27. உயிரின் சரிதம்
"முதலில் உடல், அதன் உறுப்புகள், பிராணன் இவற்றையெல்லாம் பற்றி உபநிஷத்துகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்த்து விட்டு, பின்னால் மனம், புத்தி,ஆனந்தம் ஆகியவற்றை வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். இப்படிச் செய்வதால் ஒரு செளகரியம் உண்டு. உடல்--மனம் இந்த இரண்டு சம்பந்தப்பட்டவை களையும் தனித்தனியாக ஓர்ந்து பார்க்க வாய்ப்பு கிடைப்பதால் இவற்றையெல்லாம் பற்றி தீர்மானமான கருத்துக்களைத் தொகுக்க முடியும் என்று எண்ணுகிறேன். இந்த இரண்டுக்கும் இடையே கலந்துரையாடலை வைத்துக் கொண்டு, இறுதியாக இரண்டுக்கும் ஆன வரையறைகளை வகுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்" என்று மேலும் தொடர்வதற்கு முன் தேவதேவன் எப்படி இந்த உரையை அமைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி தங்கள் குழுவின் கருத்தாக இதைச் சொன்னார்.
"முதலில் உடம்பைத் தனியாக எடுத்துக் கொள்வோம். உடல், அந்த உடல் உயிர்ப்புக்கான பிராணன், அந்தப் பிராணனின் இருப்புக்கான சக்தியாக உணவு-- இந்த மூன்றும் ஒரு முக்கூட்டு. இந்த முக்கூட்டிற்கு அடிப்படை ஆதாரசக்தியாக இருப்பது உணவு. அதனால் உணவைத் தெய்வமாகப் போற்றுகிறது உபநிஷதம். சகோதரி நிவேதிதா அவர்கள் இந்த அவையில் உரையாற்றும் பொழுது பிராணனைப் பற்றி லேசாகக் கோடி காட்டினார்கள். பிராணனை 'காற்றின் தந்தை நீ' என்று சுட்டிக்காட்டும் பிரச்ன உபநிஷதக் குறிப்பைக் கொடுத்தார்கள். மனம் இயங்குவதற்குக் கிடைத்த இயங்கு பொருள் உடல் என்றும் மனம், உடல் இரண்டையும் உருவாக்கியதும் பிராணன் தான் என்றார்கள். இன்னொன்றையும் சொன்னார்கள். 'ஆத்மாவும், பிராணனும் மனிதனும் அவனது நிழலும் போல என்று சொல்லி அதற்கு எடுத்துக்காட்டாக பிரச்ன உபநிஷத சுலோகம் ஒன்றையும் சொன்னார்கள்.
"பிராணன் பற்றி விவரமாக இந்தப் பகுதியில் சொல்ல வேண்டி யிருந்ததினால், அவர் பேசும் பொழுது இந்தபிராணன் பற்றி கோடிட்டு காட்டுகிற மாதிரி சில குறிப்புகள் மட்டுமே கொடுக்க நேர்ந்தது. மனிதனின் ஐந்து உடம்புகளைப் பற்றிப் பேசும் இந்த நேரத்து பிராணனைப் பற்றி விவரமாக பேச நேரும் என்கிற காரணத்தால் தான் அந்த ஏற்பாடு" என்று சொன்ன தேவதேவன் தொடர்ந்தார். "இந்த உரை தயாரிக்கும் பொழுது உயிரியல் அறிஞர் உலகநாதன் அவர்களும் உடனிருந்தார்கள்.. உபநிஷத்துக்கள் சொல்லும் உண்மைகளை ஒரு புறம் வைத்துக் கொண்டு மறுபுறம் இன்றைய உயிரியல் விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளான அறிதல்களுடன் அவற்றை ஒருசேரப் பார்த்து, நமது உயிரியல் விஞ்ஞானம் இன்னும் என்ன என்ன விஷயங்களில் அகலக் கால்பரப்ப வேண்டும் என்று தொகுத்துக் கொள்வதின் அடிப்படையில், அதற்கு நம்மாலான பங்களிப்பையும் தர வேண்டும் என்கிற ஆசையும் எங்களுக்கிருந்தது.
"பிராணன் என்பது ஆத்மாவிலிருந்து தோன்றியது; மனிதனும் அவனது நிழலும் போல இது ஆத்மாவில் விரவியுள்ளது; மனத்தின் செயல்பாடுகளால் இது உடலில் நிலைகொண்டுள்ளது-- என்று பிரச்ன உபநிஷதம் சொல்கிறது. இந்த பிரச்ன உபநிஷதம் பற்றி நிறையச் சொல்ல வேண்டும். இந்த உபநிஷத் அதர்வண வேதத்தைச் சார்ந்தது. 'பிரச்ன' என்றால் கேள்வி என்று பொருள். பிப்பலாதர் என்று ஒரு முனிவர். அறிவு சார்ந்து தங்களுக்குள் எழுந்த சில வினாக்களுக்கு விடை தேடி பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒன்று சேர்ந்த ஆறு பேர் இந்த பிப்பலாத முனிவரைத் தேடிக் கண்டுபிடிக்கின்றனர். அவரிடம் குருகுலக் கல்வி அனுகிரகிக்க வேண்டுகின்றனர். முனிவரும் சம்மதிக்கிறார். குருகுல வாழ்க்கையின் ஆரம்ப கால பயிற்சிகளுக்குப் பின் தங்கள் மனத்தைக் குடைந்த கேள்விகளை இந்த ஆறு பேரும் குருவிடம் பவ்யமாக சமர்ப்பிக்கின்றனர். படைப்பு சம்பந்தப்பட்ட அவர்களின் கேள்விகளுக்கு-- ஒவ்வொருவரும் வரிசையாக கேட்கும் ஒவ்வொரு கேள்வி--அவை தொடர்ப்பாகக் கிளைக்கும் கேள்விகள், இவை அத்தனைக்கும் பிப்பலாத முனிவர் சொல்லும் பதில்களே இந்த உபநிஷதம். இப்படி அந்த ஆறுபேர்களில் ஒருவர் கேட்ட கேள்விகளில் ஒன்று: "ஐயா, இந்த பிராணன் எங்கிருந்து பிறந்தது?"
"இந்தக் கேள்வியைக் கேட்ட அச்வலர் என்பவரின் மகனான கெளசல்யனைப் பார்த்து பிப்பலாத முனிவர் சொல்கிறார்: 'பிராணனின் பிறப்பிடம் ஆன்மாவாகும்" இப்படியே கேள்வி-பதில் ரூபத்தில் உயிரைப் பற்றிய சமாச்சாரங்கள் நிறைய இந்த உபநிஷதத்தில் வருகின்றன. வினாக்களையும் அவற்றிற்கான விடைகளை யும் கண்டு நாம் பிரமிக்கிறோம். அந்த தவசிரேஷ்டரான பிப்பலாத முனிவருக்கு நமது நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொண்டு ஒவ்வொன்றாகப் பார்ப்போம்" என்று தேவதேவன் சொன்னார்.
(தேடல் தொடரும்)
2 comments:
//அந்த தவசிரேஷ்டரான பிப்பலாத முனிவருக்கு நமது நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொண்டு ஒவ்வொன்றாகப் பார்ப்போம்//
பணிவான நமஸ்காரம்.
@ ஷக்திபிரபா
பிரச்ன உபநிஷத்தைப் படித்தால், நாமே குருகுலக் கல்வி பெறுவது போலவும், தவசிரேஷ்டர் பிப்பலாத முனிவர் நமக்கு கல்வி போதிப்பது போலவும் ஏற்படும் உணர்வு தான் விசேஷமானது.
சில உணர்வுகளும் அதன் அடிப்படையில் நாம் உணர்வதும் மானசீகமாக இருந்தாலும், அதனால் கிடைக்கும் திருப்தியையும், சந்தோஷத்தையும் வார்த்தைகளால் அடக்கி சிறைப்படுத்த முடியாது. அதைத் தாண்டிய அற்புத உணர்வுகள் அவை.
இதைத் தாண்டி என்ன சொல்வது என்று தெரியவில்லை.
Post a Comment