மின் நூல்

Tuesday, September 15, 2009

ஆத்மாவைத் தேடி...10 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


10. ஆக்ஞை கிடைத்தது


னோகர்ஜியின் அன்பு சிவராமனை நெகிழச் செய்தது. 'இன்னும் சில நாட்கள் கூட இங்கு தங்கமுடியுமா என்று கேட்கிறாரே? நாட்கள் என்ன, ஆயுசு பூராவும் இங்கேயே இரு என்று சொன்னாலும் அடிமைசாசனம் எழுதிக் கொடுத்து விட்டு இருந்து விடலாமே?.. இந்த எளியோனுக்கு ஜோதிஸ்வரூபமாய் தரிசனம் காட்டிய பெருமான் உறையும் புண்யபூமி அல்லவா, இது?.. மாலுவும் சந்தோஷப்படுவாள். தினமும் பூத்தொடுத்து உமையொருபாகனுக்கு மாலைசூட்டி மகிழ்வாள்.' என்று பலவாறாக அவர் சிந்தனை சிறகடித்துப் பறந்தது.

"என்ன சிவராம்ஜி?.. மெளனமாகி விட்டீர்கள்?"

""பொறுத்துக் கொள்ள வேண்டும், ஐயா! ஏதேதோ யோசனை.. நான் என்ன செய்ய வேண்டும்?" என்று ஆவலுடன் கேட்டார்.

"சொல்கிறேன். நாம் இப்படி அமர்ந்து கொண்டு பேசலாமா?" என்று மண்டபத்தின் கிழக்குப் பக்கம் தாழ்வாக இருந்த படிகளில் ஏறினார் மனோகர்ஜி.

ஏறியவர், அப்பொழுது தான் மாலுவைப்பார்த்தார் போலும். "அடேடே! நீங்களும் இங்கே தான் இருக்கிறீர்களா?.. ரொம்ப நல்லதாப் போச்சு.." என்று மாலுவுக்குக் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டு மற்றவர்களையும் உட்காரச்சொன்னார்.

மாலு மட்டும் ஏனோ சுற்றி நடக்கும் செயல்களில் கவனம் ஒன்றாமல், நினைவில் இடறிவிட்டுப் போன ஏதோ ஒன்றை நினைத்துப் பார்க்கிற தோரணையில் அமர்ந்திருந்தாள். மனோகர்ஜி அவளிடம் கேட்டது கூட நெஞ்சில் உறைக்காத ஆழ்ந்த சிந்தனை.

மனோகர்ஜியும் அதை அவ்வளவு கவனித்தாகத் தெரியவில்லை. அவர் பாட்டுக்க தனது வழக்கம் போல சந்தோஷ வெளிப்பாடுடன் மனசில் இருப்பதைக் கொட்ட ஆரம்பித்தார். "நான் எதிர்ப்பார்த்தை விட எல்லாக்காரியங்களும் சிறப்பாக அதன் அதன் போக்கில் அது அது நடந்து கொண்டிருப்பதைப் பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கு. எல்லாம் இறைவனின் சித்தம்" என்றவர் சிவராமனை உற்றுப்பார்த்தார். அவர் தீட்சண்யப் பார்வையின் தீர்க்கத்தை எதிர்கொள்ளமுடியாமல் சிவராமன் லேசாகத் தலைகவிழ்த்தார்.

ஆனால் அவர் ஏதோ முக்கியமான விஷயத்தைத்தான் சொல்லப்போகிறார் என்கிற தவிப்பில், "ஜி! எது என்றாலும் நீங்கள் தயங்காமல் சொல்லலாம். நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதை நிறைவேற்ற நாங்கள் காத்திருக்கிறோம்" என்றார்.

இப்பொழுது கிருஷ்ணமூர்த்தியின் பக்கம் திரும்பினார் மனோகர்ஜி. "கிருஷணாஜி! உங்களுக்குத் தெரியாததா?.. இப்பொழுதெல்லாம் எனக்குன்னு தனிப்பட்ட முறைலே எந்த விருப்பமும் இருந்ததில்லை. எல்லாம் அந்த ஐயனின் விருப்பம்" என்று கர்ப்பக்கிரகம் இருக்கும் திசை நோக்கிக் கும்பிட்டார் மனோகர்ஜி.

"ஐயனின் விருப்பமா?.. அது என்னவோ?" என்று ஆவலுடன் அவரைப் பார்த்தார் சிவராமன்.

"அந்த அற்புதத்தைச்சொல்கிறேன்,கேளுங்கள்!"என்று சொல்ல ஆரம்பித்தார் மனோகர்ஜி."அதை உடனே உங்களுக்குச் சொல்லவேண்டுமென்றுதான் உங்களைத் தேடிக் கொண்டு வந்தேன். இன்று காலை பொழுது புலர்வதற்கு கொஞச முன்னாடி இது நடந்தது.இதை நான் கனவில் கண்ட மாதிரி நிச்சயமா தெரியலே. தூக்கம் கலைந்து, எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நான் இருக்கையில் நிழல் போல என் கண்ணுக்கு முன்னாடி நடமாடற மாதிரிதான் இது நடந்தது..." என்று சொல்லிவிட்டு மார்புகூடு நிமிர்த்தி நீண்ட சுவாசத்தை வெளிவிட்டார் மனோகர்ஜி.

வெற்று வெளியைத் துழாவிப் பார்க்கிற தோரணையில் மனோகர்ஜி ஆகாயப்பிரதேசத்தை அண்ணாந்து பார்த்து விட்டு, அரைக்கண்களை லேசாக மூடியபடி, தன் நினைவிலிருக்கும் தோற்றத்தையும் அது சம்பந்தமான செய்தியையும் மீட்டு எடுக்கிற லயிப்பில் சொல்ல
ஆரம்பித்தார்: "வயலின் வைச்சிருப்போம்ல, அந்த மாதிரி சின்னப் பெட்டி இல்லே.. இது பெரிய பெட்டி.. அந்தப்பெட்டி பக்கத்லே திடகாத்திரமா திறந்த மார்பிலே யக்ஞோபவீதம் தரித்து யாரோ நிக்கற மாதிரித் தெரியறது. இதுவரை மசமசன்னு இருட்டா இருந்த அந்தப் பிரதேசமே, ஒரு நொடியில் நெடியோனாய் நின்று கொண்டிருந்த அந்த வாலிபனின் தேஜஸ்ஸில் ஜெகஜோதியாத் தெரியறது. அந்த வெளிச்ச ஒளிலே கண்கூசக்கூச அந்த வாலிபனை நிமிர்ந்து நேரடியா பாக்கறத்துக்கு எனக்கு சக்தியில்லாம லேசா தலையைத் தூக்கறச்சேயே அந்த முகலாவண்யம் என் நெஞ்சு முழுக்க பரவசமாய் பற்றி உடம்பே லேசாயிடுத்து, கிருஷ்ணாஜி... ஹோ.. நான் என்ன புண்ணியம் செஞ்சேன்,ஜி!" என்று குரல் தழுதழுத்துக் கம்மத் தொடர்ந்தார் மனோகர்ஜி.. "ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே திருநாமம் துலங்க மந்தகாசச் சிரிப்போட.. கீழே குனிஞ்சு நிமிர்ந்த வேகத்லே, கையிலே கோடி சூரியபிரகாசத்தோட பளபளக்கற கோதண்டம்... மகாப்பிரபோன்னு கைதூக்கி கும்பிட யத்தனக்கையிலேயே, சிற்சபை ஆனந்தத் தாண்டவம்! தசரதக்குமாரனாய் ஜகஜ்ஜோதியாய் இருந்தவன் இடத்தில் இப்போது ஆடலரசனின் அற்புதத் தோற்றம்!.. முன்னே பார்த்த அந்த வாலிபனைப் போலவே இருக்கு.. ஓவியத்து எழுத முடியா உருவத்தானின் மதிமுக ஸ்ரீசூர்ணம் பார்த்த நினைவு மாறி இப்போ திருவெண்ணீறு வெள்ளி உருக்காய் தகதகக்க...

"சிவனும், ராமனும் ஒரே தோற்றமாய் சிவராமனாய் மனசைப் பிடித்து ஆட்டிய ஆட்டத்தில் அழுதுவிட்டேன்,ஜி! இந்த ஏழைக்கு இப்படி ஒரு இரட்டை அதிர்ஷ்டமா என்று அதிர்ந்து போனேன்.. யோசிக்க யோசிக்க வட்டவட்டமாய் முடிவில்லாமல் கலைந்து கலைந்து முடிவில் கலைந்தே போன நினைவுகளை ஒண்ணு சேக்க படாதபாடுபட்டேன். லேசாகப் பொழுது விடிகையில் பொறிதட்டிய மாதிரி அந்த நினைப்பு வந்தது.. நினைவில் நம்ம சிவராம்ஜியின் பெயரை யாரோ உச்சரிக்கிற மாதிரி இருந்தது. அவரும் நடக்கப்போகிற இந்த சதஸ்ஸில் முழுப்பங்கெடுத்துக் கொண்டு நடத்தித்தர ஆக்ஞை கிடைத்ததாக நான் நினைக்கிறேன்" என்று குரல் தழுதழுக்க மனோகர்ஜி ஆனந்தம் கண்களில் உந்தித்தள்ள சிவராமனை நோக்கினார்.

'நான் இங்குவர இறைவனின் சித்தம் இதுதானோ' என்று சிவராமன் நெகிழ்ந்து போய் மனோகர்ஜியை கண்கள் பளபளக்கப் பார்த்தார்.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails