மின் நூல்

Wednesday, August 3, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி-- 18


கோவலன் தன் வணிக நிமித்தமாக மாமதுரையின் உள்பகுதி கடைவீதிகளில் அலைந்து திரிந்தாலும் போகுமிடமெல்லாம் காதல் மனைவி கண்ணகியையும் அவன் கூடக் கூட்டிச் செல்ல வேண்டாமென்று கவுந்தி அடிகள் அபிப்ராயப்பட்டார்.    நடந்து நடந்து நடை சோர்ந்திருந்த அந்த மெல்லியலாளை தகுந்த பாதுகாப்புள்ள ஒரு இடத்தில் விட்டு விட்டுச் செல்வதே மேல் என்பதே அவர் எண்ணமாக இருந்தது. அப்படிப் பாதுகாப்பான நபர் யார் என்று யோசனையில்  ஆழ்ந்த பொழுது தான் ஆயர் குல மூதாட்டி மாதுரி, கவுந்தி அடிகளை வணங்கிச் செல்வதற்காக அங்கு வந்தாள்.

அறவோர் தங்கியிருந்த அந்த புறஞ்சேரியில் பூப்போலும் கண்ணுடைய இயக்கி என்னும் தெய்வம் எழுந்தருளியிருந்தது. அந்தத் தெய்வம் தொழுது பால்சோறு படைத்துத் திரும்பிய மாதுரி, கவுந்தி அடிகளாரையும் வணங்கி வருவதற்காக வந்திருந்தாள். கண்ணகியை யாரிடம் அடைக்கலமாக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தவருக்கு மாதுரி அங்கு வந்த்து, தெய்வமே தகுந்த ஆளை அங்கு கொண்டு வந்து சேர்த்திருப்பதைப் போலிருந்தது. நமக்கோ, ஊழ்வினை தன் செயல்பாட்டிற்காக கோவலனைச் சார்ந்து போடும் பெரிய வட்டத்தில் இப்பொழுது இன்னொருவரையும் கொண்டு வந்து சேர்த்த உணர்வு.


"மாதுரி! கேள்..” என்று மாதிரிக்கு புரியும் படி சொல்ல ஆரம்பித்தார் கவுந்தி அடிகள். கண்ணகியைக் காட்டி, “இந்தப் பெண்ணின் கணவனின் தந்தை யார் என்று தெரிந்தாலே ஒரு பெரும் வணிகக் கூட்டம் தம் வீட்டு விருந்தினாரக இவர்களை உபசரிக்கத் தயாராக இம்மாதுரை நகரத்தில் உள்ளனர். அப்படி செல்வமுடையார் இல்லத்துக்கு இவர்கள் செல்லும் வரையில் இடைக்குலப் பெண்ணான உன்னிடம் இவர்களை அடைக்கலம் அளிக்கிறேன்..” என்றார். “நீயே இவளுக்குத் தோழியும் செவிலித் தாயுமாகும். இந்த அழகிய பெண்ணை நன்னீராட்டி, கண்களுக்கு மை தீட்டி, கூந்தலில் மலர்கள் சூட்டி ஆடைகள் அளித்து அடைக்கலம் அளிப்பாயாக!” என்று அறிவுறுதினார்.


அடைக்கலத்தின் மேன்மையை தெரிவிக்கும் கதை ஒன்றைச் சொல்ல வேண்டுமென்று இந்த இடத்தில் இளங்கோவிற்கு ஆசை. கவுந்தி அடிகள் மூலமாக அந்தக் கதையைச் சொல்கிறார். “சாயலன் என்பான் பட்டினி நோன்பிருக்கும் நோன்பிகளுக்கு உணவு அளிக்கும் கடைமையைச் செய்து வந்தான். ஒரு நாள் தவத்தில் சிறந்த ஒருவருக்கு உணவு அளிக்கும் பேறு பெற்ற சாயலனின் மனைவி தன் தீவினை அகல அவரை வேண்டினாள். அந்த சமயத்தில் குரங்கொன்று ஒதுங்கி அந்த மனையினுள் புகுந்தது. அந்த முனிவரின் பாதம் வணங்கி அவர் உண்டு மீதமிருந்த எச்சில் சோற்றையும் ஊற்றிய நீரையும் உண்டு கொடிய பசி தீர்ந்த மகிழ்ச்சியில் அந்த முனிவரின் முகம் பார்த்தது. அந்த முனிவன் கனிந்த பார்வையுடன் சாயலனின் மனைவியை நோக்கி, “சிறந்த இல்லறத்தாளே! இக்குரங்கை உன் மக்களைக் காப்பது போலக் காப்பாயாக!” என்று சொல்லி விட்டுச் சென்றார்.


அந்த தவத்தோன் சொன்னபடியே சாயலன் மனைவியும் அந்தக் குரங்கை எந்தத் துன்பமும் அதற்கு நேரிடாதவாறு காப்பாற்றி வந்தாள். காலம் கழிய அந்த குரங்கு இறந்த பின்பும் வழக்கமாக யாருக்காவது தானம் செய்யுங்கால் ஒரு பகுதியை தனியாக ஒதுக்கி, அந்த குரங்கின் மேம்பட்ட பிறப்பிற்காக தானம் செய்து வந்தாள். அவள் செய்த தானப்பயனால் அந்தக் குரங்கு வாரணாசி நகரத்து உத்தம கெளத்தன் என்பானுக்கு ஒரே மகனாகப் பிறந்து தான தருமங்களில் சிறந்து முப்பத்திரண்டு ஆண்டுகள் போற்றத்தக்க வாழ்ந்த வாழ்க்கைக்குப் பின் தேவ வடிவம் பெற்றது. அவன் பெற்ற தேவ வடிவும், சாயலன் மனைவியின் தான தருமத்தால் விளைந்தது என்பதைத் தெரியப்படுத்துவதே போன்று முற்பிறப்பில் கொண்டிருந்த குரங்கின் கை போன்று சிறிய கையை ஒரு பக்கம் கொண்டிருந்தது. வறியவர்களுக்கு தானம் செய்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த சாயலனும் அவன் மனைவியும் விண்ணுலகம் எய்தினர். ஒப்பற்ற தான தரும அறநெறிகளை மேற்கொண்டோர் அடைக்கலப் பெருமைகளையும் அறிவர். இந்த தெய்வ மகள் கண்ணகியை இக்கணமே அடைக்கலமாகக் கொள்வாயாக...” என்று கவுந்தி அடிகள் கதை வடிவில் சாயலன் மனைவிக்கு அடைக்கலப் பெருமைகளாய் உணர்த்தினார்.


ஞாயிறு மேற்கு திசையில் மறையும் வேளையில் தான் அடைக்கலமாகக் கொண்ட கோவலன், கண்ணகியோடு மாதரி தன் குடியிருப்பு நோக்கிப் புறப்பட்டாள்.


கொட்டிலில் தாம் விட்டு விட்டு வந்திருந்த கண்றுகளின் நினைப்போடு வீடு திரும்பும் பசுக்களும்,  ஆட்டுக்குட்டியுடன் கோடறியும் உறியுமாக தோளில் சுமந்து வரும் இடையரும்,  அணிந்திருக்கும் வளையல் கலகலக்க அவரைச் சூழ்ந்து வரும் இடைச்சியரும், காவற்காடும், அகழியும், விற்பொறிகளும், கறுத்த விரல் கொண்ட  கருங்குரங்கு தோற்றத்தில் பொறிகளும், கல்லினை வீசும் கவண்களும்,  எண்ணெய் நிரம்பிய   மிடாக்களும்,  செம்பு—இரும்பு காய்ச்சி உருக்குவதற்கான உலைகளும்,  கழுத்தை நெறித்து முறுக்கும் சங்கிலிகளும், மதிலேற உபயோகிக்கும் கவறுபட்ட கொம்புகளும், அம்புக் கட்டுகளும்,  மறைந்திருந்திருந்து போரிடுவதற்கு வாகான ஏவறைகளும்,  மதிலின் உச்சி பற்றி ஏற்வோர் கைகளை நெறிக்கும் ஊசிப்பொறிகளும், கதவின் உட்பகுதியில் குறுக்குச் சட்டம் போன்று பொருத்தப்படும் கணையமும், களிறுப் பொறி—புலிப்பொறி போன்ற ஏகப்பட்ட பொறிவகைகளும் நிரம்பப்பெற்ற  நீண்ட நெடிய கோட்டை வளைவுகளின் மீது பாண்டியரின் கயல் சின்னம் பொறித்த கொடிகள் காற்றில் அசைந்து  கொண்டிருந்தன. அத்தகைய மதில் வாயில் ஒன்றைக் கடந்து ஆயர்குலப் பெண் மாதுரி தான் அடைக்களமாகப் பெற்ற  கண்ணகி—கோவலனுடன் தன் வீட்டை நெருங்கினாள்.


கண்ணகி தன் வீட்டிற்கு வந்ததில் ஏகப்பட்ட சந்தோஷம் மாதுரிக்கு.  ஆய்சியர் வாழ்வு வாழும் தன் வீடு கண்ணகிக்கு அசெளகரியமாய் இருக்கும் என்ற எண்ணத்தில், வேலி சூழ்ந்த பந்தலையும் கொண்ட ஒரு சிறிய அழகிய வீட்டை அந்த இளம் தம்பதிகளீன் தங்கலுக்காக ஏற்பாடு  பண்ணினாள்.  ஆயர்க்லப் பெண்கள் சிலரையும் கூட்டுவித்து புது நன்னீரில் கண்ணகி நீராடும்படிச் செய்தாள்.  இந்த இடத்திற்கு கண்ணகி புதுசு என்பதினால் தன் மகள் ஐயையை கண்ணகியின் சிறுசிறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்பாடு செய்தாள்.  ஆயர்குல மகளிர் சிலரை அழைத்து கண்ணகியின் சமையல் தேவைக்காக புதுப் பாத்திரங்களை வரவழைத்தாள்.  அவர்கள் பாத்திரங்களோடு மட்டுமல்லாது  காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு வந்தனர்.   அவை என்னன்ன என்று பட்டியலிடவும் செய்கிறார் இளங்கோ.


பூவாது காய்க்கும் திரண்ட சதைப்பிடிப்பு கொண்ட முதிர்ந்த பலாக்காய், வரிகளிட்ட வெள்ளரிக்காய், மாதுளங்காய், மாங்கனி, வாழைக்கனி, செந்நெல், அரிசி,  தம் குலத்திற்குரிய பால், நெய் இவற்றுடன் சென்று “வளையல் அணிந்த அழகான பெண்ணே! இவற்றைக் கொள்வாயாக!” என்று கொடுத்தனர். 

புன்முறுவலுடன் அவற்றை வாங்கிக் கொண்ட கண்ணகி, அரிவாள்மனை கொண்டு காய்களை அரிந்தாள். அவள் விரல்கள் சிவந்தன; வியர்த்தது முகம்;  சிவந்தன கண்கள். உதவிக்கு சமையல் அறையில் ஐயை..  வைக்கோல் உதவியுடன் தீ மூட்டி ஐயையுடன் சேர்ந்து தன் காதல் கணவனுக்கு ஏற்ற உணவை சமைத்து முடித்தாள்.


 தொழிலில் வல்லவரால், வெண்மையான பனை ஓலையில் முடையப்பட்ட தடுக்கு அது.  அதில் கோவலனை அமர்த்த வைத்து புதிய மண் பாத்திரத்து நீர் கொண்டு தன் கணவனின் கால்களை தன் மலர் விரல் அழுந்த கழுவித் துடைத்து வணங்கினாள் கண்ணகி.  நிலத்தில் நீர் தெளித்து மெழுகினாள்.  குமரி வாழையின் குருத்தை மெழுகிய இடத்தில் பரப்பினாள்.  அதில் உணவை இட்டு, “அடிகளே! இப்போது அமுதை உண்பீராக..” என்று அன்புடன்  கணவனைப் பார்த்துச் சொன்னாள்.


அரிய வேதததில் அரசர்களுக்கு அடுத்தபடியான வணிகர்க்கு உணவு உட்கொள்ளத் தொடங்குவதற்கு முன்பு என்ன நியமனம் கூறப்பட்டிருக்கிறோ அந்த கடனைச் செய்த பின் உணவை உட்கொள்ள ஆரம்பித்தான் கோவலன்.  'இந்த ஆயர்பாடியில் கோவலன் உணவு உட்கொள்வதைப் பார்த்ததும், அந்த ஆயர்பாடியில் உணவு உண்ட யசோதை பெற்றெடுத்தச் செல்வன் கோபாலன் தானோ' என்ற எண்ணம் மாதுரிக்கு வந்ததாம்.  அதைத் தொடர்ந்து இந்த கோபாலனுக்கு உணவு படைக்கும் வளைக்கரம் கொண்ட இப்பெண் கண்ணகி, முன்பு தன் குலத்தில் தோன்றிய நப்பின்னையோ’ என்று வியப்பு மேலிட்டதாம்.


விருந்து முடிந்தபின் கண்ணகி கோவலனுக்கு வெற்றிலை—பாக்கு தருகிறாள். அவளைப் பார்த்து நெகிழ்ந்த கோவலன், “பருக்கைக் கற்கள் நிறைந்த பாதையிலே உன் மென்மையான பாதம் பதிந்து நீ பட்ட துன்பத்தை என் தாய்-தந்தையர் அறிந்து எத்தகைய துன்பத்தை அடைந்தனரோ?” என்று வருந்துகிறான். “நான் இவ்விடத்தில் இருப்பதே கனவோ?.. இல்லை, இது நிஜம் தான் எனில் இதுவும் நான் முற்பிறப்பில் செய்த தீவினையின் இன்னும் ஒரு காட்சிப்படுத்துதலோ?..  கனவையும் நிஜத்தையும் பிரித்துப் பார்க்க வல்ல நினைவு சக்தியை நான் இப்போது கொண்டிலேன்... என்  மனம் மிகவும் கலக்கமுற்றிருக்கிறது... வறுமொழியாளரோடு, வம்பப் பரத்தையரோடு கூடிக் கலந்து திரிந்தேன்.. என்னைப் பிறர் தாழ்வாகப் பேசுவதற்கும், அவர்தம் நகைப்புக்கு இடம் கொடுத்தவனாகவும் ஆகிப் போனேன்.. மேலோர் போற்றி வணங்கும் நல்லொழுக்கத்தைப் புறக்கணித்தேன்..  நான் என் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய ஏவல்களையும் செய்யாது ஒழித்தேன்..  எனக்கும் ஒரு நற்கதி வாய்ப்பதற்கு வாய்ப்புண்டோ?..   இளம் வயதிலேயே பேரறிவு படைத்த உனக்கு சொல்லவொண்ணா துயரத்தை அளித்து விட்டேன்.. என் செயல்கள் பழிப்புக்கு இடம் கொடுப்பவை என்பதைக் கூட அறியாதிருந்தேன்..  ‘மதுரைக்குப் புறப்படலாம், எழுக’  என்றவுடன் என்னுடன் புறப்படத் தயாராக எழுந்தாய்!   என்ன செய்தனை, கண்ணகி?..” என்று புலம்பும் அளவுக்குத் துயர் கொண்டான் கோவலன்.


அறவோருக்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோருக்கு பணிவிடைசெய்தலும், சான்றோர் போற்றும் விருத்தினருக்கு உபசாரம் செய்தலும் இல்லறத்தாரின் கடமைகள்.  ஐயனே, தாங்கள் என்னைப் பிரிந்திருந்த காலத்து இந்தக் கடமைகளை நிறைவேற்ற உரிமையற்றிருந்தேன்.  பெரும் புகழும், அரசர் போற்றும் சிறப்பும் கொண்டிருக்கும் உங்கள் தந்தையார் உங்கள் தாயாரோடு வந்து என்னைக் காண வரும் காலத்தெல்லாம் தாங்கள் என்னைப் பிரிந்திருந்த துன்பத்தை அந்த முதியோரிடம் காட்டிக்கொள்ளாது ஒழுகினேன்.  அதை உணர்ந்திருந்த அவர்கள் என் மேல் பாசம் கொண்டு தங்கள் அருட்சொற்களால் தேற்றுவர்.  இருப்பினும் என் புன்சிரிப்பில் புதைந்து போயிருந்த சோகத்தை அவர்கள் அறிந்து கொண்டு வருந்துவர்.  பெற்றோர் வருந்துமாறு போற்றுதற்கல்லாத ஒழுக்கம் தங்களை ஆட்கொண்டிருந்தது.  எக்காலத்தும் தங்கள் மனவிருப்பற்கேற்பவான வாழ்க்கையை நான் மேற்கொண்டிருந்தமையால், நீங்கள் மதுரைக்குப் புறப்பட வேண்டும் என்று கூறியவுடனேயே தங்களுடன் புறப்பட்டு விட்டேன்” என்று நேர்பார்த்து அல்லாது நிலம் பார்த்துப் பதிலளித்தாள் கண்ணகி.


கண்ணகி சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போனான் கோவலன். “குடும்பத்தின் முக்கிய சுற்றத்தாராகிய பெற்றோரையும், பணிமகளிரையும் நெருங்கிய தோழியரையும் விட்டு விட்டு நாணமும், மடனும், நல்லோர் ஏத்தும் பேணிய கற்பையும் பெரும் துணையாகக் கொண்டு என்னோடு வந்து இங்கு என் துயர் களைந்த பொன்னே, கொடியே, பூங்கோதாய், நாணின் பாவாய், நீனில விளக்கே, கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி..” என்று தன் அப்போதைய உணர்வுகளுக்கு வடிகாலாய் பலவாறு கண்ணகியைப் பாராட்டி 'இனிமேல் அவள் இல்லாமல் தான் இல்லை' என்கிற நிலையில் ஒன்றிப் போகிறான்.  


ஒரு வினாடி தாமதித்து, “நின் சீறடி சிலம்புகளுள் ஒன்றை விற்று வருவேன்.  நான் வரும் வரை எந்தக் கலக்கமும் இல்லாமல் நீ இருக்க வேண்டும்.. அதுவே நான் வேண்டுவது..” என்றவன், சட்டென்று தன் கயல் நெடுங்கண் காதலியைத் தழுவிக் கொண்டான். கண்ணகி அந்தக் குடிலில் தான் திரும்பி வரும் வரை தனித்து இருக்க வேண்டுமே என்ற துயரில் அவன் கண்கள் கலங்குகின்றன. அந்தக் கலக்கத்தில் துளிர்ந்த கண்ணீரை கண்ணகி அறியாதவாறு மறைத்து சமாளித்து ஒற்றைச் சிலம்புடன் அந்த ஆயர் வீட்டை விட்டு வெளி வந்து தளர்ந்த நடையுடன் தெருவில் காலடி பதிக்கிறான்.


அதே தருணத்தில் எதிரே எருது ஒன்று பாய்ந்து வருகிறது.  அவன் சார்ந்த குலம் இதை ஒரு சகுனத்தடையாகக் கருதுவதில்லையாதலாலும் எருது எதிர்த்து வருவதை இழுக்கென அறியாதவனாய் கோவலன் தளர்ந்த நடையிலேயே அருகிலிருந்த பூதாதுக்கள் சொரிந்திருந்த மன்றத்தைக் கடந்தான்.  திருக்கோயில்களில் பணிபுரியும் மாதர் வாழும் தெருவையும் கடந்து கடைத் தெருவிற்குள்  நுழைந்தான்.   


  (தொடரும்)


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி


16 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிலப்பதிகாரக் கதை, தங்களின் எழுத்துக்களில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்றுகொண்டு உள்ளது. வியப்புடன் ஆழ்ந்து படித்து வருகிறேன்.

தொடரட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

இரசித்துப் படிக்க
அந்தச் சூழலுக்கே சென்றது போலிருந்தது
வர்ணனைகள் எதுவும் விட்டுவிடாது
சொல்லிப் போனவிதம் மனம் கவர்ந்தது

வாழ்த்துக்களுடன்...

ஸ்ரீராம். said...

விருந்தினர் வருவதை உறவுகளே விரும்பாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படியே சென்றாலும் குறைந்த கால அளவே அங்கு கழிக்க வேண்டிய காலம் இது! அந்தக் கால விருந்தோம்பல் இவற்றை நினைவு 'படுத்துகிறது'!

குடியிருப்பு நோக்கிச் செல்லும்போது வழியில் காணும் காட்சிகள் வர்ணனை ரசிக்கத்தக்கது.

மாதுரி, அவள் மகள் ஐயை... எப்பவோ படித்து மறந்தே போன விவரங்கள்!

கயல் நெடுங்கண் காதலி! ஆஹா!




வே.நடனசபாபதி said...

எதிரே பூனை வருவதுதான் சகுனத்தடை என்பார்கள். எருதும் கூடவா?

கோவலனோடு மதுரையில் இருப்பது போன்ற உணர்வை தந்திருக்கிறீர்கள். தொடர்கிறேன்

மோகன்ஜி said...

ஜீவி சார்!

விருந்தோம்பலை அழகாய் விவரித்துப்போன வரிகள்: கோட்டையின் அழகும்,அக்காலத்தே கையாளப்பட்ட படைக்கலங்கள் மற்றும் தற்காப்பு ஏற்பாடு விவரங்களின் துல்லியமும், மனம் திருந்தியவன் கொள்ளும் கழிவிரக்கம் மிளிரும் கோவலன் சொற்களும், செயல்பாடும் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன.

கோவலன் எனும் பெயர் வடமொழியின் கோபாலனின் தமிழ் உரு. ஆநிரை காக்கவல்லவன் எனும் பொருள். ஆதலின் கண்ணகியும் நப்பின்னை என ஆய்ச்சியர்களுக்குத் தோன்றுகிறது போலும்.

சகுனம் பார்க்கும் முறைமையில் எருமை இடமாய் வந்தால் நன்மையே விளையும் என்பார். மனையடி சாத்திரத்தில் தான் புதுமனை புகும்போது எருமை எதிர்படலாகாது என்பர். ஒரு வேளை கோவலனுக்கு 'வீடு'பேறு கிடைக்கப் போகும் வகைமையான் எருமை எதிர்ப்பட்டு குறிப்புணர்த்தியது போலும்!

தொடருங்கள் ஜீவிளங்கோ அடிகளே!

தி.தமிழ் இளங்கோ said...

ஒரு இலக்கிய நாவலைத் தொடர்கின்றேன். எழுத்துரு மாற்றம் ஏதும் செய்தீர்களோ?

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்

தொடர் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி,சார் உங்களுக்கு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கதையின் ஓட்டம் போவது தெரிந்து ரொம்பவும் மகிழ்ச்சி. நீங்கள் வியப்பதையும் புரிந்து கொள்கிறேன்.

தொடர்ந்து வாசித்து கருத்திட வேண்டுகிறேன்.

ஜீவி said...

S. Ramani

வர்ணனைகள் எதையும் விட்டு விட மனமில்லாமல் போயிற்று. மற்றபடி அடிகளாரின் வரிகளை ஒத்து அவற்றிலிருந்து விலகாமல் எழுதுவதால் சொல்லிப் போகும் விதம் அவருக்கே உரிய பெருமை ஆயிற்று.

தாங்கள் வாசித்து வருவது குறித்து மகிழ்ச்சி. மிக்க நன்றி, ரமணி சார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவருக்கு

-- 'விருந்து' என்ற வார்த்தையை வைத்து திருவள்ளுவர் விளையாடியிருக்கிறார், பாருங்கள்!

அந்த 'நல்விருந்து சமாச்சாரம்' மக்கள் மனசில் நன்றாக பதிந்து போயிருந்திருக்கிறது. அந்தக் கால வாழ்க்கையின் இலட்சியமே நல் விருந்து வானத்தவருக்கு ஆக வேண்டும் என்பது தான். ஆகவே அதற்கான என்னன்ன வழிகள் உண்டோ அவற்றையெல்லாம் தப்பாமல் கைக்கொண்டார்கள்.

இப்பொழுது 'வானத்தவர்'எல்லாம் கேள்விக்குறிகளானதாலோ, அல்லது கேள்விகளுக்கான தகுந்த விடை கிடைக்காமல் போன விரக்தியாலோ, அல்லது அதற்கான நம்பிக்கை இழத்தலாலோ அதைத் தொடர்ந்த எல்லாக் குறிக்கோள்கள்களும் போயே,
போச்!

கொஞ்ச காலம் முந்தி கூட கையில் வாழை இலை சுருட்டிப் போகிற நண்பரை "என்ன விசேஷம்ங்க?" என்று கேட்டால், "வீட்டுக்கு விருந்து வந்திருக்குங்க.." என்பார்.

இப்போ விருந்து வந்திருக்கிறதைத் தெரியப்படுத்துகிற அந்த சிக்னல் கூட இல்லை..
புரட்டிப் போடும் காலமாற்றத்தின் துவக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதான் தொடக்க காலம் என்றால் இறூதிக் காலம் எப்படி இருக்கும் பாருங்கள்!

மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா, தம்பிப் பயலே-- இது
மாறுவது எப்போ, தீருவது எப்போ, நம்ம கவலை!

-- இது அந்தக்கால அற்புதக் கவிஞர் மருதகாசியின் வரிகள்! 'தாய்க்குப் பின் தாரம்' 1956-ல் வந்த படம். அப்பவே இப்படின்னா, 60 ஆண்டுகள் கடந்து, இப்போ?..
கடிகாரம் மெதுவாகத் தான் சுற்றுகிற மாதிரி இருக்கிறது!

கதை அதுபாட்டுக்க போய்க் கொண்டிருக்கையிலேயே, வரணனைக்கு எந்தப் பஞ்சமும் வைக்க வில்லை, அடிகளார்!.. சிலபதிகாரம் தான் தமிழின் முதல் நாவல் என்று நிரூபிக்க வேண்டுமல்லவா?.. அதற்காக இடையிடையே வருகிற நாவலுக்கான எந்த அம்சத்தையும் ஜாக்கிரதையாக விட்டு விடாமல் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

ஐயை அற்புதமான படைப்போவியம்! மாதுரி குறித்தும், ஐயை குறித்தும் பின்னால் வரும் காட்சிகள் மனதைக் குடையும்!

'கயல் நெடுங்கண் காதலி'-- என்னது இல்லை! அச்சு அசலாக இளங்கோ அடிகளாரின் வார்த்தை வரி! உங்களைப் போலத் தான் நானும்! அந்த வரியின் மேல் ஏற்பட்ட மோகக் காதலில் அப்படியே உபயோகித்துள்ளேன்! அதுவும் 'கருங்கயல் நெடுங்கண் காதலி' என்பார் அவர்!

"கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!
சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய்
மாறி வருவன் மயங்காதொழிகெனக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ உழையோர் இல்லா.."

-- என்பது பாடம்.

தொடர் வருகைக்கு நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

இளங்கோ அடிகளார சொல்ல வந்தது என்னவென்றால்--

"இமிலேறு எதிர்ந்தது இழுக்கென அறியான்
தன்குலம் அறியும் தகுதியன் றாதலின்" -- என்கிறார்.

'எருது ஒன்று எதிர் வந்தது இழுக்கு என்று கோவலன் அறியான். அவன் சார்ந்த குலமும் இதை இழுக்கு என்று கொள்வதில்லை' என்று அர்த்தம் கொள்ளலாம்.

சகுனம் பார்ப்போருக்குத் தான் சகுனம் போன்றவற்றைப் பற்றிய தெரிதல் இருக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான். பார்க்காதோருக்கு அது பற்றிய தெரிதல் இல்லை என்பதினால் அது குறித்து எந்த சலனமும் இல்லை என்றும் கொள்ளலாம்.

அது ஆய்ச்சியர் குலத்தோர் வசிக்கும் இடம். பசுவோ, எருதோ இல்லாமலிருக்குமா?.

பூனை வளர்க்கும் எனக்குத் தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக ஒரு வெள்ளைப்பூனை ஓடிக் கொண்டே இருக்கும். பிஸினஸில் கொடி கட்டிப் பறக்கிறார். 'பூனை குறுக்கே வராத நேரம் இல்லை. என்னைப் பொருத்த மட்டில் எங்கள் செல்லப் பூனை குறுக்கே வருவது தான் நல்ல சகுனம் போலிருக்கு.." என்பார். அதை அவர் ரசித்துச் சொல்வது அதற்காகத் தான் அவர் பூனையே வளர்க்கிறார் போலிருக்கும்.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சார்.

ஜீவி said...

@ மோகன்ஜி

சிறப்புகளை நேர்த்தியாக அடுக்கிச் சொல்லியிருக்கிறீர்கள். அடிகளார் சொல்லியிருப்பதை
கிளிப்பிள்ளை போல நான் எடுத்துச் சொல்லியிருப்பதால் அவருக்கே அதற்கான பெருமை எல்லாம்.

கோவலன்-- கோபாலன். ரவீந்தர்-- ரபீந்தர் மாதிரி, இல்லையா?.. இதற்கு முன்னால் ஒரு இடத்தில் கோவலனை கோபாலன் என்றே அழைத்திருப்பார், அடிகளார். அடுத்து வரும் ஆய்ச்சியர் குரவை பூராவும் கண்ணபிரானுக்கே!

முற்பிறவிக்கான இழுக்குகள் இப்பிறவிக்கான இன்னல்களாகத் தொடரும் எனில், இப்பிறவிக்கான நல்லனவைகள் அடுத்த பிறவிக்கான இன்பங்களா என்று இந்த சிலம்பு காப்பியத்தைப் படித்து வருகையில் கேள்வியாய் என் நெஞ்சில் குடைந்து கொண்டே இருந்தது. கோவலனின் நல்ல செயல்களைப் பற்றி மாடலன் பட்டியலிடுகையில் இந்தக் கேள்வி என்னுள் இன்னும் வீரியமுற்றது.

கோவலன் வானோருக்கு விருந்தானது தான் அவன் செய்த நிகழ் பிறவி நன்மைகளுக்கான பலன் என்று கொள்ளப்படுகிறது போலும். (பிறவித்தளையிலிருந்து விடுபடுவது). அதையே வீடு பேறு என்று நீங்கள் சொன்னாலும் இயற்கையான மரணமாக அது இருந்திருக்கக்கூடாதா என்கிற ஏக்கமும் ஒருபக்கம் இருக்கத் தான் செய்கிறது.

ஜீவிளங்கோ-- ரசித்தேன். தங்கள் சென்ற பதிவின் (அமரர் மஹாஸ்வேதா தேவி பற்றிய பதிவு-- ஜோயகோந்தோன்) பாதிப்பில் இந்த அழைப்பு தங்கள் நெஞ்சில் கிளைத்தது போலும். தங்கள் ரசனைகளுக்கு நன்றி, மோகன்ஜி!

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

//ஒரு இலக்கிய நாவலைத் தொடர்கின்றேன்.//

ரொம்பவும் அர்த்தம் நிரம்பிய் ஒரே வரி. அந்த நாவல் கோட்பாடுகள் உங்கள் மனசை விட்டு அகலாது பதிந்து போய்விட்டது போலும். எனக்கும் அப்படித்தான். உரைநடையில் சிலப்பதிகார வரிகளை மாற்றி எழுதும் போதெல்லாம் ஒரு நாவலின் தோற்றமே மனதை விட்டு அகலாது நிலைகொள்கிறது. தொடர்ந்து வாசித்து கருத்திடுவதற்கு நன்றி, நண்பரே!

சமீபத்தில் நண்பர் ஸ்ரீராம் பொடி எழுத்துக்களை பெரிதாக்கிப் படித்தேன் என்றார். நம் வைகோ சாரும் பொடி எழுத்துக்களை படிப்பது சிரமமாக இருக்கிறது என்று ஒரு தடவை சொல்லியிருந்தது சிறு உரு எழுத்துக்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் என் நினைவுக்கு வரும். அதனால் இந்தத் தடவை என்னன்னவோ முயற்சிக்குப் பிறகு இந்த உரு கிடைத்திருக்கிறது. அடுத்த தடவை எப்படி வருகிறது என்று பார்க்கலாம். அடுத்த பதிவிலும் இப்படியே தொடர வேண்டும். பார்க்கலாம். நன்றி, இளங்கோ சார்!

ன்சொல்லியிருந்தது

மோகன்ஜி said...

நன்றி சார்!

ஜீவி + இளங்கோ = ஜீவிளங்கோ எனப் பொருள் கொள்க !
அடிகளாகவே மாறி வருகிறீர்கள் என்று சொல்ல வந்தேன்.
சிலம்புடன் ஒன்றி விட்டீர்கள் நீங்கள். உடன் ஓடிவரப் பார்க்கிறேன் !!

ஜீவி said...

@ மோகன்ஜி (2)

புரிந்தது. நன்றி,ஜி!

ஓடி வர பார்க்கிறதா?.. நான் ஆமை வேகம்,ஜீ!

Geetha Sambasivam said...

மாடலனிடம் கோவலன் சொன்ன கனவு குறித்து இதில் ஏதும் சொல்லப்படவில்லை. இருவரும் ஐயையுடனும்,மாதுரியுடனும் சென்றதே வருகிறது. தொடர்பு எனக்குக் கிடைக்கவில்லையா?

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

தொடர்பைத் தேட வேண்டாம்.

சில இடங்களை சுவாரஸ்ய சுருக்கம் கருதி 'தாண்டி' வந்திருக்கிறேன். ஆய்ச்சியர் குரவையில் எக்கச்சக்கம். எல்லாம் 'சிக்' என்றிருப்பதற்காகத்தான். ! :)))

Related Posts with Thumbnails