மின் நூல்

Monday, February 25, 2019

பரணிலிருந்து...

நம்மூர் கட்டிடம் வெறும் கோயில் இல்லை.  குதுப்மினார் மாதிரி தூண் இல்லை.  சிற்பம் பண்ணி வைக்கிற ஆர்ட் காலரி இல்லே. (ஜிஎம்பீ சார் கவனிக்கவும்).  மதம் பரப்பற இடம் இல்லே.  இது தத்துவம்.

கோபுர தரிசனம் பாவ விமோசனம்ன்னு சொல்லுவாங்க.. ஏன் ஒவ்வொரு  கோபுரமும் ஒரு யாகசாலை.  கீழே தாமரை மாதிரி இருக்கும்.  அது பத்மம்.  மேலே அரை உருளையா ஒரு இடம்.  அது குமுதம். --அதுக்கு மேலே பட்டை கல்லா இருக்கறது கண்டம்.  இதுக்கு மேலே வேதிகை.  அது நிக்கற இடம் கட்டிடம்.  யாக குண்டம் மாதிரி கட்டிடம்.     

அதுக்கு மேலே கோபுரம்.  என்ன மாதிரி? நெருப்பு மாதிரி.  தீ.... ஜூவாலை மாதிரி.  மேலே கும்பம்.  ஏன் யாக குண்டம் சிம்பாலிக்கா வைச்சான்?  அக்னியால் வளர்ந்து, அக்னியால் அழிந்து... எல்லா உடம்பும் யாக குண்டம்.   எல்லா உயிரும்  தீச்சுடர்.  தகதகன்னு எரிஞ்சிண்டிருக்கற உயிர்.  பூச்சி, புழு, ஆடு மாடு,  தாவரம் .., எல்லாம்,  ஏன், பூமி கூட  ஒரு யாக குண்டம் தான்.  சகலமும் அக்னி தான்.   அதான் அக்னியே தெய்வம். அக்னியை வழிபடறதாலே, எல்லா உயிரையும் வழிபட,  எல்லா உயிரையும் வணங்கற  தத்துவம் வர்றது.  எனவே அக்னி குண்ட  ரூபமா கோயில் கட்டியிருக்கிறான். சகலரையும், சகல் நேரமும்  தன்னை உட்பட வணங்கற தத்துவம் இது.  இதான் கோயில்.

=======================================================

பெரிய பெரிய  மன்னர்களும், முரட்டு தளபதிகளும், செல்வக் கோமான்களும்  காணாமல் போக, தமிழ்ச் சரித்திரம் 'யாயும்  ஞாயும் யாரா கியரோ' என்று  ஒரே ஒரு கவிதை
எழுதியவனை குறுந்தொகையோடு நினைவுக்குள் வைத்திருக்கிறது.   எல்லோர் வாழ்க்கையும் சரித்திரம் தான். சாதித்தவனுக்கு மட்டுமே சரித்திரம் என்பது முட்டாள்தனம்.

========================================================

விஷயம் நல்லதோ, கெட்டதோ ஒரு அலசல் செய்யத்
தோன்றுகிறது.  ரீ கலெக்ஷன் ஆஃப் தாட்ஸ், மனுஷனுடைய பெரிய சொத்து.   நடந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து யோசனை பண்ணத் தன்னைப் பக்குவப்படுத்திக்கறது மனுஷனுக்கு  மட்டுமே உண்டு.  மிருகம் மாதிரி சட்டென்று கோபமோ தாமமோ வந்துடறதில்லே.  வாலை மிதிச்சவுடனே பாஞ்சுடறதில்லே.  கோபப்பட்டா என்னாகும்னு நம்மாலே யோசிக்க முடியும்.  தொடர்ந்து யோசிக்கறவன் ஞானி.   முடியாதவன் மிருகம்.  யோசனை பண்ணினதின் விளைவு, ஏன் என்ற கேள்வி கேட்டதின்  பதில், இன்றைய வாழ்க்கை வளர்ச்சி.  அண்ணிலேந்து இன்னி வரைக்கும் மிருகத்திற்கு பசி தான் பிரச்னை.  நமக்கு ஆயிரம்.  வளர்ச்சின்னா இடைஞ்சல் உண்டு.  இடைஞ்சலைத் தாண்டறது தான் வளர்ச்சி.       
                                         
நாய்க்குட்டியை நிலைக்கண்ணாடிக்கு முன்னாடி வச்சா என்ன பண்ணும்?  நக்கிப் பாத்துட்டு திங்க முடியலேன்னு போயிடும்.  மனுஷன்னா அடடா, நான் இவ்வளவு அழகான்னு யோசிப்பான்.  தன் இருப்பும் தெரிந்து எதிர்ப்பக்கம் போய் தன்னையே பாத்துக்கற சுபாவம் வர்றது. நாய்க்குட்டிக்கு இருப்பு மட்டும் தான் முக்கியம்.  மனுஷனுக்கு இருப்பும் தொலைவும் உண்டு.  தொலைவுப் பார்வை இருக்கறதாலே வீடும், அரிசி சேம்ப்பும் அல்லது ஏதாவது
ஒண்ணு வந்துடறது. படருவதால், வளர்வதால் வரும் பிரச்னை.  படர்ந்த இடம் மரமோ, முள்ளுச் செடியோ, மலையோ, தரையோ அந்தந்த சூழ்நிலை, பிரச்னை  மனுஷனைச் சூழ்ந்திடறது.

=======================================================

மனிதனுக்கு சந்தோஷம் என்பது என்ன?

தன்னைப் பிறரிடம் உயர்த்திக் காட்டிக் கொள்ளுதலா?  எதையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதலா?  எதையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதலே சந்தோஷம்.   அந்தப்
பகிர்தலின் பொருட்டே உறவும்,  உறவுக்கான சந்தோஷமும்.

பகிர்ந்து கொள்ள மறுப்பவன் பயமுள்ளவன்.

'தனிமை கண்டதுண்டு;  அதிலே சாரமிருக்குதம்மா' என்கிற த்வனியிலேயே  ரகசியம் பரிமாறும் உணர்வு இருக்கிறது.

=======================================================

சகல உயிர்களுக்கும் உணர்வு ஒன்றே.  வலி பொது.  காமம் பொது.  உயிர் வாழும் விழைவு பொது.  மரணம் பொது.

மாறுதல்களை மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  எந்த மாறுதலும் இவனை அழிக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அத்தனை மாறுதலிலும் புகுந்து மீளும் திடம்
இவனுள் உண்டு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

புயல் வருகிற பொழுது புயலோடு வாழுங்கள்.  புயலற்ற பொழுது அமைதியை அனுபவியுங்கள்.  புயலோடு உண்டான போராட்டமே வாழ்க்கை என்றோ,  அமைதியே உலகமென்றோ கனவு  காணாதீர்கள்.  அமைதியான நேரத்தில் புயல் கவலையும், புயல் நேரத்தில் அமைதி பற்றிய கனவும் உங்களைச் சிக்கலாக்கி விடுகிறது.

=========================================================

புதுபுது அனுபவம் முக்கியம்  உலகில் எந்த இயக்கமும், எந்த பாலிஸியும், எந்த தத்துவமும் முடிவான முடிவல்ல.   வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருப்பது.  வளர்ந்து கொண்டே இருப்பது.  எப்போதும் வளர முடியும்.

வளர்ச்சி எது?  மாறுதலே வளர்ச்சி.  மாறாதது வளராது.

எது மாறும்?  உயிருள்ளது அனைத்தும் மாறும்.  உயிர்ப்புள்ளது அனைத்தும் மாறும்.   மாற மாட்டாதவன் கல்மரம். டெட் வுட்.

======================================================
"ஒரு பத்திரிகை நிருபருக்கு அன்னியமானது எதுவுமில்லை. அவன் தொடாத விஷயம் எதுவுமில்லை.  மனிதன் சம்பந்தப்பட்ட எல்லா விஷ்யமும் பத்திரிகை சம்பந்தப்பட்டது.  மக்களைப் போய்ப்பார்.   நாலு வர்ண ஆட்களோடும் பேசு"

"நாலு வர்ணமா?... பிராமண, ராஜ,  வைசிய..."

"இல்லை.. இல்லை.. இது வேறு.  உண்மையில் இதில் ஐந்து வர்ணம்.  புவர் கிளாஸ்,  லோயர் மிடில் கிளாஸ், மிடில் கிளாஸ்,  ரிச்,  வெரி ரிச்..  ஜாதி அழியாது, கல்யாணி.. ஏதோ ஒரு விதத்தில் அது மனிதரிடையே இருக்கும்..  இன்னொண்ணு.  இனாமா எதுவும் கிடைக்காது, கல்யாணி.. கிடைத்தால் ஏற்பதும் இழிவு.  உலக இயக்கம் முழுவதும் பண்டமாற்றல் நடைபெறுவது சாதாரண பார்வைக்கே புரியும்.."

========================================================

இதுவும் கூடல் தான் தமிழ் மகளே.. என்னோடு நீ நடத்துகிற பெண்ணுரிமை விவாதங்களும், சமூக நலச் சண்டையும் கூடல் தான்.  பார்த்துப் பார்த்துச் செய்கிற உதவிகள் கூட சுகம் தான்.  ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள இந்த பரஸ்பர ஈர்ப்பு இனி கடவுளாலும் நிறுத்த முடியாது.  கூடலில் உள்ள சுகத்தை உலகம் ஒருபோதும் மறக்காது.  துறவு பொய், கல்யாணி..   வன்முறை அது.

பழகு.. கலந்து பழகு.. மனசுக்குப் பிடித்தவனோடு வெளியே போ.. கை கோர்த்து நட.. காதல் செய்.  உருகு.  கவிதை படி. கண் இறங்கி கனவு காண்... காமம் பழகு.. இயல்பாய் இரு. இயற்கைக்குத் தலைவணங்கு.

=========================================================

"இரண்டு கை தட்டினா சத்தம்.  கை தட்டறது எதுக்கு?  எல்லார் கவனமும் என்னைப் பாருன்னு கூப்பிடறதுக்கு.  பார்த்தவன்  யாரு உதவப் போறான்?  கூச்சல் புண்ணியமே இல்லை, ஈஸ்வரி.."

"கோபத்தை எப்படிக் காட்டறது?"           

"ஏன் கோவம்?  நீ நினைச்ச மாதிரி நடக்கலைன்னு தானே..
இன்னிக்கு மழை பெய்யணும்ன்னு நினைச்சா நடக்குமா?  இன்னிக்கு காத்து கூட வேணும்னா வருமா?.. இல்லை.. நாம் நினைக்கிற மாதிரி நடக்கறதில்லே.. அதுவா ஏதேதோ நடக்குது.. சில சமயம் நடக்கற போது, நினைச்சிக்கறோம்.  ஆகா, நினைச்சது நடந்திருச்சின்னு குதிக்கறோம்.  இரண்டு தடவை குதிச்சிட்டு   மூணாவது தடவை நினைச்சிக்கறோம்.   நடக்கலைனா, கத்தறோம்.   இது நடைமுறை.. தத்துவமல்ல.

=================================================

 
                                                           ------   பாலகுமாரன்


19 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

பரணிலிருந்து எடுத்தாலும் தூசு தும்பு இல்லாமல் எடுத்திருக்கிறீர்கள்! அதென்னவோ 'யாயும் ஞாயும் யாரா கியரோ' குறுந்தொகையை விட நா பார்த்தசாரதியின் பொன்விலங்கு நாவலில் பாரதியும் சத்தியமூர்த்தியும் இந்தப்பாடலைக் குறித்து உரையாடுகிற அத்தியாயம் தான் அப்படியே நினைவுக்கு வருகிறது!

அதென்ன கண்ணதாசனின் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாட்டோடு ஒரு முத்தாய்ப்பு?

G.M Balasubramaniam said...

என் பதிவு உங்கள் சிந்தனைகளை எங்கெல்லாமோ இழுத்துச் சென்றதாகத் தெரிகிறது

G.M Balasubramaniam said...

பரணில்ருந்து ஒரு ருமையான ஆக்கம் எனக்கு என்னவோ என்பதிவின் தாக்கமுங்களை எழுத வைத்ததுபோல் இருக்கிறது அல்லது என்னை நினைத்து எழுதினதுஒபோல் தோன்றியது பின்னூட்டமாக நான்முன்பு எழுதிய பதிவின் சூடியைத்தருகிறேன் இதோ /https://gmbat1649.blogspot.com/2012/04/blog-post_06.html

நெல்லைத்தமிழன் said...

//அதிலே சாரமிருக்குதம்மா' என்கிற த்வனியிலேயே // - இதுக்கு அப்படி அர்த்தமில்லை என்று தோன்றுது. இதை நான் வள்ளலாரின், 'தனித்திரு பசித்திரு விழித்திரு' என்பதோடு சேர்த்து பொருள் கொள்கிறேன். நாம் யார் என்ற் கேள்வியோ அல்லது நாம் செய்யும் செயல்களை திரும்ப எண்ணி அசைபோட்டுத் திருத்திக்கொள்வதோ தனிமையா இருந்தால்தான் சாத்தியம். அதைத்தான் பாரதியார் கருத்தில்கொண்டு சொல்லியிருக்கணும்.

நெல்லைத்தமிழன் said...

//காமம் பொது. // - இதில் எனக்கு கருத்து வித்யாசம் உள்ளது. மனிதனைத் தவிர சகல உயிர்களுக்கும் அது சந்ததியைப் பெருக்கவேண்டும் என்ற இயற்கையின் தூண்டுதல் மட்டும்தான். அதனால் அது அந்த அந்தக் காலங்களில் மட்டும் அதனிடத்தில் நிகழ்கின்றன.

வெங்கட் நாகராஜ் said...

பரணிலிருந்து தந்த சிந்தனைகள்.... சிறப்பு.

கோபுரம் என்று சாதாரணமாக சொல்லி விடுகிறார்கள் பலரும். அதற்குள் எத்தனை எத்தனை விஷயங்கள்.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

பின்னூட்டங்களுக்கு நன்றி.

இந்தப் பகுதியில் இருக்கும் கருத்துக்கள் அத்தனையும் ஒரு பிரபல தழிழ் எழுத்தாளருக்குச் சொந்தம். அவர் யார் என்று சொல்லியிருந்தால் பின்னூட்டங்கள் அவரைப் பற்றியதாகி அவர் கருத்துக்கள் இரண்டாம்பட்சமாகி விடும் என்பதால் அவரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவர் கருத்துக்கள் பற்றி வாசகர்கள் கருத்து என்ன என்று அறிந்து கொள்ளவே புதுமையான இந்த முயற்சி.

அந்த எழுத்தாளர் உச்சத்திலிருந்த பொழுது அவரிடமிருந்து வெளிப்பட்ட கருத்துக்கள் இவை. நிறைய இளைஞ்ர்களைக் கவர்ந்தவர் அவர். அவரின் புத்தகங்களை பொது இடங்களில் கையில் வைத்திருப்பதையே தேர்ந்த வாசகர்களுக்கு அடையாளமாக பெருமையாகக் கருதிய காலம் அது. பெண் வாசகர்களை மிக அதிகமாகக் கொண்ட அந்த எழுத்தாளர் யார் என்று யூகியுங்கள்.

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி

நா.பா. தீபம் பத்திரிகையை ஆரம்பிப்பதற்கு முன்பேயே தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டிருந்தேன். கல்கி கால நா.பா., தினமணிக் கதிர் கால நா.பா., காமராஜர் கால நா.பா. எல்லாக் காலத்தும் அவருடன் தொடர்பு இருந்தது.

//அதென்ன கண்ணதாசனின் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாட்டோடு ஒரு முத்தாய்ப்பு?//

விசேஷமான காரணம் எதுவும் இல்லை. நினைப்பல்தையும், நடப்பதையும் இணைக்கிற மாதிரி நிஜமான ஒரு கருத்து தேவைப்பட்டது. சூதுவாது இல்லாமல் மனத்தில் படுவதை அப்படியே சொல்லும் கவியரசரின் வரிகளை உபயோகித்துக் கொண்டேன். அவ்வளவு தான்.


ஜீவி said...

@ ஜிஎம்பீ

மன்னிக்கவம்.. இவையெல்லாம் என்னுடைய கருத்துக்கள் இல்லை. ஒரு பிரபல தமிழ் எழுத்தாளரின் சிந்தனைகள். அவரது கதைகளில் வரிகள் சில.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

அந்த எழுத்தாளரின் கருத்து, அந்த வரிக்கான அர்த்தத்திற்குள் போகவில்லை.

'அதில் சாரமிருக்குதம்மா' என்றவுடனேயே தனிமையில் தான் அனுபவித்த அந்த சுகத்தை இன்னொருவரிடம் பரிமாறிக் கொள்கிற தன்மை 'இருக்குதம்மா' என்ற வார்த்தைக்கு
வந்துவிடுகிறதில்லையா?.. அதைத் தான் அவர் சொல்லியிருக்கிறார், நெல்லை.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (2)

காமம் என்பது ஒரு தினவு. மூளையில் சேமிக்கப்படும் சில ஊட்டச் சத்துக்களின் ஆர்ப்பாட்டத்தின் விளைவு. சேமிப்பு அதிகப்படும் பொழுது ததும்பி வழியும் நிலையில் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நியதி காம உணர்வால் செயல்படுத்தப்படுகிறது. அவ்வளவு தான். கண் பார்வைக்கும் தொடு உணர்வுகளுக்கும் அந்த வெளிப்படுத்துதலை நிகழ்த்துகிற ஆற்றல் உண்டு. உடற்கூறு சாத்திரப்படி பார்த்தால் இப்படி.

மனிதனில் நிகழ்வதும் இதே. மலரின் மதுவை உறிஞ்சும் வண்டிற்கும் ஒரு சொக்கலை இறைவன் படைத்து பூவின் மகரந்தங்களைப் பரப்பி மலர்க்கூட்டத்தின் சூலுக்கும் வழி செய்திருக்கிறான்.

வயிறு பசித்தால் சாப்பிடுதல் போல, காமமும் ஒரு இயல்பான நியதி. அது நிகழ்வதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை என்று நினைக்கிறேன்.

அதற்கு ஒரு நோக்கத்தை ஏற்படுத்தியது நியாய, தர்ம, வாழ்வாங்கு வாழ வேண்டிய நியதிகளின் அடிப்படையில் என்று கொள்ளலாமோ?.. அப்படித் தான் இருக்க வேண்டும்.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜன்

ஆமாம், வெங்கட்ஜி. ஒவ்வொன்றையும் தீர்மானமாகச் செய்திருக்கிறார்கள். பாடத் திட்டன்வ்கள் மாதிரி எல்லாவற்றிற்கும் வழிமுறைகளும் அதற்கான காரணங்களும் இருக்கின்றன.

ஒவ்வொன்றிற்கும் கல்வி இருக்கிறது. கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய ஞானம் இருக்கிறது. ஸ்தபதிகள் சொல்வதைக் கேட்டால் மலைத்து நிற்கிறோம்.

சிற்ப சாஸ்திரம் போல எத்தனையோ சாஸ்திரங்கள். சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்த திறமையானவர்கள் மதிக்க வேண்டும். ஊக்குவிக்க வேண்டும்.

சினிமா, நடிகர்களோடு இந்நாளைய ரசனைகள் முடிந்து விடுவதோடு மட்டுமல்லாது அதுவே தூக்கலாக இருப்பதும் காலத்தின் கோலம். அதை மீறி லலித கலைகளும் முகிழ்க்கிற மாதிரி காலம் மலர வேண்டும்.

ஜீவி said...

//இந்தப் பகுதியில் இருக்கும் கருத்துக்கள் அத்தனையும் ஒரு பிரபல தழிழ் எழுத்தாளருக்குச் சொந்தம். அவர் யார் என்று சொல்லியிருந்தால் பின்னூட்டங்கள் அவரைப் பற்றியதாகி அவர் கருத்துக்கள் இரண்டாம்பட்சமாகி விடும் என்பதால் அவரைப் பற்றிக் குறிப்பிடவில்லை.//


அந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன்

பாலா என்று செல்லமாக பத்திரிகைகள் வாசிக்கும் அந்நாளைய இளைஞர் வட்டாரத்தில் அழைக்கப்பட்டவர்.

அவர் பெயரை பதிவிலேயே இனிக் குறிப்பிட்டு விடலாம்.

இந்தப் பதிவில் பின்னூட்டங்களிட்டு கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி.

பிலஹரி:) ) அதிரா said...

தலைப்பைப் பார்த்து.. பரண் பற்றிய கதையோ என ஓடி வந்தேன், பின்பு தலைப்புக்கும் போஸ்ட்டுக்கும் சம்பந்தமே இல்லையே என நினைச்சேன்.. முடிவிலதான் தலைப்பின் விளக்கம் புரிஞ்சுது:)).. அருமையான பரண் பொக்கிசங்கள்.

ஜீவி said...

@ அதிரா

//பொக்கிசங்கள்..//

நீங்களும் என்ன, கில்லர்ஜி மாதிரி?

எனக்கு இந்த 'ஷ'-- 'ச' மாற்றங்கள் பார்த்தாலே கில்லர்ஜி, ஞாபகம் வந்து விடுகிறது. :))

வே.நடனசபாபதி said...

பாலகுமாரனின் அனுபவத்தின் /சிந்தனையின் வெளிப்பாடுகளை அருமையாய் தொகுத்து வழங்கியிருப்பதற்கு பாராட்டுகள். இந்தக் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது ‘மாறுதலே வளர்ச்சி’ என்ற கருத்துதான். அதனால் தான் மாற்றம் ஒன்றே மாறாதது என சொல்லப்படுகிறது. இன்னும் பல தகவல்கள் பரணிலிருந்து எடுத்து வழங்குவீர்கள் என நினைக்கிறேன்.

கோமதி அரசு said...

பரணிலிருந்து அருமையான பொக்கிஷங்களை அளித்தமைக்கு நன்றி.
'மாறுதலே வளர்ச்சி" மாறுதலை ஏற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் எல்லாம் நலமே!.

Bhanumathy Venkateswaran said...

முதல் கருத்தை படிக்கும் பொழுதே நம்ம ஆளோட எழுத்து போல இருக்கே என்று நினைத்தேன். இரண்டாவதில் ஊர்ஜிதமாகிவிட்டது. பாலகுமாரன்தான். நான் வரும்வரை விடை
சொல்லாமல் பொறுத்திருக்கலாம்.

Related Posts with Thumbnails