மின் நூல்

Tuesday, March 1, 2016

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் 'நான் போய்ச்சேரக் காத்திருக்கிறேன்' என்று கூறுகிறார்கள்.  'what do you know ahout that.. place/living.. Do you expect to meet/see those who predeceased you... what else do you know ahout post-mortam status.. As you  are a man of deep thoughts,  I am sure what you share on this subject will make for interesting read...


---- இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று வயதான என்னைக் கேட்டு வயதான ஒருவரிடமிருந்து ஒரு மெயில் வந்திருந்தது.

அவருக்கு என் நமஸ்காரங்கள்.    

இரண்டு பேருக்கும் வயதாகி  விட்டது என்பது தான் மேலோட்டமாகப் பார்க்க்கும் பொழுது இந்த கேள்வி-பதிலுக்கான  காரணமாக பலருக்குத் தெரியலாம்.


அவர் ஒரு பதிலை எதிர்பார்த்து இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டதற்கும் அவர் கேட்டதை உள்வாங்கிக் கொண்டு நான் அவருக்கு  பதில் சொல்வதற்கும் எங்களுக்கு ஆகியிருக்கும் வயது ஒன்றே காரணம் என்று சுலபமாகப் புரிந்து கொண்டேன்.

தங்கி இருக்கும் இடத்தில் நமது அனுபவத்தில் பலவகைகளில் 'ஞானம்' பெறுகிறோம் நாம்;  பல ஆண்டு காலம் தங்கியிருப்பவர் என்கிற சீனியாரிட்டி அடிப்படையில், அந்த  சீனியாரிட்டி தரும் பரிசான மூப்பின் அடிப்படையிலும் இந்த ஞானம் வரலாம். 

இதில் வேடிக்கை என்னவென்றால் போய்ச் சேர வேண்டிய  இடத்திற்கு  இங்கு தங்கியிருக்கும் எல்லோருமே காத்திருக்கும் பட்டியலில் இருப்பவர்கள் தாம்.  இங்கு வந்து ரொம்ப  நாளாச்சு என்பதால் முன் வரிசையோ அல்லது முன் வரிசைக்கு அடுத்த பின் வரிசையிலோ  இருக்கிறோம்.   அவ்வளவு தான்.

வரிசைகள் ஒன்றும் நிச்சியமானதும் அல்ல. அவை மீறப்படுவதும் உண்டு.  புதிரான விஷயங்களிலும் நம்மால் தீர்மானிக்க முடியாத விஷயங்களிலும் நாமாக எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாதல்லவா?.. அதற்காகச் சொன்னேன்.

இந்த மாதிரி அசாதரணமான கேள்விகளை ஆன்ம விசாரம்  என்று சொல்வார்கள்.   'ஆயிரம் கவலைகள்  நமக்கு இருக்க, பெரிசுகளுக்கு  வேறு வேலை இல்லை' என்று பல இளசுகளாலும் இளக்காரமாக நினைக்கக் கூடிய சமாச்சாரம் தான் இந்த ஆன்ம விசாரம் என்பதுவும்.

'போய்ச் சேரக் காத்திருக்கிறேன்'  என்ற வார்த்தையிலிருந்தே போய்த்தான் ஆக வேண்டும் என்றும், நாம் நினைத்த வாக்கில் அந்த இடத்திற்கு போய்ச் சேர முடியாதென்றும் அதற்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.

போய்ச் சேர்வதற்கு  முன்னால் இத்தனை காலம் இங்கு தங்கியிருந்ததின் அனுபவமாய் பெற்ற அறிவில் சிலர் இன்ன இடத்திற்குத் தான் போய்ச் சேர வேண்டும் என்று அந்த இடத்தை ஒரு அனுமானம் கொண்டு   யூகித்திருப்பார்கள்  போலிருக்கு.   

எந்த இடத்திலிருந்து வந்தோமோ அந்த இடத்திற்கு வந்த வேலை முடிந்ததும் போய்ச் சேர வேண்டியது தானே என்று லாஜிக்காக யோசிக்கவும் செய்யலாம்.

ஆக தங்க வந்திருக்கும் இடம்   நிலையான இருப்பிடம் இல்லை, அதற்கான நேரம் வந்ததும் எங்கிருந்து வந்தோமோ அந்த  இடத்திற்குப்  போய்ச் சேர வேண்டியது  தான்  என்று எல்லோருக்குமே தீர்மானமாகத் தெரிந்திருக்கிறது.

அங்கிருந்து இங்கு வந்திருப்பதால் அந்த இடமும் சாசுவதமானதில்லை என்றும் தெரிந்திருக்கிறது; அங்கிருந்து இங்கு வர வேண்டும்;  வந்து தங்கி பிறகு அங்கு போக வேண்டும்; மீண்டும் இங்கு வர வேண்டும்;  வந்து போக வேண்டும் என்று  இரண்டு ஊர்களுக்கு இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் போய்க் கொண்டிருக்கிற பஸ் மாதிரி பொழைப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சொல்லியது யார் என்றால், யார் சொன்னது என்பது முக்கியமில்லை, வருவதும், போவதும் தெரிகிறதல்லவா,  அந்தத்  தெரிதலிருந்து பெறப்படுகிற  ஞானம் இது என்று முகத்திலறைந்த மாதிரி நமக்கே பதில்  கிடைக்கிறது. 

எப்போ போகணும்?  என்பது தான் நாம் தீர்மானிக்க முடியாத விஷயமாக (விடயம் இல்லை!) இருக்கிறது.

இங்கு சில காலம் தங்குவதற்காக எங்கிருந்து வந்தோமோ அந்த  இடமும் இங்கு வந்த நிலையில் மறந்து விடுகிறது.  போய்ச் சேரும் நிலையிலும் தெளிவாகத் தெரியாமல் இருக்கிறது.

ஏன் மறந்து விட்டது என்றால் நாமாக வரவில்லை; நாமாகப் போகவும் இல்லை..  அதனால் தான் 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ, கண்ணா!'  என்று நாம் நினைத்துச் செய்யாத காரியம் நம் நினைப்பில் இல்லாது போய்விடுகிறது.

இது தான் பிறப்பில் நேர்ந்திருக்கும் விநோத வியப்பு; வியப்புக்குக் காரணம், இதைத் தீர்மானிக்கிற சக்தி நம் கையில் இல்லாதது தான்.

--- இது தான்  do you know about that.... place/living  என்பதைத் தீர்மானமாகச் சொல்ல முடியாததற்கான காரணமாக இருக்க முடியும்.


(தொடரும்)




20 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிறப்போ இறப்போ நம் விருப்பப்படி நிகழ்வது இல்லை.

இந்த நாளில், இந்த நாட்டில், இந்த ஊரில், இத்தனாம் தேதி, இத்தனை மணிக்கு, இந்த தாய் தந்தையருக்குப் பிறப்போம் என்பது நாமே நினைத்துப்பார்க்கவோ திட்டமிடவோ முடியாதது.

அதேபோல நாம் இந்த உலகைவிட்டு இறுதி யாத்திரை செல்வதும், எந்த வயதில், எந்த இடத்தில், எந்தத்தேதியில், எந்த முறையில், யார் முன்னிலையில், எப்படி நிகழப்போகிறது என்பதும் மிகவும் மர்மமாகவே உள்ளது.

முதலில் வருபவர் சீனியாரிட்டிபடி முதலில் செல்வது இல்லை என்பதும் இதில் உள்ள மிகப்பெரிய சுவாரஸ்யமாகவே உள்ளது.

உடலில் உயிர் என்ற ஒன்று இருக்கும் வரைத்தான் இயக்கம் உள்ளது. மனிதன் என்று சொல்லப்படுகிறது; கொஞ்சமேனும் பிறரால், சிலரால், மதிக்கப்படுகிறது.

அதன் பிறகு அது தனது மரியாதையை இழந்து Body என அழைக்கப்படுகிறது. Body ஐ எப்போது எடுக்கப்போகிறார்கள் என்ற கேள்வி உடனடியாக எழுந்து விடுகிறது.

Body யான பிறகு கண்ணிருந்தும், எரியும் அருகில் உள்ள தீபத்தைப் பார்க்க முடியவில்லை.

காதுகள் இருந்தும் பிறர் அழுவதையும், பேசுவதையும் கேட்க முடியவில்லை.

வாய் இருந்தும் வாயில் போடும் வாக்கரிசியை விழுங்க முடியவில்லை.

மூக்கிருந்தும் பக்கத்தில் எரியும் ஊதுபத்தியின் வாசனையை நுகரமுடிவதில்லை.

உடம்பில் ஈ, எறும்பு முதலியன ஊறியும், தீ வைத்துக்கொளுத்தப்பட்டும் உணரவோ தடுக்கவோ முடிவது இல்லை. வெறும் ஜடமாகக் கட்டையாகி விடுகிறது.

எவ்வளவு கோடீஸ்வரராகியும் ஒரு பைசாவையும் தன்னுடன் எடுத்துச்செல்ல முடியவில்லை. இடுப்பு வேஷ்டி, அரணாக்கயிறு உள்பட அனைத்தும் உருவப்பட்டு விடுகிறது.

இந்த நிலையில்லா வாழ்க்கையில் தான் எவ்வளவு கோப தாபங்கள், போட்டிகள், பொறாமைகள், கெட்ட எண்ணங்கள், பாவச்செயல்கள், எப்போதுமே சாஸ்வதமாக வாழப்போவதுபோல சுய நலங்கள் .... நினைக்கவே வேடிக்கையாகத்தான் உள்ளது!

நாம் புறப்பட்டு வந்த இடத்திற்கே திரும்பச்செல்கிறோம் என்பதெல்லாம், நாம் கேள்விப்படும் ஒரு நம்பிக்கை மட்டுமே. இது உண்மை என்று அடித்துச் சொல்லவும் இயலாது.

வாழும் வரை பிறரிடம் அன்பு செலுத்திக்கொண்டு, தான் மறைந்த பின்னும் பிறர் மனதில் நல்ல அபிப்ராயங்களுடன் வாழ்பவனே .... மனிதன் என்பது மட்டுமே புலப்படுகிறது.

ஸ்ரீராம். said...

எங்கு போவோம் என்று நினைகிறோமோ அங்கிருந்துதான் வந்தோமா என்பது தெரியாது. எங்கிருந்து வந்தோம் என்று நினைக்கிறோமோ அங்குதான் போவோம் என்றும் தெரியாது! கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர்! ஆன்ம விசாரம் என்னும் இரண்டு வார்த்தைகளில் முதல் வார்த்தையைத் தவிர்த்து விடலாம்!

வல்லிசிம்ஹன் said...

விடுகதை போல முடிவில்லாத புதிர்.

sury siva said...

போடா என்று போகச் சொன்னவனும்
போனவனை
வாடா என்று வரச் சொன்னவனும்
வந்து நம் கண் முன்னே ஒரு கணம் நிற்பானோ ?

கலி தோன்றியபின் இது வரை
இரண்டு ஆயிரம் கோடி வந்திருக்கின்றனர். சென்றிருக்கின்றனர்.
இன்று அறுநூறு கோடி இவ்வுலகில்.
இன்னும் எத்தனை கோடி வருவரோ ?

இதில் நாமே எத்தனை முறையோ ??

ஒரு கோணத்தில் பார்த்தால்,
பீச்சுக்கும் தாம்பரத்துக்கும் போய் வருகிற
எலக்ரிக் ட்ரைன் மாதிரி இருக்கில்ல...!!!

சுப்பு தாத்தா.

ஜீவி said...


@ Sury Siva

சூரி சார் விளையாடியிருக்கிறீர்கள்!

கவிதையோ superb!

'போடா. வாடா' என்று சொன்னவன், கண் முன்னே ஒரு கணம் நிற்பானோ?' என்பதில் தான் எத்தனை ஏக்கம்!

//ஒரு கோணத்தில் பார்த்தால்,
பீச்சுக்கும் தாம்பரத்துக்கும் போய் வருகிற
எலக்ரிக் ட்ரைன் மாதிரி இருக்கில்ல...!!!//

அருமை! நான் என்னவோ பஸ் அது இத்வென்று மாய்ந்து போயிருக்கிறேனெ!

தாம்பரம் டு பீச்
பீச் டு தாம்பரம்

ஆஹா.. எவ்வளவு எளிமையாகப் புரிகிறது! :))

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

விடுகதைகள் புதிர் போலத் தோன்றினாலும், விடுவித்து விடலாம்.

இதுவோ அதைத் தாண்டி.. போகப் போம புதிரை அவிழ்க்க முடியுமா பார்க்கலாம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

முதல் வரி கரெக்ட்! ஆனால் அதிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்தாயிற்று..

எங்கு கொண்டு போய் விடுகிறதென்று பார்ப்போம். நாலு தடவை போய்த் திரும்பி வந்தால் பழக்கப்பட்டுப் போய் விடுகிறது! என்ன சொல்கிறீர்கள்?..

'தேடல்' விசாரமாகி விட்டதா?

ஜீவி said...

@ வை.கோ.

ஸ்டெப் பை ஸ்டெப்பாக நன்றாக வர்ணித்திருக்கிறீர்கள், சார்!

//நாம் புறப்பட்டு வந்த இடத்திற்கே திரும்பச்செல்கிறோம் என்பதெல்லாம், நாம் கேள்விப்படும் ஒரு நம்பிக்கை மட்டுமே.//

நம்பிக்கைகள் vague ஆக ஏற்படுமா என்ன?..

//வாழும் வரை பிறரிடம் அன்பு செலுத்திக்கொண்டு,//

அன்பைச் செலுத்துதலும், அன்பைப் பெறுதலும் அவ்வளவு ஈஸியான காரியம் இல்லை, சார்! அதனால் தான் சிலராலேயே அது முடிகிறது!

எல்லோராலும் முடிந்தாலும் அதற்கான மதிப்பு இல்லாம கடைச்சரக்காகி விடும்!

Geetha Sambasivam said...

இப்போப் படிக்கும் "ஜீவனின் சரித்திரம்" நினைவில் வந்தது. ஜீவன் பரமனிடம் சேரும் நாள் எப்போது?

ஜீவி said...


@ Geetha Sambasivam

அது தெரியாமல் இருப்பது தான் அதிலிருக்கும் சுவாரஸ்யம்.

G.M Balasubramaniam said...

இதே கேள்விகள் என்னிடமும் கேட்கப்பட்டு அதற்கு என் உரத்த சிந்தனைகளாகப் பதிவும் எழுதி இருக்கிறேன் நீங்கள் இன்னும் பார்க்கவில்லையா

G.M Balasubramaniam said...

இந்தமாதிரிக் கேள்விகளுக்கு இத்தான் பதில் என்று கூற முடியாது எழுத முற்படுபவை எல்லாம் அவரே சொன்னதுபோல் ஸ்பெகுலேஷனாகத்தான் இருக்கும் இவற்றை அலசும் உங்கள் பாணியே அலாதி/ தொடர்கிறேன்

G.M Balasubramaniam said...


@ கீதா சாம்பசிவம்
உங்கள் பின்னூட்டம் படிக்கும் போது எனக்கு என் தந்தைவழி பாட்டி பாடும் பாடல் நினைவுக்கு வருகிறது “ஐயனே உம்முடைய அழகான பாதத்தை அர்சித்திருப்பதும் நான் எப்போ?”

ஜீவி said...

@ ஜிஎம்பீ

பார்த்தேன் சார். படிக்கவும் செய்தேன்.

வந்து பின்னூட்டமும் இடுகிறேன்.

வந்து கருத்தைச் சொன்னமைக்கு நன்றி.

ஜீவி said...

ஜிஎம்பீ -- (2)

//ஸ்பெகுலேஷனாய்த் தான் இருக்கும்..//

அவ்வுலகம் சென்று வந்தேன்
அமுதம் குடித்து வந்தேன்
பொன்னுலகம் போவதற்கு
புது உடல் வாங்கி வந்தேன்
இந்திரனை கண்டு வந்தேன்
இது பற்றிக் கேட்டு வந்தேன்
சந்திரனைக் கண்டு வந்தேன்
சரசம் நிகழ்த்த வந்தேன்

-- என்பது காதலிக்க நேரமில்லை படத்தில் கவியரசர் கண்ணதாசனின் பாடல்.

அவ்வுலகம் என்பது ஸ்பெகுலேஷன் தான். இந்தக் கவிதையில் ஸ்பெகுலேஷனை கவிஞர் எப்படி உடைக்கிறார், பாருங்கள். அவ்வுலகத்தில் இந்திரன், சந்திரன் இவர்களெல்லாம் இருக்கிற மாதிரியம் அவர்களைக் கண்டு வந்ததாகவும் எந்த பிரமையும் இல்லாத ஒரு நிகழ்வாகவே பாடல் வரிகளில் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். நம் புராண இதிகாசங்கள் எல்லாம் இந்தக் காரியத்தைத் தான் செய்திருக்கின்றன.

அதனால் தான் நான் அடிக்கடி சொல்வது: 'எழுதுபவன் எழுதுவதில் தான் எல்லாம் இருக்கிறது. கற்பனையை நம்பச் செய்யவது தான் எழுதுபவனின் வேலை. நம்பச்செய்து விட்டால், ஸ்பெகுலேஷன் என்பது மாயையாய்ப் போகும்.

அது போகட்டும். மேற்கண்ட கவிஞரின் பாடலில் இரண்டு இடங்கள் அற்புதம்.

பொன்னுலகம் போவதற்கு
புது உடல் வாங்கி வந்தேன்...

(இந்த தேகம் பொன்னுலகம் போவதில்லை; அதற்காகவே தனித்தன்மை கொண்ட 'புது உடல்' ஒன்றிருக்கிறது. இந்த உடல் சட்டையை இங்கேயே எரித்தோ புதைத்தோ விடுகிறோம். அந்த புது உடல் என்ன என்று உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறார். அந்த புது உடல் என்ன என்பதை இந்தத் தொடரில் பார்ப்போம்.

சந்திரனைக் கண்டு வந்தேன்
சரசம் நிகழ்த்த வந்தேன்

-- என்ற வரிகள் இந்தப் பாடலுக்கே மகுடம் சூட்டிக்கொண்ட வரிகள். சரஸக்கலைக்கு இலக்கண்கம் கண்டவன் சந்திரன் என்பது புராணம். சரஸம் சந்திரனோடு ஒன்றரக் கலந்த ஒன்று. கவிஞனுக்கு எவ்வளவு சரளமாக இயல்பாக எந்த நெருடலும் இல்லாமல் இதெல்லாம் எப்படி கைக்கு சிக்குகிறது, பாருங்கள்.

அதனால் ஸ்பெகுலேஷனை எழுத்தால் வெல்லலாம் என்பது என் கருத்து. இந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதற்கு மஹாபாரதம் நிகழ் உதாரணமாய் பிர்மாண்டமாய் எழுந்து நிற்கிறது.

G.M Balasubramaniam said...


அவ்வுலகம் என்பது ஸ்பெகுலேஷன் தான் அந்தவரை நீங்கள் உடன் படுவது மகிழ்ச்சி. மற்றவை அந்த ஸ்பெகுலேஷனில் விளைந்த கற்பனைகள் அவை ஸ்பெகுலேஷனை எந்த விதத்திலும் உடைக்கவில்லை அதுவே கற்பன்சைக்கு வித்தாகி விட்டதுகண்ணதாசன் வார்த்தை வித்தகர் புராணக் கதைகளையும் தன் கற்பனையில் புகுத்தும் சாமர்த்தியசாலி ஆனால் எதுவும் உண்மையில்லையே உண்மைஎது என்று தெரியாமல் அவரவர் கற்பனையின் விளைவே ஸ்பெகுலேஷன் எனப் பொருள் படுகிறது மஹாபாரதம் பிரமாதமான கற்பனை என்பதில் எனக்கு உடன்பாடுண்டு

V Mawley said...

மிக அழகாக ச்ருதி கூ ட்டியிருக்கிரீர்கள் .ஆழமான கருத்துக்களுக்கு
. அடித்தளம் அமைத்திருக்கிறீர்கள் 'speculation '-என்ற வாதத்தை
எழுத்தால் வெல்லலாம் என்றும் சுட்டிக்காட்டி யிருக்கிறீர்கள் ..நசிகேதன் போல காத்திருக்கிறேன் advance நன்றி ..
மாலி

V Mawley said...

மிக அழகாக ச்ருதி கூ ட்டியிருக்கிரீர்கள் .ஆழமான கருத்துக்களுக்கு
. அடித்தளம் அமைத்திருக்கிறீர்கள் 'speculation '-என்ற வாதத்தை
எழுத்தால் வெல்லலாம் என்றும் சுட்டிக்காட்டி யிருக்கிறீர்கள் ..நசிகேதன் போல காத்திருக்கிறேன் advance நன்றி ..
மாலி

Yaathoramani.blogspot.com said...

நல்ல துவக்கம்
தாமதமாக வந்ததில் கூடுதல் பலன்
மூலத்தை மிஞ்சும் உரையினைப் போல
பதிவினை மிஞ்சும் பின்னூட்டங்கள்
மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

நம் வினை பதிவுகள் கழியும் வரை மரணம் கிடையாது என்கிறார்கள். இதில் சின்னவர், பெரியவர் முத்லில் வந்தவர் முதலில், பின்னால் வந்தவர் பின்னால் எல்லாம் கிடையாது.வினை பதிவுகள் பிற்வி பிறவியாய் கழித்து வந்தது இப்பிறவியில் கொஞ்சம் தான் என்றால் சிறுவயதிலேயே இறப்பு. பெரியவர்கள் அவன் வந்த வேலை முடிந்து விட்டது மண்ணை உதறிவிட்டு போய் விட்டான் என்பார்கள்.

Related Posts with Thumbnails