மின் நூல்

Sunday, June 30, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                             37


ங்கிலேயரைப் போலவே  பிரஞ்சுக்காரர்களும் நம் நாட்டில்  சில  இடங்களைக் கைப்பற்றி தம் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர். அப்படி 1674-ம் ஆண்டு  பாண்டிச்சேரி பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது.  தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வந்த பொழுது புதுவையில் பிரஞ்சு ஆட்சி இருந்ததால் தான்  பாரதியார் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிரஞ்சுப் பகுதியான புதுச்சேரியை தமது வாழும் இடமாகக் கொண்டனர்.  பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ்  சந்தரநாகூர்,   மாஹே,    ஏனாம், காரைக்கால்,  மசூலிப்பட்டணம், புதுவை ஆகிய இடங்கள் இருந்தன.  மசூலிப்பட்டணம் மட்டும் ஆந்திரப் பகுதியில் சேர மற்ற  நகரங்கள் புதுச்சேரியின் கட்டுப்பாட்டின்  கீழ் இயங்கி வந்தன.  தேசம் சுதந்திரம் பெற்றதும் 1954-ல் இந்தப் பகுதிகள் இந்திய யூனியனோடு  சேர்க்கப்பட்டன.    1956-லிருந்து புதுவை இந்திய யூனியன் பிரதேசமாக இயங்கி வந்தாலும்,  1963-- ஜூலையில் தான் சட்டசபை போன்ற அமைப்புகள் ஏற்பட்டன.   சரியாக அந்த கால கட்டத்தில் தான் நான் புதுவை போயிருக்கிறேன்.  புதுவை  யூனியன் பிரதேசத்தின் காங்கிரஸ் அமைச்சரவையின் முதல்  முதல்வர் எட்வர்ட் கூபெர்ட்.   எளிய மக்களால் குபேர்  என்ற  செல்லமாக அழைக்கப் பட்டவர்.  இவர் அந்நாட்களில் பாண்டிச்சேரி மேயராகவும் செயல்பட்டார்.   கிட்டத்தட்ட ஒரே ஒரு ஆண்டு தான் இவர் பதவியில் இருந்திருந்திருக்கிறார்.   இவரை பலமுறை சகஜமாக பார்த்திருக்கிறேன்.

புதுவையில் தபால் அலுவலகமும்,  தொலைபேசி இணைப்பகமும் பக்கத்துப் பக்க கட்டிடங்களாக ஒரே வளாகத்துள் இருக்கும்.   அதற்கு எதிரிலிருந்த  சர்க்கிள் டி பாண்டிச்சேரி என்ற  மேல்தட்டு வர்க்க கிளப் மாதிரியான இடத்திற்கு  குபேர்  வரும் சமயங்களில் கண்ணில் பட்டிருக்கிறார்.  பார்ப்பதற்கு மோதிலால் நேரு மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றும்.  ஹவுஸ் சர்ஜன் கோட்டு மாதிரி போட்டிருப்பார்.  அந்த கோட்டின் கீழ் இரு பைகளிலும் எந்நேரமும் சில்லரைக் காசுகள் நிரம்பியிருக்கும்.  எளிய மக்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் கோட்டின் கீழ்ப்பைகளில் கைவிட்டு காசுகளை அள்ளி எடுத்துத் தருவார்.  குடிசையில் வாழும் மக்களின் வீட்டுக் கல்யாணங்களுக்கு அழைப்பு பத்திரிகை வந்திருந்தால் தவறாமல் போய் ஏதாவது பரிசுகள் வழங்கி விட்டு வருவார்.  அந்த மாதிரி எளிய மக்களுடன் அவருக்கு ஒரு நெருக்கம் இருந்ததை நேரடியாகவே பார்த்து ரசித்திருக்கிறேன்.

அந்தக் கால புதுவையில் இருந்தவை இரண்டே இரண்டு அரசியல் கட்சிகள் தாம்.  ஒன்று, காங்கிரஸ்.  மற்றொன்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்டு கட்சியின் தோழர் வ. சுப்பையா சுதந்திரப் போராட்ட வீரர்.   உப்பு
 சத்தியாகிரத்தில் பங்கு கொண்டவர்.  சுதந்திர சங்கு பத்திரிகை ஆசிரியர் சங்கு சுப்பிரமணியத்துடன்  ஏற்பட்ட நட்பு  டி.என். சொக்கலிங்கம்,  ச.து.சு. யோகியார்,  ஏ.என். சிவராமன் என்று நட்பு வட்டம் விரிந்தது.   தோழர் சுந்தரய்யாவுடனான பழக்கம்  தொழிற்சங்க ரீதியாகப் போராட்டத்திற்கான உத்வேகத்தை இவருக்கு அளித்தது.  புதுச்சேரி  பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு சங்கம் ஆரம்பித்து  பெரியளவில் பாடுபட்டார்.  நேருஜி இவரின் ஆற்றலைப் பார்த்து  புதுச்சேரியின் விடுதலைக்காக பிரஞ்சு  அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை  நடத்த சுப்பையாவை அனுப்பி வைத்தார்.   அந்த பேச்சு வார்த்தைகளின் வெற்றியாகத் தான் 1954-ல்  பிரஞ்சு இந்தியப் பகுதிகள்   இந்திய யூனியனோடு இணைக்கப் பட்டன.   வெளித்திண்ணையில் கூரை போட்ட ஒரு சிறிய வீட்டில் சுப்பையா வாழ்ந்து வந்தார்.  தோழர் சுப்பையா அவர்களை சந்திக்க முடிந்ததில்லை.  டாக்டர் ரங்கநாதன் என்று ஒரு  முன்னணித் தோழர்.  அவருடன் பழக்கம் உண்டு.

ஜிப்மரில் பணியாற்றிய என்  நண்பன்   ரகுராமனுக்கு  ஆஸ்பத்திரி   வளாகத்திலேயே  க்வார்ட்டர்ஸ்   அலாட் ஆகியிருந்தது.   அதனால் அவன்   அங்கு குடியேற வேண்டியிருந்தது.      புதுவை   பாரதி தெருவில் ஒரு பெரிய தனி வீடு வாடகைக்குக் கிடைத்தது.  தொலைபேசி, தபால், ஆசிரியர் ஒருவர் என்று பத்து  நண்பர்கள்.  எல்லோரும் சேர்ந்து அங்கு குடியேறினோம்.  சேது என்ற  அருமை நண்பர் வீட்டுக்காரரோடு ஒப்பந்தம் போட, ஆகும் மொத்த செலவுகளை  நாங்கள் அனைவரும்  பகிர்ந்து கொள்ளலாம் என்று தீர்மானம் ஆயிற்று.

இருபத்தியோரு வயது நிரம்பிய இளைஞன் நான்.   அந்த பருவத்திற்குரிய மனத்திற்கிசைந்த அத்தனை ஈடுபாடுகளுக்கும்  வடிகால் தேடிய பருவம்.  எழுத்து, மேடைப்பேச்சு, கவியரங்கம்,  தொழிற்சங்கம்-- என்று அத்தனைக்கும் நேர் வழிகாட்டி  நெறிப்படுத்திய  கம்யூனிச சித்தாத்த போதத்திற்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.   அந்த  நெறிப்படுத்துதல் மட்டும் அந்த இளம் வயதில் கிடைத்திருக்கவில்லை என்றால் திராவிட மாயையில் சிக்கி மன விசாலம் குன்றிக் குறுகிப் போயிருப்பேன்.  என் ஈடுபாடுகள் அத்தனைக்கும் வழிகோலும் வசதி கொண்டதாய் பிரஞ்சு நாகரிகத்தின் அழகு குலையாமல்  இருந்த அந்த குட்டியூண்டு நகரமும் வசீகரமாக இருந்தது.

இலக்கிய ஆர்வலர்களின் தோழமையோடு தமிழ் அறிஞர்கள் கலந்து  கொள்ளும்
கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தோம்.   வேதபுரீஸ்வரர் கோயில் பிராகாரத்திலும் சில கூட்டங்கள் நடந்திருக்கின்றன.  டாக்டர் மா.  இராச மாணிக்கனார் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அவரிடம் ஆட்டோகிராப் கையெழுத்து வாங்கும் பொழுது,  'தமிழே என் உயிர்'  என்று கையெழுத்திட்ட பொழுது, 'தமிழே நம் உயிர்'  என்று எழுத வேண்டாமோ என்று கேட்டேன். இது தான் மற்றவர்களையும் அணைத்துக் கொண்டு பேசும் நான் பெற்ற கம்யூனிசக் கல்வியாக எனக்கிருந்தது.    ஆனால் இராசமாணிக்கனாரோ, "அது எப்படி உன்னையும்  சேர்த்துக் கொண்டு நம் உயிர் என்று என்னால் சொல்ல முடியும்?" என்று ஒரேயடியாக மறுத்து விட்டார்.

ம.பொ.சி.யை அழைத்திருந்தோம்..  ஜமக்காளம் விரித்த தரையில் அவர் எங்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.   பேச்சின் நடுவே "இவரைத் தெரியுமோ, உங்களுக்கு?" என்று தன் வலக்கையை உயர்த்தி  அருகில்  அமர்ந்திருந்த ஒருவரைக் காட்டினார்.  அப்படி அவர் கையைத் தூக்கும்  பொழுது அவர்
அணிந்திருந்த முழுக்கை சட்டை  கக்கப் பகுதியில்   கிழிந்திருந்தது  மனசை வாட்டி எடுத்து விட்டது..  "இவர் தான் கவிஞர் கா.மு. ஷெரிப்.." என்று அவரை எங்களுக்கு  ம.பொ.சி. அறிமுகப்படுத்தினார்.  தான் மட்டும் தலைவனாய் தலை நிமிர்த்தி கர்வத்தோடு நடக்க வேண்டும் என்ற மனக்கோளாறுகள் அந்நாளைய  தலைமைப் பண்பாய் இருந்திருக்கவில்லை என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன்.   அண்ணா கூட  நெடுஞ்செழியனை, "தம்பீ, வா.. தலைமையேற்க வா..." என்று அழைத்து நெடுஞ்செழியன் தலைமை தாங்கிய கூட்டத்தில் கலந்து கொண்டவர் தான்.   இப்படியான தலைமைப் பண்புள்ள தலைவர்களை இன்று பார்க்க முடியவில்லையே என்று வருத்தமாகத் தான் இருக்கிறது.

(வளரும்)


Thursday, June 27, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                     பகுதி--36

ஜெயகாந்தனை அதற்கு முன்  நான் நேரில் பார்த்ததில்லை.   அதனால் அவர் தோற்றம் எப்படியிருக்கும்   என்று தெரியாது.  ஆனால்  நேரில் அவரைப் பார்ப்பதற்கு முன்னாலேயே ஆனந்த விகடன் பத்திரிகையின் மூலம்  ஜெயகாந்தனின் மன உணர்வுகளைப் பிரதிபலித்த அவர் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாகியிருந்தது.  அவர் எழுத்துக்களின் மூலம் தமிழ் எழுத்தாளர்களில் ஒரு ஹீரோவைப் போல என்னில் உருவகம் கொண்டிருந்தார்.   அவருக்கு எழுத மட்டுமே   தெரியும் என்று அறியப்பட்டிருதேன்.   எழுத்தாளர்கள் என்று அறியப்படுகிறவர்கள் இலக்கியக் கூட்டங்களில் பேசலாம். ஆனால் கட்சிக் கூட்ட மேடைகளிலும் பேசும் எழுத்தாளர் ஒருவர் இருப்பார் என்பது நான் கற்பனை கூட பண்ணிப் பார்க்காத ஒன்று.  அதனால் அப்படிப்பட்டவரை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற இயல்பான மகிழ்ச்சி என்னில் புது உற்சாகத்தைக் கிளப்பியிருந்தது.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம்.  சிரிலும் நானும் தொலைபேசி நிலையத்தில் சந்தித்து வெகு அருகில் இருக்கும் கடற்கரைக்குப் போவதாக இருந்தோம்.  நான் போன பொழுது எனக்கு முன்னாலேயே தொலைபேசி நிலையத்திற்கு சிரில் வந்திருந்தார்..  என்னைப் பார்த்ததும்
முகத்தில் முறுவலுடன் "போவாமா?" கிளம்பி விட்டார்.

கூப்பிடு தூரத்தில் கடற்கரை.  கவர்னர் மாளிகைக்கு எதிர்த்தாற்போலிருந்த  பூங்காவைத் தாண்டி அங்கிருக்கும் ஆயி மண்டபத்தைத் தாண்டி கடற்கரைச் சாலைக்கு முன்னாலேயே அந்நாட்கள் மணல் நிரம்பிய பகுதி ஒன்றிருந்தது.   அந்த இடத்தில் தான் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஒரு டேபிள் போட்டு  அதற்கெதிர்த்தாற்போல பெஞ்ச் போட்டிருந்தார்கள்.  டேபிளின் மீது  மைக்.  ஒலிபெருக்கி அமைப்பெல்லாம் இல்லை.  நாங்கள் போன பொழுது அந்த இடத்தில்  நான்கு பேர்கள் மட்டுமே இருந்தார்கள்.    அவர்களில் ஒரு இளைஞரைப் பின்பக்கமாக போய் அணைத்து, "காந்தா! எப்படியிருக்கே?" என்று கேட்டதும் சடாரென்று திரும்பிய அந்த இளைஞர் "ஓ! சிரில்.." என்று  ஆச்சரியப் புன்னகையுடன் அவர் கை பற்றினார்.  "பாண்டிச்சேரிலே இருக்கீங்கன்னு தெரியும்.. ஆனா கூட்டத்திற்கு வருவீங்கன்னு தெரியாது.." என்று சிரித்தார்.  ஜெயகாந்தனின்  நெளிநெளியான அந்த அமெரிக்கன் கிராப்புக்கு அந்த கூடு புருவம் கவர்ச்சியாக இருந்தது.  அந்த சமயத்தில் தான் சிரில் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.  அறிமுகம் "உங்களின் நேர்த்தியான வாசகர்.." என்று சுருக்கமாக இருந்தாலும் அதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட ஜெயகாந்தன் அன்புடன் என் கை பற்றினார்.

அதற்குள் நான்கு பேர்கள் நாற்பது பேர்களாகி விட்டனர்.  நிறைய பேர்களின்  தோள்களில் சிவப்புத் துண்டு  அலங்கரித்திருந்தது.  அந்த சமயத்தில்  இரண்டு சிவப்புக் கொடிகளுடன் வந்த ஒருவர் அந்தக் கொடிகளை டேபிளின் இருபக்கமும் பக்கத்துக்கு ஒன்றாக நிறுத்தி சணல் கயிறு கொண்டு கட்டினார்.  காற்றில் லேசாக அலைபாய்ந்த அந்தக் கொடிகளைப் பார்த்தேன்.  செக்கச் சிவந்த சிவப்புக்கு நடுவே அரிவாள்--சுத்தியல் பொறிக்கப்பட்டிருந்தது.   அந்தக் கொடிகளைக் கட்டியதும் அந்த இடத்திற்கே ஒரு புதுக்களை வந்து விட்ட மாதிரி என் மனசுக்குத் தோன்றியது.

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைப் போலவே  மிகச் சாதாரணமான தோற்றத்துடன்  லேசாக பழுப்பேறிய வேட்டி சட்டை சிவப்புத் துண்டுடன் பென்ஞ்சில் ஜெயகாந்தனுக்கு அருகே அமர்ந்திருந்த நபர் எழுந்திருந்து மைக் அருகே சென்று கூட்டத்திற்கு  வந்திருந்திருந்தவர்களை வரவேற்றார்.    கூட்டத்தின் தலைவர் அவர் தான் என்று புரிந்து கொண்டேன்.   உள்ளூர் பஞ்சாலைத் தொழிலாளர்களின் பிரச்னைகளை சுருக்கமாகச்  சொல்லி  அங்கிருந்த ஒவ்வொருவரும் ஆயிரம்பேருக்கு நிகர் என்று அவர் சொன்ன பொழுது பலத்த கைதட்டல்.  பிறகு அவர் சிறப்புப் பேச்சாளராக  வந்திருக்கும் ஜெயகாந்தனை பேச  அழைத்தார்.  அப்படி அவர் ஜெயகாந்தனை பேச அழைக்கும் பொழுது  தோழர் ஜெயகாந்தன் என்று குறிப்பிட்டது எனக்கு புதுசாக இருந்தது.

ஜெயகாந்தனின் குரல் மைக்கில் கணீரென்று இருந்தது. தொடர்ச்சியாக அவர்  பேசும் போது ஆவேசம் கிளர்ந்தது.  மைக்கின் முன் சிலை போல  நின்று பேசுவோர் போல அல்லாமல்  இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைந்து அசைந்து  சமயங்களில்  நுனிப் பாதங்களில் எழும்பி நிற்பது போல நின்று  மடை திறந்த வெள்ளம் போலப் பேசினார்.

இதற்கு முன் நான் கேட்டு பரவசம் அடைந்த அண்ணாவின்  அடுக்கு மொழி  பேச்சு  போலவும் இல்லாமல்,  நெடுஞ்செழியனின் ராக ஆலாபனை  போலவும் அல்லாமல் மாய    கற்பனையுலக சஞ்சாரம் லவலேசமும் இல்லாமல்  இக உலக  வாழ்க்கை நிஜங்களைச் சொல்கிற பிரகடனமாய்,  நிகழ்ந்ததை, நிகழ்வதை சரித்திர உண்மைகளைப் படம் பிடித்துக் காட்டுகிற யதார்த்த உண்மைகளை பிட்டு பிட்டு வைக்கிற  கேட்பவர்களுக்கு சட்டென்று புரிகிற பேச்சு.                         

"கம்யூனிஸ்ட்டுகள் குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் நிலத்திற்கும் மட்டுமே சொந்தமானவன் அல்ல; அவன் உலகப் பிரஜை.." என்று டிக்ளேர் செய்கிற உரத்த குரலில் சொன்னார் அவர்..  "பொதுவுடமைக் கட்சித் தோழர்கள்  வைத்திருக்கிற கட்சி உறுப்பினர் அடையாள அட்டையும்  உலக பூர்வ உன்னதர்கள் வைத்திருந்த அடையாள அட்டைகளின் தொடர்ச்சி தான்..  தோழர் லெனின் வைத்திருந்த,  கார்ல் மார்க்ஸ் வைத்திருந்த,  ஹோசிமின் வைத்திருந்த , ஃபிடல் காஸ்ட்ரோ வைத்திருந்த அட்டைகளின் சங்கிலித் தொடர்ச்சி என்பதில் நாம் பெருமை கொள்வோம்.  இது வேறு எந்தக் கட்சிக்கும் இயக்கத்திற்கும் கிடைத்திராத பெருமை.." என்று அவர் சொன்ன போது அந்த இயக்கத்தின் உறுப்பினர் அட்டை பற்றி எனக்கு ஏதும் தெரியாது ஆயினும்  உடல் சிலிர்த்தது..

தேச சுதந்திர தினத்திற்கு முதல் நாள் சிறையிலிருந்த கம்யூனிஸ்ட்   தோழர்கள் எல்லாம்   விடுதலை செய்யப்பட்டனராம்.   பிரிட்டிஷ் அடக்குமுறை  கொடுமைகளுக்குத் தப்பி தலை மறைவு  வாழ்க்கையையும் மேற்கொண்டிருந்த தோழர்களும் பகிரங்கமாக வெளியுலகிற்கு வந்தனராம்.  தலை மறைவாக இருந்த  சீனிவாசராவ், ஜீவா இவர்களையெல்லாம் நேருக்கு நேர் பார்த்த அனுபவத்தை மறக்கவே முடியாது  என்றார் ஜெயகாந்தன்.   பெரிய மீசையுடன் இருக்கும் ஜீவாவை மீசையில்லாமல் பார்த்த பொழுது இவர் தான் ஜீவா என்று என்னால் நம்பவே முடியாமலிருந்தது  என்று தனது அந்த அரை டிராயர் பருவத்து நினைவுகளை நினைவு கூர்ந்தார் ஜெயகாந்தன்.

"அந்நாடகளில் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பலம் பொருந்திய அரசியல் தொழிற்சங்க இயக்கத்திற்கு பெரும் பொறுப்பேற்று விளங்கியது.  வங்காளம் முதலும் சென்னை இரண்டாவதாகவும் பலம் பொருந்திய  கம்யூனிஸ்ட் தளமாக விளங்கின.   தேச சுதந்திரத்திற்கு    அடுத்ததான பொருளாதார முன்னேற்றம், ஏற்ற தாழ்வற்ற நிலை, பொருளாதார விடுதலை, சமூக மாற்றங்கள் எல்லாவற்றிற்கும் கம்யூனிஸ்ட் கட்சி தான்  தலைமை ஏற்று சாதிக்கப் போகிறது என்று நாங்கள் பலமாக நம்பினோம்.  கம்யூனிஸ்டுகள் சுயநலமில்லாதவர்கள்,    அறிவுஜீவிகள், கட்டுப்பாடு மிக்கவர்கள்,   மற்ற எந்த  அரசியல் கட்சி   சார்ந்தோரை விடவும் மிகப் பெரிய அளவில் குண-மன  வளர்ச்சியடைந்தவர்கள் என்ற  நற்சான்று எளிய மக்களிடம் நிலவி வந்தது..

"சிறையிலிருந்து தோழர்கள் பலர் வந்தபின் நாங்கள்  தங்கியிருந்த இடம் போதவில்லை.   ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோடில் டாக்டர் சுப்பராயன் வசித்து வந்த  ஒயிட் ஹவுஸ் என்ற பங்களா முழு நேர ஊழியர்கள் தங்கும் கம்யூனாக மாறியது.  ஒரு அறைக்கு ஆறு பேர் வீதம் பிரித்துக் கொண்டோம்.  சுவரோரமாக ஒரு டிரங்க் பெட்டி,  அதன் மீது சுருட்டி வைக்கப்பட்ட படுக்கைச் சுருணை-- இவ்வளவு தான் ஒரு முழு நேர ஊழியரின் மொத்தச் சொத்து.  பொது  ஹாலில் பத்திரிகை படிப்போம்.  அங்கு தான் சாப்பாடும்.  சாப்பாட்டு உபகரணங்களான ஒரு பெரிய அலுமினியத் தட்டும் குவளையும்  கம்யூனிலேயே இருக்கும்.  அவற்றைக் கழுவி வைப்பது,  சாப்பாடைப் பரிமாறிக் கொள்வது எல்லாம் நாங்களே.  மிக எளிமையான சாப்பாடு.  ஞாயிறுகளில் துணி துவைத்துக் கொள்வோம்.  'ஸ்குவாடு ஸேல்ஸூ'க்காக குழுக்களாகப் பிரிந்து சென்று புத்தகம் விற்போம்.

"கட்சி கல்வி வகுப்பு நடக்கும்.  வெளிநாட்டிலிருந்து கம்யூனிஸ்டுகள் வந்தாலோ,  கம்யூனிஸ்ட்டுகள் யாரேனும் வெளிநாடு சென்று வந்தாலோ அங்குள்ள பெரிய ஹாலில் எல்லோரும் கூடி அவர்கள் அனுபவங்களைச் சொல்ல  கேள்விகள், விவாதங்கள் எல்லாம் நடக்கும்.  நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப்பேன்...

"அது எப்படி நடக்கும் என்று தெரியவில்லை.  எனது சிறு வயது காரணமாக இருக்கலாம்.  "ஹூ இஸ் திஸ் யங் காம்ரேட்?" என்று என்னைப் பற்றி விசாரித்து என்னிடம்  பேச்சுக் கொடுப்பார்கள்.

"மோஹன் குமாரமங்கலம்,  எஸ்.வி. காட்டே,  டாங்கே,  இ.எம்.எஸ்.,  ஏ.கே. கோபாலன், கல்பனாதத் அஜாய்கோஷ், ஜோதிபாஸூ,   பாலதண்டாயுதம்,  எஸ். ராமகிருஷ்ணன், ரொமேஷ் சந்திரா,  கே.ஆர். கணேஷ்  போன்ற  எல்லோரிடமும் எனக்கான தோழமை உண்டு.

இந்தியாவில்  காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த பிரதான கட்சியாக கம்யூனிஸ்டு கட்சி வளர்ந்து வருவதை காங்கிரஸ்காரர்களே ஒப்புக்கொண்டார்கள்.  அதில் ஒரு பக்கம் அவர்களுக்கு சந்தோஷமும் இருந்தது.  தேச சுதந்திரத்திற்கு  பின்னான  மக்கள் பணியில் இரு சாரருமே தான்  அவரவர் அளவில் பங்காற்ற வேண்டும் என்ற புரிதல் இருந்தது.   கம்யூனிஸ்டுகள்  மீது நல்லெண்ணம் கொண்டவர்களாகவும், சந்தர்ப்பம் வரும் பொழுது கம்யூனிஸ்டுகளைப் பாராட்டுகிறவர்களாகவும் காந்தியும்  நேருவும் திகழ்ந்தார்கள்..."

அன்றைய ஜெயகாந்தனின் உரை  கம்யூனிஸ்ட் என்றால் யார் என்றும்,   கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சுதந்திரத்திற்குப் பின்னான இயக்கச் செயல்பாடுகளைச் சொல்வதாகவும் அமைந்தது.

கூட்டம் முடிந்த பிறகு சிரிலும் நானும்  ஜெயகாந்தனிடம் விடை பெற்றோம்.   என் கை பற்றி   "சென்னை வந்தால், பார்க்கலாம்.."  என்று விடைபெற்றார்.

ஜே.கே-யுடனான தோழமைத் தொடர்பு  இப்படி ஆரம்பித்தது தான்.

(வளரும்)

Wednesday, June 19, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                        35


கோவை ஆர்.எஸ்.புரத்தில்  100 அடி சாலை  என்பது நீண்ட சாலை.  அந்த சாலையில்  குறுக்கே வெட்டிச் செல்லும்  அருணாசலம் பிள்ளைத் தெருவில் 70-ம் இலக்க வீட்டில் என் தமையனார் வசித்து வந்தார்.    வீட்டில் தங்கி சாப்பிட்டு தொலைபேசி  ஆப்ரேட்டர்  (Telephone  Operator)  பயிற்சி வகுப்புகளுக்குப் போவது சிரமமில்லாத மிகவும் இனிமையான காலமாக இருந்தது.

பயிற்சி வகுப்பில் ஆசிரியராக இருந்த  ஞானப்பிரகாசம் சார் மறக்க முடியாதவர்.  அவர் திருச்சிக்காரர்.  அதனால்  திருச்சி தெருக்களை உதாரணமாகக் கொண்டு பாடங்களை நடத்துவார்.   அந்நாளைய தொலைபேசி இணைப்பகங்களின்  (Telephone  Exchange)  செயல்பாடுகளை இப்பொழுது நினைத்தாலும்  பிரமிப்பாக இருக்கிறது.  இன்றைய   வளர்ச்சி  அசுர வளர்ச்சி.    நின்று நிதானித்துச் செய்ய எதுவுமில்லை.  ஆனால் அன்றைய நிலை அடக்கமான தீர்மானமான செயல்பாடுகள்.    ஒரு டிரங்க் கால் என்று எடுத்துக் கொண்டால் அதில் தான் எத்தனை வகைகள்?..  Ordinary call,  Urgent call, Lightening call,  Fixed call, Subscription fixed call,  International call  என்று ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லப் போனால் நிறைய சொல்லலாம்.   ஒரு டிரங்க் காலுக்கு இணைப்பு கொடுத்து  Caller, Called Person  இரண்டு பேரும் பேசி முடித்து டிரங்க் கால் பூர்த்தியாவது என்பது அழகான பின்னல்  வேலை.

அதே மாதிரி உள்ளூர் தொலைபேசி இணைப்பகம் என்பது இன்னொரு அழகான ஏற்பாடு.  ஒவ்வொரு வீட்டுத்  தொலைபேசியும்  தொலைபேசி இணைப்பகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.   தொலைபேசியில் யாருடனாவது பேச வேண்டும் என்றால் தொலைபேசியை கையில் எடுத்து காதில் வைத்துக் கொண்டால், 'நம்பர் ப்ளீஸ்' என்று  ஆப்ரேட்டரின் குரல் கேட்கும்.  நாம் பேச வேண்டிய தொலைபேசி எண்ணை அவரிடம் சொன்னால் அடுத்த வினாடி  'டிரிங், டிரிங்' என்று ரிங் சவுண்டு நமக்குக் கேட்டு எதிர் முனையில் தொலைபேசி எடுக்கப்பட்டதும் ரிங் ஒலி நின்று நாம் பேச விருப்பப்பட்டவர் எதிர்முனையில் நம்மோடு பேசுவார்.  இருவருக்குமான இந்த இணைப்பைப் பூர்த்தி  செய்யும் மாய   வித்தையைச் செய்வது தான்  உள்ளூர் தொலைபேசி இணைப்பகத்தில்   பணியாற்றும் ஆப்ரேட்டர் வேலை.    இந்த மாதிரி 'நம்பர் ப்ளீஸ்'  இணைப்பகத்திற்கு    Manual Exchanges என்று பெயர்.   நாமே தொலைபேசியில்  இருக்கும் டயலில் பேச வேண்டிய எண்ணைச் சுழற்றி  ஆபரேட்டர் தயவில்லாமல்  பேசி முடிக்கும்  Auto Exchanges  அடுத்த கட்ட வளர்ச்சி.  இப்பொழுதோ   உள்ளங்கை அளவு  மொபைல் போன் வந்து  அத்தனை செயல்பாடுகளையும்   அழித்து எழுதி விட்டது.

தொலைபேசி உரையாடலில் ஆரம்ப வார்த்தையே 'ஹலோ..' தான்.  அந்த அளவுக்கு தொலைபேசிக்கும், ஹலோவுக்கும்    ஜென்மத் தொடர்பு உண்டு.  இதில் ஒரு  விவகாரமும் உண்டு.  தொலைபேசியில்  பேசும் பொழுது ஹலோவை கொஞ்சம் அழுத்தி உச்சரித்தாலே, 'ஹெல் யூ' என்று சாப வார்த்தையாய் ஒலிக்கப்படும் என்ற அச்சத்தினால் அந்த ஹலோவை கூடிய மட்டும் தவிர்க்க வேண்டும் என்று பயிற்சி  காலங்களில் உபதேசம் உண்டு.    யார் எது சொல்லட்டுமே,  தொலைபேசியும்   ஹலோவும்  பின்னிப் பிணைந்திருப்பதற்கு வரம் பெற்று  வந்திருப்பது சர்வ தேச அளவிலும் பிரிக்க முடியாத  பந்தம் தான்.

இரண்டு மாத பயிற்சி காலம் முடியும் தருவாயில் எனது இளமைப் பருவ ஆருயிர் நண்பன் ரகுராமனிடமிருந்து  ஒரு கடிதம் வந்தது.  ரகுராமன் அப்பொழுது பாண்டிச்சேரி  ஜிப்மர் மருத்துவமனையில் பணியில் இருந்தான்.   அவனுக்கு நான் கோவையில் தொலைபேசி  இயக்குனருக்கான பயிற்சி காலத்தில்  இருப்பது  தெரியும்.  அவனது  கடிதமும் அதைக் குறித்துத் தான் இருந்தது.    பாண்டிச்சேரி  தொலைபேசி இணைப்பகத்தில் விசாரித்ததாகவும்  புதுவை தொ.இணைபகத்தில் தொலைபேசி இயக்குனருக்கான  காலிப் பணியிடம் இருப்பதாகவும் அதனால் விருப்ப வேண்டுகோள் விடுத்தால் புதுவை தொ. இணைப்பகத்திலேயே எனக்கு போஸ்டிங் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அந்தக் கடிதச் சேதி சொன்னது.

நான் அதன்படியே செய்தேன்.  புதுவைக்கு   போஸ்டிங் ஆர்டர் கிடைத்தது.  கோவையிலிருந்து புதுவைக்கு  ரயில் பயணம்.  புதுவை ரயில் நிலையத்தில் என்னை வரவேற்க ரகுராமன் தயாராகக் காத்திருந்தான்.  முதல் தடவையாக பாரதியார் வாழ்ந்த மண்ணுக்கு வருகிறேன்   என்ற பரவசம் ஒரு பக்கம்.   அந்நாட்களில் புதுவையில்  சைக்கிள் ரிக்ஷாதான்.  இருவரும் சைக்கிள் ரிக்ஷா ஒன்றைப் பிடித்து ஏறி அமர்ந்தோம்.   எங்களுக்கிடையே நெடுநாள் இடைவெளி.  எங்கு ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒருத்தரை ஒருத்தர் நேரில் பார்த்ததே போதுமானது என்ற நிலை.  நேர் நேராக அமைந்திருந்த புதுவைத் தெருக்களின்  அழகைப் பார்த்து  வியந்து கொண்டிருந்தேன்.

ரகுராமன் அப்பொழுது புதுவை  பெரிய பிராமணர் தெரு (Big Brahmins' Street)   என்று அழைக்கப்பட்ட தெருவில்  பெரிய பெரிய திண்ணைகள் கொண்ட ஒரு வீட்டின் முன் போர்ஷனில் குடியிருந்தான்.   நானும் அந்த வீட்டில் வசிக்க இன்னொருவனாகச் சேர்ந்து கொண்டேன்.  அந்த நாட்களில் எனக்கு சமைக்கத் தெரியாது.   ரகுராமன் ஒரு ஸ்டெளவ் வைத்துக் கொண்டு  தினமும் காலை சமையலை முடித்து சாப்பிட்டு   கிளம்பி விடுவான்.   பருப்பு நிறைய போட்டு அவன் வைக்கும் உருளைக் கிழங்கு  சாம்பார் இன்றும் நினைவிலிருக்கிறது.  இரவுக்கு எங்கையாவது வெளியே  சாப்பிட்டுக் கொள்வோம்.  ரகுவிற்கு காலை 10 மணியிலிருந்து  மாலை 5 மணி வரை அலுவலக நேரம்.  அதனால் அவன் பாடு ரெகுலராக இருக்கும்.  என் விஷயம் தான்  எப்பொழுது  வீட்டில் இருப்பேன்  எப்பொழுது அலுவலகத்தில் இருப்பேன்  என்ற சொல்ல முடியாத Round the clock   பணி  நேரங்கள்.   காலை   0610-  1330,  0800-1520,  0900-1620,  1000-1720,    1330-2050,  1520-2340,  1640-0000,  0000-0720 என்று வித்தியாசமான பணி நேரங்கள்.  அதற்கேற்பவான சாப்பாட்டு நேரங்கள்.

நான் பணியில் சேர்ந்த இரண்டாவது நாள் அவரைச் சந்தித்தேன்.  புதுவை தொலைபேசி நிலையத்தில் சீனியர் மெக்கானிக் அவர்.   சிரில் என்ற பெயர் கொண்டவர்.   வேட்டி, ஜிப்பாவில்  எளிய மக்களின் பிரதிநிதி   போன்ற  தோற்றம்.   தொலைபேசி இணைப்பகத்தில்  எம்.டி.எஃப். (Main Distribution Frame)  அறை என்று ஒன்று உண்டு.   அந்த  இடம் அவர் பொறுப்பில் இருந்தது.

ஆனந்த விகடனில் நிறைய உருவகக்கதைகளை எழுதிய வேந்தன்  என்பவர் இவர் தான் என்று பின்னால் தான் எனக்குத்  தெரிய வந்தது.  கல்கி,  விகடன், தினமணிக் கதிர்,  சரஸ்வதி, கலைக்கோயில்,  பராசக்தி என்று நிறைய 
பத்திரிகைகள் இவரது  சிறுகதைகளைப்  பிரசுரித்திருக்கின்றன.  துலாக்கோல் என்ற பெயரில் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  மகிழ்சியான தருணங்களில் சுண்டுமுத்துக் கவிராயர் என்ற பெயரில் கவிதைகளும் இவரிடம் பிறந்திருக்கின்றன.

எனக்கும் அவருக்குமான ஓய்வு நேரங்களில் நாங்கள் நிறைய பேசினோம்.   AITEEU (All India Telegraph Engineering  Employees Union)  என்று தொலைபேசி  இலாகாவில் எங்களுக்கான தொழிற்சங்கம் இருந்தது.  தேசிய அளவில் தபால், தந்தி, ஆர்.எம்.எஸ். போன்ற 9 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய  NFPTE  (National Federation of P & T Employees) என்ற அகில இந்திய அமைப்பு இருந்தது.  தோழர் சிரிலுடனான
பழக்கம் அந்நாளைய  தொழிற்சங்கங்கள் பற்றிய அறிவை வளர்த்தது.  வாடியாவும், சக்கரை செட்டியாரும் திருவிகவும்  சிங்கார வேலரும்  வளர்த்த  தமிழக தொழிற்சங்க வரலாற்றின் நீண்ட நெடிய பாதை புதுக்கதையாய் மனத்தில் பதிந்தது. பொதுவுடமை சித்தாந்தத்தின் பால பாடங்கள் அறிமுகம் ஆயின.                                                   

'பாரத பூமி பழம் பெரும் பூமி;  நீரதன் புதல்வர்   இந்நினைவு அகற்றாதீர்' என்ற பாரதியின் வாக்கு  நெஞ்சில் பதிந்தது.   NCBH (New Century Book House)  புத்தக வாசிப்பு உலகளாவிய பார்வைக்கு பழக்கப்படுத்தியது.

இந்த சமயத்தில் தான்   "நாளை கடற்கரையில்  ஜெயகாந்தன்  கூட்டம் இருக்கிறது;  போவோமா?" என்று சிரில் என்னிடம் கேட்டார்.

(வளரும்)


Friday, June 14, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                               34


தொலைபேசி  இலாகாவைப் பொறுத்த மட்டில்  ஒவ்வொரு மாநிலமும் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.   ஒவ்வொரு கோட்டமும் பரந்து விரிந்த பகுதிகளைக் கொண்டிருந்தது.   சேலம் கோட்டம் என்பது  சிதம்பரம், கடலூர், விருத்தாசலம்,  விழுப்புரம் என்று   பாண்டிச்சேரி வரை நீண்டிருந்தது.    தொலைபேசி இலாகாவில் மாவட்டங்கள்   கோட்டங்களாக வரையறுக்கப் பட்டிருக்கவில்லை என்பது முக்கியமான விஷயம்.  இப்பொழுது இருக்கிற மாதிரி  மாவட்டங்களின்  நெரிசல்களும் இல்லாத காலம் அது.

மேற்பட்டப்  படிப்பு படித்து விட்டு தொலைபேசி இலாகாவில் அடிப்படை ஊழியராக பணியைத் தொடங்கி மிகப் பெரிய சேலம் கோட்டத்தை நிர்வகிக்கிற கோட்ட அதிகரியாக பொறுப்பேற்றிருந்தார் உழைப்பால் உயர்ந்த உத்தமர் ஒருவர்.  அவர் பெயர் ராமசாமி என்று நினைவு.  அவருடன் பேசியபடி தான் அவருக்கு  அருகில் அமர்ந்திருந்தார்  சேலம் மாவட்ட தலைமைத் தபால் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி.  ( தபாலும் தந்தியும் சகோதரத்துவ இலாகாவாக இருந்து தந்தியில் உள்ளடங்கிய தொலைபேசி  இன்று எல்லாவற்றையும் விழுங்கி விட்ட பகாசுரனாய் பொதுத்துறை இலாகாவாக ஆகியிருப்பது இன்றைய  நிலை)

தபாலும் தொலைபேசியும்  மத்தியில் ஒரே இலாகாவால் நிர்வகிக்கப்பட்டு  வந்தமையால் பரஸ்பரம் அதிகாரிகள் மத்தியில்  சில விஷயங்களில் கலந்த  செயல்பாடுகள் இருந்தன.  அந்த அணுகுமுறையில்  தான் சேலம் மாவட்ட தலைமைத் தபால் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி இந்த நேர்காணலிலும் ஒரு அதிகாரியாக அமர்ந்திருந்தார்.   இந்த நேர்காணலுக்கு அவரும் ஒரு அதிகரியாக செயல்படப் போவது அவருக்குத் தெரிந்திருந்தாலும் என்னிடம் அதை அவர் காட்டிக் கொள்ள வில்லை என்பதும் காட்டிக் கொள்ள அவசியம் இல்லை என்பதும்  இப்பொழுது புரிந்திருக்கும்.

என்னைப் பார்த்தும் கிருஷ்ணமூர்த்தி சார் "இந்தப் பையன் குமார பாளையத்தில் எங்கள் தபால் பகுதியில் வேலை செய்கிறான்.." என்று தொலைபேசி கோட்ட அதிகாரியிடம் சொன்னார்.

"அப்படியா?.." என்று ஆச்சரியப்பட்ட தொ.கோ. பொறியாளர்  ராமசாமி அவர்கள்  "அப்படியானால் ஏன் இந்த நேர்காணலுக்கு   வந்திருக்கிறீர்கள்?" என்று என்னிடம் கேட்டார்.

ஏற்கனவே கிருஷ்ணமூர்த்தி சார் என்னிடம் கேட்ட இதே கேள்விக்கு சொன்ன அதே பதில் நினைவுக்கு வர, "டெக்னிக்னிக்கல் லயனில் வேலை செய்யாலாம்ன்னு ஆசை.." என்று நான் சொல்ல அவர்கள் இருவரும் கலகலத்தனர்.

"உண்மையான காரணத்தைச் சொல்லி  என்னிடம் லீவ் அனுமதி பெற்றுத் தான் இந்த நேர்காணலுக்கு இவன் வந்திருக்கிறான்.. அதற்காகவே இவனை பாராட்ட வேண்டும்.." என்று ஆங்கிலத்தில் தொலைபேசி அதிகாரியிடம் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி சார்.

அந்த நொடியே 'பொய்யான காரணம் எதையாவது சொல்லி,  இங்கு இவரைப் பார்க்க நேர்ந்திருந்தால் அது எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும்' என்று அந்த  நினைப்புக்கேற்பவான  காட்சி என் மனத்திரையில் படிந்தது.

எனக்கு எதிரேயே "இந்தப் பையனை நான் வேலைக்கு எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் உடனே நீ அவனை அவன் பார்க்கும் பணியிலிருந்து விடுவிப்பாயா?" என்று ஆங்கிலத்தில் ராமசாமி சார், கிருஷ்ணமூர்த்தி சாரிடம் கேட்க "தாராளமாக.." என்று  அவர்   புன்னகையுடன் பதிலளித்தார்.

இதற்குள் என் சான்றிதழ்களை சரி பார்த்தவர்கள் அதை என்னிடமே திருப்பித்  தர அடுத்த அறைக்கு போகச் சொல்லி என்னை அனுப்பினர்.

அந்த அறையில் பளபளவென்று ஒரு தொலைபேசி இருந்தது.  அந்த தொலைபேசிக்கு   அருகில் இருந்த  அட்டையில் சில  தொலைபேசி எண்கள் எழுதியிருந்தன.   அவற்றில் ஏதாவது நான்கு எண்களை ரேண்டமாகத் தேர்ந்தெடுத்து  தொலைபேசியின் ரிஸீவர் பகுதியைக் கையில் எடுத்துக் கொண்டு  நாம் தேர்ந்தெடுக்கும் எண்ணை உச்சரிக்க வேண்டும் என்று  சொன்னார்கள்.

24886653    26364811    23456782     24000000    23363448                               

-- இதெல்லாம் கொடுக்கப்பட்டிருந்த எண்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அவற்றை மற்றவர்களுக்கு சுலபமாக புரிகிற மாதிரி எப்படி  உச்சரிக்க வேண்டும் என்பது தான் இந்தத்  தேர்வுக்கான நோக்கம்.  பெரும்பாலும் எண்களை மையமாக வைத்து  தொலைபேசி இலாகா  இயங்குவதால் இந்தத்  தேர்வு.

அ)   டூ ஃபோர்     டபுள் எயிட்    டபுள் சிக்ஸ்    பைஃவ்  த்ரி

ஆ)  டூ சிக்ஸ்    த்ரி சிக்ஸ்     ஃபோர்  எயிட்     டபுள் ஒன்

இ)   ட்டூ  த்ரி     ஃபோர்  ஃபைவ்      சிக்ஸ்  செவன்     எயிட்   டூ

ஈ)    ட்டு  ஃபோர்    டபுள்  ஸீரோ    டபுள்  ஸீரோ     டபுள்  ஸீரோ

உ)  ட்டூ  த்ரி      த்ரி  சிக்ஸ்    த்ரி  ஃபோர்   ஃபோர்  எயிட்

--- தொலைபேசியில் இப்படி  உச்சரிக்க உச்சரிக்க  அந்த ஒலி,  ஒலிபெருக்கி மூலமாக  ஓசையுடன் கேட்க ஏற்பாடு  செய்திருந்தார்கள்.

எண்களுக்கு அடுத்தபடி பெயர்கள்.   எண்களும் பெயர்களும்  தொலைபேசி இணைப்பகத்தை  (Telephone  Exchange)  பொறுத்த வரை  அதிகமாக    புழக்கத்தில்  இருக்கும் ஒன்று  என்பதினால்  இந்தத்  தேர்வு.

ஆங்கில எழுத்து ஒவ்வொன்றிற்கும்  பொனடிக் கோட்  என்று சொல்லப்படும்
விளக்க உச்சரிப்பு அந்நாட்களில் சர்வ தேச அளவில் வழக்கத்தில் இருந்தது.

A  --  Apple         

B --   Brother
                                                                                                   
C--   Cinema

D--  Doctor

---  நமக்கேற்றவாறு இப்படி...

கோவையில்  பயிற்சி வகுப்புகள் இருக்கும் என்றும் இன்னும் ஒரு வார காலத்தில் அதற்கான அறிவிப்புகள் வரும் பொழுது  பயிற்சியில் சேர தயாராக இருக்க வேண்டும் என்றும்  தெரிவித்து விட்டார்கள். 

சேலம் மாவட்ட தலைமை தபால்  அதிகாரி   கிருஷ்ண மூர்த்தி சார் சொன்னபடியே  செவ்வாய்க் கிழமை  குமாரபாளையம் அஞ்சல் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தேன்..   தொலைபேசி இலாகா  பணியில் சேர்வதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால்  என்னை பணியிலிருந்து விடுவிக்கும்படி புதன் கிழமை மாலை   விருப்ப ராஜினாமா கடிதம் ஒன்றை தலைமைத் தபால் அதிகாரிக்கு முகவரியிட்டு  குமாரபாளையம் போஸ்ட் மாஸ்டரிடம் கொடுத்தேன்.    (Through Proper Channel)

கடிதத்தைப் படித்து விட்டு "ஜமாய்டா, ராஜா!"  என்று வாழ்த்தினார்  போஸ்ட் மாஸ்டர்  சுலைமான்  சார்.

சனிக்கிழமை காலைத் தபாலில்  என் விருப்ப பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டதாக அறிவித்து என்னை  பதவியிலிருந்து விடுவிப்புக் கடிதமும்   சேலம் தலைமைத் தபால் அதிகாரியிடமிருந்து வந்து விட்டது.

சனிக்கிழமை மாலையே குமார பாளையம் அஞ்சல் அலுவலகத்திலிருந்து பணியிலிருந்து விடுவிக்கப் பட்டேன்.  ஞாயிறு  அறை நண்பர்கள் சேர்ந்து ராமாஸ் கேப்பில்  எனக்கு விருந்து கொடுத்தார்கள்.  ராமாஸ் கேப் முதலாளி நண்பருக்கு விழிக்கடையில் லேசாக நீரே கசிந்து விட்டது.  "இந்தப் பக்கம் வந்தா மறக்காம ஓட்டலுக்கு வந்துடணும்.." என்று  கேட்டுக் கொண்டார்.

அன்று முன் இரவில் திருவள்ளுவர்  விரைவுப் பேருந்தில்  கோவை  வந்து சேர்ந்தேன்.


(வளரும்)


Wednesday, June 12, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                     
                                                                             33


தொலைபேசி  இலாகா பணிக்கான நேர்காணல்  திங்கட் கிழமை காலையில் இருந்தது.  அந்தத் திங்கட் கிழமையன்று எனக்கு விடுப்பு வேண்டும் என்று கோரி குமாரபாளையம் போஸ்ட் மாஸ்டரிடம்   கடிதம் கொடுத்தேன்.   அவர் தன்னால் அதைத்  தீர்மானிக்க முடியாது என்றும் அந்த எனது விடுப்பு கடிதத்தை சேலம் தலைமை அஞ்சல் அதிகாரி   அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்.  அங்கிருந்து வரும் பதிலுக்கு ஏற்ப எனது விடுப்பு தீர்மானிக்கப் படுவதாக இருந்தது.
                                                                                                                                         

அந்த வார சனிக்கிழமை மாலை வரை  சேலத்திலிருந்து பதிலில்லை. அதனால் சனிக்கிழமை இரவு கோவை சென்று தொலைபேசி இலாகாவின் நேர்காணலுக்கான கடித்ததுடன் ஞாயிறு காலை சேலம் வந்தேன்.  நேர்காணலும்  சேலத்தில் தான்.  மாவட்ட அஞ்சல் அதிகாரி அலுவலகம் இருந்ததும் சேலத்தில் தான்.  அந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள்  தான் எனக்கு கால அவகாசம் இருந்தது.  விடுப்புக்காக எதைச் செய்ய வேண்டும் என்றாலும் அந்த ஒரு நாளில் செய்தால் தான் உண்டு.   திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு நேர்காணலுக்கு வரச் சொல்லியிருந்ததால் சேலம் மாவட்ட அஞ்சல் அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று விடுப்புக்கான அனுமதி வாங்கவும்  நேரமில்லை.

சேலம் மாவட்ட தலைமை அஞ்சல் அதிகாரியின் வீடு சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் இருந்தது.   துணிந்து ஒரு முடிவு எடுத்தேன்.  அவர் வீடு சென்று நேரில் எனது கோரிக்கையைச் சொல்லி விடுப்பு பெற்று விடுவதென்பதே அந்த நேரத்து எனது தீர்மானமாக இருந்தது.  அவர் வீடு சென்ற பொழுது காலை ஒன்பது மணி இருக்கலாம்.   வீட்டின் வெளி வாசலில் நின்ற என்னைப் பார்த்ததும்  உள்ளிருந்து ஒரு பெரியவர் வெளியே வந்தார்.  என்னிடம் விசாரித்தார்.  அதிகாரியை நேரில் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னேன்.

"மூர்த்தி பூஜையில் இருக்கிறான்.  உள்ளே வாப்பா.." என்று  வீட்டின் உள் பக்கம் அழைத்து  தாழ்வாரத்தில் இருந்த நாற்காலியைக் காட்டி அமரச் சொன்னார்.  எனக்கு அமரத் தயக்கமாக இருந்தது..  "உட்காருப்பா..." என்று உரிமையுடன் என் கை பற்றி அந்தப் பெரியவர்-- நிச்சயம் 70-க்கு மேல் வயசிருக்கும்-- உட்காரச் சொன்னார்.  நான் நாற்காலியில் பட்டும் படாமலும் அமர்ந்தேன்.
"எப்படியும் பூஜை முடிச்சு அவன் வர்றத்துக்கு கால் மணி நேரம் ஆயிடும்..." என்று எனக்குத் தெரிவிக்கிற மாதிரி சொல்லி விட்டு பெரியவர் உள்ளே சென்று விட்டார்.

'அதிகாரி கிருஷ்ணமூர்த்திக்கு இவர் தகப்பனாராய் இருப்பாரோ?' என்று யோசனை ஓடியது.  எவ்வளவு பண்பட்ட பழக்க வழக்கங்கள் இவர்களிடம் படிந்து இருக்கிறது என்று அந்த நேரத்திலும் என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

 கொஞ்ச நேரத்தில்  வேஷ்டி, பனியன், தடித்த பிரேமிட்ட மூக்கு கண்ணாடி தரித்த ஒருவர் உள்ளிருந்து  வெளி வந்தார்.  கிட்டத்தட்ட நாற்பது  வயது இருக்கலாம் என்ற தோற்றம்.  டக்கென்று எழுந்திருந்தேன்.   முன்னே பின்னே அதிகாரியைப் பார்த்திராததால் அவர் தான் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

என்னைப் பற்றி  விசாரித்தார். எதற்காக வந்திருக்கிறேன் என்று சொன்னேன்.

"ஏன் எங்கிட்டேயிருந்து அங்கே போயிடறதா   உத்தேசம் பண்ணியிருக்கே?"  என்று கேட்டார்.

என்ன காரணம் சொல்வேன்?.. 'டெக்னிக்கல் லயன்லே போகலாம்னுட்டு.." என்று தயக்கமாக அந்த நேரத்தில் மனசுக்கு தோன்றியதைச் சொன்னேன்.

"அப்படியா?.." என்று  யோசனையுடன் இழுத்தவர், "சேலம் ஆபிஸுக்கு உங்க போஸ்ட் மாஸ்டர் உன் லெட்டரை பார்வேட் பண்ணி  அனுப்பியிருக்கார் இல்லையோ?" என்று இன்னொரு தடவை நிச்சயப்படுத்திக் கொண்டார்.  "என்னிக்கு அந்த இண்டர்வ்யூ?"

"நாளைக்கு சார்.  காலம்பற பத்து மணிக்கு.. நேரம் இல்லேன்னு தான் உங்களை நேர்லேயே பாத்து பர்மிஷன் வாங்கிக்கிலாம்னுட்டு.." என்று இழுத்தேன்.

"திங்கட்கிழமை ஒரு நாள் தானே லீவ் கேட்டிருக்கே?" என்று கேட்டுக் கொண்டார்.

கொஞ்ச நேர லேசான யோசனைக்குப் பிறகு, "நீ  லீவு எடுத்துக்கோ.. இண்டெர்வ்யூ முடிஞ்சதும்  செவ்வாய்க்கிழமை   குமாரபாளையம் போய்  ஜாயின் பண்ணிடு....  நான் ஆபிஸ் போய்   உன் லெட்டரைப் பாத்து லீவ் சான்க்ஷன் பண்ணிடறேன்.. உங்க போஸ்ட் மாஸ்டர் கேட்டா, லீவ் சாங்க்ஷன் ஆயிடுத்துன்னு சொல்லிடு.. சரியா?" என்றார்.
                                                                                                                                   
நான் தலையாட்டினேன்.  "தாங்ஸ் சார்.." என்றேன்.

"இண்டர்வ்யூவை நன்னா attend பண்ணு..  இங்கேயா, அங்கேயான்னு பாக்கலாம்.  செவ்வாக்கிழமை தப்பாம  குமாரபாளையம்  போயிடணும். ஏன்னா, உன்னோட தபால் ஆபிஸ் டிரெயினிங்லே கேப் விழப்படாது. . ஆமாம்.." என்று கண்டிப்பாக சொல்கிற தோரணையில் சொன்னார்.

"சரி.. ஸார்.."                                                                                                     

"சரி.. போயிட்டு வா.."

'அதிகாரி என்ற ஆணவம் இல்லாமல்  தகுந்த ஆலோசனை சொல்கிற தோரணையில் எவ்வளவு அன்பாகப் பேசுகிறார் என்று  நெகிழ்ந்தபடியே வெளியே வந்தேன்.

சேலத்தில் என் தாய் மாமா இருந்தார்.   அங்கு ஞாயிற்று கிழமை தங்கி விட்டு
அடுத்த நாள் மாமாவின் ஆசியோடு  தொலைபேசி நேர்காணலுக்குப்  போனேன்.

நேர்காணல் நடந்த நீண்ட ஹாலுக்குள் ஒவ்வொருவராக உள்ளே போய் ஐந்து-- பத்து நிமிஷங்களில் வெளியே வந்தனர்.  யாரிடமும் பேச முடியவில்லை.
என்ன கேட்டார்கள்,  எப்படி செலக்ஷன் ஒன்றும் தெரியவில்லை.

என் முறை வந்து என் பெயரைக் கூப்பிட்டு அந்த ஹாலுக்குள் நான் போனேன்.

வட்ட மேஜை மாநாடு மாதிரி  வட்டமாக மேஜை--நாற்காலி போட்டு நேர்காணல் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். 

பக்கத்தில் போனதும் தான் திகைத்துப் போனேன்.

நடுவாந்திரமாக அமர்ந்திருந்தவரிடம்  எதையோ   கேட்டு சிரித்தபடி  அவருக்கு பக்கத்து  நாற்காலியில்  சேலம்   மாவட்ட தலைமைத் தபால் அதிகாரி  கிருஷ்ணமூர்த்தி சார் அமர்ந்திருந்தார்.

(வளரும்)

Tuesday, June 4, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                              32



சிரியர்  ராஜவேலு சொன்னது  ரொம்பவும் குரூரமாக என் மனசில் பதிந்தது.    அதுவும்  எனக்குத் தமிழ் போதித்த ஆசான் தமிழாசிரியர் கங்காதரன் பற்றி..    அவர் தமிழர் இல்லையா?  என்ன இது அபத்தம்?....

எனக்கு மனசு ஆறவே இலை.  அந்த எரிச்சலில், ""ஆமாம். எனக்கும் தெரியும்.  என் தமிழாசிரியர் அந்தணர் தான்.  அதற்கும் தமிழருக்கும் என்ன சம்பந்தம்?.." என்று குரலுயர்த்திக் கேட்டேன்.

"ஐயமார்லாம் தமிழர்கள் இல்லை என்று உங்களுக்குத்  தெரியாதா?" என்று  ராஜவேலு ஏதோ ஏற்கனவே முடிவாகிவிட்ட விஷயம் எனக்கு மட்டும் தெரியாத மாதிரி  என்னைக் கேட்டார்.

"என்ன சொல்கிறீர்கள்?" என்று திகைத்தேன்.  "அப்போ.. அப்போ.. உ.வே. சாமிநாதய்யர் தமிழரில்லையா?" என்று வெடித்தேன்.     

"நிச்சயம் தமிழர் தான்.." என்று  இடையில் முகிலன் புகுந்த பொழுது அவர் குரல் தழுதழுத்தது.. "உ.வே.சா.வின் பணி மகத்தானது.  எங்கெங்கோ அலைந்து திரிந்து செல்லரித்த ஏட்டுச் சுவடிகளையெல்லாம் தேடிச் சேகரித்து செப்பனிட்டு அவற்றை  அச்சிட்டு  அரும்பணி  ஆற்றியிருக்கிறார்.   அவர் மட்டும் அப்படிச் செயலாற்றவில்லை என்றால் அருந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் நமக்குக் கிடைத்திருக்குமா, என்ன?..   அவர் தமிழர் இல்லையென்றால் வேறு யார் தான் தமிழர்?" என்று உணர்வுப் பிழம்பாய்க் கேட்டார் முகிலன்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை..  முகிலன் சார்  உவேசா-வைப் பற்றி பெருமைபடச் சொன்னது கேட்டு மனம் நெகிழ கண்களில் நீர் மல்க அவரைப் பார்த்தேன்.

முகிலன் என்னைப் பார்த்து," ராஜவேலு சொன்னதைக் கேட்டு நீங்கள் மனம் வருந்த வேண்டாம்.."என்று தேற்றுகிற மாதிரி சொன்னார். "தனது ஆசிரியர் மேல் -- அதுவும் தமிழாசிரியர் மேல் -- இவ்வளவு அன்பு வைத்திருக்கும் ஒருவரை முதன் முறையாக இப்போது தான் பார்க்கிறேன்.." என்றார். 

"நன்றி, சார்.." என்று அவருக்கு பதிலிறுத்த பொழுது மனசு இலேசாயிற்று.. உணர்ச்சி வசப்பட்டு ரொம்பவும் குழந்தைத்தனமாக நடந்து  கொண்டு விட்டேனோ  என்ற வெட்கத்தில் நெளிந்தேன்.  "இன்னும்  எனக்குப்  புரியவில்லை... ராஜவேலு சார் ஏன் அப்படிச் சொன்னார்?.." என்று அவர் சொன்னதைக் கூட திருப்பிச் சொல்ல முடியாமல் தடுமாறினேன்.

"விட்டுத் தள்ளுங்கள்.. அவர்   சொன்னதைப் பெரிதாக எடுத்துக்  கொள்ளாதீர்கள்.." என்றார் முகிலன்.. "ராஜவேலு அடிப்படையில் திராவிட கழகத்தவர்.  அதாவது அங்கிருந்து இங்கு--திமுக--வுக்கு வந்தவர்.  அண்ணாவே அழுத்தந்திருத்தமாக பலமுறை சொல்லியிருக்கிறார்.  'என்றைக்கு ஓட்டு அரசியலுக்கு வந்து விட்டோமோ அன்றைக்கே எல்லாப் பகுதியினரையும் அணைத்துப் போகும் பக்குவம் வேண்டும்' என்று..  அவருக்கு அந்த ஆற்றல் இருக்கிறது...  அந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ளாமை தான் மற்றவர்களிடம் இருக்கிற குறைபாடு.." என்று அவர் சொன்ன போது கேட்டேன்:

"எனக்கும் அந்த பக்குவம் இல்லையோ என்ற ஐயம் இப்போது.. தமிழ் தான் என்னையும் இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.  என் தமிழாசிரியரே தமிழர் இல்லை என்று சொன்னது தான் எனக்கேற்பட்ட குழப்பம்.. தாங்களாவது தமிழர் யார் என்று சொல்லக் கூடாதா?"

"தமிழ் நாட்டில் பிறந்து தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும்
தமிழரே..." என்று பிரகடனம் செய்யும் தொனியில் முகிலன் சொன்ன போது
அந்த சமயத்தில் அங்கிருந்த அனைவரும் கைதட்டி அவர் சொன்னதை வரவேற்றனர்.

மனத்தில் இருந்த குழப்ப மேகங்கள் விலகி முகத்தில் தெளிவு வந்த மாதிரி எனக்கிருந்தது.

"சரி.. பால் சாப்பிடக் கிளம்பலாமா?" என்று யாரோ கேட்ட பொழுது அனைவரும் எழுந்திருந்தோம்..


குமார பாளையம் வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில்   மறுநாள் காலைத் தபாலில் எனக்கு பணி மாற்றல் உத்தரவு ஒன்று சேலம் தபால் துறை அதிகாரி அலுவலகத்திலிருந்து வந்தது.  திருச்செங்கோடு தாலுகாவில் இருந்த  வையப்ப மலை என்ற அந்நாளைய குக்கிராமத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்ற அந்த உத்திரவு என்னைப் பணித்தது.

வையப்பமலை அஞ்சல் நிலையம் ஒருநபர் பணியிடம்.  போஸ்ட் மாஸ்டர் ஒருவர் தான்  எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  ஒரு மணியாடர், ஒரு பதிவுத் தபால் என்றாலும்,   இல்லை ஒன்றுமே இல்லை என்றாலும்  முழுப்பட்டியல் தயாரித்து பை கட்டி அரக்கு சீல் வைத்து ரன்னர் வரும் பொழுது அவரிடம் ஒப்படைக்கத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.  பத்தோடு பதினொன்றாக குமார பாளையத்தில் வேலை செய்த கூட்டுப் பணி இன்பம் அங்கில்லை.   தனி ஒரு ஆளாய் மல்லாட வேண்டும்.  சோத்துப் பாடு வேறே.  மறுபடியும் தட்டி விலாஸ் ஓட்டலா என்று நினைக்கையிலேயே வயிறு சங்கடம் பண்ணியது.  அந்தளவுக்கு ராமாஸ் கேப்பில் சுகம் கண்ட நாக்கு.

வேலையை ஏற்றுக் கொள்ள ஒரு வார காலம் அவகாசம் இருந்தது.  எனக்கு பயிற்சி காலம் முடிய இரண்டே மாதங்கள் இருந்தன.  அப்படி இருக்கும் இரண்டு மாதங்களும்  குமாரபாளையத்திலேயே குப்பை கொட்டி விட்டால் போதும்,  குமார பாளையத்திலேயே நிரந்தர பணி நியமனம் ஆகிவிடும் என்ற நிலை. 

இரண்டு நாட்கள் யோசனையில்  சேலம் தலைமைத் தபால் அதிகாரியைச் சந்தித்து குமாரபாளையத்திலேயே பணி நீட்டிப்பு கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்து அன்று இரவு ஏதோ பிரச்னைக்கு முடிவு கண்டு விட்ட மாதிரி நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

அடுத்த நாள் நிர்மலமாக பொழுது விடிந்தது.   எட்டு மணிக்கே அலுவலகம் வந்தாச்சு.   அன்றைய தபால் பைகளைச் சுமந்து கொண்டு வேன் வந்து பைகளை இறக்கி வைத்தால் போதும்--- அத்தனைபேரும்  தேன்சிட்டு போல சுழல ஆரம்பித்து விடுவோம்.

அன்றைக்கு என்னவோ கால் மணி நேரம் தபால் வண்டி தாமதம்.  பைகள் அவசர கதியில் இறக்கி வைக்கப்பட்டன.

அனைவரும் கீ கொடுத்த பொம்மைகள் ஆனோம்.   அன்றைக்கு வந்திருந்த பதிவுத் தபால்களை பதிவு செய்து கொண்டு அவற்றை தபால்காரர்களுக்கு அவர்களின் பகுதிகளுக்கேற்ப பிரித்து அவற்றைக் குறித்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டிருந்த பொழுது---

எனக்கு ஒரு தந்தி வந்திருப்பதாக சொல்லி  டெலகிராப்பிஸ்ட் அதை என்னிடம் கொடுத்தார்.  அவர்  முகத்தில் புன்சிரிப்பு தவழவே பதட்டமில்லாமல் பிரித்துப் படித்தேன்.

'தொலைபேசி  இலாகாவில்  பணியேற்றுக்  கொள்ள தேர்வு செய்யப் பட்டிருப்பதாக  கடிதம் வந்திருப்பதாகவும்,  சேலம்  தொலைபேசி இலாகா  தலைமை அதிகாரி அலுவலகத்தில் அடுத்த திங்கட் கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்பதினால் உடனே விடுப்பில் கோவை வரவும்'  என்று என் தமையனார் கோவையிலிருந்து தந்தி அனுப்பியிருந்தார்.

செய்தியை  உள்வாங்கிக் கொண்டதும்  மனசெல்லாம் சந்தோஷம் நிரம்பியது.


(வளரும்)




Monday, June 3, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                            31



து இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற  பெயரில் இந்தி எதிர்ப்புக்கான காரணங்கள் கனன்று  கொண்டிருந்த  காலம்.    அடிக்கடி பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.  நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்த சோஷலிஸ்ட்  கட்சியைச் சார்ந்த மதுலிமயே என்ற தலைவர்   குமாரபாளையத்தில் நடந்த கூட்டம் ஒன்றில்   பேசுவதற்காக வந்திருந்தார்.  அந்நாட்களில்  பெருந்தலைவர் லோகியா அவர்களின் இயக்கமான சோஷலிஸ்ட் கட்சியின் கிளைகள் தமிழகத்திலும் வேரூன்றி இருந்தன.  ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கு சிம்ம சொப்பனமாக நாடாளுமன்றத்தில் திகழ்ந்த கட்சியாகவும் சோஷலிஸ்ட் கட்சி இருந்தது.   இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி, ஜார்ஜ் பெர்ணாண்டஸ் எல்லோரும் இந்தக் கட்சியின்  உறுப்பினராய் தான் நாடாளுமன்றத்தில் செயலாற்றினார்.     இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடுபவர்ககளில் ஒருவராக அந்நாட்களில்   மதுலிமயேயும் அறியப் பட்டிருந்ததால்  அழைத்து  வரப்பட்டதாகத்  தெரிய வந்தது.                                 

மதுலிமயே அவர்கள் தனது பேச்சை இந்தியில் ஆரம்பித்த பொழுது  கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.   எதற்காக சலசலப்பு என்று  அவர் பேச்சை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளரிடமிருந்து  தெரிந்து  கொண்ட அவர்,  உடனே மன்னிப்பு கோரினார்.                                               

தொடர்ந்து இந்தியிலேயே பேசிய   அவரது  பேச்சை மொழிபெயர்த்தவர்  வாயிலாகத் தான் அவர் இந்தியில் பேசுவதற்கான காரணமும் கூட்டத்தினருக்குத் தெரிய வந்தது.

மொழிபெயர்த்தவர்  சொன்னது இது தான்:

"என் தாய்  மொழி மராத்தி.   இந்தக் கூட்டத்தில் எனது மராத்தி பேச்சை மொழிபெயர்ப்பவர் கிடைத்தால் மராத்தி மொழியிலேயே பேசுவேன்.  அது எனக்கு மிகவும் செளகரியமானது;  பெருமை அளிப்பதும் கூட.

அடுத்து  எனக்குத்  தெரிந்த மொழி ஆங்கிலம்.  150  ஆண்டுகள் நம்மை அடிமைபடுத்தி நம் தேசத்தை ஆண்ட அந்நியரின் மொழி அது.  என் தாய்நாட்டு மக்கள் கூடும் பொதுக்கூட்டங்களில் அந்த மொழியில் பேச மாட்டேன் என்று உறுதி  பூண்டுள்ளேன்.   வேறு வழியில்லாத பொழுது தனிப்பட்ட பேச்சு வார்த்தைகளில் அந்த மொழியை நான் உபயோகிக்கிறேன்.  ஆனால் பொதுக் கூட்டங்களில்  அந்த மொழியைப் பேசுவதில்லை  என்று உறுதி பூண்டிருப்பதால் -- மன்னிக்கவும்,  அந்த மொழியை இங்கு உபயோகிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.   நம் நாட்டு ஒரு மொழியின் திணிப்பையே நாம் எதிர்க்கும் பொழுது  அந்நிய  மொழியில் பேசுவதை நீங்களும் விரும்ப மாட்டீர்கள் என்பதை நானும் புரிந்து கொள்கிறேன்.

அடுத்தபடியாக எனக்குத்  தெரிந்த மொழி ஹிந்தி.   ஹிந்தித் திணிப்பைத் தான் நாம் எதிர்க்கிறோம்  என்பதினால் ஹிந்தியில் தொடர்ந்து பேச நீங்கள் என்னை அனுமதிப்பீர்கள் என்று நினைக்கிறேன். ..."  என்று அவர் இந்தியில் பேசியது மொழிபெயர்க்கப் பட்ட பொழுது  மக்கள் கைதட்டி அதை வரவேற்றனர்.

அநேகமாக இந்தித் திணிப்பு எதிர்ப்பு காலத்தில் தமிழகத்தில் இந்தி மொழியில் பேசப்பட்ட கூட்டங்கள் மதுலிமயேயின் கூட்டங்களாகத் தான்  இருக்கும் என்று நினைக்கிறேன்.

மதுலிமயே மாதிரி ஆங்கிலம்   தெரிந்திருந்தும்   சில காரணங்களுக்காக  ஆங்கில மொழியில் பேசாத வட இந்தியத்   தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் எனக்குத்  தெரிய வந்தது..

பொது  நிகழ்வுகளில்  ஆங்கிலத்தை உபயோகிப்பதில்லை என்று மதுலிமயே பூண்ட உறுதியும்,  அதற்காக காரணமும் அந்த வயதில் என்னை வெகுவாகக் கவர்ந்தது..  இந்த காரணத்திற்காகவே அந்தக் கூட்டம் முடிந்ததும்  காத்திருந்து அவர் மேடையிலிருந்து இறங்கி வந்ததும் ஆங்கிலத்தில் அவருடன் அளவளாவி  எனது  ஆட்டோகிராஃபில் அவர் கையெழுத்தைப் பெற்றேன்.

குமாரபாளையம் தபால் அலுவலகத்தில்  எனது  மனதுக்கு இசைவாக  பொழுது போய்க் கொண்டிருந்தது..    மூன்று வேளையும் தவறாமல் ராமாஸ் கேப் தான்.   கல்லா பெட்டியில்  இளம் வயது என்றாலும் கொஞ்சம் குண்டாக
உட்கார்ந்திருக்கும் ஓட்டல் முதலாளி  என்னைப் பார்த்ததும்  சின்னதாக புன்னகைக்காமல்   இருந்ததில்லை.  அப்படி ஆரம்பித்தது தான்;   நாளாவட்டத்தில்  உற்ற தோழனாரானார்.

அந்நாட்களில் கல்கண்டு  பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன் உள்ளங்கை கைரேகைகளைப் பார்த்து  பலன் சொல்லும் சாத்திரம்  பற்றி விரிவாக தனது பத்திரிகையில் ஆராய்ச்சி  கட்டுரைகளை    எழுதிக் கொண்டிருந்தார்.  தொடர்ந்து    அந்தக் கட்டுரைகளை ஆழ்ந்து வாசித்து வந்ததால் எனக்கும் அந்த பித்து பிடித்துக் கொண்டது.

ஒருநாள் ராமாஸ் கேப்  அந்த இளம் வயது எனது நண்பரின் கைரேகையை மேலோட்டமாகப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன்.  அவர் வலது கை ரேகை ஓட்டத்தில்  குறிப்பிட்ட இடத்தில் தீவுக் குறி இருந்தது.  நண்பரின் மேல் எனக்கு இருந்த அபிமானம்  அந்தக் குறிக்கான நேரடியான பலனைச் சொல்லாமல் எதிர்மறையாக மறைத்துச் சொல்ல வைத்தது.  இருந்தாலும்  தினம் தினம் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்தத் தீவுக்குறி நினைவுக்கு வந்து மனசை வாட்டும்.

பிற்காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்த பொழுது  மாலைப் பொழுது சாய்ந்த முன்னிரவு நேரத்தில் மேற்கு ராஜவீதியின் தலைப்பகுதியிலிருக்கும்  கச்சபேஸ்வரர்   கோயிலுக்குப் போயிருந்தேன்.   கோயிலின்   பிராகாரப்  பகுதியிலிருந்து   பெட்ரோமாக்ஸ்   லைட்டு  ஜொலிப்பில்   ஆண்கள்--பெண்கள் கூட்டமொன்று  கலகலப்பாக வெளிப்பக்கம் வந்து கொண்டிருந்தது.  மாப்பிள்ளை அழைப்பைத் தொடர்ந்து கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்து வந்து கொண்டிருக்கும் கூட்டம் என்று பார்க்கையிலேயே தெரிந்தது.   கூட்டத்திற்கு வழிவிடும் நோக்கத்தில் கொஞ்சம் ஒதுங்கி நின்ற பொழுது  அவரை அந்த இடத்தில் சந்திப்பேன் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து....  குமார பாளையம் ராமாஸ் கேப்  முதலாளி தான் அவர்!  அந்த குண்டு உடல்   கொஞ்சம் வற்றி  லேசான   தலை நரையுடன்...    அவர் வீட்டுத் திருமணத்திற்காக    காஞ்சீபுரம் வந்திருந்தவரை அகஸ்மாத்தாக சந்தித்த தருணத்திலேயே பேருவகை கொண்டேன்.   பின்னால் நடந்த இந்த நிகழ்வு விட்டுப் போய் விடப் போகிறதே என்று அவர் பற்றிய நினைவுகளின் தொடர்ச்சியாக இப்பொழுதே சொல்லி விட்டேன்.

இதே மாதிரி மதுலிமயே அவர்களை இதே காஞ்சீபுரத்தில் பிற்காலத்தில் சந்தித்த நினைவு ஒன்றும்  உண்டு.  அதை அந்தப் பகுதி வரும் போது சொல்கிறேன்.

வெள்ளிக் கிழமை வந்தாலே போதும்.  எங்கள் அறை  நண்பர்கள் உடனான மாலை கலந்துரையாடல் நிகழ்ச்சி நினைவுக்கு வந்து விடும்..   'வருகிற     ஞாயிற்றுக் கிழமை இதைப் பற்றி தவறாமல் உரையாட வேண்டும்' என்று  எதைப் பற்றியாவது நினைத்துக் கொள்வேன்.

அந்த அடுத்த ஞாயிற்றுக் கிழமையும் வந்தது.

அன்று ஆசிரியர் பயிற்சியின் பாடத்திட்டங்கள் பற்றி,  வகுப்புகளில் ஆசிரியர் நடத்தும் பாடங்கள் பற்றி,  மாணவர்களின் புரிதல்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம்.

நானும் கங்காதரன்  சாரிடம் தமிழ்ப் பாடம் கேட்ட எனது அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

ராஜவேலு  என்று ஒரு  ஆசிரியர்.  என்னை விட   சில ஆண்டுகள் பெரியவர்.     "பாரதி வித்தியாலயா பள்ளி கங்காதரனையா சொல்றே?" என்று கேட்டார்.

"அவரே தான்.  உங்களுக்கும் அவரைத்  தெரியுமா?" என்று  ஆவலுடன் கேட்டேன்.

"தெரியுமாவது?..  ஒன்பது, பத்து, பதினொன்று மூன்று வகுப்பிலும் அவர் தான் தமிழாசிரியர்.  நானும் அந்தப் பள்ளியில் தான் படித்தேன்.." என்றார்.

"அடேடே! அப்படியா?.. எந்த வருடம் என்று கேட்டுத்  தெரிந்து எனக்கு மூன்று வருடங்கள் அவர் சீனியர் என்று தெரிந்து  கொண்டேன்.   இன்னொரு பா.வி.பள்ளி  மாணவரை அந்த இடத்தில் பார்த்தது எனக்கு  மகிழ்ச்சியாக இருந்தது..

"அவர் தமிழாசிரியர் மட்டும் தான்.  ஆனால் தமிழர் இல்லையே?" என்றார் ராஜவேலு,  திடுதிப்பென்று.

அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

"அவர் தமிழர் தான்.  எனக்கு நன்றாகத்  தெரியும்..."  என்று அழுத்தமாகச் சொன்னேன்.  "அவர் தமிழர் இல்லையென்றால்  அவ்வளவு ஈடுபாட்டு உணர்வுடன்  தமிழ் வகுப்பு எடுக்க எப்படி அவரால் முடியும்?"  என்று எனது நியாயமான சந்தேகத்தை வெளிப்படுத்தினேன்.

"அவர் மிகச் சிறப்பாக உணர்வுடன்  தமிழ்   வகுப்பு  எடுப்பார் தான்.  அதில் எந்த இரண்டாம் கருத்துக்கும் இடமில்லை...  ஆனால் அவர் தமிழர் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.  அவர் ஐயர் என்று எனக்குத்  தெரியும்.." என்றார் ராஜவேலு.


(வளரும்)
Related Posts with Thumbnails