மின் நூல்

Thursday, February 21, 2019

பாரதியார் கதை --29

                                        அத்தியாயம்-- 29


ரோடு வாய்க்கால் கரை பகுதியில் 'இந்தியாவின் எதிர்காலம்' என்ற தலைப்பில் உரையாற்றிய பாரதி அடுத்த நாளே சென்னை திரும்பி விடுகிறார்.

அன்றே அலுவலகமும் செல்கிறார்.  இரண்டு நாட்கள் ஊரில் இல்லாததின் பிரதிபலிப்பாய் அன்று வேலை பளு கொஞ்சம் கூட என்று தான் சொல்ல வேண்டும்.  அன்றாட பத்திரிகைச் செய்திகளுக்கான பணிகளூடே, தான் ஈரோடு சென்று வந்த விஷயத்தை வாசகர்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக 'எனது ஈரோடு யாத்திரை' என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையையும் தயாரிக்கிறார்.

பாரதியாரின் எழுத்து நடை வாசிக்க சுகமானது.  அந்தச் சுகத்தை இந்தத் தொடரை வாசிக்கும் அன்பர்களும் பெற வேண்டி பாரதியின் அந்தக் கட்டுரையை அப்படியே இங்கு தருகிறேன்.

1921-ம் ஆண்டு ஆகஸ்ட் 4 என்று தேதியிட்ட அந்தக் கட்டுரை இதோ:

                        என் ஈரோடு யாத்திரை

4  ஆகஸ்ட் 1921

ஈரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன்.  அது கொங்கு நாடு. ஆனால், அதற்கும் தென்பாண்டி நாட்டிற்கும் யாதொரு வேற்றுமையும் தென்படவில்லை.   ஸ்வேதேசீய நிகழ்ச்சி தோன்றிய  காலம் முதலாக தமிழகத்தின் உட்பகுதிகளுக்கிடையே உள்ள அக வேற்றுமைகள் குறைவுபட்ட காரணத்தாலே புற வேற்றுமைகளும் குறைவு படுகின்றன.

இதற்கு 'சுதேசமித்திரன்' முதலிய பத்திரிகைகள் பெரிதும் உதவி புரிந்தன என்பது நிச்சயம்.

கட்டை வண்டி ஒன்று கிடைத்தது.   கட்டை வண்டியில் ஒரு மனிதன் நிமிர்ந்து உட்கார இடமில்லை.  ஒன்றரை அடி நீளம். மாடு ஒரு சிறு பூனைக்குட்டி போன்று இருந்தது.  நான் ஒன்று; வண்டிக்குடையவன்  இரண்டு;  அவனுக்குக் கீழே கூலிக்கு வண்டி ஓட்டும் சிறுவனொருவன்; எங்கள் மூவரையும் மூன்று பர்வதங்களாக நினைத்து அந்த மாட்டுப் பூனை இழுத்துக் கொண்டு போயிற்று.

அரைமைல் தூரத்தில் உள்ள கருங்கல் பாளையத்தில் எனக்கு வேலை.  அங்கு ஒரு சிநேகிதருடைய அழைப்பிற்கிணங்கிச் சென்றிருந்தேன்.  கருங்கல் பாளையத்துக்குப் போய்ச் சேரு முன்னே மாடு வெயர்த்துப் போய்விட்டது.  அதன் மேலே குற்றஞ் சொல்வதில் பயனில்லை. அது சிறு ஜந்து. அதன் மேலே நாங்கள் மூன்று தடி மனிதரும் ஒரு கழுத்தளவுக்குச் செய்யப்பட்ட விதானத்தை உடைய வண்டியும் சவாரி பண்ணுகிறோம்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரத்துக்குள்ளே கருங்கல் பாளையம் என்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்த கிராமத்தில் ஆண் மக்கள் எல்லோரும் மஹா யோக்கியர்கள்;  மஹா பக்திமான்கள்.  புத்திக்  கூர்மையிலும், சுறுசுறுப்பிலும், தேசாபிமானத்திலும் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள்.

இவர்களுடன்  ஸல்லாபம் எனக்கு எல்லா வகைகளிலும் இன்ப மயமாக   இருந்தது.
                                                                                                   
அங்கே ஒரு புஸ்தகசாலை இருக்கிறது.  வாசகசாலை.  அதன்  காரியதரிசி ஒரு வக்கீல். மிக நல்ல மனிதர். மஹா புத்திமான்; தேசபக்தியில் மிகவும் பாராட்டுக்குரியவர்.

அந்த வாசகசாலை அவ்வூராரை நாகரிகப்படுத்துவதற்குப் பெரியதோர் சாதனமாக விளங்குகிறது.   அதனால் அவ்வூருக்குப் பலவித நன்மைகள் ஏற்பட்டு வருகின்றன என்பதை கனம் நரசிம்மையர்  (சேலம் வக்கீல்)  ஸ்ரீமான் வரதராஜூலு நாயுடு, ஸ்ரீ கல்யாணசுந்தர முதலியார் முதலிய முக்கியஸ்தர்கள் தம் நற்சாஷிப் பத்திரங்களாலே தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சபையின்  வருஷோதஸ்வக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன்.  என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள். எனக்கு ஒரு விஷயம் தான் முக்கியமாகத் தெரியும்.  அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்க கூடுமென்ற விஷயம்.

ப்ரஹ்லாதனைப் போன்ற தெய்வ பக்தியும், மன்மதனைப் போன்ற ஏக பத்தினி விரதமும் ஒருவன்  கைக்கொண்டு இருப்பானாயின், அவன் இந்த உலகத்திலேயே ஜீவன் முக்தியடைந்து, எல்லா அம்சங்களிலும் தேவ பதவி எய்தியவனாய், எப்போதும் மகிழ்ச்சி கொண்டிருப்பான் என்பது என்னுடைய கொள்கை.  இந்தக் கொள்கையை நான் வேத புராண சாஸ்திரங்கள், இதர மத நூல்கள், ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்கள், ஸ்ரீமான் ஜகதீஸ்சந்திர வஸுவின் முடிபுகள் என்னும் ஆதாரங்களாலே ருஜூப்படுத்தினேன். அங்குள்ள பெரிய வித்வான்கள்  எல்லோரும் கூடி என்னுடைய  தர்க்கத்தில் யாதொரு பழுதுமில்லையென்று அங்கீகாரம் செய்து கொண்டனர்.

பிறகு மறுநாள்  ஈரோட்டுக்கு வந்து வாய்க்கால் கரையில் ஒரு பொதுக்கூட்டத்திலே, 'இந்தியாவின் எதிர்கால நிலை'  என்ற விஷயத்தைக் குறித்துப் பேசும்படி கேட்டுக் கொண்டார்கள்.  நான் உடன்பட்டேன்.  மறுநாள் கூட்டத்தைப் பற்றிய விஷயங்களை விவரித்துக் கொண்டு போனால் இந்த வியாசம் மிகவும் நீண்டு போய்விடும்.  ஆதலால் இன்று இவ்வளவோடு நிறுத்தி மற்றை நாள் சம்பவங்களைப் பற்றி நாளை எழுதுகிறேன்'  என்று பாரதியின் கட்டுரை முடிகிறது.

'மற்றை நாள் சம்பவங்களைப்  பற்றி நாளை எழுதுகிறேன்'  என்று சொல்லியிருக்கிறாரே,   கருங்கல்பாளையம் வாசகசாலை  சொற்பொழிவு கிடைத்த மாதிரி, வாய்க்கால்கரை சொற்பொழிவும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் கடந்த பதினைந்து நாட்களாக தேடித் தேடி சோர்ந்து போனேன்.   கன்னிமாரா நூலகத் தேடலிலும் கிடைக்கவில்லை.  ஆனால் வாய்க்கால்கரை சொற்பொழிவின் அதே தலைப்பில் 'இந்தியாவின் எதிர்கால நிலை'  பற்றி ஈரோடு கூட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பாரதி திருவண்ணாமலையில் பேசியிருக்கிறார் என்று தெரிய வருகிறது.  அந்தப் பேச்சின் குறிப்பு மாதிரியான  சுதேசமித்திரனில் வெளிவந்த செய்தி தான் இப்பொழுது கிடைக்கப் பெறுகிறது.

'திருவண்ணாமலையில்  ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி' என்னும் தலைப்பில் காணப்படும் செய்தியில் பாரதியார் இரு  பொதுக்கூட்டங்களில் திருவண்ணாமலையில் பேசியதாகத் தெரியவருகிறது.    மே 2-ம் தேதி அருணாசலேஸ்வரர் கோயில் எதிரில் 'இந்தியாவின் எதிர்கால நிலைமை' என்னும் தலைப்பில் பேசியது பற்றி  கீழ்க்கண்ட குறிப்பு காணப்படுகிறது.

'நமது வேதங்களில் வெகு நாளைக்கு முன்பாக கூறப்பட்டுள்ள  ஏகை சுபாவம் என்னும் தத்துவத்தைக் கொண்டு நம் பாரத நாட்டின் எதிர்கால நிலைமை சீர்படுத்தப்பட வேண்டும் என்றும் தேசிய விடுதலை அல்லது ஸ்வராஜ்யத்திற்கு இந்த மார்க்கமே தக்க கருவியாய் இருந்து இந்தியாவே அதற்குத் தலைமை ஸ்தானம் வகிக்க வேண்டுமென்றும் இந்தியாவின் விடுதலைக்கு எதிரியாய் உள்ளவர்களையெல்லாம் கடவுள் சரியானபடி தண்டித்து வருகிறார் என்றும் கூடிய சீக்கிரத்தில் நாம் விடுதலையடைவோம்' என்றும் ஸ்ரீ பாரதியார் பேசினார்.  ஊரெங்கும் இப்பிரசங்கம் ஒரு மகத்தான பரபரப்பை உண்டாக்கி விட்டதென்று ஒரு நிருபர் தந்தி மூலம் அறிவிக்கின்றார்' என்று அந்தச் செய்தி சொல்கிறது.

பாரதியார் பேசிய இரண்டாவது பொதுக்கூட்டம்  3-ம் தேதியன்று அருணாசலேஸ்வரர் கோயில் பதினாறுகால் மண்டபத்தில் நடைபெற்றது.  இங்கும் இந்தியாவின் எதிர்கால நிலைமை' என்னும் தலைப்பில் பேசினார்.  'இராஜீய ஞானத்தில் இனி ஒப்புமையில்லை என்று சொல்லும்படியாக மகாத்மா காந்தி இந்தியாவில் தோன்றி இருக்கிறார்.  விஷயங்களைக் கற்றுக் கொண்ட வகையில் இந்தியா சிஷ்யனாக இருந்தும் இனிஆச்சாரியனாக இருக்கும் பதவியை வகிக்க முன் வந்து விட்டது.

திருவண்ணாமலைக்கு பாரதியார் சென்ற பொழுது மலையேறி ரமண மகரிஷியைப் பார்க்கச் சென்றதாகவும் சுமார் ஒரு மணி நேரம் அவர் ரமணர் முன் உட்கார்ந்திருந்தார் என்றும் தெரிய வருகிறது.

பாரதி ஆங்கில மொழியிலும்  நிறைய எழுதியிருக்கிறார்.  வேத  துதிப்பாடல்களில் சிலவற்றையும்,  ஆழ்வார்களின் பாசுரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பும் சரி,  நேரடியான அவரது  ஆங்கிலக் கட்டுரைகளும் சரி, அந்த மொழியில் அவர் பெற்றிருந்த புலமையைப் பறைசாற்றும்.    தனது சில கவிதைகளையும் ஆங்கில மொழியாக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார்.   எல்லாவகைகளிலும் நவீன தமிழிலக்கியத்தின் தொடக்கப் புள்ளியாய் பாரதி திகழ்ந்திருப்பது தெளிவு.

The Fox with the Golden Tail  கேலியும் கிண்டலுமாய் பாரதி எழுதிய நூல் அந்நாட்களில் மிகவும் பேசப்பட்ட ஒன்று.  மாதா மணிவாசகம்  என்ற  பாரதியின் நூல் தென்னாப்பிரிக்காவில் பிரசுரமாகி வெளிவந்தது ஒரு அதிசய தகவல் என்றால் டர்பனி ல் இருந்த அந்த அச்சுக்கூடத்தின் பெயர் சரஸ்வதி  விலாசம் என்பது இன்னௌரு வியப்பு!

பாரதியின்  ஆங்கில ஆக்கத்தில் 'பாயும் ஒளி நீ எனக்கு'  பாட்டொளி வீசி படபடக்கிறது, பாருங்கள்:

Thou to me the flowing light
And to thee discerning sight;
Honied blossom thou to me
Bee enchanted I to thee;
O heavenly lamp with signing ray,
O  Krishna,  Love  O nectar-spray
With falt'ring tongue  and words that pant
Thy glories here, I  strive to chant

பாரதி அன்பர் வயி.ச. ஷண்முகம்  செட்டியாருக்கு தன் நூல்களின் பிரசுரம்  பற்றி பாரதி எழுதிய கடிதமொன்று  தன் படைப்புகளின் பிரசுர விஷயத்தில் அவர் எவ்வளவு கவனம் கொண்டிருந்தார் என்பதைச் சொல்லும்.

' ஸ்ரீமான் வயி.சு. ஷண்முகம் செட்டியாருக்கு ஆசிர்வாதம்.

பகவத்கீதையில் அச்சுக்கு விரைவில் கொடுங்கள்.  தங்களுக்கு இஷ்டமானால் அதற்கு நீண்ட விளக்கம் எழுதி  அனுப்புகிறேன்.  நீண்ட முகவுரையும் எழுதுகிறேன்.

கீதைக்கு புஸ்தக விலை--ரூ1/-க்கு குறைத்து வைக்க வேண்டாம்.  தடித்த காயிதம், நேர்த்தியான அச்சு, பெரிய எழுத்து, இட விஸ்தாரம் -- இவை கீதைக்கு மட்டுமின்றி நாம்  அச்சிடப் போகும் எல்லா புஸ்தகங்களுக்கும் அவசியம்.  ஆங்கிலக் கவிகள், ஆசிரியரின் காவியங்களும் கதைகளும் இங்கிலாந்தில் எப்படி அச்சிடப்படுகிறதோ அப்படியே நம் நூல்களை இங்கு அச்சிட  முயல வேண்டும்.  அங்ஙனம் அச்சிட  ஒரு ரூபாய் போதாதென்று அச்சுக்கூடத்தார் அபிப்ராயம் கொடுக்கும் பஷத்தில்  புத்தக விலையை உயர்த்துவதில் எனக்கு யாதோர் ஆஷேபமுமில்லை.

பாஞ்சாலி சபதத்திற்கு முகவுரை இன்னும் இரண்டொரு நாட்களில் அனுப்புகிறேன்.

தம்பீ, இந்த பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகம்   கையெழுத்துப் பிரதி  அனுப்பியிருப்பதை சோம்பலின்றி   தயவுசெய்து முற்றிலும்  ஒருமுறை படித்துப் பாருங்கள்.  பிறகு அதை மிகவும் ஆச்சரியமாகவும் அழகாகவும் அச்சிடுதல் அவசியம் என்று தங்களுக்கே விசதமாகும்.

புதுச்சேரியில் (பாடிய) பாட்டுக்கள் அனைத்தையும் இங்கே குழந்தை தங்கம்மா தன்னுடைய நோட் புக்குகளில் எழுதி வைத்திருக்கக் கண்டு அதை புதையல் போல் எடுத்து
வைத்திருக்கிறேன்...' என்று தாமும் ஒரு குழந்தை போலக் குதூகலிக்கிறார்.

பாரதியின்  தமிழ்  மொழிக்கான  சிறுகதைப்  பங்களிப்பையும் சொல்ல வேண்டும்.
வ.வே.சு. அய்யரின் 'குளத்தங்கரை அரசமரம்' கதையையே தமிழின் முதல் சிறுகதை என்று பொதுவாகச் சொல்லி வருகிறோம்.  ஆனால் தமிழ்  மொழியில்,   'குளத்தங்கரை அரசமரம்'  வெளிவருவதற்கு  முன்னாலேயே வெளிவந்த பாரதியின்  படைப்புகளான இரு கதைகளைப் பற்றி குறிப்பிட வேண்டும்.

பாரதி, ஷெல்லிதாஸ் என்ற புனைப்பெயரில் சக்கரவர்த்தினி இதழில் எழுதிய  'துளசீபாயி  என்ற ராஜபுத்திர கன்னிகையின் கதை'யை மறந்து விட முடியாது.  இக்கதை வெளிவந்த பொழுது சத்தப்படாமல் நிகழ்ந்த ஒரு புதுமையை இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.  அந்த பத்திரிகையின் இதழுக்கு இரண்டே பக்கங்களாய் அச்சாகி     ஐந்து இதழ்களுக்கு இந்தக் கதை  தொடர்ந்திருக்கிறது.  1905 நவம்பர் இதழில் தொடங்கி 1906 ஜூலையில்  நிறைவடைந்திருக்கிறது.  இடையே சில இடைவெளிகளும் உண்டு.   கிட்டத்தட்ட 12 பக்கங்கள் இருக்கும்.  கதையின் போக்குக்கு இடையே ஒரு கவிதை,  நாடக பாணியில் கொஞ்சம்,  ஜெகப்பிரியனாரின் மேற்கோள் ஒன்று என்று பிரமாதப்படுத்தியிருப்பார் பாரதி.  தமிழில் ஒரு சிறுகதைக்கான கன்னி முயற்சி என்று தாராளமாய் சொல்லலாம்.

ஆனால் புதுவையில்   பாரதி மூணணா விலையில் 'ஆறில் ஒரு பங்கு-- ஒரு சிறிய  கதை' என்ற தலைப்பில் 1910-ல்    வெளியிட்ட நூல்  ஒரு நாவலுக்குரிய  கருப்பொருளைக் கொண்டிருந்தாலும்  சிறுகதையின் அம்சங்களைக் கொண்டிருக்கிற நூல் என்றே சொல்லலாம்.  வெளிவந்த சில மாதங்களில் 'ஆறில் ஒரு பங்கு'  ஆங்கில அரசால் தடை செய்யப்படுகிறது.  தடையை நீக்க 'தி ஹிந்து' பத்திரிகையின் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதிக்கு 1912- ஆகஸ்ட்டில் ஒரு கடிதம் எழுதுகிறார் பாரதி.

'ஆறில் ஒரு பங்கு' நூலின் அர்ப்பணமே அட்டகாசம்!  நூறு ஆண்டுக்களுக்கு முன்னால் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாத புரட்சி இது!தமிழின் முதல் சிறுகதை என்றால் நியாயப்படி பாரதியின் 'ஆறில் ஒரு பங்கு'  தான்!  ஏனோ விமரிசகர்கள் தமக்கே உரித்தான அளவுகோல்களை நீட்டி சட்டாம்பிள்ளைத்தனமாக,  பாரதியின் ஆ.ஒ.பங்குக்கான சிறுகதைத் தகுதியை மறுத்து, வ.வே.சு. அய்யரின் 'குளத்தங்கரை அரச மரம்'  சிறுகதைக்கே அந்தப் பெருமையைச் சேர்க்கின்றனர்.

பிற்காலத்து சுஜாதாவுக்கு முன்னோடியாய்  வ.வே.சு. அய்யரை புனைப்பெயர் விஷயத்தில் சொல்லலாம்.  1915-ல் விவேகபோதினி என்ற இதழில் தன் மனைவி பாக்கியலஷ்மி பெயரில் 'குளத்தங்கரை அரசமரம்' கதையை அய்யர் எழுதியிருக்கிறார்.  ஒரு விதத்தில் தாகூர் கதையொன்றின் பாதிப்பின் சாயலும் இந்தக் கதையில் புலப்படும்.

அணையும் விளக்கின் பிரகாசமாய் ஆகஸ்ட் சென்றது.  செப்டம்பர்  பிறந்து மாதத்தின் முதல் நாளன்றே சுதேசமித்திரன் அலுவலகம் செல்ல முடியாமல் பாரதியின் உடல் நிலை பாதித்தது.  தொடர்ச்சியாக வெளியூர் பயணமா,  கூட்டங்களில் பேசியதா,  வேலைப்பளுவா என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலையில் வயிற்றுப் போக்கு தொந்தரவில் பாரதியார் பாதிக்கப்பட்டார்.

(வளரும்)

5 comments:

கோமதி அரசு said...

//குழந்தை தங்கம்மா தன்னுடைய நோட் புக்குகளில் எழுதி வைத்திருக்கக் கண்டு அதை புதையல் போல் எடுத்து
வைத்திருக்கிறேன்...' என்று தாமும் ஒரு குழந்தை போலக் குதூகலிக்கிறார்.//

புதையல்தான் நமக்கு.

கோமதி அரசு said...

//வ.வே.சு. அய்யரின் 'குளத்தங்கரை அரசமரம்' கதையையே தமிழின் முதல் சிறுகதை என்று பொதுவாகச் சொல்லி வருகிறோம். ஆனால் தமிழ் மொழியில், 'குளத்தங்கரை அரசமரம்' வெளிவருவதற்கு முன்னாலேயே வெளிவந்த பாரதியின் படைப்புகளான இரு கதைகளைப் பற்றி குறிப்பிட வேண்டும்.//

அருமையான தகவல்.
பதிவு முழுவதும் புதிய செய்திகள் பாரதியை பற்றி பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது.
பாரதியின் இறுதி நெருங்கி விட்டதை படிக்கும் போது மனது சங்கடப் படுகிறது.

கிருஷ்ண மூர்த்தி S said...

//அது கொங்கு நாடு. ஆனால், அதற்கும் தென்பாண்டி நாட்டிற்கும் யாதொரு வேற்றுமையும் தென்படவில்லை. ஸ்வேதேசீய நிகழ்ச்சி தோன்றிய காலம் முதலாக தமிழகத்தின் உட்பகுதிகளுக்கிடையே உள்ள அக வேற்றுமைகள் குறைவுபட்ட காரணத்தாலே புற வேற்றுமைகளும் குறைவு படுகின்றன//

இன்றைய நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் பெருமூச்சு விடத்தான் முடிகிறது.

VS ஷண்முகம் செட்டியாருக்கு எழுதிய கடிதம் ஒரு நூலாசிரியர் தன்னுடைய பிரசுரகர்த்தருக்கு நூலை எப்படித் தரமாக வெளியிடவேண்டும் என்று அருமையாகச் சொல்கிறது. இன்றைக்கு எந்த எழுத்தாளராவது, பதிப்பகத்திடம் இப்படிக்கு கேட்டு விட முடியுமா?

எட்டையபுரம் ஜமீனுக்கு சீட்டுக்கு கவி எழுதியதாகட்டும், தன்னுடைய பதிப்பாளருக்குக் கடிதம் எழுதியதாகட்டும் பாரதி வாழ்க்கையில் வறுமையிலும் ராஜகம்பீரத்தோடு இருந்ததை, உணர முடிகிறது.

.

ஜீவி said...

@ கோமதி அரசு

சரியாகச் சொன்னீர்க்ள். நமக்கும் புதையல் தான்.

நிறைவு அத்தியாயத்தை ஒருவழியாக வெளியிட்டு விட்டேன்.

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி


இன்றைக்குக் கூட பிரபல எழுத்தாளர்கள் அக்கறை கொள்ளாத விஷயம் இது. எத்தனை தவறுகளுடன் தன் புத்தகங்கள் பிரசுரமானாலும் சரி, ராயல்டி வந்தால் சரி என்றிருக்கும் எழுத்தாளர்களை நான் அறிவேன்.

தன் புத்தக வெளியீட்டில் ஆரம்ப எழுத்தாளனுக்கு இருக்கும் அத்தனை ஆர்வமும் ஈடுபாடும் பாரதிக்கு இருந்திருக்கிறது. புத்தக வெளியீட்டு விஷயத்தில் அவர் காலத்தில் அவர் எதிர்பார்ப்புகளெல்லாம் நிகழவில்லை என்பது ஒரு ஏமாற்றம் தரும் விஷயம்.




Related Posts with Thumbnails