மின் நூல்

Saturday, January 16, 2010

ஆத்மாவைத் தேடி…. 31 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


31. இசை இன்பம்


ன்றைய மாலை பயிற்சி வகுப்பில், மாணிக்கவாசகரின் திருவாசகக் கீர்த்தித் திருவகவலில் வரும் 'வாதவூரில் வந்தினிதருளிப் பாதச்சிலம்பொலி காட்டிய பண்பும்' என்கிற அருந்தொடர் வாசகத்திற்கு பொருள் கூறி சுவாசப் பயிற்சிகள் பற்றிக் கூறினார் சிவராமன். உயிர்மூச்சு பற்றியும், அதை முறைப்படி இயக்கி ஒழுங்குமுறைப் படுத்தும் பயிற்சிகளின் ஆரம்பப் பாடங்களைத் தொட்டு, அதற்கான பயிற்சிகளை படிப்படியாகச் செய்து காட்டி, திருப்பி எல்லோரும் அதைச் செய்வதைக் கண்காணித்து, வேண்டிய திருத்தங்களை வேண்டியவர் களுக்குக் கூறினார்.


மாலை சிவன் கோயில் தரிசனம் வழக்கம் போல வெகு அற்புதமாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் அன்றைய தரிசனம் அன்று பெற்ற புது அனுபவமாக அத்தனை பேருக்கும் அமைந்து விடுவது வாடிக்கை. காலையிலிருந்து கேட்ட உரை, பின்னாலான பயிற்சி வகுப்பு என்று அன்று பூராவும் பெற்ற அனுபவத்தை அன்றைய மாலை தரிசனத்தின் போது பெருமானின் காலடிகளில் சமர்ப்பித்து நன்றி சொல்வதேபோல அவன் அருளுக்கு வேண்டிக்கொள்ளல் அனைவருடைய வழக்கமும் ஆயிற்று.


ஒவ்வொரு நாளும் அன்றைக்கான மாலை தரிசனத்தில் தினமும் இரண்டு பாடல்களையாவது இசையுடன் பாடினால் தான் மாலுவுக்குத் திருப்தி. அன்றைய தின பாடலுக்காக மாலு சந்நிதிக்கு முன் அமர்ந்ததுமே அத்தனை பேரும் பின்னால், பக்கத்தில் என்று வரிசையாக அமர்ந்துவிடுவார்கள். பூங்குழலியும், நிவேதிதாவும் மாலு பாடும் பொழுதே சேர்ந்து பாடத் தயாராகி விடுவார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து அமர்ந்தவுடனேயே பிறைசூடிய பெருமானும் அவர்கள் பாடப்போவதைக் கேட்கத் தயாராகி விட்டமாதிரி தோன்றும்.


இன்றைக்கு மாலு குழுவினர் முதலில் 'ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேணும்.. ஜென்மம் கடைத்தேற..' என்கிற பாடலை காமாஸ் ராகத்தில் பாடிய பொழுது அவையினர் மெய்மறந்தனர். இராகமாலிகையில் அடுத்துப் பாடிய, வள்ளலாரின் "கோடையிலே இளைப்பாற" பாடலின் குளுகுளு சுகத்தில் சொக்கிப் போயினர். அடுத்து, ஆனந்த பைரவியில் "சொற்றுணை வேதியன்.." என்று தொடங்கிய பொழுது, நாவுக்கரசரும் அவர்கள் கூடவே அமர்ந்து ஆசி வழங்குவது போலத் தோன்றியது.


பூங்குழலிக்கும், நிவேதிதாவுக்கும் மாலுவைப் போலவே நல்ல குரல் வளம். அந்த இனிமை, இப்பொழுது மாலுவுடன் சேர்ந்து பாடும் பொழுது இத்தனை நாள் அடையாத இன்னொரு சிகரத்தைத் தொட்டு விட்ட மாதிரி தனி அழகுடன் மிளிர்ந்தது. சில நேரங்களில் அவர்களை மட்டும் பாட விட்டு, மாலு மெளனமாகி விடுவாள். மாலுவும் கூடச்சேர்ந்து பாடுகிறார் என்கிற நினைவில் இருவரும் இழைந்து ராக ஆலாபனை செய்து முடிக்கும் பொழுது 'நான் எங்கேயும் போகவில்லை, உங்களுடன் தான் இருக்கிறேன்' என்று சொல்கிற மாதிரி மாலு அவர்களுடன் சேர்ந்து கொள்வாள். உடனே அவர்களுக்கு குஷி பிறந்து விடும். லேசாக மாலுவைப் பார்த்து முறுவலித்தபடி நம்பிக்கையுடன் பாடுவார்கள்.


இந்த நேரத்திலெல்லாம் நிவேதிதாவுக்கு சின்ன வயசில் தான் சைக்கிள் விடக் கற்றுக் கொண்டது நினைவுக்கு வரும். அவளை சைக்கிள் சீட்டில் அமர்த்தி காலை ஊன்றிப் பெடலை அழுத்தச் சொல்லி விட்டு பின்னாடி சைக்கிள் சீட்டைப் பிடித்த படி அவளுடைய அண்ணன் வருவான். பின்னாடி சீட்டைப் பிடித்துக் கொண்டே வருபவன், எப்பொழுது சீட்டை விட்டான் என்று தெரியாது. அவன் கூட ஓடி வரவில்லை என்று தெரிகின்ற தருணத்திலும், கீழே விழுந்து விடாமல் பேலன்ஸ் பண்ணி சமாளித்து நம்பிக்கையுடன் நிவேதிதா நாளாவட்டத்தில் தானே தனியாக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டு விட்டாள்.. அந்த நம்பிக்கை இப்பொழுதும் தன்னுள் மாய்ந்துவிடவில்லை என்று தெரிந்து கொண்ட உற்சாகத்தில், யாருக்கும் தெரியாதவாறு பூங்குழலியின் கையை அழுத்திப் பிடித்தவாறே ஸ்வரபிரஸ்தாரம் செய்வாள். பூங்குழலியோ ஆரம்பத்தில் கொஞ்சம் காலம் சங்கீதம் கற்றுக் கொண்டவள். அந்த ஞானம் பட்டுப்போகாமல் ஒட்டிக் கொண்டிருந்ததால் மாலுவின் துணை என்கிற கொழுங்கொம்பைப் பற்றியடி அவள் சங்கீத ஞானம் பச்சென்று வளரத் தலைப்பட்டது. இந்த இரண்டு பேரின் தனித்தன்மையான முன்னேற்றம் மாலுவுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. சதஸ்ஸின் தொடக்க நிகழ்ச்சியாக இந்த இருவரின் தனிப்பட்ட கச்சேரியையே வைத்து விடவேண்டுமென்று மாலு நினைத்திருந்தாள். தன் நினைப்பு நிறைவேறுவதற்கு துணையாயிருக்க ஈசனை ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொள்ளவும் செய்வாள்.


தீபாராதனை முடிந்து வெளிப்பிரகாரத்திற்கு வரும் பொழுது அத்தனைபேரின் இதயத்திலும் ஆனந்தத்தாண்டவமிட்டுக் கொண்டிருந்தான் ஆடலரசன். தேவதேவன் நடுநாயகமாக வர அவரைச் சுற்றி வந்து கொண்டிருந்த நாலைந்து பேர் அட்டகாசமாக சிரித்தபடி அவரை ஏதேதோ கேட்டுக் கொண்டு வந்தனர்.
மேகநாதனும் கிருஷ்ணமூர்த்தியும் மிகவும் யோசனையில் ஆழ்ந்த மாதிரி நடந்து வர, பின்னால் வந்த சிவராமன் தமிழகக் குடவரை கோயில்கள் பற்றி சித்தரசேனனிடம் ஏதேதோ கேட்டுக் கொண்டு வந்தார்.


இன்றைக்குக் கொஞ்ச கூடத் தான் நேரம் ஆகிவிட்டது. சாப்பாடு முடித்து வந்த சிலபேர் அந்த மஹாதேவ நிவாஸின் கீழ்த்தள நீண்ட வராண்டாவிலேயே கூட்டமாக அமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தனர். நாளைய தினம்
பிராணன் பற்றிய தேவதேவனின் உரையைத் தொடர்ந்த கலந்துரையாடல் என்பதால், கலந்துரையாடலுக்கான விவர சேகரிப்பைக் குறித்தே பலரின்
கவனம் படிந்திருந்தது.


கிருஷ்ணமூர்த்தியுடன் மாலு எதையோ சொல்லிக் கொண்டே முன்னால் சென்று கொண்டிருக்க அவர்கள் பின்னால் சிவராமன் வந்து கொண்டிருந்தார். நடுஹாலை அவர் நெருங்குகையில், அவசர அவசரமாக அவரை நோக்கி வந்த ராம்பிரபு அவரை நெருங்கி, "நல்லவேளை.. நீங்களே வந்து விட்டீர்கள்.. உங்களுக்கு போன் கால் வந்திருக்கு, சார்!" என்றான்.

"எனக்கா.. யாருன்னு கேட்டீங்களா?"

"உங்க மகள் தான் சார்.. தமயந்தின்னு சொன்னாங்க.." என்று கொஞ்சம் உரக்கவே அவன் சொல்ல, "ஓ.. போன்லே தமாவா?" என்று கேட்டபடியே முன்னால் சென்று கொண்டிருந்த மாலு திரும்பினாள்.



(தேடல் தொடரும்)






No comments:

Related Posts with Thumbnails