2
39 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசுப் பணி. 1963-ம் ஆண்டு மத்தியில் தொலைபேசி இலாகாவில் , தொலைபேசி இயக்குனராக பாண்டிச்சேரியில்
சேர்ந்து 30-1-2003 அன்று சென்னையில் தலைமை தொலைபேசி கண்பாளிப்பாளராக பணி ஓய்வு பெற்றேன். 58 வயதில் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசின் 60 வயது பணி ஓய்வு உத்திரவினால் மேலும் இரண்டாண்டுகள் 'நீடித்த' அரசுப் பணி. நான் இலாகாவில் பணியில் சேர்ந்த பொழுது 'நம்பர் ப்ளீஸ்' இணைப்பகங்களாக (Mannual Exchanges) இருந்த தன்மை மாறி இப்பொழுது பி.எஸ்.என்.எல். ஆகி செல்போன் கையாளக்கூடிய அளவுக்கு மிகப் பெரிய அசுர மாற்றம்.
பணி ஓய்வு பெற்ற சில நாட்களில் என் மனைவிக்கு ஒரு நாள் என்ன தோன்றியதோ என்னவோ, எனது சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடையூரில் அருள்மிகு ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் உடனாகிய ஸ்ரீஅபிராமி அம்மன் கோயிலில் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு என்னிடம் சொன்னாள். அமெரிக்கா, அட்லாண்டாவில் மென்பொருள் வல்லுனராகப் பணிபுரியும் என் மகனும்
( jeevagv.blogspot.com )இதையே வலியுறுத்தி தானும் விடுப்பில் இந்தியா வருவதாகச் சொன்னான்.
அறுபது வயது நிறைவுறும் என் ஜென்ம நட்சத்திர நன்னா ளில் (11-2-03) சஷ்டியப்த பூர்த்திக்கு நாள் குறித்தாயிற்று. சென்னையில் எங்கள் குடும்பத்தினர் 20 பேருக்கு சென்னையிலிருந்து மயிலாடுதுறை போக வர ரயிலில் பயணச் சீட்டு பதிவு செய்தாயிற்று. வேறு சில உறவினர்களும் நண்பர்களும் நேரடியாகவே திருக்கடையூர் வந்து விடுவதாகச் சொன்னார்கள். நாங்கள் மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து திருக்கடையூருக்கு வேனில் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள்.
திருக்கடையூரிலிருந்து முதல் நாள் காலை காரில் எங்கள் குல தெய்வமான ஒப்பிலியப்பன் கோயிலுக்குச் சென்று இந்தப் பிறவி கொடுத்த பேற்றுக்கு நன்றி சொல்லி வணங்கினோம். மதியம் திருக்கடையூர் திரும்பி விட்டோம். ஒரு நாளில் கிட்டத்தட்ட இருபது சஷ்டியப்த பூர்த்தி விழாக்கள் இங்கு கொண்டாடப்படுவதால் குடும்பம் குடும்பமாகத் தங்கிட, அவர்கள் உணவருந்த, பிற செளகரியங்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாதவாறு அவ்வளவு அருமையாக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.
வானளாவிய கோபுரங்கள். ஊரின் மத்தியில் கிழக்குக் கோபுரம் முனீஸ்வரக் கோபுரம் பக்கத்தில் அமுத புஷ்கரணி, மேற்கு கோபுர வாயிலுள் இடது புறம் நூற்றுக்கால் மண்டபம். அமிர்தகடேஸ்வரர் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அன்னைக்குத் தனி ஆலயம, தென் மேற்கு மூலையில். அன்னை அபிராமி, கிழக்கு நோக்கி ஈசனைப் பார்த்த வண்ணம் பட்டாடை ஜொலிக்க ஆபரண பூஷிதையாய் அருள் பாலிக்கிறாள்.
கொடிமரத்தில் பிள்ளையார். ஆலயத்தின் நுழைவாயிலில் அதிகார நந்தி. இடது புறம் சுப்பிரமணியர். அடுத்து மஹாலஷ்மி. அமிர்த கடேஸ்வரருக்கு தனி சந்நிதி. ஈஸ்வரனின் திருமேனியில் பாசக்கயிற்றின் தழும்பு. யமன், மார்க்கண்டேயர் உயிர் குடிக்கப் போட்ட பாசக்கயிறின் தழும்பு. இன்னொரு பிரகாரத்தில் வில்வனேஸ்வரர், பஞ்ச பூதங்கள். யமன், அறுபத்து மூவர். சப்த மாதர்களும் இங்கேயே.
கள்ளவாரண பிள்ளையார், மஹா மண்டபத்தில். மற்றொரு புறம் யமனை எட்டி உதைத்த கோலத்தில் கால சம்ஹார மூர்த்தி. யமன் தலைகுப்புற விழுந்திருக்கிறார். திருமகள், கலைமகள் புடைசூழ பாலாம்பிகை. என்றும் பதினாறு என்று மார்க்கண்டேயருக்கு ஈஸ்வரன் வரம் கொடுத்த ஸ்தலமாதலால், கோயிலில் எல்லாமே பதினாறு எண்ணிக்கை கொண்டிருக்கின்றன.
முதல் நாள் மாலை ருதர ஏகாதசி. அடுத்த நாள், பொலபொலவென்று பொழுது விடிய நீராடி, புதுமணத்தம்பதிகளைப் போல் புத்தாடை பூண்டு, சுற்றம் சூழ மேளதாளத்துடன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். கோயில் நுழை வாயிலேயே கோயில் யானையுடன் வரவேற்பு. கஜபூஜை, கோபூஜை முடித்து, அம்மன் சந்நிதி பிராகாரத்திற்கு அழைத்துச் சென்று மிருத்யுஞ்சய ஹோமம் முதலான ஹோமங்கள் செய்வித்து கோயில் பிராகாரத்திலேயே அதற்காக நிர்ணயிக்கப் பட்ட இடத்தில் தம்பதிகளுக்கு ஹோமஜல ஸ்நானம் செய்வித்து, மிகச் சிறப்பாக பூரண திருப்தியுடன் எங்கள் சஷ்டியப்தப் பூர்த்தி விழாவை நடத்தி வைத்தனர்.
(படத்தில் மகள் கவிதா, மனைவி கீதா, நான், மகன் ஜீவா)
-- ஜீவி
குமுதம் பத்திரிகையின் தொடர்பு கொண்ட இதழாக 'ஜங்ஷன்' வெளிவந்து கொண்டிருந்தது.. அந்தப் பத்திரிகைக்கு விகடன் புகழ் திரு. ராவ் அவர்கள் ஆசிரியராக இருந்த காலத்தில் எனது சஷ்டியப்த பூர்த்தி நிகழ்வு பற்றி வெளியிட்டிருந்தார்கள்.
13 comments:
BSNL மீது மனிதருக்கு இத்தனை காதலா என்று உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்து வியந்ததுண்டு ஜீவி சார்! 39 வருட பந்தம் என்பது இப்போது புரிகிறது! அறுபது நிறைவையும் கூட ஆறாண்டுகள் கழித்து இப்போதுதான் சொல்கிறீர்கள்! பரவாயில்லை! தம்பதி சமேதராக எங்களுக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள்! இன்றைக்கு என் ஜென்ம நக்ஷத்ரம் வேறு சேர்ந்து வருகிறது!
@ கிருஷ்ணமூர்த்தி
அட! ஜென்ம நட்சத்திரமா?.. வாழ்த்துக்கள், உங்கள் இருவருக்கும் குழந்தைகளுக்கும்
எங்களின் அன்பான ஆசிகள் கிருஷ்ணமூர்த்தி சார்! ஆறாண்டுகள் இல்லை, 16 ஆண்டுகள்! சில நல்ல நினைவுகளைப் பதிவு போட வேண்டியிருந்ததால் தான் இந்த விஷயமும் ஒரு விஷயம் ஆயிற்று..
இன்னொன்றையும் இப்பொழுது சொல்கிறேன். அந்த 39 வருடமும் அயராத தொழிற்சங்கப் பணிகளில் பல்வேறு நிலைகளில் ஈடுபட்டிருந்தவன் நான். 1968 மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு குன்னூரில் Joint Action Committee-க்கு தலைமை தாங்கி நடத்தியவன். அந்த ஒரு நாள் வேலை நிறுத்ததிற்காக dies non--பரிசாகப் பெற்றவன். என் காலத்து AIBEA, LIC, Railway எல்லா தொழிற்சங்கத் தலைவர்களுடன் எனக்கு அறிமுகம் உண்டு. நான் NFPTE தொழிற்சங்கம் பற்றி குரிப்பிட்ட பொழுதே தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். வேறொரு சந்தர்ப்பத்தில் அதெல்லாம் பற்றி விவரமாகச் சொல்லலாம்.
நினைவுகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி, சார்!
ஒரு குத்துமதிப்பாக விஷயம் தெரிந்தது சார்! ஆனால் தொழிற்சங்க ஈடுபாடுபற்றி AS அய்யர் எழுதிய புத்தகம் பற்றிய உங்கள் பதில் கேள்வியிலேயே புரிந்துகொண்டு விட்டேன். இன்றைக்குத் தொழிற்சங்கங்கள் , வழிநடத்தும் கட்சிகளுடைய தொங்குசதைகளாகவே மாறி, தங்களுடைய நோக்கத்த்தையும் வீரியத்தையும் இழந்து பரிதாபமான நிலைக்குப் போய்விட்டன. முன்னாள் ராணுவத்தினர் SC/ST ஊழியர்கள் என்று பலவிதங்களிலும் காங்கிரஸ் ஆட்சி தொழிற்சங்க இயக்கத்தை மேலும்மேலும் கூறுபோட்டு விட்டது . பெரும்பாலான தொழிற்சங்க நிர்வாகிகள் ரியல் எஸ்டேட் வியாபாரம், Thrift Society, தீபாவ்ளிப் பட்டாசு பலகார வியாபாரம் என்று குறுகிப்போய்விட்டனர். சீரழிவை நேரடியாகவே கண்டு அனுபவித்தவன் நான்.
திருக்கடவூரிலும் கொடிமரத்தில் பிள்ளையார் இருக்கிறாரா? பாருங்களேன்... மறந்து விட்டேன்.
என் நமஸ்காரங்களும்.
உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யமானவை.
@ ஸ்ரீராம்
ஆமாம். திருக்கடையூரிலும் தான்.
வாழ்த்துக்கள். வருகைக்கு நன்றி, ஸ்ரீராம்.
திருக்கடையூர் - இது வரை செல்ல முடியவில்லை. சமீபத்தில் கூட நண்பர் ஒருவரின் சஷ்டியப்தபூர்த்தி இங்கே நடந்தது. தலைநகரிலிருந்து சென்று வர இயலவில்லை.
உங்கள் சஷ்டியப்தபூர்த்தியும் அங்கே நடந்தது அறிந்து மகிழ்ச்சி. ஜங்ஷன் இதழில் படம் - மகிழ்ச்சி.
ஸ்வாரஸ்யமான அனுபவங்கள்.
@ வெங்கட் நாகராஜ்
வாங்க, வெங்கட்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திருக்கடையூரில் நம்மைச் சார்ந்தவர்கள் தங்குவதற்கு குடில்கள் என்ற பெயரில் வசதிகள் உண்டு. கேண்டின் மாதிரி உணவகங்கள் இந்த குடில்களை ஒட்டியே அமைந்திருக்கின்றன.
நம் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றி அவர்களிடம் சொல்லி விட்டால் அதற்க்கேற்ப காலை டிபன், மதிய உணவு, இரவு டிபன் வேண்டும் பொழுது காபி, டீ, பால், ஹார்லிக்ஸ் என்று நம் தேவைக்கேற்ப எல்லாம் அவர்களே சப்ளை செய்கிறார்கள். எல்லாவற்றிற்கும் கணக்கு வைத்துக் கொண்டு நாம் குடிலை காலி பண்ணும் பொழுது காசு வாங்கிக் கொள்கிறார்கள்.
அதே மாதிரி சஷ்டியப்த பூர்த்தி சம்பந்தபட்ட ஹோம ஏற்பாடுகள், வாத்தியார் தட்சணை,
கோயில் மரியாதைகள், போட்டோ, விடியோ என்று எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய
தொடர்பு கொண்ட அங்கேயே வசிக்கும் நம்பிக்கைக்கூ உரிய ஏஜெண்ட் மாதிரி செயல்படும் நபர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டு பிடித்து முன்னாலேயே தேதிகளைப் பதிவு செய்து கொண்டு அட்வான்ஸ் காசோலையும் கொடுத்து விட்டோமென்றால் அவர்கள் மாயவரத்திலிருந்து திருக்கடையூருக்கு வேனில் கூட்டிச் செல்வதிலிருந்து நாம் குடிலைக் காலி செய்யும் வரை நமக்கு வேண்டிய அத்தனை செளகரியகரியங்களையும் கவனித்துக் கொண்டு கிளம்பும் பொழுது அட்வான்ஸ் தொகையைக் கழித்துக் கொண்டு பாக்கி தொகையை பணமாக வாங்கிக் கொள்கிறார்கள். எனக்கு என் உறவினர் ஒருவர் சொல்லி போன் நம்பர் கொடுத்தார். போனில் பேசிய போது 'நானே சென்னை வருகிறேன், சார். நேரடியாகவே தெரிவிக்கிறேன்' என்று சொல்லி அவர் வந்து எல்லாவற்றையும் பேசி அட்வான்ஸ் செக்கும் வாங்கிக் கொண்டார். வாக்கு தவறாமல் அத்தனை ஏற்பாடுகளையும் அருமையாகச் செய்திருந்தார். அத்தனையும் மறக்க முடியாத நினைவுகள்.
திருக்கடையூர் பற்றி சமீபகாலமாகப் பதிவர்கள் வழி அடிக்கடிக் கேட்கக் கிடைக்கிறது.
உங்கள் சஷ்டியப்தபூர்த்தி அங்கு நடைபெற்றது மகிழ்சியாக இருக்கிறது.
வெங்கட்ஜி அவர்களுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்களையும் குறித்துக் கொண்டாயிற்று.
கோயில் பற்றியும் தெரிந்துகொண்டோம்.
உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த பாத வணக்கங்கள் உங்கள் வாழ்த்து வேண்டி!
துளசிதரன், கீதா
வசந்த கால நினைவுகளில் முக்கிய நிகழ்வை குறிப்பிட்டிருக்கிறீர்கள். திருக்கடையூருக்கு 9 ஆம் வகுப்பு படிக்கும்போதே (58-59) எனது தந்தையார் அழைத்து சென்றிருக்கிறார்கள். பின்னர் மயிலாடுதுறை எனது மனைவியின் ஊர் ஆன பிறகு பலமுறை உறவினர்களின் மணி விழாவில் (சஷ்டியப்தபூர்த்தியில்) கலந்து கொள்ள சென்றிருக்கிறேன். இன்றைக்கு ஒரு விழாவை நடத்த நிகழ்ச்சி மேலாளர்கள் (Event Managers)இருப்பதுபோல்,(நீங்கள் குறிப்பிட்டதுபோல்) திருக்கடையூரில் மணிவிழாவை சிறப்பாக நடத்த பலர் இருக்கிறார்கள், இருப்பினும் அங்கு திரு விஸ்வநாத குருக்கள் அவர்கள் தான், தானே முன்னின்று சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறார். ஆனால் தற்போது கோவில் நிர்வாகம் மணிவிழாவை கோவிலின் உள்ளே நடத்த அனுமதிப்பதில்லை.
தங்களுடைய மணிவிழா இறைவன் சன்னிதியில் நடந்தது அறிந்து மகிழ்ச்சி. எழுத்தாளரான தங்களின் மணி விழா பற்றிய தகவல் குமுதத்தினுடைய துணை இதழான ஜங்ஷனில் வெளிவந்தது அறிந்து கூடுதல் மகிழ்ச்சி. பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்.
@ Thulasidharan V. Thillaiakathu
அன்பு துளசிதரன்,
மனம் கனிந்த வாழ்த்துக்கள், துளசிதரன். கீதாவுக்கும்.
நாம் எல்லோரும் இறைவனிடம் பிரார்த்திப்போம். மனுஷ இன நன்மைகளுக்காக.
அருமை நண்பர் நடனசபாபதி தற்காலத்து நிலைமைகளைச் சொல்லியிருக்கிறார்,பாருங்கள். கோயிலுக்குள்ளே நடத்த அனுமதிப்பதில்லையாமே!
மாற்று ஏற்பாடு என்ன, தெரியவில்லை. அவர் சொல்லியிருப்பதையும் கவனத்தில் குறித்துக் கொள்ளுங்கள்.
தொடர்ந்து இந்தப் பகுதியை நீங்கள் இருவரும் வாசித்து வருவதற்கு நன்றி.
@ வே. நடனசபாபதி
நல்லதொரு வழிகாட்டியாய் நிகழ்காலத் தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள், சார். நன்றி.
ஜங்ஷன் இதழ் பிரசுரம் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். அந்த இதழில் +50 என்று மூத்த குடிமக்களுக்காக சில பக்கங்களை ஒதுக்கியிருந்தார்கள். அதை நான் உபயோகித்துக் கொண்டேன். அவ்வளவு தான்.
தொடர்ந்து வாசித்து உங்களுக்கும் தெரிந்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
என் இரு மகன்களுக்கும் மகன் போல் என்னிடம்வளர்ந்தஎன் மச்சினனுக்கு எங்கள் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை திருக்கடையூரில் நடத்த விருப்பம் தெரிவித்தார்கள் நாங்களும் சிம்பிளாக நடத்தச் சொன்னோம் பிள்ளைகள் தான் செய்விக்க வேண்டுமாமே இது பற்றி என் பதிவில் பகிர்ந்திருக்கிறேன் என் பேரன் பேத்திக்கு தாத்தா பாட்டியின் கல்யாணமென்றுஏக குஷி எங்கள் அறுபதாமாண்டு நிறைவு நாள்பற்றி என் சொந்தங்களுக்குத் தெரிவிக்க வில்லை உங்கள் பதிவில் உங்கள் நினைவுகள் அறிவதில் மகிழ்ச்சி
அருமையான மலரும் நினைவுகள்.
Post a Comment