மின் நூல்

Thursday, June 27, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                     பகுதி--36

ஜெயகாந்தனை அதற்கு முன்  நான் நேரில் பார்த்ததில்லை.   அதனால் அவர் தோற்றம் எப்படியிருக்கும்   என்று தெரியாது.  ஆனால்  நேரில் அவரைப் பார்ப்பதற்கு முன்னாலேயே ஆனந்த விகடன் பத்திரிகையின் மூலம்  ஜெயகாந்தனின் மன உணர்வுகளைப் பிரதிபலித்த அவர் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாகியிருந்தது.  அவர் எழுத்துக்களின் மூலம் தமிழ் எழுத்தாளர்களில் ஒரு ஹீரோவைப் போல என்னில் உருவகம் கொண்டிருந்தார்.   அவருக்கு எழுத மட்டுமே   தெரியும் என்று அறியப்பட்டிருதேன்.   எழுத்தாளர்கள் என்று அறியப்படுகிறவர்கள் இலக்கியக் கூட்டங்களில் பேசலாம். ஆனால் கட்சிக் கூட்ட மேடைகளிலும் பேசும் எழுத்தாளர் ஒருவர் இருப்பார் என்பது நான் கற்பனை கூட பண்ணிப் பார்க்காத ஒன்று.  அதனால் அப்படிப்பட்டவரை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற இயல்பான மகிழ்ச்சி என்னில் புது உற்சாகத்தைக் கிளப்பியிருந்தது.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம்.  சிரிலும் நானும் தொலைபேசி நிலையத்தில் சந்தித்து வெகு அருகில் இருக்கும் கடற்கரைக்குப் போவதாக இருந்தோம்.  நான் போன பொழுது எனக்கு முன்னாலேயே தொலைபேசி நிலையத்திற்கு சிரில் வந்திருந்தார்..  என்னைப் பார்த்ததும்
முகத்தில் முறுவலுடன் "போவாமா?" கிளம்பி விட்டார்.

கூப்பிடு தூரத்தில் கடற்கரை.  கவர்னர் மாளிகைக்கு எதிர்த்தாற்போலிருந்த  பூங்காவைத் தாண்டி அங்கிருக்கும் ஆயி மண்டபத்தைத் தாண்டி கடற்கரைச் சாலைக்கு முன்னாலேயே அந்நாட்கள் மணல் நிரம்பிய பகுதி ஒன்றிருந்தது.   அந்த இடத்தில் தான் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஒரு டேபிள் போட்டு  அதற்கெதிர்த்தாற்போல பெஞ்ச் போட்டிருந்தார்கள்.  டேபிளின் மீது  மைக்.  ஒலிபெருக்கி அமைப்பெல்லாம் இல்லை.  நாங்கள் போன பொழுது அந்த இடத்தில்  நான்கு பேர்கள் மட்டுமே இருந்தார்கள்.    அவர்களில் ஒரு இளைஞரைப் பின்பக்கமாக போய் அணைத்து, "காந்தா! எப்படியிருக்கே?" என்று கேட்டதும் சடாரென்று திரும்பிய அந்த இளைஞர் "ஓ! சிரில்.." என்று  ஆச்சரியப் புன்னகையுடன் அவர் கை பற்றினார்.  "பாண்டிச்சேரிலே இருக்கீங்கன்னு தெரியும்.. ஆனா கூட்டத்திற்கு வருவீங்கன்னு தெரியாது.." என்று சிரித்தார்.  ஜெயகாந்தனின்  நெளிநெளியான அந்த அமெரிக்கன் கிராப்புக்கு அந்த கூடு புருவம் கவர்ச்சியாக இருந்தது.  அந்த சமயத்தில் தான் சிரில் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.  அறிமுகம் "உங்களின் நேர்த்தியான வாசகர்.." என்று சுருக்கமாக இருந்தாலும் அதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட ஜெயகாந்தன் அன்புடன் என் கை பற்றினார்.

அதற்குள் நான்கு பேர்கள் நாற்பது பேர்களாகி விட்டனர்.  நிறைய பேர்களின்  தோள்களில் சிவப்புத் துண்டு  அலங்கரித்திருந்தது.  அந்த சமயத்தில்  இரண்டு சிவப்புக் கொடிகளுடன் வந்த ஒருவர் அந்தக் கொடிகளை டேபிளின் இருபக்கமும் பக்கத்துக்கு ஒன்றாக நிறுத்தி சணல் கயிறு கொண்டு கட்டினார்.  காற்றில் லேசாக அலைபாய்ந்த அந்தக் கொடிகளைப் பார்த்தேன்.  செக்கச் சிவந்த சிவப்புக்கு நடுவே அரிவாள்--சுத்தியல் பொறிக்கப்பட்டிருந்தது.   அந்தக் கொடிகளைக் கட்டியதும் அந்த இடத்திற்கே ஒரு புதுக்களை வந்து விட்ட மாதிரி என் மனசுக்குத் தோன்றியது.

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைப் போலவே  மிகச் சாதாரணமான தோற்றத்துடன்  லேசாக பழுப்பேறிய வேட்டி சட்டை சிவப்புத் துண்டுடன் பென்ஞ்சில் ஜெயகாந்தனுக்கு அருகே அமர்ந்திருந்த நபர் எழுந்திருந்து மைக் அருகே சென்று கூட்டத்திற்கு  வந்திருந்திருந்தவர்களை வரவேற்றார்.    கூட்டத்தின் தலைவர் அவர் தான் என்று புரிந்து கொண்டேன்.   உள்ளூர் பஞ்சாலைத் தொழிலாளர்களின் பிரச்னைகளை சுருக்கமாகச்  சொல்லி  அங்கிருந்த ஒவ்வொருவரும் ஆயிரம்பேருக்கு நிகர் என்று அவர் சொன்ன பொழுது பலத்த கைதட்டல்.  பிறகு அவர் சிறப்புப் பேச்சாளராக  வந்திருக்கும் ஜெயகாந்தனை பேச  அழைத்தார்.  அப்படி அவர் ஜெயகாந்தனை பேச அழைக்கும் பொழுது  தோழர் ஜெயகாந்தன் என்று குறிப்பிட்டது எனக்கு புதுசாக இருந்தது.

ஜெயகாந்தனின் குரல் மைக்கில் கணீரென்று இருந்தது. தொடர்ச்சியாக அவர்  பேசும் போது ஆவேசம் கிளர்ந்தது.  மைக்கின் முன் சிலை போல  நின்று பேசுவோர் போல அல்லாமல்  இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைந்து அசைந்து  சமயங்களில்  நுனிப் பாதங்களில் எழும்பி நிற்பது போல நின்று  மடை திறந்த வெள்ளம் போலப் பேசினார்.

இதற்கு முன் நான் கேட்டு பரவசம் அடைந்த அண்ணாவின்  அடுக்கு மொழி  பேச்சு  போலவும் இல்லாமல்,  நெடுஞ்செழியனின் ராக ஆலாபனை  போலவும் அல்லாமல் மாய    கற்பனையுலக சஞ்சாரம் லவலேசமும் இல்லாமல்  இக உலக  வாழ்க்கை நிஜங்களைச் சொல்கிற பிரகடனமாய்,  நிகழ்ந்ததை, நிகழ்வதை சரித்திர உண்மைகளைப் படம் பிடித்துக் காட்டுகிற யதார்த்த உண்மைகளை பிட்டு பிட்டு வைக்கிற  கேட்பவர்களுக்கு சட்டென்று புரிகிற பேச்சு.                         

"கம்யூனிஸ்ட்டுகள் குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் நிலத்திற்கும் மட்டுமே சொந்தமானவன் அல்ல; அவன் உலகப் பிரஜை.." என்று டிக்ளேர் செய்கிற உரத்த குரலில் சொன்னார் அவர்..  "பொதுவுடமைக் கட்சித் தோழர்கள்  வைத்திருக்கிற கட்சி உறுப்பினர் அடையாள அட்டையும்  உலக பூர்வ உன்னதர்கள் வைத்திருந்த அடையாள அட்டைகளின் தொடர்ச்சி தான்..  தோழர் லெனின் வைத்திருந்த,  கார்ல் மார்க்ஸ் வைத்திருந்த,  ஹோசிமின் வைத்திருந்த , ஃபிடல் காஸ்ட்ரோ வைத்திருந்த அட்டைகளின் சங்கிலித் தொடர்ச்சி என்பதில் நாம் பெருமை கொள்வோம்.  இது வேறு எந்தக் கட்சிக்கும் இயக்கத்திற்கும் கிடைத்திராத பெருமை.." என்று அவர் சொன்ன போது அந்த இயக்கத்தின் உறுப்பினர் அட்டை பற்றி எனக்கு ஏதும் தெரியாது ஆயினும்  உடல் சிலிர்த்தது..

தேச சுதந்திர தினத்திற்கு முதல் நாள் சிறையிலிருந்த கம்யூனிஸ்ட்   தோழர்கள் எல்லாம்   விடுதலை செய்யப்பட்டனராம்.   பிரிட்டிஷ் அடக்குமுறை  கொடுமைகளுக்குத் தப்பி தலை மறைவு  வாழ்க்கையையும் மேற்கொண்டிருந்த தோழர்களும் பகிரங்கமாக வெளியுலகிற்கு வந்தனராம்.  தலை மறைவாக இருந்த  சீனிவாசராவ், ஜீவா இவர்களையெல்லாம் நேருக்கு நேர் பார்த்த அனுபவத்தை மறக்கவே முடியாது  என்றார் ஜெயகாந்தன்.   பெரிய மீசையுடன் இருக்கும் ஜீவாவை மீசையில்லாமல் பார்த்த பொழுது இவர் தான் ஜீவா என்று என்னால் நம்பவே முடியாமலிருந்தது  என்று தனது அந்த அரை டிராயர் பருவத்து நினைவுகளை நினைவு கூர்ந்தார் ஜெயகாந்தன்.

"அந்நாடகளில் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பலம் பொருந்திய அரசியல் தொழிற்சங்க இயக்கத்திற்கு பெரும் பொறுப்பேற்று விளங்கியது.  வங்காளம் முதலும் சென்னை இரண்டாவதாகவும் பலம் பொருந்திய  கம்யூனிஸ்ட் தளமாக விளங்கின.   தேச சுதந்திரத்திற்கு    அடுத்ததான பொருளாதார முன்னேற்றம், ஏற்ற தாழ்வற்ற நிலை, பொருளாதார விடுதலை, சமூக மாற்றங்கள் எல்லாவற்றிற்கும் கம்யூனிஸ்ட் கட்சி தான்  தலைமை ஏற்று சாதிக்கப் போகிறது என்று நாங்கள் பலமாக நம்பினோம்.  கம்யூனிஸ்டுகள் சுயநலமில்லாதவர்கள்,    அறிவுஜீவிகள், கட்டுப்பாடு மிக்கவர்கள்,   மற்ற எந்த  அரசியல் கட்சி   சார்ந்தோரை விடவும் மிகப் பெரிய அளவில் குண-மன  வளர்ச்சியடைந்தவர்கள் என்ற  நற்சான்று எளிய மக்களிடம் நிலவி வந்தது..

"சிறையிலிருந்து தோழர்கள் பலர் வந்தபின் நாங்கள்  தங்கியிருந்த இடம் போதவில்லை.   ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோடில் டாக்டர் சுப்பராயன் வசித்து வந்த  ஒயிட் ஹவுஸ் என்ற பங்களா முழு நேர ஊழியர்கள் தங்கும் கம்யூனாக மாறியது.  ஒரு அறைக்கு ஆறு பேர் வீதம் பிரித்துக் கொண்டோம்.  சுவரோரமாக ஒரு டிரங்க் பெட்டி,  அதன் மீது சுருட்டி வைக்கப்பட்ட படுக்கைச் சுருணை-- இவ்வளவு தான் ஒரு முழு நேர ஊழியரின் மொத்தச் சொத்து.  பொது  ஹாலில் பத்திரிகை படிப்போம்.  அங்கு தான் சாப்பாடும்.  சாப்பாட்டு உபகரணங்களான ஒரு பெரிய அலுமினியத் தட்டும் குவளையும்  கம்யூனிலேயே இருக்கும்.  அவற்றைக் கழுவி வைப்பது,  சாப்பாடைப் பரிமாறிக் கொள்வது எல்லாம் நாங்களே.  மிக எளிமையான சாப்பாடு.  ஞாயிறுகளில் துணி துவைத்துக் கொள்வோம்.  'ஸ்குவாடு ஸேல்ஸூ'க்காக குழுக்களாகப் பிரிந்து சென்று புத்தகம் விற்போம்.

"கட்சி கல்வி வகுப்பு நடக்கும்.  வெளிநாட்டிலிருந்து கம்யூனிஸ்டுகள் வந்தாலோ,  கம்யூனிஸ்ட்டுகள் யாரேனும் வெளிநாடு சென்று வந்தாலோ அங்குள்ள பெரிய ஹாலில் எல்லோரும் கூடி அவர்கள் அனுபவங்களைச் சொல்ல  கேள்விகள், விவாதங்கள் எல்லாம் நடக்கும்.  நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப்பேன்...

"அது எப்படி நடக்கும் என்று தெரியவில்லை.  எனது சிறு வயது காரணமாக இருக்கலாம்.  "ஹூ இஸ் திஸ் யங் காம்ரேட்?" என்று என்னைப் பற்றி விசாரித்து என்னிடம்  பேச்சுக் கொடுப்பார்கள்.

"மோஹன் குமாரமங்கலம்,  எஸ்.வி. காட்டே,  டாங்கே,  இ.எம்.எஸ்.,  ஏ.கே. கோபாலன், கல்பனாதத் அஜாய்கோஷ், ஜோதிபாஸூ,   பாலதண்டாயுதம்,  எஸ். ராமகிருஷ்ணன், ரொமேஷ் சந்திரா,  கே.ஆர். கணேஷ்  போன்ற  எல்லோரிடமும் எனக்கான தோழமை உண்டு.

இந்தியாவில்  காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த பிரதான கட்சியாக கம்யூனிஸ்டு கட்சி வளர்ந்து வருவதை காங்கிரஸ்காரர்களே ஒப்புக்கொண்டார்கள்.  அதில் ஒரு பக்கம் அவர்களுக்கு சந்தோஷமும் இருந்தது.  தேச சுதந்திரத்திற்கு  பின்னான  மக்கள் பணியில் இரு சாரருமே தான்  அவரவர் அளவில் பங்காற்ற வேண்டும் என்ற புரிதல் இருந்தது.   கம்யூனிஸ்டுகள்  மீது நல்லெண்ணம் கொண்டவர்களாகவும், சந்தர்ப்பம் வரும் பொழுது கம்யூனிஸ்டுகளைப் பாராட்டுகிறவர்களாகவும் காந்தியும்  நேருவும் திகழ்ந்தார்கள்..."

அன்றைய ஜெயகாந்தனின் உரை  கம்யூனிஸ்ட் என்றால் யார் என்றும்,   கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சுதந்திரத்திற்குப் பின்னான இயக்கச் செயல்பாடுகளைச் சொல்வதாகவும் அமைந்தது.

கூட்டம் முடிந்த பிறகு சிரிலும் நானும்  ஜெயகாந்தனிடம் விடை பெற்றோம்.   என் கை பற்றி   "சென்னை வந்தால், பார்க்கலாம்.."  என்று விடைபெற்றார்.

ஜே.கே-யுடனான தோழமைத் தொடர்பு  இப்படி ஆரம்பித்தது தான்.

(வளரும்)

21 comments:

ஸ்ரீராம். said...

அறியப்பட்டிருதேன்

இந்த வார்த்தையை யோசிக்கிறேன்!

ஜேகே உடனான நட்பு ஏற்பட்ட விதம் குறித்துக் கூறியது சுவாரஸ்யம். அவர் பற்றிய வர்ணனைகள் அவர் மீதான உங்கள் ப்ரேமையைக் காட்டுகிறது!

Bhanumathy Venkateswaran said...

வேலைப்பளு, பயணங்கள் இணைய படுத்தல் இவைகளால் நடுவில் கொஞ்சம் தடை பட்டது. ஜெயகாந்தனின் உரையை நீங்கள் வர்ணித்திருந்த விதம் நேரில் அவர் பேசுவதை கேட்பது போல இருந்தது.
கம்யூனிஸ்டுகள் இன்னும் அதே எளிமையோடு இருக்கிறார்களா?

வல்லிசிம்ஹன் said...

ஜெய்காந்தன் சாரின் எழுத்தாளுமை இன்னும் வசீகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
நான் என் சித்தப்பா பெண் ,தம்பி ஒன்று சேர்ந்தால் ஒரெ
ஜமா தான். அவ்வளவு அலசுவோம். நீங்கள் பார்த்துப் பழகி இருக்கிறீர்கள் என்றால்
பொறாமையாக இருக்கிறது.

மிக மிக மகிழ்ச்சியான நினைவுகள். நன்றி ஜீவீ சார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சரியான வார்த்தையைப் பிடித்தீர்கள், ஸ்ரீராம்.

உலக விஷயங்களின் அறிதல் பொதுவானது. ஒருவருக்குத் தெரிந்தது இன்னொருவருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

அந்த விஷயம் எனக்குத் தெரியும் என்பதனை இன்னும் விரித்து அந்த விஷயம் எனக்குத் தெரிய வந்திருந்தது என்று சொலவதின் தீவிரமான சொல்லாட்சி தான் அறியப்பட்டிருந்தது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், சொல்லுங்கள்.

நெல்லைத்தமிழன் said...

ஜெயகாந்தனுக்கும் உங்களுக்குமான அறிமுகம், அவரது பேச்சு.... உங்கள் எழுத்திலிருந்து அவர் மீது உங்களுக்கு இருந்த/இருக்கும் ப்ரேமை தெரிகிறது.

கம்யூனிசத்திலிருந்து அவரை எது பிற்காலத்தில் விலக்கிவைத்தது, காங்கிரஸ் பக்கம் செல்லத் தலைப்பட்டது?

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஜெயகாந்தனை அவர் எழுத்தின் மூலம் புரிந்து கொள்வது தான் அவரைப் புரிந்து கொள்வதற்கான சுலபமான வழி. சில நேரங்களில் சில புரிதல்கள் நம் எதிர்பார்ப்புக்கு எதிராக குழப்பமாகவும் இருக்கும். 'கோகிலா என்ன செய்து விட்டாள்?' குறுநாவலுக்காக அவரிடம் நிறைய சண்டை போட்டிருக்கிறேன். அவரது வெகு சுலபமான நேர்மறையான அப்ரோச் இதற்கா இவ்வளவு வலிந்து அர்த்தம் கொண்டோம் என்றிருக்கும். ஆனால் அந்த நேர்மறையான முடிவுக்கு நாம் வந்து விடாமல் நம்மைத் தடுப்பது தான் அவரின் எழுத்தின் சிறப்பு.

எதையும் எளிமையாகக் கடந்து விடுவது அவரது சுபாவம். அல்ப நடவடிக்கைகளைக் கண்டால் அதைக் கண்டித்து ஆவேசம் கொள்வார். அது அவரது நல் இயல்பு. இன்னொருவர் நலனுக்கு குந்தகம் விளைவிக்காத தனிமனிதர் சுதந்தரத்தை காப்பாற்றுவதற்காக போராடிய போராளி அவர்.


ஜீவி said...

@ ஸ்ரீராம்

சமஸ்கிருதத்தின்மிக உன்னதமான வார்த்தை ப்ரேமை.

அதுவே மலையாள மொழி பாடல்களில் கேட்கும் பொழுது அந்த வார்த்தைக்கு முழுசான முழு அர்த்தம் கிடைத்த மாதிரி இருக்கும், ஸ்ரீராம்.

ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்

//கம்யூனிஸ்டுகள் இன்னும் அதே எளிமையோடு இருக்கிறார்களா? //

இதே கேள்வியை ஜெயகாந்தனிடம் கேட்டால், "ஏன் இருக்க வேண்டும்?" என்பது அவரது பதிலாக இருக்கும்.



ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்
ம்
"ஏன் இருக்க வேண்டும்?" -- என்று வெளிக்கு அவர் வெடித்தாலும் உள்ளூர அவர் மனசில் "ஊரே உல்லாசமாக இருக்கும் பொழுது அவன் மட்டும் சோம்பி இருக்க வேண்டுமா?" என்ற எரிச்சலில் வெளிப்பட்டிருக்கும்.

அது சரி, நாம் விஷயத்திற்கு வருவோம்.

எளிமையாக என்று எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள்? படாடோபம் இன்றி என்ற அர்த்தத்திலா?..
செல்வ வளமின்றி என்று அர்த்தமா?
அணுகுவதற்கு எளிமையாக என்று அர்த்தமா?

இது இருந்தால் அது இல்லை; அது இருந்தால் இது இல்லை -- என்று பொருந்தி வரும்
இலக்கணம் பொதுவுடமைத் தோழர்களுக்கு மட்டும் தான் என்று நம்புகிறேன்.

அவர்கள் எளிமையாக இல்லை என்றால் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் இல்லை என்பது தான் இதற்கான விடை.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

பொதுவுடமைத் தோழர்களோடு நட்பு ஏற்படவில்லை என்றால் நேர்படப் பேசு என்பதே தெரியாது போயிருக்கும், வல்லிம்மா.

இன்றும் தேசம் ஒன்று என்ற எண்ணமில்லாமல் பிரிவினை பேசிக் கொண்டிருந்திருப்பேன்.

DIALECTICAL MATERIALISM (இயங்கியல் பொருள்முதல்வாதம்) என்ற ஆகச்சிறந்த அரிய பேருண்மை புரிபடாமலே போயிருப்பேன்.

அவ்வப்போது ஜெயகாந்தனைத் தொட்டு எழுத நிறையவே இருக்கிறது, வல்லிம்மா.

கோமதி அரசு said...

அண்ணனின் நண்பர் வீட்டுக்கு வந்த ஜெயகாந்தன் அவர்களை சென்று பார்த்து பேசிய நினைவுகள் மனதில் வந்து போனது.

ஜெயகாந்தன் அவர்கள் கதைகள் எல்லாம் பிடிக்கும்.
அவரைபற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

கம்யூனிசம் என்பது ஒரு சித்தாந்தம். விஞ்ஞானபூர்வமானது. கால மாற்றங்களுக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கது. அந்த சித்தாந்தத்தில் மனசு லயித்து விட்டதென்றால் அந்த உயர்ந்த நிலையிலிருந்து விலகிப் போதல் என்பது அசாத்தியமான காரியம். விலகி விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருப்போரும் அந்த சித்தாந்தத்தின் வழி தான் எதையும் சிந்திப்பர்.

கட்சி என்பது கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான வழிவகைகளைத் தேடும் ஒரு அமைப்பு. அந்த வழிவகைகளில் மாறுபாடு காண்போர் வெவ்வேறு கட்சிகளான அமைப்புகளைத் தேர்வு செய்வர். ஜெயகாந்தனுக்கோ அந்த நிலை கூட இல்லை.

ஜெயகாந்தனைப் பொருத்த மட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் அந்நாளைய சமூக செயல்பாடுகளை எதிர்த்துச் செயல்பட ஒரு வலுவான அமைப்பு தேவையாக இருந்தது. அதற்காக அவர் காங்கிரஸ் மேடைகளை உபயோகித்துக் கொண்டார். காமராஜரின் எளிமையும் அரசியல் நேர்மையும் அவரைக் கவர்ந்திருந்தது என்பதனையும் சொல்ல வேண்டும். காமராஜரிடம் ஜெயகாந்தனை அறிமுகப்படுத்தி வைத்ததே தோழர் பாலதண்டாயுதம் தான்.

மார்க்சீய சித்தாந்ததிலிருந்து கிளைத்தெழுந்த சோஷலிச யதார்த்தவாதம் தான் ஜெயகாந்தன் கதைகளின் அடிநாதம் என்பதனை மறப்பதற்கில்லை. தனது படைப்புலக வெளிப்பாடுகளில் அவர் தன்னை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

G.M Balasubramaniam said...

எ ச் ஏ எல் லில் பணியில் இருந்தபோது கம்யூனிஸ்ட் என்றாலேயே அதிகார வர்க்கம்அதை சரியாக ஏற்றுக் கொள்ளவில்லை சிலரைப் பிடித்து விட்டால் அவர்களது செயல்களெல்லாவற்றையும் ஏற்கத் தூண்டும்ஜெய காந்தன் அசப்பில் என் சிறிய அண்ணாவை நினைவு படுத்துவார்

ஜீவி said...

@ கோமதி அரசு

இந்தப் பதிவு உங்கள் நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி.

ஜெயகாந்தனை வைத்து சில விஷயங்களைச் சொல்ல முயன்றிருக்கிறேன் என்பதே சரி.

ஜீவி said...

@ GMB

அதிகார வர்க்கத்தின் குணாம்சங்களில் ஒன்று, தானே அதிகாரம் செய்ய அதிகாரம் படைத்தவராக நினைப்பது.

அப்பையான நிலையின் இருப்போரை அதற்கு மேலான இன்னொரு அதிகார வர்க்கம் அதிகாரம் செய்யும் பொழுது தான் சுயநிலை தெரியும்.

சிலரைப் பிடித்து விட்டால் அவர்களது எல்லா செயல்களையும் ஏற்கத் தூண்டும் -- என்பது ஓரளவு சரியே. ஆனால் அதையும் தாண்டி வளர்வது தான் வளர்ச்சியே.

தங்கள் சிறிய அண்ணாவைப் பற்றிய பாசமான நினைவு கூறல் எனக்குப் பிடித்திருந்தது.
அதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றும் தோன்றுகிறது.


வெங்கட் நாகராஜ் said...

நினைவலைகளை தொடர்ந்து வாசிக்க முடியாமல் இருப்பதற்கு வருந்துகிறேன். வலையுலகம் பக்கம் வருவதே சனி-ஞாயிறுகளில் மட்டும் என்ற நிலையில் இருக்கிறேன். விரைவில் விடுபட்ட பகுதிகளையும் படிக்க வேண்டும்.

ஜெயகாந்தன் உடனான உங்கள் அறிமுகம் பற்றி ஸ்வாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறீர்கள். அவர்களது சில கதைகள் எனக்கு மனதுக்கு நெருக்கமானவை....

தொடர்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஜெயகாந்தன் அவர்களுடன் உங்களுக்கு நட்பு ஏற்பட்டது அதுவும் அவருடன் உரையாடி விவாதம் செய்யும் அளவிற்கு ஏற்பட்டது என்பது அட! என்று நினைக்க வைத்தது. அவரது பேச்சை விரிவாக உங்கள் ரசனையுடன் சொல்லியிருக்கிறீர்கள். ஜெயகாந்தன் அழகாகப் பேசுவார் என்பதையும் வேறு எங்கோ வாசித்த நினைவு.

பாண்டிச் சேரி கடற்கரை ஒட்டினாற்போலத்தான் பல அலுவலகங்களும். ஜிஎச் போனாலும் கடற்கரை தெரியும். ஆசிரமம் சென்றால் கடற்கரைதான். மணக்குளவிநாயகர் என்றாலும் கடற்கரைதான் என்று எட்டினாற்போல் கடல் சார்ந்து அனைத்தும். எனக்கு மிகவும் பிடித்த ஊர். நேரு தெரு, காந்தி தெருவிற்குச் செல்லாமல் இருக்க முடியாது சென்றால் கடற்கரையைப் பார்க்காமல் திரும்ப மனம் முற்படாது. மார்க்கெட்டே அங்குதானே.

கீதா

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

முடிந்த பொழுது படித்து வாருங்கள், சார். அவசரமில்லை.

ஜெயகாந்தனோடனான அந்த அறிமுகம் எனக்கும் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது.
ஏற்கனவே தோழர் சிரில் என் மனத்தை பண்படுத்தி வைத்திருந்ததும் அதற்கு ஒரு காரணம்.

ஜீவி said...

@ தி. கீதா

பிரஞ்சு கலாசாரமே ரசனை மிகுந்தது. தொலைபேசி இலாகாவில் என் பணி, சுற்று வட்டார அறிமுகங்கள், வாழ்க்கை முறை, பொழுது போக்குகள் எல்லாமே ரம்யமாக அமைந்தது.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

வே.நடனசபாபதி said...

திரு ஜெயகாந்தன் அவர்கள் முதன் முதல் சந்திக்கும் எவரையும் உடனே அங்கீகரிக்கமாட்டார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தங்களை திரு சிரில் அவர்கள் அறிமுகப்படுத்தியதும் உங்களின் கையை அன்புடன் பற்றினார் என்பதை அறியும்போது ,அப்போதே அவர் உங்களில் உள்ள எழுத்தாளரை தொழிற்சங்க ஊழியரை அடையாளம் கண்டுகொண்டார் என்றே தெரிகிறது. அது பின்னால் நட்போடு பழக போடப்பட்ட அடிக்கல் என எண்ணுகிறேன்.

தீவிர கம்யூனிஸ்டாக இருந்த அவர் பின்னர் எப்படி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார் என்பதும், கலைஞரை எதிர்த்ததோடில்லாமல் தேர்தலில் அவர் எதிர்த்து போட்டியிட்டவர் அவரது இறுதி நாட்களில் எப்படி மாறினார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

அரசியல் தவிர்த்து பார்த்தால் சிறுகதை நாவல் படைப்பதில் அவருக்கு நேர் அவரே என்பதில் ஐயமில்லை,. ( எனது அண்ணன் திரு வே. சபாநாயகத்திற்கு அவர் நண்பர் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கும்)

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

பிற்கால ஜெயகாந்தனில் தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத இறுக்கமாக பேசும் இயல்புகளை நானும் அறிவேன். ஆனால் அவரது வாசகர் வட்டத்தில் அது இருக்காது.

1963-64 வாக்கில் ஒரு தோழராக சக தோழர்களுடனான அவரது பழக்கம் ரொம்ப இனிமையானது. தோழர் சிரிலும் என்னை அவரின் தீவிர வாசகராகத் தான் அறிமுகப்ப்படுத்தினார். எனது மற்ற ஈடுபாடுகள் அவருக்குத் தெரிந்திருக்க வாய்பில்லை. நானும் தொழிற்சங்க ஆரம்ப தொடர்பு நிலையிலேயே அந்நாட்களில் இருந்திருக்கிறேன்.

அந்தக் காலம் ஒரு பொற்காலம். காங்கிரஸ் மேடைகளில் அவர் ஒரு கம்யூனிஸ்டாகவே முழங்கினார். அது காமராஜர் காலம் என்பது அப்படியான அவரது முழக்கங்களுக்கு சாதகமாகவே இருந்தது. கூட்டம் முடிந்து அவரைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் அவரது வாசகர்கள் மட்டுமே திறன் பெற்றிருந்தார்கள். காங்கிரஸ்காரர்கள் அவர் எழுத்துக்கு பெரும்பாலும் அறிமுகம் ஆகாதவர்கள். ஒரு எழுத்தாளர் என்று அறிவார்களே தவிர அவர் என்ன எழுதுகிறார் என்றே தெரியாது. காமராஜருக்குப் பிடித்தவர் இவர் -- அது மட்டுமே போதும் அவர்களுக்கு.

அந்நாளைய கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடும் காமராஜரின் செயல்பாடுகளுக்கு நெருக்கமாக இருந்ததினால் காங்கிரஸ் மேடைகளில் நிகழ்த்தப்படும் ஜெயகாந்தனின் உரைகள் அவர்களுக்கு வேற்றுமை பாராட்டுகிற அளவுக்கு இல்லாமலும், இன்னும் சொல்லப் போனால் பெருமையாகவும் இருந்தன. "தம்பி, யாரு தெரியுமில்லே? எங்க தோழர் தான்.." என்று மனம் மகிழ்கிற மாதிரியான பெருமை இது. இன்னொரு விஷயமும் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் என்றால் மிஞ்சி மிஞ்சிப் போனால் நூறு பேர்களுக்கு மேல் இருக்கமாட்டார்கள். ஆனால் காங்கிரஸ் மேடைகளில் ஜெயகாந்தனின் உரையை ஆயிரக் கணக்கில் கேட்டார்கள். அதுவும் காங்கிரஸ் மேடைகளில் ஒரு கம்யூனிஸ்ட்டின் உரையாக அது இருந்தது சாதகமான அம்சம். தங்கள் கொள்கைகளுக்கான பிரச்சாரம் தான் முக்கியம் என்று எண்ணுகிற கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு அந்நாளைய ஜெயகாந்தனின் செயல்பாடுகள் வேற்றுமையாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அவர் எழுத்தில் படிப்படியாக அவர் வாழ்ந்த சூழ்நிலைகளுக்கு ஏற்பவான மாற்றங்களை அறிவேன். கடைசி வரை அவரது சிவப்பு சிந்தனையில் மாற்றமில்லை எனபதற்காக புரிதல் என்னிடம் உண்டு. ஜெயகாந்தன் மட்டுமில்லை, கம்யூனிஸ்ட் கட்சியின் பாதிப்புகள் (influence) கொண்டவர்கள், அந்த உயர்ந்த சிந்தனை நிலையிலிருந்து மாற்றமே கொள்ள முடியாது என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் செயல்பாடுகள், ஒரு விஷயத்தைப் பார்க்கிற கோணம், தர்க்க பூர்வமாக விவாதிகிற நேர்த்தி, அலசுகிற பாங்கு எல்லாமே உன்னிப்பாக கவனித்து மகிழத்தக்கவை. நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?.. ஒரு கிராமத்து தோழரிடம் கூட உலக அரசியலை தர்க்கபூர்வமாக விவாதித்து தெளிவடையலாம். இந்த பெருமை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத பேறு.

உங்கள் தமையனார் ஜே.கே.யின் நண்பர் என்பதை அறிவேன். ஞானரதம் இதழ்களைத்
தொகுத்தவர் ஆயிற்றே?..

தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, நண்பரே!

Related Posts with Thumbnails