Monday, July 31, 2017

மீண்டும் சுஜாதா.... சுஜாதா...

'எப்படி எழுதக் கூடாது?'  என்ற சுஜாதாவின்  தொடரின் நான்காவது பகுதியை வாசிக்க நேர்ந்தது.

 பிற்காலத்து  சுஜாதா அல்லாத எழுத்தின் சாயல் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை போலும்.   அதனால் தான் இந்தப் பகுதியின் முதல்  பகுதி போல் அல்லாமல் சுஜாதா எழுதி வைத்திருந்த குறிப்புகளிலிருந்து எடுத்து எழுதுவது போல ரொம்பவே  அந்தப் பகுதியைக் குறுக்கி விட்டார்கள்.

குறுக்கியது தெரியாமல் இருக்க,  சுஜாதா எழுதிய இரண்டாவது சிறுகதையான 'ஒரு    பெரிய மனிதரும், பிக்பாக்கெட்டும்'  கதையை அப்படியே பிரசுரித்திருக்கிறார்கள்.  1962-ஆம் வருடத்திய  டிசம்பர் 27
'குமுதம்' இதழில் பிரசுரமான கதை  இது.   'லதா'வின் அட்டைப்பட  குமுதம் இதழ் அது.                                                                                          

சுஜாதா தனது முதல் கதையான 'அதிர்ச்சி'யை  எஸ்.ஆர். ராஜன் என்ற பெயரில்  எழுதியிருந்தார் என்றால்,  இரண்டாவது கதையான ஒ.பெ.ம.பி. கதையை எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

ரொம்ப சாதாரணமான கதை.    ஆரம்ப கால ரங்கராஜன் எதிர்கால சுஜாதாவாக எப்படி வளர்ந்து உருவானவானார் என்று இந்தக் கதையைப் படித்து தாராளமாக வியக்கலாம்.    'எப்படி  எழுதக் கூடாது'   என்பதை விட 'எப்படியும் எழுதலாம்' என்பதைக் கற்றுக் கொடுப்பது தான் சுஜாதா விட்டுச் சென்ற எழுத்துப்  பாணி சாகசமாகத் தெரிகிறது.

முக்கியமாக  இந்தக் கதை சம்பந்தப்பட்ட விவரங்களிலிருந்து ஆச்சரியமான சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நூறு ரூபாய் காசுக்காக ஹைதராபாத்திலிருந்து   கனமான  ஒரு பெட்டி  நிறைய விஸ்கி பாட்டில்களை  கடத்தி வர கதைநாயகன் ஒப்புக் கொள்கிறான்.

ஒரு சின்ன வெள்ளிக் கிண்ணியின்  விலை  வெறும் பத்து  ரூபாய்!

1962-ம் வருடத்திய குமுதம் இதழின் விலை  25  காசுகள்.  ஆக 40 குமுதம் இதழ்களின் விலை ஒரு வெள்ளிக் கிண்ணிக்கு சமம்.  அல்லது  40 குமுதம் இதழ்களை வாங்குவதைத் தவிர்த்து விட்டால் ஒரு வெள்ளிக் கிண்ணி வாங்கி விடலாம்!

கட்டக் கடைசியாக   வழக்கம்  போல  புதிர் இல்லாவிட்டால் எப்படி?..

இந்த வார 'எப்படி எழுதக் கூடாது?' தொடரை வைத்து ஒரு சின்ன புதிர்.


அன்றைக்கு ராத்திரியே அவசர அவசரமாய் 'ஒரு பெரிய மனிதரும் பிக்பாக்கெட்டும்' கதையை எழுதி காகிதம் உலர்வதற்குள் குமுதம் அலுவலகத்துக்கு  போஸ்ட் செய்தேன்.

'அ'வோ,   'ர'வோ,  'சு'வோ  அது கையில் கிடைத்தவுடனே,  கவரைக் கூடப் பிரிக்காமல்,  பரணில் தூக்கிக் கடாசி விட்டார்கள்.

                                                                                                   --  சுஜாதா

'அ'வோ,   'ர'வோ,  'சு'வோ  என்றால் என்ன?


இதான்,  புதிர்!   சொல்லுங்கள்,  பார்க்கலாம்.


இந்தப்  புதிரில் ஒரு மிஸ்ஸிங்கும்  உண்டு.   அதையும் சேர்த்துச் சொல்பவர்கள்  உண்மையில் தமிழ் பத்திரிகை வாசகர் உலகில் கில்லாடிகள் தாம்!...


40 comments:

நெல்லைத் தமிழன் said...

ர-ரா கி ரங்கராஜன் சு-சுந்தரேசன் அ-அண்ணாமலை (எஸ்.ஏ.பி.அண்ணாமலை) - இவர்கள் மூவரும்தான் 'அரசு பதிலை' எழுதுவதாகச் சொல்லுவார்கள். அதாவது பதில்கள் எழுதுவது வாசகர்கள் நினைப்பதுபோல் ஒருவரல்ல, ஆனால் மூவர்கள்.

நெல்லைத் தமிழன் said...

ஒருவேளை, குமுதத்திடம், இந்தத் தொடருக்கான சரக்கு குறைவோ? அதனால்தான் சுஜாதாவின் பழைய கதையினைப் போட்டு ஓட்டுகிறார்களோ? நான் இன்னும் குமுதம் பார்க்கவில்லை.

"1962-ம் வருடத்திய குமுதம் இதழின் விலை 25 காசுகள். ஆக 40 குமுதம் இதழ்களின் விலை ஒரு வெள்ளிக் கிண்ணிக்கு சமம். அல்லது 40 குமுதம் இதழ்களை வாங்குவதைத் தவிர்த்து விட்டால் ஒரு வெள்ளிக் கிண்ணி வாங்கி விடலாம்!" - அப்படியெல்லாம் விலையை ஒப்பு நோக்கக்கூடாது. 74ல், ஒரு கூறு (அளவு) வெண்டைக்காய் 7 பைசாக்குக் கிடைத்தது, 1 வாழைக்காய் 3 பைசா. இப்போ 3 ரூபாய்க்கு வெண்டைக்காயும், 1 1/4 ரூபாய்க்கு வாழைக்காயும் கிடைக்குமா? தங்கம் வெள்ளி விலையை கம்பேர் பண்ணினா, நமக்கு வயத்தெரிச்சல்தான் மிஞ்சும். (எனக்குத் தெரிந்த ஒருவர், 1/2 கிலோ வெள்ளிக் கட்டியை விற்று டிரான்சிஸ்டர் வாங்கினார் 70ல)

Anand, Salem said...

Annamalai, Rangarajan and Sundaresan

நெல்லைத் தமிழன் said...

மிஸ்ஸிங் எழுத விட்டுப்போச்சு. ஆசிரியர் டீமில் இருந்த புனிதன் அவர்கள்.

ஸ்ரீராம். said...

அண்ணாமலை ரங்கராஜன் சுந்தரேசன்.

அரசு!

கோமதி அரசு said...

//ஒரு நூறு ரூபாய் காசுக்காக ஹைதராபாத்திலிருந்து கனமான ஒரு பெட்டி நிறைய விஸ்கி பாட்டில்களை கடத்தி வர கதைநாயகன் ஒப்புக் கொள்கிறான்.//

1962ல் 100 ரூபாய் என்பது பெரிய தொகைதான் அல்லவா?


நிறைய விஷ்யங்கள் தெரிந்து கொண்டேன்.
அடுத்து வந்து சொல்பவர்கள் பின்னூட்டங்களை படிக்க ஆவல்.
புதிர் எனக்கு புரியவில்லை.

G.M Balasubramaniam said...

1962ம் வருட வாக்கில் வந்த குமுதம் வாசித்தவர்கள் பதிவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் அப்படியே இருந்தாலும் புதிருக்கெல்லாம் பதில் சொல்பவர்கள் இன்னும் குறைவாகவே இருப்பார்கள் நான் இந்த ஆட்டத்துக்கு இல்லை

நெல்லைத் தமிழன் said...

"1962ல் 100 ரூபாய் என்பது பெரிய தொகைதான் அல்லவா?" - கோமதி அரசு மேடம்.. இந்த வாக்கியம் என் தந்தையை நினைவுபடுத்தியது. அவர் வேலை பார்க்க ஆரம்பித்தபோது, படிக்காத ஒருவர் சொன்னாராம், 'நூத்துக்கு மேல ஊத்து'. அப்படின்னா, நூறு ரூபாய் சேர்ப்பது ரொம்பக் கடினம். அந்தக் கஷ்டத்தைத் தாங்கி நூறு ரூபாய் சேத்துட்டோம்னா, அதுவே தன்னை இன்னும் பெருக்கிக்கும் (வட்டி வந்து வட்டி வந்துன்னு). என்னிடமும், ஆரம்பத்தில் ஒரு தொகை சேர்ப்பதுதான் கடினம், அதுக்கு அப்புறம் அது தானா வளரும்னு சொல்லியிருக்கார்.

Geetha Sambasivam said...

100 ரூபாய்க்குத் தங்கமே வாங்கி இருக்க முடியும் 62 ஆம் வருடத்திலே! எனக்குத் தெரிந்து அப்போதெல்லாம் கல்யாணங்களில் ஒரு ரூ, 2 ரூ, 5 ரூ எனத் தான் கொடுப்பார்கள். பத்து ரூபாய் கொடுத்தால் பெரிய விஷயம்! நல்ல பட்டுப் புடைவை 50, 60, 75,100 என விற்றதாக என் அப்பா சொல்லுவார்.

Geetha Sambasivam said...

புதிரின் விடையை எல்லோரும் சொல்லி விட்டார்கள். இப்போது அ/இல்லை, ர/இல்லை! சு. மட்டும் இருக்கிறார். புனிதன் இருக்காரா என்னனு தெரியலை. இப்பொதைய குமுதம் பார்ப்பதே இல்லை சொல்லப் போனால் குமுதம், கல்கி, விகடன் போன்ற புத்தகங்கள் படித்துப் பல வருஷங்கள் ஆகி விட்டன. ஆகவே இது பற்றிச் சொல்ல முடியவில்லை.

Bhanumathy Venkateswaran said...

//புனிதன் இருக்காரா என்னனு தெரியலை.//
இல்லை புனிதனும் இல்லை. அவர் மறைந்த பொழுது ஜ.ரா.சுந்தரேசன் அப்புசாமி.காமில் அவருக்காக இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (1)

பதிவு வெளியிட்ட ஐந்தே நிமிடங்களில் பளீரென்று சரியான பதிலைத் தந்த நெல்லைத் தமிழனுக்கு வாழ்த்துக்கள்.

தங்கள் பதிலை உடனே வெளியிட்டால் இந்தப் பதிவின் புதிர்ச் சுவையே சவசவத்து விடும் என்று தாமதமாக வெளியிட்டேன். மன்னிக்கவும்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

சரக்கு குறைவதற்காக இல்லை. சர்க்குலேஷன் எகிற சுஜாதா இன்னும் துணையாக இருக்கிறார் என்பது காரணமாக இருக்கலாம்.

இப்படி இந்தப் பதிவுக்குத் தலைப்பு வைத்தது கூட அதனைப் போன்ற ஒரு காரணத்திற்காகத் தான்.

ஜீவி said...

@ Anand, SALEM

நெல்லைக்கு அடுத்து சேலம். சரியான பதிலை பதிவு பிரசுரமான போதே சொன்ன ஆனந்ததுக்கு வாழ்த்துக்கள்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (3)

மிஸ்ஸிங்கை மிஸ் பண்ணாமல் சொல்லி விட்டீர்களே!

தமிழ் பத்திரிகை உலகின் வாசக வாத்தியார் பட்டம் தங்களுக்கே.

எழுத்தாள வாத்தியார் பற்றிய பதிவில் வாசக வாத்தியார். சரியா?..

புனிதன் பற்றி பின்னால் சொல்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஸ்ரீராம் பதிவை தாமதமாகப் பார்த்திருப்பார் போலிருக்கு.

மூன்றாவதாக சரியான பதிலைச் சொன்னவர் இவர்.

ஏனோ இவர் மிஸ்ஸிங்க்கு முயற்சி செய்யவில்லை.

சமீபத்தில் அப்பாத்துரை சாரையும், ஸ்ரீராமையும் என் புது வீட்டில் சந்தித்த போது, புனிதன் அவர்கள் பற்றி பேசி நினைவு கொண்டது நினைவுக்கு வருகிறது.

ஜீவி said...

@ கோமதி அரசு

நீங்கள் அந்தக் காலத்து 'த' வரிசை தேவர் படங்கள் பார்த்திருப்பீர்கள்.

கடத்தல் சமாச்சாரங்களில் நூறு ரூபாய் பிச்சாத்து பணம்.

புதிருக்கான விடை தங்கள் பெயரிலேயெ இருக்கிறதே!

தொடர்வதற்கு நன்றி.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

1962 வருடத்திற்கும் புதிருக்கும் சம்பந்தமே இல்லை. பத்திரிகைகள் வாசிப்பு பற்றி ஒரு G.K. கேள்வி தான் G.M.B. சார்!

நெல்லைத் தமிழன் போன்ற தேர்ந்த பத்திரிகை வாசகர்களின் விரல் நுனியில் இருக்கும்
விடைகள்!

தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் 'டக்'கென்று பதில் வரும் இவர்களிடமிருந்து!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (4)

1963-ம் வருடத்தில் மத்திய அரசுப் பணியில்-- தபால் தந்தி இலாகாவில்-- வேலையில் சேர்ந்தேன். அப்பொழுது அடிப்படை சம்பளம்+ D.A எல்லாம் சேர்ந்து எனக்கு ரூ.120/- தான்!

ஓட்டலில் அள்வில்லாத சாப்பாடு 50 காசுகள். இரவு உண்டிக்கு சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், பொறியல், சிப்ஸ், கொத்தவரங்காய் வத்தல், தயிர் எல்லாம் உண்டு.

பாண்டிச்சேரி ஆரிய பவன் அந்தக் காலத்து சொர்க்கம்.

கற்பகம் படம் வந்த சமயம் அது. ஒரு நாள் ஆரிய பவனில் மதிய உணவு அருந்தும் பொழுது பக்கத்து டேபிளில் வந்து அமர்ந்த மூவரில் அந்தப் பெண் சூடிகையாக இருந்தார்.
அஜந்தா தியேட்டரில் ஓடும் படத்தின் நாயகி அவர் தான் என்றார்கள்.

ஆமாம். கேஆர்வி தான்!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

உங்கள் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.

முப்பது வருடங்களுக்குப் பின்னால் காஞ்சீபுரத்தில் ஒரு பட்டு ரவிக்கைத் துண்டின் விலை ரூ.150/-!

தங்கள் வருகைக்கு நன்றி.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

புனிதன் சார் இப்போது இல்லை.

இயற்பெயர் சண்முகசுந்தரம். சுந்தர பாகவதுரும் அவரே. தேசபந்துவும் அவரே.

இதோ ஒரு சுட்டி. படித்துப் பாருங்கள்.

https://tamilhelp.wordpress.com/2012/08/20/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0/

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

ஒரு ஸ்டூலில் ஏறி பரணில் எதையோத் தேடும் பொழுது தவறி விழுந்ததால் புனிதன் சாருக்கு மரணம் சம்பவித்ததாக படித்த நினைவிருக்கிறது.

அற்புதமான எழுத்தாளர் அவர். ஆசிரியர் எஸ்.ஏ.பி.க்கு அவரை மிகவும் பிடிக்கும் என்று ஜராசு எழுதியிருக்கிறார்.

ஜராசு, சண்முக சுந்தரம் இருவருமே சேலத்துக்காரர்கள். ஜராசுவுக்கு ஜலகண்டபுரம் என்றால் புனிதனுக்கு தர்மபுரி.

தங்கள் வருகைக்கு நன்றி.vaiyavan mspm said...

Sri Jeevi,
Do you remember me? I am Vaiyavan of Tiruppattur(Vellore Dt.) We have met there. If possible and interested send me a mail to vaiyavan.mspm@gmail.com

நெல்லைத் தமிழன் said...

ஜீவி சார்... நீங்கள் கொடுத்த சுட்டியைப் படித்தேன். யாரும் எந்த அலுவலகத்திலும் முழுமையான சந்தோஷத்துடன் இல்லை என்றும் தெரிந்துகொண்டேன்.

அந்தத் தளத்திலிருந்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்களைப் படிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட நாளின் பெரும்பாலான நேரம் படித்துக்கொண்டிருந்தேன். பகிர்வுக்கு நன்றி.

ஒரு எழுத்தாளர், வாசகர்கள் சோர்வடையக்கூடாது என்பதற்காக பல பெயர்களில் எழுதுவார்கள் என்பதே, சில வருடங்களுக்கு முன் ரவி பிரகாஷ் அவர்களின் தளத்தில் படித்தபிறகுதான் தெரியும். சாவியைப் பற்றி ஓரளவு அவர் தளத்தில் தெரிந்துகொண்டேன்.

ஒரு Empire வடிவமைக்கும் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனை, அவர்கள் காலத்துக்குப் பின்பு அதனை ஏற்று நடத்த சரியான வாரிசு அமையாதது அல்லது அமைந்த வாரிசு அதில் ஆர்வம் காட்டாதது. எனக்குத் தெரிந்து ஒரே விதிவிலக்கு எஸ் எஸ் வாசன் அவர்களுக்குப் பிறகு விகடன் குழுமத்தை ஏற்று நடத்தி அதனை வேறு தளத்துக்கு எடுத்துச்சென்ற ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்கள்.

ஜீவி said...

தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர் வையவைன் பற்றி வாசக நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். நெல்லைத்தமிழன், ஸ்ரீராம், கீதா சாம்பசிவம்?..

ஆனந்த விகடனிலும், கல்கி பத்திரிகையிலும் எழுதிக் குவித்தவர்.

ஏதேச்சையாக இந்தத் தளத்திற்கு வந்து பார்த்தவர் எங்களுடனான வெகு காலத்திற்கு முந்தைய சந்திப்பை நினைவு கூர்ந்து தொடர்பு கொண்டிருக்கிறார்.

எனக்கோ சந்தோஷமான சந்தோஷம். இணையத்தில் எழுதுவதின் மகிமையை என்னவென்று சொல்வது?..

நாங்கள் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து கடிதங்களைப் பரிமாறிக் கொண்டோம் என்றாலும் அவரது இன்றைய முயற்சிகளான இணைய எழுத்துக்களை பூவனம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

கீழே காண்பவை அவரது தளங்கள். நீங்களும் வாசித்துப் பார்க்கலாம்.

https://silappadhikaaramnovel.blogspot.in/
https://vyaasabharatham.blogspot.in/
https://abookoftheday.blogspot.in/
தீக்குளிக்காத விட்டில்கள்.14
https://valmikiramayananovel.blogspot.in/

அன்புடன்,
ஜீவி

ஜீவி said...

பழம் பெரும் எழுத்தாளர் வையவன் முகநூலிலும் எழுதி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

ஜீவி

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

அருமையான ஆய்வு.

ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியத்திற்குப் பிறகு?.. என்ற கேள்வியும் நீள்கிறது.

பராந்தக சோழன் காலத்து சோழ நாடு, இராஜேந்திரன் காலத்து சோழ சாம்ராஜ்யம்
இல்லை தான். வளர்ச்சியின் முகத்தான் பிரச்னைகளும் ஆளுபவரின் அனுபவச் சூழ்நிலைகளும் மாறுபடுகின்றன என்பதை சொல்லத் தான் வேண்டும்.

இருந்தும் விதை நெல் போட்ட காலத்திலிருந்து சோழ சாம்ராஜ்யத்திற்கே உண்டான அந்த ஜீவ ஓட்டம் கடைசி வரை மாறவில்லை என்பதைச் சொல்லாமலிருக்க முடியாது.

ஆனால் வாரிசு வாரிசாக பரம்பரை நீட்சியாய் வாசகர்கள் வாசித்து வந்த தமிழக பத்திரிகைளோ இன்று தங்கள் தொப்புள் கொடி வாசக உறவுகளை இழந்து தவிக்கின்றன என்பது உண்மை.

காலங்களும் கருத்துக்களும் மாறும் என்பது விதியென்றாலும் அந்த மாறுதல்களை தங்களுக்கே உரித்தான தனித்தன்மை ஜீவ ஓட்டத்தில் சொல்ல தவறித் திகைக்கின்றன என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.

தங்கள் தொடர் கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

நீங்கள் கொடுத்த சுட்டியைப் போய்ப்படித்துத் தெரிந்து கொண்டேன்.

ஆனந்த விகடனை அடுத்த தளத்திற்கு பாலசுப்பிரமணியம் எடுத்துச் சென்றது என்னமோ உண்மை. ஆனால் அவர் இப்போது இல்லையே! அவர் மகன் ஶ்ரீநிவாசன் ஆனந்தவிகடனை விற்று விட்டாரோ என எண்ணும்படி இப்போதைய வாசகர்கள் விகடன் குறித்த விமரிசனத்தைப் பகிர்கின்றனர்.

"சேவற்கொடியோன்" என்னும் பெயரில் பாலசுப்பிரமணியம் எழுதிய நாவல்கள் "உன் கண்ணில் நீர் வழிந்தால்" சாந்தா--நட்ராஜ், டாக்டர் முரளி ஆகியோரையும் "என் கண்ணில் பாவையன்றோ!" நாவலையும் அந்த நாவலின் கதாநாயகி சீதாவையும், அவள் சித்தி பெண்ணும் அகம்பாவம் பிடித்தவளுமான கலா, அவளைத் திருமணம் செய்து கொள்ளும் மோகன், சீதாவைத் திருமணம் செய்து கொள்ளும் ரவி ஆகியோரை மறக்க முடியுமா? இந்த நாவல் திரைப்படமாகக் கூட வந்ததுனு நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

"வையவன்" அவர்களுடைய தொடர்கதைகள் பலவும் கல்கியில் வந்து படித்திருக்கிறேன். பெரும்பாலும் வேலூர் சுற்றுவட்டார வழக்கிலேயே எழுதுவார். சரளமாக இருக்கும். ஆனால் இப்போது "அதீதம்" இணைய இதழில் ஓர் "வையவன்" இருக்கிறார் எனச் சொன்னார்கள். அவரும் இவரும் ஒருத்தர் தானா? தெரியலை! வையவனுடைய தளங்களுக்கும் சென்று பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

நெல்லைத் தமிழன் said...

கீதா சாம்பசிவம் மேடம்... காலத்துக்கேற்ப மாறுவது தவறில்லை. ஆனால் அதில் ஒரு நெறிமுறை இருக்கிறது.

ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்களும் இளம் ரத்தத்தில் படம் எடுப்பது போன்ற பலவற்றை முயற்சி செய்தவர்தான். அதில் இழந்ததும் அதிகம் (தங்கள் தந்தையின் பங்களாவை, ராதாகிருஷ்ணன் சாலையில், மியூசிக் அகாடமி ரோடில் இழந்து, தாயுடன் சாதாரண வீட்டுக்கு மாற்றினார்கள்). அதற்கப்புறம் அவர் வெகுவாக மேலெழுந்துவந்தார். விகடனை எப்படி அவர், தன்னுடைய கண்ணாக மதித்தார் என்பதும், எப்படி, தந்தையின் தயாள குணத்தைக் கொண்டிருந்தார் என்பதையும் படித்திருக்கிறேன்.

அவருடைய மகன் தலையெடுக்க ஆரம்பித்ததும், விகடன் குழும தரம் குறைந்துவிட்டது, அவர்கள் கட்சி சார்பாக எழுதுவதும், யாரைப் பகைத்துக்கொள்ளலாம், யாரைப் பகைக்க முடியாது என்பது அறிந்து அதற்கேற்ப எழுதும் கட்டுரைகளும் மாறிவிட்டன. அதாவது, 'நெறி' என்பது மறைந்து, 'பணம் பண்ணுவது' மட்டுமே நோக்கமாக ஆகிவிட்டது. இருந்தபோதும், இன்னும் நக்கீரன் போன்ற இதழ்களின் தரத்துக்கு இறங்கவில்லை. அந்த வகையில் தர இறக்கம் மெதுவாகத்தான் நடைபெற்றுவருகிறது.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம் (1)

ஆனந்த விகடன் எஸ்.பி. யின் கதை ஒன்று 'எல்லோரும் நல்லவரே' என்ற பெயரில் திரைப்படம் ஆகியிருக்கிறது.

சினிமாவின் முடிவில் நகர் புறத்தையே மூழ்கடிக்கும் அளவுக்கு பிற்கால சுனாமி மாதிரி ஒரு வெள்ளம் வரும் பாருங்கள், Cecil B Demile மாதிரி அசத்தியிருப்பார்.

ஆனந்த விகடனின் புதுமையான முயற்சிகளை விமரிசித்து கடிதம் எழுதினால் தவறாமல் தனது லெட்டர் பேடில் தட்டச்சு செய்திருக்கும் வரிகளுக்குக் கீழே கையெழுத்துப் போட்டு பதில் கடிதம் அனுப்புவார். என்னிடம் அப்படியான அவர் கையெழுத்திட்ட கடிதங்கள் நாலைந்து உண்டு. இன்றும் அவற்றை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

திரு. எஸ்.பி.க்கென்ற தனிப்பட்ட பல நல்ல குணங்கள் உண்டு. அவற்றில் ஆ.வி. வாசகர்களுக்கு அவர் கொடுத்த மரியாதை அலாதியானது.

அவர் காலத்தில் தான் ஆனந்த விகடன் பொன்விழா கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக மாவட்டம் தோறும் நடைபெற்றன. தவறாது ஒரு கேப்டன் போல எல்லா மாவட்ட விழாக்களிலும் அவர் கலந்து கொண்ட அழகே அழகு.

அவரின் பின்வாங்காத துணிச்சல் நாடறிந்தது.

வே.நடனசபாபதி said...

ஒரு சில காரணங்களால் தாமதமாகத்தான் உங்கள் பதிவை பார்க்கமுடிந்தது. 1966 ஆம் ஆண்டு கர்நாடகாவில் கதக் என்ற ஊரில் இருந்தபோது குமுதம் இதழ் வாங்குவதற்காக, கதக் இரயில் சந்திப்பில் இருந்த புத்தகக் கடைக்கு மொத்தமே 5 பிரதிகள் தான் வரும் என்பதால் வெள்ளியன்று மாலை ஓடோடி சென்று வாங்கியது நினைவுக்கு வருகிறது.

அப்போதைய விலைவாசியை நினைத்து இப்போது பெருமூச்சுதான் விடமுடிகிறது. 1966 ஆம் ஆண்டில் கதகில் 7 காசுகளுக்கு தேநீரும் ஒரு ரூபாய்க்கு சாப்பாடும் சாப்பிட்டதும் பின்னர் 1970 ஆம் ஆண்டில் பொள்ளாச்சியில் ஒரு லிட்டர் பெட்ரோலை ஒரு ரூபாய் பத்து காசுகளுக்கு வாங்கியதும் எல்லாம் கனவுபோல் தெரிகிறது.


சுஜாதா தந்த புதிருக்கான விடையை எல்லோரும் சொல்லிவிட்டதால் நான் அதை தரவில்லை.


ஜீவி said...

@ நடன சபாபதி

வாங்க, சார். ஓடோடி வாங்குவதற்காக ஏதோதோ மாயப்பொடி தூவி நம்மைச் சுண்டி இழுத்தால் தான் அப்படி வாங்கினோம். இன்றைய குமுதத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு வளர்ந்ததற்கும் அன்றைய வாசிப்பு தான் அடித்தளம், இல்லையா?..

அது சுஜாதா தந்த புதிர் அல்ல. சுஜாதா அவர் வழக்கம் போல் எழுதியிருந்தார். நான் தான் அவர் எழுத்தைப் புதிராக்கினேன்.

அரசு, அரசுத்துறை சார்ந்த, சாராத அன்றைய ஊதியம் -- இன்றைய ஊதியம் என்று நினைத்துப் பார்த்தாலும் பிரமிப்பாகத் தான் இருக்கிறது.

சம்பாதிக்க, செலவு செய்ய என்று வாழ்க்கை போய்க் கொண்டு தான் இருக்கிறது. அன்றைக்கும் அப்படித்தான், இன்றைக்கும் அப்படித் தான் என்பது தான் இதில் உள்ள ஒரே ஒற்றுமை.Thulasidharan V Thillaiakathu said...

அரசு (பதில்கள்) என்பதைச் சொல்லிவிட்டார்கள்!

சுஜாதவைப் பற்றி என்ன எழுதினாலும் வாசிக்கக் கிடைத்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இங்குப் பின்னூட்டங்களைப் பார்த்த போது எழுத்தாளர் வையவன் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. அப்போது நிறைய வாசித்திருக்கிறேன். ஆனால் கதைகள் சட்டென்று நினைவிற்கு வரவில்லை.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தளங்களைக் குறித்துக் கொண்டேன். வாசிக்கிறேன்...பத்திரிகைகள் வாசித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. எப்போதேனும் பயணத்தில் வாங்குவதுண்டு...

கீதா

ஜீவி said...

@ கீதா

சுஜாதாவுக்குக் கிடைத்த வாசகர்களும், இளம் வாசகர்களுக்குக் கிடைத்த சுஜாதாவும் ஒரு காலத்து அழிக்க முடியாத சரித்திரம்.

அவர் கதைகள் அல்ல, அந்தக் கதைகளை அவர் சொன்ன விதம் தான் அவருக்கான வாசகர்களை வயப்படுத்தியிருக்கிறது.

ஆனந்த விகடனில் நிறைய சிறுகதைகளை எழுதிக் குவித்தவர் வையவன். வட ஆற்காடு திருப்பத்தூரின் ஓட்டல் ஒன்றை நிலைக்களனாக வைத்து விகடனில் இவர் எழுதிய தொடர்கதை ஒன்று இன்றும் என் நினைவிலிருக்கிறது. தொடர்கதையின் பெயர் தான் ஞாபகம் இல்லை. 'மணல் வெளி மான்கள்' என்றொரு தொடர். கல்கியில் வெளிவந்தது. அற்புதமான கதை. ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இயல்பான எழுத்துக்குச் சொந்தக்காரர் வையவன். 'ஜங்ஷனிலே ஒரு மேம்பாலம்' என்றொரு தொடர். நினைவிருக்கிறதா?..

நீங்கள் அவரது இணைய எழுத்துக்களை வாசிக்க இருப்பது குறித்து மகிழ்ச்சி.

தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

கோமதி அரசு said...

//1962ல் 100 ரூபாய் என்பது பெரிய தொகைதான் அல்லவா?" - கோமதி அரசு மேடம்.. இந்த வாக்கியம் என் தந்தையை நினைவுபடுத்தியது. அவர் வேலை பார்க்க ஆரம்பித்தபோது, படிக்காத ஒருவர் சொன்னாராம், 'நூத்துக்கு மேல ஊத்து'. அப்படின்னா, நூறு ரூபாய் சேர்ப்பது ரொம்பக் கடினம். அந்தக் கஷ்டத்தைத் தாங்கி நூறு ரூபாய் சேத்துட்டோம்னா, அதுவே தன்னை இன்னும் பெருக்கிக்கும் (வட்டி வந்து வட்டி வந்துன்னு). என்னிடமும், ஆரம்பத்தில் ஒரு தொகை சேர்ப்பதுதான் கடினம், அதுக்கு அப்புறம் அது தானா வளரும்னு சொல்லியிருக்கார்.//

நெல்லை தமிழன் , நீங்கள் சொல்வது உண்மைதான். சேர்க்க ஆரம்பித்து விட்டால் தானா சேர்ந்து விடும். வாண்டு மாமா எழுதிய கதை 'ஆலம் விழுது' என்று நினைக்கிறேன், அப்பாவிடம் டூர் போக பணம் கேட்பார்கள் அப்பா குடும்பசெலவுக்கு போக மீதி இருந்தால் தருவேன் என்பார். குடும்ப செலவை ஏற்று நடத்தும் குழந்தைகள் பணம் சேர்க்க அவ்வளவு கஷ்டப்படும். 'நம்ம குழந்தைகள்' என்று அது சினிமாவாக வந்தது. மாஸ்டர் ஸ்ரீதர் நல்ல குழந்தையாக நடிப்பார்.
சீர்காழி கோவிந்தராஜனின் ஓளயையார் அகவல் அதில் வரும்.

கோமதி அரசு said...

புதிருக்கான விடை தங்கள் பெயரிலேயெ இருக்கிறதே!//

அரசு பதில்களை படித்து இருக்கிறேன்.
ஆசிரியர் குழு அரசு என்பது என்று சொல்வார்கள்.
யோசிக்கவில்லை சார்.

கோமதி அரசு said...

எழுத்தாளர் வையவைன் எழுத்தை படித்தது இல்லை நீங்கள் கொடுத்த சுட்டியில் போய் படிக்கிறேன்.
நன்றி சார்.

கோமதி அரசு said...

மேலும் இரண்டு பின்னூட்டம் போட்டேன் வரவில்லையே!

Related Posts with Thumbnails