மின் நூல்

Monday, August 7, 2017

வாழ்க்கை அழைக்கிறது

         ஒரு வாழ்வியல் தொடர்


முந்தைய  பகுதி:   http://jeeveesblog.blogspot.in/2017/07/blog-post_21.html

பகுதி--2

ந்தகோபாலுக்கு போன ஆண்டு தான் கல்யாணம் ஆயிற்று. முப்பது வயது வரைக் காத்திருந்து பிறகு செய்து கொண்டத் திருமணம். அதற்குள் குழந்தைக்கு அவர் அவசரப்படவில்லை போலிருக்கிறது. அவரே ஒரு குழந்தை என்பது வேறு விஷயம்.

சொந்தத்தில் ஒரு வீடு வாங்க வேண்டுமெனற ஆசை நந்தகோபாலுக்கு வந்திருக்கிறது. கையில் கொஞ்சம் சேமிப்பு இருப்பதாகச் சொன்னார். மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று என்னிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கிறார்.

நந்தகோபால் போன்றவர்களுக்கு ஒன்றைச் செய்ய வேண்டுமென்ற ஆசை வருவதற்கே அவருக்குள் ஆயிரம் யோசனைக்குப் பின்னால் தான் என்று எனக்குத் தெரியும். அதன் சாதக பாதகங்களை அவரும் அவர் மனைவியும் தங்களுக்குள் அலசிப் பார்த்து முடிவில், 'சரி, இதில் இறங்கலாம்' என்ற முடிவிற்கு வந்த பின்னரே, அடுத்தாற்போல் என்ன செயவது என்று என்னிடம் கேட்க வந்திருக்கிறார்.

சொந்தத்தில் வீடு வாங்க வேண்டுமென்ற ஆசை--மேலும் மேலும் அதுபற்றி யோசித்து 'நம்மால் முடியும்' என்று தீர்மானிக்கின்ற நம்பிக்கை--அந்த நம்பிக்கை ஏற்படுத்தும் செயல் வடிவத்திற்கான துடிப்பு= இதுதான் முதல்படி.

"வீடு வாங்க வேண்டுமென்று நீ தீர்மானித்தவுடனேயே 50% ஜாப் ஓவர்" என்று நான் சொன்னதைக் கேட்டு நந்தகோபால் சிரித்தார்.

"என்ன சார்! வீடு வாங்கி, கிரகப்பிரவேசமே பண்ணிவிட்ட மாதிரி முடித்து விட்டீர்கள்?..இப்போத்தானே அதுபற்றி முடிவு செய்து, அடுத்து என்ன செய்வது என்று கேட்க வந்திருக்கிறேன்..."

"அந்த எண்ணம் உங்கள் மனசில் வலுப்பெற்று தன்னம்பிக்கையும், இதுபற்றி மேலும் என்ன செய்யலாம் என்று இன்னொருவரிடம் ஆலோசனை கேட்க வந்த பொழுதே, பாதி வேலை முடிந்த மாதிரி தான்" என்று சொல்லி, "இனி என் வேலை சுலபம்" என்று நந்தகோபாலுக்கு விளக்கினேன். நகர்புறத்தில் வாங்கும் பிளாட், ஊருக்கு வெளியே வாங்கும் தனிவீடு அல்லது நிலம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் வீடு, பொருள்கள் வாங்கிக் கொடுத்து ஒப்பந்தமுறையில் கட்டிக்கொள்ளும் வீடு, பிளாட் என்றால் எத்தனையாவது மாடி, கிரவுண்டு ப்ளோர்-உச்சி-சாதகபாதகங்கள், லிப்ட் வசதி இதையெல்லாம் சொல்லி, வள்ளுவர் கோட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு நடக்கவிருக்கும் 'சொந்தத்தில் வீடு' பற்றிய கண்காட்சியைப் போய்ப் பார்த்துவிட்டு விஷயங்களைச் சேகரம் பண்ணச் சொன்னதுமே நந்தகோபால் முகத்தில் உற்சாகம்.

நான் ஐந்து லட்ச ரூபாய்    அட்வான்ஸ்  பணம் கொடுத்து உதவிய மாதிரியான சந்தோஷத்தில், "தேங்க்யூ சார்!..உங்க ஆலோசனைகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, சார்!" என்று ஆயிரம் நன்றி சொல்லிப் புறப்பட்டார்.

ஒருத்தருக்கொருத்த்ர் பரிமாறிக் கொள்கின்ற சந்தோஷம் மிகமிக முக்கியமானது.

கருத்துக்களை ஒருவொருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் பொழுது,அல்லது புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் பொழுது புதுவிஷயங்களையும் அதே சமயத்தில் மாறுபட்ட கருத்துக்களையும் தெரிந்து கொள்கிறோம். ஒரு விஷயம் பற்றிய உண்மையான பிரச்னைகள், அவற்றை நாமே அணுகும் பொழுதுதான் புரிகிறது. சொந்த அவசியம் கருதி பிரச்னைகளைத்  தீர்க்கக்கூடிய சாத்தியகூறான வழிகளும் நமக்குப் புரிகின்றன.

நான் செய்தது, நந்தகோபால் குடும்பத்தில் ஊன்றிய விதைக்குத் தண்ணீர் ஊற்றி வெளிச்சம் கொடுத்தது தான்; இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

"O.K...go ahead....good luck.." என்று பிறரை  ஆசிர்வதிப்பது எவ்வளவு பெரிய சந்துஷ்டியையும், மன உற்சாகத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது  என்பது லேசில் வெளித்தெரியாத விஷயம்.

நிச்சயம் நந்தகோபால் சொந்த வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்.  இன்னும் ஒரு வ்ருடத்தில் வீடு கட்டி முடித்து கிரகப்பிரவேத்தில் கூட, "சார், எனக்குக் கொடுத்த நம்பிக்கை தான் நான் இந்த வீடு வாங்கக் காரணம்!" என்று முகம் பூரா சந்தோஷ்த்தோடு சொல்வார் என்பதும் எனக்குத் தெரியும்.

கடற்காற்று போல, இலவசமாகக் கிடைக்கின்ற இந்த சந்தோஷங்களை அனுபவிப்பதில் தயக்கமென்ன?..


(வளரும்)


வாழ்க்கையின் ஈடுபாட்டிற்காக அழழகனான பொன்மொழிகளைத் தந்த  நண்பர்களுக்கு நன்றி.

11 comments:

ஸ்ரீராம். said...

சந்தோஷம் என்பது தொற்று வியாதி. சுகமான வியாதி. பரிமாறல்கள் குறைந்துபோன இந்த வாட்ஸாப் யுகத்தில் இதெல்லாம் அவசியத் தேவை.

நெல்லைத் தமிழன் said...

ஆமா ஜீவி சார். அடுத்தவங்க நம்மகிட்ட ஆலோசனை கேட்கும்போது, நமக்குத் தெரிந்திருந்தால் சாதக பாதகங்களைச் சொல்லி, நேர்மறையான உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அவர்களுக்குக் கொடுக்கும்போது, அதுவே அவர்களை சரியான இலக்கை நோக்கிச் செலுத்தும். ஒருத்தரை பாராட்டறதுக்கு, புகழறதுக்கு அல்லது நேர்மறை எண்ணங்களை விதைக்கறதுக்கு காசா பணமா? மனம் மட்டும்தான் வேணும் (இதைப் புரிஞ்சுக்கவே எனக்குப் பல வருடங்களாகிவிட்டது)

@ஸ்ரீராம் - ஆனா வாட்ஸப் யுகத்தில், 'Cool', 'Well', 'Good' போன்ற மெசேஜுகளுக்கு ஒரு அர்த்தமும் இல்லை. வெறும் விட்டேத்தியான தொடர்புபோல்தான் எனக்குத் தோன்றுகிறது. (அதாவது நீ எக்கேடு கெட்டுப்போ என்று சொல்லாமல் சொல்லுவதுபோல்)

Thulasidharan V Thillaiakathu said...

அந்த எண்ணம் உங்கள் மனசில் வலுப்பெற்று தன்னம்பிக்கையும், இதுபற்றி மேலும் என்ன செய்யலாம் என்று இன்னொருவரிடம் ஆலோசனை கேட்க வந்த பொழுதே, பாதி வேலை முடிந்த மாதிரி தான்" // மிகவும் உண்மை சார்!

"O.K...go ahead....good luck.." என்று பிறரை ஆசிர்வதிப்பது எவ்வளவு பெரிய சந்துஷ்டியையும், மன உற்சாகத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்பது லேசில் வெளித்தெரியாத விஷயம்.// ஆம் சார்! பிறரை நாம் சந்தோஷப்படுத்த முதலில் நாம் நம்மைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைத்துக் கொண்டுவிட்டால் அந்த சந்தோஷம் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டு விடும். நம்மைச் சுற்றி உள்ளவர்களை நம்மால் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடிந்தால்...சுற்றிலும் பாசிட்டிவ் எனர்ஜியின் ரிசல்ட் நன்றாகவே தெரியும்...

கடற்காற்று போல, இலவசமாகக் கிடைக்கின்ற இந்த சந்தோஷங்களை அனுபவிப்பதில் தயக்கமென்ன?..// யெஸ் ட்ரூ!

துளசி, கீதா.

கீதா: நாம் நம்மைச்சந்தோஷமாக வைத்துக் கொண்டாலும், நம்முடன் இருப்பவர்கள் மிகவும் நெகட்டிவாகவே, நெகட்டிவான வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அதனிடையிலும் நாம் நம்மை சந்தோஷமாக வைத்துக் கொள்வது ஒரு சவாலே! வைத்துக் கொள்ளும் திறன் நிறையவே வேண்டும். ஏனென்றால் மனித மனதில் எப்போதுமே எதிர்மறைதானே சீக்கிரம் தொற்றிக் கொள்ளும் வியாதி! அதையும் உடைத்துச் சந்தோஷமாக வாழ்பவர்களையும் சந்திக்கும் போது ஏற்படும் சந்தோஷம் நமக்கும் உந்து சக்தி!

ரோஜாவுடனான வாசகம் அருமை! உண்மைதானே!





கோமதி அரசு said...

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே//

திருமூலர் சொன்னது போல் பிறர்க்கு ஒரு இன்னுரைகொடுக்கலாம்.

//நந்தகோபால் குடும்பத்தில் ஊன்றிய விதைக்குத் தண்ணீர் ஊற்றி வெளிச்சம் கொடுத்தது தான்; இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.//

உண்மை , தண்ணீர் இப்போது மிகவும் தேவை இப்போது. அன்பான, எதிர்பார்ப்பு இல்லாத அன்பு , பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய விஷயம் .

எதிர்மறைகளை விரட்டி, நேர்மறை சிந்தனைகளை சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு. நன்றி சார்.


வே.நடனசபாபதி said...

//ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக் கொள்கின்ற சந்தோஷம் மிகமிக முக்கியமானது.//

ஆனால் நம்மில் சிலர் தனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்கு சொல்லக் கூட மாட்டார்கள். அவர்களுக்கு அது ஏதோ ‘தேவ இரகசியம்’ போல.
பிறருக்கு நாம் ஒன்றை சொல்லி அதை அவர் கடைப்பிடித்து அதனால் அவருக்கு கிட்டிய மகிழ்ச்சியை நம்மிடையே பகிர்ந்துகொள்ளும் பொது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியை சொற்களில் வடிக்கமுடியாது. அதை நானும் அனுபவித்திருக்கிறேன்.

தாங்கள் சொல்வதுபோல் கடற்காற்று போன்று இலவசமாக கிடைக்கின்ற இந்த சந்தோஷங்களை அனுபவிப்பதில் தயக்கம் கொள்ளத்த் தேவையில்லை.

சென்ற பதிவுக்கு நான் தந்த பின்னூட்டத்தில் சொன்னது போல இந்த வாழ்வியல் தொடர் நிறைய எதிர்பார்ப்புகளை (ஆசைகளை அல்ல!) ஏற்படுத்தியுள்ளது. காத்திருக்கிறேன் இனி வரும் பதிவுகளுக்காக.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

'சந்தோஷம் என்பது தொற்று வியாதி மட்டுமல்ல; சுகமான வியாதியுமாம்'---

மருத்துவம் சம்பந்தப்பட்ட துறையிலிருக்கும் ஸ்ரீராம் சொல்கிறார். தலையாட்டி ஏற்றுக் கொள்வோம். இந்த வியாதி நீடிக்க என்ன மருந்து என்ற பிரிஸ்கிரிப்ஷன் அவர் கொடுத்தால் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொள்வோம்.

நன்றி,ஸ்ரீராம்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

'இதைப் புரிஞ்சிக்கவே எனக்குப் பல ஆண்டு வருடங்களாகி விட்டது' என்று நெல்லை சொல்வது சபை அடக்கத்திற்காகத் தான் என்று நாமறிவோம். இன்றும் தன் பின்னூட்டங்களில் ஆழ்ந்த கருத்துக்களை அனாயசமாக விதைத்து நம்மைத் தேற்றும் தமிழருக்கு எவ்வளவு ஆண்டுக்கால பழக்கத்தின் அடிப்படையில் விளைந்த பண்பு இது என்று நமக்குத் தெரியாதா, என்ன?..

உங்கள் பணி தொடருட்டும், நெல்லை. நன்றி.

ஜீவி said...

@ துளசி, கீதா

'ஆம் சார்! பிறரை நாம் சந்தோஷப்படுத்த முதலில் நாம் நம்மைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.'

ஆனந்தத்தின் அடிப்படியே அதான். பொன்மொழியாய் சொல்லி விட்டீர்களே! நன்றி.

அடுத்த கேள்வி: நம்மை சந்தோஷமாக வைத்துக் கொள்வது எப்படி?

பிறர் சந்தோஷங்களில் நாம் பங்கு கொள்வது தானே? :))

ஆடுவோமே! பள்ளு பாடுவோமே! ஆனந்த சந்தோஷ சுதந்திரம் அடைந்து விட்டோமென்று-- ஆடுவோமே!

நன்றி, துளசி, கீதா!

//அப்படி வைத்துக் கொண்டுவிட்டால் அந்த சந்தோஷம் ஒவ்வொருவரையும் தொற்றி..//

ஒரு அகலிலிருந்து இன்னொரு அகலிற்கு தீப ஒளி ஏற்றும் கார்த்திகைத் திருவிழா நினைவுக்கு வருகிறது.

நல்ல கருத்துக்கள் மனதுக்கு இதமளிக்கின்றன. நன்றி, சகோதரி!



ஜீவி said...

@ துளசி, கீதா

// ரோஜாவுடனான வாசகம் அருமை! உண்மை! //

அந்த அருமைக்கு இன்னொரு தனிப்பதிவே போட வேண்டும். இல்லையா?..

ஜீவி said...

@ கோமதி அரசு

ஆஹா! திருமூலர் எவ்வளவு கால்த்திற்கு முன்பேயே இதைச் சொல்லி விட்டார்!

'யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே'--

மனத்தில் முடிந்து வைத்துக் கொண்டு அடிக்கடி நினைவு கொள்வோம்.

சமீபத்தில் ஜிஎம்பீ சாரின் பதிவுக்கு (கேள்விகள், கேள்விகள்) போட்ட பின்னூட்டங்கள் நினைவுக்கு வருகின்றன.

புன்னுரைகளுக்குப் பதிலாய் புன்முறுவலோடு இன்னுரைகள் பகிர்வதின் பலம் தெரிந்தது.

இகழ்ச்சிகள் இந்த பலத்தின் முன்னே தூசுக்கு சமானம் என்னும் உண்மையும் புரிந்தது.

தங்கள் வருகைக்கும் இதமான சொற்களை எடுத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ நடன சபாபதி

தேவ ரகசியம் போல -- அடக்க முடியாமல் சிரித்தே விட்டேன்.

தங்கள் இனிய எண்ணங்கள் மனத்திற்கு சந்தோஷத்தை அளிக்கின்றன.

தொடர்கிறேன். தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்புடையதாய் இந்த பதிவுத் தொடரை அமைக்க முயற்சிக்கிறேன்.

மிக்க நன்றி, நண்பரே!


Related Posts with Thumbnails