மின் நூல்

Friday, January 1, 2010

ஆத்மாவைத் தேடி …. 25 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி….


25. இருட்டில் பிரகாசித்த ஒளி.


திர்பார்ப்புகளுக்கு எப்பொழுதும் குறைச்சலில்லை. இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு அமர்வுக்கும் அவை உறுப்பினரிடையே இந்த எதிர்பார்ப்பு உணர்வு மிகவும் கூடிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆன்று அவிந்து அடங்கிய சான்றோராய் ஒவ்வொரு துறையிலும் அவரவர் இருந்தும் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம் இருந்தது. பிற துறைகள் சார்ந்த புதுப்புது தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒரு பக்கம்; அதுதவிர, சதஸூக்காக சமர்ப்பிக்கப்படும் உரைகள் எல்லாவிதங்களிலும் சிறப்பாக அமைய வேண்டும், அதற்கு தத்தமது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்கிற ஆர்வம் ஒவ்வொருவர் மனத்திலும் பதிந்திருந்ததினால் அந்த ஆர்வம் எல்லோருக்கும் எல்லா நாட்களிலும் எதிர்நோக்கும் எதிர்பார்ப்பாய் மாறிவிட்டது.


இன்றைக்கும் அப்படித்தான். கை நிறைய குறிப்புகளோடு தேவதேவன் மேடையேறினார். அவர் சார்ந்திருந்த குழுவின் பிரதிநிதியாக இன்று தான் முதல் முறையாக இந்த அவையில் அவர் மேடையேறுவதால், அவையில் அமர்ந்திருந்தோர் இயல்பாகவே தங்களிடம் முகிழ்த்த ஆர்வத்தோடு அவர் உரையை எதிர்பார்த்தனர். அவர் இன்று விவரமாகச் சொல்ல எடுத்துக்கொண்ட பொருளும் உபநிஷத்துக்களைச் சார்ந்திருந்ததினால் அவர்களின் ஆர்வம் இன்னும் அதிகரித்திருந்தது.



“உடற்கூறு இயல் அறிஞர் உலகநாதன் அவர்கள் இந்த அவையில் உரையாற்றும் பொழுது உடம்பு பற்றி அந்த உடம்பின் உள்ளிருக்கும் விஞ்ஞான சோதனைக்குத் தட்டுப்படும் உயிரியல் சம்பந்தப்பட்ட உறுப்புகளைப் பற்றி நிறைய சொன்னார்கள். மனவியல் அறிஞர் மேகநாதன் அவர்கள் மனத்தைப் பற்றி நம் சிந்தை நிறைக்கும் படியாக வேண்டிய மட்டும் நிறைய தகவல்களைத் தந்தார்கள். நாம் இப்பொழுது உபநிஷத்துக்களின் பார்வையில் உடலும், உறுப்புகளும், மனமும் கொண்ட மனிதனைப் பார்ப்போம்" என்று தேவதேவன் ஆரம்பித்த பொழுதே, அவையினரின் உற்சாகம் கூடிவிட்டது.


“அப்படிப் பார்ப்பதற்கு முன்னால் ஒன்று" என்று சொல்லிவிட்டு தேவதேவன் வசீகரமாகப் புன்முறுவல் பூத்தார்."எளியோனின் சிந்தையில் மீண்டும் மீண்டும் வந்து போகும் ஒரு செய்தியை முதலிலேயே சொல்லி விடுகிறேன். உபநிஷத்துக்களின் ஞானம் ஒளிச்சுடரிட்டு பிரகாசித்த காலத்தை உத்தேசமாக இப்பொழுது கணிக்க முடிகிறது; கி.மு. 1000-க்கும் கி.மு. 300-க்கும் இடைப்பட்ட காலம் அது என்பது நம்மை நிரம்பவே ஆச்சரியப்படுத்துகிறது. கொஞ்சமே நினைத்துப் பாருங்கள்.. பூவுலகே இருட்டில் மூழ்கி இருந்த நேரம் அது. அந்த நேரத்து இந்த பாரத தேசத்தில் பிரபஞ்சம், சூரியன், சந்திரன், கோள்கள்,ஒலி, ஒளி, உடல், மனம், சிந்தனை, அவற்றிற்கு ஆட்படுதல் என்று இவற்றையெல்லாம் பற்றி யோசித்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பற்றி ஞானமும் கொண்டிருதார்கள். காலம் நமக்குத் தெரியப்படுத்தும் இந்த உண்மையின் உன்னதம், நிச்சயமாக நாம் மிகவும் பெருமைப்படக் கூடிய ஒன்று.


“வேதங்கள், உபநிஷத்துக்கள் மூலமாக இன்று நமக்குத் தெரியவரும் சில செய்திகளை உங்களுடன் கலந்து கொள்ளும் பேறு பெற்றமைக்கு நான் மிகவும் மகிழ்கிறேன். முதலில் மேலோட்டமாக சிலவற்றைப் பார்த்து விட்டு, முடிந்தவற்றை நமது கலந்துரையாடலுக்கு ஏற்ப ஆழ, அகண்டு பார்க்கலாம் என்பது எனது அபிப்ராயம். அதனால் இந்த உரையாற்றலின் முடிவிலோ, அல்லது அவ்வப்போது இடையிலோ நமது கலந்துரையாடல்களை வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.. இது விஷயத்தில் உங்கள் அபிப்ராயத்தைச் சொன்னால் நல்லது" என்று சொல்லிவிட்டு அவையை நெடுகப் பார்த்தார் தேவதேவன்.

இந்த நேரத்தில் பழஞ்சுவடிகளை ஆராயும் பணியை மேற்கொண்டிருந்த குழுவைச் சார்ந்த மல்லிகார்ஜூனன்,"உரையாற்றலின் இடைஇடையே எப்பொழுதெல்லாம் அவைஉறுப்பினர்கள் விளக்கம் வேண்டிவிரும்புகிறார்களோ அப்பொழுதெல்லாம் நம் கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம்" என்றார்.

"அப்படிச்செய்தால் பல விஷயங்களை விவரமாக நாம் புரிந்து கொண்டு,அதற்கு மேற்கொண்டு செல்லவும், அந்த நேரத்திலேயே பிற தகவல்களோடு ஒப்புமைப்படுத்தி ஆராயவும் வசதியாக இருக்கும் என்று நானும் நினைக்கிறேன்" என்றார் சிற்பகலை வல்லுனர் சித்திரசேனன்.

தேவதேவன் கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்க,அவரும்,"அவையின் அபிப்ராயப்படி அந்தந்த நேரத்து கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம்..அதற்கான நேரத்தை ஒதுக்கி தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். அந்த நேரத்தில் நாமெல்லாம் கலந்துரையாடலாம்.."என்று சொல்ல, தேவதேவன் மேற்கொண்டு உரையைத் தொடர்ந்தார்.



"இந்த உரையில் உபநிஷத்துகளில் பார்வையில் படைப்பு என்னும் பொருள் பற்றிச் சொல்ல வேண்டும். இறைவனின் படைப்பின் வெளிப்பாட்டில், பரந்த வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி – இந்த ஐந்து சமாச்சாரங்களே படைப்பின் மூலம் என்கிறது தைத்திரீய உபநிஷதம். இந்த உபநிஷதம் கிருஷ்ண யஜூர் வேதத்தைச் சார்ந்தது. தைத்திரீயம் என்னும் வார்த்தை, தித்திரி என்னும் சொல்லிலிருந்து வந்தது. தித்திரி என்றால் சிட்டுக்குருவி. வைசம்பாயனர் என்று ஒரு முனிவர். சிட்டுக்குருவி அன்ன அவர் மாணவர்கள் அந்த முனிவரிடமிருந்து இந்த உபநிஷதப் பாடங்களைக் கேட்டதால், இந்த உபநிஷதம் தைத்திரீய உபநிஷதம் என்று அழைக்கப்படலாயிற்று.

“தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச: ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவீ. ப்ருதிவ்யா ஓஷய: ஓஷதீப்யோsன்னம் / அன்னாத்புருஷ:

“ நம்மில் ஆத்மாவாக விளங்குபவன் இறைவன். அந்த இறைவனிலிருந்து பரந்த வெளி தோன்றியது. அதிலிருந்து இப்படி வரிசையாக-….வெளியிலிருந்து காற்று, காற்றிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி, பூமியிலிருந்து செடி கொடிகள், அந்தத் தாவர வகைகளிலிருந்து உணவு, உணவிலிருந்து மனிதன்.." என்கிறது தைத்திரீய உபநிஷதம். ஆக, பரந்த வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி, செடி கொடிகள், மனிதன்—இத்தனைக்கும் மூலம் இறைவன்.. பார்வைக்கு இனம் பிரித்துப்பார்க்கக் கூடியதாய் ஒவ்வொன்றும் வெவ்வெறாகத்தெரிந்தாலும், அத்தனைக்கும் ஆதிசக்தி இறைவன். அவனின் கூறுகளே அத்தனையும்.


தேவதேவன் அவை முழுக்க ஆழ்ந்து ஒருமுறை உற்றுப் பார்த்து விட்டுத் தொடர்ந்தார்: “ சரியா?.. இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில் மனிதனிலிருந்து எடுத்துக் கொள்வோம். மனிதன் என்று பொதுவாகக் குறிப்பிடுவது அவனது ஆளுமையை என்று எடுத்துக் கொண்டாலும் சரியே. ஐந்து உடம்புகள் கொண்டவன் மனிதன், என்கிறது அதே தைத்திரீய உபநிஷதம். தூல உடம்பு, பிராண உடம்பு, மன உடம்பு, புத்தி உடம்பு, ஆனந்தமய உடம்பு என்பவை இந்த ஐந்து உடம்புகள். நம் கண்ணுக்குத் தெரிகிற, நடமாடுகிற இந்த சரீரம் தூல உடம்பு. அடுத்தது இந்த தூல உடம்புக்குள்ளேயே இருக்கிற அகஉடம்பு; இது பிராண சக்தியால் ஆனது. அடுத்தது மன உடம்பு; இது மனத்தால் ஆனது. அதற்கு அடுத்தது புத்தி உடம்பு; இது புத்தியால் ஆனது. கடைசியாக ஆனந்த உடம்பு; இது ஆனந்தத்தால் ஆனது. உடம்பு என்றால் இந்த இடத்தில் தொகுதி என்கிற பொருளில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இதில் தூல உடம்பு ஒன்றே வெளிப்பட கண்ணுக்குத் தெரிகிற பகுதியாக அமைந்துள்ளது.


“இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். உடலில் உயிர்ப்பாய் உள்ள பிராணனை பிராண உடம்பு என்றும், கண்ணுக்குத் தெரிகிற தூல உடம்பை தூல உடம்பு என்றும் குறித்திருக்கிறார்கள். இந்த இரண்டும் உயிர்வாழும் எந்நேரத்தும் எல்லாரிடம் பொதுவாய் உள்ளவை. தூல உடம்பைப் பற்றிக் குறிப்பிடுகையில்,

“ஸ வா ஏஷ புருஷோ sன்னரஸமய: தஸ்யேமேவ சிர: அயம் ஷிண: பஷ: அயமுத்தர: பஷ: அயமாத்மா இம் புச்சம் ப்ரதிஷ்ட்டாதப்யேஷ ச்லோகோ வதி”

மனிதன் உணவால் ஆனவன். அவன் தலை இது. வலது, இடது பக்கம் இவை. இது நடுப்பகுதி. உடலைத் தாங்குகிற கீழ்ப்பகுதி இது" என்று சொன்னவர் ஒரு வினாடி நிறுத்தி மேலும் தொடர்ந்தார்... .


“அடுத்து, பிராண உடம்புக்கு விளக்கம் சொல்கிறார், கேளுங்கள்:


"தஸ்மாத்வா ஏதஸ்மாதன்ன ரஸமயாத் / அன்யோsந்தர ஆத்மா ப்ராண மய: / தேனைஷ பூர்ண: / ஸ வா ஏஷ புருஷவித ஏவ / தஸ்ய புருஷவிததாம் / அன்வயம் புருஷவித: / தஸ்ய ப்ராண ஏவ சிர: வ்யானோ தஷிண: பஷ: / அபான உத்தர: பஷ: / ஆகாச ஆத்மா / ப்ருதிவீ புச்சம் ப்ரதிஷ்ட்டா / ததப்யேஷ ஸ்லோகோ பவதி"

பிராண சக்தியால் ஆன உடம்புக்கு பிராணனே தலை. வியானன் வலது பக்கம். அபானன் இடது பக்கம். வெளி இதன் உடம்பு. பூமி கீழ்ப்பகுதியாய் இதற்கு ஆதாரமாய் இருக்கிறது"

--என்று கூறிவிட்டு


"மற்ற உடம்பாகிய தொகுதிகளைப் பற்றியும் அவசியம் சொல்ல வேண்டும்..” என்று மேற்கொண்டு தொடர்வதற்கு முன் அவையின் கருத்தறிய ஒருமுறை பார்வையைச் சுழலவிட்டார்.



(தேடல் தொடரும்)


அனைவருக்கும் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

5 comments:

கபீரன்பன் said...

//...உபநிஷத்துக்களின் பார்வையில் உடலும், உறுப்புகளும், மனமும் கொண்ட மனிதனைப் பார்ப்போம்//

இங்கே மட்டும் தான் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள விஷயமாக அலசப்படும் என்று எதிர்பார்க்கலாம். தேவதேவனின் அலசல் நல்ல வகையில் துவங்கியிருக்கிறது.

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

ஜீவி said...

@ கபீரன்பன்

தேவதேவனைக் கேட்டேன். தூல உடம்பு, பிராண உடம்பு--இவற்றை ஒரு பகுதியாகவும், மன உடம்பு, புத்தி உடம்பு, ஆனந்த உடம்பு--இவற்றை மற்றொரு பகுதியாகவும் வைத்துக் கொள்ளலாம் என்றார். இவற்றின் இடையே வேண்டிய இடங்களில் அவற்றிற்கிடையே ஆன தொடர்புகளையும் தொட்டுக் காட்டலாம் என்றார். அப்படிச் செய்தால், நிகழ்கால நோக்குப்படி உயிரியல்--மனவியல் பகுதிகளைப் பிரித்துப் பார்க்க வாகாக இருக்கும் என்றார். இடைஇடையே கலந்துரையாடல்கள் வேறு. என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.

தங்கள் கருத்துக்கும், புத்தாண்டு வாழ்த்துக்கும் மிக்க நன்றி, கபீரன்ப!

கிருத்திகா ஸ்ரீதர் said...

"பூவுலகே இருட்டில் மூழ்கி இருந்த நேரம் அது. அந்த நேரத்து இந்த பாரத தேசத்தில் பிரபஞ்சம், சூரியன், சந்திரன், கோள்கள்,ஒலி, ஒளி, உடல், மனம், சிந்தனை, அவற்றிற்கு ஆட்படுதல் என்று இவற்றையெல்லாம் பற்றி யோசித்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பற்றி ஞானமும் கொண்டிருதார்கள். காலம் நமக்குத் தெரியப்படுத்தும் இந்த உண்மையின் உன்னதம், நிச்சயமாக நாம் மிகவும் பெருமைப்படக் கூடிய ஒன்று."

ஞானிகளின் பூமி என்று நம் இந்தியா கொண்டாடப்படுவதும் இதனால் தானே.. நினைக்க நினைக்க எப்போதும் ஆச்சர்யப்படவைக்கும் உணர்வுகள் இவை...

ஜீவி said...

@ கிருத்திகா

ஆமாம், கிருத்திகா!
நினைவில் பதிந்திருக்கிற சில செய்திகளை எத்தனை தரம் எடுத்து எடுத்துப் பார்த்து மகிழ்ந்தாலும் மனம் நிறைவடைவதில்லை. அது தொடர்பாக ஏதேனும் பேசும் பொழுது, அல்லது எழுதும் பொழுது மீண்டும் நினைப்புக்கு வந்து, அதைச் சொல்லியே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு அப்படிப் பட்ட செய்திகளோடு நாம் ஒன்றிப்போய் விடுகிறோம் என்று நினைக்கிறேன்.

பகிர்தலுக்கு மிக்க நன்றி.

அப்பாதுரை said...

இரண்டாம் பாகம் பாதி படித்திருக்கிறேன். தொடர்வேன்.

இத்தனை வயதுக்குப் பிறகு ஒரு கருப்பைக்குள் நுழைந்து வெளிவந்த அனுபவம். பாராட்டுக்கள்.

//மகாதேவ் நிவாஸின் மேல்தளப்பரப்பில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காரணமே இது தான்..

strategic setup என்ற conceptல் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு. ஒரு குறிக்கோளை நாடுகையில் அதன் அத்தனை செயல்பாடுகளிலும் குறிக்கோளின் முத்திரை பதிந்திருக்க வேண்டும் என்று நினைப்பவன். மகாதேவ நிவாசின் அத்தனை descriptionகளையும் ரசித்தேன்.

//மனம் என்னும் தொடர்புச் சாதனம்

//வெளியே வியாபித்திருக்கிற பிரபஞ்ச காந்தசக்தி, நமக்குள் இருக்கிற வெளிகாந்த சக்தியின் எச்சமான உள்காந்தசக்தி, இரண்டையும் தொடர்பு படுத்துகின்ற மனசு--இந்த மூன்று விஷயங்க்களை கவனமாக நினைவில் கொள்ளுங்கள்

//பிரபஞ்சக் கோட்பாட்டில் பூமி என்பது மிகச்சிறிய ஒரு துகள். அந்தத் துகளில் துள்ளித் திரியும் மனிதன் என்னும் துணுக்கு போன்றத் துகளிலும் அந்த பிரபஞ்ச காந்த சக்தியின் நீட்சி நிரம்பி, பிரபஞ்சத்தின் ஒரு துணுக்கு போன்ற காந்தத்துகளாக மனிதனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆக, மனிதனும் பிரபஞ்ச காந்த சக்தியின் ஒரு துணுக்கு என்பது உண்மை.

நசிகேத வெண்பா எழுதுவதற்கு முன் இதைப் படித்திருக்க வேண்டும். on second thought.. நீங்கள் நசிகேத வெண்பாவை எழுதியிருக்க வேண்டும்.

மனம் என்னும் தொடர்புச் சாதனம் பற்றி ஒரு சிறிய புத்தகத்துக்கான கரு என்னுள்ளும் பல நாளாய்.. நசிகேதன் கதை எழுதிய பிறகு தொடர எண்ணினேன். ஆயாசத்தில் அதை ஒதுக்கிவிட்டேன். என்றைக்காவது..

இதைப் பற்றி அதிகம் பேர் ஆழமாகவும் தெளிவாகவும் சிந்தித்து எழுதியதாகத் தெரியவில்லை (தமிழில்). மனிதத்தின் மிக முக்கிய அம்சம் மனம் என்னும் தொடர்புச் சாதனம். இதைப் படித்தவுடன் நான் சிலிர்த்த விதம் எனக்குத் தான் தெரியும்.

மனதின் பிரிவுகளைப் பற்றிய தொன்மை மேலை வியாக்கியானங்கள் (ப்லூடோ) மிக ஆழமானவை. மேகநாதன் விளக்கங்கள் எனக்கு அவற்றை நினைவு படுத்தின.

மேகநாதன் க்ருஷ்ணமூர்த்தி மாலு மிகவும் கவர்கிறார்கள்.

எங்கும் எதிலும் இறைவனைக் காணவேண்டும் என்பது மட்டும் புரியவில்லை, ஏற்கமுடியவில்லை. ஏன், எதற்காக? அப்படிக் காண நேரிடின் இவை ஒருவரின் படைப்பு என்ற சாதாரண பொருளுக்குள் அடங்கிவிடுகிறதே. கம்பனின் உலகம் யாவையும் வரிகளுக்கும் என்னால் வேறொரு பொருள் கொள்ள முடிகிறது.

மனித மூளை.. அலைகள்... பிரமாதம். இதைப் பற்றி தமிழில் எழுதிய ஒரே எழுத்தாளர் நீங்கள் தான் என்று நினைக்கிறேன். சத்யேந்த்ர போஸ் எனும் மேதை இதைப் பற்றி எழுதியிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையெனில் அவசியம் படியுங்கள். மூளை அலைகள் பற்றி எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஜூலியஸ் சீசரின் மூச்சணு மூளையலைகளை இன்றைக்கு trap செய்ய முடியுமென்கிறார்கள். இந்த நுட்பத்தின் வளர்ச்சி சாத்தியங்கள் என்னை பிரமிக்க வைக்கின்றன. இந்த எண்ணங்களின் தாக்கத்தில் எத்தனையோ முன்னிரவுகள் வானத்தைப் பார்த்தபடி சிலிர்த்து உட்கார்ந்திருக்கிறேன். (இதையொட்டி ஒரு மூன்றாம்தர சிறுகதையும் சுழியில் எழுதியிருக்கிறேன்: சுசுமோ.)

ஓ.. மறக்குமுன்.. இந்த ஆழ்மனத் தேடலில் வணிக வால்மார்ட் இடம்பெற்றது குறுகுறுக்கிறது. தானாக விழுந்த முரண்பூ?



Related Posts with Thumbnails