மின் நூல்

Friday, March 4, 2016

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

பகுதி--3


போக வேண்டிய இடத்திற்கும் இறை நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் என்பது அடுத்த கேள்வி.

ரொம்பவும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால்  இறை நம்பிக்கை மனிதர்களை நல்வழிப்படுத்த உதவுகிறது.  

நீங்கள் சிரிப்பது எனக்குக் கேட்கிறது.  காலத்தின் கோலத்தில் இதெற்கெல்லாம் சிரிக்கத் தான் வேண்டும்.  இறைநம்பிக்கை கொண்டோரெல்லாம் நல்வழி நடப்பவர்களா என்ற அடிப்படை கேள்வி மிகவும் யோசனைக்குரியது தான்.
இறை நம்பிக்கை கொண்டோரெல்லாம் நல்வழி நடப்பவர்களோ இல்லையோ நல்வழி நடக்காதவர்க்ள் இறைவனைத் துணை கொள்வதில் அர்த்தமில்லை என்று தெரிகிறது.  அது வியர்த்தம்.

இறைவனைத் துணையாகக் கொள்வது என்பது போக வேண்டிய இடத்திற்கு இறைவனைத் தனக்குத் தோன்றாத் துணையாய்க் கொள்வது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

அதே மாதிரி இறை நம்பிக்கை கொள்ளாதவர்களெல்லாம் நல்வழி நடக்கமாட்டார்கள் என்றும் அர்த்தமில்லை.   இறை நம்பிக்கைக் கொண்டவர்களை விட நல்வழி நடப்பதில் இறை நாட்டம் இல்லாதவர்கள் அதிக நாட்டம் கொண்டிருக்கலாம்.  ஏனெனில் இறை நாட்டம் கொண்டவர்களாவது இறைவன் துணை இருக்கிறதாக பொய்யாக நினைத்துக் கொண்டு நல்வழிகளிலிருந்து நழுவலாம்.  இறை நாட்டம் கொள்ளாதாருக்கு அதுவும் இல்லை;  இவர்கள் கொண்டிருக்கிற நல்வழி ஒன்றே இவர்களுக்கு பலம் பொருந்தியத் துணையாகப் போகிறது. . ஆகவே அது  வேறு விஷயம்.

இயல்பாகவே நல்வழி நடப்பவர்களுக்கு இறை  நாட்டம் என்ற தாங்குகோலுக்கான அவசியம் இல்லாது போகலாம்.  

ஆனால் இறை நாட்டம் கொண்டோருக்கு நல்வழி நடப்பது அவசியத் தேவையாகி அதுவே இறைவனின் துணையாகி அவர்களை வழி நடத்துகிறது என்பதே சொல்ல வருவது.

இதனால் பெறப்படுவது என்னவென்றால்  இறை நாட்டம் இருக்கோ இல்லையோ நல்வழி நடப்பது மனிதராய் பிறவி கொண்டோருக்கு அத்தியாவசிய தேவையாகப் போகிறது. நல்வழி நடப்போர் எந்த பேதமூம் இல்லாமல் அந்த ஒரே குடையின் கீழ் ஒன்று சேர்கின்றனர்.

மனிதக் கூட்டமே சமூகமாகிப்  போவதால் நல்வழி நடப்போர் கூடக் கூட ஒட்டு  மொத்த சமூகக் கூட்டங்களே நல்வழி தேர்ந்து பிரபஞ்சம் பூராவுக்குமே நல்வழி ராஜபாட்டையாகிறது.   'ஒரே உலகம்'  என்ற பரந்துபட்ட பார்வை கிடைக்கிறது.  

டுத்த கேள்வி ஏன் நல்வழி நடக்க வேண்டும்?..

கம்பர் சொல்வார்:  

"கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை;  யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ:. 

அயோத்தியில் வாழ்கின்ற மாக்களிடையே கூட களவு  செய்பவர்
இல்லையாதலால் பொருட்களை காவல் காப்பவரும் இல்லை.  எதையும் யாசிப்பவர் இல்லையாதலால் அந்நகரில் கொடையாளிகளும் இல்லை

"எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே, 
இல்லார்களும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ".

அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கல்வி பொருள் ஆகிய எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே அந்நகரத்திலே இல்லாதவரும் இல்லை
உடையவர்கள் என்பதற்கும் இடம் இல்லை ---  என்பார்.

இது இல்லை என்பதினால்  அதன் நேரடி  தொடர்பு கொண்ட இன்னொன்று இல்லை என்று இப்படி நிறைய...:

சுற்றுச்சூழல் மாசுபடும்  தொல்லை இல்லையாதலால் பெரும்பானமையாக நோயாளிகள் இல்லை.

நோயாளிகள் இல்லையாதலாம் அதிகபட்ச மருத்துவ மனைகளும் மருந்துக் கடைகளும்  இல்லை

மருத்துவ மனைகள் அதிகம் இல்லையாதலாம் மருத்துவர்களின் கூட்டமும் அதிகமில்லை.

ஒன்று இல்லையென்றால் அதன்  நேரடித் தொடர்பு கொண்ட இன்னொன்றும் இல்லாது போகும். இது தான் ஒரு பிரச்னையின் ஆணிவேரைக் கண்டுபிடித்து அந்தப் பிரச்னைக்கான தீர்வைக் காணும் வழி 

இதே மாதிரி ஒட்டு மொத்த சமூகக் கூட்டமே நல்வழி நடக்கையில் பிரபஞ்சமே  தீயன நெருங்காது அமைதிக்  காடாய் பூத்துக் குலுங்கும்.

இதுவே போக வேண்டிய இடத்திற்கு வழிச்செலவாய் உதவக் கூடிய துணையாகும்.

அதற்கு அடுத்த  கேள்வி:

போக வேண்டிய இடத்திற்கும் நல்வழி நடப்பதற்கும் என்ன சம்பந்தம்?

அதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


(தொடரும்)

படங்கள் உதவியோருக்கு நன்றி.



  

13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ரொம்பவும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் இறை நம்பிக்கை மனிதர்களை நல்வழிப்படுத்த உதவுகிறது.//

இது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இறைநம்பிக்கை கொண்டோரெல்லாம் நல்வழி நடப்பவர்களா என்ற அடிப்படை கேள்வி மிகவும் யோசனைக்குரியது தான்.//

மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். நன்கு யோசிக்க வைத்தும் உள்ளீர்கள். :)

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இறை நம்பிக்கை கொண்டோரெல்லாம் நல்வழி நடப்பவர்களோ இல்லையோ நல்வழி நடக்காதவர்க்ள் இறைவனைத் துணை கொள்வதில் அர்த்தமில்லை என்று தெரிகிறது. அது வியர்த்தம்.//

திருப்பதிக்கும், சபரிமலைக்கும், மகாமகத்திற்கும், கும்பமேளாவுக்கும், இன்னும் இங்குள்ள ஆயிரக்கணக்கான மிகப்பிரபலமான கோயில்களுக்கும் செல்லும் கூட்டம் என்னவோ சற்றும் குறைவதாகவே தெரியவில்லை. இவ்வாறு ஒவ்வொருவரும் கிளம்பும் நோக்கங்களும் பலவிதமாக உள்ளன.

இவர்கள் எல்லோருமே நல்வழி நடப்பவர்கள் என்பதை ஏனோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் பலரும் வெறுமனே (வியர்த்தமாக) நடப்பவர்களாக மட்டுமே இருக்கக்கூடும் என நினைத்துக்கொள்வதும் உண்டு.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அதே மாதிரி இறை நம்பிக்கை கொள்ளாதவர்களெல்லாம் நல்வழி நடக்கமாட்டார்கள் என்றும் அர்த்தமில்லை. இறை நம்பிக்கைக் கொண்டவர்களை விட நல்வழி நடப்பதில் இறை நாட்டம் இல்லாதவர்கள் அதிக நாட்டம் கொண்டிருக்கலாம். ஏனெனில் இறை நாட்டம் கொண்டவர்களாவது இறைவன் துணை இருக்கிறதாக பொய்யாக நினைத்துக் கொண்டு நல்வழிகளிலிருந்து நழுவலாம். இறை நாட்டம் கொள்ளாதாருக்கு அதுவும் இல்லை; இவர்கள் கொண்டிருக்கிற நல்வழி ஒன்றே இவர்களுக்கு பலம் பொருந்தியத் துணையாகப் போகிறது.//

மிகவும் அழகாக, நியாயமாக, உள்ளது உள்ளபடிச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மனிதக் கூட்டமே சமூகமாகிப் போவதால் நல்வழி நடப்போர் கூடக் கூட ஒட்டு மொத்த சமூகக் கூட்டங்களே நல்வழி தேர்ந்து பிரபஞ்சம் பூராவுக்குமே நல்வழி ராஜபாட்டையாகிறது. //

இதைத்தான் பெரியோர்கள் ’ஸத் ஸங்கம்’ எனச்சொல்கிறார்கள் போலும்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதே மாதிரி ஒட்டு மொத்த சமூகக் கூட்டமே நல்வழி நடக்கையில் பிரபஞ்சமே தீயன நெருங்காது அமைதிக் காடாய் பூத்துக் குலுங்கும்.//

அந்த நாளும் வந்திடாதோ என நினைக்கத்தோன்றுகிறது. கட்டுரை தொடரட்டும்.

oooooo

G.M Balasubramaniam said...

ஜீவி சார் நீங்களே கேள்விகளைக் கேட்டு பதிலும் சொல்வது போல் தோன்றுகிறது தவறானால் மன்னிக்கவும்

V Mawley said...


வாசிப்பவனுடைய எண்ண அலைகளை பலவிதத்திலும் தூண்டிவிடும்
சக்தி படைத்தவையே , நல்ல இலக்கியம் என்று கொள்ளலாம் ..அவ்வாறே அமைத்திருக்கிறது ..தொடர்கிறேன் ..
மாலி

V Mawley said...


வாசிப்பவனுடைய எண்ண அலைகளை பலவிதத்திலும் தூண்டிவிடும்
சக்தி படைத்தவையே , நல்ல இலக்கியம் என்று கொள்ளலாம் ..அவ்வாறே அமைத்திருக்கிறது ..தொடர்கிறேன் ..
மாலி

ஜீவி said...

@ GMB

//ஜீவி சார் நீங்களே கேள்விகளைக் கேட்டு பதிலும் சொல்வது போல் தோன்றுகிறது //

எழுதுவதில் இது ஒரு உத்தி. கதைகளில் என்ன நடக்கிறது என்று நினைக்கிறீர்கள்? கதை எழுதுகிறவர் தானே கேள்வி-பதிலாய் கதாபாத்திரங்களைப் பேச வைத்து கதையை நகர்த்துகிறான்.

இதில் தவறேதும் இல்லை. இந்த உத்தியில் எதிரும் புதிருமாக பல விஷயங்களை அலச வாய்ப்பு ஏற்படுகிறது.

ஜீவி said...

@ V. Mawley

பிரமாதமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

தொடர்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

நண்பர் ஜிஎம்பீ பதிவில்,

"....என்று கூறி தற்போதைக்கு இந்த தர்க்க சிந்தனைகளை முடித்து வைப்போம். .." ஆஹா , " அப்பாடா ' என்றிருக்கிறது ...
மாலி

-- என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்து விட்டீர்கள்.

இப்பொழுது தோடருவதா, வேண்டாமா என்று யோசனை.

என்ன செய்யலாம், சொல்லுங்கள், மாலிஜி!

V Mawley said...

அந்த பின்னூட்டம் ,அவருடைய மனோநிலையையும் கருத்தில்கொண்டு இடப்பட்டது ..தாங்கள் மிக விரிவான ( extensive & intensive ) வயாசதிற்கு ச்ருதி கூட்டியிருகிறீர்கள்:..தொடந்..........து வருகிறேன் ...

மாலி

கோமதி அரசு said...

இறை நாட்டம் கொண்டோருக்கு நல்வழி நடப்பது அவசியத் தேவையாகி அதுவே இறைவனின் துணையாகி அவர்களை வழி நடத்துகிறது என்பதே சொல்ல வருவது.///
உண்மை. இறை நாட்டம் கொண்டோர் நல்வழியில் நடக்க வேண்டும், அவர்கள் குடும்பத்தினர் யாராவது தவறு இழைத்தாலும் இப்படி இறைபக்தி உள்ள வீட்டில் இப்படியா? என்ற கேலிக்கும், பேச்சுக்கும் ஆளாக வேண்டும். அது முன்வினை அதை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்று யாரும் நினைப்பது இல்லை. இறை பக்தி கொண்டவனுக்கு துன்பமே வரக்கூடாது என்பதை தான் எதிர்ப்பார்க்கிறார்கள். துன்பத்தில் துவளாமல், சோர்ந்து போகாமல் இருக்கும் நல் மனத்தை அந்த இறைவன் தான் அவர்களுக்கு அருள்கிறார் என்பதை உணரவேண்டும்.

Related Posts with Thumbnails