மின் நூல்

Tuesday, July 18, 2017

வாழ்க்கை அழைக்கிறது !

         ஒரு வாழ்வியல் தொடர்


1.   இன்று புதிதாய்ப் பிறந்தோம்


"எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!" என்று வியந்து போற்றிப் புகழ்வார், பாரதியார்.


இன்பம் எப்பொழுதுமே இனிப்பான விஷயம். அது துய்ப்பதின்பால் பட்டது. எதையும் அனுபவிப்பதற்கு ஒரு அவா வேண்டும். மனது தான் அவா என்கிற ஓர் அற்புதத்தை சிந்தையில் ஏற்படுத்தி, இது வேண்டும் என்கிற ஆசையைக் கிளறிவிட்டு, அந்த இன்பத்தை அனுபவிக்க தூண்டுகோலாக இருக்கிறது. அந்த ஆசை இல்லையென்றால், பாரதியாரின் கண்ணுக்குக் கோடிகோடியாகத் தெரிந்த அந்த இன்பம் ஒன்று கூட நமக்குப் புலப்படாது. மனம் ஒத்துழைப்பில்லாத எதுவும் இன்பத்தைக் கொடுக்காது.

ஆசைப்படுவதற்கும் ஓர் அர்த்தம் வேண்டும்; ஒரு நியாயம் வேண்டும். ஆசைப்படுவதை அடைய, ஆசையை முன்னிருத்தி அதைப் படிப்படியாக அடைய உழைப்பு தேவை. எந்த உழைப்பும் உற்சாகத்தோடு கலந்து வந்தால் பன்மடங்கு வேகம் கிடைக்கும். ஈடுபாடு இருந்தால், உற்சாகம் தானே கதவைத்தட்டிக்கொண்டு வரும். தானே தனியாகக்கூட வராது; தன்னம்பிக்கையையும் தன் கூடவே கூட்டிக்கொண்டு வரும்.

எல்லா ஆசையும் ஆசையாகி விடாது. நியாயமான ஆசைகளுக்கு எப்பொழுதுமே கண்ணுக்குத் தெரியாத ஒரு தார்மீக பலம் உண்டு.

நியாயமான ஆசையைத் தேர்ந்தெடுக்க நல்லறிவு வேண்டும்; குறைந்தபட்சம், நன்மை-தீமைகளை அலசுகின்ற மனசாவது வேண்டும்.

நந்தகோபால் என் நண்பர். போனவாரம் போன் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார்.

அவரைப்பார்த்ததுமே  குழந்தைகளுக்கு ஏகப்பட்ட உற்சாகம். "அங்கிள்..அங்கிள்.." என்று சுற்றிக்கொண்டு விட்டன. ஆண்ட்டி அவர் கூட வரவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு இன்னும் நெருக்கம் காட்டினர்.

விஷயம் இதுதான். நந்தகோபால் மிமிக்ரி பண்ணுவதில் மன்னன். இன்னொரு பிரபலம் மாதிரி அவர் பேசுவது, நடிப்பது எல்லாம் அச்சு அசலாக இருக்கும். இதைத்தவிர, கைவிரல்களை, முட்டியை இப்படி அப்படி அசைத்து, கோணி, குவித்து, பிரித்து வெள்ளைச்சுவரில் மான், பாம்பு, குதிரை, முயல், யானை என்று ஏகப்பட்ட நிழலுருவங்களை அநாயசமாகப் போட்டுக் காண்பிப்பார்.

ஒருதடவை செய்தது இன்னொருதடவை இல்லை என்று அவர் வரும் பொழுதெல்லாம் விதம் விதமாக வெரைட்டியாக நந்தக்குமார் குழந்தைகளை  உற்சாகப்படுத்துவார். குழந்தைகள் சந்தோஷிப்பதில் அவரும் 'குஷி'யாகி, தானும் ஒரு குழந்தையாகி விடுவார். அது தான் விஷயம்.

இவர் செய்து காண்பிப்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு தங்கள் நண்பர்களுக்கு, "பார்த்தாயா, இதை?" என்று வேடிக்கைக் காட்டுவதில்  குழந்தைகளுக்கும் உற்சாகம்.

ஒருதடவை வீட்டுக்கு வந்தபொழுது, பேச்சோடு பேச்சாக தனனையறியாமல் நந்தகோபால் சொன்னார்: "நான் இப்படி குழந்தைகளோடு விளையாடுவது என் மனைவிக்குப் பிடிக்கவில்லை. 'என்னங்க, இது, குழந்தைகளோடு சரிக்குச் சமமாக?..உங்க வயசென்ன, அவங்க வயசென்ன? நாளைக்கு அதுகளுக்கு உங்க மேலே மரியாதை இல்லாமல் போய்விடும்!' என்று தன் மனைவி குறைப்பட்டுக் கொண்டதாகச் சொன்னார். அதிலிருந்து
'ஆண்ட்டி' அவர் கூட வரவில்லை என்றால், குழந்தைகளுக்கு நந்தகோபாலைப் பார்க்கையில் கூடுதல் சந்தோஷம்.

குழந்தைகள் இருக்கும் வீட்டிற்குப் போனால், சில அன்பர்கள் பழம், பிஸ்கட், சாக்லெட் என்று ஏதாவது வாங்கிக்கொண்டு போவார்கள். குழந்தைகள் அடையும் சந்தோஷத்தைப் பார்த்து, கள்ளம் கபடறியாத அந்த பிஞ்சுகளின் முகம் மலர்வது கண்டு இவர்கள் மனமும் மலரும்.

குழந்தைகளோ, பெரியவர்களோ---இதில் ஒன்றும் பெரிதாக வித்தியாசமில்லை. மனசு மகிழ்கிறதே, மனசு மலர்கிறதே, அதுதான் விசேஷம். அதுதான் முக்கியம்.

மனுஷப் பிறவிகளில் யாரும் 'வேஸ்ட்' இல்லை. 'எத்தனை மனிதர்கள், எததனை குணங்கள்' என்று வியக்கவைக்கின்ற தனித்தனி சுபாவங்கள், வெளிப்பாடுகள் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் உண்டு. கவனித்துப் பார்த்தால், 'அடடா..' என்று ரசிக்கத் தோன்றும்; ரசிப்பதுதான் ஆரம்பப்படி அந்த ரசிப்பில் லயிப்பது அடுத்தபடி. அந்த லயிப்பு தீர்க்கமாகிக் கூடும் பொழுது, இன்னொரு மனுஷனின் ஆத்மாவின் அழகைத் தரிசிக்கும் பொழுது, மனித மேன்மை புரிகிறது.

அது போகட்டும். நந்தகோபால் எதற்கு வந்தார் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேனே?.


(வளரும்)


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

15 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

குழந்தைகளை மகிழ்விக்கத்தானே?

மனோ சாமிநாதன் said...

//எத்தனை மனிதர்கள், எததனை குணங்கள்' என்று வியக்கவைக்கின்ற தனித்தனி சுபாவங்கள், வெளிப்பாடுகள் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் உண்டு. கவனித்துப் பார்த்தால், 'அடடா..' என்று ரசிக்கத் தோன்றும்; ரசிப்பதுதான் ஆரம்பப்படி அந்த ரசிப்பில் லயிப்பது அடுத்தபடி. அந்த லயிப்பு தீர்க்கமாகிக் கூடும் பொழுது, இன்னொரு மனுஷனின் ஆத்மாவின் அழகைத் தரிசிக்கும் பொழுது, மனித மேன்மை புரிகிறது.//

மிக அழகான வரிகள்!

நெல்லைத் தமிழன் said...

"மனம் ஒத்துழைப்பில்லாத எதுவும் இன்பத்தைக் கொடுக்காது" - ஆமாம். இன்பத்தை அனுபவிக்க மனத்தின் ஒத்துழைப்பு அவசியம்.

நந்தகோபால் அவர்கள், குழந்தைகளின் மனதில் ஊட்டும் மகிழ்ச்சியை, ரோஜாவின் விரிந்த இதழ்கள் விளக்குகிறது.

'வாண்டுமாமா' கதைகளை நீங்கள் நிச்சயம் படித்திருப்பீர்கள். குழந்தைகளாக இருந்தபோது அவர் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர். (பிற்காலத்தில் அவரின் வயதான புகைப்படத்தையும், அவ்வளவு பணமில்லாத அவரின் வாழ்வையும் படித்திருக்கிறேன். ஆனால் அவர் எங்களுக்குக் காண்பித்த உலகம் என் மனதைவிட்டு அகலவில்லை. ஒருவேளை அவருக்கு, அவருடைய வீட்டில், எங்கள் மனதில் இருந்த இடம் கிடைக்காமல் இருந்திருக்கலாம்). அதே குழந்தைகள் வளரும்போது, நிச்சயம் அவர்மீதான நெருக்கம், அன்பு அதிகமாகத்தான் ஆகும்.

குழந்தைகளுடன் நெருங்குவது எல்லோருக்கும் சாத்தியமாகாது. அதற்கு தங்கள் வட்டத்தைவிட்டு குழந்தைகள் வட்டத்துக்குள் பொருத்திக்கொள்ளும் தன்மை வேண்டும். நமக்கே நம் நண்பர்கள் அப்படி குழந்தைகளோடு பொருந்திக்கொண்டு அவர்களோடு பேசும்போது, அப்போதுவரை இருந்த நண்பரை அங்கு காணமுடியாது, ஒரு வித்தியாசமான ஜீவனைத்தான் காணமுடியும். அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் நமக்கு வேண்டும்.

தொடருங்கள்.

கோமதி அரசு said...

எனக்கும் குழந்தைகளோடு குழந்தையாக மாறி விளையாட பிடிக்கும்.

நந்தகோபால் குழந்தைகளை சிரிக்க வைத்தார், அவர் வயதான பின் அவரை அந்த குழந்தைகள் மகிழ வைத்தன அப்படித்தானே சார்?

பிறரை மகிழ்விப்பதே பெரிய கலை.வாழக்கையில் நாம் மகிழ வேண்டும் என்றால் பிறரை மகிழ்வாய் வைத்து இருக்க வேண்டும்.

வாழ்க்கை என்பதே அன்பை கொடுத்து அன்பை பெறுவதுதானே!

பதிவு அருமை.

கோமதி அரசு said...

மனிதர்களை நேசிக்க தெரிந்து விட்டால் போதும் என்று சொல்லும் பதிவு அருமை.

சிலர் அவர்கள் இருக்கும் இடத்தை கல கல என்று வைத்து இருப்பார்கள்.
சிலரைப்பார்த்தால் பேசுவதை கேட்டால் மனம் சலிப்பு அடையும்.
திண்டுக்கல் தனபாலன் அவர்களும் இன்று மனதை உற்சாகமாய் வைத்துக் கொள்ள பதிவு போட்டு இருக்கிறார்.

கோமதி அரசு said...

மனுஷப் பிறவிகளில் யாரும் 'வேஸ்ட்' இல்லை. 'எத்தனை மனிதர்கள், எததனை குணங்கள்' என்று வியக்கவைக்கின்ற தனித்தனி சுபாவங்கள், வெளிப்பாடுகள் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் உண்டு. கவனித்துப் பார்த்தால், 'அடடா..' என்று ரசிக்கத் தோன்றும்; ரசிப்பதுதான் ஆரம்பப்படி அந்த ரசிப்பில் லயிப்பது அடுத்தபடி. அந்த லயிப்பு தீர்க்கமாகிக் கூடும் பொழுது, இன்னொரு மனுஷனின் ஆத்மாவின் அழகைத் தரிசிக்கும் பொழுது, மனித மேன்மை புரிகிறது.//

அருமை.

மனிதனின் நிறை குணங்களை மட்டும் ரசிக்க வேண்டும்.

வே.நடனசபாபதி said...

/ஆசைப்படுவதற்கும் ஓர் அர்த்தம் வேண்டும்; ஒரு நியாயம் வேண்டும். /
சரியாய் சொன்னீர்கள். அதனால் தான் தாயுமானவர் பாடினார். ‘ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாங்கட்டி ஆளினும் கடல்மீதிலே’ என்று. ஆனால் சிலர் அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்களே! அதைப்பற்றி என்ன சொல்ல.

நீங்கள் சொல்வதுபோல் நியாயமான ஆசைகளுக்கு எப்பொழுதுமே கண்ணுக்குத் தெரியாத ஒரு தார்மீக பலம் உண்டு என்பது உண்மைதான்.

இந்த வாழ்வியல் தொடரின் ஆரம்பமே நிறைய எதிர்பார்ப்புகளை (ஆசைகளை அல்ல!) ஏற்படுத்தியுள்ளது. காத்திருக்கிறேன் வரும் பதிவுகளுக்காக.

தங்கள் நண்பர் நந்தகோபால் அவர்கள் ஏதோ ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண தங்களின் உதவியை நாடி வந்திருக்கிறார் என எண்ணுகிறேன்.

ஜீவி said...

@ Moonram Suzhi

அழகான அழைப்பு.

நான் அனுப்பும் பின்னூட்டங்கள் எதுவுமே காணோமே? spamல் சேர்கிறதா கவனியுங்களேன்?

Geetha Sambasivam said...

குழந்தைகளோடு குழந்தையாக இருக்கவும், அப்படி மாறவும் கொடுத்து வைச்சிருக்கணுமே! எனக்கு அது தான் ரொம்பவே பிடிக்கும். சின்ன வயசில் இருந்து குழந்தைகள் பலருக்கும் கதை சொல்லுவேன். விளையாடுவேன். அதைப் பார்க்கும் பெரியவங்க கோவிச்சுப்பாங்க! :)

ஜீவி said...

@ டாக்டர் ஜம்புலிங்கம்

குழந்தைகளை மகிழ்விக்கவும், ஒரு காலத்து குழந்தையாக இருந்தவர்கள் தங்களின்
அந்த குழந்தை போழ்தை மீட்டெடுத்தாற் போல தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு குழந்தையாய் மாறிப்போனாற் போல மகிழ்வதுமான ஒரு சுகமான ஏற்பாடு இது.

ஜீவி said...

@ மனோ சாமிநாதன்

தங்கள் வருகைக்கும் மனம் ஒன்றி ரசித்த தங்கள் ரசனைக்கும் நன்றி, மனோ!

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

உணர்ந்ததை அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்.

//நமக்கே நம் நண்பர்கள் அப்படி குழந்தைகளோடு பொருந்திக்கொண்டு அவர்களோடு பேசும்போது, அப்போதுவரை இருந்த நண்பரை அங்கு காணமுடியாது//

உண்மையே. அவர் போல குழந்தைகளோடு பொருத்திக் கொள்ள முடியாமல் அவரின் செயலை ஒரு நடிப்பு போல அவரிடமிருந்து விலகியிருந்து பார்க்கும் பார்வை இது.

// ஒரு வித்தியாசமான ஜீவனைத்தான் காணமுடியும். //

ஜீவன்?.. பிரகிருதி எனலாமோ?..

இப்போது வாண்டுமாமா விஷயத்திற்கு வருவோம். எழுத்தில் குழந்தையுலகோடு நெருக்கமாக போனாலும் ஜாக்கிரதை உணர்வோடு அவர் குழந்தைகளோடு குழந்தையாகிப் போகவில்லை. குழந்தைகளுக்கு அறிவுரையும் ஆலோசனையும் குழந்தைக் கதைகளின் மூலம் வழங்கிய அவர்களுக்கு நெருங்கிய மாமாவாக இருந்திருக்கிறார்.

குழந்தை உலகிலிருந்து பிய்த்து அவரை ஸ்தூல உருவில் வயசு ரீதியாகப் பார்க்கும் பொழுது தான் அந்தப் பெரியவரின் வயசே நமக்கு புரிகிறது. ஆனால் மன ரீதியில் அவரிடம் படிந்து போன அந்த குழந்தை மனசுக்கு வயசாகியிருக்காது என்பதே என் கணிப்பு. அதனால் உங்களுக்கு வயதான போதும் அவர் காட்டிய அந்த குழந்தை உலகை உங்கள் குழந்தை பிராயத்தில் ரசித்தது மனசில் பதிந்து போய் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

ஆனால் கல்கி பத்திரிகைக்கும், அவர் குடும்பத்தினருக்கும் அவர் கிருஷ்ணமூர்த்தியே.
கெள்சிகன் என்ற பெயரில் பெரியவர்களுக்கும் எழுதியவர் அவரே என்பது தெரிந்தால் ஓரளவு வாண்டுமாமாவை வயதான தோற்றத்தில் கற்பனை பண்ணிப் பார்க்க உங்களால் முடியும் என்று நினைக்கிறேன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

குழந்தைகளோடு குழந்தையாக மாறி விளையாடினாலும் நாம் குழந்தையில்லை என்ற யாதார்த்த உணர்வு நம்மில் படிந்திருக்குமா கோமதியம்மா?.. அப்போ அந்த 'மாறி' குழந்தைகளுக்கான அந்தத் தருணத்து ஒரு போக்குக் காட்டல் என்ற உணர்வு நமக்கு இருக்குமோ?.. தெரியாமல் தான் கேட்கிறேன்.

//பிறரை மகிழ்விப்பதே பெரிய கலை.வாழக்கையில் நாம் மகிழ வேண்டும் என்றால் பிறரை மகிழ்வாய் வைத்து இருக்க வேண்டும்.//

மகத்தான உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள். பிறரை மகிழ்வாய் வைத்திருக்க முதலில் நாம் மகிழ்வான சூழலில் இருக்க வேண்டும் என்று சொன்னாலும் சரியே.

//வாழ்க்கை என்பதே அன்பை கொடுத்து அன்பை பெறுவதுதானே! //

அப்படியான ஒரு பண்ட மாற்று இல்லையென்றாலும் அன்பு ஒரு சு.அ.ப.
(சுவற்றில் அடித்த பந்து) அன்பு அன்பையே திருப்பித் தரும். அன்பு செய்து உலகின் பார்வையில் ஏமாந்தவராய் இருக்கலாம். ஆனால் அவர் அளவில் ஏமாந்தோம் என்ற எண்ணமே இருக்காது. அது தான் அன்பின் சக்தி. நம்மை ஆட்டுவிக்கும் மகத்தான சக்தி. உலகின் உன்னத உணர்வு.


நெல்லைத் தமிழன் said...

"ஆனால் கல்கி பத்திரிகைக்கும், அவர் குடும்பத்தினருக்கும் அவர் கிருஷ்ணமூர்த்தியே. கெள்சிகன் என்ற பெயரில் பெரியவர்களுக்கும் எழுதியவர் அவரே" -

ஜீவி சார்.. இது எனக்குப் புதிய செய்தி. கௌசிகன் என்ற பெயரில் எதைப் படித்திருக்கிறேன் என்பது என் நினைவில் இல்லை (இருந்தபோதும், வாங்கும் புத்தகத்தில் அட்டையிலிருந்து அட்டை வரை ஒன்றையும் விடாமல் படிப்பது என் வழக்கம்).

இருந்தாலும், வாண்டுமாமாதான் அதனையும் எழுதினார் என்பது, ஒருவர் சொல்லும்போது ஏற்றுக்கொள்ள இயலாததாகத்தான் இருக்கும். ஏனென்றால் நம் எண்ணத்தில் வாண்டுமாமா என்பவர் சிறுவர்களுக்குப் பிடித்தமான மாமா. (இந்த மாதிரி நம் எண்ணம் அமைந்துவிடுவதால்தான், நகைச்சுவை நடிகர், சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, நடிப்பு நன்றாக இருந்தாலும் நமக்கு அவ்வளவு ர்சிக்கும்படி அமைவதில்லை. இதுபோன்றே, சின்னக் குழந்தையைக் கொஞ்சுபவர்களைப் பார்க்கும்போது, அதுவரை நம்மிடம் சம்பாஷித்துக்கொண்டிருந்த அவரை, அப்போது நாம் காண இயலாது)

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக அருமையான தொடர் சார்! மிகவும் லயித்து வாசித்தோம். வாசிக்க வாசிக்க பாசிட்டிவ் எனர்ஜி உருவானது மிகையல்ல.

எந்த ஒரு செயலையும் உந்து சக்தியும், ஆர்வமில்லாமல் செய்ய முடியாதுதான். நமது ஆசைகள் நியாயமானது என்றால் அதை அடைவதற்கு நிச்சயமாக மறைமுகமான பலம் இருக்கும் ஆம் சார்...அந்த நியாயமான ஆசை நம் சப்கான்ஷியஸ் மைண்டில் தங்கியிருப்பதால் அந்த மனசே நம்மை வழி நடத்திச் செல்லும் என்றும் சொல்லலாம் இல்லையா?

குழந்தைகளோடு குழந்தைகளாக...ஆஹா அதைப் போல ஒரு தருணம் வேறு என்ன சொல்ல...கள்ளம் கபடமற்ற குழந்தைகளுடன் இருக்கும் போது இறைவனோடு இருப்பது போன்ற ஒரு சந்தோஷம் மன நிறைவு ஏற்படத்தான் செய்யும்..

மிகவும் ரசித்த வரிகள் //'எத்தனை மனிதர்கள், எததனை குணங்கள்' என்று வியக்கவைக்கின்ற தனித்தனி சுபாவங்கள், வெளிப்பாடுகள் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் உண்டு. கவனித்துப் பார்த்தால், 'அடடா..' என்று ரசிக்கத் தோன்றும்; ரசிப்பதுதான் ஆரம்பப்படி அந்த ரசிப்பில் லயிப்பது அடுத்தபடி. அந்த லயிப்பு தீர்க்கமாகிக் கூடும் பொழுது, இன்னொரு மனுஷனின் ஆத்மாவின் அழகைத் தரிசிக்கும் பொழுது, மனித மேன்மை புரிகிறது.// இப்படி உணர்ந்துவிட்டால் உலகில் சண்டை ஏது சச்சரவு ஏது...அமைதிப் பூங்காவாக மாறிடாதோ...தொடர்கிறோம் சார் இதோ 2 வது பகுதிக்கு..

--துளசி, கீதா

Related Posts with Thumbnails