பக்கத்திலேயே ரயில்வே லெவல் கிராஸிங்.
நாங்கள் அந்த ர.லெ. கிராஸை ஒட்டிய தனித்த மேடான பகுதியில் அமர்ந்திருந்தோம்.
நாங்கள் என்றால் நானும், ரகுவும். ரகு யாரென்றால் என் அருமை நண்பன். உடன்பிறப்பு என்ற உறவு மலினமாகி விட்டதால் அதை உபயோகிக்க தயக்கம். உடன்பிறவா சகோதரன் என்று கொள்ள வேண்டுகிறேன். ரகு என்னை விட ஒரு வயது பெரியவன். இரண்டு பேருக்குமே ஒன்பதாவது வகுப்பு வாசிக்கிற பள்ளிப் பருவம். அந்த மேட்டுக்குக் கீழேயே அவன் வீடு இருந்ததால் இந்த இடத்தை எங்கள் சந்திப்புகளுக்குத் தேர்ந்தெடுத்திருந்தோம்.
வெள்ளைக் காகிதத்தை க்ளிப்பிட்டு செருகிய கார்ட்போர்டு அட்டை என் கையில். அதில் காகிதத்தில் 'பளீரென்று வெளிச்சம். 60 வாட்ஸ் பல்பு தான். இருந்தாலும்..' என்று நான் எழுதிக் கொண்டிருக்கையில், "நீளமா வேண்டாம்டா. ஆரம்பம் ஒற்றை வரிலே இருக்கணும்" என்று திருத்தினான் ரகு. இந்த ஒற்றை வரி ஆரம்பம் நூல் கண்டில் பிரிந்திருக்கிற ஒரு முனையை பற்றி இழுக்கற மாதிரி.
நாமும் எதையாவது எழுதிப் பார்க்க வேண்டும் என்ற தாபம் கொண்டவர்களின் நுழைவு வாயில் தான் இந்தப் பதிவுலகம் என்பது நிச்சயம். இந்தப் பதிவுலகில் சிலர் தம் இளம் வயதில் கையெழுத்துப் பிரதி நடத்தி தங்கள் எழுதும் ஆசையைத் தீர்த்துக் கொண்டிருப்பார்கள்.
நானும் ரகுவும் கூட எங்கள் பள்ளி பருவத்தில் அதைத் தான் செய்தோம். அதற்காகத்தான் அப்பொழுது எழுதிக் கொண்டிருந்தோம். கையெழுத்துப் பிரதியில் நிறைய ஐட்டங்கள். ஒரு தொடர்கதை வேறே.. கலர் பென்சிலில் படம் வரைய சோமு இருந்தான். சோமுவைத் தவிர இன்னும் நாலைஞ்சு பேர். ஆளுக்கொரு வேலை. ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் எங்கள் 'புரட்சி' வெளிவந்து விடும்.
நாங்கள் சைக்கிளில் வீடு வீடாக விஜயம் செய்து நாவல்கள், மாத-- வார பத்திரிகைகளை வாசிக்கக் கொடுக்கும் லெண்டிங் லைப்ரரி வைத்திருந்தோம். சர்குலேஷன்லாம் தூள் கிளப்பும். சேலத்தின் தெருக்கள் நெடுகிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். அந்தக் காலத்து வீட்டுப் பெண்மணிகளில் பலரின் பொழுது போக்கு பத்திரிகை வாசிப்பு என்றிருந்தது எங்கள் சர்க்குலேஷனுக்கு ரொம்பவும் அனுகூலமாக இருந்தது. ரொம்ப வேண்டப்பட்டவர்கள் சிலருக்கு இந்தக் கையெழுத்துப் பிரதியையும்
சேர்த்துக் கொடுப்போம். எங்கள் எழுத்து ரசனையை அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று தான். இப்படி ஆரம்பித்தது "உங்கள் கையெழுத்துப் பத்திரிகையில் நாங்களும் எழுதலாமா?" என்று ஓரிரண்டு மகளிர் வாடிக்கையாளர்களும் கேட்ட பொழுது இரட்டை மடங்கு சந்தோஷத்தோடு ஒப்புக் கொண்டது, எங்களுக்குள் பத்திரிகை வாசக - எழுத்தாளர் குழாம் ஒன்றே செயல்படுவதற்கு ஆதர்சமாக இருந்தது. அதெல்லாம் பற்றி இந்தப் பகுதியில் வேண்டாம். வேறொரு சமயம் அதற்கென்று வாய்க்கும் பொழுது தனிக் கச்சேரியாக அதை வைத்துக் கொள்ளலாம்.
பண விஷயங்களில் சிக்கலே இல்லை. எப்படியோ புரட்டி விடுவோம். எங்கள் வாடிக்கையாளர்களின் அதீத ஆதரவு எங்களுக்கு எப்பொழுதுமே இருந்தது.
எந்த விதத்திலும் கையைக் கடிக்காமல் காசு வந்து கொண்டிருந்ததால் எங்களுக்கு இதெல்லாம் அந்த வயதில் இனிமையான பொழுது போக்காக இருந்தன.
'கையெழுத்துப் பிரதியை இவ்வளவு கஷ்டப்பட்டு தயாரிக்கிறீர்களே.. எம்ஜிஆருக்கு அனுப்பி வையுங்கள். பெரிய அளவில் ஏதாவது உதவி செய்வார்' என்று யாரோ ஒரு பெரியவர் சொல்லி பதிவுத் தபாலில் ஒரு பிரதியை ரொம்ப யோசனைக்குப் பிறகு அனுப்பி வைத்தோம். அனுப்பிய ஒரு வாரத்தில், முகவரி பகுதியில் சிவப்பு இங்க் கோடுகள் எல்லாம் குறுக்கு நெடுக்காக இழுத்து, 'Return to sender' என்று திரும்பி வந்து விட்டது.
எங்களுக்கு ஒண்ணும் புரிலே. "சாதாரண தபாலில் அனுப்பக் கூடாதா? இந்த மாதிரி ரிஜிஸ்தர் தபாலாம் என்னவோ ஏதோன்னு சிலர் வாங்க மாட்டாங்க..' என்று எங்கள் லெண்டிங் லைப்ரரி கஸ்டமர் ஒருத்தர். 'ஆரெம்வி அகழியைத் தாண்டி கோட்டைக்குள் போகணும்னா கஷ்டம்தான். அந்த என்ட்ரி லெவல்லேயே திருப்பப் பட்டிருக்கும்' என்று இன்னொருத்தர். 'ஏம்ப்பா.. ரோஜா, மல்லிகைன்னு ஏதாவது சாதாரணப் பெயரா பத்திரிகைக்கு வைக்கக் கூடாதா? அதென்ன புரட்சி, புடலங்காய்லாம்?.,, சில பேருக்கு இந்தப் பெயரெல்லாம் அலர்ஜி.. தெரியுமோ'ன்னு இன்னொருத்தர்.
எது வேணா காரணமா இருக்கட்டும். நாங்க கஷ்டப்பட்டு எழுதின கையெழுத்துப் பிரதி எங்க கைக்கு உருப்படியா வந்து சேர்ந்ததிலே கிடைத்த சந்தோஷம் அந்தத் திரும்பி வந்ததை ஒரே நாளில் மறக்கச் செய்தது. இனிமே இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணிடக் கூடாதுன்னு அப்பொழுதே ஒரு மனதாக ஒன்று கூடி சூளுரைத்துக் கொண்டோம்..
முக்கியமான விஷயத்தைச் சொல்லாம எங்கேயெல்லாமோ எழுத வந்தது இழுத்தடிக்கறது. எதை எழுதணும்னாலும் நறுக்குத் தெரிந்தாற் போல ஒற்றை வரி ஒண்ணுலே ஆரம்பிச்சு ஆரம்பித்ததின் முன்னே, பின்னே என்று விஷயத்தை ஓட்டற சாமர்த்தியத்தை அந்த வயசிலேயே எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது குமுதம் பத்திரிகை ஆசிரியர் எஸ்.ஏ.பி. தான்.
இப்படி எழுதற கலைலே அவர் கற்றுக் கொடுத்த பாடங்களையெல்லாம் சொல்றதுக்குத் தான் இந்தப் பகுதி.. அப்படியே அவர் பேராசிரியராய் இருந்த அந்த சர்வகலாசாலை 'குமுதம்' இதழ் பற்றியும். சரியா?.. சரி.. அந்த ஒற்றை வரி ஆரம்பத்திற்கு வருவோம்.
அவரோட 'நீ' என்கிற ஒற்றை எழுத்து தலைப்பிட்டிருந்த நாவலே---
பொட்டென்று மணிக்கட்டில் விழுந்தது ஒரு மழைத்துளி - என்று தான் ஆரம்பிக்கும்.
மிஞ்சி மிஞ்சிப் போனா எனக்கு அப்போ 14 வயது தான் இருக்கும். ஏறக்குறைய எங்கள் ஜமாவே இந்த வயசொத்தவங்க தான். ரகுக்கும் எனக்கும் பத்திரிகை வாத்தியார் எஸ்.ஏ.பி. அவர்கள் தான். எப்படிலாம் எழுதணும்ங்கறதைக் கத்துக் கொடுத்த மானசீக குரு. ஏகலைவர்களாக கற்றோம். அவர் தொடர்கதை எழுதறார்ன்னா எங்களுக்கு பாட வகுப்பு ஆரம்பித்த மாதிரி தான்.
போதாக்குறைக்கு எங்க சர்குலேஷன் லைப்ரரிலே குமுதம் ரிலீஸாகும் நாளன்னைக்கே நாலைந்து வீடுகளில் 'என்ன, குமுதம் கொண்டு வர்லையா'ன்னு கேப்பாங்க.. அதனாலே வாரா வாராம் குறைந்தபட்சம் மூணு குமுதமாவது வாங்குவோம். ஆ.வி. ரெண்டு வாங்குவதே சர்க்குலேஷனில் எந்தக் குழறுபடியும் ஏற்பட்டு விடாமல் சமாளிக்கப் போதுமனதாக இருக்கும்.
குமுதம் வந்த அன்னிக்கே கடை வாசல்லேயே நின்னு விடுவிடுவென்று மேலோட்டமா ஒரு பார்வை பார்த்தாத் தான் மனசுக்குத் திருப்தி. அப்பவே அந்த இதழ்லே என்னன்ன இருக்குன்னு மனசுக்கு மனப்பாடம் ஆவிடும் . குமுதம்ன்னா அப்படியொரு கிரேஸ்.
அதனாலோ என்னவோ எங்கள் கையெழுத்துப் பிரதியும் கிட்டத்தட்ட
குமுதம் சாயலிலேயே உருவானது. 'புரட்சி' என்ற பத்திரிகையின் பெயரைக் கூட முகப்பு அட்டையில் அச்சு அசலாக 'குமுதம்' மாதிரியே எழுதி சந்தோஷப்பட்டோம்.
(வளரும்)
14 comments:
சுவாரஸ்யமான ஆரம்பம். குமுதம் ரசிகர்கள் நிறையபேர் உண்டு. யார் யாரை எவ்வெப்போது உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்பதும் அப்போதைய குமுதம் நிறுவனத்துக்கு அத்துபடி.
இப்போதெல்லாம் பத்திரிகைகள் சுவாரஸ்யமிழந்து விட்டனவா, நம் அலைபேசி குறுந்தகவல்கள் மற்றும் இணையம் காரணமாக மதிப்பிழந்து விட்டனவா.... இரண்டும்தான்!
ரகு என்கிற பெயரைக் கேட்டாலே எனக்கு அப்பாதுரை நினைவுக்கு வந்து விடுவார்!
//'யார் யாரை எவ்வெப்போது உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்பதும்..//
அந்த யார் யாரைக்கு
எந்தந்த எழுத்தாளரை
எவ்வெப்போது' என்று பொருள் கொள்கிறேன் ஸ்ரீராம்.
வார மாத இதழ்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் செக்ஷனே அலாதியானது. அவர்கள் விரும்புகிற மாதிரியான விதத்தில் (நடையில்) கதை சொல்லத் தெரியாத தற்கால எழுத்தாளர்கள் தாம் என்பது என் எண்ணம்.
அபுரி. அப்பாத்துரை அவர்களுக்கும் ரகு என்ற பெயருக்கும் என்ன சம்பந்தம் தெரியலையே!
பை த பை இந்தத் தொடரில் வரும் ரகுவும் விட்டுக் கொடுக்காமல் புதுவையிலிருந்து என் சதாபிஷேக விழாவிற்கு வந்திருந்தார். அவரை உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்திருக்க வேண்டும். ஸாரி.. சாஸ்திரிகள் மேடையிலிருந்து இறங்க விட்டால் தானே?..
என் வரவு தாமதித்து விட்டது. நினைவில் நிற்பவை தனி சுவாரசியமான அனுபவன்ங்கள். அதனால்தான் அவை அழியாத கோலங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.
அரசு குடியிருப்பில் அஸோசியேஷன் ஒன்று உருவாக்கி பத்திரிக்கைகளை பொதுவில் வாங்கி எல்லோரும் படிக்கும் வசதிக்காக ஒரு லைப்ரரி போல் வைத்திருந்தோம். ஆனால் பத்திரிக்கைகளை எடுப்பவர்கள்` திரும்ப` கொண்டு வந்து வைப்பதில்லை. இது போன்ற காரணங்களால் அந்த லைப்ரரி மூடப்பட்டது.
தொடர் துவக்கம் நன்று. ஆனாலும் குமுதம் அன்று பிராமணர் அல்லாதோருக்கு , ஆனந்த விகடன் பிராமணருக்கு, கல்கி சரித்திர நாவலுக்கு என்று பல அபிப்பிராயங்கள் நிலவில் இருந்தன.
@ ஜெகேஸி
பிராமணர் அல்லாதோர் -- இது எனக்குப் புது சேதி.
நாங்கள் நடமாடும் லைப்ரரி நடத்திய
அன்றைய நாட்களில்
நிறைய மாமிகள் தாம் குமுதத்திற்காக ஆலாய் பறப்பார்கள்.
'ஆத்துக்கு' போன்ற வரவழைத்துக்கொண்ட பிராமண பதப் பிரயோகங்கள் காண்பது அரிது என்பதால் அப்படி நினைத்துக் கொண்டார்கள் போலிருக்கு,
ஆசிரியர் குழுவிலேயே இரண்டு பிராமணர்கள்,
வெளியீட்டார் பார்த்தசாரதி, நிறைய பிராமண எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை எழுதிய பத்திரிகை தான். ஜ.ரா.சு-வின்.அப்புசாமி -- சீதாபாட்டி டிபிகல் பிராமண பாத்திரங்கள் என்றாலும் ஜராசு அவர்கள் அப்புசாமியை வேறே மாதிரி படைத்திருந்தார்..
ஜராசு அவர்களை நான் முதன் முதலாக சந்தித்த காட்சியை இந்தப் பகுதியில் எழுத நல்லவேளை ஞாபகப்படுத்தினீர்கள்.
நன்றி.
உங்கள் புரட்சி இதழின் படமாவது கிடைக்குமா?
இல்லையே ஸார். ஒரே ஒரு காப்பி தான். அதற்கு உரிமை கொண்டாடக்கூடிய பங்களிப்பார்கள் ஐந்தாறு பேர்கள். எவ்வளவு வருஷமாச்சு? யார் கையில் போய்ச் சேர்ந்ததோ தெரியவில்லை. ஒற்றைப் பற்றிய நினைவுகளுக்கு மட்டும் அழிவேயில்லை போலிருக்கு.
தங்களை இங்குப் பார்த்த்தில் ரொம்ப சந்தோஷம் ஸார்.
ஸ்வாரஸ்யமான ஆரம்பம். புரட்டி - கையெழுத்துப் பத்திரிகை அனுபவங்கள் சொன்னது நன்று.
எங்கள் வீட்டில் அப்பா அவரது அலுவலகத்தில் இருந்த பத்திரிக்கை க்ளப் உறுப்பினர் என்பதால் பல வார, மாத பத்திரிகைகள் வரும் - குமுதம் உட்பட. அப்படி படித்தது தான். வீட்டில் காசு கொடுத்து வாங்கியதெல்லாம் இல்லை. தில்லி வந்த பிறகு சில மாதங்கள் இப்படி பத்திரிகைகள் வாங்கி படித்ததுண்டு. பிறகு அலுவலக நூலகத்தில் எப்போதாவது கிடைக்கும் தமிழ் வார இதழ்கள் படிப்பதோடு சரி. இப்போது மொத்தமாக விட்டுப்போனது இந்த வழக்கம்.
தொடர்ந்து உங்கள் அனுபவங்களை படிக்க காத்திருக்கிறேன்.
முன்பும் குமுகம் பற்றி நீங்கள் ஆங்காங்கே சொல்லியிருந்த விஷயங்களில் சில முக்கியமாக உங்கள் நெருங்கிய நண்பர் ரகு நினைவில் இருக்கிறார். கூடவே சைக்கிளில் சென்று இதழ்கள் என்று...
சுவாரசியமான விஷயங்கள்.
எங்கள் வீட்டில் எந்தப் பத்திரிகைக்கும் மிகப் பெரிய தடா. நான் அவர்களுக்குத் தெரியாமல் ஒரு சில வாசித்ததுண்டு கண்ணில் பட்டு அதற்கு அடி வாங்கிய நினைவுகளும் அடி என்றால் சும்மா ரெண்டு நாலு இல்லை மொத்து எனலாம்.
கீதா
நல்ல வேளை எங்கள் குடும்பமே இடது கையில் புத்தகம் வலது கை தட்டில் சாப்பாட்டில் என்று வளர்ந்தவர்கள். வீடு முழுக்க புத்தகங்கள்.
கையெழுத்துப் பிரதி பைத்தியம் யாரைத்தான் விட்டது ?!
ரிஷபன் என்று போட விட்டுவிட்டேன் !
Post a Comment