Monday, September 30, 2013

இனி (பகுதி-13)

ஸ்ரீராம் சொன்னபடி, தான் எழுதியதை அதைப் படித்த இன்னொருவர் சொல்ல வருவது ஒரு சந்தோஷ நிகழ்வு.  வித்யா மூலம் அது மோகனுக்கு வாய்த்ததும் கதையின் போக்குக்கு ஏற்ப சடக் சடக்கென்று மாறும் அவள் முகபாவத்தை பார்த்து வியந்திருந்தான்.

முழுசாக கதையை அவள் சொல்லி முடிக்கற வரை பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் புரந்தரதாசர். 'இனி' கதையின் சமீபத்திய  பகுதி வரை வித்யா சொல்லி முடித்ததும், மோகனைப் பார்த்து, "கதையை நன்றாகக் கொண்டு போயிருக்கே.." என்றார்.  ஒரு வினாடி நேர மெளனத்திற்குப்  பிறகு, "இந்த கதையில் வரும் கோயில் நிகழ்வு நீயும் உணர்ந்த ஒரு  உணர்வாய்  இருப்பதினால் அதை விவரித்து தத்ரூபமாக உன்னால் சொல்ல முடிந்திருக்கிறது" என்றார்.

"என் உணர்வுங்கறது சரி சார்.  எப்படி அந்த சந்தோஷ உணர்வு சுவாமி தரிசனம் போதெல்லாம் என்னை ஆட்கொள்கிறதுன்னு தெரியலே.  உங்களுக்குத் தெரிந்த வரையில் அதற்கு ஏதாவது காரணம் இருக்குனு நீங்க நினைக்கிறீங்களா?" என்று புரந்தரதாசரைப் பார்த்துக் கேட்டான்.  தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அவன் முகத்தில் சுடர்விட்டது.

புரந்ததாசர் புன்னகைத்தார். "மோகன், விஷயம் என்னன்னா, எந்த நிகழ்வும் ஒரு காரணத்தின் அடிப்படையில் தான் நிகழறது.  அதாவது, காரணம்ன்னு ஒண்ணு இல்லேனா அதுக்கான நிகழ்வே இல்லேன்னு சொல்லலாம்.  இப்போ சொன்னையே, சுவாமி தரிசனம் போதெல்லாம் அந்த சந்தோஷ உணர்வுக்கு ஆட்படறேன்னு, அதுக்குக் கூட காரணம் இருக்கும்.  ஐ மீன் அதுக்கான காரணம் இல்லேனா, அந்த உணர்வு உனக்கு  ஏற்பட்டிருக்காதுன்னு சொல்ல வரேன்.." என்றார்.

"அந்தக் காரணத்தைத் தான் தெரிஞ்சிக்கணும்ன்னு எனக்கு ஆசை.."

"அதைத் தெரிஞ்சிண்டு என்ன ஆகப்போறது?"

"என்னப்பா, இப்படிக் கேக்கறே?.. அதுக்கான ரூட் காஸ் தெரிஞ்சா எதுனாலே அந்த  உணர்வு ஏற்படறதுன்னு  தெரிஞ்சிக்கலாமிலே?"

"வித்யா! அதை இன்னொருத்தர் கண்டுபிடிச்சுச் சொல்றதுக்காக சிரமப்படறதை விட சம்பந்தப்பட்டவரே ஈஸியாக் கண்டுபிடிச்சிடலாம்."

"சம்பந்தபட்டவர் அதைக் கண்டுபிடிக்கத் தெரியாமத்தானே, உங்கிட்டே கேக்கறார்.  ரொம்ப பிகு பண்ணிக்கறையே?.."

"சேச்சே.. அப்படிலாம் இல்லே." என்று வித்யா சொன்னதை அவசரமாக மறுத்தார் புரந்தரதாசர்.

"பின்னே, என்ன?.. நீ அதுக்காக சிரமப்படணும்ங்கறியா?"

"அப்படிலாம் இல்லே. அப்படியே கொஞ்சம் சிரமமா இருந்தாக்கூட இதுக்குன்னு வந்திருக்கற மோகனுக்காக சிரமப்பட மாட்டேங்கறியா?"

"பின்னே என்ன?"

தந்தைக்கும் மகளுக்கும் தன் சம்பந்தப்பட்டு நடக்கும் உரையாடல் கேட்டு மோகனுக்குப் பெருமிதமாக இருந்தது.  இந்தப் பெருமிதம் இந்தக் குடும்பத்தோடு இன்னும் தனக்கு நெருக்கத்தை அதிகரிக்கும் என்கிற நினைப்பு ஏற்பட்டு அந்த நினைப்பே அளப்பரிய சந்தோஷத்தை அவனுக்கு அளித்தது.

"பின்னே என்னன்னா?  என்னத்தைச் சொல்றது?..  இந்த மாதிரி சமாச்சாரத்துக்கெல்லாம் விடை கண்டுபிடிக்கணும்ன்னா சம்பந்தப்பட்ட அந்த நபர் பற்றிய பெர்சனல் சமாச்சாரம்ல்லாம் அலசி ஆராயணும்.  சம்பந்தப்பட்டவரும் எந்த ஒளிவு மறைவுமில்லாம தன்னைப்பத்திச் சொல்லணும்."

"ஓ.. ஸாரி.. அதுக்குச் சொல்றையா?" என்று வித்யா கேட்ட போது, "நீங்க கேளுங்க, சார்.. என்ன கேள்வினாலும் பதில் சொல்லலாம்ன்னு நெனைக்கிறேன்.." என்றான் மோகன்.

"என்ன, நெனைக்கிறீங்களா?.." என்று சடக்கென்று அவன் பக்கம்  திரும்பிப்  பார்த்த வித்யா, மறுவினாடி பார்வையைத் திருப்பி தன் தந்தையைப் பார்த்தாள். "ஏம்ப்பா.. இப்படி செஞ்சா என்ன?"

"எப்படிம்மா?.."

"இதுக்கான காரணத்தை மோகன் தெரிஞ்சிக்கணும். அவ்வளவு  தானே?  ஒண்ணு செய்.  எதுனாலே அந்த உணர்வு மோகனுக்கு ஏற்பட்டிருக்கலாம் ன்னு நீ நெனைக்கறையோ அதுக்கான காரணங்களை வரிசையா சொல்லு.  அந்தக் காரணங்கள்லேந்து மோகனே  தனக்குப் பொருந்தற ஒரு காரணத்தையோ இல்லே பல காரணங்களையோ தேர்ந்தெடுத்துக்கட்டும்.  என்ன சொல்றே?"

"நான்  சொல்றதுக்கு என்ன இருக்கு?.. மோகன் தான் சொல்லணும்.."

"எதுனாலும் எனக்கு சரி சார்.  நா ஒரு திறந்த புஸ்தகம். அந்த புஸ்தகத்தோட எந்தப் பக்கத்தை வேணா யார் வேணாலும் புரட்டிப் படிக்க எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.." என்றான்.

மோகன் சொன்னதைக் கேட்டு  சிரித்தே விட்டாள் வித்யா. "ஸீ.. மோகன்! இது சினிமா படப்படிப்பு இல்லே.  ஒரு உண்மையைத் தெரிஞ்சிக்க முயற்சிக்கறோம்.  'றோம்' கூட இல்லை,  நீங்க முயற்சிக்கிறீங்க.. அந்த உங்களோட முயற்சி பலிதமானா உங்களுக்கு பலவிதங்கள்லே அதுனாலே நன்மை.  முக்கியமா இதையே ஒரு நிகழ்வா வைச்சு நீங்க எழுதற கதைக்கு கற்பனையான வெத்து பூச்சு இல்லாம நீங்களே உணர்ந்த யதார்த்த உணர்வுகளோட கதையை அடுத்த கட்டத்துக்கு  நகர்த்தலாம்.  அதுக்கு அப்பா உங்களுக்குத் துணையா இருக்கார்.  நான்?...  நான் எதுக்குன்னா அப்பா வாயிலேந்து விஷயங்களை வரவழைக்க உங்களுக்குத் துணை.  ஓக்கேவா?"

அவள் பேசும் ஜாலத்தில் மெய்மறந்து தன்னையே பறிகொடுத்தவனாய் வித்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் மோகன்.  தனக்காகத்தான் எல்லாம் என்கிற நேரடிப்  பார்வை இல்லாமல், ஒரு மூன்று பேர் சேர்ந்து ஒரு  நிகழ்வுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிற உணர்வே பிரதானமாய் மோகன் மனசில் படிந்திருந்தது.

"இந்த ஐடியா நன்னாத் தான் இருக்கு.  இதுக்குத்  தாம்மா எதுக்குனாலும் நீ பக்கத்லே இருக்கறது பல விஷயங்கள்லே செளகரியமா இருக்குங்கறேன்" என்று புரந்தரதாசர் மகளின் அருகாமையின் அருமையைச் சொன்னார். அவர் சொன்னதும் நியாயமாகத் தான் பட்டது மோகனுக்கு.

"இப்போ சொல்லுப்பா.. அவசரம் இல்லே.  யோசிச்சே சொல்லு." என்றாள் வித்யா.

"சொல்றேன்.." என்றார் புரந்தரதாசர். "ஒவ்வொண்ணா சொல்றேன். மோகன், அதிலே உனக்கு எந்தக் காரணம் பொருத்தமாப்படறதோ அதைத் தேர்ந்தெடுத்துக்கலாம்.  அதை எங்களுக்குச் சொல்லணும்ன்னு  கூட இல்லே. உன்னோட கதைக்கு பொருத்தமா வந்ததுனா, அதை உபயோகப் படுத்திக்கோ. இதிலே செளகரியம் என்னன்னா, இதிலே பல ஆப்ஷன் இருக்கு. அதிலே எந்தக் காரணத்தை வேணா உன் கதைக்கு நீ உபயோகப்படுத்திக்கலாம்.  கூடவே உனக்குச் சரியாப் படற உன் உணர்வுக்கான பிரத்யேகக் காரணத்தையும் நீ தெரிஞ்சிக்கலாம்.. சரி தானே?.. நீ வேணா நா சொல்றதை பேப்பர்லே குறிச்சிக்கறையா?"

"நான் எதுக்கு இருக்கேன்?" என்று பக்கத்து மேஜையிலிருந்த பேப்பர் பேடையும்  பேனாவையும் எடுத்துக் கொண்டாள் வித்யா.. "நீ ஒவ்வொண்ணா சொல்லுப்பா.  நா நம்பர் போட்டு எழுதிக்கறேன்.   மோகன்! உடனே விடை காணணும்ன்னு நீங்க அவசரப்பட வேண்டாம்.  நா குறிச்சு வைச்சிருக்கறதிலேந்து உங்களுக்குப் பொருத்தமா படற ஒண்ணை மெதுவா பின்னாடித் தேர்ந்தெடுக்கலாம்.  அதுக்கு  நிறைய அவகாசம் இருக்கு. சரியா?.. இப்போ நீ சொல்லுப்பா.." என்றாள்.

"நம்பர்  ஒண்ணு.  குறிச்சிக்கோ.  சின்ன வயசிலே எதுனாலேயோ கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்திருக்கலாம்.  வளர வளர கூட்டங்கூட்டமா தெய்வத்தின் மேலே நம்பிக்கை வைச்சிருக்கறவங்களைப்  பாத்து, 'எதுக்காக இப்படி அலைமோதுறாங்க'ன்னு தெரிஞ்சிக்கணும்ன்னு  ஆர்வம் வந்திருக்கலாம்.  அதைத் தெரிஞ்சிக்கற ஆர்வத்லே, அந்த குறுகுறுப்பிலே கடவுள் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களைப் படிக்க ஆரம்பிச்சிருக்கலாம்.  அப்படிப் படிச்சுத் தெரிஞ்சிண்ட அறிவும் சதாசர்வ காலமும் அது பற்றிய நினைப்பும் மனசுக்கு வெகு  நெருக்கமாகி இறைவன் மீதான  ஆகர்ஷ்ணமா மாறியிருக்கலாம்.  அந்த ஈர்ப்பு தான்  வினை புரிந்து இறைவன் குறுநகையாய் சிந்தையில் விளைந்திருக்கலாம்.

"நம்பர் டூ.  இது ஒரு வினோதமான விஷயம். சில பேருக்கு இருக்குங்கறதை இல்லைன்னு நிரூபிக்கறதிலேயும், இல்லைங்கறதை இருக்குன்னு நிருவுவதிலும் அதீத ஆசை உண்டு.  அந்த ஆசை வயப்பட்டவங்க...." என்று புரந்தரதாசர் சொல்லிக் கொண்டு வருகையில், "இருப்பா.. பேனா எழுதலே.. வேறே எடுத்துக்கறேன்.." என்று வித்யா மேஜை இழுப்பறை திறந்து வேறொரு பேனாவை எடுத்துக் கொண்டாள். "ப்ளீஸ்..கண்ட்டினியூ, அப்பா.." என்றாள்.


(இனி....  இன்னும் வரும்)      

19 comments:

இராஜராஜேஸ்வரி said...

எதுனாலே அந்த உணர்வு மோகனுக்கு ஏற்பட்டிருக்கலாம் ன்னு நீ நெனைக்கறையோ அதுக்கான காரணங்களை வரிசையா சொல்லு. அந்தக் காரணங்கள்லேந்து மோகனே தனக்குப் பொருந்தற ஒரு காரணத்தையோ இல்லே பல காரணங்களையோ தேர்ந்தெடுத்துக்கட்டும்

ஆக்கபூர்வமான வழிமுறை... பாராட்டுக்கள்..!

ஸ்ரீராம். said...

காரணங்கள் அலசப்படும்போது ஒரே வரிசையில் இருக்கும் இருவேறு ஏணிகளில் மாறிமாறி தாவி ஏறும் விளையாட்டு நினைவுக்கு வருகிறது!

ஸ்ரீராம். said...


இருப்பதை இல்லை என்றும், இல்லையென்பதை இருக்கிறது என்று நிறுவும் விளையாட்டும் எனக்கு வேறு ஒன்றை நினைவுபடுத்துகிறது! எங்கள் அலுவலகத்தில் ஒருவர் இருந்தார். அவருக்கு யார் சொல்வதையும் உடனே மறுத்துப் பேசியே பழக்கம். (இவரைப் பற்றி 'எங்களி'ல் முன்னர் ஒரு பதிவிலும் பகிர்ந்திருக்கிறேன்)

அவருடைய பெயர் குழந்தைவேலு என்று வைத்துக் கொள்வோம். "உங்க பேர் குழந்தைவேலுதானே" என்று ஆரம்பித்தால் கூட உடனே அதை மறுத்து விட்டு விட்டு கடைசியில் நாம் சொன்னதை ஒத்துக் கொள்வார்! நீங்கள் எழுத வந்த காரணம் வேறாக இருக்கலாம். எனக்கு மனதில் அந்த எழுத்தகள் இடித்த இடத்தைப் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே! :))

கோமதி அரசு said...

காரணம்ன்னு ஒண்ணு இல்லேனா அதுக்கான நிகழ்வே இல்லேன்னு சொல்லலாம். //

காரணம் இல்லை என்றால் காரியம் இல்லை என்பார்கள் பெரியவர்கள் இல்லையா!

கோமதி அரசு said...

கடவுள் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களைப் படிக்க ஆரம்பிச்சிருக்கலாம். அப்படிப் படிச்சுத் தெரிஞ்சிண்ட அறிவும் சதாசர்வ காலமும் அது பற்றிய நினைப்பும் மனசுக்கு வெகு நெருக்கமாகி இறைவன் மீதான ஆகர்ஷ்ணமா மாறியிருக்கலாம். அந்த ஈர்ப்பு தான் வினை புரிந்து இறைவன் குறுநகையாய் சிந்தையில் விளைந்திருக்கலாம். //
அருமையான காரணம் சொல்லி இருக்கிறார் புரந்தரதாசர். மோகன் எழுதிய கதையில்
சிவன் அடியார்களின் வரலாற்றையும் அவர்களுக்கு இறைவன் நேரில் வந்து அருள் செய்தவைகளையும் படித்த பாண்டியனுக்கு இறைவன் சிரிப்பது (குறு நகை) புரிந்தது போல் போல் காட்சி கொடுத்து இருக்கலாம்.

வித்யா உரிமையுடன் மோகன் என்று பேர் சொல்லி அப்பாவிடம் மோகனுக்காக ஆலோசனை சொல்ல சொல்வது மோகன் மேல் வித்யாவிற்கு உள்ள ஈடுபாட்டை காட்டுகிறது.

Geetha Sambasivam said...

ஆஹா, அப்பாதுரை எங்கே போனார்?? :))))

அது சரி, சின்ன வயசிலே கடவுள் நம்பிக்கை இல்லாமல் பின்னால் வந்திருக்கலாம் என்பது சரி. ஆனால் சின்ன வயசில் இருந்தே பிடிப்புடன் இருப்பவர்கள் குறித்து? அவங்களை என்ன சொல்றதாம்? கடவுளை ஒரு நண்பனாக, சிநேகிதியாக நினைக்கிறவங்களை? :))))

Geetha Sambasivam said...

என்னோட அருமை நண்பர் பிள்ளையார் தான். அவர் கிட்டே எப்படி வேணாலும் சண்டை போட்டுப்பேன்; திட்டுவேன். ஒண்ணும் சொல்ல மாட்டார். :)))))

கோமதி அரசு said...

சின்ன வயதிலே வீட்டில் பண்டிகைகள் கொண்டாடுவதைப் பார்ப்பது, பண்டிகை கொண்டாடும் காரணங்களை பெரியவர்கள் சொல்ல கேட்ட குழந்தைகளுக்கும்,,,சிறு வயதில் தாத்தா, பாட்டி இருவரிடமும் இறை நம்பிக்கை கதைகள் கேட்டு வளர்ந்தவர்களுக்கும் இயல்பாய் கடவுள் பக்தி வந்து விடும் .

அப்பாதுரை said...

ஹிஹி..வந்தேன் வந்தேன்.
கதை எங்கேயோ பக்கத்துல வராப்புல இருக்கேனு பார்த்தா கீதாம்மா கமென்ட்.

சுவாமி தரிசனம் தொட்ட சந்தோஷம் என்பதே உருவகமா இருக்குமோ?ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

'தன் நெஞ்சு அறியும் தன்னைத் தானே' என்பார்கள்.

அவரவர் சாய்ஸ்க்கு விட்டு விட்டால்
ஆக்கபூர்வம் தன்னாலே வந்துவிடும்.

இந்த கதை நெடுக அப்படித்தான். வாசிக்கும் பொழுதே தங்களைத் தாங்களே தரிசிக்க பல எண்ணப் போக்குகள்.

தொடர்வதற்கு நன்றி, மேடம்.

G.M Balasubramaniam said...

/சின்ன வயசிலே எதுனாலேயோ கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்திருக்கலாம். வளர வளர கூட்டங்கூட்டமா தெய்வத்தின் மேலே நம்பிக்கை வைச்சிருக்கறவங்களைப் பாத்து, 'எதுக்காக இப்படி அலைமோதுறாங்க'ன்னு தெரிஞ்சிக்கணும்ன்னு ஆர்வம் வந்திருக்கலாம். அதைத் தெரிஞ்சிக்கற ஆர்வத்லே, அந்த குறுகுறுப்பிலே கடவுள் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களைப் படிக்க ஆரம்பிச்சிருக்கலாம். அப்படிப் படிச்சுத் தெரிஞ்சிண்ட அறிவு/ எனக்கு எதையும் துருவிப் பார்க்கும் முனைப்பைக் கொடுத்தது.என் அனுபவங்கள் மாறுபட்ட சிந்தனைகளை எழுப்பியது.ஆனால் முதலில் எழுதி இருப்பதுபோல் சின்ன வயசிலோ எப்போதுமோ கடவுள் நம்பிக்கை இல்லாமலிருந்தது இல்லை.

G.M Balasubramaniam said...

இருப்பதை இல்லையென்றும் இல்லாததை இருப்பது என்று கூறும் one up manship எனக்கு ஏற்புடையதல்ல.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

கற்பனையில் நீங்கள் சொல்லியிருக்கிற அந்த விளையாட்டைக் காண்கையிலேயே படு த்ரில்லாக இருக்கிறதே!

இருப்பதை இல்லை என்றும் இல்லை என்பதை இருக்கிறது என்றும் நிறுவுவதற்கு அசாத்திய சாமர்த்தியம் வேண்டும்.

தொடர்ந்து வாருங்கள், ஸ்ரீராம். இந்தத் தொடரில் வேறொன்றை நிறுவலாம் நாம்.

ஜீவி said...

@ கோமதி அரசு

//மோகன் எழுதிய கதையில்
சிவன் அடியார்களின் வரலாற்றையும் அவர்களுக்கு இறைவன் நேரில் வந்து அருள் செய்தவைகளையும் படித்த பாண்டியனுக்கு இறைவன் சிரிப்பது (குறு நகை) புரிந்தது போல் போல் காட்சி கொடுத்து இருக்கலாம்.//

அப்படியா சொல்கிறீர்கள்?..

//மோகன் மேல் வித்யாவிற்கு உள்ள ஈடுபாட்டை காட்டுகிறது.//

வித்யாவின் உரையாடல்களைக் கூர்ந்து கவனியுங்கள். தான் கொண்டிருக்கிற பெயருக்கு ஏற்ற பெண் அவள். வரும் அத்தியாயங்களில் அந்த கேரக்டரை பற்றிய புரிதல் இன்னும் சிறப்பாக ஏற்படலாம் என்று எண்ணுகிறேன்.

தொடர்ந்து கருத்துக்களைப் பதிவதற்கு நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ Geetha Sambasivam

//ஆஹா, அப்பாதுரை எங்கே போனார்?? :))))//

பார்க்கலை? அப்பாஜி பின்னால் வரும் பின்னூட்டத்தில் வந்து தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார், கீதாம்மா.

வழக்கமான அப்பாஜி, வழக்கம் போலவே தன் கருத்தில் மிளிர்கிறார், பாருங்கள்!

ஜீவி said...

//ஆனால் சின்ன வயசில் இருந்தே பிடிப்புடன் இருப்பவர்கள் குறித்து? அவங்களை என்ன சொல்றதாம்? //

இதை விட ---

//சின்ன வயசிலே கடவுள் நம்பிக்கை இல்லாமல் பின்னால் வந்திருக்கலாம் என்பது..//

இது பெரிசு இல்லையா?.. என்றைக்கும் இருப்பதை விட இல்லாமலிருந்து பெற்றால் அதன் அருமை கூடத்தானே? அதைப் பேணிக் காக்க வேண்டிய அக்கறை அதிகம் இருக்கும் அல்லவா?..

//கடவுளை ஒரு நண்பனாக, சிநேகிதியாக நினைக்கிறவங்களை? :))))//

claps! உன்னத நிலை. இனி வரும் யுகம் அப்படித்தான் மலர வேண்டும்.
'இனி..' கதைத் தலைப்புக்கான அர்த்தமும் அது தான். இந்த நினைப்புக்கும், இதைத் தாண்டியதான இன்னொரு அற்புத நிலைக்கு அழைத்துச் செல்வதற்காகவும் தான் இந்தக் கதையே.

ஒரு விளைவு இல்லாமல் எந்த செயலும் இல்லை. செயலின் வினை அதற்கான விளைவு.

கற்றதினால் ஆய பயன் என்று ஒன்று இருக்கிறதல்லவா?

அது போலவே இறைபக்தியால் ஆய பயன் என்ன?

அப்படியான ஒரு பயனுக்குத் தானே இந்த பக்தியே, அல்லவா?

அந்த இன்னொரு நிலையான வாழ்க்கை முறையை அடையாத ஆத்திகர்களும், அடைந்த நாத்திகர்களும் நிறைய உண்டு. அதனால் ஆத்திகம்-நாத்திகமெல்லாம்
விஷயமே இல்லை.

நீங்களும் உணர்ந்து தெரிந்தவைகளைத் தான் வேறு வார்த்தைகளில் சொல்வதாக எனக்குத் தோன்றுகிறது.

தொடர்ந்து வாசித்து ஆத்மபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ கோமதி அரசு

'இறைபக்தி' என்பது நிறைய தாத்பரியங்களை தன்னுள் அடக்கிய ஒரு சொல்.

குழந்தை பெரியவனாகும் வளர்ச்சி போலவே ஒவ்வொன்றிற்கும் அந்தந்த பருவ வளர்ச்சி என்று ஒன்று உண்டு.
இரவு-பகல் மாதிரி வாழ்க்கை பூராவும் மாறி மாறி வருவது இது. 'நேற்று பார்த்தது, இன்றில்லை; இன்று பார்ப்பது நாளை இல்லை' என்கிற மாதிரி நிலை இது.

கிடைத்த மாமணியை கைநழுவ விடாமல் இருக்க வேண்டுமானால், அதைத் தக்கவைத்துக் கொள்வதான வாழ்க்கை முறையும் அதற்கான சூழலும் அவசியம். உங்களுக்கு தெரியாததா?..

பகிர்தலுக்கு நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ அப்பாதுரை

//சுவாமி தரிசனம் தொட்ட சந்தோஷம் என்பதே உருவகமா இருக்குமோ? //

ஹி..ஹி..கூட இல்லை, ஹா..ஹா...

ரொம்ப ரசித்தேன், அப்பாஜி.

தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி.

ஜீவி said...

@ G.M.B.

// எனக்கு எதையும் துருவிப் பார்க்கும் முனைப்பைக் கொடுத்தது.என் அனுபவங்கள் மாறுபட்ட சிந்தனைகளை எழுப்பியது.ஆனால் முதலில் எழுதி இருப்பதுபோல் சின்ன வயசிலோ எப்போதுமோ கடவுள் நம்பிக்கை இல்லாமலிருந்தது இல்லை.//

நீங்கள் சொல்லியிருப்பதை இப்படிப் பார்க்க வேண்டும்:

1. சின்ன வயசிலிருந்தே எப்போதுமே
கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்ததில்லை.

2.கடவுள் பற்றிப் படிச்சுத் தெரிஞ்சிண்ட அறிவு எனக்கு எதையும் துருவிப் பார்க்கும் முனைப்பைக் கொடுத்தது.

3.என் அனுபவங்கள் மாறுபட்ட சிந்தனைகளை எழுப்பியது.

எழுப்பியது சரி. அப்புறம்?..

'அப்புறம் சின்ன வயசிலிருந்தே எப்போதுமே கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்ததில்லை' என்றால்
எழும்பிய மாறுபட்ட சிந்தனைகள் என்ன ஆச்சு? என்கிற கேள்வி வருமில்லையா?..

உங்கள் வரிகளில் முரண் தெரிகிறது.

மனத்தில் பட்டதை மறைக்காது பகிர்ந்து கொள்ளும் உங்கள் மாண்புக்கு
மிக்க நன்றி, ஜிஎம்பீ சார்!

Related Posts with Thumbnails