மின் நூல்

Tuesday, August 27, 2019

மனம் உயிர் உடல்

3.   மனம் என்னும் மேடை மேலே....

‘மனம் என்றால் என்ன?’  என்கிற அடிப்படை கேள்வியை இப்போதைக்கு செளகரியமாக மறந்து விடுவோம்.  அல்லது தற்காலிகமாக புறக்கணித்து விடுவோம்.  நேரடியாக இல்லாமல் வேறு சில வழிகளில் மனம் என்பதின் குணாம்சத்தினை அறிய  முற்படுவோம்.  கேள்வி---பதில் போன்றதான ஒரு உரையாடல் அதற்குத் துணை செய்யும்.

கேள்வி—-1:  மனம் என்பது ஒரு பொருளா?  இல்லை, உடலின் உள்ளுருப்பா?

பதில்:  இரண்டும் இல்லை.  இந்த இரண்டிலும் எது ஒன்று என்றாலும் நுண்ணிய கருவிகளின் உதவியோடு உடல் பரிசோதனைகளில் கண்டுபிடித்து விடலாம்.  அது முடியாததினால் தான் இந்த அல்லாட்டம்.

கேள்வி—2;  இரண்டும் இல்லாமல் ‘மனம்’ என்ற ஒன்று இருப்பது எப்படித் தெரிந்தது?

பதில்:  வழிவழியாக பலர் சொல்லி, படித்து, அனுபவப்பட்டுத் தெரிந்தது இது.  மனம் என்ற அதன்  பெயர் மொழிக்கு மொழிக்கு மாறுபடலாம்.  பெயர் மாறுபடுகிறதே தவிர, அதன் இருப்பை உணர்த்துவதான செயல்பாடுகளில் மாற்றம் இல்லை.  ஆக செயல்பாடுகளை வைத்து அப்படியான செயல்பாடுகளை நிர்வகிக்கிற ஏதோ ஒன்று இருப்பதாக முடிவுக்கு வந்து அதற்கு மனம் என்று பெயரும்  கொடுத்திருக்கிறோமே தவிர ஸ்தூலமான அதன்  இருப்பைப்(Physical presence) பற்றி  அறிந்தோர்  இல்லை. 

கேள்வி—3 :  அதன் இருப்பு (fact of existing)  எப்படித் தெரிய வந்தது?

பதில்:  உணர்வுகளின் மூலம்.  உடலின் செயல்பாடுகள் அதன் இயக்கமாய் இருப்பது போல மனதின் செயல்பாடுகளும் இருப்பதை உணர்கிறோம். உண்மையில் சொல்லப்போனால் என்னைப் பற்றி எழுது என்கிற ஆக்ஞையை, ஆலோசனையை அளித்ததே என் மனம் தான்.  அந்த ஆலோசனை கிடைத்த நாளிலிருந்து அதைப் பற்றிப் பலர் சொன்ன  கருத்துக்களை அறிய ஆரம்பித்தேன்.  பலர் எழுதிய நூல்களை வாசித்து மனம் பற்றியதான தெரிதலை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். வாசித்துத் தெரிந்து கொண்டதை என்  மனச் செயல்பாட்டு உணர்வுகளை உரைகல்லாகக் கொண்டு சரிபார்த்துக் கொள்ளத் தலைப்பட்டேன்.  அதன் செயல்பாடுகளில் சில விசேஷ செயல்பாடுகளும் உண்டு.

கேள்வி—4 : இன்ட்ரஸ்ட்டிங். அப்படிச் சிலதைச் சொல்ல முடியுமா?..

பதில்: ஓ! தாராளமாக.  மனக்குறளி என்று ஒன்று; அசரீரி மாதிரி.  மனசின் செயல்பாடுகளில் இதான் ராஜா.  ஏதாவது வழிகாட்டலா கிடைச்சா அப்படியே  நடக்கும்.  மனக்கிலேசம் என்று இன்னொன்று.  ஒரே உழப்பலா மனுஷனை வாட்டி எடுத்து ஒரு வழி பண்ணிவிடும். ‘மனசார’ என்று மற்றொன்று. சர்வாங்கமும் திருப்தியில் நிறைவடைஞ்ச மாதிரி இருக்கும். ‘மனத்திருப்தி’ன்னு ஒண்ணு.  உடல், உணவு, வாழ்க்கைன்னு எல்லாத்துக்குமான எல்லா திருப்திகளையும் தாண்டினது இது. இந்த திருப்தி  இல்லேனா, எதுவொண்ணும் நிறைவடைஞ்ச மாதிரியே இருக்காது. . ‘மன விரோதம்’ன்னு ஒண்ணு. மனசை விரோதிசிகிட்டு எதையாவது செய்து விட்டால் சர்வ காலமும் உறுத்திகிட்டே இருக்கும். உறுத்தலை சரி பண்ணற  வரைக்கும் ஓயாது. சுருக்கமா சொல்லணும்னா, நமது எல்லா நடவடிக்கைகளும் மனசு சம்பந்தப்பட்டது தான்.. மனசு சம்பந்தப்படாத எந்த நடவடிக்கையும் இல்லேன்னு தான் சொல்லணும்.  இதில் இன்னொரு வேடிக்கை.  மனசோட சம்மதம் இல்லேனா, எது ஒண்ணும் சோபிக்காது.  மனசின் உள் நடவைக்கைகள் நமது வெளி நடவடிக்கைகளுக்கு ஆதாரமா இருக்கறதை எல்லா நேரத்திலேயும் உணரலாம்.  இந்த விதத்தில் நமது வாழ்க்கையின் அனுதின நடவடிக்கைகள் அத்தனைக்கும் உந்து சக்தியாய் மனசின் உள் நடவடிக்கைகள் இருப்பதை கவனித்துப் பார்த்தால் தெரியும். சில அனிச்சை செயல்களைத் தவிர மனதில் உலா வராமல் எந்தச் செயலும் செயலாவதில்லை.  ரகசிய ரகசியமாய் மனம் கிசுகிசுப்பதை நாம் எல்லோரும் கேட்டிருப்போம். சில நேரங்களில் உன்னிப்பாய் நாம் சொல்வதை மனசும் காது கொடுத்துக் கேட்பது போலக் கேட்கும்  அதற்கு பதிலும் தரும்.. சஜஷன்னு சொல்றாங்க.. நம்மை ஊடகமா வைச்சிண்டு இன்னொருத்தர் கூட நம் மனசோட பேசலாமாம்.

கேள்வி—5:  அப்போ நீங்க சொல்றதைப் பார்த்தா நீங்க தனி, உங்க மனம் தனின்னு நீங்க நினைக்கிற மாதிரின்னா இருக்கு?..

பதில்: ஹ..ஹ.. அப்படியில்லீங்க.. நானும் என் மனசும் ஒன்றுக்குள் ஒன்று  புதைஞ்ச மாதிரி சில நேரங்களில் இருக்கு.  பல நேரங்களில் என் மனசுக்குத் தான் கை கால் முளைச்சு நானாக நடமாடுவதாகத் தோன்றுகிறது.  மொத்தத்தில் நான்  என்று நான் நினைப்பது என்  மனசு தாங்க.. நான் வேறு என் மனசு வேறு இல்லீங்க..

கேள்வி—6   ஒரு வேளை மூளைதான் மனமோ?

பதில்: நானும் அப்படித்தாங்க நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஒரு நாள் இந்த மனசு தான் எங்கிட்டே கேட்ட மாதிரி இருந்தது. ‘ஐம்புலங்களும் மூளையின் ஆணைக்குக் கட்டுப்பட்டவங்க.. சரி, இந்த மூளை யார் ஆணைக்குக் கட்டுப்பட்டது தெரியுமா?’ன்னு கேட்ட மாதிரி இருந்தது. எனக்கு பதில்  சொல்லத் தெரியலே. இவ்வளவு தெளிவா கேக்கறதே. சரி, இதன் ஆணைக்குத் தான் அந்த மூளையும் கட்டுப்பட்டதோன்னு நெனைச்சிகிட்டேன். ஒரு கேள்வியைக் கேட்டு அதுக்கேத்த பதிலையும் நெனைக்க வைச்சதே இந்த மனசோட ஏற்பாடோன்னு கூட ஒரு சம்சயம்.

கேள்வி—7:  நான் வேறு மனசு வேறு இல்லீங்கன்னு இப்பத்தான் சொன்னீங்க.. இப்போ நீங்க சொல்றதிலே, நீங்க வேறு உங்க மனசு வேறுங்கற தொனி ஒலிக்கிற மாதிரி இருக்கே?..

பதில்: மனம், உயிர், உடல் எல்லாம் ஒரே கலவை தாங்க.. ஒண்ணு  இல்லேனா, இன்னொண்ணும் இல்லேன்னு ஒவ்வொண்ணும் பிட்டுக்கும். இப்போ நுரையீரல்ன்னா சுவாசிக்க என்று  தெரியறது. இதயம்ன்னா இரத்தத்தை பம்ப் பண்ண, சுத்திகரிக்கன்னு தெரியறது. இப்படி அது அதோட வேலை என்னன்னு டிஃபைன் பண்ணணும் இல்லியா, அதுக்காகத் தாங்க இந்தப் பிரிச்சுப்  பாக்கற வேலையும்.

கேள்வி—8:  அப்போ ஏன் இந்த அநாவசிய ஆராய்ச்சி வேலை?

பதில்: எதுவும் அநாவசியம்  இல்லீங்க.. அவசியமாத் தான்.  வாழணும்ன்னு வந்துட்டோம். இப்படி வாழ நேர்ந்த வாழ்க்கைலே மனம் ஆரோக்கியமா இருந்தா வெற்றிகரமா சந்தோஷமா வாழ்ந்திட்டுப் போகலாமேங்கறதுக்காகத் தான்.

கேள்வி—9:  மன ஆரோக்கியமா?.. உடல் ஆரோக்கியம் தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  இது என்ன மன ஆரோக்கியம்ன்னு புதுசா?..

பதில்மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம்ன்னு  சொல்றாங்க.. மருந்தில்லாத மருந்தாம் அது.  காசு பணம் செலவில்லே. அதான் என்னன்னு பாத்திடலாமேனுட்டு.

கேள்வி--10:  மன ஆரோக்கியம் இல்லேனா, என்னவாகுமாம்?..

பதில்: வாழ்க்கையே வெறுத்துப் போகுமாம். சமூக பழக்க வழக்கங்கள் சரியா அமையாது. தொட்டதற்கெல்லாம் சலிப்பும், கோபமும் சூழ்ந்து சோர்வடையச் செய்யும். மற்றவர்கள் பார்வைக்கு அவங்கள்லேந்து விலகின வேறு விதமா நாம தெரிவோம். அப்படித் தெரியற அளவுக்கு நம்ம நடவடிக்கைகள் அமைந்து போகும். மொத்தத்தில் மன ஆரோக்கியம் இல்லேனா, சமூகம் மறந்து போய் தானே பிரதானமாய் ஆகிப்போகும். சமூகத்தோடு கலந்த ஒரு கூட்டு வாழ்க்கைக்கு தயாரில்லாத தனிமைப் பிரியர்களாய் மாறிப் போவோம். ஆரம்பத்திலே நம்மை நாமே நேசிப்பது தான்  பிரதானமாய்ப் போய், கடைசிலே நம்மை நாமே வெறுக்கற அளவுக்குக் கொண்டு போய் விடும். 

அதுமட்டுமில்லே. நமது இன்றைய வாழ்வின் நெருக்கடிகளை சமாளிக்க திறன் நிறைய வேண்டியிருக்கு. அந்த நெருக்கடிகளுக்கு ஏற்ப நம்மைத் தயார் நிலைலே வைத்துக் கொள்வதற்கும், எதிர்பார்த்தேயிராத குறுக்கீடுகளை சமாளிக்கவும் மன ஆரோக்கியம் அவசியமாகிறது. சுருக்கமா மன ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான அல்லது பெறுவதற்கான பயிற்சிகளை வாழ்க்கைக் கல்வினே சொல்லலாம்.

கேள்வி—11: மனம்ன்னு ஒரு உறுப்பே உடம்புக்குள்ளாற இல்லேனு சொல்றீங்க.. ஆனா அதோட ஆரோக்கியத்தைப் பத்தி அக்கறை பட்டு இவ்வளவு சொல்றீங்க.

பதில்: மனம்ன்னு நம்ம உடம்புக்குள்ளாற ஒரு உறுப்பு இல்லாம இருக்கலாம். அல்லது உறுப்பாய் இருக்கணும்ங்கற அவசியமே அதுக்கு இல்லாம இருக்கலாம். உறுப்பு இல்லேங்கறத்துக்காக அதோட ஆரோக்கியத்திலே அக்கறை கொள்ளாம இருக்க முடியாது. அதன் நலன்லே கவனம் கொள்ளாம இருக்க முடியாது.  ஏன்னா, இன்றைய சிக்கலான வாழ்க்கைப் போக்குலே ரொம்பவே சிரமத்திற்குள்ளாறதும் இந்த மனம் தான்; நம்ம சகல பெருமைகளுக்கும் சந்தோஷத்திற்கும் காரணமாய் இருப்பதும் இந்த மனம் தான். ஒவ்வொரு விஷயத்திலேயும் நம்ம நடவடிக்கையைத் தீர்மானிக்கறது இது தான் என்கிற பொழுது எப்படி இதன் நலனில் அக்கறை கொள்ளாமல் இருக்க முடியும், சொல்லுங்கள்.

கேள்விகளுக்கான பதில்கள் பளிச்சிட்ட பொழுது பதில்களில் இருக்கும் நியாயம் புரிந்தது. அந்தப் புரிதலே மனச்சுரங்கத்திற்குள் ஆழ இறங்கி தேடிப்பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

(வளரும்)                                              


                                       

8 comments:

வல்லிசிம்ஹன் said...

மனம்ன்னு நம்ம உடம்புக்குள்ளாற ஒரு உறுப்பு இல்லாம இருக்கலாம். அல்லது உறுப்பாய் இருக்கணும்ங்கற அவசியமே அதுக்கு இல்லாம இருக்கலாம். உறுப்பு இல்லேங்கறத்துக்காக அதோட ஆரோக்கியத்திலே அக்கறை கொள்ளாம இருக்க முடியாது. அதன் நலன்லே கவனம் கொள்ளாம இருக்க முடியாது. ஏன்னா, இன்றைய சிக்கலான வாழ்க்கைப் போக்குலே ரொம்பவே சிரமத்திற்குள்ளாறதும் இந்த மனம் தான்; நம்ம சகல பெருமைகளுக்கும் சந்தோஷத்திற்கும் காரணமாய் இருப்பதும் இந்த மனம் தான். ஒவ்வொரு விஷயத்திலேயும் நம்ம நடவடிக்கையைத் தீர்மானிக்கறது இது தான் என்கிற பொழுது எப்படி இதன் நலனில் அக்கறை கொள்ளாமல் இருக்க முடியும், சொல்லுங்கள்.///////////////அற்புதம் ஜீவி சார்..
மனசு இல்லாமல் செய்யும் எந்தக் காரியமும் முடியாது.
மனசை அடக்கு ,புத்தி வழியே போ என்பதெல்லாம்
என்னால் எனக்கே சொல்ல முடிவதில்லை சிலசமயம்.
மனமே இரண்டு வேஷமும் போடுகிறதோ
என்று தோன்றும்.
இதைச் செய்யலாம் என்று நினைக்கும் போதே
ஒத்திப் போடச் சொல்லும்.
வேண்டாம் என்று கூடச் சொல்லும்.
நாம ஸ்மரணை செய்யும் போது கொஞ்சம் அடங்கும்.

வல்லிசிம்ஹன் said...

கேள்விகளுக்கான பதில்கள் பளிச்சிட்ட பொழுது பதில்களில் இருக்கும் நியாயம் புரிந்தது. அந்தப் புரிதலே மனச்சுரங்கத்திற்குள் ஆழ இறங்கி தேடிப்பார்க்க வேண்டும் என்று தோன்றியது////////////////.செய்யலாம்.

ஸ்ரீராம். said...

நல்ல கேள்வி பதில்கள்.

கணினியை விட பன்மடங்கு திறம் வாய்ந்த மனமும் சிலசமயங்களில் ஒரே சமயத்தில் பல்வேறு விதமான பிரச்னைகள் / கவலைகள் / எண்ணங்கள் என்று வரும்போது திகைத்து தடுமாற ஆரம்பித்துவிடும் .

வெங்கட் நாகராஜ் said...

இந்தப் பதிவில் கேள்வி கேட்டு பதில்.,.. கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் தான் தெளிவு கிடைக்கும் எல்லா விஷயங்களிலும்.....

சிறப்பான கேள்விகளும் தேர்ந்த பதில்களும்....

தொடர்கிறேன்....

கோமதி அரசு said...

//மனசை விரோதிசிகிட்டு எதையாவது செய்து விட்டால் சர்வ காலமும் உறுத்திகிட்டே இருக்கும். உறுத்தலை சரி பண்ணற வரைக்கும் ஓயாது. சுருக்கமா சொல்லணும்னா, நமது எல்லா நடவடிக்கைகளும் மனசு சம்பந்தப்பட்டது தான்.. மனசு சம்பந்தப்படாத எந்த நடவடிக்கையும் இல்லேன்னு தான் சொல்லணும்.//

நன்றாக சொன்னீர்கள்.

கேள்வியும் பதிலும் அருமை.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்
@ ஸ்ரீராம்
@ வெங்கட் நாகராஜ்
@ கோமதி அரசு

-- எல்லோருக்கும் நன்றி. தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.

வே.நடனசபாபதி said...

விடைதெரியா (அல்லது தெரிந்தும் புரியாத) கேள்விகளுக்கு விடை அளித்து, கேள்வியும் நானே 1 பதிலும் நானே! என்று சொல்லிவிட்டீர்கள்.

மனச்சுரங்கத்தினுள் ஆழ இறங்கி தாங்கள் தேடிப் பார்த்ததை அறியக் காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ வே.நடன சபாபதி

நாங்கள் 'சாரல்' என்ற பெயரில் சிறு பத்திரிகை ஒன்றை நடத்திய காலத்து கேள்வி--பதில் பகுதி பொறுப்பு என்னிடம் விடப்பட்டிருந்தது.

கேள்வி- பதில் பகுதிக்கு 'தேசிங்குராஜனைக் கேளுங்கள்' என்று பெயரிட்டிருந்தேன்.

பெரும்பாலும் பதில்கள் மட்டுமல்ல, அதற்கான கேள்விகளையும் நானே தான் தயாரித்துக் கொள்ள வேண்டிய நிலை இருந்தது. தங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து அந்நாளைய அனுபவங்கள் தாம் நினைவுக்கு வந்தன.

Related Posts with Thumbnails