மின் நூல்

Sunday, September 22, 2024

இது ஒரு தொடர்கதை -- 20

"மனம் என்பது எதுக்காக செயல்படற Representative  அப்பா?" என்று வித்யா கேட்டதும்  "நான் சொல்றேன்.." என்று பின்பக்கமிருந்து குரல் கொடுத்த பெண் இன்னும் முன்னால் வந்து இவர்களுக்கெதிராக இருந்த சோபாவில் அமர்ந்த பொழுது மோகனின் பார்வை அவள் பக்கம் போயிற்று.

"மோகன்.. இவங்க தான் என்னோட அம்மா.. ஜலஜா.." என்று தன் தாயை மோகனுக்கு அறிமுகப்படுத்துவது போலச் சொன்னாள் வித்யா. வித்யாவை விடக் கொஞ்சம் உயரம் என்றாலும் வித்யாவின் சகோதரி போனற சின்னப்பெண் தோற்றம்,  இவங்க வித்யாவின் அம்மாவா என்று நம்ப முடியாமல் இருந்தது அவனுக்கு.  பெரியவர் புரந்தரதாசருக்கு இரண்டாம் தாரமாக இருக்கலாமோ என்கிற நினைப்பு மேலிட்டது.

அடக்கமாக, "வணக்கம். நான் மோகன்.." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பொழுது மோகனின் குரல் ரொம்பவும் தழைந்திருந்தது.

"எழுத்தாளர் மோகன்.." என்று அவன் சொன்னதைத் திருத்தினள் வித்யா. 
" 'மனவாசம்'ன்னு ஒரு பத்திரிகை நம்ம வீட்டுக்கு வர்றதே.. அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருத்தர் இவர். எழுதிப் பழகிய கைம்மா.. மோதிரம் தான் போடணும்"ன்னு சொந்தம் கொண்டாடுகிற நெருக்கத்தில் சிரித்துக்கொண்டே அவள் சொன்ன பொழுது அவள் கரு விழிகள் பளிச்சிட்ட மாதிரி மோகனுக்குத் தோன்றியது.

"வீட்டுக்கு வந்தவரை இப்படியா உக்கார வெச்சு வெறுமனேப் பேசிக்கிட்டிருப்பாங்க?  ஸ்நாக்ஸாவது கொடுத்தீங்களா?" என்றபடியே எழுந்திருந்தாள் ஜலஜா..  "அதெலாம் நீ வந்த பின்னாடி தானேம்மா செய்யணும்?" என்று லேசா சிணுங்கிக் கொண்டே சொன்னாள் வித்யா.

"சரியான பொண்ணுடி நீ!.."என்றபடியே ஜலஜா சோபாவிலிருந்து எழுந்திருந்து வீட்டு உள்ளே போனாள்.

அந்த சமயத்தில் தான் மோகனால் ஜலஜாவைத் தீர்க்கமாகப் பார்க்க முடிந்தது.  ஏற்கனவே அவனுக்குப் பழக்கமான இன்னொரு பெண்ணின் ஜாடை அவளுக்கு இருப்பது போலவான ஒரு உணர்வு சட்டென்று அவன் மன ஆழத்தில் நிழலாடி விட்டுப் போனது.  

வித்யாவுக்கும் அவள் அம்மா ஜலஜாவிற்கும் வயசு வித்தியாசம் அதிகம் இருக்காது போலத் தோன்றியது போலவே இருவர்  உடல் வாகிலும் லேசான மாறுபாடுகள் அவனுக்குத் தெரிந்தது.  சாட்டை போன்ற நீண்ட கூந்தலை ஜலஜா பின்னிப் பின்னால் விட்டிருந்தது பின் பகுதியைத் தொடும் அளவிற்கு நீண்டிருந்தது.  அது  அவளின் உயரத்திற்கும் சற்றே மெலிந்த உடல் வாகிற்கும் பாந்தமாக இருந்தது என்று அவன் நிணைத்த சமயத்தில் தான்   இதே மாதிரி பின்னல் பின்னிய ஆனால் நுனியில் குஞ்சலம் கொண்ட அவனுக்குத் தெரிந்த அந்த இன்னொருத்தி யாரென்று அவன் நினைவுக்கு மட்டும் வராமல் அடம் பிடித்தாள். 

வித்யாவோ தன் கருகரு கூந்தலை அளவாக வெட்டி நடு முதுகு வரை பரத்திப் படர விட்டிருந்தாள்.  இவளின் நடுவாந்திரமான உயரத்திற்கு இது அழகாக இருப்பதாக மோகன் நினைத்துக் கொண்டான். 

உள்ளே போன சடுதியில் திரும்பி வந்த ஜலஜாவின் கையிலிருந்த ட்ரேயில் விதவிதமான தின்பண்டங்கள் இருந்தன.  அதை நடுவிலிருந்த டீபாயில் வைத்தாள்.  "எடுத்துங்கங்க, மோகன்.." என்று அவள் குரலில் இருந்த குழைவு தன்னிடம் ஒரு நெருக்கம் பாராட்டிய உணர்வை ஏற்படுத்தியது மோகனுக்கு.  உடனே ஜலஜாவைப் பார்த்து லேசாக முறுவலித்தபடி ஒரு ஸ்வீட் துண்டத்தை எடுத்துக் கொண்டான்.

"பையா.. இப்போ சொல்லு.. ஜலஜாவும் வந்தாச்சு.. அவளும் நாம பேசற விஷயத்லே கலந்து கொண்டால் சுவாரஸ்யமாக இருக்கும்.." என்றார் புரந்தரதாசர்.

"உங்கள் வழக்கம் போல இவரும் பையாவாகி விட்டாரா?" என்று கலகலவென்று ஜலஜா சிரித்தாள்.  "சமயத்தில் நான் கூட பையா தான் அவருக்கு!" என்று அவள் சொன்ன பொழுது குபீரென்று அடக்க முடியாமல் சிரித்தான் மோகன். 

தான் எழுதும் கதைத் தொடர்பாக ஏதோ விஷய சேகரிப்புக்கு வந்திருக்கும் மோகனின் எண்ணம் இந்த அரட்டையில் திசை திரும்பிப் போய் விடக்கூடாதே என்ற கவலை வித்தியாவிற்கு உள்ளூர இருந்தது.  அதனால் அது தொடர்பாகப் பேச்சைத் திருப்ப வேண்டி "அப்பா! மனம்ங்கறது எதுக்கு பிரதிநிதியா செயல்படறதுன்னு நான் கேட்டதுக்கு  அம்மா அது பத்தி சொல்றேன்னு சொன்னாங்க.." என்று நிணைவுபடுத்துகிற மாதிரி சொன்னாள் வித்யா.

வித்யா கேட்டதற்குத் தொடர்ச்சியாக "எனக்கும் அது பத்தி அடிப்படைலேயே சந்தேகம்.  மனம்ங்கறது சுதந்திரமா  தன்னிச்சையா செயல்பட முடியாதா என்ன? அது எதுக்கு இன்னொண்ணுக்குப் பிரதிநிதியா செயல்படணும்?" என்று கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விடாமல் மோகன் கேட்டான்.

"இப்படிக் கேட்டாத்தான் சொல்றவங்களுக்கும் விளக்கிச் சொல்ல ஏதுவாக இருக்கும்.." என்றார் புரந்தர தாசர்.  "இப்போ நீ சொல்ல வந்ததைச் சொல்லு ஜலஜா.." என்று அவளைப் பார்த்தார்.

"பொதுவா நாம செயல்படற எதுக்கும் மூளை தான் அடிப்படைக் காரணமா இருக்கு இல்லையா? அந்த மூளையோட செயல்பாட்டின் ஓரு வடிவம் தான் மனம் என்கிறதும்" என்றாள் ஜலஜா. இந்த மாதிரி நிறையப் பேசிப் பழக்கப்பட்டவள் போல அவள் தோரணை அந்த சமயத்தில் இருந்தது.  "மனுஷங்களோட உடம்புக்குள் உறுப்பாக இருப்பவற்றை உடற்கூறு சாத்திரத்தில் மூளை, இதயம், நுரையீரல் என்றெல்லாம் வகைப்படுத்திச் சொல்கிறோம், இல்லையா?.. அந்த மாதிரி மனுஷா உடம்பிலே சாதாரணமா ஒரு ஸ்கேன் பண்ணிப் பார்த்தாக் கூட கண்ணால் பார்த்துச் சொல்வதற்கு மனம் என்று எந்த உறுப்பும் இல்லாததினாலே தான் மனம்ன்னா எதைக் குறிப்பிட்டுச் சொல்றதுன்னு தயக்கம் நமக்கெல்லாம் ஏற்படறது.." என்றாள்.
ஜலஜா.

"அட! ரொம்ப ஈஸியா சொல்லிட்டீயே!  எனக்குத் தான் இப்படியெல்லாம் சுலபமா எதையும் மத்தவங்களுக்கு விளக்கிச் சொல்லத் தெரிலேங்கறது எனக்கேத் தெரியறது.." என்றார் புரந்தரதாசர்.

"You are a man of action.. Appa.." என்றாள் வித்யா.  அவள் சொன்னதற்கு புரந்தரதாசரே கலகல்வென்று சிரித்து விட்டார்.

மோகனுக்குத் தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.  மனம் பற்றி ஜலஜா சுருக்கமாகச் சொன்னது விளங்கியது மாதிரியும் இருந்தது..  முழுமையாகச் சொல்லாத குறை கொண்ட அரை குறை விளக்கம் மாதிரியும் இருந்தது.  இப்பொழுது தான் முதல் முறையாக எல்லாரையும் பார்த்திருக்கிறோம்.. இந்த சந்தர்ப்பத்திலேயே உரிமை எடுத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் விளக்கம் கேட்பதற்கும் தயக்கமாகவும் ஒரு பக்கம் இருந்தது.  அதனால் பேசாது இருந்தான். 'இதுவே புரந்தரதாசரும்,  தானும் மட்டுமே இருந்திருந்தால் நிறைய கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருப்போம்..' என்று  தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டான்.  அப்படி நினைத்துக் கொண்டே, இப்படி நினைப்பது தான் மனதின் செயலா என்றும் தன்னுள் கேள்வி கேட்டுக் கொண்ட பொழுது அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

      

"எதுக்கு சிரிக்கிறீங்க?  நான் சொன்ன விளக்கத்திற்கா?" என்று நேரிடையாகவே கேட்டு விட்டாள் ஜலஜா.

"ஹி..ஹி.. என்னைப் பற்றி நானே நினைத்துக் கொண்டேன். சிரிப்பு வந்து விட்டது.." என்று மோகன் சொன்ன பொழுது, வித்யாவும் சிரித்து விட்டாள்.

"நீ சொன்னது abstract-டா இருக்கறது எனக்கே தெரியறது, பையா.." என்றார் ஜலஜாவைப் பார்த்தபடியே புரந்தரதாசர், திடுதிப்பென்று.

"எனக்கும் அதே உணர்வு தான்.." என்று ஜலஜா புன்னகைத்தாள்..  அவளே தொடர்ந்து, "இந்த சப்ஜெக்ட் ஏதோ தியரியை விளக்கற லெக்சர் மாதிரி இருந்தா, சரிப்பட்டு வராது.." என்ற பொழுது, 

"ஓண்ணு செய்யலாமா?" என்று மார்பில் புரண்ட கூந்தல் கற்றையை முதுகு பக்கம் தூக்கிப் போட்டுக் கொண்டாள் வித்யா. "ஓண்ணு செய்யலாம்.  அடுத்த தடவை மோகன் வரும் போது அவர் இப்போ எழுதற கதையோட நிகழ்ச்சிகளை வைத்து மனம்ன்னா என்னன்னு நமக்குள்ளேயே விளக்கிக்கற மாதிரி ஒரு டிஸ்கஷன் நடந்தா அது நல்லா இருக்குமில்லே?" என்று அவள் சொன்னது மோகனுக்கும் பிடித்திருந்தது.

"கரெக்ட்.. அப்படியே செய்யலாமா, மோகன்?.." என்று புரந்தரதாசர் எழுந்து மோகனுக்கு அருகில் வந்து அவன் கைபிடித்துக் குலுக்கினார்.  "நாளைக்கு நான் ப்ரீ.. காலை ஒன்பது மணி வாக்கில் வைச்சுக்கலாமா?" என்றார்.

அவர் இந்தளவுக்கு தன் மேல் பிரியம் கொண்டிருந்தது மோகனுக்கும் பிடித்திருந்தது.  "அப்படியே செஞ்சிடலாம், ஸார்" என்றான். 

"ஓக்கே, மோகன்.  நாளைக்கு நாம மீட் பண்ணலாம்.." என்ற  புரந்தரதாசர், தன் கைக்கடியாரத்தைப் பார்த்தபடி, "அட! வித்யா..  மறந்தே போயிட்டேனே! சர்மா சொன்னது என்னாச்சு?.. ஒரு போன் அடிச்சிக் கேக்கறையா?" என்று சொன்னபடி வீட்டின் உள்பக்கம் போனார்.

"கேக்கறேன், அப்பா.." என்றவள், மோகன் பக்கம் திரும்பி "ஒரு நிமிஷம், மோகன்.." என்று தன் அப்பாவைத் தொடர்ந்தாள்.

இப்பொழுது மோகனும் ஜலஜாவும் மட்டும் தான்.  

ஜலஜாவிற்கு தனியாக நிற்கும் இவனுடன் ஏதாவது பேச வேண்டும் போலத் தோன்றியது.  இருந்தாலும் திடீரென்று ஒருவிதத் தயக்கம் அவள் வாயையும் கட்டிப் போட்டிருந்ததை அவளே உணர்ந்தாள்.  சிநேகமாக மனசுக்குப்படும் ஓர் ஆணுடன் அன்பாகவோ இல்லை சிரித்துப் பேசினால் கூட அதை அந்தப் பெண் தன்னுடனான நெருக்கத்தை விரும்புவதைத் தெரியப்படுத்தும் அணுகுமுறை என்று வலிய அர்த்தப்படுத்திக் கொள்ளும் ஆண்கள் இருப்பதால் அவளுக்கு இயல்பாகவே தயக்கம் ஏற்பட்டது.  பெண் நட்பையும் காமத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத ஆணுலகம் என்று எங்கேயோ வாசித்திருந்தது வேறு, சமயம் பார்த்து அவள் நினைவுக்கு வந்தது.

'ஒரு நிமிஷம், மோகன்..' என்று வித்யா சொல்லி விட்டுப் போனதால் அவன் தேமேன்னு அவளுக்காக நின்று கொண்டிருக்கிறான் என்று ஒரு வழியாக அவளுக்குப் புரிந்ததும் இந்த வித்யா சீக்கிரம் திரும்பி வர மாட்டாளா என்று தோன்றியது.  உடனே தன் அப்பொழுதிய மன உணர்வுகளை ஒன்றாகக் குவித்த மாதிரி  "வித்யா, இங்கே வாயேன்.." என்று வாய் குவித்து காற்றோடு பேசுகிற மாதிரி ஜலஜா தலை நிமிர்த்தி மந்திரம் ஓதுவது போல மனசுக்குள்ளேயே முணுமுணுத்தாள்.  அடுத்த வினாடியே தூரத்தில் வீட்டின் வெளி ஹாலில் இங்கிருந்து பார்க்கிற மாதிரியே வித்யாவின் உருவம் தெரிந்தது. காற்றையே தூதுவனாக்கி அழைப்பு விடுத்தது போல வித்யா அவளை நோக்கியே வருவது தெரிந்ததும் ஜலஜாவின் முகம் மலர்ந்தது. 

மோகனோ வாசல் கேட்டிற்கு இரண்டடி முன்பக்கம் நின்ற மாதிரி வித்யாவிற்காக காத்திருக்கும் தோரணையில் நின்று கொண்டிருந்தான். கொஞ்ச தூரத்தில் ஜலஜா வீட்டின் உள் பக்கம் பார்த்த மாதிரி நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் அவள் கவனத்தைக் கவர்கிற மாதிரி ஏதாவது கேட்கலாமா என்று மோகனுக்குத் தோன்றிய நேரத்தில் அவள் பெயர் அவன் நினைவுக்கு வராமல் அடம் பிடித்தது.  

லேசாக இருட்டு கவிந்து கொண்டிருந்தது. 

'பெயர் தானா முக்கியம்?  "ஏங்க.." என்கிற மாதிரியான அழைப்பில் கூப்பிட்டுப் பார்க்கலாமே என்று அவன் நினைத்த தருணத்தில்.."உன்னை எப்பவோ எங்கையோ பார்த்திருக்கிற மாதிரி தோண்றது.. எப்போன்னு தான் ஞாபககத்திற்கு வரலே?" என்று அவன் கழுத்துப் பக்கம் கிசுகிசுத்த பெண்குரலைக் கேட்ட  உணர்வில் சட்டென்று சிலிர்த்துப் போனான் மோகன். அந்தக் குரல் அவனில் யாழை மீட்டிய மாதிரி இருந்தது.  இத்தனை நேரம் தன் நினைவில் முழுகியிருந்த அந்த இன்னொரு பெண்ணே பொறுக்க மாட்டாமல் தன் மூடு திரையைக் களைந்து நெருக்கத்தில் வந்து பேசிய உணர்வின் ஆட்படுதலில் அவன் திகைத்துப் போனான்.   

சுற்று முற்றும் பார்த்தான். அவனுக்குக் கொஞ்சம் முன்னால் வீட்டின் உள்பக்கம் பார்த்தபடி நிற்கும் வித்யாவின் அம்மாவையும் அவனையும் தவிர வேறு யாரும் அங்கிருப்பதாக அவனுக்குப் புலப்படவில்லை.  அதே கணத்தில் லேசாக மிக மிக லேசாக பரவிய காற்றில் அவனுக்கு முன்னாலிருந்து படர்ந்த மாதிரி அடர்த்தியான  பர்ப்யூம் வாசனை மட்டும் அவன் மேலும் மேவிய மாதிரி இத்தனை நேரம் இல்லாத ஒரு நறுமணம் அவனைப் பீடித்த மாதிரி மோகனுக்கு இருந்தது.

தன் வசமிழந்து, "நானும் அதைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், வினிதா,," என்ற அவன் குரல் அவனுக்கே கேட்காத அளவு அவனுள் அமிழ்ந்து போயிற்று..

(தொடரும்)


23 comments:

ஸ்ரீராம். said...

மர்மக்கதை, திகில் கதை போல பிற்பகுதியில் உருவெடுத்தாலும், சுவாரஸ்யம் கூடுவதென்னவோ உண்மை.  

கூடுதலாக வித்யாவும் ஏன் திடீரென திவ்யாவாகிப் போனாள்?

ஸ்ரீராம். said...

இந்த இடத்தில் 'மனம் என்னும் மேடை மேலே' பாடல் பொருந்துமா என்று தெரியாயவில்லை என்றாலும் இனிமையான பாடல்.

இதே ராகத்திலேயே இன்னொரு தமிழ்ப்பாடல் இருக்கிறது தெரியுமோ....  இரண்டுமே  ஹிந்திப் பாடலிலிருந்து பிரதி எடுக்கபப்ட்டதுதான். 

ஸ்ரீராம். said...

வித்யா (திவ்யா) மாடர்ன் பெயர் என்று கொள்ளலாம். மோகன் ஓகே. ஜலஜா - 60 களின் பெயர் என்று கொள்ளலாம்! ஆனால் இந்த புரந்தரதாஸர் பெயர் மட்டும் ஒட்டவே இல்லை!

ஜீவி said...

கரெக்ட். சுவாரஸ்யத்தைக் கூட்டத் தான்.
தட்டச்சுப் பிழை. மாற்றி விட்டேன்.

ஜீவி said...

மனம் தான் கதையின் ஹீரோ, அதனால் மனம் சம்பந்தப்பட்ட
எல்லா விவகாரங்களும் பொருந்தும்.

ஸ்ரீராம். said...

அந்தப் பின்னூட்டத்தில் பாடல் சம்பந்தமாக நான் கேட்டிருந்த கேள்விக்கு விடை இல்லையே.... 

 'மனம் ஒரு குரங்கு..  மனித்த் மனம் ஒரு குரங்கு'  பாடல் கேட்டிருக்கிறீர்களோ? 

'மனதில் என்ன நினைவுகளோ' பாடல் கேட்டிருக்கிறீர்களோ?

இதெல்லாம் தேவை இல்லை என்று இந்தப் பாடல்களை கேட்காமலேயே ஒதுக்கி விடுவீர்கள் இல்லையா?!

ஸ்ரீராம். said...

// அவன் தேமேனென்று அவளுக்காக நின்று கொண்டிருக்கிறான்  //


இந்த வார்த்தையில் வரும் 'தேமேனென்று' பிரயோகம் சரியா?  அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

Anonymous said...

மனம் என்பதற்கான ஜலஜாவின் விளக்கம் ரசித்தேன். ஏனென்றால் அதுதான் அது. நியூரோ சைக்கியட்ரியில் நியூரோ மருத்துவர் ஒருவர், மூளையை மூன்று விதமாக நமக்குப் புரிவதற்காக லேயர்களாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று சொல்லுவார். சுருங்கச் சொல்கிறேன் The reptilian brain, mammalian brain, rational brain (cortex) இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது ஒன்றை ஒன்று பாதிக்கும்....கேள்விகள் எழுப்பி விடை தேட முயல்வதுதான் கடைசிப் பகுதி....நடுவில் உள்ளது உணர்வுகள், முதல் ஒன்று இயற்கையாக நம் உடலில் இருப்பவை பசி, தூக்கம், உடல் உறுப்புகளின் இயக்கம் நோய்கள் என்று... இந்த மனம் என்பது இதைச் சார்ந்த ஒன்றுதான்.

மோகனின் மனம் மாமேலியன் பகுதியிலிருந்து கார்டெக்ஸ் பகுதிக்குச் சென்றுவிட்டது ஆனால் குழம்பி இருக்கிறது!! விடை தேடுகிறது! இது அந்த அருமையான பாட்டுக்கு முன்னால் இருக்கும் பகுதி வரை..

கீதா

Anonymous said...

ஒவ்வொருவரின் மனமும் பேசப்படுகிறதோ?

ஏன் ஜலஜா அப்படி நினைக்க வேண்டும்? அது யதார்த்தத்தில் இருக்கிறதுதான் சில ஆண்கள் அப்படித் தவறாக எடுத்துக் கொண்டுவிடுவது உண்டுதான் என்றாலும் இங்கு

ஜலஜாவுக்கு மோகன் பிள்ளை போன்ற வயதுதானே! இல்லையோ? அப்புறம் ஏன் ஜலஜாவுக்குத் தயக்கம்? ஒரு வேளை மோகன் நினைப்பது போல ஜலஜாவுக்கும் புரந்தரதாசருக்கும் வயசு வித்தியாசம் அதிகமோ அப்படி இருந்தாலும் வித்யாவின் அம்மா எனும் போது மோகனும் கிட்டத்தட்ட அப்படித்தனஏ என்ற எண்ணம் எழுகிறது

கீதா

Anonymous said...

இன்றைய கடைசிப் பகுதி வரும் போது ஏதோ மர்மம் அமானுஷ்யம் எட்டிப் பார்க்கிறாப்ல இருக்கு வினிதா என்று மோகன் சொல்வதும்...

கீதா

Anonymous said...

அமானுஷ்யம் என்பதை விட மோகனின் மனம்...?

கீதா

ஜீவி said...

புரொபஸர் மித்ரா தெரியுமோ? அவர் போல புரந்தர தாஸர். லேசா கோடி காட்டியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

ஜீவி said...

தமிழ் -- ஹிந்தி ரெண்டு பாடல்களையும் நீங்களே சொல்லி விடுங்கள்.

ஸ்ரீராம். said...

தமிழ் - சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை

https://www.youtube.com/watch?v=yWQZNO_4CwQ&t=17s

ஸ்ரீராம். said...

Hindi : Sau Saal Pehle

https://www.youtube.com/watch?v=sx6FTutCNaI

ஜீவி said...

சென்ற வாரத்தில் தேமேனென்று ஜிம்முக்கு போன இடத்தில்'... என்ன அர்த்தம்?

ஜீவி said...

மனம் என்ற ஒன்றே ஸ்கேனில் சிக்காத பொழுது அது இந்தப் பகுதியிலிருந்து அந்த பகுதிக்குப் போவதென்றால்?..

ஹி..ஹி.. கேட்காத வரையில் சரி.. யாராவது கேட்டு விட்டால்?..

ஸ்ரீராம். said...

தேமேனென்று என்று சொல்ல மாட்டார்கள்.  தேமேன்னு என்றும், தேமே  என்றும் சொல்வார்கள்..சும்மா இருந்தான், வாளாவிருந்தான் என்கிற அர்த்தத்துக்கு வரலாம்.  அது தெய்வமேன்னு இருந்துட்டேன்..  என்கிற வார்த்தையிலிருந்து மருவி இருக்கலாம்.  

சிவனேன்னு இருடா என்பார்கள்.  அதை செவுனேன்னு இருடா என்பார்கள்.  மாற்று மதத்தவர்கள் கூட அர்த்தம் தெரியாமல் சும்மா இருடா  என்பதற்கு இந்த வார்த்தையை உபயோகிப்பார்கள்.

ஜீவி said...

மாநகர பஸ்களில் பாட்டி பக்கத்தில் ஒரு இளைஞன் உட்கார்ந்தாலும் 'யோவ்! எழுந்திருய்யா! லேடீஸ் ஒக்காந்திருக்காங்க! தெரிலே?' என்பார்கள்.. அந்தப் பாட்டி கூட 'போவட்டும்.. சின்ன பையன் தானே' என்று சொல்ல மாட்டார்கள்!

ஜீவி said...

ஹி..ஹி..

ஜீவி said...

இப்படியும் அப்படியும் த்ராட்டில் விடுவது எழுத்தாளர்களுக்கே பழகிப்போன ஒண்ணு.. சொன்னால் கேட்டால் தானே!

ஜீவி said...

https://ta.surnameanalysis.com/Teme-kutumpattin-arttam.html

ஜீவி said...

திருத்தி விட்டேன். நன்றி.

Related Posts with Thumbnails