ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....
1. கண்ணிலே தெரிவதென்ன?...
கண்ணுக்குத் தெரிகின்ற எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லை. சட்டென்று புலப்படும்.
சில நேரங்களில் சிலவற்றைத் தேடுதலுக்கு நமது மறதியும் காரணமாகிறது. பேனா, கண்ணாடி, சாவி என்று புழங்குகின்ற பொருள்களைக்கூட மறந்து எங்கேயாவது வைத்து விட்டோமென்றால் தேடுதல் அவசியமாகிறது. அந்தப் பொருளின் பயன்பாட்டின் தேவை, அதை முனைப்புடன் தேடிக்கண்டுபிடிக்க வேண்டியதாக இருக்கிறது.
நேற்று அப்படித்தான். என் மூக்குக்கண்ணாடியை எங்கேயோ வைத்து விட்டேன். பார்பதற்கு வேண்டாம்; எழுத, படிக்க எனக்கு கண்ணாடி அவசியம் வேண்டும்.
வாங்கிவந்திருந்த 'சிவபுராணம்' புத்தகம் மேஜையின் மேலிருந்தது. படிக்க மனசு பரபரத்தால், கண்ணாடியைக் காணோம். மறந்து எங்கேயோ வைத்து விட்டேன்.
நேற்று அப்படித்தான். என் மூக்குக்கண்ணாடியை எங்கேயோ வைத்து விட்டேன். பார்பதற்கு வேண்டாம்; எழுத, படிக்க எனக்கு கண்ணாடி அவசியம் வேண்டும்.
வாங்கிவந்திருந்த 'சிவபுராணம்' புத்தகம் மேஜையின் மேலிருந்தது. படிக்க மனசு பரபரத்தால், கண்ணாடியைக் காணோம். மறந்து எங்கேயோ வைத்து விட்டேன்.
நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்; வழக்கமாகக் கண்ணாடியை வைக்கும் இடமெல்லாம் தேடிப் பார்க்கிறேன். ஊஹூம். கிடைத்த பாடில்லை.
"இந்தக் கண்ணாடியைத் தேட இன்னொரு கண்ணாடி தான் வைத்துக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது" என்று சலிப்புடன் முணுமுணுத்தேன்.
"என்ன அப்பா! என்ன தேடறீங்க?"
"கண்ணாடியைத் தான் கவிதா! எங்க வைச்சேன்னு தெரியலே."
"கொஞ்சம் அமைதியா உட்காருங்க.. நான் பார்க்கறேன்" என்று மகள் தேடத் தொடங்கினாள்.
ஆக, நாம் எதைத் தேடுகிறோமோ, அந்தப் பொருள் இன்னது அல்லது இதுவென்று இன்னொருவருக்கும் தெரிய வேண்டியதிருக்கிறது.
"இந்தாங்கப்பா.. அநதப் புஸ்தகத்தின் அடியில் இருந்தது" என்று மகள் தந்ததை வாங்கிப் பார்த்தேன்.
"இது இல்லேம்மா.. இது உங்க அம்மாது.. போனமாசம், மாத்திண்ட புதுக்கண்ணாடி. ஒரு வருஷம் கழித்து முந்தாநாள் தானே ஊரிலேந்து வந்திருக்கே.. உனக்குத் தெரியாது. நானே பார்க்கிறேன்.."
"கண்ணாடிதானேப்பா! உட்காருங்க.. நானே பார்த்துத்தர்றேன்" என்று தேடத்தொடர்ந்தவள், நிமிர்ந்து, "இதுவா பாருங்க?" என்றாள்.
"இதுவும் இல்லே.. இது பவர் குறைஞ்ச பழசு."
"பழசையெல்லாம் ஏம்பா வைச்சிக்கிட்டிருங்கீங்க?.." என்று என்னைக் குற்றம் சொல்லியபடி, தேடலைத் தொடர்ந்தாள். என்னையும் நாற்காலியிலிருந்து எழுந்திருக்க விடவில்லை.
"உன் அம்மாவை வேணா, 'பாத்தையா'ன்னு ஒரு வார்த்தை கேளேன்" என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, "இதுவா?" என்று புத்தக அலமாரியின் மேலிருந்து அவள் எடுத்துத் தந்ததைப் பார்த்தேன்.
அதுதான். "நேத்து ராத்திரி ரொம்ப நேரம் படிச்சிக்கிட்டிருந்தேன்ல்யா? அப்போ வைச்சிருக்கேன் போலிருக்கு. வரவர ரொம்ப மறதியாயிடுத்து" என்று அசட்டுச் சிரிப்புடன் சொன்னேன்.
"உங்க வயசுக்கு நீங்க எவ்வளவோ பரவாயில்லை.. இப்போல்லாம், எனக்கே எதை எங்கே வச்சேன்னு ஞாபகம் வர்றதில்லே," என்று எனக்குச் சான்றிதழ் தந்தபடி மகள் அகன்றாள்.
கண்ணாடியை மாட்டிக்கொண்டு 'சிவபுராண'த்தைக் கையிலெடுத்தேன். மனசு அதில் பதியவில்லை.
ஒரு பொருளைத் தேடும் பொழுது, தேடும் பொருள் இதுவென்று, இப்படித்தான் இருக்குமென்று இன்னொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமில்லை. பொதுவாக யாரும் தெரியாத எதையும் தேடுகையில், குருடர்கள் யானையைத் தடவிய கதையாய், "இதுதான் அதுவோ?" என்றும், "இதுவே அது" என்றும் அவரவருக்குத் தட்டுப்பட்டதைச் சொல்கின்றனர்.
வாழ்க்கையில் தேடல் என்பது எந்தக் காலத்தும் இருக்கக் கூடிய ஒன்று. வேண்டியதும் கூட. தேடல் இருப்பது நல்லது. இல்லையென்றால், கிடைத்ததோடு திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியது தான்.
கண்ணாடி என்பது இன்னவென்று யாருக்கும் தெரிந்திருப்பதால், போயிற்று. 'இந்தப் பொருள் தான் கண்ணாடி' என்று நாம் உபயோகத்தில் இருக்கும் ஒரு பொருளுக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு பெயரிட்டு அழைப்பதால், கண்ணாடியை இனம் காணும் வேலை சுலபமாயிற்று.
இதுவே, கண்ணாடி என்பதே என்னவென்று தெரியாத ஒரு நிலை இருக்குமேயானால், என்னவாகியிருக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
வெளிப்புலனுக்குப் புலப்பட்டு புழக்கத்தில் இருப்பதால் இது அதுவே என்று தெரிந்தது.
அதுவே, புலனுக்கு புலப்படாமலும், புழக்கத்தில் இல்லாததுமான ஒரு பொருளைத் தேடுதல் என்றால்....
ஆத்மாவைத் தேடுதலும் அப்படிப்பட்ட ஒரு சமாச்சாரம் தான்.
(தேடுதல் தொடரும்)
14 comments:
அடடா, என்ன அருமையா சொன்னீங்க ஐயா! சில சமயம் தேடறது கிடைக்கும்னு ரொம்ப நம்பிக்கையா இருக்கு; சில சமயம் அப்படி ஒரு பொருள் இருக்கா, இருந்ததான்னே சந்தேகம் வந்துடுது. ஹ்ம்.. எல்லாமே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்தானோ?
துவக்கமே அருமையாக இருக்கிறது! :-)
//சில நேரங்களில் சிலவற்றைத் தேடுதலுக்கு நமது மறதியும் காரணமாகிறது.//
இரண்டாவது வரியிலேயே அத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளன! ஆன்மாவின் தேடலுக்கும் மறதிதான் காரணம். பரசிவத்தில் இருந்து பிரிந்து வந்தபோது, அதன் துவக்கத்தை, இந்த அவனியில் வந்து பிறந்த நாளே, மறந்தவிந்தை என்னென்பேன்?
இல்லை, புல்லாகி, பூண்டாகி, கல்லாகி, மரமாகி, மானிடனுமாகி, பல பிறப்புமாகி, முந்தைய பிறப்புகளில் பட்ட அனுபவங்களெல்லாம் மறந்து, மீண்டும், கட்டம் 1இல், தாயம் விழக் காத்திருக்கும் விந்தையைத்தான் என்னென்பேன்?
தெரிந்த பொருள் - இப்போது தெரியாத பொருளானதை - என்னென்பேன்?
இப்போது தெரியாத பொருளின் தேடலை உங்களோடு தொடர்ந்து தேடிப்பார்க்கிறேன், கிடைக்கிறதா என்று.
வழக்கம்போல, அற்புதமான தங்கள் நடை படிக்க, மட்டும் இல்லை, கற்க காத்திருகிறோம்!
கவிநயா said...
//அடடா, என்ன அருமையா சொன்னீங்க ஐயா! சில சமயம் தேடறது கிடைக்கும்னு ரொம்ப நம்பிக்கையா இருக்கு; சில சமயம் அப்படி ஒரு பொருள் இருக்கா, இருந்ததான்னே சந்தேகம் வந்துடுது. ஹ்ம்.. எல்லாமே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்தானோ?//
தேடறது கிடைக்கக் கிடைக்க, அந்த நம்பிக்கையின் நீட்சியில் தேடுதல் மீண்டும் மீண்டும் முடிவில்லாமல் தொடரும்..
"எல்லாமே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் தானோ?"--
'அலகிலா விளையாட்டுடையார் தலைவர் அன்னவருக்கே சரண் நாங்களே'
ஜீவா (Jeeva Venkataraman) said...
துவக்கமே அருமையாக இருக்கிறது! :-)
//சில நேரங்களில் சிலவற்றைத் தேடுதலுக்கு நமது மறதியும் காரணமாகிறது.//
இரண்டாவது வரியிலேயே அத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளன! ஆன்மாவின் தேடலுக்கும் மறதிதான் காரணம். பரசிவத்தில் இருந்து பிரிந்து வந்தபோது, அதன் துவக்கத்தை, இந்த அவனியில் வந்து பிறந்த நாளே, மறந்தவிதத்தை என்னென்பேன்?
இல்லை, புல்லாகி, பூண்டாகி, கல்லாகி, மரமாகி, மானிடனுமாகி, பல பிறப்புமாகி, முந்தைய பிறப்புகளில் பட்ட அனுபவங்களெல்லாம் மறந்து, மீண்டும், கட்டம் 1இல், தாயம் விழக் காத்திருக்கும் விந்தையைத்தான் என்னென்பேன்?
தெரிந்த பொருள் - இப்போது தெரியாத பொருளானதை - என்னென்பேன்?//
--இந்த வரிகளை மிகவும் இரசித்தேன்.
முந்தைய ஜென்மத்தின் பலனே, அடுத்தது என்று கொண்டால், பரசிவத்திலிருந்து 'அவன் விளையாட்டாக'ப் பிரிந்து, இந்த அவனியில் புத்தம் புது பிறப்பெடுத்த நாள் முதல் பழசெல்லாம் மறந்ததுவும், இன்னும் மேம்பட்ட நிலைக்கு, அவன் நினைப்பு ஒன்றே மறக்காமலிருப்பதும் நியாயம்!
நன்று சொன்னீர்கள்!
//வழக்கம்போல, அற்புதமான தங்கள் நடை படிக்க, மட்டும் இல்லை, கற்க காத்திருகிறோம்!//
இந்தப் பதிவுலகில் ஆன்மிகத் தலைப்பில் 'ஆத்மபோத'த்தைப் பற்றி எனக்கு முன்னாலேயே எழுத ஆரம்பித்தவர் நீங்கள்!
இந்த ஆத்மவிசாரணை, இந்திய தத்துவங்களின் இருதய பாகம் என்று உணர்ந்தேன். யோகிகளும், ரிஷிகளும், தபஸ்விகளும், சித்தர்களும், தத்துவ அறிஞர்களும் வாழ்ந்த நாடு இது!
அவர்கள் தவமிருந்து பெற்ற அமுதத்தை, அந்த விசாரணைகளை, அதுபற்றிப் பிறர் எழுதிய எழுத்துக்களைப் படிக்கும், படித்துக் கொண்டிருக்கும் வெளிப்பாடே இந்த எளிய முயற்சி. மஹாசமுத்திரமான விஷயத்தை,
எனக்கு புரியும் அளவுக்கு எழுத முயன்றிருக்கிறேன். அவ்வளவுதான்.
உங்களைப் போன்ற இளையோர் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபாடு கொண்டிருப்பது பெருமைக்குறியது.
கூட இருந்து செழுமைபடுத்துவது
பலனளிக்கும் ஒரு செயலாக முடியும் என்று நம்புகிறேன்.
பகிர்தலுக்கு மிக்க நன்றி, ஜீவா!
ஐயா ஒரு சாதாரண விஷயத்திலிருந்து பெரிய கருத்தை விளக்கிருக்கீங்க..அருமை :)
Ramya Ramani said...
ஐயா ஒரு சாதாரண விஷயத்திலிருந்து பெரிய கருத்தை விளக்கிருக்கீங்க..அருமை :)
வாருங்கள், ரம்யா!
எளிமையாக எழுத வேண்டுமென்பதே நோக்கம். தங்கள் கூற்று, தொடர்ந்து எழுத நம்பிக்கை ஊட்டுகிறது.
மிக்க நன்றி.
இன்னவென்று தெரிந்தும் தெறியாத, நம் பட்டறிவு உணர்த்தும் பல விஷய ஞானங்களைக்கொண்டு நாம் ஒவ்வொரு நாளும் எதையெதையோ தேடிக்கொண்டிருந்தாலும், நம் முடிவான தேடல் இதுவாகத்தான் இருக்க முடியும்.. இத்தொடரோடு நாங்களும் அதைத்தேடி உடன் வரமுடியும் என்ற நம்பிக்கையை முதல் பதிவிலேயே தந்து விட்டீர்க
ள் ஜீவி... வாழ்த்துக்கள் தொடருங்கள்.
நீங்கள் சொல்வது மிகவும் சரியே.
தத்துவங்களின் அலசல், அதைத் தேடித் துய்த்துணர்தல், ஆழப்பதித்து
அசைக்கமுடியாத செல்வமாய் நெஞ்சில் நிறைபெறும். இதுவே, நீங்கள் சொல்கிற மாதிரி முடிவான தேடலாகவும் அமையும்.
தேடுதலில் உடன் வர முடியும் என்ற
நம்பிக்கையைப் பெற்றதாகச் சொன்னமைக்கு மிக்க நன்றி.
அருமையா தொடங்கியிருக்கீங்க ஐயா. இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துவிட வேண்டும் என்ற ஆவலை உண்டாக்குகிறது இந்தத் தேடலைப் பற்றிய நிகழ்வும் சிந்தனைகளும்.
குமரன் (Kumaran) said...
//அருமையா தொடங்கியிருக்கீங்க ஐயா. இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துவிட வேண்டும் என்ற ஆவலை உண்டாக்குகிறது இந்தத் தேடலைப் பற்றிய நிகழ்வும் சிந்தனைகளும்.//
வாருங்கள், குமரன்!
இந்தத் தொடர் தொடர்ந்து படித்திடத் தங்களுக்கு ஆவல் ஏற்படுத்தியது குறித்து மகிழ்ச்சி.. பயணத்தில் நீங்களும் சேர்ந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.. வாருங்கள்,
சேர்ந்து தேட முயற்சிப்போம்..
மிக்க நன்றி.
//
கண்ணாடி என்பது இன்னவென்று யாருக்கும் தெரிந்திருப்பதால், போயிற்று. வெளிப்புலனுக்குப் புலப்பட்டு புழக்கத்தில் இருப்பதால் இது அதுவே என்று தெரிந்தது.
அதுவே, புலனுக்கு புலப்படாமலும், புழக்கத்தில் இல்லாததுமான ஒரு பொருளைத் தேடுதல் என்றால்....
ஆத்மாவைத் தேடுதலும் அப்படிப்பட்ட ஒரு சமாச்சாரம் தான்.//
:clap:
Posts like these are gems.
Shakthiprabha said...
//
கண்ணாடி என்பது இன்னவென்று யாருக்கும் தெரிந்திருப்பதால், போயிற்று. வெளிப்புலனுக்குப் புலப்பட்டு புழக்கத்தில் இருப்பதால் இது அதுவே என்று தெரிந்தது.
அதுவே, புலனுக்கு புலப்படாமலும், புழக்கத்தில் இல்லாததுமான ஒரு பொருளைத் தேடுதல் என்றால்....
ஆத்மாவைத் தேடுதலும் அப்படிப்பட்ட ஒரு சமாச்சாரம் தான்.//
:clap:
Posts like these are gems.//
Thanks for ur appriciation!
புரிதலின் வெளிப்பாட்டிற்கு மனமுவந்த நன்றி.
தொடர்ந்து வாருங்கள்..
ஆத்மா தேடுதலில் நானும் தொடர்கின்றேன்.
Post a Comment