மின் நூல்

Friday, August 30, 2019

மனம் உயிர் உடல்

5.  இரண்டு மனம் வேண்டும்

‘கல்ப  கோடி ஆண்டு’ என்றாலே புராணச் சரடு என்று ஒதுக்கிவிடாமல் இருக்க அந்த வார்த்தையைத் தவிர்க்கிறேன்.
  
நாம் வாழும் இந்த பூவுலகம் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் வயதுடையது.  உலகின் தோற்ற காலமே உயிரின் தோற்றகாலமில்லை.  உயிரின் தோற்றம் உலகின் தோற்றத்திற்கு சில கோடி ஆண்டுகள் கழித்து நிகழ்ந்திருக்கிறது.  

இயற்கையின்  செல்வமான இன்றைய தாவர வகையின் ஆதித்தோற்றம் எல்லா உயிரினத் தோற்றங்களுக்கும் முன்னால் நிகழ்ந்திருக்கிறது.  அதற்கடுத்த தோற்றம் பிராணி இனத்திற்கானது. நுண்ணிய ஒரே ஒரு செல்  கொண்ட அமீபாவுக்குக்  கிடைத்த பேறு அது.

உயிரற்ற பொருட்களுக்கு அணு போல, உயிருள்ளவைகளுக்கு செல்.  செல்லின் உட்கரு நூக்லியஸ்.  அதைச் சுற்றி புரோட்டோபிளாசக் கூழ். அமீபாவுக்கு அதனது பின்னப்பட்ட ஓரப்பகுதிதான்  கைகள். அமீபா காலத்திலேயே உணர்தல் அமுலுக்கு வந்து விட்டது.  உணவைக் கண்டுபிடிக்க அமீபாவிற்கு இந்த உணர்தல் தான் உதவியிருக்கிறது.  உணர்வால் உணவைக் கண்டு கொண்டதும் அமீபாவின் ஓரப்பகுதியின் இரு துண்டுகள் இணைந்து அதற்கான உணவில் படியும்; அல்லது பற்றிக்  கொள்ளும்.  கொஞ்சம் கொஞ்சமாக பற்றிக் கொண்டதை அமீபா கபளீகரம் செய்து விடும்.

இந்த ஒரு ஸெல் அமீபா தான் வெகு மூத்த குடிமகன்.  ஒரு  ஸெல் அமீபா பல ஸெல் உயிரின தோற்றங்களுக்கு வழிவகுத்து அவை  பல்கிப் பெருகி பிராணிகள் இனத்திற்கு அடிகோலி அவை உண்டு களித்து கழித்து உறங்க தேவைகளுக்கேற்பவான உறுப்புகளும் அமையப் பெற்று மனித குலத்தின் தோற்றத்திற்கு அச்சாரமிடப்பட்டது.

எல்லா பிராணிகளின் கூட்டத்தைப் போலவே மனிதனும் ஸெல்களின்  கூட்டம் தான்.    பல அடுக்குத் தோல்ப் போர்வை, அதற்கடியிலான  கொழுப்பு ஸெல்கள் என்று தோல், உள்ளடங்கிய சமாசாரங்களை மூடுவதற்கும் தேகத்தின் உஷ்ணநிலையைக் காப்பதற்குமான அருமையான ஏற்பாடாகவும் அமைந்திருக்கிறது.   ஸெல்களைச் சுற்றி திசு போன்ற உறுதியான தசைநார் ஸெல்களும்  உண்டு.  தசைகளோடு பிணைந்தவையாய் வெண்மை நிறத்தில் நரம்புகள்.  நரம்புகளும் ஸெல் அமைப்பு   கொண்டவை தான்.  தசைகளுக்கு உள்ளுக்கு உள்ளாய் உடலின் உள் உறுப்புகள்.

மனதைப் பற்றித் தெரிந்து கொள்ள மனதிற்கு சம்பந்தப்பட்ட உறுப்புகளின் செயல்படும் தன்மை பற்றியும்  தெரிந்து  கொள்ள வேண்டும்.   அப்புறம் அப்படிச் செயல்படுவதற்காகக் கிடைக்கும் சக்தி பற்றி.

உணர்வுகளை அழகாக வித்தியாசமாகச் சொல்லிவிடுவது தான் கவிஞர்களின்  மொழி.

இரண்டு மனம் வேண்டும் என்று இறைவனிடன் கேட்கிறார் கண்ணதாசன்.  ‘நினைத்து வாட ஒன்றாம்;  மற்றொன்று மறந்து வாழ்வதற்காம்.
    
இரண்டு மனம் என்பது இல்லையாயினும்   மனித மூளை இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது போலத் தோற்றம் கொடுக்கும்.  நமது வசதிக்காக வலப்புறம் இருக்கும் பகுதியை வலப்புற மூளை என்றும் இடப்புறம் இருக்கும் பகுதியை இடப்புற மூளை என்றும் கொள்வோம்.  இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்க  corpus callosum  என்னும் இணைப்புப் பாலம் உண்டு. 

பேச்சு, பேசும் மொழி, வார்த்தைகள் இவற்றை கட்டியாள்வது இடப்புறப் பகுதி.  அதற்காக ல-ள, ழ-ல வித்தியாச உச்சரிப்பிற்கெல்லாம் இதைப் பொறுப்பாக்க  முடியாது.  உச்சரிப்பு என்பது பழக்கத்தில் அமைவது.  அதே மாதிரி நிறைய மொழிகள் அறிந்தவருக்கு மூளையின் இடப்புற பகுதியில் அறிந்த மொழிகளுக்காக நிறைய இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்றும் கிடையாது.  லாஜிக்கலான, படிப்படியான ஆழ்ந்த சிந்தனைகளுக்கு கருவூலம் இந்த இடப்பகுதி என்பது இந்தப் பகுதியின் விசேஷம்.  வலப்புறமோ உருவங்கள், நிறங்கள்,  ஓவியங்கள், பாடல்கள் என்று இதன் உலகமே தனி.  கற்பனைகள் பூப்பதற்கு இந்தப்  பகுதி  தான் காரணம்.  

மூளையின் தோற்றம்  இரண்டு பகுதிகளாக இருப்பது போலத் தோற்றம் கொண்டிருப்பினும் இவை தனித்தனியே வேலை செய்வதில்லை.  அதாவது லாஜிக் பகுதியும் கிரியேட்டிவ் பகுதியும் தங்களுக்குள் முரண்டிக் கொள்வதில்லை.  சொல்லப் போனால் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு செயல்படுகின்றன.  இரண்டு  பகுதிகளையும் ஒன்று சேர்க்கும் பாலமான corpus callosum  மூலம் இவை செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றன. இன்னொரு முக்கியமான விஷயம்.   வலது பகுதி மூளை உடலின் இட்து பகுதியையும், இடது பகுதி மூளை உடலின் வலது பாகத்தையும் ஆள்கின்றன.

மூளையின்  வெளிப்புறம் நிமிர்த்தி வைத்த காலிப்ளவர் மாதிரியான தோற்றம் கொடுக்கும்  மூளையின் வெளிப்பரப்பு சாம்பல் நிறமாயும், உள்பகுதி வெண்மை நிறமாகவும் இருக்கும். மூளையின்  வெளிப்புறம் cerebral cortex என்று அழைக்கப்படுகிறது.  மனித மூளைகளுக்கே வாய்த்த தனிச்சிறப்பு வாய்ந்தது இந்த பகுதி.  மனிதனின் அறிவுக்கூர்மைக்கு பொறுப்பேற்கும் பகுதியாகக் கருதப்படுகிறது..   அறிவு என்பது என்ன என்று பார்க்கும் பொழுது இதைப் பற்றி விவரமாக விவரிக்கலாம்.

நியூரான்கள் என்பவை நரம்பு செல்கள்.   ஒவ்வொரு நியூரானுக்கும் ஒரு முனையில் டெண்டிரைட்டு என்னும் சிறிய கிளையும் மற்றொரு முனையில்  அக்ஸன் என்ற சற்று நீண்ட கிளையும் உண்டு.  நரம்பு ஸெல்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து காணப்படுவதில்லை.  ஒரு நியூரானின் அக்ஸன் பகுதி அடுத்த நியூரானின் டெண்டிரைட்டுக்கு அருகில் இருக்கிற மாதிரி தோற்றம் கொண்டிருந்தாலும்  ஒன்றிற்கு ஒன்று தொட்டு விடாமல் இருக்கும்.  இரண்டும் இணையாத இடைவெளி கொண்ட குறுகிய இடத்திற்கு ஸைநாப்ஸ் என்று பெயர்.  உணர்வு பூர்வமான சமயங்களில் அல்லது உத்திரவுகளைப் பிறப்பிக்கின்ற அதிகார தோரணை நேரங்களில் இந்தப் பகுதியில் ஏற்படும் ஒரு ரசாயன நிகழ்வு விசேஷ என்ஸைம்களால் ஊக்குவிக்கப்படுவதாக ஆராய்ச்சிகளின்  மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.   மிகுந்த சூட்சுமத்துடன் லாகவத்துடன் இந்த ஊக்குவிப்பு நிகழ்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுப்பிடிப்பு.

இப்போதைக்கு இது போதும்.

மூளையே தான் மனமோ என்று மயக்கம் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. இரண்டும் ஒன்றல்ல என்று முடிவுக்கு வருவதற்கும் அழுத்தமான காரணங்கள் உண்டு.
மூளையின் செயல்பாட்டிற்கும் மனத்தின் செயல்பாட்டிற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு.

மூளை கண்ணுக்குத் தட்டுப்படுகிற உடலின் ஒரு உள்ளுருப்பு.  கிட்டதட்ட 1.5 கிலோ கிராம் எடையுள்ள ஒரு பொருள்.

மனம் என்று நாம் குறிப்பிடுகிற எதுவும் மனித உடலின் எந்த உறுப்பாகவும் அதாவது பொருளாக இல்லை.  இருந்திருந்தால் சி.டி. ஸ்கேன்களில் சிக்கியிருக்கும்.

இருந்தாலும் மூளையின் செயல்பாடு தான் மனமா என்கிற பதில் வேண்டுகிற கேள்வியும் உண்டு.

மூளை, மனம் இந்த இரண்டுக்குமான ஒரு பொதுவான புரிதலில் மூளை என்பது நம் உடலின் வெளிச்செயல்பாடுகளை  நிகழ்த்துவதாகவும்,  மனம் என்பது உள்செயல்பாடுகளை உணர்த்துகிற ஒன்றாகவும் கொள்ளலாம்.      

(வளரும்)                                                            

10 comments:

நெல்லைத்தமிழன் said...

ஃபாண்ட் நல்லா இருக்கு. இதையே தொடருங்க

ஸ்ரீராம். said...

திடீரென அறிவியல் வகுப்புக்குள் நுழைந்தது போல... ஆனாலும் பேசப்படும் விஷயத்துக்கு சில அடிப்படை விஷயங்கள் அவசியம்தானே?

வெங்கட் நாகராஜ் said...

ஸ்ரீராம் சொல்வது போல அறிவியல் வகுப்பு! ஆனாலும் சில விஷயங்களை புரிந்து கொள்ள அறிவியல் அவசியம் தானே.

தொடர்கிறேன்.

வே.நடனசபாபதி said...

மூளையைப்பற்றி விரிவாக ஒரு அறிவியல் நிபுணர் விளக்குவதுபோல் எளிய நடையில் விளக்கியுள்ளீர்கள். பாராட்டுகள்! மூளைக்கும் மனதிற்கும் தொடர்பு உண்டா என்பதை அறியா காத்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மனம் இயக்குவதால் மூளை இயங்குகிறதா என்ற
சந்தேகம் வருகிறது. பார்க்கலாம்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

வாசித்து விட்டீர்கள் என்று தெரிகிறது. தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அறிவியலைத் தொட்டு எழுதுவதில் ஒரு செள்கரியம் இருக்கிறது.

அது என்ன என்று சொல்லுங்கள், பார்ப்போம்.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜன்

ஆமாம், அறிவியலின் துணை கொண்டு விளக்கினால் அடிப்படைத் தெலிவு சுலபமாக ஏற்பட்டுவிடும் என்பது உண்மை தான்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

அடுத்து அதற்குத் தான் போக வேண்டும் என்று குறிப்பால் உணர்த்தியமைக்கு நன்றி, சார்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

மனம் இயங்குவதால் மூளை இயங்குகிறதா?

நல்ல கேள்வி, வல்லிம்மா

காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
கொடி அசைந்ததால் காற்று வந்ததா?

-- என்று கண்ணதாசன் கேட்ட கேள்வி.

Related Posts with Thumbnails