7
நினைத்துப்பார்க்க இப்பொழுது பிரமிப்பாக இருக்கிறது. எல்லாமே பசுமை நிறைந்த நினைவுகள்.
கும்பகோணத்தில் பிறந்தாலும் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, சேலம் என்று பள்ளி இறுதி வகுப்பு முடிப்பதற்குள் எத்தனை ஊர்கள்!..
மதுரையில் ஆதிமூலம் பிள்ளைத் தெருவில் இருந்த எலிமெண்ட்டரி ஸ்கூலில் ஐந்து வகுப்பு வரை, பின்னால் ஆறு, ஏழாம் வகுப்புகள் திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூலில், அதற்கடுத்து எட்டாம் வகுப்பு திருநெல்வேலியில் பாரதியார் வாசித்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி சார்ந்த பள்ளியில், ஒன்பது, பத்து, பதினொன்றாவது வகுப்புகள் சேலம் பாரதி வித்தியாலயா பள்ளியில் என்று பள்ளிக் கல்வி பூர்த்தியாயிற்று. அந்தக் காலத்தில் ஆறு, ஏழாம் வகுப்புகளை I Form, II Form என்றும், எட்டாம் வகுப்பை III Form என்றும், ஒன்பதாம் வகுப்பை IV Form என்றும், பத்தாம் வகுப்பை V Form என்றும், பதினோறாவது வகுப்பை VI Form என்றும் சொல்வார்கள். VI Form தான் S.S.L.C. எஸ்.எஸ்.எல்.ஸி-யோடு பள்ளிக் கல்வி முடிந்து PUC என்றழைக்கப்பட்ட புகுமுக வகுப்போடு கல்லூரிப் படிப்பு துவங்கும்.
பணியாற்றுகையில் புதுவை, பவானி, திருப்பத்தூர். குன்னூர், காஞ்சிபுரம், சென்னை என்று.... இத்தனை இடங்களில் வாழ்க்கைப்போக்கில் வசித்துத் திரிந்தாலும், உண்மையிலேயே பால்ய வயதில், சக்கரைத் தட்டில் 'அ,ஆ'வன்னா எழுதத் தொடங்கி வைத்து, பெரியவர்கள் என்னை ஆரம்பப் பள்ளியில் சேர்த்த மதுரை மறக்கமுடியாத ஊர்தான்.
இப்பொழுதெல்லாம், பஸ்ஸிலோ இரயிலிலோ பயணிக்கும் நேரங்களில் இந்த ஊர்களையெல்லாம் கடக்க நேரிடும். அப்படிப்பட்ட சமயங்களிலெல்லாம் எனக்கும் அந்த ஊருக்கும் சம்பந்தப்பட்ட வாழ்க்கை நிகழ்ச்சி ஏதாவது ஒன்று படக்காட்சியாய் நினைவில் பளிச்சிட்டுப் போகும். சில நேரங்களில், பயணத்தை கத்தரித்துக்கொண்டு ஊருக்குள் சென்று நாம் அப்பொழுது வாழ்ந்த இடம் இப்பொழுது எப்படி இருக்கிறது என்று பார்க்கத் தோன்றும். இருந்தும் வாழ்க்கையின் அவசர வேலைகள் அப்படிச் செய்யமுடியாமல் தடுத்துவி்டும். இதற்கென்றே, இப்படி வாழ்ந்த இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கென்றே, முக்கியமாக இந்த இடங்கள் இப்பொழுது எப்படி இருக்கின்றன என்று 'அனுபவித்து' பார்ப்பதற்கென்றெ தனி ஒரு பயண அட்டவணை போட்டுக்கொண்டு கிளம்ப வேண்டுமென்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
சின்ன வயசில் அந்த இடங்களைப் பற்றி நான் மனதில் போட்டு வைத்திருந்த சித்திரங்கள், இப்பொழுது மாறிப்போய் அந்த அழகான சித்திரங்களை அழிக்க நேரிடுமே என்கிற அச்ச உணர்வும் கூடவே தோன்றும். ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எழுபதுக்கு மேற்பட்ட வருடங்களுக்கு முன்பு என் சின்னஞ்சிறிய நெஞ்சில் நான் தேக்கி வைத்துக்கொண்ட மதுரை இது. இப்போது இந்த இடங்கள் எல்லாம் என்னவாச்சு, எப்படி உருமாறிப் போயிருக்கிறது என்று எனக்குத் தெரியாது. மற்றவர்கள் தான் சொல்லித் தெரியவேண்டும்.
மதுரை சிம்மக்கல்லிருந்து வைகை ஆற்றங்கரை நோக்கித் திரும்பி நடந்தால், வழியில் பாலம் போட்ட ஒரு நீண்ட வாய்க்காலைக் கடக்க வேண்டியிருககும். வாய்க்கால் புறத்தைத் தாண்டி செழித்து கொப்பும் கிளையுமாய் .பிர்மாண்டமாய் வளர்ந்திருக்கும் அரசமரங்களைத் தாண்டி, உள்ளடங்கி அற்புதமான ஆஞ்சநேயர் கோயில். இங்கு மார்கழி மாதத்தில் நெய் ஒழுகும் வெண்பொங்கல் கிடைக்கும். கிடைக்கும் நேரம்: அதிகாலை 5 மணியிலிருந்து 5-30 க்குள். அகல அகல புரச இலைகளை வைத்துக் கொண்டு என் வயதொத்த சிறுவர் கூட்டம் அலைமோதும். உயரமாய், நீண்ட நெற்றி நெடுக நாமம் தரித்தவராய், கோயில் பட்டர் ஒரு பெரிய பாத்திரதைக் கையில் ஏந்தியவாறு அதிலிருந்து பொங்கலை உருட்டி உருட்டி எடுத்து ஒவ்வொருத்தர் இலையிலும் போடும் அழகே அழகு!..
இந்த அனுமார் கோயிலுக்கு முன்னிருக்கும் வாய்க்காலுக்கு அருகில் இருந்த தெரு காமாட்சிபுர அக்கிரஹாரத் தெரு. பேருக்குத்தான் அக்கிரஹாரமே தவிர பேதமில்லாமல் எல்லோரும் ஒற்றுமையாய் வாழ்ந்த காலம் அது. இந்தத் தெருவில் தான் நாங்கள் குடியிருந்தோம்.
வருஷக்கணக்குப் பார்த்தால் எனக்கு அப்பொழுது ஆறு வயதிருக்கும். வாசலில் தெருக்குழாய் இருக்கும் வீடு. அந்தக்காலத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு. எப்பொழுது தண்ணீர் விடுவார்கள் என்று சொல்ல முடியாது. எந்நேரமும் அண்டா-குண்டாக்கள் குழாயடியிலுருந்து ஆரம்பித்து நாலு வீடு தள்ளி வரை வரிசை கட்டியிருக்கும்.அந்தத் தெரு நிறைய நாலைந்து தென்னை மரங்கள் இருந்தது நினைவிருக்கிறது. எங்கள் வீட்டிற்கு எதிரே ஒரு பெரிய தென்னை மரம் உண்டு. அந்த வீட்டில் முன் போர்ஷனில் நாங்கள் வாடகைக்கு ஒண்டுக் குடித்தனம்.
நீண்ட அந்த வீட்டில், மாடியிலும் சேர்த்து ஐந்து குடித்தனங்கள் இருந்ததாக நினைவு. ஒருநாள் சாயந்திர வேளை. தெருவே அல்லோகலப்படுகிறது. பக்கத்து தெய்க்கால் தெரு பகுதியில் யார் வீட்டிலோ பிடித்த தீ, வீசிய காற்றில் கொழுந்து விட்டெரிந்து, பாதித் தென்னைமர அளவுக்குப் பரவி, எங்கள் தெருவில் நுழைந்து விட்டது. எங்கள் வீட்டில் முக்கிய சாமானகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டார்கள்.கிட்டத்தட்ட எல்லா வீட்டிலும் இந்த நிலை தான். பக்கத்தில் தான் வைகை ஆற்று படித்துறை பக்கம் என் மூத்த அக்கா திருமணம் ஆகி 'புகுந்த வீடு' இருந்தது. எல்லோரும் அங்கே போய்விடலாம் என்று உத்தேசம்.
இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவே, தீ அணைப்பு வண்டிகள் வந்து எரிந்த தீ மட்டுப்படுத்தப் பட்டு, எல்லாம் சகஜ நிலைக்கு வந்தது, தனிக்கதை! எனது ஆறு வயசில் பார்த்த, பாதி தென்னைமர உயரத்திற்கு கொழுந்து விட்டெரிந்த அந்தத் தீ, இன்னும் என் நினைவை விட்டு அழியவில்லை. அந்தத் தீ விபத்து, தெய்க்கால் தெரு தீ என்று அந்தக்காலத்தில் வெகு பிரசித்தம்.
அனுமார் கோயிலை ஒட்டிய தெரு ஆதிமூலம் பிள்ளைத் தெரு. இந்த ஆதிமூலம் பிள்ளைத்தெருவில் தான் நான் எனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கிய எலிமெண்ட்டிரி ஸ்கூல் இருந்தது. ஆரம்பப்பள்ளிகள் எல்லாம் அரசுப்பள்ளிகள் தான். தனியார் பள்ளிகளைப் பார்த்த நினைவு இல்லை. பள்ளிக்குப் பக்கத்தில் ரேஷன் கடை இருந்த நினைவு இருக்கிறது. கடை வாசலில் நானும் என் சகோதரியும் அரிசிக்கும், பிளாஸ்டிக் கேன் தாங்கி மண்ணெண்ணைக்கும் காத்துக் கிடந்த நினைவு மறக்கவில்லை. யுத்த காலத்திலும் அதற்கு பிந்தைய காலக்கட்டத்திலும் , அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்காமல் போகும் சாத்திய கூறுகள் ஏற்பட்டதால், அந்த அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதே ரேஷன் கடைகள். சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த ரேஷன் கடைகளும் , ரேஷன் கார்டுகளும் ஒழியவிலலை என்பது அர்த்தமுள்ள ஒரு சோகம். ரேஷன் கடைகள் பெயர் தான் நியாயவிலைக்கடைகள் என்று மாறி இருக்கிறதே தவிர, அந்த யுத்தகால ரேஷனுக்கும், இன்றைய ரேஷனுக்கும் பெருத்த வித்தியாசம் ஒன்றும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
யுத்த காலம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. என்னில் அழியாதுப் பதிந்த ஒரு காட்சி. முண்டாசு கட்டிய ஒரு ஆள் ஏணியில் நின்றபடி விளக்கேற்றுகிறார். விட்டு விட்டு நீண்ட விசில் சப்தம். 'தப..தப' என்று பூட்ஸ் ஒலி கேட்க பலர் ஓடும் சப்தம். இதுதான் அந்தக் காட்சி. என்னைத் தோண்டித் தோண்டிப் பார்த்து, என் வாழ்க்கையிலே எந்த நினைவு முதல் நினைவாய் எனக்கு இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது என்று யோசித்து யோசித்துப் பார்த்தால், இந்த நினைவுதான் முதல் இடத்தைப் பிடிக்கிறது. (நீங்கள் கூட எந்த நினைவு முதல் நினைவாய் மனசில் படிந்திருந்திருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். அந்த நினைவைச் சுற்றி எண்ண அலைகளைச் சுழல விடுங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்..)
பின்னால், என் மனசில் தட்டுப்பட்ட இந்த முதல் நினைவை இந்திய சரித்திரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், என் நினைவில் பதிந்த இந்தக் காட்சிக்கு அர்த்தம் புரிந்தது. இரண்டாம் உலகப்போர் 1939லிருந்து 1945வரை நடந்திருக்கிறது. நாஜி ஜெர்மனி, பாசிச இத்தாலி, ஜப்பான் அரசும் ஒன்று சேர்ந்த அச்சுநாடுகளுக்கும், நேசநாடுகளுக்கும் இடையே நடைபெற்றது இந்தப்போர். பிரிட்டன் நேசநாடுகளில் ஒன்றாகையால்,பிரிட்டனின் ஆளுகையில் இருந்த இந்தியாவும் இந்தப் போருக்கு இழுக்கப்பட்டது. 1945-ல் இந்தப் போர் முடிவுக்கு வந்தாலும், அதைத் தொடர்ந்து உலக அரங்கில் யுத்த முஸ்தீபுகளும், இராணுவ அச்சுறுத்தல்களும் இருந்தன போலும். 1947 இந்திய சுதந்திரத்திற்கு முன்னான --அப்பொழுது எனக்கு நான்கு வயதிருக்கும் -- இந்த நினைவு நிழல் போல் என் நினைவில் இருப்பது இப்பொழுதும் எனக்கு ஆச்சரியமான சமாச்சாரம்.
முண்டாசு ஆள் ஏணியில் ஏறி விளக்கேற்றுவது?... 'கண்ணதாசன் பிலிம்ஸ்' முத்திரைச்சின்னம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?... நான்கு பக்கமும் கண்ணாடி சதுரங்களால் அடைக்கப்பட்டு, மேற்பகுதியும் கண்ணாடி கும்பம் போலிருக்கும் தெருவிளக்கு தான் அந்தச் சின்னம்!.. மின்சாரம் அறிமுகமாகாத அந்தக்காலத்தில் -- அப்படி ஒரு காலத்தைக் கற்பனை பண்ணிக் கூட இப்போது பார்க்க முடியாது-- தெருக்களில் இந்த மாதிரி தெருவிளக்குகள் தான் இருந்திருக்கின்றன... மாலை 7 மணிவாக்கில் ஒரு ஊழியர், விளக்குக் கம்பத்தின் மேல் பகுதி கண்ணாடிக்கூண்டைத் திறந்து அதனுள் இருக்கும் சிம்னி விளக்கை ஏற்றிவிட்டுப் போவார். இரவு பூராவும் அந்த விளக்கு எரியும்' என்றும் என் சகோதரிகளிடம் கேட்டு, இந்தத் தெரு விளக்கு பற்றியும், விளக்கேற்றும் சமாச்சாரம் பற்றியும் பின்னால் தெரிந்து கொண்டேன்.
அந்த விசில் சப்தம்?...பூட்ஸ் ஒலி சப்திக்க பலர் ஓடும் ஓசை?.. இரண்டாம் உலகப்போரின் தொடர்ச்சியாய், அது முடிந்தும் சில காலம் அமுலுக்கு இருந்த ஏ.ஆர்.பி. (Armed Reserve Police) போலிசாரின் எச்சரிக்கை ஓட்டம்! விட்டு விட்டுக் கேட்ட அந்த விசில் ஓசையும் போலிசாரின் எச்சரிக்கை நடவடிக்கை தான். இதையெல்லாம் பின்னாளில் கேட்டுத் தெரிந்து கொண்டு எனக்குப் பெருத்த ஆச்சரியமாகப் போய்விட்டது. 1946 இறுதியில் இது நடந்திருக்கும் என்று வைத்துக் கொண்டாலும், அப்பொழுது எனக்கு சரியாக நான்கு வயசுதான்! ஒரு வாரத்திற்கு முன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என்னிடம் பேசிவிட்டுப் போன பெரியவர் பெயர், இப்பொழுது நினைவுக்கு வரவில்லை; ஆனால், நான்கு வயதுக் குழந்தையாய் பார்த்தக் காட்சியும், கேட்ட ஒலியும் நினைவில் பதிந்து விட்டதென்றால்... இதை நினைக்கையில், எனக்குப் பிரமிப்பாகத் தான் இப்பொழுதும் இருக்கிறது.
(வளரும்..)
14 comments:
ஒவ்வொரு கால கட்டத்தையும் நினைவு படுத்தி எழுத ஆரம்பித்தால் அதுவே ஒரு சுய சரிதையாய் வரும்
@ G.M.B.
இன்று காலை நானும் அப்படித்தான் உணர்ந்தேன். சுயசரிதை எழுதுவதற்கு தனித் தகுதி ஏதும் தேவாயில்லை; ஒருவரின் வாழ்க்கை நிகழ்வுகளை சுவைபட எழுதினாலே போதும்.
இப்பொழுதே 7-வது அத்தியாயம். இப்படி ஒரு தொடர் எழுதினால் நன்றாகத் தான் இருக்கும். முயற்சிக்கிறேன். நன்றி, ஐயா.
ஐயா! நம்பமாட்டீர்கள் இப்போதுதான் 02-02 2012 இல் எனது வலைப்பக்கத்தில் நான் எழுதிய மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற தொடர்பதிவை திரும்பவும் படித்து கால இயந்திரத்தில் பயணித்தது போன்ற உணர்வுடன் தங்களின் பதிவை படித்தேன். உண்மையில் பழைய நினைவுகளில் அசைபோடுகையில் ஏற்படும் சொல்லொணா மகிழ்ச்சி எதிலும் ஏற்படுவதில்லை.
நீங்கள் எழுதியுள்ளதுபோல் நாம் படித்த, வளர்ந்த, பழகிய, பணிபுரிந்த இடங்களை திரும்பப்பார்க்கும் எண்ணம் அனைவருக்கும் எழும், ஆனால் அது ஏனோ முற்றுபெறாத ஆசையாகவே பலருக்கு ஆகிவிடும்.
தயை செய்து தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். காத்திருக்கிறோம் படித்து இன்புற.
@ வே. நடன சபாபதி
கால இயந்திரத்தில் நீங்களும் பயணித்தீர்களா?.. நல்லது. கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் பயணத்தில் இருவருமே ஒரே உணர்வில் தான் இருந்திருப்போம் என்பது நிச்சயம்.
'கடந்த காலத்தை நினைப்பதிலும், எதிர்காலத்தைப் பற்றிய யோசிப்பிலும் இருந்தால் நிகழ்கால த்து நடப்புகளை நீ தவற விட்டு விடுவாய்' என்று எந்த அறிஞரோ சொன்ன நினைவு.
'கடந்த கால அனுபவங்களை உரமாகக் கொண்டு நிகழ்கால நிகழ்வுகளை எதிர்கொண்டு எதிர்கால சந்தோஷத்திற்குப் பயணி' என்ற அர்த்தத்திலும் யாரோ சொன்ன நினைவு.
'கடந்த காலம் திரும்பி வராது' என்று யார் சொன்னார்கள்?.. கடந்த கால நிகழ்வுகளை மனதில் ஓட்டிப் பார்ப்பதே நம்மை நமக்கு யார் என்று உணர்த்தி சந்தோஷத்தில் மூழ்கச் செய்யும் அற்புத புஷ்டி லேகியம்.
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். தங்களின் நேர்த்தியான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, ஐயா.
மீண்டும் பள்ளிக்கு போகலாம் பதிவுக்கான இணைப்பை மீண்டும் தந்திருக்கிறேன். ஒருவேளை இணைப்பு கிடைக்கவில்லையென்றால் கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்
https://puthur-vns.blogspot.com/2012/03/blog-post.html
@ வே. நடனசபாபதி
இப்பொழுது இணைப்பு கிடைக்கிறது, சார். வாசித்து விட்டுச் சொல்கிறேன். நன்றி.
எழுதுங்க தொடர்ந்து, விரைவாக. ரொம்ப நல்லா வருது தொடர்... முடிந்த அளவு எதையும் விட்டுடாம எழுதுங்க. எழுதினதைப் படிக்கும்போதே, கையில் அந்த நெய் வெண்பொங்கலிலிருந்து ஒழுகி விட்டதுபோல ஒரு பிசுபிசுப்பு.
நினைவலைகள்....
எனக்கு சிறு வயதில் ஊர் ஊராகச் செல்லும் வாய்ப்பு இல்லை. இப்போதும் இல்லை! அப்பா நெய்வேலியில் வேலை செய்த காரணத்தால் 20 வயது வரை நெய்வேலி. பிறகு தில்லியில் நான் வேலையில் சேர, கடந்த 28 வருடங்களாக தில்லி! நெய்வேலி/தில்லி நினைவுகளை மீட்டெடுப்பதில் சுகம் உண்டு....
உங்கள் நினைவலைகளை தொடர்கிறேன்.
எழுதும்போதே, அந்த அந்தக் காலச் சூழ்நிலைகளை குறிப்பிட மறந்துடாதீங்க (உதாரணமா நான் 5ம் வகுப்பு படிக்கும் காலத்தில் நெல்லையில், குதிரை வண்டியில் காலைல பாட்டில்ல (அரை லிட்டர் இருக்கும்னு நினைக்கிறேன்) பால் கொண்டுவருவாங்க. அந்தக் காலத்துக்குப் பிறகுதான் அலுமினிய கேன்களில் வர ஆரம்பித்தது. இதுபோல சினிமாவை அறிவிக்க வரும் வண்டி நோட்டீஸ்....)
@ நெல்லைத் தமிழன் (1)
சொல்லவே வெட்கமா இருக்கு. மதுரைக்குப் போய் பத்து வருஷத்துக்கு மேலாச்சு. அப்போ போனப்போ அந்த அனுமார் கோயிலை ஆசையோடு பார்த்தேன். அலாதியான பிரியத்தோடு ஆஞ்சநேயரை தரிசித்தேன்.
அந்தப் பகுதி ரோடு, வாய்க்கால், மேலே சின்ன பாலம் எல்லாம் அப்படி அப்படியே. ரோடு மட்டும் கொஞ்சம் ஜன சந்தடியாய். அந்த ஆரம்பப்பள்ளி இப்பொழுது மேல் நிலைப் பள்ளி ஆகியிருக்கிறது.
@ வெங்கட் நாகராஜ்
நெய்வேலிக்கு ஒரே ஒரு தடவை போயிருக்கிறேன். தெருக்கள் பெயர் வித்தியாசமா இருந்ததைச் சொல்ல வேண்டும். நல்ல சாலைகள்; பார்க். ஒரு சினிமாத் தியேட்டர் எல்லாம் நினைவுகளில் தேசலாக.
கரி வாகன்கள், ராஷச பெல்ட், பழுப்பு நிலக்கரி மலைக் குவியல்கள் என்று சுரங்க ஆழத்தை மேலிருந்து ஒரு பார்வை பார்த்த நினைவு இருக்கிறது. கந்தக பூமியோ?..
@ நெல்லைத் தமிழன்
அந்தக் கால சூழ்நிலை, நடப்புகள், விவரங்கள் என்று நிறைய வருகின்றன.
அந்தக் காலத்தில் நான் பார்த்ததின் இந்தக் கால நிலை - அது சிறுவனின் பார்வை. இது முதியவனின் பார்வை. இரண்டையும் எப்படி இணைத்துச் சொல்வது என்று யோசனையாக இருக்கிறது. சொல்லாவிட்டால் ஒன்றின் தொடர்ச்சியான வளர்ச்சி அல்லது வீழ்ச்சி இதெல்லாம் விட்டுப் போகலாம். சொன்னாலோ சிறுவயது அறியாப் பருவ பார்வை பங்கப்பட்டுப் போகும். இரண்டிற்கும் இடையேயான ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். பார்க்கலாம்.
உங்கள் மலரும் நினைவுகள் மிக அருமை.
பள்ளி பருவம், பார்த்த காட்சிகள் விவரித்த விதம் மிக அருமை.
நீங்கள் சொன்ன இடங்களையும் அனுமன் கோவிலையும் என் தங்கையிடம் கேட்டு பார்த்து வர ஆவல் வந்து இருக்கிறது.
@ கோமதி அரசு
ஆஹா.. இதான் பதிவுகளினால் வரும் பலன். உங்கள் தங்கை மதுரையில் இருக்கிறார் என்பதனை அறிந்து மகிழ்ச்சி.
ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்கத்து தெரு தான் ஆதிமூலம் பிள்ளை அக்கிரஹரம். அங்கிருக்கும் மேல் நிலைப்பள்ளிக்கு அருகில் சென்ற தடவை போன போது 'அந்த' ரேஷன் கடையையும் பார்த்ததாக அரைகுறை நினைவு. நிச்சயமில்லாமல் எழுதக்கூடாது என்ற கட்டுப்பாட்டில் அது பற்றிச் சொல்லவில்லை. இப்பொழுதும் அதே இடத்தில் ரேஷன் கடை என்றால்--
Post a Comment