நாட்டுக்கு சுதந்தரம் கிடைத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டு தான் நமக்கும் குமுதம்
குமுதம் நாலணா விலையில் மாதத்திற்கு மூன்று இதழ்களாகத்தான் இருந்தது. 1,10,20 தேதிகள் என்று இருந்தாலும் ஓரிரண்டு நாட்கள் முன்னாடியே கடைக்கு வந்திடும். இதெல்லாம் எனக்கே தெரியும். அட்டைலே குமுதம் பெயர் போட்ட இடத்துக்குக் கீழே, 'கெளரவ ஆசிரியர் -- ஆர்.எம். அழகப்பச் செட்டியார்' என்று போட்டிருக்கும். வழவழன்னு அட்டையில் வர்ணம் வரைந்த அந்நாளைய குடும்பப் பாங்கான பெண் சித்திரங்கள் இருக்கும். பெரும்பாலும் உள்ளடக்க விஷயம் எதையாவது தொட்ட சித்திரமாக அது இருக்கும். ஓவியர் வர்ணத்தின் இயற்பெயர் பஞ்சவர்ணம்.
குமுதத்தைப் பிரித்ததும் முதலில் தலையங்கப் பகுதி. இந்தத் தலையங்கப் பகுதிக்கு மேலே நிலவு -- அல்லி மலர் தாங்கிய குமுதம் இலச்சனை குமுதம் பெயருடன் பதிந்திருக்கும். ஆரம்ப காலத்திலிருந்தே ஒரே பக்கத்தில் பொறுக்கி எடுத்த வார்த்தைகளோடு நறுக்குத் தெரித்தாற் போல வரிகளாய் தலையங்கப் பகுதி நீண்டிருக்கும். மொத்த தலையங்க விஷயத்தின் எஃபெக்ட்டையும் கொண்டு வருகிற மாதிரி அந்தப் பகுதியின் கடைசி வரி அமைந்திருக்கும். ரொம்பவும் குழப்பமில்லாத எளிமையான விஷயங்களே தலையங்கத்திற்கு உட் படுத்தப்பட்டிருந்தாலும் அதுவு ம் மிகத் தெளிவாக இருக்கும். தலையங்கம் எழுதும் பொறுப்பு முற்றிலும் ஆசிரியரின் வசம் இருந்தது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தலையங்கம் மாதிரியே சினிமா விமரிசனப் பகுதியும். பொதுவா பத்திரிகைக்காரர்களுக்கு பாஸ் வழங்குவது அக்காலத்து திரையுலக வழக்காமாக இருந்தது. ஆனால் நம்ம குமுதம் மூன்றெழுத்துகாரருக்கோ இதெல்லா ம் கட்டோடப் பிடிக்காது. டிக்கெட் எடுத்து சினிமா பார்த்து கறாராக விமர்சனம் எழுதுவதற்குப் பழக்கப்பட்டவர் அவர் என்று அறிந்திருக்கிறேன்.
திரைப்படங்களுக்கு விமரிசனம் எழுதுவதில் குமுதம் பெற்ற க்யாதி இருக்கே, சினிமா உலகமே 'குமுதத்திலே ஏதாவது கோணல் மாணலா எழுதிடப் போறாங்கய்யா'ன்னு கவனம் கொள்ளும்.
சினிமா விமர்சனத்திலே கட்டக் கடைசியா பஞ்ச் போல ஒரு வரி இருக்கும். எப்படியோ, படமெடுத்தவர்களுக்கு குட்டு போலவும் ஷொட்டு போலவும் அது அமைந்து விடும்.. இப்படி குமுதம் திரைப்பட விமர்சனத்தோட கடைசி வரிக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள். 'வெட்கக்கேடு'ன்னு ஒரு படத்திற்கு எழுதிவிட்டு தமிழ்த் திரைப்பட உலகே அல்லோகலப்பட்டது.
'கலைஞரின் வசனத்தால் சிவாஜி கணேசனின் நடிப்பு சிறப்புப் பெறுகிறதா, இல்லை சிவாஜி கணேசனின் உச்சரிப்பால் கலைஞரின் வசனங்கள் சிறக்கிறதா' என்பது விடை சொல்ல முடியாத விஷயம் என்று மனோகரா திரைப்படத்திற்கு குமுதத்தில் வந்த விமரிசனக் குறிப்பு நினைவிருக்கிறது.
இப்படி நிறைய. நீண்டு விடும். அதனால் இதுவே போதும்.
குமுதத்தின் ஆரம்ப கால எழுத்தாளர்கள் இன்னும் நினைவிலிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் பி.எம். கண்ணன். இவர் குமுதத்தில் எழுதிய 'முள்வேலி' என்ற தொடர்கதையை எனது இளம் பருவத்திலேயே ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். 'நிலவே நீ சொல்' என்ற அவரது இன்னொரு நாவலும் மறக்காமல் நினைவில் படிந்திருக்கிறது.
இன்னொருவர் மாயாவி என்ற பெயரில் எழுதியவர். பம்பாய் நகர சூழலில் இவர் எழுதிய தொடர் கதை ஒன்று வர்ணம் அவர்களின் சித்திரத்தோடு நினைவில் நிழலாடுகிறது.
ஹேமா ஆனந்த தீர்த்தனை குமுதம் எழுத்தாளர் என்றே சொல்லலாம். 'தீப்பிடித்த கப்பலில் அம்மணியும் நானும்' என்ற மலையாளத்திலிருந்து தமிழாக்கமாக குமுதத்தில் எழுதியது இவரை நினைத்தாலே என் நினைவுக்கு வரும்.
கோமதி சுவாமிநாதன் என்பரின் குடும்பப் பாங்கான நகைச்சுவை நாடகங்கள் அந்தக் காலத்தில் ரொம்ப பிரசித்தம். முதன் முதல் நாடக பாணிக் கதைகளை வார இதழில் அச்சேற்றியது குமுதம் தான்.
அதே மாதிரி குமுதத்தில் பிரசுரமான சித்திரத் தொடர்கள். சேற்றின் சிரிப்பு, ஆறாவது விரல், தங்கச்சாவி என்று தொடர்களின் பெயர்கள் கூட நினைவில் தேங்கியிருக்கின்றன. குமுதத்தில் பல விஷயங்கள் டீம் ஒர்க் தான். இவர் எழுதியது இது என்று பெயர் போடாத விஷயங்கள் அத்தனையையும் தயாரித்தது எஸ்.ஏ.பி. அவர்களே. போட்டோவைப் போட்டுக் கொள்ள வேண்டும், பெயரைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையே லவலேசமும் இல்லாத வினோத மனப்போக்கு. ஒருவிதத்தில் இது கூட மற்ற பத்திரிகை ஆசிரியர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்தியது என்று சொல்லலாம்.
தங்கச்சாவி என்று பெயர் கொண்ட சித்திரத்தொடர் பற்றிச் சொல்ல வேண்டும். இந்தத் தங்கச்சாவி என்ற பெயர் ஒரு பாஸ்வேர்ட் போல. கதையில் வரும் தங்கத்துரை, கச்சாலீஸ்வரன், விநாயகம் என்ற மூன்று நபர்களின் பெயர்களின் ஆரம்ப எழுத்துக்களால் கோர்க்கப் பட்ட பாஸ்வேர்ட். தங்க+கச்சா+வி = தங்கச்சாவி. இது தான் பிற்காலத்தில் கேள்வி--பதில் பகுதி 'அரசு' க்கு அச்சாரம் போலிருக்கு. அ-- அண்ணாமலை, ர-- ரங்கராஜன், சு - சுந்தரேசன் = அரசு. அப்போ இன்னொரு துணையாசிரியர் புனிதன் கேள்வி--பதில் பகுதிக்கு சம்பந்தமே இல்லாமல் இருந்தாரா?; நிச்சயம் என் வாசிப்பு அனுபவத்தில் இல்லை என்றே எனக்குத் தெரிகிறது. ஆனால் நம்ப இந்த சந்தேகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல விவரம் தெரிந்த யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
குமுதத்தின் இந்த சித்திரத்தொடர்கள் பற்றிய செய்திகள் எல்லாமே சமீப காலட்தில் தான் இணையத்தில் பதிவாகிறது என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு இதையெல்லாம் விவரமாகச் சொல்ல குமுதம் சம்பந்தப்பட்ட யாரும் இல்லாமலிருந்திருக்கிறார்கள் என்பது கூட வியப்பான ஓர் உண்மை தான்.
செய்திருந்தால் ரா.கி.ர. செய்திருக்க வேண்டும். குமுதமே அவராகிப் போனதில் பாவம் அவரிடமும் தான் நாமும் எவ்வளவு தான் எதிர்பார்க்க முடியும்?..
சொல்லுங்கள்.
**** ( மேலே இரண்டாவது குமுத அட்டைப்படத்தில் இருக்கும் நடிகர் யாரென்று
தெரிகிறதா பாருங்கள் )
23 comments:
குமுதம் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்.
எனக்கு நினைவிலிருப்பது ஓவியர் செல்லத்தின் சித்திரத்்தொடர். குமுதம் ரசனையானதுதான். பழைய குமுதம் இதழ்களைப் படிக்க ஆசை. கிடைக்குமா?
அட்டைப் படத்தில் இருப்பவர் அசோகனல்லவா?
வாங்க, நெல்லை.
டக்கென்று அசோகன் என்று சரியாகச் சொல்லி விட்டீர்களே!
அசோகன் நடித்த எந்தட் திரைப்படமும் ரிலீசாகாத நேரம் அது.
அசோகனை வைத்து குமுதத்தில் ஒரு தொடர் புதுமையாக வெளியிட்டிருந்தார்கள். வழக்கம் போல பின்னால் அதை சில பத்திரிகைகள் இதே மாதிரி தொடர்ந்தன.
நான படித்ததெல்லாம் ஓவியர் வர்ணம் சித்திரம் வரைந்த படக்கதைகள் தாம்.
குமுதம் குறித்த தகவல்கள் ரசிக்கும்படியாக இருந்தன. நாங்கள் இந்த வார இதழ்களை படிக்க ஆரம்பித்ததெல்லாம் 85-களுக்குப் பிறகு தான் என்பதால் அதற்கு முந்தைய குமுதம் இதழ்கள் குறித்து உங்கள் பதிவு வழி படித்துத் தெரிந்து கொள்ள முடிகிறது. பின்னாளில் வந்த அட்டைப்படங்கள் சினிமா நடிகைகளின் (பெரும்பாலும்!) படமாகவே ஆகிவிட்டன.
நாங்கள் படித்த போதும் அதில் சித்திரக் கதைகள் வந்ததாக நினைவு.
// குமுதத்தின் முதல் இதழ் விற்பனைக்கு வராம எல்லா மாவட்டங்களிலும் இலவசமாகவே சப்ளை செய்யப்பட்டதாம். //
ஏதோ சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்! நாம் பார்த்ததில்லை அல்லவா....!
சினிமா விமர்சனத்தில் அப்படி நச்சென்று வந்த கடைசி வரிகள் சிலவற்றை போட்டோவாகவும், வாசங்களாகவும் கொடுத்திருக்கலாமே...
பி எம் கண்ணன்தான் குழந்தைகள் பத்திரிகை ஒன்றும் நடத்தினாரோ.... மாயாவி கேள்விப்பட்டிருக்கிறேன். ஹேமா ஆனந்ததீர்த்தனுக்குஜ்ம் துர்வாசருக்கும் துக்ளக்கில் அந்தந்த சொற்போர் அப்போது பிரசித்தம்!
குமுதம் சித்திரக்கதைகளுக்கு பெரும்பாலும் ஓவியம் 'செல்லம்'தான் வரைவார். எனக்கு இன்றும் நினைவில் இருக்கும் ஒரு சித்திரத் தொடர் 'பிளான் பட்டாபி'.
அட்டையில் இருக்கும் நடிகர் அசோகனாயிருக்கலாம். மிகச் சிறிதாய் இருக்கிறது படம். ஆனால் கமெண்ட் போட வந்ததும் அது சரிதான் என்று நெல்லை, உங்கள் கமெண்ட்ஸ் தெரிவிக்கின்றன!
நான் குமுதத்தில் முதன் முதலாக விரும்பிப்படித்த படக்கதை முகமூடி என்கிற ஆங்கில phantom தான். 1964-1970 வரை தான் குமுதம் வாசித்தது, வாங்கியது.பின்னர் திருவனந்தபுரத்துக்கு வேலையில் சேர்ந்த பின் குமுதம் கிடைக்கும்போது மட்டும் தான்
Jayakumar
அப்படியா, வெங்கட்ஜி? நான் எஸ்.ஏ.பி. தொடர்கதை ஆரம்பித்தால் கட்டாயமாக குமுதத்தை காசு கொடுத்து வாங்கி
விடுவது வழக்க்ம். கதை முடிந்ததும் தொகுத்து பைண்ட் பண்ண வேண்டுமே! அடனால் எஸ்.ஏ.பி-யின் தொடர்கதைகள் அத்தனையுமே என் வீட்டு லைப்ரரி சேமிப்பில் இருக்கு. மற்றபடி
அலுவலக பொழுதுபோக்கு கிளப், லைப்ரரி வாசிப்பு என்று
இருந்த்து.
ஸ்ரீராம், இந்த விஷயத்தை மனதில் குறித்துக் கொள்ளூங்கள்.
இது பற்றி ஏதாவது தெரிய வந்தால் எபியில் தெரியப்படுத்துங்கள், ப்ளீஸ்.
தாய் மகளுக்குக் கட்டிய தாலிக்கு அந்த வெட்கக்கேடு என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது.
சிவாஜி நடித்த ஸ்ரீவள்ளி படத்திற்கு ஒரு பக்கம் முழுவதும் 'முருகா முருகா' அச்சடித்து புண்ணியம் தேடிக் கொண்டது.
---- மற்றபடி பல கடைசி வரிகள் மறந்து விட்ட்டன.
பி.எம். கண்ணன் பத்திரிகை எதுவும் நடத்தவில்லை.
ஆர்வி அவர்கள் ஆசிரியராய் இருந்த 'கண்ணன்' பத்திரிகை
ஞாபகத்தில் சொல்கிறீர்களோ?..
மாயாவி 'கலைமகளி'லும் எழுதியிருக்கிறார்.
ஹே.ஆ..தீர்த்தன் 'தாய்' பத்திரிகையில் ஒரு தொடர் எழுதியிருக்கிறார்.
துக்ளக்கில் ஹே.மா., vs வண்ணநிலவன் எழுத்து யுத்த்ம் கேள்விப்பட்டதில்லையே! இரண்டு பேருமே சாதுவாயிற்றே!
நினைவிலிருந்தால் எபியில் அது பற்றி எழுதுங்களேன்.
தெரிந்து கொள்ள ஆவல்.
என் இளம் பருவத்தில் வர்ணம்.
பஞ்சவர்ணம் குமுடத்தின் ஆஸ்தான ஓவியர்.
வேறூ பத்திரிகைகளில் அவர் வரைந்து பார்த்திருக்க மாட்டீர்கள்.
குமுதம் பத்திரிக்கை பற்றிய நினைவுகள் பகிர்வு அருமை.
பழைய காலத்து கதைகள் அம்மா சேமித்து வைத்து இருந்தார்கள், எல். ஆர். வி. எழுதிய கலீர் கலீர் நாவல், ஆடவந்த தெய்வம் என்று திரைப்படம் ஆனது.
மின்னல் மழை மோகினி ஜாவர் சீதாராமன் அவர்கள் எழுதிய கதை எல்லாம் அம்மா சேமித்த காரணத்தால் படித்தோம்.
பின்னாளில் ஆன்ந்த விகடன் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
மின்னல் மழை மோகினி சமீபத்தில் இணையத்தில் தேடி எடுத்த நினைவு..
ஆனால் நான் அந்த நாளில் வாசித்த ஜாவரின் இன்னொரு நாவல் உடல் பொருள் ஆனந்தி...
ஹிப்னாடிஸம் சம்பந்தமாக எழுதி மிரட்டி இருப்பார், மாயவநாதன், திலீபன், ஆனந்தி..
மிகவும் சுவாரசியமான எவ்வளவு தகவல்கள்!
எப்போதாவதுதான் குமுதம் எல்லாம் கண்ணில் பட்டு வாசிக்கக் கிடைத்ததுண்டு அப்போது.
இப்ப உங்கள் பதிவுகள் குமுதத்தைப் பற்றிய பல தகவல்கள் இனி இணையத்தில் கிடைக்கப்பெறுமே!! நீங்கள் உங்கள் அனுபவங்களோடு குமுதம் பற்றியும் பதிவது மிகச் சிறப்பான விஷயம் ஜீவி அண்ணா
கீதா
வாங்க் சகோ. 'இது ஒரு தொடர்கதை'ன்னு ஒரு தொடர்கதை தொடர்கிறதே, பாத்தீங்களா? பாத்துட்டு சும்மா இருக்க முடியாதேங்கறத்துக்காகக் கேட்டேன்.
@ ஸ்ரீராம்
ஜாவரோட 'ஏழை படும் பாடு' திரைப்படம் பார்க்க எங்கையாவது கிடைச்சாப் பாருங்க, அவருக்கு ஜாவர்ங்கற பட்டப்பெயரைக் கொடுத்த படம். இது ஜீன் வால் ஜீன் என்ற விக்டர் ஹ்யூகோவின் நாவலைட் தழுவி எடுத்த அந்தக் காலத் திரைப்படம்.
ஆம். இதைப்பற்றி நான் முன்பொருமுறை முகநூலிலும், பின்னர் ஒருமுறை எங்கள் பிளாக் வெள்ளி விடீயோவிலும் பகிர்ந்துள்ளேன்.
.இது ஒரு தொடர்கதைன்னு இப்போ ஒரு தொடர்கதை வருகிறதா? எங்கே? நான் இப்போதெல்லாம் குமுதம், விகடன் பார்ப்பதே இல்லை. ஆனால் 'இது ஒரு தொடர்கதை' என்று ஒரு படம் இருக்கிறது. அதில் தலைவரின் 'ஏய் வெண்ணிலா' என்கிற அற்புதமான பாடல் இருக்கிறது!
எனக்கும் அப்படி ஒரு ஞாபகம் இருக்கிரது. ஆனா வெள்ளி விடியோ இல்லை, வியாழன் தொகுப்புகளில் ஒன்றாய் என்று
ஞாபகம்.
கிடைக்கும் இடைவெளி நேரத்தில் 'இது ஒரு தொடர்கதை' பழைய பகுதிகளை வாசித்து விடுங்கள். தொடர் தொடர்ச்சியைத் தொடரும் பொழுது தொடர் வாசிப்புக்கு செளகரியமாக இருக்கும்.. 15-ந்தே பகுதிகள் தான. பழசுக்கு சுருக்கம் போட்டால் நாலே வரிகள் தாம். அது நன்றாக இருக்காது என்று நினைப்பு மேலோங்க்குகிறது.
Post a Comment