மின் நூல்

Wednesday, June 12, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                     
                                                                             33


தொலைபேசி  இலாகா பணிக்கான நேர்காணல்  திங்கட் கிழமை காலையில் இருந்தது.  அந்தத் திங்கட் கிழமையன்று எனக்கு விடுப்பு வேண்டும் என்று கோரி குமாரபாளையம் போஸ்ட் மாஸ்டரிடம்   கடிதம் கொடுத்தேன்.   அவர் தன்னால் அதைத்  தீர்மானிக்க முடியாது என்றும் அந்த எனது விடுப்பு கடிதத்தை சேலம் தலைமை அஞ்சல் அதிகாரி   அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்.  அங்கிருந்து வரும் பதிலுக்கு ஏற்ப எனது விடுப்பு தீர்மானிக்கப் படுவதாக இருந்தது.
                                                                                                                                         

அந்த வார சனிக்கிழமை மாலை வரை  சேலத்திலிருந்து பதிலில்லை. அதனால் சனிக்கிழமை இரவு கோவை சென்று தொலைபேசி இலாகாவின் நேர்காணலுக்கான கடித்ததுடன் ஞாயிறு காலை சேலம் வந்தேன்.  நேர்காணலும்  சேலத்தில் தான்.  மாவட்ட அஞ்சல் அதிகாரி அலுவலகம் இருந்ததும் சேலத்தில் தான்.  அந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள்  தான் எனக்கு கால அவகாசம் இருந்தது.  விடுப்புக்காக எதைச் செய்ய வேண்டும் என்றாலும் அந்த ஒரு நாளில் செய்தால் தான் உண்டு.   திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு நேர்காணலுக்கு வரச் சொல்லியிருந்ததால் சேலம் மாவட்ட அஞ்சல் அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று விடுப்புக்கான அனுமதி வாங்கவும்  நேரமில்லை.

சேலம் மாவட்ட தலைமை அஞ்சல் அதிகாரியின் வீடு சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் இருந்தது.   துணிந்து ஒரு முடிவு எடுத்தேன்.  அவர் வீடு சென்று நேரில் எனது கோரிக்கையைச் சொல்லி விடுப்பு பெற்று விடுவதென்பதே அந்த நேரத்து எனது தீர்மானமாக இருந்தது.  அவர் வீடு சென்ற பொழுது காலை ஒன்பது மணி இருக்கலாம்.   வீட்டின் வெளி வாசலில் நின்ற என்னைப் பார்த்ததும்  உள்ளிருந்து ஒரு பெரியவர் வெளியே வந்தார்.  என்னிடம் விசாரித்தார்.  அதிகாரியை நேரில் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னேன்.

"மூர்த்தி பூஜையில் இருக்கிறான்.  உள்ளே வாப்பா.." என்று  வீட்டின் உள் பக்கம் அழைத்து  தாழ்வாரத்தில் இருந்த நாற்காலியைக் காட்டி அமரச் சொன்னார்.  எனக்கு அமரத் தயக்கமாக இருந்தது..  "உட்காருப்பா..." என்று உரிமையுடன் என் கை பற்றி அந்தப் பெரியவர்-- நிச்சயம் 70-க்கு மேல் வயசிருக்கும்-- உட்காரச் சொன்னார்.  நான் நாற்காலியில் பட்டும் படாமலும் அமர்ந்தேன்.
"எப்படியும் பூஜை முடிச்சு அவன் வர்றத்துக்கு கால் மணி நேரம் ஆயிடும்..." என்று எனக்குத் தெரிவிக்கிற மாதிரி சொல்லி விட்டு பெரியவர் உள்ளே சென்று விட்டார்.

'அதிகாரி கிருஷ்ணமூர்த்திக்கு இவர் தகப்பனாராய் இருப்பாரோ?' என்று யோசனை ஓடியது.  எவ்வளவு பண்பட்ட பழக்க வழக்கங்கள் இவர்களிடம் படிந்து இருக்கிறது என்று அந்த நேரத்திலும் என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

 கொஞ்ச நேரத்தில்  வேஷ்டி, பனியன், தடித்த பிரேமிட்ட மூக்கு கண்ணாடி தரித்த ஒருவர் உள்ளிருந்து  வெளி வந்தார்.  கிட்டத்தட்ட நாற்பது  வயது இருக்கலாம் என்ற தோற்றம்.  டக்கென்று எழுந்திருந்தேன்.   முன்னே பின்னே அதிகாரியைப் பார்த்திராததால் அவர் தான் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

என்னைப் பற்றி  விசாரித்தார். எதற்காக வந்திருக்கிறேன் என்று சொன்னேன்.

"ஏன் எங்கிட்டேயிருந்து அங்கே போயிடறதா   உத்தேசம் பண்ணியிருக்கே?"  என்று கேட்டார்.

என்ன காரணம் சொல்வேன்?.. 'டெக்னிக்கல் லயன்லே போகலாம்னுட்டு.." என்று தயக்கமாக அந்த நேரத்தில் மனசுக்கு தோன்றியதைச் சொன்னேன்.

"அப்படியா?.." என்று  யோசனையுடன் இழுத்தவர், "சேலம் ஆபிஸுக்கு உங்க போஸ்ட் மாஸ்டர் உன் லெட்டரை பார்வேட் பண்ணி  அனுப்பியிருக்கார் இல்லையோ?" என்று இன்னொரு தடவை நிச்சயப்படுத்திக் கொண்டார்.  "என்னிக்கு அந்த இண்டர்வ்யூ?"

"நாளைக்கு சார்.  காலம்பற பத்து மணிக்கு.. நேரம் இல்லேன்னு தான் உங்களை நேர்லேயே பாத்து பர்மிஷன் வாங்கிக்கிலாம்னுட்டு.." என்று இழுத்தேன்.

"திங்கட்கிழமை ஒரு நாள் தானே லீவ் கேட்டிருக்கே?" என்று கேட்டுக் கொண்டார்.

கொஞ்ச நேர லேசான யோசனைக்குப் பிறகு, "நீ  லீவு எடுத்துக்கோ.. இண்டெர்வ்யூ முடிஞ்சதும்  செவ்வாய்க்கிழமை   குமாரபாளையம் போய்  ஜாயின் பண்ணிடு....  நான் ஆபிஸ் போய்   உன் லெட்டரைப் பாத்து லீவ் சான்க்ஷன் பண்ணிடறேன்.. உங்க போஸ்ட் மாஸ்டர் கேட்டா, லீவ் சாங்க்ஷன் ஆயிடுத்துன்னு சொல்லிடு.. சரியா?" என்றார்.
                                                                                                                                   
நான் தலையாட்டினேன்.  "தாங்ஸ் சார்.." என்றேன்.

"இண்டர்வ்யூவை நன்னா attend பண்ணு..  இங்கேயா, அங்கேயான்னு பாக்கலாம்.  செவ்வாக்கிழமை தப்பாம  குமாரபாளையம்  போயிடணும். ஏன்னா, உன்னோட தபால் ஆபிஸ் டிரெயினிங்லே கேப் விழப்படாது. . ஆமாம்.." என்று கண்டிப்பாக சொல்கிற தோரணையில் சொன்னார்.

"சரி.. ஸார்.."                                                                                                     

"சரி.. போயிட்டு வா.."

'அதிகாரி என்ற ஆணவம் இல்லாமல்  தகுந்த ஆலோசனை சொல்கிற தோரணையில் எவ்வளவு அன்பாகப் பேசுகிறார் என்று  நெகிழ்ந்தபடியே வெளியே வந்தேன்.

சேலத்தில் என் தாய் மாமா இருந்தார்.   அங்கு ஞாயிற்று கிழமை தங்கி விட்டு
அடுத்த நாள் மாமாவின் ஆசியோடு  தொலைபேசி நேர்காணலுக்குப்  போனேன்.

நேர்காணல் நடந்த நீண்ட ஹாலுக்குள் ஒவ்வொருவராக உள்ளே போய் ஐந்து-- பத்து நிமிஷங்களில் வெளியே வந்தனர்.  யாரிடமும் பேச முடியவில்லை.
என்ன கேட்டார்கள்,  எப்படி செலக்ஷன் ஒன்றும் தெரியவில்லை.

என் முறை வந்து என் பெயரைக் கூப்பிட்டு அந்த ஹாலுக்குள் நான் போனேன்.

வட்ட மேஜை மாநாடு மாதிரி  வட்டமாக மேஜை--நாற்காலி போட்டு நேர்காணல் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். 

பக்கத்தில் போனதும் தான் திகைத்துப் போனேன்.

நடுவாந்திரமாக அமர்ந்திருந்தவரிடம்  எதையோ   கேட்டு சிரித்தபடி  அவருக்கு பக்கத்து  நாற்காலியில்  சேலம்   மாவட்ட தலைமைத் தபால் அதிகாரி  கிருஷ்ணமூர்த்தி சார் அமர்ந்திருந்தார்.

(வளரும்)

15 comments:

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஜீவி சார். அப்பொழுதே துணிச்சலாக
முடிவெடுத்து, தபால் அலுவலக மேலாளரைப் பார்த்திருக்கிறீர்கள்.

உங்கள் வீருப்பத்தைச் சொல்லி ருக்கிறீர்கள்.
மிக மிக அதிசயம்.
அந்த வருடங்களில் இருந்த அதிகாரிகளும்
இவ்வளவு அனுகூலமாக இருந்திருக்கிறார்களே.

எத்தனை நல்லவர்கள்.
த்ரில்லர் போல கிருஷ்ணமூர்த்தி சாரே இண்டர்வியூ
சாரே அங்கே இண்டர்வியூ நடக்கும் இடத்தில் இருந்தது
இன்னோரு அற்புதம்.
வெகு அழகாகச் செல்கிறது அனுபவங்கள்.
வெகு சரளமான நடை எப்பொழுதும் உங்களுடையது.
மனம் நிறை பாராட்டுகள்.

வல்லிசிம்ஹன் said...

அதே கிருஷ்ண மூர்த்திசார்.விட்டுப் போய்விட்டது.

ஸ்ரீராம். said...

அனுபவங்களைப் படித்தபடியே வந்தபொழுது சிறிதும் எதிர்பாராத ட்விஸ்ட். கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை! அதிகாரிகள் அதிகாரிகள்தான்.

ஸ்ரீராம். said...

அதிரடி முடிவுகள் அதிகம் எடுப்பீர்கள்போல... சட்டென முடிவெடுத்து தலைமை அதிகாரியை வீட்டில் பார்ப்பதென்பது அதிரடி. நல்லவேளை, நளலவிதத்தில் முடிந்தது. சில முசுடு அதிகாரிகள் எதிர்மறையாக இருப்பார்கள்.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

//அந்த வருடங்களில் இருந்த அதிகாரிகளும்
இவ்வளவு அனுகூலமாக இருந்திருக்கிறார்களே. //

அவர்களின் நோக்கமே பிறரின் நியாயமான கோரிக்கைகளுக்கு தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்றிருந்திருக்கிறது.

என் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு என்னை நகர்த்திய கிருஷ்ணமூர்த்திகள் அதிகம்.
இதை நினைக்க நினைக்க எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது, வல்லிம்மா!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//அதிகாரியகள் அதிகாரிகள் தாம். //

அடுத்த அத்தியாயத்தை பிரசுரித்து விட்டேன், ஸ்ரீராம்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//அதிரடி முடிவுகள் அதிகம் எடுப்பீர்கள்போல..//

அப்படியெல்லாம் இல்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் பொழுது
சில நேரங்களில் திடீரென்று ஒரு உந்து சக்தி கிடைக்கும். உடனே பரபரவென்று செயல்படுகையில், அடுத்தது அடுத்தது என்று வழிகாட்டல் கிடைத்துக் கொண்டே இருக்கும். அந்த இயக்கத்திற்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டியது தான். வெற்றி நிச்சயம்.

வெற்றிக் கனி பறிக்க பல நேரங்களில் தாமதமானதும் உண்டு. அதற்காக வருந்த மாட்டேன். செயலாக்கம் வலை பின்னிக் கொண்டிருக்கிறது, அந்த process முடியட்டும் என்று காத்திருப்பேன்.

உண்மையில் சொல்லப் போனால் அந்த உந்து சக்தி தான் அதிரடி.. எப்படி இதெல்லாம் நடக்கிறது என்று யோசனையில் ஆழ்வது பழக்கப்பட்டு போச்சு. அதற்கான விடை மட்டும் இன்னும் கிடைத்த பாடில்லை.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//சில முசுடு அதிகாரிகள் எதிர்மறையாக இருப்பார்கள்.//

அது ஒரு காலம். இது காலம். அந்நாளைய அதிகாரிகளின் மன லயிப்பை வெளிக்கொணர உரையாடல் மூலமாகவே முயன்றிருக்கிறேன்.

இந்த நிகழ்வுகள் நடந்தது 1963 வருடத்தின் ஆரம்ப மாதங்கள். வாழ்க்கைப் போக்கின் எல்லா அம்சங்களிலும் நிகழ்வுற்ற மாற்றங்களின் போக்குகள் எல்லா மட்டங்களிலும் பிரதிபலித்திருக்கின்றன. எனது நாற்பது வருட அரசுப் பணியில் ஏற்பட்ட மாற்றங்களை ஒவ்வொன்றாக சொல்ல முயற்சிக்கிறேன். சொல்லப் போனால் அரசியல், சமூக தளங்களில் நிகழ்வுற்ற அந்த மாற்றப் போக்குகளைச் சொல்வதற்காகவே இந்தத் தொடரை எழுது முற்பட்டேன். என் தனிப்பட்ட வாழ்க்கை அதைச் சொல்வதற்கான ஒரு சாக்கு தான்.

தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

முடிவில் செம ட்விஸ்ட்.... தொடர்கிறேன்.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

அடுத்த பகுதி வெளிவந்து முறுக்கலை நேர்படுத்தி விட்டது வெங்கட் சார்.

நீங்கள் வாசித்து வருகிறீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.

”தளிர் சுரேஷ்” said...

உங்கள் வாழ்க்கையிலும் கதை போல நிறைய ட்விஸ்ட்கள் போல்! சுவாரஸ்யமாக இருக்கிறது! தொடர்கிறேன்!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

சுவாரஸ்யமாக இருப்பதற்குக் காரணம் கதை போலச் சொல்வதால் தான்.

நிஜ வாழ்க்கையில் அந்தந்த நிகழ்வுகள் நடக்கும் பொழுது ஏதோ பங்கெடுத்துக் கொள்கிற உணர்வு தான் இருக்கும். சுவாரஸ்யம் மைனஸ். அதே வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் பொழுது + ம் - ம் கலந்தே இருக்கும்.

விட்ட பகுதிகளையும் தொடர்ந்து வாசித்து பின்னூட்டமும் போடுவதற்கு நன்றி, சுரேஷ்.

Thulasidharan V Thillaiakathu said...

உங்களுக்கு நல்ல தைரியம் தான். அதிகாரியை நேரிலேயே வீட்டில் போய் சந்திப்பது என்பதும் அவரும் உங்களுக்கு நல்லதொரு முறையில் பதில் அளித்ததும் ஆச்சரியமான விஷயம். நீங்கள் டக்கென்று முடிவு எடுப்பதும் அது நல்லபடியாக அமைவதும் இறைவனின் அருள்தான்.

கடைசியில் எதிர்பாரா திருப்பம்! அதே கிருஷ்ணமூர்த்தி சார் இங்கும் நேர்காணலில். உங்களுக்கு அத்தருணம் எப்படி இருந்திருக்கும் என்று உணர முடிகிறது.

துளசிதரன், கீதா

வே.நடனசபாபதி said...

அதிகாரிகள் அனைவரும் மோசமானவர்கள் இல்லை. திரு கிருஷ்ணமூர்த்தி போன்ற நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். (நானும் நல்ல அதிகாரிகளை சந்த்திதிருக்கிறேன்.)

பழம் நழுவி பாலில் வாயில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்ததைப் போல், தங்களுக்கு விடுப்பு அளித்த மாவட்ட அஞ்சல் அதிகாரியா தேர்வுக்குவின் தலைவராக் இருந்தது தங்களுக்கு ஒரு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கும்

தொடர்கிறேன் தங்களின் நேர்முககத் தேர்வு பற்றி அறிய.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

அந்த நேரத்தில் நல்லவேளை உண்மையான காரணத்தைச் சொல்லி விடுப்பு கேட்டோமே என்ற நிம்மதியைக் கொடுத்தது.

Related Posts with Thumbnails