Saturday, February 2, 2019

பாரதியார் கதை

                                          அத்தியாயம்-- 28


 பாரதியை  ஈரோடு ரயிலடியில் பார்த்து அழைத்து வரச் சென்றிருந்த ச.து.சுப்பிரமணியனுக்கு அன்று மாலை பாரதி பேசவிருந்த சொற்பொழிவின் தலைப்பே சுவாரஸ்யமாக இருந்தது. 'மனிதனுக்கு மரணமில்லை' யாமே?..  அப்படி என்ன தான் அந்த மீசைக்காரர் இந்தத் தலைப்பில் பேசி விடப் போகிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலிலேயே வக்கீல் தங்கப்பெருமாள் பிள்ளையுடன் இவரும் போயிருந்தார்.

பாரதியின் பேச்சைக் கேட்கப் போனவருக்கு மேடையில் பாரதி உட்கார்ந்திருந்த தோரணையே மனசு பூராவும் வியாபிக்கிறது.  பாரதி பேசி தான் கேட்ட அந்தக் கருங்கல் பாளையம் கூட்டம் பற்றி பிற்காலத்தில் ஒரு கட்டுரையே எழுதி பிரமித்திருக்கிறார்.  சுதேசமித்திரனில் பாரதி எழுதிய  கட்டுரை அவர் பேசிய பொருள் பற்றி நமக்குத் தெரிவிக்கிறதென்றால் ச.து.சு. யோகியார் கட்டுரை அந்தக் கூட்டத்தை விடியோ எடுத்த மாதிரி ஒளிப்படமாய் மனசில் ஓடுகிறது..

"... மூன்று மணி நேரம் பண்டிதர்களின்  மூச்சு முட்டும் முக்கடித் தமிழ்; அதுவரையில் பாரதி ஆடவில்லை--அசையவில்லை.  சுவாஸம் விட்டாரோ என்னவோ, அது கூட சந்தேகம்.  ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பது போலத் தோன்றியது.  மீசை முறுக்கும் போதன்று, வேறு யாதொரு சலனமும் கிடையாது.  ஆனால் அவர் முறை வந்தது; எழுந்தார்.. எழுந்தார் என்பது தவறு.. குதித்தார். நாற்காலி பின்னே  உருண்டது. பேச்சோ?.. அதில்  வாசகசாலையைப் பற்றி   ஒரு வார்த்தை கூடக் கிடையாது.   பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்கள் முக்கால் நிமிஷ முடிவுரை கூடப் பெறவில்லை.. எடுத்த எடுப்பிலேயே   "நான் மனிதனுக்கு மரணமில்லை என்கிறேன்.." என்றார். அவ்வளவு  தான்.  பாடலானார்.  அடாடா! அவர் பாடும் போது கேட்க வேண்டும்.  அது என்ன மனிதன் குரலா? இல்லை, இடியின்  குரல். வெடியின்  குரல்.  ஓ..ஹோ..ஹோ'.. என்றலையும்  ஊழிக்காற்றின்  உக்ர கர்ஜனை.  ஆனால் அவைகளைப் போல் வெறும் அர்த்தமில்லாத வெற்றோசையல்ல; அர்த்தபுஷ்டி நிறைந்த அசாதாரண வீர்யத்தோடு கூடிய  வேதக் கவிதையின் வியப்புக் குரல்.." என்று வியக்கிறார்.

"நெருப்புத் தெய்வத்தை நெஞ்சிலே கொண்ட அவர் பேசும்  போது உலகமே கிடுகிடுவென்று நடுங்குவது போல் தோன்றும்.  மகாகாளியே ஆணுருவம் தாங்கி நம்முன் மகா தாண்டவம் செய்வது போலிருக்கும்.. மூட எண்ணங்கள், முட்டாள் கொள்கைகள், மொண்டி  ஞானங்கள், சண்டித் தனங்கள், குற்ற நினைபுகள், குறுகிய   நோக்கங்கள் இவற்றின் மேலெல்லாம் சீறி விழுவார்.  சள்ளெனக் கடிப்பார், சிரிப்பார். வெறி கொண்டவர் போல் குதிப்பார்.." என்று அனுபவித்து வர்ணிக்கிறார்.

ச.து.சு.   பாரதியைப் பற்றிக்  கேள்விப்பட்டிருக்கிறாரே தவிர
அப்பொழுது தான் முதன் முதலாக பாரதியைப் பார்க்கிறார்.  கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள்.  பாரதியைப் பார்த்த, அவர் பேச்சைக் கேட்ட அன்றையிலிருந்தே ச,து. சுப்பிரமணியனுக்கும் பாரதி மாதிரி கவிதை பாட வேண்டும், மேடைகளில் பேச வேண்டும் என்று ஆர்வம் வந்து விட்டது.  போதாக்குறைக்கு தன் பெயர் தான் பாரதியின் பெயரும் என்ற மன நெருக்கம் வேறே.   தனது சிறுவயதிலேயே பால பாரதி என்ற பட்டமும் பெற்றதில் பெரும் பெறுமை இவருக்கு. 
                                                                                                       
ச.து.ச. யோகியார் பற்றி ஒரு சின்ன குறிப்பாவது சொல்ல வேண்டும்.  தந்தை துரைசாமி கேரளப் பகுயைச் சேர்ந்தவர் ஆயினும் பிற்காலத்தில் இந்தக் குடும்பமே சேலத்திற்கு அருகிலுள்ள சங்ககிரிக்கு வந்து தங்கி விட்டதால், சுப்பிரமணியனும் சங்ககிரி துரைசாமி சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டார்.  பிற்காலத்தில் தமிழகத்தின் மிகச் சிறந்த கவிஞராய் இவர் ஜொலித்தார் என்பது வரலாறு.  வேதாரண்ய உப்பு  சத்தியாகிரகத்தில் சிறை சென்ற தேசப்பக்தரும் ஆவார்.  பாரதியாருடன்  நெருக்கம்  கொண்ட, சந்தித்த, அவர் பேச்சைக் கேட்ட யாருமே சோடை போனதில்லை  என்பது வரலாறு!..

சரியாகச் சொல்லப் போனால் கருங்கல் பாளையத்தில் பாரதி பேசிய கூட்டம் கூட அவரது கடைசிக் கூட்டம் அல்ல.
கருங்கல் பாளைய வாசகசாலையில் பாரதி பேசியதைக் கேட்டு அசந்து போன நண்பர்கள் தங்கள் ஊருக்கும் வந்து பாரதி பேச வேண்டும் என்று அன்பு கோரிக்கையை ஆசையுடன் வைத்தனர்.  கருங்கல் பாளையக்  கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவதாக இருந்த பாரதி
அவர்களின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல் சம்மதிக்கிறான்.

ஈரோடு வாய்க்கால் கரையில் அடுத்த நாள் பாரதி பேசுவதாக  ஏற்பாடாயிற்று.  இந்த கூட்டத்தில் பாரதி 'இந்தியாவின் எதிர்கால நிலை'  என்ற தலைப்பில் பேசினார்.  நினைத்தால் நெஞ்சு  குமையத்தான்  செய்கிறது. இன்றைக்குக் கூட இந்தியாவின் எதிர்கால நிலை பற்றிக் குறிக்கோளோ  அக்கறையோ கவலையோ இன்றி மேம்போக்கு அரசியல் 'நடத்தும்'  தலைவர்கள் நிறைந்த நாட்டில் அன்றைக்கே பாரதி இந்தியாவின் எதிர்கால நிலை குறித்து திட்டவட்டமான கருத்துக்கள் கொண்டிருந்து அதுபற்றி பேசியும் இருக்கிறான் என்பது அந்த யுக புருஷனின் பெருமையாகத் தான்  தெரிகிறது.

பாரதியார் எதற்காக எதைச் செய்கிறார் என்பது அவர் மனசுக்கே தெரிந்த காரியமாய் பல விஷயங்களில் இருந்திருக்கிறது.  பாரதியாரின் மனத்தைப் புரிந்து கொண்ட அவரோடு நெருக்கம் கொண்டிருந்த சிலருக்கு ஒரு வேளை பாரதியாரின் செயல்கள் புரிந்திருக்கலாம்.  பாரதியார் காலத்திலேயே பாரதியார் செய்திட்ட சில காரியங்கள் பலருக்கு விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் இருந்திருக்கின்றன.   பாரதி பல நேரங்களில் பலரால் புரிந்து கொள்ள முடியாதவராய் பலரின் எதிர்ப்புகளை எதிர் கொண்ட நபராய் வாழ்ந்திருக்கிறார்.

பாரதி அன்பர் கனகலிங்கத்திற்கு பாரதி முப்புரி நூல் அணிவித்த  நிகழ்வு அதில் தலையாயது.    அந்த நிகழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு இரு நூல்கள் ஆதாரமாக இருக்கின்றன.     1.  முப்புரி நூல் போட்டுக் கொண்ட அந்த நிகழ்வின் நாயகனான பாரதி அன்பர் கனகலிங்கமே எழுதியுள்ள 'என் குருநாதர் பாரதியார்' என்ற நூல்.  2.   அந்த நிகழ்வின் பார்வையாளராக இருந்த வ.ரா. அவர்கள் எழுதியுள்ள 'மகாகவி பாரதியார்' என்ற பாரதியாரின் வாழ்க்கை வரலாறு நூல்.  இந்த இரண்டு பேரும் அந்த நிகழ்வு சம்பந்தப்பட்டவர்கள் என்பதே அவர்கள் சொல்வதின் நம்பகத்தன்மைக்கான ஆதாரங்கள். 

'..... சுவற்றில் லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகியோர் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.  அந்தப் படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.   படங்களின் அடியில் ஒரு  பிச்சுவா கத்தி.  அதற்கும் படங்களுக்கும் பாரதி குங்குமப் பொட்டிட்டு வணங்கினார்.  பின்னர் பராசக்தியைப் பணிந்து போற்றி பாடல்களைப் பாடினார்..'

'ஒரு நாள் காலை எட்டு மணி  இருக்கும்.  அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து பாரதியாரின் வீட்டுக்கு வந்தேன்...' என்று வ.ரா. பாரதியார் பற்றிய தமது நூலில் விவரிக்கிறார்:  'வீட்டின் கூடத்தில், சிறு கூட்டமொன்று கூடியிருந்தது.   நடுவில் ஹோமம் வளர்க்கிறாற்போல புகைந்து கொண்டிருந்தது. ஓர் ஆசனத்தில் பாரதியார் வீற்றிருந்தார். இன்னொரு ஆசனத்தில் கனகலிங்கம் உட்கார்ந்து கொண்டிருந்தான். புரொபஸர் சுப்பிரமணிய அய்யர் போன்ற பல பிரமுகர்கள் இருந்தார்கள்.

'என்ன நடக்கிறது என்று மெதுவாகப் புரொபஸரைக் கேட்டேன்.  "கனகலிங்கத்திற்குப் பூணூல் போட்டு,காயத்ரீ மந்திரம் உபதேசமாகிக் கொண்டிருக்கிறது.." என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  இந்த  நிகழ்ச்சிக்குச் சில மாதங்களுக்கு முன்பு  தான், என் பூணூலை எடுத்து விடும்படி  பாரதியார் சொன்னார்.  அவரோ  வெகு காலத்திற்கு முன்பே பூணூலை எடுத்து விட்டவர். தமது பூணூலை எடுத்து விட்டு என்னையும் பூணூலைக் கழற்றி எறியச் சொன்ன பாரதியாருக்கு திடீரென்று வைதிக வெறி தலைக்கேறி விட்டதோ என்று எண்ணினேன்.

'மெளனமாக உட்கார்ந்திருந்தேன்.  பாரதியார் நான் இருந்த பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவேயில்லை. மந்திரோபதேசம் எல்லாம் முடிந்த பிறகு, "கனகலிங்கம்! நீ இன்றையிலிருந்து பிராமணன்;  யார் உனக்குப் பூணூல் போட்டு வைக்கத் துணிந்தது என்று உன்னை யாராவது கேட்டால், பாரதி போட்டு வைத்தான் என்று அதட்டியே பதில் சொல்.  எது நேர்ந்தாலும் சரி, இந்தப் பூணூலை மட்டும் எடுத்து விடாதே!" என்று பாரதியார் அவனுக்கு வேறு வகையில் உபதேசம் செய்தார். .."

என்றைக்கோ பூணூலைக் கழற்றிப் போட்ட பாரதி,  பூணூலைப் போட்டுக் கொண்டவன் தான் இன்னொருவருக்கு பூணூலைப் போட வேண்டும் என்ற   சாஸ்திர விதியை மீறாமல் தானும்  பூணூலைப் போட்டுக் கொள்கிறான்.  கனகலிங்கத்திற்கு பிரம்மோபதேசம்  செய்கிறான்.  அந்த நிகழ்வு முடிந்ததும் இந்த நிகழ்வுக்காக தான் போட்டிருந்த பூணூலை கழற்றிப் போட்டு விடுகிறான்.  வில் வித்தைக்கு விதிகள் உண்டு;  சிலம்பாட்டத்திற்கு விதிகள் உண்டு. அந்த விதிகளை அனுசரிப்பவனே அந்த வித்தைக்கான மரியாதை அளிக்கிறான் என்பது போலவே பிரம்மோபதேசத்திற்கான விதி முறைகளை பாரதி அனுசரிக்கிறான்.

சாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின   ராயினும் ஒன்றே

என்ற தமது பாடல் வரிகளை  நிகழ் வாழ்வில் அமுலாக்கிப் பார்க்கவே பாரதி தன் அன்பருக்குப் பூணூல் அணிவித்தான்.   பரவலாக அப்படியான ஒரு நிலை வராத வரை தான் பூணூல் அணியாதிருத்தல் என்பது பாரதி தன் நெஞ்சுக்கு வழங்கிய நீதியாக இருக்கலாம்.

கனகலிங்கத்திற்கு மட்டுமல்ல,  புதுவை உப்பளம் பகுதியில் இருக்கும் முத்து மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்த நாகலிங்கம் என்பவருக்கு பாரதி உபநயனம் செய்வித்ததாக
கனகலிங்கம் சொல்லி நமக்குத் தெரிகிறது.

தாம்பரத்தில் குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்த பொதுவுடமைத் தோழர் ஜீவாவை நல்ல  ஒரு வீடு பார்த்து குடியேற்ற வேண்டும்  என்பது அன்றைய தமிழக முதல்வர்  காமராஜரின் மனத்தை அரித்துக்  கொண்டிருந்த ஒரு ஆசை.  ஒரு நாள் தாம்பரம் ஜீவாவின் குடிசைக்கு அவரைப் பார்க்க வந்திருந்த காமராஜர், நாதழுதழுக்க, "ஜீவா உடனே நீ இங்கிருந்து கிளம்பியாகணும்..   உனக்கு ஒரு வீடு பார்த்து வைத்திருக்கிறேன்.. வந்துடு.." என்று வற்புறுத்துகிறார்.

"இல்லை.." என்று காமராஜரின் மனம் கோணாமல் நெகிழ்ச்சியுடன் சொல்கிறார், ஜீவா. "எத்தனை பேர் இங்கே என்னோடு வாழ்கிறார்கள்?.. அவர்களை விட்டு விட்டு நான் மட்டும் வந்துட முடியுமா?  அவர்கள் எல்லோருக்கும் நல்ல வீடு கிடைக்கும் வரை நான் இங்கேயே தான் இவர்களோடு வாழ்வேன்.." என்று மறுத்து விடுகிறார்.

பிரச்னைகள் வேறு வேறாக இருக்கலாம்.  ஆனால்  தாம் தேர்ந்தெடுத்த முடிவில் பாரதிக்கும் ஜீவாவுக்கும் ஒரே மனசு தான் இருந்திருக்கிறது.


(வளரும்)11 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

//இந்த கூட்டத்தில் பாரதி 'இந்தியாவின் எதிர்கால நிலை' என்ற தலைப்பில் பேசினார். நினைத்தால் நெஞ்சு குமையத்தான் செய்கிறது. இன்றைக்குக் கூட இந்தியாவின் எதிர்கால நிலை பற்றிக் குறிக்கோளோ அக்கறையோ கவலையோ இன்றி மேம்போக்கு அரசியல் 'நடத்தும்' தலைவர்கள் நிறைந்த நாட்டில் அன்றைக்கே பாரதி இந்தியாவின் எதிர்கால நிலை குறித்து திட்டவட்டமான கருத்துக்கள் கொண்டிருந்து அதுபற்றி பேசியும் இருக்கிறான் என்பது அந்த யுக புருஷனின் பெருமையாகத் தான் தெரிகிறது//.

பாரதியார் பற்றிய இந்தவரிகள் படிக்கும்போதே நெஞ்சு விம்முகிறது.

கோமதி அரசு said...

// ச.து.சு. யோகியார் கட்டுரை அந்தக் கூட்டத்தை விடியோ எடுத்த மாதிரி ஒளிப்படமாய் மனசில் ஓடுகிறது..//

பாரதியின் பேச்சை கேட்ட போது நேரே பார்த்தது போல் இருந்தது.
தன்னுடைய பேச்சில் மட்டுமே கவனம், தான் நினைப்பை பகிர்ந்து முடிக்கும் வரை அதிலிருந்து கவனம் சிதறா பாரதியை பார்க்க முடிகிறது, ச.து.சு யோகியார் கட்டுரையால்.

கோமதி அரசு said...

//கனகலிங்கத்திற்கு மட்டுமல்ல, புதுவை உப்பளம் பகுதியில் இருக்கும் முத்து மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்த நாகலிங்கம் என்பவருக்கு பாரதி உபநயனம் செய்வித்ததாக
கனகலிங்கம் சொல்லி நமக்குத் தெரிகிறது.//


இது புது செய்தி.

கோமதி அரசு said...

//"இல்லை.." என்று காமராஜரின் மனம் கோணாமல் நெகிழ்ச்சியுடன் சொல்கிறார், ஜீவா. "எத்தனை பேர் இங்கே என்னோடு வாழ்கிறார்கள்?.. அவர்களை விட்டு விட்டு நான் மட்டும் வந்துட முடியுமா? அவர்கள் எல்லோருக்கும் நல்ல வீடு கிடைக்கும் வரை நான் இங்கேயே தான் இவர்களோடு வாழ்வேன்.." என்று மறுத்து விடுகிறார்.

பிரச்னைகள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் தாம் தேர்ந்தெடுத்த முடிவில் பாரதிக்கும் ஜீவாவுக்கும் ஒரே மனசு தான் இருந்திருக்கிறது.//

நல்ல மனங்கள்.
நாடு, மக்கள் என்று சிந்தித்த நல்ல உள்ளங்கள்.

ஸ்ரீராம். said...

ஜீவா அவர்களையும் பாரதியையும் அவர்கள் மனோபாவத்தில் இணைத்துப் பார்த்திருப்பது சிறப்பு. கனகலிங்கம் தவிர இன்னொருவருக்கும் பாரதி பூணூல் அணிவித்திருக்கிறார் என்பது புதிய தகவல். கனகலிங்கம் எழுதிய புத்தகம் படித்ததில்லை. எழுத்தாளர் ஆதவன் அவர்களும் பாரதி பற்றி புத்தகம் எழுதி இருக்கிறார் என்பதும் தகவல்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அந்த இன்னொருவரான நாகலிங்க பண்டாரம் புதுவை தேசமுத்து மாரியம்மன் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர். இந்த கோயில் சக்தி தெய்வத்தின் மீது தான், 'தேடி உனை சரணடைந்தேன், தேச முத்து மாரீ.. கேடனதை நீக்கிடுவாய், கேட்ட வரம் தருவாய்' என்று பாரதி பாடியிருக்கிறார். இந்தப் பாடலை பாராயணம் செய்து பண்ணோடு பாரதியார் முன்னிலையில் பலதடவை பாடியும் இருக்கிறாராம் நாகலிங்கம்.

நாகலிங்கமும், கனகலிங்கமும் புதுவையிலிருந்த கோதார் என்ற இரும்பாலையில் பணியாற்றி வந்ததாகத் தெரிகிறது. கோயில் பூசாரி பகுதி நேர வேலை.
பண்டாரம் பாரதியிடம் உபநயன உபதேசம் பெற ஆசைப்பட்டு நாகலிங்கம் கனகலிங்கத்தைத் தான் அணுகுகிறார். பாரதியிடம் சமஸ்கிருத்ம் கற்றுக் கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை பண்ண வேண்டும் என்று ஆசை பட்டிருக்கிறார் நாகலிங்கம்.

கனகலிங்கத்தின் என் குருநாதர் பாரதியார் நூலில் 'உப்பளம் தேசமுத்துமாரி' என்று தலைப்பிட்ட பகுதியில் இந்தச் செய்திகள் காணக்கிடைக்கின்றன.

ஆதவனைப் பற்றி எனது 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை' நூலில் குறிப்பிடும் போது அவரது 'புழுதியில் வீணை' புத்தகம் பற்றிக் குறுப்பிட்டிருக்கிறேன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

அப்புறம் தோழர் ஜீவா பற்றி தனியே ஒரு பதிவு போட உத்தேசம்.

தன்னையே நாட்டுக்குத் தந்த மக்கள் தலைவர் அவர்.

ஜீவி said...

@ கோமதி அரசு

நாகலிங்கத்திற்கு பாரதி உபநயனம் செய்வித்தது பற்றி பாரதியின் இளையமகள் சகுந்தலாவும் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி

இந்தத் தொடரை எப்படி முடிப்பது என்பதே எனது சதாகால யோசனையாக இருக்கிறது.
பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக ஆனால் ஒரு குறுநாவலைப் போல எழுதிய வ.ரா. கூட இறுதி அத்தியாயத்தை அதி வேகமாகக் கடந்து முடித்து விடுகிறார். எப்படியாவது முடித்துத் தானே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.

KABEER ANBAN said...

பாரதியைப் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு மஞ்சரி (Compendium)

கீழ்தட்டு மக்களிடம் பாரதிக்கு இருந்த அன்பை ஜீவாவின் வாழ்க்கையுடன் பொருத்தி பார்ப்பது பொருத்தமே. ஏனெனில் ரஷ்ய புரட்சி வந்தபோது அதை வரவேற்ற பாரதியார் கவிதைகள் உண்டு.

மனிதநேயத்தோடு இணையும் போது பொதுவுடமைக் கொள்கையும் யாவருக்கும் ஏற்புடையதே ஆகும். அதை முறையாக கடைபிடித்த ஜீவா,மனீக் சர்கார் போன்றவர்களை அக்கட்சியில் இருப்பவர்களே பின்பற்றாததில் ஆச்சரியம் இல்லை. காந்தீயக் கொள்கைப் போலவே இதுவும் பலவித உருமாற்றம் பெற்று இன்று பெயரளவில் நிற்கிறது. நாத்திகரே ஆனாலும் அவர்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள். Hands that serve are better than lips that pray.

ஜீவி said...

@ கபீர் அன்பன்


பொதுவுடமை சித்தாந்தத்தையும் பொதுவுடமை கட்சிகளையும் ஒன்றாக நினைத்து நாம் அடிக்கடி குழப்பிக் கொள்கிறோம்.

மனித நேயம் என்பதே பொதுவுடமை சித்தாந்தத்தின் ஆணிவேர். மனித குல மேன்மைகளுக்கு வழி சொல்வது பொதுவுடமை சித்தாந்தம்.

பொதுவுடமை சித்தாந்தம் என்பது உலகின் ஆகச்சிறந்த வாழ்வாங்கு வாழும் முறை. அந்தந்த காலகட்டங்களில் முளைத்தெழும் பிரச்னைகளின் தாக்கத்தில் இந்த சித்தாந்த கருத்துக்கள் பல்வேறு ரூபங்கள் கொண்டிருக்கின்றன. ரஷ்ய் புரட்சியின் போது ஜார் மன்னனின் ஆட்சி வீழ்த்தப்பட்ட போது 'பாட்டாளி மக்களின் சர்வாதிகாரம்' தான் பொதுவுட்மையின் இலட்சியம் என்றும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் பாட்டாளி என்ற வார்த்தையே அலங்கோலப்பட்டிருக்கிறது.

எந்த சித்தாந்தத்திற்கும் காலத்தின் மாற்றங்களே அந்தந்த சித்தாந்ததிற்கான வளர்ச்சியோ அல்லது வீழ்ச்சியோ என்றாகியிருக்கிறது. பொதுவுடமை சித்தாந்தமும் இதற்கு விதி விலக்காகி விடமுடியாது.

சித்தாந்தங்களைப் பற்றி பேசும் போது அந்தந்த சித்தாத்தங்களுக்கு தாலி கட்டிக் கொண்டவர்களாக சொல்லிக் கொள்ளும் அமைப்புகளை மறந்து விட வேண்டும். தனி மனிதனின் வாழ்க்கை முறை தான் சித்தாந்தங்களை பேணுவதற்கு சரியான அளவுகோல்.

காந்தியவாதி என்பவர் குறிப்பிட்ட ஒரு கட்சி சார்ந்தவர் என்று கணிக்கப்படக்கூடாது என்பது போல.

பொதுவுடமை சித்தாந்தம் என்பது உன்னதமான ஒரு வாழ்க்கை முறை.

உயர்வு--தாழ்ச்சி சொல்வது பாவம் என்ற பாரதி பாவ--புண்ணிய நம்பிக்கை கொண்டவன். அந்த நம்பிக்கையின் வீச்சு, உயர்வு--தாழ்வை அவ்வளவு கொடூரமாக அவன் நெஞ்சில் விளைத்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவுடமைத் தோழரிடம் பாவ--புண்யங்களைப் பற்றிக் கேட்டீர்கள் என்றால், ஓ, அது இத்துத்வா கொள்கை அல்லவோ என்று கேட்டுச் சிரிபார்.

இந்திய தத்துவமான அத்வைதம், பொதுவுடமை சித்தாந்ததிற்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒரு தத்துவார்த்த கொள்கை.

Related Posts with Thumbnails