ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி
3. நடந்ததும், நடக்கப்போவதுவும்...
"என்னன்ன நடந்ததோ அதெல்லாம் நடப்பதற்காகத் தான் நடந்தன; என்னன்ன நடக்கப் போறதோ, அதெல்லாம் நடக்கப்போறதுக்காகத்தான் நடக்கப்போறதுன்னு நீங்க நெனைசதுண்டா?" என்று கிருஷ்ணமூர்த்தியிடம் கூட இருந்தவர் கேட்ட தொனி மிகவும் மிருதுவாக இருந்தது.
"ஓஹ்.. நிறைய தடவை அப்படி நெனைச்சதுண்டு. சில சமயம் சிலது நடக்கறச்சே, 'ஓ! அதுக்காகத்தான் இதுவா'ன்னு குருட்டு யோசனையாய் காரணம் புரியறமாதிரி இருக்கும்" ஒரு நிமிஷம் நிறுத்திவிட்டு கிருஷ்ணமூர்த்தியே தொடர்ந்தார். "ஒண்ணு நினைவுக்கு வர்றது.. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள் ராத்திரி. வானமே பொத்திண்ட மாதிரி, மழை கொட்டு கொட்டுன்னு கொட்டறது; பளீர் பளீர்ன்னு மின்னல்னா, அதுக்குத் தோதா இடியான இடி. பெட்டி போல வீட்லே வெளிலே என்ன நடக்கறதுன்னு தெரியாமத் தூங்கிண்டு இருக்கோம்...
"வீட்டு நடுஹால் ரேழிப்பக்கம் சுவத்லே பெண்டுலம் மாட்டின பெரிய கடியாரத்லே, மணியடிச்ச சத்தத்லே 'திடுக்'னு முழிப்பு வந்திடுத்து.டார்ச் அடிச்சு மணி பாத்தா நடுராத்திரி ரெண்டு மணி.. திண்ணைப்பக்கம் லேசா ஜன்னக்கதவு திறந்திண்டிருக்கு; அப்போத்தான் வெளிலே மழை கொட்டறதுன்னு தெரிஞ்சது.. சாரல் உள்ளே வராதிருக்க, ஜன்னல் கதவைச் சாத்தப் போனவன், திண்ணைலே பேச்சுக்குரல் கேட்டுக் வெளிக்கதவை திறந்து பார்த்தேன். புருஷனும், அவன் சம்சாரமும் போலிருக்கு;விசிறியடிக்கற சாரல்லே தெப்பமா நனைஞ்சிண்டு நின்னிகிட்டிருக்காங்க; அந்தப் பொண்ணு கைக்குழந்தையை ஒரு மூட்டை போல ரெண்டு கையாலேயும் அணைச்சு பொத்தி வைச்சிருக்கறதை அப்போத்தான் பார்த்தேன்.. எனக்குப் பொறுக்கலே.. உள்ள வாங்கன்னேன்.
"'பரவாயில்லே.. மழைலே மாட்டிகிட்டோம். விட்டவுடனே போயிடறோம்'னாங்க.... நான் கேக்கலே.. என் பெண்டாட்டியை எழுப்பி விஷயத்தைச் சொன்னேன். வாரிச்சுருட்டிண்டு எழுந்தவள், அவங்களை உள்ளே கூப்பிட்டு, தொடைச்சிக்கறதுக்குத் துணியெல்லாம் கொடுத்து, குழந்தைக்குப் பால் காய்ச்சிக் கொடுத்து... மழை விடவே இல்லே..மூணு மணி வாக்கிலே வானம் வெளிறித்து.... அப்புறம் தான் அனுப்பிச்சோம்..பாவம், பக்கத்து ஊராம்! கல்யாணத்துக்கு வந்தாங்களாம்..
"மழைக்கு மனுஷாளுக்கு அடைக்கலம் கொடுத்தது என்ன பெரிய விஷயம்.. இதைப்போய் பெரிசா சொல்றியே'ன்னு நெனைப்பீங்க.. எனக்குக் கூட இது மறந்து போயிருக்கும். ஆனா அப்புறம் நடந்ததுதான் இதை மறக்கமுடியாம, வாழ்க்கை பூரா இதை ஞாபகம் வைச்சிக்கிற மாதிரி ஆயிடுத்து" என்று பெரியவர் ஒரு நிமிடம் நிறுத்தினார்.
"இது நடந்ததுக்கு அடுத்த வருஷம்.. சொல்லப்போனா, அதே மாசம் மட்டுமில்லே, அதே கிழமைன்னு பின்னாடி பஞ்சாங்கத்தைப் பாக்கறச்சே தான் தெரிஞ்சது. அந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் லேசா மேகமூட்டமாத்தான் இருந்தது. எங்கிருந்து தான் அப்படி ஒரு மழை 'ஜோ'ன்னு பேய்க்காத்தோடக் கொட்டத் தொடங்கித்தோ, தெரியலே பிரளயமே வந்திட்ட மாதிரி தெருபூரா வெள்ளக்காடு!
"பக்கத்தில் என்கேயோ விழுந்து விட்டமாதிரியான சப்தத்துடன் இடியொன்று இடித்து ஓய்ந்தது. கூடத்துப் பக்கமிருந்து, "அர்ஜூனா!" என்று என் மனைவி அலறுவது கேட்டு ஓடினேன்.
கண்களில் நீர்மல்க, இடுப்பைப் பிடித்துக் கொண்டு நிறைகர்பிணியாய் அவள் என்னை நிமிர்ந்து பார்த்து,"வலி பொறுக்க முடியலீங்க.. வெட்டு வெட்டு என்று வெட்டறது" என்று கேவினாள்.
"தெருமுனையில் ஜட்கா வண்டி கிடைக்கும்..ஆஸ்பத்திரிக்குப் போயிடலாம்; கொஞ்சம் பல்லைக்கடிச்சிண்டு பொறுத்துக்கோ" என்று குடையை எடுத்தேன்.
"என்னை விட்டுப் போகாதீங்க--"என்று அவள் என் வேஷ்டியைப் பிடித்துக் கொண்டாள். நாலுவயசு சின்னக்குழந்தை போலிருந்தது, அவள் செய்கை.
"ஒரு நொடியில் வந்து விடுகிறேன்-" என்று அவளைத் தேற்றி, விடுவித்துக் கொண்டு வாசலுக்கு வந்தேன். வாசலில் வெள்ளமான வெள்ளம். 'யாருக்கு என்ன தீங்கு செய்தேன்?.. இது என்ன சோதனை?' என்று நெஞ்சு கனத்தது.
வேறு வழியில்லை. ஆறு போல் ஓடும் தண்ணீரில் இறங்கித்தான் போகவேண்டுமென்று தீர்மானித்து, நீரில் இறங்கி அடுத்த வீடு வரை போயிருக்கமாட்டேன்.
குறுகலான தெருவை அடைத்துக் கொண்டு கார் ஒன்று நின்றிருந்தது" என்று ஆவேசம் வந்தவர் மாதிரி கிருஷ்ணமூர்த்தி இருட்டைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தார்.
"என்னைக் கண்டதும், கார்க்கண்ணாடியை இறங்கி, டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த பெண்மணி என்னிடம்,"மழைலே காரைத் திருப்ப முடியலே.. கொஞ்ச நேரம் உங்கள் வீட்டில் நான் தங்கிப் போகலாமா?" என்றாள்.
நான் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் என் மனைவியின் வேதனையை அவளிடம் சொன்னேன்.
"வாவ்!" என்று உற்சாகத்துடன் அந்தப் பெண் "வாருங்கள்--" என்று தோல்பை ஒன்று சகிதமாக எனக்கு முன்னாடியே வீட்டுப் படியேறியதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. உள்ளே சென்றதும் தான் தெரிந்தது, அந்தப் பெண்மணியே ஒரு டாக்டர் என்று! அதுவும், மகப்பேறு டாக்டர்!..
"தெய்வாதீனமாக அந்த லேடிடாக்டரை என் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்த்த தெய்வத்தை மானசீகமாக வேண்டிக் கொண்டேன். என் மனைவி கண்ணுக்குத்தெய்வமாகவே அந்த டாக்டர் தோன்றினார். தலைப்பிரசவம், சுகப்பிரசவம் தான்! இடியோசை கேட்டு நடுங்கி அபயக்குரல் எழுப்பியதால், குழந்தைக்கு அர்ஜூனன் என்றே பெயர் வைத்தோம்" என்று கிருஷ்ணமூர்த்தி நாத்தழுதழுக்க கைகூப்பி நடந்தவற்றைச் சொன்னார்.
யாருகிட்டே இவ்வளவு நேரம் அவர் பேசினார் என்று தெரியாத மாதிரி இருட்டு அந்த பிரதேசத்தையே தன் ஆளுகையில் ஆக்கிரமித்திருந்தது!
(தேடல் தொடரும்)
7 comments:
எழுத்தின் சுவை எட்டுத்திக்கும் தெறித்தாற்போல் இனித்தது - படித்தது, பலகணி வழியே வரும் வெள்ளைக் கீற்றைப்போல இயற்கையாய் வழிந்தோடிக் கொண்டிருக்குது, நெஞ்சில்!
அருமை. மனதை நெகிழ்த்தும் நிகழ்வுகளை இயல்பாகத் தருவதில் உங்களுக்கு இணை இல்லை.
//சில சமயம் சிலது நடக்கறச்சே, 'ஓ! அதுக்காகத்தான் இதுவா'ன்னு குருட்டு யோசனையாய் காரணம் புரியறமாதிரி இருக்கும்//
இதே போல நானும் உணர்ந்திருக்கிறேன். பல சமயங்களில் ஏன் இப்படி என்று நொந்து நூலாய்ப் போனதும் உண்டு. அவன் செயலை யாரே அறிவார்?
ஜீவா (Jeeva Venkataraman) said...
//எழுத்தின் சுவை எட்டுத்திக்கும் தெறித்தாற்போல் இனித்தது - படித்தது, பலகணி வழியே வரும் வெள்ளைக் கீற்றைப்போல இயற்கையாய் வழிந்தோடிக் கொண்டிருக்குது, நெஞ்சில்!//
பலகணி வழியே வரும் வெள்ளைக்
கீற்றைப் போல--
அந்தக் காட்சி எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே, உங்களது
தீட்சண்யம் புரிந்தது.
மிக்க நன்றி.
கவிநயா said...
//இதே போல நானும் உணர்ந்திருக்கிறேன். பல சமயங்களில் ஏன் இப்படி என்று நொந்து நூலாய்ப் போனதும் உண்டு. அவன் செயலை யாரே அறிவார்?//
உணர்வதையெல்லாம் கொட்டி,
இதையெல்லாம் தொட்டு எழுத
இறையருள் வாய்க்க வேண்டும்.
தொடர்ந்து படித்து, நினைப்பதைப் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு மிக்க நன்றி.
அமைதியா ஓடற ஆற்றுநீர் மாதிரியான தெளிவும் அந்த அமைதிக்குள்ள இருக்கற ஆழத்தையும் இழுப்பையும் போன்றதொரு ஈர்ப்பையும் கொண்டுள்ளது உங்கள் நடையும் சேதி சொல்லும் விதமும். தொடர்ந்து செல்லுங்கள்....வாழ்த்துக்கள்.
தொடர்ந்து படிப்பதோடு மட்டுமல்லாமல், கருத்துக்களையும் பதிவதற்கு மிக்க நன்றி, கிருத்திகா!
படித்தவுடனேயே மனது சிலிர்த்தது.
Post a Comment