மின் நூல்

Friday, August 9, 2019

வசந்த கால நினைவுகள்...

                                      42

வானியில் இருக்கும் அற்புதமான பழைமையான கோயில்  சங்கமேஸ்வரர் ஆலயம்.  இந்தக் கோயில் நான் அங்கிருந்த காலத்தில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தது.   கிட்டத்தட்ட ஒரு வார காலம் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளோடு விழா பிரமாதமாக நடந்தது.   ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. 

அன்றைக்கு மாலை பொழுது சாய்ந்ததும் ஒரு இசைக் கச்சேரி இருந்தது.  கோயில் பிரகார மதில் சுவர் தாண்டி முன்பக்கம் பெரிய பந்தல் போட்டு கச்சேரிக்கு மேடை அமைத்திருந்தார்கள்.  பாடப் போவது பிரபல சங்கீத வித்வான்.  சினிமாவிலும் நாலைந்து பாடல்கள் இவர் பாடியிருந்ததால் கர்நாடக சங்கீதப் பிரியர்கள் மட்டும் என்றில்லாது சகலரும் திரண்டிருந்தனர்.
ஜரிகை வேஷ்டியும், புரளும் அங்கவஸ்திரமுமாயு பாடகர் பந்தலுக்குள் பிரவேசித்ததுமே மக்களிடம் உற்சாகம் பீறிட்டது.  ஒரு கூட்டமே பிரதம பாடகரோடு கூட வந்தது.  முன் வரிசை நாற்காலிகள் முழுவதுமே அவருடன் வருபவர்களுக்காக முன் கூட்டியே ஒழித்து விடப்பட்டிருந்ததால் வந்தவர்களுக்கு செளகரியமாகப் போய் விட்டது.           
                                                                                                                           
சங்கீத வித்வான் மைக்குக்கு பின்னால் அமர்ந்திருந்த காட்சியே அமர்த்தலாக இருந்தது.  நிச்சயம் 40-க்கு மேலே வயசு இருக்கும்.  சதுர முகமும் நரை தலையும் இள நகை முகமுமாய் எனக்கு அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.

அவருக்கு பக்கத்தில் ஒரு இளைஞன்.   தன்னம்பிக்கை நிறைந்த களையான முகம்.  குருவோடு சேர்ந்தே அவனும் பாடப் போகிறான் என்று அவனுக்கு முன்னாலும் ஒரு மைக் வைக்கப்பட்டதிலிருந்து தெரிந்தது.  விநாயகர் துதியுடன் ஆரம்பித்த கச்சேரி இரண்டே கீர்த்தனைகளில் களை கட்டி விட்டது.

அடுத்துப் பாடிய ஒவ்வொரு பாட்டுக்கும் கைத்தட்டல்  பந்தலைப் பிளந்தது.   எனக்கோ அந்த வயசில் சங்கீத விஷயத்தில் 'அ', 'ஆ' ன்னா கூடத் தெரியாத ஞான சூன்யமாக இருந்தாலும் அந்த வித்துவான் பாடுவதில் ஏதோ குறையிருப்பதாக ஒரு நெருடல்.  கொஞ்சம் கொஞ்சமாக அந்த நெருடல் என்ன என்று தெரிந்து கொள்ள மனம் தவியாய்த் தவித்தது.    அந்த சங்கீத வித்வான் அப்பொழுது பாடியது எனக்கு மனப்பாடமாகத் தெரிந்த  கோபால கிருஷ்ண  பாரதியின் கீர்த்தனை.  'தில்லையம்பலத்தானை கோவிந்த ராஜனை தரிசித்துக் கொண்டேனே' ... என்று அவர் பாட ஆரம்பிக்கும் பொழுது  இந்தத் தடவை அந்த வித்துவானின் முகத்தை வாயசைப்பை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன்.   'தில்லையம்பலத்தானை' என்று அவர்

ஆரம்பித்த பொழுது குரல் வளம்    கிரக்கமாக இருந்தது.    போகப் போக வேகம் கூடியது.  'தொல்லுலகமும்   படியளந்து' வரியிலும்,  'அம்பல ரகசியம் அறிந்து கொள்வதிங்கே' வரி வந்த போதும் சரி,   அவர் தன் குரலை உச்ச ஸ்தாயியில் ஏற்றி நிறுத்த முடியாமல் தவித்தது தெரிந்தது.                 

அவருடன் சேர்ந்து மெல்லப் பாடிக் கொண்டு வந்த இளைஞன் உச்சத்தில் அழகாக நீட்டி பரவிப் படிந்து ஒரு விமானம் ரொம்ப மெஜஸ்டிக்காக கீழே இறங்கித் தவழ்வது போல குரலை இறக்கி நிரவிய  தருணத்தில் அவன் குரலுடன் வித்வானின் குரலும் சேர்ந்து கோண்ட பொழுது உச்சத்தில் குரலை ஏற்ற முடியாத வித்வானின் சிரமம் தெரிந்தது.   சரணத்தில் 'அருமறை பொருளுக்கெட்டா' வரியில் 'எட்டா'வை எட்டி நீட்டுவதில் சிரமப்பட்டு 'அறிதுயில் அணையானை'யில் மறுபடியும் உச்சம் அவஸ்தைப்படுத்தி உதவியாளர் உதவியில் அந்த நீட்டலை சமாளித்து 'ஆதரிப்பதங்கே' என்று இறக்கி முடித்த பொழுது கைத்தட்டல் வானைப் பிளந்தது.

உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அப்பொழுது அங்கே எழுந்த கைத்தட்டல் பாடகரின் அந்த உதவியாளருக்கு இல்லையென்றாலும், அந்த உதவியாளர் இல்லையென்றால் இந்த கரகோஷம் ஏது இங்கே என்ற கேள்வி மனசின் அடி ஆழத்தில் எழுந்து பொறுத்துக் கொள்ள முடியாமல் அவஸ்தையாக இருந்தது.

ஏதோ ஒரு சக்தி உந்தித் தள்ளியது போல எழுந்தேன்.  கூட்டத்தை விட்டு வெளியே வந்தேன்.  விறுவிறுவென்று  கோயில் வெளித்திடலில் இருந்த பூக்கடைக்குப் போய்  ஒரு ரோஜாப்பூ மாலை வாங்கிக் கொண்டு கச்சேரி நடந்த இடத்திற்குத்  திரும்பினேன்.  வித்துவான் அடுத்த பாடலைப் பாடுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிக் கொண்டிருந்த பொழுது,  நின்று கொண்டிருந்த கூட்டத்தினரை விலக்கித் தள்ளிக் கொண்டு மேடைக்கு வெகு அருகில் போய் ஏந்திக் வந்திருந்த மாலையை அந்த உதவிப் பாடகர் இளைஞன் கழுத்தில் போட்டேன்.

அந்த ஷண வினாடி அந்தப் பந்தலே விக்கித்து நின்றது மாதிரி எனக்குத் தோன்றியது. 

நான் மேடையை நெருங்கியதுமே  வித்துவான் தனக்குத்  தான் மாலை என்று தெரிந்து லேசாகத் தன் தலையைக் குனிந்தது எனக்குத் தெரியும்..  இருந்தாலும் நான் அவரது    உதவியாளருக்கு மாலையைப்   போட்டதும்     தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  சமாளித்துக் கொண்டு  அவர் தன் கையைத் தட்ட, மெக்கிலும் அந்த ஒலி வெளிப்பட்டு,  மொத்த கூட்டமுமே நான் போட்ட மாலைக்கு கை தட்டினதை அந்த இளைஞனுக்கு அந்த சமயத்தில் கிடைத்த அங்கீகாரமாகவே கருதினேன்.

இந்த ரசாபாசத்தை - வித்துவான் இருக்க அவர் சீடனுக்கு நான் போட்ட மாலை 'அபச்சாரத்தை'க் களைய --  யாரோ ஒருவர் ஓடிவந்து வித்துவானுக்கும் மாலையைப் போட்டார்.  அதற்கு மேடைக்கு அருகிலேயே நின்று கூட்டத்தோடு சேர்ந்து நானும் கைதட்டினேன். 

ரொம்ப நேரம் அங்கு இருக்க இருப்பு கொள்ளவில்லை எனக்கு.   கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியே வந்தேன்.   கோயில் கோபுரம் சர விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஜெகத்ஜோதியாக இருந்தது.  கூடு துறைப் பக்கம் போகலாமா என்று  யோசனை ஓடியது.   சுற்றிலும் நன்றாகவே இருட்டு கவிந்து விட்டது.   பாதை அவ்வளவு சரியில்லாததினால் கூடுதுறை பக்கம் போவது அவ்வளவு சிலாக்கியமில்லாதிருக்கும் என்ற நினைப்பு வந்து  போகையில் எனக்கு எதிர்ப்புறம் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெரியார் என்னைப் பார்த்ததும் ஒரு கணம் தயங்கி,  "ஏம்பா அப்படிச் செஞ்சே?" என்று குழைவாகக் கேட்டார்.

அவரை நிமிர்ந்து பார்த்த பொழுது  என் மனசு லேசாகிப் போனது.   யாராவது இப்படி நான் அந்த  இளைஞனுக்கு மாலை போட்டதைப் பற்றிக் கேட்க மாட்டாங்களான்னு  தான் ஏங்கியது  மாதிரி இருந்தது.  "ஐயா!  தப்பா நான் ஏதாவது  செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்க.  பாடின அந்தப் பையன் என் வயசு  இளைஞன் இல்லையா?..   அவ்வளவு அருமையா இந்த வயசிலே அவன் பாடினதைப் பாத்து பரம சந்தோஷமா போயிடுத்து.  அதான்..  மூணு ரூபா சொன்னான்.  பேரம் பேசாம காசு கொடுத்து   மாலையை வாங்கிண்டு வந்தேன்.    அத்தனையும் ரோஜா. .. அந்த பையனுக்காகவே அமைஞ்ச மாதிரி இருந்தது.." என்று தாழ்ந்த குரலில் தயங்கித் தயங்கிச் சொன்னேன்.

"நீ ஒண்ணும் தப்பா செஞ்சிடலே.." என்றார் பெரியவர்.   "நானும் கேட்டேன்.   அந்தப் பையன் இன்னிக்குப் பிரமாதமாப் பாடினான்.  இவ்வளவு  ஜோராப் பாடறான்னேன்னு நான் அவனை மனசிலே பாராட்டி நினைச்சிக்கிட்டிருக்கற நேரத்லே தான் நீ டக்ன்னு அவனுக்கு மாலையைப் போட்டுட்டே.. அவனும்  நாளைக்கு இந்த பெரிய வித்துவான்  மாதிரி வர வேண்டியவன் தான்.   நீ அவனுக்கு மாலை போட்டது சரி தான்.." என்று சொன்னார்.

நான் அப்போ செஞ்ச காரியத்தை  இன்னொருத்தர் சரின்னு சொன்னது மனசுக்கு ரொம்ப திருப்தியா இருந்தது..  இருந்தாலும் தயங்கியபடி, "தப்பா செஞ்சிட்டோமோன்னு எனக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கத்தான் செஞ்சது.." என்றேன்.

அந்தப்  பெரியவர் வாஞ்சையுடன் என் தோளில் லேசாகத் தட்டிக் கொடுத்தார்.  "தம்பீ!  எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம இந்த  மாதிரி உணர்வுபூர்வமா இன்னொருத்தரை மதிக்கறதெல்லாம்,  பாராட்டறதெல்லாம்  எல்லாராலேயும்  முடிஞ்சிடாது.  அதுக்குன்னு ஒரு நல்ல மனசு வேணும்.  அது உங்கிட்டே இருக்கு.  நிதானமா ஒரு காரியத்தை செய்யறச்சே தான் சாதக பாதகங்களையெல்லாம் யோசிச்சு நம்ம புத்தி அதிலே படியும்.   இந்த மாதிரி உணர்வின் எழுச்சிலே சடக்ன்னு செய்யறதெல்லாம் நாமாச் செய்யறதில்லே..  அதெல்லாம் நம்மளத் தாண்டி நடக்குது.  ஏதோ ஒரு சக்தி நமக்குள்ளே பூந்திண்டு செய்ய  வைச்சிடறது.  அப்படி  செஞ்சிட்டேன்னு எடுத்துக்க வேண்டியது தான்.." என்றார்.

"இருந்தாலும்..." என்று இழுத்தேன்.

"என்ன இருந்தாலும்?.. சும்மா போட்டுக் குழப்பிக்காதே.  நீ செஞ்ச காரியத்லே சத்தியம் இருக்கு.  அந்த பலம் ஒண்ணு  போதும்.." என்று என்னை தேற்றுகிற மாதிரி சொல்லி விட்டு என்னைத் தாண்டிப் போனார்.

நிமிர்ந்து பார்த்தேன்.  கோயில்  சுற்றிலும் தகதகத்த மின் ஒளியில் பளபளத்துக் கொண்டிருந்தது.  இறைவனே அந்தப் பெரியவர் ரூபத்தில் வந்து நான் செஞ்ச காரியத்தை அங்கீகரித்த மாதிரி அன்று உணர்ந்தேன்.

இரவு படுக்கையில் விழுந்த பொழுது மனம் பூராவும் இனம் புரியாத ஒரு நிம்மதி ஆக்கிரமிச்சிருக்கிற மாதிரி உணர்ந்தேன். 

சில விஷயங்கள் நடக்க டூலாக நாம் எப்படி உபயோகப்படுத்தப் படுகிறோம் என்று வாழ்க்கையில் முதல் முதலாக உணர்ந்த தருணம் அது தான்.


(வளரும்)

24 comments:

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள்...

சில சமயம் இப்படித்தான் நமக்குச் சரி என்று பட்டதை செய்து விட வேண்டும் என்ற நினைப்பே அதைச் செய்து விடுவோம்.

நல்ல பாடகர் - இருவரில் எவராக இருந்தாலும் - அவர் உடன் வந்த இளைய பாடகராக இருந்தாலும் அவரைப் பாராட்டி இப்படி மாலை வாங்கிப் போட்டது நல்ல விஷயம்!

தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

//வித்துவான் அடுத்த பாடலைப் பாடுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிக் கொண்டிருந்த பொழுது, நின்று கொண்டிருந்த கூட்டத்தினரை விலக்கித் தள்ளிக் கொண்டு மேடைக்கு வெகு அருகில் போய் ஏந்திக் வந்திருந்த மாலையை அந்த உதவிப் பாடகர் இளைஞன் கழுத்தில் போட்டேன்.//

நல்ல விஷயம்.

இந்த நிகழச்சி உங்கள் கதையில் வந்து இருக்கிறது இல்லையா?
படித்த நினைவு இருக்கிறது.

பவானி கூடுதுறை படங்கள் ஆடிப்பெருக்கில் பார்த்தேன்.
இன்று உங்கள் தளத்திலும் பார்த்தேன்.

கோமதி அரசு said...

//இந்த மாதிரி உணர்வின் எழுச்சிலே சடக்ன்னு செய்யறதெல்லாம் நாமாச் செய்யறதில்லே.. அதெல்லாம் நம்மளத் தாண்டி நடக்குது. ஏதோ ஒரு சக்தி நமக்குள்ளே பூந்திண்டு செய்ய வைச்சிடறது. அப்படி செஞ்சிட்டேன்னு எடுத்துக்க வேண்டியது தான்.." என்றார்.//

உங்கள் மனதுக்கு இதம் தரும் வார்த்தைகள்

ஸ்ரீராம். said...

இந்த நிகழ்ச்சியை நீங்கள் உங்கள் கதை ஒன்றில் உபயோகித்திருப்பதை நானும் படித்திருக்கிறேன். இவரும் அந்த மாலையை எடுத்து ஒரு பேழையில் பத்திரப்படுத்தி வைத்திருப்பாரோ...!

ஸ்ரீராம். said...

அங்கீகாரம் பெற்ற அந்த இளைஞனுக்கு மனதுக்குள் சந்தோஷம் இருந்திருக்கும். அதே சமயம் 'குருபார்வை'யில் சங்கடம் வந்து விடுமோ என்கிற அச்சமும் இருந்திருக்கும்!​

ஸ்ரீராம். said...

அந்த பாடகர் யாராக இருக்கும் என்று யூகித்துப் பார்த்தேன். மருதமலை முருகன் ஒரு உருவத்தை கண்முன் காட்டுகிறான்.

ஸ்ரீராம். said...

ஒரு நொடியில் நாம் செய்துவிடும் சில விஷயங்கள் சில சமயம் யாரிடமாவது பகிர்ந்துவிட்டால் பாரம் குறைந்துவிடும். சமயங்களில் அதன்பின்னும் கணைத்துக்கொண்டேயிருக்கும்!

கோமதி அரசு said...

'பார்வை' கதையில் தான் பாடகருக்கு மாலை போடுவது வரும் என்று நினைக்கிறேன்.

இராய செல்லப்பா said...

சிந்தனையை இயக்குவது மனம். ஆனால் உணர்ச்சியை இயக்குவது, மனத்தைக் கடந்த ஏதோ ஒன்று. இதை நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

அந்த வித்துவானின் சீடர் மீது கொண்ட பரிதாப உணர்வில் வெளிப்பட்டது வெங்கட்.
ஏழ்மைத் தோற்றமும் கூட சேர்ந்து கொண்டது. பின் விளைவுகளை அறியாது செயல்பட்டதும் கூட. தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

ஆமாம். கோமதிம்மா. இந்த விஷயத்தை என் நாவல் ஒன்றில் உபயோகித்து அதை விரிவுபடுத்தியிருக்கிறேன். வாசித்ததை நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு (2)

//உங்கள் மனதுக்கு இதம் தரும் வார்த்தைகள்..//

சொல்லப் போனால் பல நேரங்களில் நாமே நெஞ்சுக்கு நீதி வழங்கிக் கொள்கிறோம். அதில் இது ஒன்று.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஸ்ரீராமிற்கு லேசாகக் கோடி காட்டி விட்டால் போதும். அந்த டிராக்கை சரியாகப் பிடித்து விடுவார் !!

//இவரும் அந்த மாலையை எடுத்து ஒரு பேழையில் பத்திரப்படுத்தி வைத்திருப்பாரோ...!//

அதே. என் நாவலுக்காக டெவலப் பண்ணின சமாச்சாரம். புள்ளி வைத்தால் கோலம்
போட்டு விடுவீர்களே!

ஜீவி said...

@ கோமதி அரசு (3)

//பவானி கூடுதுறை படங்கள் ஆடிப்பெருக்கில் பார்த்தேன்.//

கர்நாடகத்தில் பெய்த மழை, இப்பொழுது பவானி கூடுதுறை காவேரியில் பயங்கர வெள்ளம்.
தொலைக்காட்சியில் தான் பார்த்தேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

சந்தோஷம், சங்கடம் இரண்டும் சரியே. 'குரு பார்வை'யின் பின் விளைவுகளை சரியாக அறியாவிட்டாலும் அந்த நாவலுக்கு கிடைத்த தீனி இதான்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

சரியே. உங்கள் ஊர்க்காரர் தான்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (4)

பகிர்வதின் பலனே மனசு லேசாகவது தான். விஷயம் தீவிரம் என்றால் லேசில் மறக்காது கனத்துக் கொண்டிருக்கும் தான்.

ஜீவி said...

@ கோமதி அரசு

'பார்வை' கதையை நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி. அதிலும் நாவலின் ஆரம்பத்தில் ஒரு சங்கீத கச்சேரி வரும். கண்ணிருந்தவர் கண்ணிழந்து மீண்டும் பெற்ற கதை அது.
அந்தக் கதை தலைப்பில் பெயர் மாற்றம் கொண்டு, 'இருட்டுக்கு இடமில்லை' என்ற பெயரில் அமேசான் கிண்டலில் வாசிக்கக் கிடைக்கிறது. புஸ்தகா.காம் என்னும் வாடகை நூல் நிலையதிலும் வாசிக்கலாம்.

இந்த நிகழ்வு வந்தது 'கனவில் நனைந்த நினைவுகள்' என்ற நாவலில். கும்பகோண பழம்பெரும் எழுத்தாளர் எம்.வி.வி. பற்றி வருமே அந்தக் கதை. ஸ்ரீராம், 'பட்டுரோஜா மாலையை பேழையில் வைத்து' என்று சரியாகக் கண்டுபிடித்து விட்டார்.

ஜீவி said...

@ இராய. செல்லப்பா

நவீன விஞ்ஞானத்தில் சிந்தனை, மனம் எல்லாவற்றையும் மூளையில் அடக்கி விட்டார்கள்.

ஆன்மீகத்திலோ மனசுக்கு சரியான மரியாதையை கொடுக்காமல் விட்டு விட்டார்கள் என்ற மனத்தாங்கல் எனக்கு.

மொத்தத்தில் மனம் இல்லையெனில் மனிதன் இல்லை என்ற உணர்வு தான் மிஞ்சுகிறது.

எழுத்தாளனுக்கோ மனம் தான் பத்திரம் இல்லாது பட்டா போட்டுக் கொடுத்த சொந்து.

தங்கள் வருகைக்கு நன்றி, ஐயா.

வே.நடனசபாபதி said...

// இந்த மாதிரி உணர்வின் எழுச்சிலே சடக்ன்னு செய்யறதெல்லாம் நாமாச் செய்யறதில்லே.. அதெல்லாம் நம்மளத் தாண்டி நடக்குது. ஏதோ ஒரு சக்தி நமக்குள்ளே பூந்திண்டு செய்ய வைச்சிடறது. அப்படி செஞ்சிட்டேன்னு எடுத்துக்க வேண்டியது தான்.//

அந்த பெரியவர் சொன்னது சரிதான். சிலசமயம் நம்மை அறியாமலேயே சிலவற்றை செய்வோம். அது நமது உள்ளுணர்வின் உந்துதலில் செய்வது. தாங்கள் அவ்வாறுதான் அந்த இளைஞனை கௌரவப்படுத்தியிருக்கிறீர்கள். சிலர் செய்யத் தவறியதை தாங்கள் செய்துவிட்டீர்கள். பாராட்டுகள்!

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

உச்சஸ்தாயி மலை உச்சியிலே அந்த இளைஞன் சீடன் ஏறும் பொழுது சும்மா இருந்து விட்டு அவன் இசையில் கீழே இறங்கி தவழும் பொழுது தானும் சேர்ந்து கொண்டு ரசிகர்களின் கைத்தட்டை வாங்குவது எனக்கு உறுத்தலாக இருந்தது. அதன் வெளிப்பாடு தான் அனிச்சையாக என்னுள் வெளிப்பட்ட அந்த நடவடிக்கை. இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த நிகழ்வை கதைக்காக 'கனவில் நனைந்த நினைவுகள்' என்ற எனது நாவலில் உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் வாசித்து வருவது தொடர்ந்து எழுத உற்சாகமூட்டுகிறது. நன்றி, சார்.

Thulasidharan V Thillaiakathu said...

ஜீவி அண்ணா உங்கள் செயல் பாராட்டிற்குரியது. இப்படி ஒரு வளர்ந்த பாடகருடன் பாடும் சீடனை மக்கள் மத்தியில் பாராட்டுவது என்பதெல்லாம் அபூர்வம். சில சமயம் நம்மை நம் உணர்ச்சியை இப்படி நம்முள் இருக்கும் ஒன்று இயக்கிவிடும். நீங்கள் செய்திருப்பது நல்ல விஷயம்.

அந்தப் பாடகர் கொஞ்சம் யோசித்தேன் யாராக இருக்கும் என்று. அதுவும் நீங்கள் அப்போது இளைஞர்...அந்தக் காலகட்டத்தில் யாராக இருக்கும் என்று யோசித்த போது நரைமுடி, சினிமாவில் பாடியிருப்பவர், நீங்கள் சொல்லியிருக்கும் தமிழ்ப்பாடலை வைத்து எல்லாம் டக்கென்று மதுரை சோமுவாக இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் அப்போதே அவருக்குக் குரல் உச்சஸ்தாயியில் போக சிரமப்பட்டதா என்ற ஆச்சரியமும்..

சிஷ்யர் யாராக இருக்கும் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவர் நீங்கள் போட்ட ரோஜாமாலையை கண்டிப்பாக தன் வீட்டில் அது உலர்ந்து போனாலும் வைத்திருந்திருப்பார் என்று தோன்றியது. அங்கீகாரம் என்பது அதுவும் கூட்டத்தினரிடையில் கிடைப்பது என்பது (அவருக்கு அது முதல் அங்கீகாரமாகக் கூட இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது) மிகப் பெரிய விஷயமல்லவா அதுவும் குரு கூட இருக்கும் போது...

எனக்குத் தெரிந்து என் உறவினர் பெண்மணி ஒருவர் இப்படி மேடையில் பார்வையாளரிடம் இருந்து கிடைத்த பரிசு முருகன் டாலரை பத்திரப்படுத்தி வைத்திருந்து அதைக் காட்டி எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்.

கீதா

கீதா

ஜீவி said...

@ தி. கீதா

பொதுத் தளங்களில் சில பிரபலமானவர்களைப் பற்றி நம் பார்வையில் விமரிசனங்களை வைக்கும் பொழுது அவர்களைப் பாராட்டக்கூடிய அளவில் அவை இருந்தால் இவர் தான் அவர் என்று வெளிப்படச் சொல்ல வேண்டும். அதுவே அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லாமலிருந்தால் அப்படியான பிரபலங்களை தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்கிற அளவில் லேசாகக் கோடி காட்டுவதோடு நிறுத்திக் கொள்வது நமக்கான விமரிசன வரையறையைக் கடக்காது இருக்கும். ஏனென்றால் தனிப்பட்ட நபர்களை விமரிசிப்பது நமது வேலையாக இல்லாமல் அவர்களின் செயல்பாடுகளை நம் பார்வையில் பார்த்துச் சொல்கிறோம். நமது விமரிசன வெளிப்பாடே இறுதியானது அல்ல. அது தவறாகக் கூட இருக்கலாம் என்ற உள்ளுணர்வு பொது விஷயங்களில் எந்நேரமும் நமக்கு இருக்க வேண்டும். அந்தத் தவறை யாராவது எடுத்துச் சொல்லும் பொழுது அது பற்றி அவருடன் விவாதித்து இரு சாராரும் தெளிவு பெற இந்தப் போக்கு உதவிகரமாக இருக்கும். அதனால் தான் அந்த பிரபல வித்வான் யார் என்று மறைத்து வைத்து எழுதினேன். இது வெகு காலமாக நான் பின்பற்றி வரும் நடைமுறைகளில் ஒன்று. நீங்களும் உங்களுக்கு உகந்ததென்றால் இந்த வழியைப் பின்பற்றலாம்.

உங்கள் உறவினர் பெண்மணிக்கு அந்த அங்கீகாரம் இன்றளவும் நினைவில் இருந்து அவருக்கு உந்து சக்தியாக இருந்து ஊக்குவிக்கிறது, பார்த்தீர்களா?.. காசு பணம் கூட
வேண்டும். பிரபல கலைஞர்களிடம் அவை வேண்டிய மட்டும் இருக்கின்றன. பாராட்டு புகழ் வார்த்தைகள் இவற்றிற்கெல்லாம் லேசில் மயங்கி விடுபவன் கலைஞன்.

ஜீவி said...

* காசு பணம் கூட வேண்டும் என்பதனை காசு பணம் கூட வேண்டாம்-- என்று திருத்திப் படித்துக் கொள்ளவும்.

Related Posts with Thumbnails