மின் நூல்

Saturday, September 28, 2024

இது ஒரு தொடர்கதை - 21

டுத்த நாள் காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டாள் வித்யா.  

எழுந்தவுடனேயே மோகன் இன்று வரப்போகிறான் என்ற எண்ணம் அவளை ஆக்கிரமித்ததும். மெல்ல தனக்குள் சிரித்துக் கொண்டாள்.  'மனவாசம்' பத்திரிகையில் அவள் படித்திருந்த அவனது 'இது ஒரு தொடர்கதை' கதையை அவனே காட்சி காட்சியாகச் சொல்லச் சொல்லக் கேட்கப் போகிறோம் என்ற உணர்வு அலாதியாத சந்தோஷத்தை அவளில் மீட்டியது.   

அந்த வீட்டு மாடியில் தனியாக அவளது அறை அமைந்திருந்தது.  எழுந்தவள், பல் துலக்கி முகம் துடைத்து கீழே இறங்கும் படிகளின் முகப்புக்கு வரும் பொழுதே  கீழே வராந்தா மூலையில் அமைந்திருந்த சமையல் பகுதியில்  ஜலஜா காலை காப்பிக்காக பில்ட்டரில் வெந்நீர் ஊற்றிக் கொண்டிருப்பது அவள் பார்வையில் பட்டது.  

அவளுக்கு முன்பே வழக்கமாக ஜலஜா எழுந்து விடுவாள்.  ஜலஜா தலையில் டவலைச் சுற்றியிருந்தது இன்று வெள்ளிக் கிழமை என்பதை அவளுக்கு நினைவு படுத்தியது.  இன்று எண்ணைக் குளியலா என்று நினைக்கையில் அவளுக்கு அலுப்பாய் இருந்தது.  ஒன்பது மணிக்கே மோகன் வந்து விடுவான் என்ற நினைப்பு, அதற்குள் காலை வேலைகள் அத்தனையையும் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசர உணர்வையும் அவளில் விதைத்தது.

அவள் கீழிறிங்கி வரும் பொழுதே ஜலஜா அவளைப் பார்த்து விட்டாள். "வித்யா!காப்பி கலந்திடட்டுமா? முதல் டிகாஷன் இறக்கியாயிற்று.." என்றாள். 

"ஓ..." என்றபடியே ஜலஜாவின் அருகில் போய் வாத்சல்யத்துடன் "அதற்குள் எழுந்து குளிச்சிட்டையே அம்மா?" என்று கேட்டாள்.  

"இன்னிக்கு வெள்ளிக்கிழமை.. பூஜை இருக்கில்லையா?  அதான்,.  ஊரிலில்லாத அதிசயமா உங்க அப்பா கூட எழுந்தாச்சு.. பேப்பர் பார்த்திண்டுருக்கார்.." என்றாள்.   "நீ காப்பி குடிசிட்டு, அவருக்கும் கலந்து வைச்சிருக்கேன்.  சூடா இருக்கும்.  பாத்து எடுத்துண்டு போய் குடுத்துடு.." என்றாள்.

ஜலஜா சகல பூஜை சமாச்சாரங்களையும்  எடுத்து வைத்துக் கொண்டு சுவரிலேயே குடைந்து மரப்பலகை தடுப்புகள் பொருத்திய பிர்மாண்ட பூஜை அறை முன் ஸ்லோகப் புத்தகத்தைக் கையிலெடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.  இனி அவள் எழுந்திருக்க அரை மணி நேரம் பிடிக்கும்.

அப்பா புரந்தரதாசருக்குக் காப்பியைக் கொண்டு போய்க் கொடுக்கும் பொழுது, "ஏம்மா.. அந்தப் பையன் மோகன் இன்னிக்கு வருவான்லியோ?" என்று ஞாபகமாகக் கேட்டார்.

"என்னைக் கேட்டா எப்படிப்பா?" என்றாள் வித்யா.  "நாம நேத்திக்குப் பேசிண்டிருந்தது ஞாபகம் இருந்தா வருவார்.." என்றாள், பட்டும் படாமலும்.

"பையனைப் பார்த்தா நல்லவனா தெரியறான்..  ஹூம்.. நாம் நினைக்கறதெல்லாம் நடந்டுடறதா, என்ன?" என்று அவளையே கேட்டார்.

"நடக்கறதெல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்க வேண்டியது தான்,அப்பா"

"எனக்கே கீதா உபதேசம் சொல்லிக் காட்டறையா, நீ?" என்று சொல்லிச் சிரித்தார் அவர்.

அவர் காபி குடித்து முடித்ததும்  டம்ளரை எடுத்துக் கொண்டு, "நெறைய வேலை இருக்குப்பா, எனக்கு.. இனிமே தான் எண்ணை தேச்சுக் குளிச்சாகணும்.." என்று அவள் திரும்பும் போது, "ஓ.. வெள்ளிக்கிழமையா இன்னிக்கு?.. அம்மா என்ன செய்யறாள்?" என்று கேட்டார்.

"பூஜை பண்ணிண்டு இருக்கா,,"

"அப்படியா?.." என்று அவரும் எழுந்திருந்தார்.

அம்மா பூஜை முடித்து வருவதற்குள் தான் குளித்து விட்டு வந்து விடலாமென்று மாடிப் படிகளேறினாள், வித்யா..  படிகளேறும் போதே நேற்று மோகனை வழியனுப்புவதற்காக வீட்டு வாசல் பக்கம் போகையில் அவன் பேயறைந்த மாதிரி  நின்று கொண்டிருந்ததை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் அவளுக்கு 'பக்'கென்றிருந்தது.  என்னாச்சு அவனுக்கு என்று அந்த சமயத்தில் அவளுக்கிருந்த கலக்கம் இப்பொழுது தீவிரமான 

யோசனையில் அவளை அமிழ்த்தியது. நல்ல வேளை, சற்று தூரத்தில் அம்மா நின்றிருந்தார்கள்.  அவர் மட்டும் அந்த நேரத்தில் அங்கிருந்திருக்காவிட்டால் அவள் பதட்டம் இன்னும் எகிறியிருக்கும் என்று இப்பொழுது நினைத்து ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள்.

அம்மாவைக் கேட்டதற்கு "வித்யா! ஓரு நிமிஷம்ன்னு நீ சொல்லிட்டுப் போனே இல்லையோ? அதான் அவர் வெயிட் பண்றார் போலிருக்கு.." என்று அம்மா சொன்னதும் தான், தான் அப்படிச் சொன்னதால் தான் பாவம் அவர் நின்று கொண்டிருந்திருக்கிறார்.. அப்படி அவரிடம் சொன்னதே எனக்கு அந்த சமயத்தில் நினைவுக்கு வராமல் போயிற்றே' என்று இப்பொழுதும் அவள் கலங்கினாள்.

ஆனால் வெளி கேட் அருகே அவரை நெருங்கி, கையசைத்து, "மோகன்! நாளைக்குப் பார்க்கலாமா?" என்று கேட்ட பொழுது, "பார்க்கலாம், வினிதா" என்று சொல்லி விட்டு, "சாரி, வித்யா.." என்று திருத்திக் கொண்டாரே, யார் அந்தப் வினிதாவாக இருக்கும் என்று நேற்றைக்கு லேசாக இருந்த குழப்பம் இப்பொழுது விஸ்வரூபம் எடுத்தது.

"யார் அந்தப்  வினிதா?" என்ற கேள்வியே வண்டாக அவள் மனதைக் குடைந்தது.

ரொம்ப நேரம் ஒரே விஷயத்தையே யோசித்தால் சரியான பதில் கிடைக்காது என்பது அவளது சொந்த அனுபவம்.  அதனால் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பார்க்கலாம் என்று மாடி பாத்ரூம் வந்து கதவில் கைவைக்கும் பொழுது தான்      தேய்த்துக் கொள்ள எண்ணை கொண்டு வரலியே என்று நினைவுக்கு வந்தது.  மறுபடியும் கீழே போக வேண்டுமே என்று நினைத்த பொழுது சோம்பலாக இருந்தது. இருந்தாலும் வேறே வழியில்லேன்னு படியிறங்கி கீழே போனாள்.  சமையலறை ஸ்டோர் ரூம்லே இதயம் இருந்தது.  ஒரு கிண்ணம் எடுத்து அதில் பாதியளவு  ஊற்றிக் கொண்டு வெளியே வந்த பொழுது ஜலஜா இன்னும் பூஜையை முடிக்க வில்லை.  குளிச்சிட்டு வந்து சுவாமி கும்பிட்டுக்கலாம் என்று படியேறினாள்.

கை தான் எண்ணையை தேய்த்துக்  கொண்டிருந்ததே தவிர மனசு என்னென்னவோ எண்ணங்களில் மூழ்கி முக்குளித்துக் கொண்டிருந்தது.

அவளது தோழிகள் சிலரிடம் பேச்சு வாக்கில் இன்னிக்கு எண்ணை தேய்த்துக் குளித்தேன் என்றாலே சிரிப்பார்கள்.  'இது என்னடி, எந்தக் காலத்லே இருக்கே?.. எண்ணை தேச்சுக் குளிக்கச் சொல்லி பாட்டி சொன்னாங்களா'ன்னு கேட்டு விட்டு அதுக்கும் ஒரு சிரிப்பு சிரிப்பார்கள்.  இந்த சிரிப்பு வித்தியாசமாக இருக்கும்.  இப்படி ஒவ்வொண்ணுக்கும் பேசற மேட்டருக்கு ஏத்த மாதிரி விதவிதமா சிரிப்பு வைச்சிருப்பாங்க,, 

'நீங்கள்லாம் எண்ணையே தேச்சுக் குளிக்கற வழக்கமில்லையா?'ன்னு கேட்டதுக்கு 'ஷாம்பூ இருகறச்சே எதுக்குடி எண்ணைலாம்?'ன்னு விசித்திரா கேட்டது நினைவுக்கு வந்தது.  'ஐயையோ! ஷாம்புலாம் எனக்கு ஒத்து வராதடிம்மா!..' என்று ஷோபா முகத்திலேயே பயங்காட்டினாள். 

'ஏன்?' புருவத்தை வில்லா வளைதாள் சுந்தரி. 'ஷாம்புனா, முடிலாம் கொட்டிடும்டீ...கண்ட கெமிக்லாம் கலக்கறான்.. அதான் அதக்கண்டாலே பயம்.."என்ற ஷோபா, "நான்லாம் தேங்கா எண்ணை தான்!" என்றாள்.  "அதென்னடி.. கேரளான்னா எதுக்கெடுத்தாலும் தேங்கா சமாச்சாரம் தானா?" என்று சுந்தரி கேட்டதுக்கு "அடிச்சேன்னா, பாரு.." என்று ஷோபா அவளை நெருங்க, சுந்தரியோ சிட்டாய்ப்  பறக்க....    

நெனைச்சுப் பார்க்கறத்தையே சிரிப்பு தான் பொத்துக்கொண்டு வந்தது வித்யாவுக்கு. ஸ்கூல் லைஃப்லே இப்படிக் கொண்டாட்டம்னா காலேஜ் லைஃப்லே வேறே மாதிரி.. கொஞ்சம் மெச்சூரிட்டி வந்தாப்லே நடிப்பாங்களே தவிர அடிப்படையில் என்னவோ இதே கூத்து தான்.  என்ன பேச ஆரம்பித்தாலும் அது என்னவோ தெரிலே, சினிமாலே வந்து முடிஞ்சிடும்.  

சந்திரக்கலா போன வாரம் அவ போன மலைக்கோயில் ஒண்ணைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சிருந்தா.. அவளும் அவ அக்காவும் போயிருந்தாங்களாம். தரிசனமெல்லாம் முடிஞ்சு  மலைப்பாதைலே இறங்க ஆரம்பிச்சு பாதி தூரம் இறங்கியிருக்க மாட்டாங்க.. திடீர்ன்னு மழை பிடிச்சிண்டுடுத்தாம். என்ன செய்யறதுன்னு தெரிலே.. போயிடலாம்ன்னு மலைப்பாதை படிக்கட்டுகள்லே இறங்க ஆரம்பிச்சாங்களாம்.  திடீர்ன்னு சாரல் அதிகமாகி படிக்கட்டு வழுக்க ஆரம்பிச்சு அதுக்கு மேலே இறங்கறது ஆபத்துன்னு ஒரு பெரிய பாறை கீழே ஒதுங்கினாங்களாம்.  அங்கே பக்கத்திலே கைக்கு எட்டற தூரத்திலே ஒரு ரோஜா செடி.. செடி பூராவும் பூத்திருக்காம்.  அந்த மழைச் சாரல்லே பூத்திருந்த ரோஜாலாம் காத்திலே ஈர ரோஜாக்களா நடுங்கிண்டு இருந்ததாம்'.. என்று சந்திரக்கலா சொல்லிண்டு இருக்கறத்தே,  'ஈரமான ரோஜாவே,,என்னைப் பாத்து மூடாதே'ன்னு சசிகலா பாட ஆரம்பிக்க, 

'நிலவு தூங்கும் நேரம்.. நினைவு தூங்கிடாது.. இரவு தூங்கினாலும், உறவு தூங்கிடாது..  இது ஒரு தொடர்கதை.. தினம் தினம் வளர்பிறை..' என்று மைக் மோகனின் இன்னொரு பாட்டை வினிதா தொடர..  நினைவு இழைகள் படாரென்று அறுந்து, ஈரத்தலையை டர்க்கி டவலால் துவட்டிக் கொண்டிருந்த வித்யா தலை நிமிர்ந்தாள்.  மோகன் -- வினிதா .. ஓ! மோகன் உச்சரித்த வினிதா..

தன் ரூமிற்கு வந்து பட்டு மேனியில் மிச்சம் மீதியிருந்த ஈரத்திவலைகளைத் துடைத்து விடுவிடுவென்று உடை மாற்ற ஆரம்பித்தாள் வித்யா.

(தொடரும்)


12 comments:

ஸ்ரீராம். said...

சீரியல் காட்சிகள் போல காலைக் காட்சிகளை வர்ணித்து ஒரு அத்தியாயம்.  ஒரு வரி முடிவில் வினிதாவுக்கு..   மர்மதேசம் போல அந்த கேட் படம் எதற்கு என்று யோசிக்கிறேன்.

ஸ்ரீராம். said...

முதலில் இறங்கும் கள்ளிச்சொட்டு டிகாக்ஷனில் ஒருவர் காஃபி குடித்து விட்டால் மற்றவர்களுக்கு சுவை குறையுமே...!

ஸ்ரீராம். said...

அந்த நேரத்தில் வந்த பாடல்களில் இரண்டு பாடல்கள்..  ஒன்று கொக்கரக்கோ படத்தில் வரும் 'கீதம் சங்கீதம்' பாடல்..  இன்னொன்று குங்குமச்சிமிழ் படத்தில் வரும் இந்த 'நிலவு தூங்கும் நேரம்' பாடல் கிட்டத்தட்ட இரண்டு பாடல்களும் ஒன்றை ஒன்று ஏனோ நினைவு படுத்தும் பாடல்கள்.  இரண்டுமே இளையராஜா...  இரண்டுமே SPB.  இரண்டுமே இழையும் பாடல்கள். 

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நினைவெல்லாம் நித்யா படத்தில் வரும் 'ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்  கூட சட்டென மனதில் நிழலாடும்.

இராய செல்லப்பா said...

காதலை எவ்வளவு ஆழமாக எழுதுகிறீர்கள்! வினிதா, வித்யா இருவருக்கும் அடிதடி வருமோ?

ஜீவி said...

இந்த வர்ணனைகளெல்லாம்
தொடர்கதைகளுக்கு அத்தியாவசியமான ஒன்று.
எந்த இடத்தில் எப்படி ஒவ்வொரு அத்தியாயத்தையும் முடிக்க
வேண்டும் என்பது கதை தொடர்ச்சிக்கு -- இந்த அத்தியாய முடிவிருந்து அடுத்த அத்தியாயத்தின் ஆரம்பத்திற்கு -- ஏதுவாக அமையக் கூடிய ஒன்று.

ஜீவி said...

முதல் டிகாஷனில் மூவருமே காப்பி அருந்தி விட்டார்கள்.
மற்றவர்கள் என்று யாருமில்லை.

ஜீவி said...

இது ஒரு தொடர்கதை -- என்ற இந்தத் தொடரின் தலைப்பு நீங்கள் குறிப்பிடுகிற மற்ற பாடல்களிலும் வருகிறதா என்ன? மோகன் -- வினிதா பெயர்களை இணைத்து வாசிப்பவர்கள் யோசிப்பதற்கான யுக்தி அது.
அடுத்த பின்னூட்டத்தில் என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப
செல்லப்பா ஸார் அதைத் தொட்டு பின்னூட்டமிட்டிருக்கிறார்.

ஜீவி said...

வினிதா -- வித்யா பெயர்கள் ஒன்று போலவே இருப்பதால் வாசிப்பவர்கள் இரு வேறு நபர்களாக அவர்களை வேறுபடுத்திப் பார்க்க வேண்டுமே என்ற எண்ணம் இருந்தது. நல்ல வேளை நீங்கள் அந்தக் கவலையைப் போக்கி விட்டீர்கள். நன்றி.

கோமதி அரசு said...

கதை நன்றாக இருக்கிறது, பாடல் பகிர்வு அருமை.
யார் அந்த வினிதா? விதயாவை ஏன் வினிதா என்று வாய் தவறி அழைத்தான் மோகன் எல்லாம் அறிய ஆவல்.
பாடல் காட்சியை சசிகலாவும், வினிதாவும் தொடர்ந்து பாட என்று வருவதை பார்த்தால் வித்யாவிற்கு வினிதாவை தெரிந்து விட்டது போல.

ஜீவி said...

மோகன் நினைவுகளிலிருத்த வினிதா எப்படியோ வித்யாவின் நினைவுகளுக்கும் மாறிவிட்டாள். ஒருத்தியின் பெயரே இருவரின் நினைவுகளிலும். வினிதா -- மோகன் - வித்யா என்ற முக்கூட்டு. அடுத்து நகரப் போகும் கதைக்கு ஆழமான முடிச்சு.

ஆழ்ந்த வாசிப்பில் கதையின் போக்குகளைப் புரிந்து கொண்டு பின்னூட்டமிட்டதற்கு நன்றி. இன்னொரு பக்கம் மோகன் எழுதும் பாண்டியன் -- மங்கை கதையும் வார இதழில் போய்க் கொண்டிருக்கிறது, அதை வாராவாரம் வித்யாவும் வாசித்து வருகிறாள் என்பதும் உங்கள் நினைவில் இருக்கட்டும். நன்றி.

Anonymous said...

முக்கோணக் காதலாக இருக்குமோ? வினிதா மோகன்.....இப்போது வித்யா மோகனிடம் கொஞ்சம் வசப்பட்டிருக்கிறாள். வினிதா யாராக இருக்கும் என்ற ஓர் ஆர்வம் எட்டிப் பார்க்கிறது. அந்த கேட் படம் சேர்த்திருப்பதால் வினிதா என்பவள் மோகனின் இதற்கு முன்னான வாழ்வில் தொடர்புடையவளாக இருப்பாளோ என்ற யோசனையும் எழுகிறது. சென்ற பகுதியில் திடீரென்று ஏதோ பழைய நினைவில் ஆழ்ந்து மூழ்கிய மோகன் வினிதா என்று டக்கென்று விளித்திட இப்போது வித்யாவின் ஒரு தோழியும் வினிதா...வித்யாவும் அந்த நினைவுகளில்..

இதில் மோகன் எழுதும் கதை...பாண்டியன் மங்கை கேரக்டர்களுடன் தொடர்பு இருக்குமோ என்றும் தோன்றுகிறது. அதைத் தொடரும் வித்யாவுக்கு விடை கிடைக்குமாக இருக்கலாம் இதைத் தொடரும் எங்களுக்கும்...

தொடர்கிறேன்.

கீதா

ஜீவி said...

மிக்க நன்றி, சகோ.

கதையை எப்படிக் கொண்டு போகலாம் என்று யோசிப்பதற்கு உங்கள் பின்னூட்டங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

இப்போதைக்கு வினிதாவைக் கொஞ்சம் மறக்கவும்.
வினிதா மறுபடியும் கதையில் வரும் பொழுது நாம் வினிதாவைப் பற்றி யோசிக்கலாம். அதற்குள் பாண்டியனையும் மங்கையையும் வேறு கதைக்குள் உலாவ விட வேண்டும்.
அதற்குள் அந்த கேட் பற்றிய விளக்கத்தையும் கொஞ்சம் ஒத்தி வைக்கிறேன்.

ஹி.. ஹி.. எல்லாமே இழுத்துப் போட்டுக் கொண்டவை தாம்.

பார்க்கலாம். எப்படிப் போகிறதென்று பார்க்கலாம்.

அடுத்த பகுதி வெளியாகி விட்டது. வந்து பார்க்கவும்.
நன்றி.

Related Posts with Thumbnails