குலச்சிறை நாயனார் சிலையிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளித் தான் 49-வது கற்சிலையாக நின்ற சீர் நெடுமாறன் நாயனாரின் சிலை இருந்தாலும் அவர் சிலை ஸ்தாபித்திருந்த இடம் குறிப்பாக ஏற்கனவே பாண்டியனுக்கு அத்துபடி ஆகியிருந்ததினால் தன் நடையில் கொஞ்சம் வேகத்தைக் கூட்டியே பாண்டியன்
நடந்ததைப் பார்க்க முடிந்தது. அவன் வேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு நடக்க முடியாவிட்டாலும் மங்கையும் தொடர்ந்து வரும் சிலைகளில் தன் பார்வையைச் சுழல விட்டபடியே பாண்டியனைத் தொடர்ந்தாள். மஙகையர்க்கரசியாரின் சிலையைப் பார்வையிலிருந்து தப்ப விட்டுவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு வேறு ஒரு பக்கம்!...என்ன தான் நாயன்மாராய் இருந்தாலும் மன்னனாய் இருந்தவன் இல்லையா? அந்தக் கம்பீரம் அழியாமல் நெடுமாற நாயனாரின் உடலிலும் திண் தோள்களிலும் முகத்திலும் படிந்திருந்தது. நாயனாரின் சிலையை நெருங்கியதும் மங்கையைக் காணோமே என்று பாண்டியன் திரும்பிப் பார்த்தான். நாலைந்து சிலைகளுக்குப் பின்னால் அவள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், "ராணியும் ராஜாவுமாய் சேர்ந்து பார்ப்போம் என்று சொன்னே, இல்லையா.. வா.. ராஜா இங்கேயிருக்கிறார் பார்.." என்று நெடுமாற நாயனார் சிலையை பாண்டியன் சுட்டிக் காட்டினான். அவன் கண்கள் நாயனார் சிலையின் மேலேயே நிலைக்குத்தி இருந்தது.
அரசியார் சிலையை இன்னும் நாம பாக்கலே.. அவங்களை நாம பாக்கறப்போ நான் நினைக்கிறதையே நீங்களும் சொல்றீங்களான்னு பாக்க வேண்டாமா?" என்று மங்கை சொன்ன பொழுது அவள் குறிப்பிட்டது புரிந்த மாதிரி கலகலவென்று சிரித்தான் பாண்டியன். "அதையும் பார்த்தாப் போச்சு.." என்றவாறே பக்கத்துச் சிலையைப் பார்த்தான் பாண்டியன். 50- என்ற எண் போடப்பட்டு நேச நாயனார் என்று சுவரில் குறித்திருந்தார்கள்.
'என்ன, அப்படியே அவங்க சிலையோட நீயும் ஒரு சிலையா ஒன்றிப் போயிட்டே போலிருக்கு!" என்று பாண்டியன் சிரித்தான்.
"ஆமாங்க.. ராணியார் எவ்வளவு அழகா இருக்காங்க, பாத்தீங்களா?" என்று கொஞ்ச நேரத்திற்கு முன் தனக்கேற்பட்ட உணர்வுகள் கலையாமலேயே கேட்டாள் மங்கை.
"ஆமாம், மங்கை.. பொதுவாகவே தமக்கான பெண்களைத் தேர்வு செய்வதில் அரசர்கள் என்றும் சோடை போனதே இல்லை" என்று ரொம்ப அலட்சியமாக சொன்னான் பாண்டியன்.
அவன் சொன்னதைக் கேட்டு எரிச்சலாக இருந்தது மங்கைக்கு. பெண்களின் உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ள சக்தியற்றவர்களாகவே ஆண்டவன் இந்த ஆண்களைப் படைத்து விட்டானோ என்ற பொருமல் மனசில் தேங்கியது. அல்லது தன் அரச வாழ்க்கையில் இந்த அரசியார் பட்ட மனக்கஷ்டங்களும் அவற்றைக் களைய இவர் மேற்கொண்ட அரிய செயல்களையும் தன் கணவன் அறிந்திருக்க மாட்டாரோ என்ற ஐயம் அவளுக்கேற்பட்டது. அப்படி அதெல்லாம் அறியாத பட்சத்தில் பாண்டியன் நெடுமாறனிடம் இவர் பக்தி கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று மங்கைக்கு எரிச்சலாக இருந்தது.
"என்ன மங்கை? அப்படி என்ன யோசனையில் மூழ்கிட்டே? அரசியார் இவ்வளவு அழகாய் இருக்கிறாரேன்னு தானே நினைத்து மலைச்சுப் போய் நிக்கறே?" என்று கேட்டான்.
சட்டென்று தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு, "ஆமாமாம்.. எப்படி நான் நினைப்பதை அப்படிக் கரெக்டாக கண்டு பிடிக்க முடிஞ்சது?" என்று சொல்லிச் சிரித்தாள் மங்கை.
"ஹே! இதெல்லாம் கண்டுபிடிக்கறது கஷ்டமா என்ன? பொதுவா பெண்கள்னாலே இன்னொரு பெண் அழகா இருந்தா அது அவங்களை ரொம்ப பாதிக்கும். அந்த சைக்காலாஜி அடிப்படைலே தான் சொன்னேன்" என்றான் பாண்டியன்.
அவன் சொன்னதைக் கேட்டு மேலும் எரிச்சல் கூடியது அவளுக்கு. இருந்தாலும் ரொம்ப கஷ்டப்பட்டு அதை அடக்கிக் கொண்டு, "சரியாச் சொல்லிட்டீங்களே!" என்று போலியாகத் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தாள் மங்கை.
(தொடரும்)
13 comments:
மங்கையர்க்கரசி சிலையை போட்டோ எடுக்கும்போது விழுந்திருக்கிற பிளாஷ் நிழல் ஆஞ்சநேயர் நிழல் போல் உள்ளதை கவனித்தீர்களா?
பாரதம் போன்று இந்ததொடர்கதையில் நிறைய கிளைக்கதைகள் முளைக்கும் போல் இருக்கிறதே! ஆகட்டும் அமெரிக்காவில் சிந்திக்கவும், எழுதவும் நிறைய நேரம் கிடைக்கும். அதுவும் ஒரு பொழுது போக்கு தான்.
Jayakumar
இந்தப் பகுதி வித்தியாசமா இண்டெரெஸ்டிங் ஆக இருக்கு. தொடர் முடிந்தபிறகுதான் படிக்கணும் என்று நினைத்திருந்தேன்.
நீங்க சொல்றதை இப்பத்தான் பார்த்தேன்.
அரை மணி நேரம் தான் ஆகும். முன் கதையை பார்த்திடுங்க. இப்படி குத்துமதிப்பா இல்லாம அப்போத்தான் கமெண்ட் போட்டா கரெக்டா இருக்கும். இனிமே வரப்போறதெல்லாம்
சுவாரஸ்யமா வேறே இருக்கும். ஆக, முன் கதைப்பகுதிகளை படிச்சிடுங்க. நிறைய சொல்லவும், நாம் நிறைய பேசவும் வேண்டியிருக்கு. ஓ.கே.?
சினிமா பாஷைலே சொல்வாங்களே, எழுதழறத்துக்கு ஏதோ ரூம் போடுவாங்கன்னு.. அந்த மாதிரி இல்லே அமெரிக்கா வந்தது.
நிறைய இடங்களுக்குக் கூட்டிப் போறாங்க.. கிடைச்ச இண்டு இடுக்கிலே தான், பெரும்பாலும் ராத்திரி பத்து மணிக்கு மேலே தான் எழுத்துப் பணி.
அடுத்த வாரம் அடுத்த பகுதி வெளிவர்றத்துக்குள்ளே முன்பகுதிகளைப் படிச்சிடுசுங்க.
இந்த ஜோர்லேயே சென்ற பகுதிகளையும் பார்த்திடுங்க, நெல்லை. வாராவாரம் ஒரு பகுதின்னு தொடர்ந்திடலாம்.
அடுத்த ஞாயிறுலேந்து இந்த மாதிரி வித்தியாசங்களுக்கு நிறைய வேலை இருக்கு. அதனாலே தான் சொல்றேன்.
இறைவனே! எனக்கும் இந்த மாதிரியான திறமைகளைக் கொடுத்து எடுத்த காரியங்க்களில் வெற்றி பெற நீ அருள வேண்டும்' என்று மனமாற வேண்டிக்கொண்டாள்.//
மங்கை எல்லா பெண்களும் வேண்டி கொள்வது போல தான் எந்த காரியம் செய்யும் போது இறைவனை வேண்டிக் கொள்கிறார். தான் செய்யும் காரியங்களுக்கு இறைவன் உறுதுணையாக இருக்க கேட்கிறார். தனக்கும் மங்கையர்கரசி போல திறமைகள் வேண்டும் என்கிறார்.
அதை பாண்டியன் புரிந்து கொண்டு நீயும் அரசி போல எனக்கு உறுதுணையாக இருக்கிறாய் என்று சொல்லி இருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வது அவ்வளவு ஈஸியா என்ன?
அதுக்குத் தானே இந்தக் கதை Format?
புரிய வேண்டிய பல விஷயங்கள் தொடரப் போகின்றன.
தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிடுவதற்கு நன்றி, சகோ.
ஏறத்தாழ கடவுளிடம் என் பிரார்த்தனை போலவே மங்கையின் பிரார்த்தனை இருக்கிறது. JKC ஸார் சொன்ன பிறகு உற்றுப்பார்த்து ஆஞ்சியைப் பார்த்தேன்!
மங்கையர்க்கரசி சிலையை போட்டோ எடுக்கும்போது விழுந்திருக்கிற பிளாஷ் நிழல் ஆஞ்சநேயர் நிழல் போல் உள்ளதை கவனித்தீர்களா?//
கவனித்தேன் ஆஞ்சநேயர் தெரிந்தார்.
இது தான் பொதுப்பார்வைக்கு உட்பட்ட பிரார்த்தனை போலும். நி.சீ. நெடுமாறன் அவன் சகதர்மிணி மங்கையர்கரசி பற்றித் தெரிந்து வைத்திருப்பதோடு முழுக் கதையையும் ஒரு பார்வை பார்த்து விடுங்கள். தொடரும் கதையில் மேலும் பேசலாம்.
ஜீ வி அண்ணா, பழைய பகுதிகளில் "நடுவில் சில பக்கங்களைக் காணோம் என்பது போல சில பகுதிகள் கிடைக்கவில்லை. நூல்பிடிப்பது போல பிடித்துச் சென்றுவிடலாம் என்று பார்த்தால் தொடர்கதையின் பாகம் போட்டுப் பார்த்தாலும் கிடைக்கவில்லை. மீண்டும் முயற்சி செய்கிறேன். இப்ப இப்பகுதியை வாசிக்கிறேன்.
கீதா
மங்கையின் எண்ணப் போக்கை நீங்கள் சொல்லியிருப்பதை மிகவும் ரசித்தேன். பாண்டியன் சர்வ சாதாரணமாகச் சொல்வது அரசர்கள் தங்கள் பெண்களைத் தேர்வு செய்வதில் சோடை போனதில்லை என்று சொன்னதும் மங்கைக்கு ஏற்படும் உணர்ச்சியும் அதை மங்கையர்க்கரசியோடு தொடர்பு படுத்திப் பார்ப்பதும் மிகவும் யதார்த்தம்.
இந்த இடத்தில் ஒன்று தோன்றுகிறது. மகாபாரத்தில் கூட சுயம்வரம் பற்றி சொல்லிருப்பாங்க பெண்களுக்குத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்திருப்பதாகத்தான் இன்னும் வேறு பல அரச கதைகளில் வாசித்திருக்கிறேன்.
பெண்களின் உள்ளுணர்வுகளை ஆண்களால் புரிந்து கொள்வது எவ்வளவு கடினம் என்று சொல்லப்படுகிறதோ அது போன்று ஓர் ஆணின் உணர்வுகளையும் பெண்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் இல்லையா? இருவருக்குமே மூளையின்/மனதின் வேதியியல் வேறு என்பதால்.
மங்கை, மங்கையர்க்கரசியின் சிலையைப் பார்த்த போது தோன்றிய உள்ளுணர்வுகள் போன்று பாண்டியனுக்கு நின்ற சீர் நெடுமாறன் சிலையை பார்த்தப்ப என்ன தோன்றியிருக்கும் என்ற எண்ணம் வந்தது. அடுத்த பகுதியில் வருமா?
//"ஹே! இதெல்லாம் கண்டுபிடிக்கறது கஷ்டமா என்ன? பொதுவா பெண்கள்னாலே இன்னொரு பெண் அழகா இருந்தா அது அவங்களை ரொம்ப பாதிக்கும். //
இது பொதுவாகச் சொல்லப்படுவதுதான். ஆனால் பெண்கள் தங்களை அறிவுபூர்வமாகவும், திறமையாலும் வலுப்படுத்திக் கொள்ளும் போது அந்த கம்பீர ஆளுமை வரும் போது இந்த உணர்வு அங்கு எடுபடாது. கிராமத்துப் பெண்கள் உட்பட!
கீதா
வலது பக்கத்திலிருக்கும் Side Bar-ல் 'நெடுங்கதை இது ஒரு..' என்று தெரிவதைக் க்ளிக் செய்தால் 19-ம் பகுதியிலிருந்து 10- வரை கீழிறங்க்கும் வரிசையாக எல்லா அத்தியாயங்களும் வந்து விடும்.
இதில் 10-ம் பகுதியில் கீழே வலது பக்க அடிப்பகுதியில் காணப்படும் Older Posts-ல் க்ளிக் செய்தால் 9-வது அத்தியாயத்திலிருந்து 1-வது அத்தியாயம் வரை கீழிறங்க்கும் வரிசையாக முதல் அத்தியாயத்திற்குப் போய் விடலாம்.
அதாவது 1-ம் அத்தியாயத்திலிருந்து 9- வரையிலும், பின் 10-லிருந்து 19-- வரையிலும் இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கிறது. நடுவில் வாசிப்பை நிறுத்தி விட்டீர்களென்றால் அப்படி நிறுத்துகிற அத்தியாயத்தைக் குறித்துக் கொண்டு ஒவ்வொரு தடவையும் சைடு பாரில்
நெடுங்கதை-- இது ஒரு- வைக் கிளிக் பண்ணி கீழிறங்கி வாசிக்க தொடர வேண்டிய அத்தியாயத்திலிருந்து தொடங்க்கி மேல் நோக்கி வாசித்து வர வேண்டியது தான்.
இப்பொழுது ஈசியாக நீங்கள் தொடர்ந்து வாசித்து விடலாம்.
முயற்சித்துப் பாருங்கள். தங்கள் ஆர்வத்திற்கு நன்றி, தி. கீதா.
அப்படியாச் சொல்கிறீர்கள்? அழகுபூர்வம், அறிவுபூர்வம் இரண்டிற்குமான செலக்ஷனில் பொதுவா ஆண்களுக்கு எது பிடிக்கும் என்று தெரியவில்லையே!
Post a Comment