மின் நூல்

Thursday, March 28, 2019

வசந்த கால நினைவலைகள்


                                                                                     6


அடுத்த வாரமே அடுத்த புத்தகத்தை  NBT-காரர்கள்  தமிழ் மொழிபெயர்ப்புக்காக அனுப்பி வைத்து விட்டார்கள்.

புத்தகத்தின்  பெயர்:  WIND  ENERGY.    எழுதியவர்:   SUNEEL  B. ATHAWALE

சுனில் பி. அதாவாலே இந்தப் புத்தகத்தை தம்  பெற்றோருக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார் என்று தெரிந்தவுடனேயே நம் மதிப்பில் பெரிதும் உயர்ந்து போய் விடுகிறார்.   இந்த நூலின் முதல் பதிப்பை  2000 ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா வெளியிட்டிருக்கிறது.

இந்த நூலை 'காற்று ஆற்றல்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்து அடுத்த இரண்டு மாதங்களில் NBT-யின்  தலைமையகத்திற்கு ஜீவாவால் அனுப்பி வைக்கப்பட்டது.    \

சூரியன் ஒவ்வொரு நிமிடமும் ஐந்து மில்லியன் டன் அளவு ஜடப் பொருள்களை ஆற்றலாக மாற்றுகிறது.  இந்த ஆற்றலில் மிகச் சிறிய அளவு பல்வேறு வடிவங்களில் பூமியை வந்தடைகிறது.  அவற்றில் காற்று  ஆற்றலும் ஒன்று. காற்றின் ஆற்றலானது  காற்றின் இயக்க ஆற்றல் சக்தியிலிருந்து  உருவாக்கப்பட்டு, இயந்திர அல்லது மின்சர ஆற்றல்
போன்றதொரு பயனுள்ள சக்தியாக மாற்றப்படுகிறது.  கி.மு. 4000 ஆண்டிலேயே காற்றின் ஆற்றலை  பூவுல வாசிகள் உணர்ந்திருந்தனர். பழங்கால எகிப்தியர்கள் பயன்படுத்திய பாய்மரப் படகிலிருந்து தற்கால தென்பகுதித்  தமிழகத்தில் மிகப் பிரபலமாக இருக்கும் காற்றாலைகள் (Windmills) வரை காற்றின் பன்முகப்பட்ட ஆற்றல்களை இந்த நூல் விவரிக்கிறது.

இடைப்பட்ட காலத்தில் இரண்டு நூல்களுக்குமான மொழிபெயர்த்த ஆசிரியருக்கான  தொகை+ இதர செலவுகள் எல்லாவற்றையும்  NBT தனது  பிரசுரங்களுக்கு வரையறுத்திருந்த பிரகாரம் அனுப்பி வைத்திருந்தார்கள்.    அத்துடன் அடுத்த நூல் மொழியாக்கம் பற்றியும் கேட்டிருந்தார்கள்.   AMIE,  IETE  தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தலால்  மொழியாக்கப் பணியைத் தொடர முடியாமல் இருந்தது.   NBT-காரர்களும் சூழ்நிலையைப் புரிந் து கொண்டார்கள்.

AMIE- தேர்வும் சரி, IETE- தேர்வும் சரி,   கல்லூரி   பொறியியல் படிப்பை விட எந்தந்த  கோணங்களில் கடினமானது என்பதை ஏற்கனவே கோடி காட்டிக் குறிப்பிட்டிருக்கிறேன்.  ஆண்டுக்கு 6 பாடங்கள் என்று எடுத்துக்  கொண்டாலும் 4 ஆண்டிற்கு  24 பாடங்கள்.  ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்சம் 40%  மதிப்பெண் வாங்கினால் தான் அந்தந்த பாடத்தில் தேர்ச்சி என்கிற விஷயத்தை கண்டிப்பாக அமுல் படுத்துகிற நிருவனங்கள்...  இயல்பாகவே ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டு தேர்வுக்கும் முயல்கிற பெரும் பகுதியினர் இந்த இரண்டு அகில இந்தியத் தேர்வுகளையும் எழுதுவதால் பாக்கி (arrears) வைத்துக் கொண்டு முழுமையான தேர்வு பெறாதவதர்களையே அதிகமாகக் கொண்ட பொறியியல் பட்டத்திற்கான  முயற்சியாக இந்த இரண்டு தேர்வுகளும்  இருந்தது இயல்பே.

நல்லவேளை வாசித்த நான்கு ஆண்டு தேர்வு  காலங்களில்  இரண்டு பகுதி வாசிப்புக்கும் ஒரே நாளில் எந்தத் தேர்வும் குறுக்கிடாதது நல்லதுக்கு ஆயிற்று.  (An Examination for AMIE or IETE was not held on the same date)  அப்படி நடந்திருந்தால், இதுவா அதுவா என்ற தடுமாற்றம் ஏற்பட்டு இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க நேரிட்டிருக்கும்..  அப்படி நடக்காததும் நல்லதே.

வரையறுத்திருந்த  நான்கே ஆண்டுகளில் நல்ல மதிப்பெண்களுடன் AMIE, IETE இரு  தேர்வுகளிலும் தேர்ச்சி..  பொறியியலில் மேற்படிப்பு என்ற அடுத்த இலட்சியத்தை நோக்கி நகர அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மேற்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தான்.  அந்தத் தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்வாகி  M.E. பட்டப் படிப்புக்கான கவுன்சிலிங்  போகும்  பொழுது தான் அந்த சிக்கல் தலையெடுத்தது.  அந்த  நேர்முக ஆலோசனைக் குழுவினரிடம்  பொறியியல் படிப்பில் தேர்வானதின் மூலச் சான்று (original certificate) அளிக்க வேண்டும்.  பொறியியல் பட்டத்திற்காக இரண்டு தேர்ச்சிகள் பெற்றும்  அவ்வளவு சீக்கிரத்தில் வழக்கமாக மூலச் சான்று கிடைக்கும் என்பதே கனவாக இருந்தது.  சென்னை  AMIE தலைமை அலுவலகத்தில் நேரே போய்க் கேட்டதற்கு  எப்படியும் ஆறு மாதங்கள் ஆகலாம். அதற்கிடையில் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லி விட்டார்கள்.  அடுத்த பதினைந்தே நாட்களில்  கெளன்ஸிலிங்..

அப்போ பொறியியல் மேற்படிப்பு என்பது கானல் நீர் தானா என்று கலங்கியிருக்கிற நேரத்தில் அடுத்த  நாள் கவுன்ஸிலிங் என்றால் அதற்கு முதல் நாள் பதிவுத் தபாலில் IETE படிப்பு தேர்ச்சிக்கான மூலச் சான்று வந்து  சேர்ந்தது இறைவனின் கருணை என்று தான் சொல்ல வேண்டும்.  ஒரே பட்டப் படிப்புக்காக இரண்டு விதத்தில் படிப்பானேன் என்று அறியாமையில் நான் கேட்ட கேள்விக்கு 'இதற்காகத் தான் அது' என்ற பதில் தீர்க்கமாகக் கிடைத்து  விட்டது.  கவுன்ஸிலிங்கில் ஜீவா விரும்பிய Instrumentation  Engineering  பாடத்திட்டமே கிடைத்தது.   அதுவும் அப்துல் கலாம் ஐயாவும், எழுத்தாளர் சுஜாதாவும் வாசித்துப் பெருமை அடைந்த  MIT  (Madras Institute of Technology, Crompet) கல்வித் தலத்தில்!

இரண்டு வருடங்களில்  பொறியியல்  மேற்படிப்பு முடித்து  VIVA  முடித்து TCS  வளாகத் தேர்வில் (Campus selection)   தேர்ந்தெடுக்கப்பட்டு மும்பையில் வேலையில்  சேர்ந்து அவர்கள் பணிக்காக  New Jersy, America சென்று TCS-ல் அவர்கள் ஒப்பந்த வருடப் பணி நான் கு ஆண்டுகளை  திருப்தியோடு முடித்து அவர்களிடமிருந்து வாழ்த்துடன் விடைபெற்று அமெரிக்காவில் நிரந்தர பணி வாய்ப்பு பெற்றதெல்லாம் அடுத்தடுத்து நடைபெற்றவை.  எல்லாத்  தகுதிகளும் நல்லவர்களின் ஆசியால் தான் என்பதும் நினைப்பை விட்டு அகலாத வாசகமாய் நினைவலைகளில் தவழ்கிறது...

இதில் ஒரு வேடிக்கை பாருங்கள்.  அடிப்படைக் கல்வி என்பது பொறியியல் படிப்பு.  இடையில் அந்தத் தகுதியும் இருக்கட்டுமே என்று கற்றது கணினி அறிவியல்.  அந்த இருக்கட்டுமே என்ற கற்ற கல்வி தான் இன்று நிரந்தரப் பணிக்கு அடித்தளமாய் இருக்கிறது.  இந்த உண்மையை அலட்சியப்படுத்தி இன்றும் நம் நாட்டில் அடிப்படைக் கல்வியை (Academic Education) தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு அநாவசிய முக்கியத்துவம் கொடுப்பதினால் எதிர்மறை வாழ்க்கைச் சூழல் அமைவதற்கும் காரணமாகிப் போகிறோம் என்ற நிதர்சன உண்மையை என்னால் இந்த இடத்தில் நினைத்துப் பர்க்காமல் இருக்க முடியவில்லை.

அமெரிக்க கல்வி அமைப்பில் இப்படி இருப்பதில்லை.  அடிப்படைக் கல்வி என்பது ஏதோ ஒரு தகுதிக்காகத் தான்.  அந்தத்  தகுதியைப் பெறுவதற்கும் மற்ற துறை சார்ந்த தகுதிகள் காரணிகளாக இருக்கின்றன.  Extra curricular activities play a major role in education.   அங்கு சித்திரம் கற்றுக்  கொண்டு ஒரு சைத்திரீகனாக  வாழ முடியும்.  ஆனால் இங்கு அப்படியல்ல.  அப்படியான ஒரு நிலைமை நம் நாட்டிலும் வந்தால் இந்த மெகாலே கல்வி முறைக்கு ஒரு முடிவு கட்டலாம்.



(நண்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான தமிழ்ச் சொற்கள் தேர்வு செய்யத்  தடுமாறி வாசிப்பவரின் புரிதலுக்காக அப்படித் தேர்வு செய்த வரிகளைத் தவிர்த்தும்  அங்கங்கே ஆங்கிலச் சொற்களையே  உபயோகிக்கும்படி ஆயிற்று. )


20 comments:

ஸ்ரீராம். said...

நம் வாழ்க்கை எது என்று தீர்மானிப்பது மேலே உள்ள சக்தியிடம் இருக்கிறது. நம்மை அறியாமலேயே நம் விருப்பத்தோடேயே அதனது அடித்தளங்களும் வகுக்கப்பட்டு விடுகின்றன என்று தெரிகிறது.

ஆங்கிலக் கலப்பு பற்றி கவலை இல்லை. அப்படி இருந்தால்தான் புரியும். ஒரேயடியாக தமிழ்ப்படுத்துகிறேன் என்று படுத்துவதைவிட!

கிருஷ்ண மூர்த்தி S said...

ஸ்ரீராம் சொல்வது சரியே! எல்லாம் அவன் செயலே!

தமிழ்ப்படுத்துதல் பலசமயங்களில் பெரும் படுத்தல் ஆகிவிடும்!

கோமதி அரசு said...

//காற்றின் ஆற்றலை பூவுல வாசிகள் உணர்ந்திருந்தனர். பழங்கால எகிப்தியர்கள் பயன்படுத்திய பாய்மரப் படகிலிருந்து தற்கால தென்பகுதித் தமிழகத்தில் மிகப் பிரபலமாக இருக்கும் காற்றாலைகள் (Windmills) வரை காற்றின் பன்முகப்பட்ட ஆற்றல்களை இந்த நூல் விவரிக்கிறது.//

மிக அருமை. உங்கள் மகனுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

அந்தக் காலத்தில் காற்றலைகள் தென்காசி,கடையநல்லூர், தாழையூத்து, எல்லாம் நிறைய உண்டு. இப்போதும் உண்டு. நவீன காற்றலைகள் இப்போது.

கோமதி அரசு said...

//அடுத்த நாள் கவுன்ஸிலிங் என்றால் அதற்கு முதல் நாள் பதிவுத் தபாலில் IETE படிப்பு தேர்ச்சிக்கான மூலச் சான்று வந்து சேர்ந்தது இறைவனின் கருணை என்று தான் சொல்ல வேண்டும்.//

உண்மை.

இறைவனின் இருப்பை, கருணையை நாம் கண்டு கொள்ளும் நேரம் .
அருமை.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஆங்கில வார்த்தையை அப்படியே தமிழில் எழுதினால் கூட (உதாரணம்: லெட்டர்) பொறுத்துக் கொள்ளும் நவீன தமிழ்ச் சமூகம் வடமொழி வார்த்தையை உபயோகிக்க மட்டும் தயக்கம் காட்டாமல், எழுதும் போது மட்டும் தமிழில் எழுதுவதில் தனித்த இன்பம் காண்பதேன்?..
(உதாரணம்: விஷயம்-- விசயம்) இந்தப் படுத்தலை விடவா இன்னொரு படுத்தல் இருக்கப் போகிறது?..

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி

அந்த விஷயத்தில் நான் அத்வைதக்காரன் கிருஷ்ணமூர்த்தி, சார்! நம்மில் பரவி, படர்ந்து, நம்மில் நாமாக.... அதனால் தான் கேள்விகள் உள்ளுக்குள் உள்ளேயே கேட்கப்பட்டு கேள்வியும் நானே, பதிலும் நானே என்று பரவசம் கொள்கின்றன.

ஜீவி said...

@ கோமதி அரசு (1)

ஆமாம், கோமதிம்மா. தென் மாவட்டங்களில் என்று எழுதும் போது கூட கயத்தாறு போகும் பஸ் பாதையில் மனம் பயணித்தது. இந்தப் புத்தகத்தின் அட்டைப்படம் கூட கன்யாகுமரியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள காற்றாலை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜீவி said...

@ கோமதி அரசு

நடந்து போன விஷயங்கள் இதற்காகத் தான் இது என்று உணரும் பேறு பாக்யம்.
நம்மில் இறைவனைக் காணும் தருணங்கள். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி....

Bhanumathy Venkateswaran said...

இறையருளை புரிந்து கொள்ளும் தருணங்கள் வாழ்வின் பொன்னான தருணங்கள். அதோடு முயற்சி, வெற்றிக்கு தடையென்ன?

G.M Balasubramaniam said...

இந்தப்படிப்பு பட்டம்பற்றியெல்லாம் உன்னிப்பாக தெரிந்துகொண்டு எழுதுவதைப்பாராட்ட வேண்டும்

வெங்கட் நாகராஜ் said...

எல்லாம் அவன் செயல்!

நம் கையில் தான் எல்லாம் என நினைப்பதுதான் பலரும் செய்வது - எல்லாம் அவன் செயல் என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்கள்.

தமிழ் மொழியாக்கம் செய்யப்ப்பட்ட இரண்டு புத்தகங்கள் அறிந்து மகிழ்ச்சி. நேஷனல் புக் ட்ரஸ்ட் நல்ல பல புத்தகங்களை மொழியாக்கம் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களது புத்தகங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.

ஜீவி said...

@ Bhanumathy. V.

இறையருள் + முயற்சி = வெற்றி

என்கிறீர்கள். அப்படித்தானே?

வெற்றி கூட முக்கியமில்லை. அந்த புரிந்து கொள்ளல் தான்.

வெற்றி - புரிந்து கொள்ளல் = ?

ஜீவி said...

@ G.M. B

அத்தனையும் கூட இருந்து நேரடியாக உணர்ந்தவை சார்.

அதனால் அதற்காக மெனக்கெட்டு தெரிந்து கொள்ளல் என்றில்லமல் அனுபவிப்புகளே ஆயிற்று.

வாசித்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, சார்.



ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

NBT-யும் சரி, சாகித்ய அகாதமியும் சரி, விற்பனையை முக்கியப்படுத்தி நூல்களை வெளியிடுவதில்லை அல்லவா?.. அதனால் அறிவைத் தேடும் சில குறிப்பிட்ட வாசகர்களே இந்தப் பிரசுரங்களுக்கு அமைந்து விடுகிறார்கள்.

இந்த நூல்களை NBT 'அனைவருக்கும் அறிவியல்' என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள்.

அவ்வலவு ஏன்?.. பள்ளிகளில், கல்லூரிகளில் கூட மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படுவதற்காக (Non-detailed) சப்ஜெக்ட்டுகளுக்கு இந்த மாதிரி நூல்களை பரிந்துரைப்போர் இல்லை.. பள்ளி, கல்லூரி நூலகங்கள், மாநில அரசு நூலகங்கள் எல்லாமே மாணவர்களின் அறிவ மேம்பாடுபற்றி சிந்தனையே இல்லை.

முயற்சி செய்து படிக்க வேண்டிய சில பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் அன்பைத் தேடும் அரசியலில் அந்த பாடத்திட்டங்களை புறக்கணிக்கவும் அரசுகள் தயார். (நீட் உதாரணம்) எல்லாவற்றிலும் வாக்கு அரசியல் பற்றி தான் அரசியல்வாதிகளுக்கு கவனம்.

வருடா வருடம் நல்ல நூல்களுக்கு பரிசுகள், விருதுகள் எல்லாம் அரசின் சார்பில் அளிப்பது உண்டல்லவார? அப்படியான ஒரு நேரத்தில் நேஷனல் புக் டிரஸ்ட்டே இந்த
'இயந்திர மனித்னும் அதன் இயக்கவியலும்' நூலை தமிழில் 'மொழிபெயர்ப்பு' நூல்களுக்கான தேர்வுக்காக அனுப்பி வைத்திருந்தார்கள். என் மகனுக்கும் அதுபற்றி தெரிவித்திருந்தார்கள்.

இந்த மாதிரி தேர்வுகள் பற்றியெல்லாம் நமக்குத் தெரிந்தது தானே?

மேடைப் பேச்சுகளில் தான் தமிழ், தமிழ்!.. நடைமுறையில் வேறே.

Bhanumathy Venkateswaran said...

வெற்றி - புரிந்து கொள்ளல் = ?
வெற்றி - புரிந்து கொள்ளல் = ஆணவம்?

ஜீவி said...

@ Bhabumathi. V.

சில கேள்விகள் அதற்கான பதில்களை விட சுவாரஸ்யமானவை. அந்த சுவாரஸ்யத்திற்காகவே, அத்தகைய கேள்விகள், கேள்விகள் ரூபமெடுக்கின்றனவே தவிர அதற்கான நேரடியான பதில்களுக்காக அல்ல.

இருந்தாலும் பதில் காண முயற்சிக்கலாம்.

வெற்றி - புரிந்து கொள்ளல் = அறியாமை என்று சொல்லலாமா?.. இந்த இடத்தில் அறியாமை என்பது அந்த வெற்றி பெற்றது பற்றியதான அறியாமை என்று பொருள் கொள்ளலாம்.

வே.நடனசபாபதி said...

இரண்டு படிப்புகளை ஒரு சேர படித்து நான்கு ஆண்டுகளில் எல்லா பாடங்களிலும் முதன் முறையிலேயே தேர்ச்சி பெறுவது என்பது அவ்வளவு இலக்குவானதல்ல. தான் அடைய நினைத்த இலக்கு நோக்கி துணிவோடு, உள்ளார்ந்த முயற்சியுடன் படித்ததாலே தங்கள் மகன் வெற்றி பெற்றார் என எண்ணுகிறேன். அவருக்கு என் வாழ்த்துகள்!

நமது கல்வித்திட்டம் மாற்றப்படவேண்டும். மாணவர்கள் அடிப்படைக் கல்வியோடு வேறொரு பாடத்தையும் படிக்க வாய்ப்பு தரவேண்டும். பிலானியில் உள்ள Birla Institute of Technology and Science இல் இந்த வசதி உள்ளது. இப்போது சில கல்லூரிகளிலும் இது போன்ற வசதிகள் உண்டு.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, ஐயா.

தங்கள் ஆலோசனை நியாயமானதே. தனது மாணவ வாழ்க்கையில் படிப்பிற்காக ஏங்கிய அரசியல்வாதிகள் இருந்தால் இதெல்லாம் அவர்களுக்குத் தோன்றும். அவர்கள் தான் ராஜா வீட்டு கன்றுக்குட்டிகளாயிற்றே! இவர்கள் செல்வ வாழ்க்கையைப் பார்த்து மாணவர்களுக்கு படித்து என்ன ஆகப்போகிறது?-- என்ற தளர்ச்சி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

Thulasidharan V Thillaiakathu said...

மகனின் முயற்கிகள் எதுவும் வீண் போகவில்லை. குறிக்கோள்! அந்தக் குறிக்கோளை நோக்கி விடாமுயற்கி, உழைப்பு என்று நகர்ந்து எம் இ முடித்து இப்போது நல்ல நிலையில் இருப்பதும் மிக மிகப் பாராட்டிற்குரிய விஷயனள்! வாழ்த்துகள் தங்கள் மகனின்ற்கு.

துளசிதரன், கீதா.

கீதா:நம் கல்வித்திட்டம் கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும். ப்ராக்ட்டிக்கல் ரீதியாக இருக்க வேண்டும்.

ஜீவி said...

@ துளசிதரன்

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, துளசி சார்..

@ கீதா

எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு கொண்ட நாட்டில் உருப்படியாக எந்த திட்டத்தையும் கற்பனை செய்யக் கூட முடியாது. அப்படி கற்பனை செய்வது கூட அவர்களுக்குப் பிடிக்காது. சகித்துக் கொண்டு காலம் தள்ள வேண்டியது தான்.

Related Posts with Thumbnails