்துச் சொல்கிறீர்கள்.
ஊழிற் பெரிது யாதுள ? என்று எந்த ஒரு வாசகனையும் முடிவெடுக்கும் வண்ணம் காப்பிய நிகழ்வுகளை கோர்த்துச் சொல்லும் உங்களது வாதத் திறன் பாராட்டத்தக்கதே.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
@ ஸ்ரீராம்
தொடர்ந்து வாசித்துக் கருத்திடுவதற்கு நன்றி, ஸ்ரீராம்.
எம்ஜிஆர் திருப்பி அவனை உதைத்து விடுவார் என்று தெரிந்திருப்பதையும் ஷண நேரத்திற்கு மறக்கச் செய்யும் அன்பு அது. உதைத்து விடுவார் தான்; இருந்தாலும் தப்பித் தவறி ஏதாவது நடந்து விடப்போகிறதே என்று அந்தக் காட்சியில் ஒன்றிய மனம் பதறுகிறது.
//அதுபோல ஏற்கெனவே அறிந்த கதையாய் இருந்தாலும் ஒரு ஈடுபாடு கோவலன் பாணர்களோடேயே சென்று விடக் கூடாதா... மதுரை போகக் கூடாதே என்று ஏங்க வைக்கிறது! //
நாம் வேணா 'புதிய சிலப்பதிகாரம்' என்று பெயர் கொடுத்து மாற்றி எழுதி விடலாமா?.. சொல்லுங்கள், செய்து விடலாம்.
வாசிப்பின்மீதான ஈடுபாட்டை மிகுவிக்கிறது உங்கள் பதிவு. நன்றி.
@ வை.கோ.
ஏற்கனவே இளகிய மனம் படைத்த ரசிகர் நீங்கள். கோவலனின் பாத்திரப்படைப்பை நுணுகிப் பார்க்கப் பார்க்க மனம் பரிதவிக்கிறது.
கோவலன் ஏன் மதுரை செல்வதில் உறுதியாக இருக்கின்றான் என்பதை அடுத்து வரும் அத்தியாயத்தில் பார்ப்போம். அப்பொழுது கோவலனின் மேல் இன்னும் உங்கள் அன்பு கூடும்.
தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, கோபு சார்!
@ KABEER ANBAN
அட! நம்ம கபீரன்பன்! நலமா, சார்?.. உங்களை இங்கு பார்த்ததில் மன்சுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இந்தப் பகுதியை நீங்கள் வாசித்து வருவது பெருமையாக இருக்கிறது. இடறும் விஷயங்களை எடுத்துக் காட்டத் தவறாதீர்கள்.
எல்லாம் கூகுள் தயவு. பிரபல ஓவியரின் சித்திரம் கிடைத்தது.
அன்பான வருகைக்கும் கருத்திட்டதிற்கும் நன்றி, சார். தொடர்ந்து வாருங்கள்.
மிக்க அன்புடன்,
ஜீவி
@ கோமதி அரசு
மதுரையில் சாரல் காற்றா?.. பலே!
பாணர்களுடன் சேர்ந்து சென்றிருக்கலாம் என்பது நம் ஆதங்கம் தான்! நல்லவர்களுக்கு எப்படியாவது நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கிற மனசு! கோவலனின் பாத்திரப்படைப்பு அவன் மேல் நம் அனுதாப்பத்தைக் குவிக்கிறது. மதுரை போய்ச் சேர்ந்ததும் அது இன்னும் கூடும்!
முடிவு தெரிந்திருந்தாலும்--- ஒரே ஒரு முடிவில் யார் யார் ஊழ்வினையெல்லாம் ஒன்று சேருகிறதோ என்று இப்பொழுதே மனசில் கேள்வி எழுந்து விட்டது. அதற்கு ஏற்ற மாதிரி எழுத வேண்டும் என்று மனசில் குறித்துக் கொண்டிருக்கிறேன்.
தொடர்ந்து வாசித்து வாருங்கள்.
@ வே. நடனசபாபதி
தமிழின் முதல் நாவல் என்று எதைஎதையோ சொல்கிறார்கள்.
அதனால் தான் தமிழின் முதல் நாவல் சிலப்பதிகாரமே என்று நிருவ வேண்டும் என்று என் ஆசை. ம.பொ.சி. இருந்திருந்திருநால் மகிழ்ந்து போயிருப்பார்!
திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கும் வாசிப்பு நேர்த்தியால் தான் இந்த மாதிரியான அபிப்ராயங்கள் தோன்றுகின்றன. ஆனால் அதிலும் சிக்கல் இருக்கிறது.
போன ஜென்மம், மறு ஜென்மம், எந்தப் பிறவியிலோ செய்த ஊழ்வினை தொடர்ந்து வருவது, நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏதேதோ வினைக் காரணங்கள் சொல்வது--- இவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு சிலப்பதிகாரத்தின் வாசிப்பு அனுபவம் எப்படி இருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. சுத்த உடான்சு-- என்று நூலைத் தூக்கிப் போட்டு விடுவார்களோ?..
என்ன தான் ஒப்பற்ற இலக்கியம் என்றாலும் அது தரும் சொற்சுவையைத் தாண்டி பொருட்சுவை என்று ஒன்றும் இருக்கிறது. அதுவும் சிலப்பதிகாரம் போன்ற, கொள்கை ரீதியாக அறிவித்து இதற்காகத் தான் இந்தக் காப்பியம் எழுதப்படுகிறது என்று பிரகடனம் செய்யப்பட்டு எழுதப்படும் இலக்கியங்கள்--
அடிகளார் வாரிவழங்கும் தமிழின்பம் மனத்தில் தோன்றும் அத்தனை மாறுபட்ட கருத்துக்களையும் மறக்கடித்து விடும் என்று நினைக்கிறேன்.
@ Sury Siva
ஆடுவோர் ஆடினால் பாடத் தோன்றும்-- என்று ஒரு பாடல் வரி உண்டல்லவா?
யார்?.. கண்ணதாசன் தானே?.. வேறு யாருக்கு இவ்வளவு நேர்த்தியாகச் சொல்லத் தெரியும்?..
//எப்படி எல்லாம் எத்திசை எல்லாம்
உங்கள் கற்பனை ! //
அனுபவித்த ரசிக்கும் உங்கள் ரசனை தான் இப்படியான கற்பனைச் சுரப்புக்கெல்லாம் ஊற்று!..!..
'கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே..' என்று அதே கலைஞன் சொன்ன மாதிரி....
உங்களைப் போன்ற உயர்ந்த ரசனையாளர்கள் இல்லையென்றால், இப்படியான ரசனைக்குரிய கற்பனைகளும் கிஞ்சித்தும் இடம் இல்லை என்பதே முடிவான முடிபு!
சிலப்பதிகாரச் சுவையை சிறப்பாக விளக்கிவரும் தங்கள் பணி அளப்பற்கரியது! கோவலன், மாதவி பண்பு நலன்களை விளக்கிய விதமும் கோவலன் மதுரைக்கு செல்லுவதை விளக்கியதும் அருமை! நன்றி!
ஜீவி சார்!
கும்பகோணம் பக்கத்தில் வெற்றிலை போட்டுக் கொள்வதை ஒரு கலைநிகழ்ச்சியின் நயத்தோடு செய்வார்கள் . வெற்றிலைகள், பிறகு பாக்கு, சீவல், புகையிலை எல்லாம் வாயில் அடக்கியபின் மென்று அவை ஒரு பதம் வந்தபின் பாக்கோ வெற்றிலையோ,சுண்ணாம்போ கூடக்குறைய சேர்த்து மென்று வைப்பார்கள் . அந்தக் குதப்பல் பக்குவம் ஏதோ ஒருகணத்தில் லயம் கூட்டி லாகிரியில் மிதக்கவிடும். அதை 'மேளம் கட்டுதல்' என்ற செல்லப்பெயர் வைத்து அழைப்பார்கள். திஜா கதையில் கூட இந்த மேளம் கட்டுதலை சொல்லியிருப்பார். ராக்ஷஸன்!
உங்கள் சிலம்பு மேளம் கட்டி விட்டது! மோவாயை அசைத்தால் கூட மேள வார் நெகிழ்ந்து விடுமோ என மோட்டு வளையைப் பார்த்து தலை உயர்த்தி கிடக்கிறேன் . அவசரமாய் மதுரைக்குள் நுழைந்துவிடுவீரோ என பதற்றமும் மெல்ல எழுகிறதே! பார்த்து செய்யுங்கள் ராஜாவே !
@ தளிர் சுரேஷ்
தொடர்ந்து வாசித்து கருத்திடுவதற்கு நன்றி, சுரேஷ் சார்.
@ மோகன்ஜி
நீங்கள் மஹா ரசிகர். ராஷஸனுக்குன் ஏற்ற ரசிகர். வெற்றிலை போடுவதை விட்டுத் தள்ளுங்கள். அதை அனுபவித்துப் போடுதலை விட்டுத் தள்ளுங்கள். அதை கேட்கிறவன் கிறக்கம் கொள்ளுகிற அளவுக்குச் சொல்லத் தெரிந்திருக்கிறது பாருங்கள், அதான் பிரமாதம்.
//குதப்பல் பக்குவம் ஏதோ ஒருகணத்தில் லயம் கூட்டி லாகிரியில் மிதக்கவிடும்.//
ஆஹா... ஆஹா.. அந்த 'ஏதோ ஒரு கண' சிகரத்தை எட்டி 'ஜிவ்' என்று லாகிரிக்குத் தூக்கிப்போகிற பரமானந்தம்.. அம்மாடி.. வாசிக்கும் பொழுதே உணர்ந்த மாதிரி இருக்கு.. இந்த லயம் கூடும் சமாச்சாரமும் இன்னும் நிறைய விஷயங்களில் இருக்கிறது. 'மேளம் கட்டுதல்'--இந்த தஞ்சாவூர்காரங்களுக்குத் தான் என்ன ரசனை ஐயா!
/மோவாயை அசைத்தால் கூட மேள வார் நெகிழ்ந்து விடுமோ என மோட்டு வளையைப் பார்த்து தலை உயர்த்தி கிடக்கிறேன் //
தன்யனானேன்.
அவசரமா?.. மதுரை நெருங்கியவுடனேயே கிலி பிடித்துக் கொண்டாயிற்று. அடிகளார் என்னவென்றால் மேக்ஸிமம் சாவகாசமா.. அந்த ராசாவிற்கே
நெருங்கவே அவருக்கும் மனசில்லை போலிருக்கு..
ஒரு பக்கம் சுதாஜி! இன்னொரு பக்கம் மோகன்ஜி!
மனம் நெகிழ்த்திய பின்னூட்டங்கள்.. எழுதுவதின் ஜன்ம சாபல்யம் அடைந்தாயிற்று!..
மாதவியை உயர்த்திப் பிடித்திருப்பதை ரசித்தேன். கோவலன் தானாகத் தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறான். மாதவியுடன் சேர்ந்தபோது யாரைக் கேட்டான்? அவனாகத் தானே சென்றான்! அதே போல் இப்போதும் முடிவு எடுத்திருக்கிறான். மற்றபடி மோகன் ஜியின் ரசனையோ, சு.தாவின் ரசனையோ என்னிடம் இல்லை. :)
@ கீதா சாம்பசிவம்
மாதவியை... எனகென்று தனியே எதுவும் இல்லை. மூல ஆசிரியர் என்ன செய்திருக்கிறாரோ அதனை ஒற்றி தான் எல்லாம்..
இருந்தாலும் மாதவியிடம் ஒரு தனிப்பட்ட அனுதாபம் உங்களுக்குண்டு என்று எனக்குத் தெரியும். ஆரம்பத்திலேயே நீங்கள் சொன்ன ஒன்று இந்தப் பகுதையை எழுதுகையில் என் நினைவில் நின்றது.
வாய்ப்பு கிடைக்கும் பொழுது ரசனையைக் கொட்டுவது கொட்டுபவர் உள்ளத்தின் அழகை வெளிப்படுத்தும். கேட்பவருக்கும் குஷி பிய்த்துக் கொள்ளும்.
ரசனைக்காரர்களால், ரசனையால், ரசனைக்காகவே எழுதப்படுவது தானே இலக்கியம்?
என்ன சொல்கிறீர்கள்?..
//இருந்தாலும் மாதவியிடம் ஒரு தனிப்பட்ட அனுதாபம் உங்களுக்குண்டு என்று எனக்குத் தெரியும். //
அப்படி எல்லாம் இல்லை! என்னுடைய அனுதாபம் எல்லாம் எப்போவுமே பாண்டிமாதேவிக்குத் தான்! பட்டிமன்றத்தில் கூடப் பாண்டிமாதேவி தான் கற்புக்கரசி என்னும் தலைப்பில் தான் வாதாடித் தோற்றிருக்கிறேன். :) அப்போதிருந்த குன்றக்குடி அடிகளார் தலைமையில் கூட மதுரையில் இந்தத் தலைப்பில், கற்புக்கரசி யார்? கண்ணகியா, மாதவியா, அல்லது பாண்டிமாதேவியா என்ற பட்டி மன்றம் நடந்திருக்கிறது. :) வழக்கம்போல் கண்ணகி தரப்பே ஜெயித்தது! :)
கோமதி அரசின் கருத்தையும் அதற்கு உங்கள் பதிலையும் இப்போத் தான் பார்த்தேன். மதுரையில் சாரல் உண்டு. குற்றாலத்தில் சாரல் ஆரம்பித்தால் மதுரையில் ஒரு மேக மூட்டம் போடும் பாருங்க! அந்தக் காற்றின் மணமும், மிதமான வேகமும் இப்போதெல்லாம் கிடைக்குதோ என்னமோ தெரியாது! சந்தன மணம் வீசும் தென்றல் என்று எப்போதோ எங்கேயோ எதிலோ படித்தது தான் நினைவில் வரும்.
Post a Comment