மின் நூல்

Saturday, March 23, 2019

வசந்த கால நினைவலைகள்

                                                  3

நேற்று கூட +2 க்குப் பிறகு என்ன படிப்பது என்று தொலைக்காட்சி சேனலில் ஒரு புண்ணியவான் மாணவர்களுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்.

என் காலத்திலெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி--க்குப் பிறகு படிப்பைத் தொடர்கிறவர்கள் ரொம்பவே குறைச்சல்.  வசதியுள்ள குடும்ப வாரிசுகள் கல்லூரிப் படியேறுவார்கள்.

அந்தக் காலத்தில் வசதியில்லாத குடும்பக் குழந்தைகள் ஏதாவது வேலை செய்து குடும்பத்திற்கு தன்னாலான உதவி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தில் பள்ளி இறுதித் தேர்வோடு தங்கள் படிப்பை நிறுத்திக் கொள்வார்கள்.   இப்போலாம் வேலைக்காகத் தான் கல்வி என்று ஆன பிறகு
இந்த மாதிரி ஆகலாம் என்று முன் கூட்டியே தீர்மானித்து அதற்கேற்பவான கல்வித் தகுதியை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

+2 கல்வியே  சி.பி.எஸ்.சி. வழியா, மெட்ரிகுலேஷனா, இல்லை ஸ்டேட் போர்டா என்று வகை வகையாகப் பிரிந்திருக்கிறது.  பத்தாவது வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில்  படித்து விட்டு +2க்கு ஸ்டேட் போர்டுக்குத் தாவு-- அப்பத்தான்  மதிப்பெண்கள் நிறைய அள்ளலாம் -- என்று பெருவாரியான கல்வியாளர்கள் அறிவுரைகளாய் அள்ளி வீசுகிறார்கள்.

ஆனால் என் மகன் ஜீவா செய்தது அதற்கு நேர் எதிர்...  எஸ்.எஸ்.எல்.சி வரை ஸ்டேட் போர்டு ஸ்கூலில்  (காஞ்சீபுரம்  ஆண்டர்ஸன் உயர்நிலைப் பள்ளி).  மேல் நிலைப் படிப்புக்கு சென்னைக்கு வந்து சிபிஎஸ்சி சிலபஸ்ஸூக்கு மாறினான்.  வீட்டுச் சாப்பாடு கிடையாது. ஹாஸ்டல் தான்.   இன்றும் கல்வியாளர்கள் சொல்வது தான் அன்றும் நடந்தது.   சிபிஎஸ்ஸியில் கல்வித் தரம் அதிகம் என்றாலும் மதிப்பெண்கள் அதிகம் தர மாட்டார்கள்.   நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் இன்ஜினீயரிங் ஸீட் கிடைப்பதில் சிக்கல்.   காரணம் நீங்கள் நினைக்கிற காரணம் தான்.  இப்பொழுது கிடைத்திருப்பது போல அப்போ ஒரு மோடி கிடைத்திருக்கவில்லை.

என்  மகனோ ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர விருப்பம் இல்லாது இருந்தான்.  வேறு என்ன செய்வது, என்பதற்கு அவன் பதில் வேறு மாதிரி இருந்தது.   "நான் AMIE படிக்கப் போகிறேன்.." என்றான்.

"அப்படீன்னா?"                                                                               

"Associate Member of  the Institution of  Engineers."

எனக்குப் புரியவில்லை.  இன்ஜினீயர்ஸ் என்று அவன்  சொன்ன வார்த்தை மட்டும் பிடித்திருந்தது.  'இது ஒருவகை இன்ஜினியரிங் படிப்பாக்கும்' என்று நினைத்தேன்.

கல்வி பயில ஏதாவது கல்லுரியில் இடம் கிடைக்க வேண்டுமே என்ற கவலை.  அதனால் கேட்டேன். "எந்தக் கல்லூரியில் சேர்வதாக உத்தேசம்?"

"இந்தப் படிப்புக்கு கல்லுரிக்கே போக வேண்டாம்.. வீட்டிலேயே படிக்கலாம்.. Home Study தான்" என்றான்.  "சென்னையில், அதுவும் சிபிஎஸ்ஸி போன்ற பள்ளிகளில் பயிலும் பொழுது தான்  இந்த மாதிரி படிப்பெல்லாம் இருக்கிறது  என்பதே தெரியறது, அப்பா!" என்று கூடுதல் தகவலையும்  சொன்னான்.
                                                                                                                                     
"அப்படி கூட ஒரு தொழிற்கல்வி இருக்கிறதா?" என்று  திகைத்தேன். ஆனால் பாவம் இளம் வயதில் தனது சொந்த சாப்பாட்டிற்கும் வழி பண்ணிக் கொண்டு  படிக்கவும் வேண்டுமே?.. ஏதாவது கல்வி நிருவனத்தில் சேராமல் சொந்தப் படிப்பு சாத்தியமாகுமா?--" என்ற கேள்விக் குறிகள் வேறே.

என்  மனைவி  பள்ளி ஆசிரியை. நான் தொலைபேசி  இலாகா.  பெண்ணோ காஞ்சீபுரத்தில்  மேல்நிலை கல்வி படித்துக் கொண்டிருந்தாள்..

இந்த இரண்டு பேர் கல்விக்காக நாங்களும் சென்னை குடிபெயர்வது என்று தீர்மானித்தோம்.  ஆனால் வேலை மாற்றல் இருவருக்கும்  அவ்வளவு சீக்கிரத்தில் கிடைகும் என்ற நம்பிக்கை இல்லை.             

அமுதசுரபி பத்திரிகை ஆசிரியர் எழுத்தாளர் விக்கிரமன் (வேம்பு அவர்கள்) எனக்கு பழக்கமானவர்.  சென்னை மாம்பலம் ஜெய்சங்கர் தெருவில் வசித்து வந்தார். மாம்பலம் பக்கம் வரும் பொழுது அவர் வீட்டில் இருந்தால் அவரையும் பார்த்து விட்டுப் போவது வழக்கம்.  அமுதசுரபிக்காக சிறுகதை ஒன்றை எழுதி வைத்திருந்தேன்.  அதை அவரிடம் கொடுத்து விட்டுப் போகலாம் என்ற எண்ணத்தில் அவர் வீட்டுக்குப் போனேன்.  நல்ல வேளை, அவர் வீட்டில் இருந்தார்.

நான் வந்திருப்பது அறிந்து "ஜீவி, இதோ வந்திட்டேன்.. " என்று உள் பக்கமிருந்தே குரல் கொடுத்தார்.  அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன். பக்கத்து டேபிளில் பளபள அட்டையுடன் அமுதசுரபி  இருந்தது.  எடுத்து லேசாகப் புரட்டினேன். பின் பக்க அட்டை பின்புறம் ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது.

அமுதசுரபி பத்திரிகையை நடத்துவது ஸ்ரீராம் சிட்ஸ் என்ற நிருவனம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.    ஸ்ரீராம் சீட்டு  நிருவனம் ஸ்ரீராம் கேபிடல் டிரஸ்ட் என்ற பெயரில் கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டிருந்தது.  அவர்கள்  'பாலாஜி டவர்ஸ்' என்ற பெயரில் சென்னை அசோக் நகரில் புதிதாகக் கட்டபோகும் ஒரு அப்பார்ட்மெண்ட் பற்றிய விளம்பரமாக அந்த இதழ் அமுதசுரபியின் அந்த விளம்பரம் இருந்தது.

அது பற்றிய விவரங்களைப்  பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது 'நந்திபுரத்து நாயகி' புகழ் விக்கிரமன் சார் வந்து விட்டார்.


(தொடரும்)




22 comments:

Bhanumathy Venkateswaran said...

எங்களுக்கு படிக்க வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் உங்கள் மன நிலை அப்போது எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கிறேன்.

ஸ்ரீராம். said...

ஹிஹிஹி...

அந்த அபார்ட்மெண்ட்டுக்குதான் நான் வந்திருக்கிறேன், இல்லையா?

கிருஷ்ண மூர்த்தி S said...

அறுபது நிறைவைக் கொண்டாடிய நினைவோடு சென்னையில் வீடு வாங்கிய நினைவுகளுக்கும் பின்னோக்கிப் பயணிக்க ஆரம்பமா? :)))

வெங்கட் நாகராஜ் said...

நெய்வேலியில் இந்த AMIE Chapter இருந்தது. பல நண்பர்கள் அதன் மூலம் படித்தார்கள்.

அமுதசுரபி, ஸ்ரீராம் சிட்ஸ் எனக்கும் சில நினைவுகளைத் தந்தன.... ஸ்ரீராம் சிட்ஸில் சகோதரி சில மாதங்கள் பணிபுரிந்தார். நெய்வேலி கிளை ஆரம்பித்தபோது. எனக்கும் அதன் மூலம் ஒது சிறு தொகை introduction bonus ஆக கிடைத்தது...
மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

சுவாரசியமான நடை. தொடர்கிறேன். "எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் செல்லும்" என்ற கதைதான்.

G.M Balasubramaniam said...

ஏன் உங்கள்க்கு பத்திரிகை ஆசிரியர்களிடமோர் பிடிப்பு என்பது புரிகிறது கொஞ்சம் கொஞ்சமாக உங்களைப் பற்றிநீங்கள் தெரிவிக்கிறீர்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ந்து வாசிக்கிறேன்.

கோமதி அரசு said...

உங்கள் பகிர்வு நிறைய அனுபவங்களை சொல்கிறது.
தொடர்கிறேன்.

ஜீவி said...

@ Bhanumathy Venkatesawaran

என் மகனைப் பொறுத்த மட்டில் 'ஆர்ட்ஸ் சப்ஜெக்ட்டில் சேர மாட்டேன். எப்படியும் இழந்த படிப்பின் தொடர்ச்சியை மீண்டும் பிடித்து விடுவேன்' என்று ஒருவித மன உறுதி ஏற்பட்டது நல்லதுக்கு ஆயிற்று. +2 விலேயே குடும்பத்தை விட்டு நல்ல சாப்பாடு இல்லாத அவஸ்தை தான் எங்களுக்குப் பெரிதாகப் பட்டது. அதையும் ஒருவிதாத்ஹ்டில் சமாளித்தோம். அது பற்றி வரும் அத்தியாயங்களில் விவரமாகச் சொல்கிறேன்.

தாய் மனசு இல்லையா?.. உங்கள் உணர்வு புரிகிறது. நன்றி.

ஜீவி said...

** அதையும் ஒருவிதத்தில் சாமாளித்தோம் என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

கரெக்ட். நீங்கள் 'அந்த' அப்பார்ட்மெண்ட்க்கு கேஜிஜியுடன் மற்றும் ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையில் பணியாற்றிய உங்கள் உறவினர் மற்றும் இன்னொருவருடனும் வந்திருக்கிறீர்கள். முதல் தடவையாக நாம் சந்தித்த தருணாம் அது. அந்த அப்பார்ட்மெண்ட், இந்த அப்பார்ட்மெண்ட் என்று---

ஹிஹிஹி-- அர்த்தம் பொதிந்தது.

ஜீவி said...

@ கிருஷ்ண மூர்த்தி

நினைவலைகளுக்கு முன்னோக்கி, பின்னோக்கி என்று அலைன்மெண்ட்லாம் கிடையாது சார். அது நினைத்த வாக்கில் தறி கெட்டு ஓடும். உங்களுக்குத் தான் ஜீவாவின் இணைய தள பதிவெல்லாம் பழக்கப்பட்டதாயிற்றே! ஆனந்த விகடனின் மகன் எழுதினாரா என்ற கேள்விக்கு பதில் சொல்வதை நோக்கி இந்தப் பதிவு போய்க் கொண்டிருக்கிறது. அவன் தங்கிப் படிப்பதற்காக ஒரு இல்லம் என்று ஆரம்பம் கொண்டது தான் முக்கியம்.

தேர்தல் பிஸியிலும் ஒரு மாறுதலுக்காக தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜன்

கரெக்ட். நெய்வேலியில் இந்தப் படிப்புக்கான அவசியம் உண்டு. வரும் தொடரில் விவரமாகச் சொல்ல முயற்சிக்கிறேன். ஸ்ரீராம் சிட்ஸின் சில நல்ல கோட்பாடுகள் சொந்த வீட்டைப் பெறும் சில சிரமங்களை சுலப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். இது பற்றி கல்கியில் என்று நினைக்கிறேன்.. ஸ்ரீராம் சிட்ஸ்ஸின் கஸ்டமர் ரிலேஷன் பற்றி நான் எழுத அது அந்த நிறூவனத்தின் MD திரு. ஏ.வி.எஸ். ராஜா பார்வையில் பட்டு அவர் எனக்கு நன்றிக் கடிதாம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

ஒன்றை வாசிக்கையில் வாசிப்பவரின் ரசனை தான் எழுதுபவனுக்கு முக்கியம். அந்த ரசனைக்கு பங்கம் ஏற்பட்டு விடாமல் சுவாரஸ்யமாகவே இந்தத் தொடர் தொடரும்.

தொட்டுக்க தமிழக பத்திரிகைகள், எழுத்தாளர்கள் என்று நல்ல விருந்து பரிமாற முயற்சிக்கிறேன். அவசியம் பந்திக்கு முந்திக் கொள்ள விழைகிறேன்.

அன்புள்ளங்களுக்கு நன்றி.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

சொந்த அனுபவமாக இருந்தாலும் பிறர் மேல் ஏற்றிச் சொல்லும் வழக்கம் எனக்குண்டு. என் நண்பர் ஒருவர் என்று ஆரம்பித்து அப்படி நிறைய எழுதியிருக்கிறேன். இன்னொன்று.
ஒருவரின் சுய பிரதாபங்களை இன்னொருவர் ரசிப்பது ரொம்பவும் குறைச்சல். அதையே மூன்றாம் ஒருவரின் விஷயமாகச் சொல்லும் பொழுது சில சுவாரஸ்யங்களும் கூடும்.
கதைகள் எழுதுபவன் சொந்த அனுபவங்களைத் தான் பெரும்பாலும் கதையாகத் திரிக்கிறான் என்பதும் இன்னொரு உண்மை.

இது எனது சொந்த அனுபவங்களைச் சொல்வதாக இருந்தாலும் அதிலும் ஒரு நோக்கம் உண்டு. பரவலாகத் தெரியாத விஷயங்களைத் தெரியப் படுத்துதல், அதையும் சுவைபடச்
சொல்லுதல, அங்கங்கே நறுக்குத் தெரித்தாற் போல லேசாக மறைத்துச் சொன்னாலும்
புரிபவர்களுக்குப் புரியக் கூடிய விஷயங்களைத் தாராளமாகத் தூவுதல்-- என்று
சில நகாசு வேலைகள் இந்தத் தொடரில் உண்டு.

வருகைக்கு நன்றி சார். தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ Dr. Jambulingam

ஜம்புலிங்கம் ஐயாவை இங்கே பார்த்ததில் நிரம்ப சந்தோஷம். நீங்கள் வாசித்து வருவதில் ரொம்பவும் மகிழ்ச்சி. நன்றி, ஐயா.

ஜீவி said...

@ கோமதி அரசு

சில அனுபவங்கள் எல்ளோருக்கும் பயன் படக்கூடியவை. அவற்றைத் தொகுத்துச் சொல்ல இது ஒரு வாய்ப்பு. உங்களுக்குப் பிடிக்கும். வாசித்து வாருங்கள், கோமதிம்மா.

G.M Balasubramaniam said...

/ இப்பொழுது கிடைத்திருப்பது போல அப்போ ஒரு மோடி கிடைத்திருக்கவில்லை./ இது புரியவில்லை நானுமே ஏ எம் ஐ ஈதேர்ச்வுக்கு சொந்தமாகப்படித்து தேர்வு எழுத முயன்றே ஆனால் கடமைச்சுமை என்னை படுத்தி நிறைவேற்ற முடியவில்லை

வே.நடனசபாபதி said...

AMIE என்பது பொறியியல் படிப்பைவிட கடினமானதூ எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் கூட AMIE படித்தவர்தான். உங்கள் மகன் AMIE படித்து பொறியாளராக பணிபுரிகிறார் என நினைக்கிறேன்.

அமுதசுரபி விளம்பரம் ஏதோ ஒருவகையில் உங்களுக்கு உதவியிருக்கிறது என நினைக்கிறேன். திரு விக்கிரமன் அவர்களோடு தாங்கள் நடத்திய உரையாடல் பற்றி அறியவும் அந்த விளம்பரம் பற்றி அறியவும் காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ (2)

புரியாதது என்று எதுவுமில்லை. எதுவும் புரிவதற்கு முதற்படி, எது பற்றியும் பொதுவான கருத்துக்களைத் தவிர்த்து விட்டு நம் சொந்த முயற்சியில் அது பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ள முயற்சித்தல். பொதுவான கருத்துக்கள் (General opinions) வசம் சிக்கிக் கொள்ளும் பொழுது நாமும் நூற்றோடு நூற்றி ஒண்ணாவது ஆவது மட்டுமில்லை, நம் தனிப்பட்ட சிந்தனைக்கு வேலையில்லாமல் போய்விடுவது தான் அதனால் விளையும் இன்னொரு ஆபத்து.

மற்றவர்கள் புரிந்து கொண்ட மாதிரி புரிந்து கொள்ளல்; நாமே கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் புரிந்து கொள்ளல் -- இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இல்லையா?..

ஓ.. நீங்களும் ஏ எம் ஐ தேர்வுக்கு முயன்றீர்களா?.. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது, சார். பின் பின்னூட்டத்தில் நம் நண்பர் நடன சபாபதி அவர்கள் சொல்லியிருக்கிற மாதிரி
வழக்கமான பொறியியல் பாடத்திட்டத்தை விட கடினமானது தான்.

ஜீவி said...

@ நடன சபாபதி

இப்போதிருக்கிற பொறியியல் கல்விக்கு முற்பட்டு பொறியியல் படிப்பு என்றால் AMIE தான் இருந்திருக்கிறது.

பொறியியல் அறிஞர் விஸ்வேஸ்வரய்யா காலத்து கல்வி இது என்று என் நினைவு.

அடுத்த பதிவில் நீங்கள் கேட்டதற்கெல்லாம் பதில் இருக்கிறது. வாசிக்க வேண்டுகிறேன்.
கருத்துரைக்கு நன்றி, சார்.

Thulasidharan V Thillaiakathu said...

ரொம்பவெ ஸ்வாரஸ்யமான அனுபவங்கள். அந்த விளம்பரம் கண்ணில் பட்டது வீடு வாங்கத்தானோ?!

தொடர்கிறோம்.

துளசிதரன், கீதா

கீதா: அண்ணா ஏ எம் ஐ இ நல்ல தாச்சே.

ஸ்ரீராம் சிட் ப்ஃபன்ட்ஸ் முன்பு என் பாட்டி பணம் கட்டிக் கொண்டிருந்த சமயம் அமுதசுரபி ஏதோ ஃப்ரீயாக வீட்டுக்கு வந்தது என்று கூடச் சொன்னதாக நினைவு.

Related Posts with Thumbnails