மின் நூல்

Sunday, August 11, 2024

இது ஒரு தொடர்கதை -- 12

                                                 


'ஹலோ, தோழி' அனந்தசயனம்  மெளனமாக  இருப்பதைப் பார்த்து, "நான் என்ன சார் செய்யணும்?" என்று மறுபடியும் கேட்டான் மோகன்.

"அதைத்தான்-- நீ என்ன செய்யணும்ங்கறதைத் தான் யோசிச்சிண்டு இருக்கேன்.." என்று மோவாயைத் தடவிக் கொண்டிருந்தார் அனந்தசயனம்.  அடுத்த வினாடி டேபிளின்  மேல் கிடந்த ஒரு பென்சிலை எடுத்து லேசாக முன்னும் பின்னும் உருட்ட ஆரம்பித்தார்.

அவரே சொல்லட்டும் என்று அவர் விரல்களின் நர்த்தனத்தைப் பார்த்தவாறு  பேசாமல் இருந்தான் மோகன்.

நடுவில் ஒருதடவை இவன் பக்கம் திரும்பிப் பார்த்த பொறுப்பாசிரியர் ஜீ சடக்கென்று தன்  பார்வையை மாற்றி ஃபைலில் கவனம் கொள்கிற மாதிரி காட்டிக் கொண்டார்.  ஃபைலை அவர் பார்ப்பதாகக் காட்டிக்கொண்டாலும் அவர் மனசு இவர்கள் பேச்சில் தான் கவனம் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவனாய் இருந்தான் மோகன்.

லேசாக அனந்தசயனம் தொண்டையைக் கனைத்துக் கொண்ட பொழுது அவர் யோசித்து முடித்து விட்டு தன் யோசனையை இவனிடம் சொல்லத் தயாராகி விட்டதாக மோகனுக்குத் தோன்றியது.  அதன்படியே அவர், "நீ என்ன செய்யறேனா, மோகன்.." என்று தான் நினைத்ததை சொல்ல ஆரம்பித்தார்.  "தி.நகர் சிவா-விஷ்ணு கோயில் உனக்குத் தெரியுமில்லியா? அந்தக் கோயிலுக்கு பக்கத்திலே தனலெஷ்மி  தெருன்னு ஒண்ணு இருக்கு. அங்கே போ.   வலது சாரிலே நாலாவது வீடு.  வெளிகேட் சிமிண்ட் தூண்லேயே புரந்தரதாசர்ன்னு பேர் கல்லே செதுக்கி பதிச்சிருக்கும். சாயந்தரமா போறது நல்லது.  எங்கே சுத்தினாலும் மனுஷர் ஆறு ஆறரைக்கெல்லாம் வீட்லே ஆஜராகியிருப்பார்.  போய்ப் பாக்கறையா?" என்றார்.

மோகனுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. இருந்தாலும், "சரி, சார்.  போய்ப் பாக்கறேன்.. புரந்தரதாசர் யார், எதுக்கு நான் அவரைப்  பாக்கணும்ன்னு இன்னும் நீங்க சொல்லலையே?" என்றான்.

"ஹ..ஹ..ஹ..ஹ.." என்று அடக்கமாகச் சிரித்தார் அனந்தசயனம். "பாத்தையா? இப்படித் தான் அடிக்கடி ஆகிப்போறது.. என்ன யார்ன்னு சொல்லாமலேயே உங்கிட்டே சொன்னா உனக்கு என்ன தெரியும்?  இப்படித் தான்  அடிக்கடி ஆகிப்போறது.. என்  பார்யாள் கூட சொல்வாள்: 'ஏன்னா! பாதி யோசனைலேயே போய்டுது.  யோசிச்சதோட ரிசல்ட்டை மட்டும் ஒருத்தர் கிட்டே சொன்னா, நீங்க என்ன யோசிச்சீங்க, எதுக்குச் சொல்றீங்கன்னு யாருக்குத் தெரியும்?'ம்பாள். அது போகட்டும்.  இந்த புரந்தரதாசர்யார்ன்னா?.."

"எனக்கு ஒரு புரந்தரதாசர் தெரியும், தோழி சார்! கர்னாடக இசை மேதை புரந்தரதாசர்..."

"கரெக்ட்.  அவர் மேலே இவருக்கு  இருக்கற ஆசையாலே தான் அவர் பேரையே வைச்சிண்டிருக்கார். பேரண்ட்ஸ் வைச்ச பேர் ஸ்ரீநிவாசனோ, என்னவோ.. அற்புதமான இயற்கை நேசர் இவர்.  பிரபஞ்சம், எண்ணக் குவியல், காந்த சக்தின்னு நிறைய  சொல்வார்.  ஒவ்வொண்ணையும் அவர் சொல்றச்சே இதையெல்லாம் இவர் எங்கே தெரிஞ்சிண்டார்ன்னு கேக்கக் கேக்க ஆச்சரியமா இருக்கும். பெயிண்ட் கம்பனி ஒண்ணுலே அக்கவுண்ட்ஸ் செக்ஷன்லே இருந்து ரிடையர் ஆனவர்.  பெயிண்ட் கம்பெனிக்கும் பிரபஞ்ச ஞானத்துக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு  இவர்கிட்டே பேசிண்டிருக்கறச்சே எனக்குத்  தோணும். அற்புதமான மனுஷர். போய்ப் பார். பார்த்துட்டு அவரைப் பத்தி எனக்குச் சொல்லு.." என்றார்.

"எதுக்கு நா அவரைப்  பாக்கணும்ன்னு இன்னும் நீங்க சொல்லலையே?" என்று நினைவு படுத்தினான் மோகன்.

"பாத்தையா? எதை முக்கியமாச் சொல்லணமோ அதைச் சொல்லாம இருந்திருக்கேன், பார்! நல்ல வேளை, ஞாபகப்படுத்தினே!" என்றார் அனந்தசயனம். "நீ இந்த 'இது ஒரு தொடர்கதை' கதைலே எழுதியிருக்கேல்யோ? அந்த பாண்டியனுக்கு கோயில்லே ஏற்பட்ட அனுபவத்தைப்  பத்தி.. அந்த மாதிரி அனுபவங்களைப் பத்தி எங்கிட்டே இந்த புரந்தரதாசர் நிறையச் சொல்லியிருக்கார்.  இதெல்லாம் ரொம்ப சாதாரணம். அவர் OBE பத்திச் சொன்னப்போத்தான் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியமா இருந்தது.."

"OBE-ன்னா?"

"Out of Body experience.  உடம்பை விட்டு வெளியே சஞ்சாரம் செஞ்சிட்டு மறுபடியும் நம்ப உடம்புக்கே வந்து சேர்ந்துடறது.  இந்த மாதிரி நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கார். அதுக்கெல்லாம் என்னன்னவோ காரணம்லாம் சொல்வார்ப்பா! எனக்கு சரியாச் சொல்லத் தெரிலே.. நீயே அவரை நேர்லே பாத்துடேன்.  ஒரு தடவை அவரை பாத்துட்டையா, விடமாட்டே! அவரோட பேசறது, அவர் சொல்றதையெல்லாம் கேக்கறது உங்கதைக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.. அதுக்குத் தான் சொல்றேன்.." என்றார்.

"அப்படியா சார்?" என்று மலர்ந்தான் மோகன். "நிச்சயம் செய்யறேன்,சார்!"  என்று டைரி எடுத்து புரந்தரதாஸர் என்கிற பெயரை எழுதி முகவரியைக் குறித்துக் கொண்டான்.

"அப்ப நான் வரட்டுமா.." என்று விடை பெற்றுக் கொண்டார் அனந்தசயனம்.

அப்பொழுது தான் அவரைப்  பார்க்கிற மாதிரி, "என்ன ஓய்! எப்படி இருக்கீர்?" என்றார் ஜீ.

"மோகன் சார்கிட்டே வேலை முடிஞ்சாச்சு.. அடுதாப்லே உங்க கிட்டத் தான் வரலாம்ன்னு இருந்தேன்" என்று நாற்காலியிலிருந்து  எழுந்தவாறே சொன்னார் அனந்தசயனம்.

"அப்பவே உம்மைப்  பாத்திட்டேன்.  மோகன்கிட்டே பேசி முடியட்டும்ன்னு  இருந்தேன்" என்றார் ஜீ. "ஒண்ணுமில்லே.. டெஸ்பாட்சிலே லெட்டர்லாம் வாங்கிகிட்டீங்களான்னு கேக்கத்தான்.  'ஹலோ,தோழி'க்கு நெறைய லெட்டர்ல்லாம் வந்திருக்கு, பாருங்கோ.. இன்னும் இரண்டு மாசத்துக்கு உம்ம பாடு கொட்டாட்டம் தான்.. உம்ம பக்கத்துக்கு நிறைய வாசக ரசிகர்கள், ஓய்!" என்றார்.

"அதை அப்படியே ஆசிரியர் காதுலேயும் போட்டு வைக்கறது தானே..." என்றார் அனந்தசயனம், ஜீயின் பக்கத்தில் போய்.

"வேடிக்கை என்ன தெரியுமா? ஆசிரியர் தான் இதையே எங்கிட்டே சொன்னார்.  அதைத்தான் நான் உம்ம கிட்டே சொன்னேன்.." என்று சொல்லி புன்னகைத்தார் ஜீ.

"அதானே பார்த்தேன்" என்றார் அனந்தசயனம்.

"நம்ம பத்திரிகைலே எந்தந்த பகுதியை எத்தனை பேர் ரசிச்சுப் படிக்கறா, அதெல்லாம் பத்தி என்ன நினைக்கறான்னு-- அப்படி அவா நினைக்கறதுக்கு ஏத்த மாதிரி என்னன்ன புதுப்புதுப் பகுதிகளை புதுசா புகுத்தலாம்ன்னு அனலைஸ் பண்ணி  பெரிசு பெரிசா கிராஃப்பே போட்டு வைச்சிருக்கார், ஆசிரியர்.  கூப்பிட்டுக் காட்டினார்.  இந்த நாலஞ்சு மாசத்லே உம்ம பகுதி ஜிவ்வுனு எகிறியிருக்கு, ஓய்!"

"ரொம்ப சந்தோஷம், நல்ல சேதி சொன்னதுக்கு.. சொல்லப்போனா, இதான் எழுதறவனுக்கு உற்சாக டானிக், இல்லியா?.. இந்த ஜோர்லேயே போனதும் உக்காந்து எழுதணும்.. வரட்டுமா.." என்றார் அனந்தசயனம்.

"பேஷாய்.." என்று தானும் எழுந்திருந்து  கைகூப்பினார் ஜீ.


மாலை தி.நகர் வழக்கம் போலவான நெரிசலில்  இருந்தது.  தனலெஷ்மி தெரு சுலபத்தில் பார்வையில் சிக்கியது, முடிக்க வேண்டிய ஒரு வேலையின் தொடக்க சந்தோஷமாய் மோகனுக்கு இருந்தது.

தெருக்குள் நுழைந்ததும் ஒரு குடியிருப்பு பகுதிக்கு வந்த உணர்வு சற்று முன்னான நகர் சந்தடிக்கு வித்தியாசமாக இருந்தது.  தெருவின்  வலது பக்கம் மாறி பார்த்துக் கொண்டே வந்த பொழுது  புரந்ததாசரின் பெயர்ப் பலகை பதித்த வீடு கண்ணில் பட்டது.

வாசல் இரும்பு கேட் பட்டை இரும்புக் கொக்கி போட்டு மூடியிருந்தது. அதைத் தாண்டி உள்பக்கம் காய்ந்த புல்வெளி. புல்வெளியில் ஒரு வேப்பமரம் கிளைபரப்பி அந்தப் பிரதேசத்தையே உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது.  புல்வெளியின் நீளம் இருபதடி இருக்கும்.  அதைத் தாண்டியிருந்த வீட்டின் முன்புறம் சிமிண்ட் படிகட்டுகள். வீட்டின் முன்னால் தென்பட்ட திண்ணை போன்ற பகுதி மரச்சட்டங்களால் அடைக்கப் பட்டிருந்தது.

உள்ளே நாய் ஏதும் இருக்காது என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு, மோகன் வாசல் கேட் கொக்கியில் கை வைத்தான்.  கொக்கியை நீக்கிய பொழுது லேசாக கேட்ட சப்தம் உள்வீடு வரைக் கேட்டு விட்டது போலும்.

"யாரது?.." என்று ஒரு பெண்ணின் குரல் கேட்ட வினாடி நேரத்தில் அவளே வாசல் திண்ணையில் பிரசன்னமானாள்.  வாளிப்பான தேகம். மாநிறம் என்றாலும் அம்சமான முகம். தலையில் சீப்பு தொத்திக் கொண்டிருந்தது. தலைவாரிக் கொண்டிருந்தவள், வாசல் சப்தம் கேட்டு வந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான் மோகன்.

"உங்களுக்கு யாரைப்  பாக்கணும்?" என்று கேள்விக்குறியாய் முகம் மாறி அந்தப் பெண் கேட்டதும், மோகன் கேட் தூணில் பதித்திருந்த பெயர் பலகையைக் காட்டினான். "அவரைப் பார்க்க வேண்டும்.." என்று கொஞ்சம் உரக்கச் சொன்னான்.

"இருக்கார்.. உள்ளே வாங்க.." என்று சொல்லி விட்டு அந்தப் பெண் உள்பக்கம் போய் விட்டாள்.  "அப்பா! உன்னை யாரோ பாக்க வந்திருக்கா, பாரு!" என்று ஒலி அஞ்சல் செய்தது போல உள்ளிருந்து அந்தப்  பெண்ணின் குரல் வெளிக்கதவு தாண்டி வாசல் திண்ணை வரை வந்து விட்ட மோகனுக்குக் கேட்டது.

அவனே எதிர்பார்க்கவில்லை. மீண்டும் வெளிப்பக்கம் அந்தப்பெண் வந்த பொழுது 'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து' என்று தொடங்கும் பாரதிதாசனாரின் நிலவுப் பாட்டு மோகனின் நினைவுக்கு வந்தது.

"அப்பா இப்போ வந்திடுவா.. உள்பக்கம் வந்து இப்படி உட்கார்ந்திருங்கோ.." என்று அந்தத் திண்ணையோடு ஒட்டியிருந்த உள்பக்க ஹால் காட்டினாள்.

இரண்டு மூன்று பிரம்பு சோபாக்கள் அங்கிருந்தன.  பார்க்க வருகின்ற வெளி ஆட்களோடு உட்கார்ந்து பேசவான வரவேற்பு ஹால் போலிருந்தது.

அடக்கமாக உள்பக்கம் வந்து ஒரு சோபாவில் உட்கார்ந்தான் மோகன்.  அவன் உட்காருவதற்குத்தான் காத்திருந்த மாதிரி, அவன் உட்கார்ந்ததும் தலைக்கு மேலான மின்விசிறி சுழன்றது.  அந்தப் பெண் தான் ஸ்விட்சை இயக்கியிருப் பாள் என்கிற உள்ளுணர்வில் அவள் இங்கே தான் இருக்கிறாளோ என்கிற ஆவலில் பின்பக்கம் தலை திருப்பிப் பார்த்தான் மோகன்.

அவன் அப்படிப் பார்த்த நொடியில் விடுவிடுவென்று உள்பக்கம் செல்கிற அந்தப் பெண்ணின் பின்பக்கம் தான் அவனுக்குத் தெரிந்தது..

மாலையிலிருந்து நடக்கும் காரியங்களின் போக்கு மோகன் மனசுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இன்று தான்  ஆரம்பம்.  இந்த ஆரம்பம் இனிமேல் இந்த வீட்டிற்கு நிறைய தடவைகள் வந்து போவதான தொடர்ச்சிகளைக் கொண்டிருக்கும் போல ஒரு எண்ணம் அந்த ஷணம் அவன் நினைவில் படிந்தது.  மீண்டும் அதையே நினைத்துப் பார்க்க சுகமாகவும் இருந்தது.

அந்த சமயத்தில் ஹாலிருந்து  பார்த்தாலே தெரியும் படியாக அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு பின்பக்கமாயிருந்த மாடிப்படிகளில் யாரோ இறங்கி வருகிற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.


(இன்னும் வரும்) 

10 comments:

ஸ்ரீராம். said...
This comment has been removed by a blog administrator.
கோமதி அரசு said...
This comment has been removed by a blog administrator.
கோமதி அரசு said...

//மீண்டும் வெளிப்பக்கம் அந்தப்பெண் வந்த பொழுது 'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து' என்று தொடங்கும் பாரதிதாசனாரின் நிலவுப் பாட்டு மோகனின் நினைவுக்கு வந்தது.//

நான் என் புது பதிவில் நிலவு படம் போட்டு நிலவுபாடல் நினைவுக்கு வந்த பாடல்களை பகிருங்கள் என்று கேட்டு இருக்கிறேன்.

பாரதிதாசனின் நிலவு பாடல் அருமை.

கோமதி அரசு said...

இனிமேல் இந்த வீட்டிற்கு நிறைய தடவைகள் வந்து போவாதான தொடர்ச்சிகளைக் கொண்டிருக்கும் போல ஒரு எண்ணம் அந்த ஷணம் அவன் நினைவில் படிந்தது. //

ஒ, கதை நன்றாக போகிறதே!

Geetha Sambasivam said...

இது வெளியானதே அப்டேட் ஆகலை. ஏதோ பிரச்னை போல!:)))

"உடம்பை விட்டு சஞ்சாரம் செய்து எங்கே போக விரும்புகிறோமோ அங்கு போய் வந்து பின் தன் அனுபவங்களை சம்பந்தப்பட்டவரிடம் சொல்லிச் சரியா என்று சரி பார்ப்பது உண்டு!"//


கோமதி அரசு, அதிர்ச்சி அடைய வைச்சுட்டீங்க! :)))

Geetha Sambasivam said...

நீலவான வெண்ணிலா இந்த ஒரு பதிவோடு சரியா, இல்லைனா கதைக்கு சம்பந்தம் உண்டானு தெரியலை. :)))

மோகன் சந்தேகத்துக்குப் புரந்தரரின் பதில்களுக்குக் காத்திருக்கேன்.

ஜீவி said...

பாரதியைக் குருவாகப் பெற்றவர் என்றால் சும்மாவா?

ஜீவி said...

ஹி..ஹி.. நன்றாகப் போவதற்குத் தானே இதெல்லாம்?..

ஜீவி said...

நானும் அந்த ரூட்டைத் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் பிடி படவில்லை. :))

ஜீவி said...

காத்திருத்தலுக்கு நன்றி.

Related Posts with Thumbnails