மின் நூல்

Sunday, August 11, 2024

இது ஒரு தொடர்கதை -- 10

                                               10




'மனவாசம்' பத்திரிகையில் 'ஹலோ, தோழி...' என்று ஒரு பகுதி உண்டு.  வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட வித்தியாச அனுபவங்களை நெருங்கிய தோழியிடம் பகிர்ந்து கொள்வதைப் போல பத்திரிகைத் தோழியிடம் பகிர்ந்து கொண்டு பதில் பெறுகிற மாதிரியான ஒரு பகுதி அது.  இந்தப் பகுதியில் பகிரப்படுகிற அனுபவங்கள் பெரும்பாலும் படிக்கிற வாசகர்களை ஏதாவது ஒருவிதத்தில் கவருகிற மாதிரி அமைந்திருக்கும்.

எழுபத்தைந்து வயசு அனந்தசயனம் தான் அந்தப் பகுதியைக் கவனித்துக் கொள்பவர். அதாவது அவர் தான் தோழி.  மாதத்திற்கு ஒருமுறை அலுவலகத்திற்கு வந்து நான்கு வாரங்களுக்கான 'ஹலோ, தோழீ'க்கான மேட்டரை ஒரு சேர கொடுத்து விட்டுப் போவார். அப்படி வருகையில் இந்தப்  பகுதிக்காக வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களையும் பெற்றுச் செல்வார். 'ஹலோ, தோழீ'யின் தொடர்ச்சிப் பகுதிகளுக்கு அந்தக் கடிதங்கள் தாம் அடித்தளம்.

இப்பொழுது புதிதாக உதவி ஆசிரியர்களுக்கு 'பாரம்' பிரித்த சூழ்நிலையில் 'ஹலோ, தோழீ' பகுதி மோகனுக்காக ஒதுக்கப்பட்ட பாரத்தில் ஒரு பகுதியாக சேர்ந்து கொண்டிருந்தது.  அதனால் இந்தத் தடவை அவர் வந்திருந்த பொழுது மோகனை நேரிடையாகப் பார்த்து அவனிடம் தான் கொண்டு வந்திருந்த அச்சுக்கான மேட்டரைக் கொடுத்தார்.  அவரது வயதிற்கும் அனுபவத்திற்கும் மரியாதை தரும் நோக்கில் மோகன் எழுந்திருந்து அவர் தந்த காகிதங்களை வாங்கிக் கொண்டான்..

"தோழி, சார்! உங்கள் பகுதிக்கு நானும் ஒரு வாசகன், தெரியுமோ உங்களுக்கு?" என்று அவன் சொன்னதும் கலகலவென்று சிரித்து விட்டார் அனந்தசயனம். "தோழி,சார்'ன்னு நீங்க என்னை அழைச்சதாலே சிரிச்சிட்டேன். தப்பா நெனைக்காதீங்க.." என்று அவர் சொன்னதும் மோகனின் இதழ்க் கடையில்  புன்முறுவல் தவழ்ந்தது.

"ஆசிரியர் தான், இந்த 'ஹலோ, தோழீ' பகுதிக்கு அந்தத் தலைப்பைக் கொடுத்தது. சில விஷயங்களை ஒரு பெண் சொல்ற மாதிரி இருந்தா ஈடுபாட்டோட ஆண்களும் கேப்பாங்கன்னு அவர் சொன்னார்" என்றார் அ.சயனம். "இந்தப் பகுதியை எழுதறது ஆணா இருந்தாலும், பெண் எழுதற மாதிரி ஒரு தோற்றம் கிடைச்சாப் போதும்ன்னார் அப்போ.  அவர் சொன்னது கிட்டத்தட்ட சரியாத் தான் போய்க்கிட்டு இருக்கு. கம்பாரிங் வித் பெண் வாசகர்கள், எனக்கு ஆண் வாசகர்கள் தான் அதிகம்." என்றார். அப்படிச் சொன்னதில் ஒரு சுதந்திரத் தன்மையை அவர் உணர்ந்த மாதிரி இருந்தது.

"அப்படீன்னா, வாட் எபெளட் பெண்கள்?.. பெண் சொல்றதை பெண்கள் எப்படிக் கேட்டுப்பாங்க?.. எனி ஐடியா?" என்று அவர் பக்கம் தலையைச் சாய்த்துக் கேட்டான் மோகன்.

"இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி..." என்று மோவாயைத் தடவி விட்டுக் கொண்டார் அனந்தசயனம். "இருந்தாலும் எனக்குத் தெரிஞ்சதைச் சொல்ல முயற்சிக்கறேன்." என்று தொலைபேசி இணைப்புக்கு அருகில் நாற்காலி போட்டு உட்கார்ந்து லெட்ஜர் என்ட்ரி போட்டுக் கொண்டிருந்த சாந்தா பக்கம் பார்த்தார்.  அவளுக்குக் கேட்டு விடக்கூடாது என்பதை நிச்சயப்படுத்திக் கொண்ட மாதிரி தாழ்ந்த குரலில்,"பொதுவாச் சொல்றேன்.."என்று தான் நினைப்பதை சொல்ல ஆரம்பித்தார்.. " இந்த யோசிக்கறதுங்கறதை எடுத்திண்டாலே அதுவே பெண்கள் குணம்  தான். அவங்க நடவடிக்கைலாம் பாத்தாலே தெரியும். தடாலடியா இல்லாம  எதுவும் யோசிப்பின் அடிப்படைலே இருக்கும். பெண்கள்னாலே  அவங்க நினைப்புலே ஒரு விசேஷம் உண்டு. எல்லாத்திலேயும் இவங்களுக்குன்னு ஒரு தீர்மானமான கருத்து இருக்கும். தே ஆர் வெரிமச் ஸின்ஸியர் டு தெர் தாட்ஸ். அப்படி அவங்க வைச்சிருக்கிற கருத்துக்கு ஒத்து வந்தா, இந்த  வாரம் தோழி நல்லாச் சொல்லியிருக்காளேன்னு நெனைச்சிப்பாங்க.  ஒத்து வரலைனா, பெரிசா சொல்ல வந்துட்டா, பாரு'ன்னு தூக்கி எறிஞ்சிடுவாங்க.. தட்ஸ் ஆல்.." என்று கையை வீசிக் காட்டியவர் தொடர்ந்தார். "இதுலே விஷயம் என்னன்னா, மோகன்.. வீ ஆல் ஆர் ஹூயூமன் பீயிங்ஸ்.. இருந்தாலும் ஒரு அட்ராக்ஷன். அவ்வளவுதான். இதிலே ஆணுக்கு இருக்கற தீவிரம் பெண்ணுக்கு இல்லேன்னு  நெனைக்கறேன்.  பெண்ணுக்கு ஆணைப்பத்தித் தெரிஞ்சிக்கறதை விட தன்னைப் பத்தியும், தன்னைப் பத்தி இன்னொருத்தர் நல்லபடியா தெரிஞ்சிக்கணும்ங்கறதிலேயும் அக்கறை அதிகம் உண்டு.  நாலு பேருக்கு நடுவே லட்சணமா தன்னைக் காட்டிக்கணும்ங்கற ஆர்வம் அவங்க பிறக்கும் பொழுதே கூடவே பிறந்திடும்ன்னு நெனைக்கிறேன். கொஞ்சமே யோசிச்சாலும் பெண்கள் வாழ்க்கை பெண்கள் உலகத்துக்குள்ளேயே புதையுண்டு போயிருப்பது தெரியும்" என்றார்.

"ஐ ஸீ.." என்றான் மோகன். "இதுக்கு என்ன சொல்றீங்க?.. ஆண் நினைக்க மாட்டானா? வீட்லே கிடைக்கற அட்வைஸ்லாம் கேட்டுக்கறது போதாதுன்னு, பத்திரிகையைப் பிரிச்சா இதிலுமான்னு ஆண் நெனைக்க மாட்டானா?"

"அப்படி நெனைக்காதவாறு எழுதற மேட்டரை கையாளறோம்லே?.. அதான் அதிலே இருக்கற சூட்சுமம்.." என்று கண்ணைச் சிமிட்டினார் தோழி சார்.

"சார்! எழுத வந்தா எத்தனை விஷயம் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு? இதெல்லாம் இங்கே வேலைலே சேந்த பின்னாடி தான் ஒவ்வொண்ணா தெரிஞ்சிக்கறேன்" என்றான் மோகன்.

"இப்போ உன் விஷயத்துக்கு வருவோம்.." என்றார் அனந்தசயனம். "உன்னோட 'இது ஒரு தொடர்கதை' கதையை கதையா நினைக்க முடிலே, என்னாலே.  அதான் என்ன சமாச்சாரம்ன்னு கேட்டுடலாம்னுட்டு.." என்று அவர் சொல்லி நிறுத்தியது தொடர்ந்து சொல்லத் தயங்குவது போலிருந்தது.

"சொல்லுங்க, சார்.. என்ன விமரிசனம்னாலும்  சொல்லுங்க, சார்! கேட்டுக்கறேன்.." என்று ஆர்வத்துடன் கேட்டான் மோகன்.

"அதான் சொல்றேனே.. ஒரு கதைன்னு நினைக்க முடியாதபடிக்கு நிஜமா நடந்த மாதிரி எழுதறே.. நெஜமாலுமே நடந்த நிகழ்ச்சிகளை வைச்சு கதை மாதிரி சம்பாஷணைக் கோத்து எழுதறயா?..  இல்லே, இது முழுசும் உன் கற்பனைலே தோணின கதையா?.. அதான் தெரிஞ்சிக்கணும்னுட்டு.. பொதுவா கதைங்களுக்கு  ரிஷிமூலம், நதி மூலம் கேக்கக்கூடாதும்பா.. ஏதோ, தோணித்து.. கேட்டுட்டேன்.  கட்டாயமில்லே. சொல்ல முடிஞ்சா, சொல்லு.." என்றார்.

"உங்களுக்குச் சொல்றதுக்கு என்ன சார்?.. கற்பனை தான். நிஜம்ன்னு ஒண்ணு இல்லாம இல்லே; இருந்தாலும் கற்பனைப் பூச்சு தான் அதிகம். உங்களுக்குத் தெரியாததா, சார்?.. நடக்கற நிகழ்வுகளைப் பாத்து இப்படி இருந்தா எப்படி இருக்கும்ன்னு எழுத்தாளன் யோசிக்கறது கற்பனையா வடிவம் பூண்டு கதையாறது தானே சார், கதைங்கள்லாம்..  எந்த விகிதாச்சாரத்தில் நிஜத்தையும் கற்பனையையும் கலக்கணுமோ அந்த படிக்குக் கலந்த கலவை சார் இந்தக் கதை.." என்றான் மோகன்.

"உன் பதில் கூட அபாரம்ப்பா. மனசிலே இருக்கறதே அப்படியே சொல்றே.. இந்த மாதிரி கல்மிஷம் இல்லாம பேசறவாளுக்கு லைப்லே எல்லாம் நல்லபடியே நடக்கும். இன்னிக்கு இந்தக் கிழவன் சொல்றேன், பார்.. நீ நன்னா வருவே!" என்று ஆசிர்வதிக்கிற மாதிரி கைதூக்கி அவன் தோள் தொட்டார். "நீ எழுதின அந்தக் காட்சியை--  கோவில்லே அம்பலவாணனின் கன்னக் குமிழ்ச்சிரிப்பை அனுபவிச்சு தரிசனம் பண்ணின காட்சியை-- என்னால் மறக்க்வே முடியாது. அது நிச்சயம் கற்பனை இல்லே; உண்மையா நீயே அனுபவிச்சதாத் தான் இருக்கணும், இல்லியா?" என்றார்.

"உண்மைதான் சார்.." என்று ஒப்புக்கொள்கிற மாதிரி சொன்னான்  மோகன். "எப்பவுமே கோயிலுக்குப் போனா, இறைவன் சன்னதியில் இறைவனோடு ஐக்கியம் ஆற மாதிரி மனசை மலர்த்தி வைச்சிக்கறது என்னோட பழக்கம். முகதரிசனம் கிடைக்கறப்போ மனசோ அவர் கிட்டே பேசிக் கலக்க தவியா தவிக்கும். இந்த உடம்பு சட்டை கைகுவிச்சு தேமேன்னு கண்டதே காட்சியா நிக்க வேண்டியது, தான்! இந்த மனசுக்கு இருக்கற தைரியத்தைப் பாருங்க, துணிச்சலா அவரோட பேசக்கூட செய்யும்! நான் ஒதுங்கி நிக்க வேண்டியது தான்! அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிடுவாங்க! எப்படி  இருக்கு, பாருங்க நியாயம்!" என்று கலகலப்பாகச் சிரித்துக் கேட்டான் மோகன்.

"கொடுத்து வைச்ச ஆத்மா, ஐயா!" என்றார் அனந்தசயனம். "நீயே ஒரு நல்ல கவிதை மாதிரி இருக்கே! ஒண்ணு தெரியுமோ, உனக்கு?.. நல்ல கவிதைக்கு இலக்கணம் எதுக்கும்பாங்க.. இலக்கணம் வேணாம்ன்னு இல்லே. இலக்கணம்ன்னு ஒண்ணு தனியா இருக்கற மாதிரித் தெரியாம அந்தக் கவிதையோட கவிதையா அதுவும் கலந்து இருக்குமாம்.  அந்த மாதிரி தனியா பக்தின்னு ஒண்ணு தேவையில்லாமலேயே இறையனுபவம் உன்னோடையே கலந்த ஒண்ணா இருக்கு.." என்று சொன்ன போது அவர் குரல் தழுதழுத்தது.

ஒரு நிமிடம் யோசனையில் ஆழ்ந்தவர் போல இருந்தார் அனந்தசயனம்.  "உடம்பு-மனசுன்னு ஒவ்வொண்ணையும் தனித்தனியா கழட்டிப் பார்க்கத் தெரிஞ்சிருக்கு, உனக்கு!" என்றவர், அடுத்த வினாடி தலையைக் குலுக்கிக் கொண்டார்.. திடுதிப்பென்று, "நீ ஒண்ணு செஞ்சா என்ன?" என்றார்.

"என்ன சார் செய்யணும்?" என்றான் மோகன்.


(.இன்னும் வரும்)





23 comments:

இராஜராஜேஸ்வரி said...

தனியா பக்தின்னு ஒண்ணு தேவையில்லாமலேயே இறையனுபவம் உன்னோடையே கலந்த ஒண்ணா இருக்கு.."

நல்ல ஆத்மாக்கள்...!

Geetha Sambasivam said...

//இந்த மாதிரி கல்மிஷம் இல்லாம பேசறவாளுக்கு லைப்லே எல்லாம் நல்லபடியே நடக்கும்.//

நூத்திலே ஒருத்தர் தான் இப்படிச் சொல்றாங்க. பொதுவாக் கொஞ்சம் கபடு,சூது கலந்து பேசு அல்லது பேசாதேனு தான் புத்திமதி கொடுப்பாங்க. :)))))

Geetha Sambasivam said...

மோகனோடு கலந்த இறையனுபவம் தான் பாண்டியனிடம் பரிமளிக்கிறது. :))))

ஸ்ரீராம். said...

ஒரு ஆணாக நின்று ஒரு ஆண் சொன்ன/சொல்லும் பெண்கள் பற்றிய கருத்தைப் பற்றிப் படிக்கும்போது 'ஆமாம்' தோன்றுகிறது. பெண் வாசகிகள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்!

"தோழி ஸார்" ....!! :))

இறையனுபவம் பற்றி சிலாகிக்க நான் ஆள் இல்லை. :))) பக்தி அனுபவம் எனக்கு இல்லை!


கோமதி அரசு said...

தனியா பக்தின்னு ஒண்ணு தேவையில்லாமலேயே இறையனுபவம் உன்னோடையே கலந்த ஒண்ணா இருக்கு..//

ஆமாம், மோகன் எப்போதும் அவனை ஆராதிப்பதால் தான் அவர் கதை காதாபாத்திரம் பாண்டியன் கோவிலில் குமிழ் சிரிப்பை காண முடிந்தது.

கோமதி அரசு said...

"உடம்பு-மனசுன்னு ஒவ்வொண்ணையும் தனித்தனியா கழட்டிப் பார்க்கத் தெரிஞ்சிருக்கு, உனக்கு!" என்றவர், அடுத்த வினாடி தலையைக் குலுக்கிக் கொண்டார்.. திடுதிப்பென்று, "நீ ஒண்ணு செஞ்சா என்ன?" என்றார்.//

மனதை பாண்டியனாய் மாற்றி கதைகுள் புகுந்து புறப்பட சொல்வ்ரோ!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை தொடர்கிறேன்

G.M Balasubramaniam said...

/நீ எழுதின அந்தக் காட்சியை-- கோவில்லே அம்பலவாணனின் கன்னக் குமிழ்ச்சிரிப்பை அனுபவிச்சு தரிசனம் பண்ணின காட்சியை-- என்னால் மறக்க்வே முடியாது. அது நிச்சயம் கற்பனை இல்லே; உண்மையா நீயே அனுபவிச்சதாத் தான் இருக்கணும், இல்லியா?"”உண்மைதான்” அதனால்தானே வேறுபட்ட கருத்து எழுதிய என் மேல் கோபம் தெரிய மறுதளித்தீர்.
/அப்படி அவங்க வைச்சிருக்கிற கருத்துக்கு ஒத்து வந்தா, இந்த வாரம் தோழி நல்லாச் சொல்லியிருக்காளேன்னு நெனைச்சிப்பாங்க. ஒத்து வரலைனா, பெரிசா சொல்ல வந்துட்டா, பாரு'ன்னு தூக்கி எறிஞ்சிடுவாங்க.. தட்ஸ் ஆல்.." என்று கையை வீசிக் காட்டியவர் தொடர்ந்தார்/ இது பெண்களுக்கு மட்டுமல்ல. பொதுவாகவே எல்லோரிடமும் காணும் குணம்தான்.

அப்பாதுரை said...

பெண்கள் நிலையற்ற மனங்கொண்டவர்கள் :) ஆகா அப்படியே செய்யலாம் என்று உடன் சேர்ந்து தீர்மானம் செய்து திரும்பிப் பார்க்குமுன் நேரெதிராகச் செய்துவிட்டு, சாக்கோ காரணமோ சொல்லி சாதிப்பவர்கள்.

பத்திரிகைத்துறை நடைமுறை பற்றி உங்க கதைகளில் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.

நிஜம்னு ஒண்ணு இல்லாம இல்லே - ரசித்தேன்.

Geetha Sambasivam said...

@அப்பாதுரை, ஆண்களில் சஞ்சலபுத்தி கொண்டோர் எத்தனை பேர் வேண்டும்?:)))) நிலையற்ற மனம்னு எல்லாம் இல்லை. எல்லாருக்குமே மனம் அலைபாயும், ஆணானாலும், பெண்ணானாலும்! :)))))

Geetha Sambasivam said...

//" இந்த யோசிக்கறதுங்கறதை எடுத்திண்டாலே அதுவே பெண்கள் குணம் தான். அவங்க நடவடிக்கைலாம் பாத்தாலே தெரியும். தடாலடியா இல்லாம எதுவும் யோசிப்பின் அடிப்படைலே இருக்கும். பெண்கள்னாலே அவங்க நினைப்புலே ஒரு விசேஷம் உண்டு. எல்லாத்திலேயும் இவங்களுக்குன்னு ஒரு தீர்மானமான கருத்து இருக்கும்.//

இதைப்படிக்கலை??? என்னைப் பொறுத்தவரையிலும் நான் யோசித்து ஒரு முடிவெடுப்பேன். ஆனால் வெளியே தெரியறதில்லை என்பது என்னமோ உண்மைதான். முடிவெடுத்ததும் அதில் மாறியதில்லை இன்றுவரை! :))))

அப்பாதுரை said...

ஆண்கள்ளயும் இருக்காங்க.. ஆனா அவங்க பின்னால பாத்தீங்கன்னா.. behind every flustered man is a fickle woman :)

Geetha Sambasivam said...

@அப்பாதுரை, எத்தனை நாட்களுக்குப் பெண்கள் மேலேயே குற்றம் சுமத்திட்டுத் தப்பிக்கப் போறீங்க?? :)))))))) :)))))

இப்போ என்னையே எடுத்துக்குங்க. நான் மாறவே மாட்டேங்கிறேனேனு சிலர் கவலை; சிலர் கோபம்; சிலர் அநுதாபம்; சிலர் வருத்தம்!

ஆனால் பலருக்கும் இதுவே நல்லதுனும் தோணிட்டு இருக்கு! அப்படியும் சொல்றாங்க. ஆகவே அடிக்கடி தன்னை மாத்திக்கிறதிலே எனக்கு உடன்பாடில்லை. :)))))))) என் இயல்பு இதான். அப்படியே இருக்கலாமே! :)))))

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

தனியா பக்தின்னு ஒண்ணு தேவையில்லாமலேயே இறையனுபவம் சாத்தியப்படுமா என்பது ஒரு அடிப்படை கேள்வி.

தொடர்ந்து பக்திப் பதிவுகள் எழுதி வரும் நீங்கள் இந்த வார்த்தைத் தொடர்
தொடர்பாக சரியான புரிதலுடன் பரவசப்பட்டிருப்பதற்கு நன்றி.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

நீங்க அந்த நூத்திலே ஒருத்தரான்னு தெரியலையே!

கல்மிஷம் இல்லாம பேசறது-- பாஸிட்டிவ் அப்ரோச்; எல்லா நேரத்திலும் பயனளிப்பது. கவலையிலா மனிதர்கள் இவர்கள் தாம்.

கபடு, சூது கலந்து-- அப்படிக் கலக்கறது எங்கே கொண்டு போய் விடும் என்று தெரியாது. இப்படிப் பேசிப் பேசி அப்படிப்பேசுவோரே கபடு-சூது கலந்து செய்யப்பட்ட பண்டமாய் மாறிப்போகும் அபாயம் இருக்கிறது. தற்காலிக நன்மைகள் நிரந்தரத் தீமைக்கு இட்டுச் செல்லும்.

பேசாதே-- சுத்த மோசம். வெளிப்பட பேச முடியாத பொழுது மனசுக்குள் பேசிக் கொண்டே ஆக வேண்டும்.
மன உணர்வுகள் வெளிப்படாமல் அடக்கிக் கொள்வது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும்.

அந்த ஒருத்தரைத் தவிர்த்த 99 பேர் புத்திமதியா கொடுத்திருக்காங்க?..
:))

ஜீவி said...

@ Geetha Sambasivam (2)

//மோகனோடு கலந்த இறையனுபவம் தான் பாண்டியனிடம் பரிமளிக்கிறது. :))))//

மோகன் பாண்டியனில் தன்னைப் பார்க்கிறானோ?..

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//பெண் வாசகிகள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்!..//

:))

//இறையனுபவம் பற்றி சிலாகிக்க நான் ஆள் இல்லை. :))) பக்தி அனுபவம் எனக்கு இல்லை! //

முன்- பின்னாக இருப்பதை, பின்-முன்னாக மாற்றிப் பாருங்கள்.:))

ஜீவி said...

@ கோமதி அரசு

//மனதை பாண்டியனாய் மாற்றி கதைகுள் புகுந்து புறப்பட சொல்வ்ரோ! //

மாற்றுவானேன்?.. படைப்பவன் மனக்கோலம் தானே அவனின் பாத்திரப் படைப்புகள்?..

ஜீவி said...

@ கரந்தை ஜெயக்குமார்

தொடர்வதற்கு நன்றி, நண்பரே!

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

பழசைப் புரட்டிப் பார்த்தேன். கோபம் என்கிற வார்த்தை இங்கு திரிபுற்று பதிவாகியிருக்கிறது போலும். கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது கோபப்படுதலும் குழந்தைத் தனமில்லையா?.. நீங்கள் சொல்ல வந்தது எனக்குப் புரிகிறது. அப்புறம் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதும் அனாவசியம் தானே?..

ஜீவி said...

@ GMB

//இது பெண்களுக்கு மட்டுமல்ல. பொதுவாகவே எல்லோரிடமும் காணும் குணம்தான். //

@ அப்பாதுரை

பெண்கள் நிலையற்ற மனங்கொண்டவர்கள் :)

@ கீதா சாம்பசிவம்

எல்லாருக்குமே மனம் அலைபாயும், ஆணானாலும், பெண்ணானாலும்! :)))))

@ அப்பாதுரை

//ஆண்கள்ளயும் இருக்காங்க.. ஆனா அவங்க பின்னால பாத்தீங்கன்னா.. behind every flustered man is a fickle woman :) //

@ கீதா சாம்பசிவம்

//@அப்பாதுரை, எத்தனை நாட்களுக்குப் பெண்கள் மேலேயே குற்றம் சுமத்திட்டுத் தப்பிக்கப் போறீங்க??//

-- இத்தனை கருத்துக்களிலிருந்தும் ஓர் உண்மை புலப்படுகிறது.

குணங்களுக்குத் தான் ஆண்,பெண் பகுப்பு உண்டே தவிர அவற்றை நேரிடையாக ஆண்களுக்கு-பெண்களுக்கு என்று பொருத்திப் பார்ப்பது தவறு போலும்.

ஆக பெண் குணம் பொருந்திய ஆணும் உண்டு, ஆண் குணம் பொருந்திய பெண்ணும் உண்டு என்று கொள்வதே தகும்.

எதெல்லாம் ஆண்குணம், எதெல்லாம் பெண் குணம் என்று பகுத்துப் பார்ப்பது அவரவர் செளகரியப்படி!

அப்பாடி! ஒரு வழியா தீர்வு ஒன்றைக் கண்டாயிற்று :))

கலந்து கொண்ட நல்லிதயங்களுக்கு நன்றி.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம் (5)

//முடிவெடுத்ததும் அதில் மாறியதில்லை இன்றுவரை! :))))

அப்படியே இருக்கலாமே! :))))) //

அப்படியே இருப்பதில் ஒரு சின்ன அசெளகரியம் உண்டு.

எதிராளியும் இப்படியே இருந்து விடும் பட்சத்தில் எதிரும் புதிருமான நிலை ஏற்படுவது இயற்கையே. அதனால் மனவருத்தங்கள் ஏற்படுவதும் இயல்பே.

தன் கருத்தை மதிப்பவர் பிறர் கருத்தையும் மதிப்பர் என்பது ஒரு உளவியல் சமன்பாடு.

அதனால் எதிரும் புதிரும் உட்கார்ந்து ஒன்று கூடிப் பேசி உருவாகும் கருத்தில் 'மாறியதில்லை, இருவரும்' என்றிருக்கலாம். இப்படி உருவாகும் கருத்து ஒரு குறைந்தபட்ச நன்மையைக் கொடுக்கும் அளவிலாவது இருக்கும் என்பதே இதன் சிறப்பு!.

தோல்வியையும் வெற்றியையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

வெற்றி பெற்றோம் என்று குதித்துக் கூத்தாடியதும் இல்லை, தோல்வியுற்றோம் என்று வருந்தி சாம்பிப்போய் நின்றதும் இல்லை
என்கிற நிலை இதனால் ஏற்பட்டு
மன அமைதிக்கு வழி கோலும்.

தொடர்ந்து வந்து தங்கள் மனத்திற்கு நெருங்கிய கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி, கீதாம்மா..

Geetha Sambasivam said...

ஹாஹாஹா, இப்படி எல்லாம் நினைச்சுப் பார்க்கலை ஜீவி சார். :)))) பொதுவான எதையும் நாங்க சேர்ந்து பேசித் தான் முடிவெடுப்போம். சில சமயம் அவர் சொல்வதும், சில சமயம் நான் சொல்றதும் சரியாய் இருக்கும். அப்போ அதையும் சொல்வது உண்டு. நான் என்னோட குணத்தைப் பத்திச் சொன்னது பொதுவான ஒன்றுதான். தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்துக்கிறதைக் குறித்தும் இதிலிருந்து முடிவெடுக்கலாம் என்பதை நான் புரிஞ்சுக்கலை என்பதே உண்மை! :)))))))))

Related Posts with Thumbnails