மின் நூல்

Wednesday, January 6, 2010

ஆத்மாவைத் தேடி…. 26 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


26. பூஜ்ஜியத்தில் ஒரு ராஜ்யம்.


வையில் அமர்ந்திருப்போர் அத்தனை பேரும் வெகு உன்னிப்பாக தன் பேச்சைக் கவனித்துக் கொண்டிருப்பதை கண்டு மிகுந்த திருப்தியுடன் இரண்டு பேர் எதிரும் புதிருமாக அமர்ந்து உரையாடுவதே போன்ற நெருக்க உணர்வுடன் தேவதேவன் தன் உரையைத் தொடர்ந்தார். "என்னை நானே சுயசோதனை செய்து கொண்ட, நான் உணர்ந்த சில செய்திகளை உங்களுக்கு அவசியம் சொல்லியாக வேண்டும். எனக்கேற்பட்ட இப்படியான உணர்வுகள் இங்கு அமர்ந்திருக்கும் வேறு சிலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான உணர்வில் இப்படியான அனுபவங்களை உணர்ந்திருக்கலாம் என்பதினால் நான் உணர்ந்த வாக்கிலேயே நான் உணர்ந்ததைச் சொல்வது தான் நியாயம் என்று உணர்ந்து இதைச் சொல்கிறேன்.


"திடீரென்று ஏற்பட்ட உடல் கோளாறுக்காக மருத்துவமனை ஒன்றில் சிகித்சைக்காக நான் ஒரு வார காலம் தங்க நேரிட்டது. அப்பொழுது எனக்கேற்பட்ட அனுபவங்கள் இதுவரை அறிந்திராத பல்வேறு உணர்வுகளை என்னில் தோற்றுவித்தது. அந்த அனுபவத்தில் உணர்ந்ததைச் சொல்கிறேன்" என்று ஏதோ கதையைச் சொல்வது போல தன் மனசில் இருப்பதைச் சொல்லத் தொடங்கினார் தேவதேவன். "அந்த மருத்துவமனையில் என் படுக்கைக்கு அருகே மிகப்பெரிய ஜன்னல்ஒன்று உண்டு. அந்த ஜன்னலுக்கு வெளியே மரங்கள் அடர்ந்த தோப்பு மாதிரியான பிரதேசம். பொழுது விடிகின்ற நேரத்தில் புள்ளினங்கள் எழுப்பும் விதவிதமான ஒலிகளில் விழிப்பு வந்து விடும். அதிகாலை ஆரம்பித்து இரவு வரையான அந்த மருத்துவமனையின் இயக்கத்தை ஒரு பட்டியலிட்டுத் தான் சொல்ல வேண்டும். ஒரு வாரம் அந்த மருத்துவ மனையில் இருந்த உணர்வு, வழக்கமாக இல்லாத வேறு ஒரு தனி உலகில் இருப்பது போன்ற உணர்வை என்னில் ஏற்படுத்தியது. அந்த மருத்துவமனைக்கு வெளியான பிரதேசங்களில் எனது செயுல்பாடு இல்லாமையால், என்னுடைய தொடர்ந்த இங்கு இருப்பதான இருப்பே, இருக்கின்ற இந்த மருத்துவமனையே எனக்கு ஒரு தனித்த உலகமாகத் தோற்றமளிக்கின்ற பிரமையை ஏற்படுத்து கின்றதோ என்று கூட எண்ணினேன்.


"இன்னொரு தடவை அப்படியும் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது. சென்னை ரயில் நிலையத்தில், ஒரு இரவு நேரம் பூராவும் நான் இருக்க நேர்ந்த போது வேறு வகை யான தனி உலக உணர்வு ஏற்பட்டது. இரயில்கள் வந்தும் போய்க்கொண்டும் இருக்கின்றன. அதே போல வெளியூர்களுக்குச் செல்கிறவர்கள், இங்கு வருபவர்கள் என்று, தங்குமிடங்களில், காத்திருப்பு இடங்களில், சொந்தங்களை வழியனுப்ப-- வரவேற்க, என்று ஒரே ஜனத்திரள்! இரவு, பகல் வித்தியாசமில்லா மல் அப்படி ஒரு கூட்டம்! சந்தேகமேயில்லாமல் இந்த இரயில் நிலையமே ஒரு தனி உலகம் தான் என்கிற தீர்மானத்திற்கு அப்போது வந்து விட்டேன். வெளி தேசம் சென்றபொழுது தொடர்ந்த பிரயாணத்தின் இடைநிலை இடமாகத் தங்கிய ஃப்ராங்க்ஃபட் விமானநிலையத்தில் இதே மாதிரியான உணர்வு தான் என்னை ஆட்கொண்டது.


"இதெல்லாம் நமக்கு வெளியே அந்தந்த நேரத்து ஏற்படுகின்ற உணர்வுகளின் அடிப்படையில் ஏற்படுகின்ற மயக்கங்கள் என்று தெளிந்தேன். ஆனால் எனக்குள்ளேயே ஒரு தனி உலகை நான் கண்டபொழுது திகைத்துப் போய் விட்டேன். அந்த தனிஉலகைப் பற்றித்தான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.." என்று சொல்லிவிட்டு லேசாகத் தொண்டையைச் செருமிக் கொண்டார் தேவதேவன். "இந்தத் தனி உலகம் அந்த மூன்றும் மாதிரியானது அல்ல; வேறு வகைத்தானது. வேறு வகைத்தான தனி உலகம் இது என்று--- நமது உடலினைத் தான் சொல்கிறேன். எல்லாம் உங்களுக்குத் தெரிந்த செய்திகள் தான். இருந்தாலும் இந்த இடத்தில் இது என்று சொல்ல வேண்டிய எதையும் சொல்ல வேண்டிய இடத்தில் பொருத்திச் சொன்னால், அப்படிச் சொன்னதின் உணர்வே அலாதியானது இல்லையா?..


தேவதேவன் நிதானமாக பேசியது அவையின் நிசப்தத்தில் ஸ்பஷ்டமாக ஒலித்தது. "இந்த உடலை எனது என்று சொந்தம் கொண்டாடுகிறோமே தவிர உள்ளிருக்கும் சமாச்சாரம் எதுவும் நம் ஆளுகையில் இல்லை என்று கொஞ்சமே யோசித்தாலும் பட்டவர்த்தனமாகப் புரியும். வாய் வழி உள்ளே போவது, சக்தியாக உறிஞ்சப்பட்டு சக்கையாக வெளிவருவது வரை சத்தியமாக நம் கையில் இல்லை; உள்ளே அனுப்புவது மட்டும் தான் நம் வேலையாகிப் போகிறது. அதற்கு மேலான இயக்கம் நம்மால் இல்லை. விரல் நகம் வளர்வது கூட நம் கையில் இல்லை! உடலுக்கு ஒரு சிறு தொந்தரவு வந்து விட்டாலும் இந்த உண்மை முகத்தில் அறையும்! காலையில் எழுந்ததும், இன்று பூராவும் இந்த உடம்பு இப்படி இயங்க வேண்டும் என்று புரோக்ராம் செட் பண்ணுவது போல் எதுவும் செய்ய முடியாது; எதுவும் நம் கையில் இல்லை. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் தான், அனுதினமும் கழிந்து கொண்டிருக்கிறது. தூங்கியிருந்தாலும் விழித்திருந்தாலும் சம்பந்தப்பட்டவரை சட்டையே செய்யாமல் மூச்சு பாட்டுக்க உள்ளே--வெளியே; இதயம் பாட்டுக்க தன்னுடைய லய துடிப்பில், நுரையீரல்கள் பாட்டுக்க தன் போக்கில் சுருங்கியும் விரிந்தும், ஆக.. ஒன்று நன்றாகத் தெரிகிறது, நம் கட்டுப்பாட்டில் இல்லாத தூல உடம்பின் உள் இயக்கம் என்பது நம்மிடமிருந்து வேறுபட்ட தனி உலகம் தான்! ஆனால், நாம் உயிர்ப்புடன் இயங்குவதற்கான ஆதாரம் உடலின் உள் உறுப்புகளின் இயக்கத்தைப் பொறுத்து இருக்கிறது என்பது தான் உண்மை. அதாவது நம்மால் ஆகக்கூடியது என்று எதுவும் இல்லாத, நமக்கேத் தெரியாத ஒரு சக்தியின் ஆளுகையில், அதன் தயவில், நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அனுதின சாகசங்களான நம் வாழ்வே, ஒரு பூஜ்யத்தின் மேல் நிச்சயமில்லாமல், அதுவே வேறொரு சக்தியின் ராஜ்யமாக ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது!



"இன்னும் யோசித்துப் பார்த்தால், இந்த 'நாம்' 'நமது' 'நம்மால்' எங்கிற வார்த்தைப் பிரயோகங்களே அர்த்தமில்லாதவைகளாகத் தெரிகிறது. தெரிந்தும் வேறு வழி தெரியாமல், இந்த உடல் இந்த நேரத்தில் இவனது என்று பெயர் வைத்த சொந்தத்தில், இந்த 'எனது' 'என்னுடைய' வார்த்தைகளை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். வேறு வழி இல்லை. உயிர் சுமந்து உலவுவதற்கு ஆதாரமான இந்த உடலின் இயக்கமே என்னால் இல்லாத போது, இவற்றிற் கெல்லாம் எந்த அளவு உரிமை கொண்டாடுவது என்று எனக்கே தெரியவில்லை. எவரால் இந்த காரியங்களெல்லாம் நடக்கிறதோ அவருக்குச் சொந்தமானது அல்லவா இது?.. 'யாரால் இந்தக் காரியங்கள் நடக்கிறது என்று தெரியவில்லை; ஏதோ நடக்கிறது.. நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்' என்பது சரியான பதிலாகாது.. குறைந்தபட்சம் எப்படி இப்படியெல்லாம் நடக்கிறது என்கிற யோசிப்பாவது வேண்டுமில்லையா?.." என்று ஏதோ எதிரில் யாரோ நின்று கொண்டிருக்கிற மாதிரி, அவரிடம் தான் விளித்துக் கேட்கிற மாதிரி கேட்டுவிட்டு மேல்துண்டை இழுத்து விட்டுக் கொண்டு மேலும் தொடர்ந்தார் தேவதேவன். "மோட்டாரில் உட்கார்ந்து வெறுமனே பயணம் செய்பவர் நாம்; அந்த மோட்டாரை ஓட்டுவது வேறு யாரோ. அவர் தயவில் தான் மோட்டார் ஓடுகிறது. இயந்திரம் அவர் ஆளுகையில் இருப்பதால், எந்த நேரத்தில் எதுவேண்டுமானாலும் அவர் செய்யலாம். இதற்கு மேல் ஓடாது என்று பாதி வழியில் அவர் கைவிரித்தால், இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. உங்களைப் பொருத்தமட்டில், இந்த நேரத்தில் நீங்கள் அந்த மோட்டாரைப் பெற்றிருப்பதால், உங்களுக்குத் தெரிந்த அளவில் அந்த மோட்டாரை மிக்க கவனத்துடன் பழுதற்ற நல்ல நிலையில் நீங்கள் வைத்திருக்கலாம்; ஆனால் அப்படி வைத்திருப்பது மட்டுமே ஒழுங்கான பயணத்தை உத்திரவாதப்படுத்தப் போவதில்லை. சீரானபயணத்திற்கு பல விஷயங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், பயணிக்கிற உங்களுக்கு எதையுமே தீர்மானமாக நிர்ணயிக்க முடியாத நிலை" என்று சொன்ன தேவதேவன் மேலும் தொடர்வதற்கு முன் கொஞ்சம் நிதானித்தார்.


(தேடல் தொடரும்)

8 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

""இன்னும் யோசித்துப் பார்த்தால், இந்த 'நாம்' 'நமது' 'நம்மால்' எங்கிற வார்த்தைப் பிரயோகங்களே அர்த்தமில்லாதவைகளாகத் தெரிகிறது. தெரிந்தும் வேறு வழி தெரியாமல், இந்த உடல் இந்த நேரத்தில் இவனது என்று பெயர் வைத்த சொந்தத்தில், இந்த 'எனது' 'என்னுடைய' வார்த்தைகளை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். வேறு வழி இல்லை. உயிர் சுமந்து உலவுவதற்கு ஆதாரமான இந்த உடலின் இயக்கமே என்னால் இல்லாத போது, இவற்றிற் கெல்லாம் எந்த அளவு உரிமை கொண்டாடுவது என்று எனக்கே தெரியவில்லை"

உண்மைதான். இதை மிகவும் உணர்ந்து கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் வெகு சமீபத்தில் நடந்தது. மிகவும் நெருக்கமாக ஒரு நன்பரின் மரணத்தை காண நேர்ந்தது. மாரடைப்பால் மூளை செயல்பாட்டை இழந்த அன்னாரது உயிரைக்குறித்த முடிவை அவரல்லாது வேறு யாரோ எடுக்கக் வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது உள்ளே தோன்றிய வெளிச்சத்தில் இன்னும் என்னன்னவோ யோசனைகள் வளர்ந்து கொண்டே போகிறது....

கபீரன்பன் said...

மிக அருமை

///ஆக.. ஒன்று நன்றாகத் தெரிகிறது, நம் கட்டுப்பாட்டில் இல்லாத தூல உடம்பின் உள் இயக்கம் என்பது நம்மிடமிருந்து வேறுபட்ட தனி உலகம் தான்! ஆனால், நாம் உயிர்ப்புடன் இயங்குவதற்கான ஆதாரம் உடலின் உள் உறுப்புகளின் இயக்கத்தைப் பொறுத்து இருக்கிறது என்பது தான் உண்மை. அதாவது நம்மால் ஆகக்கூடியது என்று எதுவும் இல்லாத, நமக்கேத் தெரியாத ஒரு சக்தியின் ஆளுகையில், அதன் தயவில், நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அனுதின சாகசங்களான நம் வாழ்வே, ஒரு பூஜ்யத்தின் மேல் நிச்சயமில்லாமல், அதுவே வேறொரு சக்தியின் ராஜ்யமாக ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது! ///

நீங்கள் கோடிட்டு காட்டியிருக்கும் அம்சங்களை ஒவ்வொன்றாக ஒரு இடத்தில் அமர்ந்து நினைவுக்குக் கொண்டுவந்தால் அதுவே ஒரு தியானம் தான். இப்படி சிந்திப்பதற்கு இறைதத்துவம் தேவையில்லை.

பூஜ்யத்தில் நடக்கின்ற ராஜ்யத்தின் அதிசயமே போதும் !

ஜீவி said...

@ கிருத்திகா

என்னனென்னவோ யோசனைகள் பல நெருக்கடி நேரங்களில் தான் நமக்குத் தோன்றும். தோன்றுவதை ஓர் இடத்தில் ஆர அமர உட்கார்ந்து யோசனை செய்யின், அதுவே அடுத்து கபீரன்பன் சொல்கின்ற தியானம்.

யோசிப்பது பெண்களின் குணம் என்பார் பாலகுமாரன். இதுவும் ஆழ்ந்த யோசனைக்குரியதே. அதைவிடுத்துப் பார்த்தால் யோசனைகள் மனிதரை சாந்தப்படுத்தும் என்று தெரிகிறது.
யோசிக்க யோசிக்க நிதர்சனம் புரியும்.
ஆகக் கூடியது தெரியும். அவசர முடிவெடுப்போருக்கு அத்தியாவசியமான ஒன்று இந்த யோசிப்பு.

வருகைக்கு நன்றி, கிருத்திகா!

ஜீவி said...

@ கபீரன்பன்

ஆமாம். அருமையாக மட்டும் இல்லை வெகு அழகாகவும் சொல்லியிருக்கிறீர் கள். 'இப்படிச் சிந்திப்பதற்கு இறைத் தத்துவம் தேவையில்லை' என்கிற சொற்றொடர் எவ்வளவு இயல்பாக வந்து விழுந்திருக்கிறது என்று எண்ணி அதிசயத்துப் போகிறேன்.

என்ன பெயரிட்டு அழைத்தால் என்ன?.. அல்லது எந்த பெயரும் இடாமல் போனால் தான் என்ன?.. இதுவே, அது, அதுவே இது' என்றிருக்கையில் எது எதுவாய் இருந்தால் தான் என்ன?.. 'தன்னை' அறிதல், தலைவனை அறிதல் அல்லவோ?.. அதற்கு எந்த லேபிளும் அவசியமில்லை தான். தன்னை உணர்ந்த தனித்தனி நபர்கள் போதும். அந்த தனித்தனி நபர்கள் தேவனாவது போதும்.

வருகைக்கும், முத்திரை பதிக்கும் கருத்தைச் சொல்லி வழி நடத்துவதற்கும் மிக்க ந்ன்றி, கபீரன்ப!

Shakthiprabha (Prabha Sridhar) said...

மிக அற்புதமான பதிவு

ஜீவி said...

@ ஷக்தி பிரபா

இதற்குத் தான் சேர்த்து வைத்துக் கொண்டு படிக்கக் கூடாது என்கிறது.
பின்னூட்டத்தை ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொள்ள வேண்டியிருக்கிற தல்லவா?..

மிக்க நன்றி, ஷக்தி.

கோமதி அரசு said...

//அந்த மோட்டாரை மிக்க கவனத்துடன் பழுதற்ற நல்ல நிலையில் நீங்கள் வைத்திருக்கலாம்; ஆனால் அப்படி வைத்திருப்பது மட்டுமே ஒழுங்கான பயணத்தை உத்திரவாதப்படுத்தப் போவதில்லை. சீரானபயணத்திற்கு பல விஷயங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், பயணிக்கிற உங்களுக்கு எதையுமே தீர்மானமாக நிர்ணயிக்க முடியாத நிலை"//

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.

வாழ்க்கை பயணத்தை நடத்தி செல்லும் இறைவன் அல்லவா முடிவு செய்ய வேண்டும் நம் கையில் இல்லை என்பதே உண்மை.

ஜீவி said...

@ கோமதி அரசு

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

Related Posts with Thumbnails